ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மா 17

pommu

Administrator
Staff member
பிரம்மா 17

அஜய்யும் வாய் விட்டு சிரித்துக் கொள்ள, சித்தார்த்தோ "பொண்ணா மாறனும்னா சொல்லு, அடுத்த ட்ரீட்மெண்ட் பண்ணிக்கலாம்" என்று சொல்ல, "ஐயோ" என்று வாயில் குறும்பாக கை வைத்துக் கொண்டான் அவன். அவர்கள் பிணைப்பு ஆரம்பித்தது அந்த புள்ளியில் தான். அஜய் பற்றி அங்கு வேலை செய்தவர்களுக்கு அரசல் புரசலாகவும் கசிய ஆரம்பித்தது. இப்படியான ஒரு நாளில் அவர்கள் காலையில் ஜாக்கிங் போய்க் கொண்டு இருக்க, நீண்ட நேரம் ஓடி முடித்த சமயம் சித்தார்த் களைத்தே விட்டான். ஆனால் அஜய்யோ அதே தெம்புடன் தொடர்ந்து ஓட, ஒரு கட்டத்தில் முட்டியில் கை வைத்து மூச்சு வாங்கிய படி நின்ற சித்தார்த் "டேய் நிஜமா முடியலடா" என்று சொன்னாலும் அஜய் அளப்பரிய சக்தியுடன் ஓடுவதை பார்த்ததில் அவனுக்கு ஒரு பரவசம் உருவானது என்னவோ உண்மை தான். அஜய்யோ ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று விட்டு மீண்டும் அவனை நோக்கி வந்தவன் "என்னடா அதுக்குள்ள டயர்ட் ஆயிட்ட?" என்று கேட்க "அதுக்குள்ளவா? எவ்ளோ நேரம் ஓடுறோம்னு தெரியுமா? " என்று கேட்டுக் கொண்டே தனது உயரத்துக்கும் எழுந்தவன் "போதும்டா போகலாம்" என்று சொல்ல, அஜய்யோ "எனக்கு களைப்பே தெரியவே இல்லடா" என்று சொன்னான். சித்தார்த்தோ "எல்லாம் உன் டி.என்.ஏ படுத்தும் பாடு" என்று சொல்லிக் கொண்டே அவன் தோளில் கை போட்டவன் பேசிக் கொண்டே சென்றான். அவர்கள் ஆய்வுகூடத்தை அடைந்த சமயம், அவனை நோக்கி வந்த சித்தார்த்தின் உதவியாளன் அவன் காதில் ஒரு விடயத்தைக் கூற அவன் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.

ஆம் அவன் ஆய்வுகூடத்துக்கு ரெயிட் வர இருப்பதாக செய்தி கிடைத்து இருக்க, சட்டென திரும்பி அஜய்யைப் பார்த்தவன் "அஜய் உள்ளே வா" என்று அழைத்துக் கொண்டே அறைக்குள் சென்றான். அஜய்யோ புரியாமல் அவனைப் பார்க்க, சித்தார்த்தே அவனுக்கு உடைகளை எடுத்து வைத்தவன் "நீ முதல் இங்க இருந்து கிளம்பு" என்று சொன்னான். அஜய்யோ "எதுக்குடா? எனக்கு புரியல.. என்னாச்சு?" என்று கேட்க பெருமூச்சுடன் "இங்க ரெயிட் வர போறாங்க, இங்க நீ இருக்கிறது பாதுகாப்பு இல்ல.. நிறைய பிரச்சனை வர வாய்ப்பிருக்கு..உனக்கு நான் இந்த டி.என்.ஏ எடிட்டிங் இல்லீகல் ஆஹ் தான் பண்ணி இருக்கேன்.. தெரியும்ல? " என்று கேட்டான்.

அஜய்யோ "போலீஸ் தானே.. எதுன்னாலும் பார்த்துக்கலாம் சித்தார்த், நான் இப்போ லீவ்ல தான் இருக்கேன்.. நானும் போலீஸ் டிபார்ட்மென்ட் தான்" என்று சொல்ல, அவனோ எரிச்சலாக "டேய் நான் அதுக்கு சொல்லல டா, என்னால அவங்கள சாமளிக்க முடியும்.. ஆனா நீ உன்னோட தனித்தன்மையை இழந்திடுவ.. உன் வாழ்க்கையை நீ சந்தோஷமா வாழணும்னு நான் ஆசைப்படுறேன்.. அத பெரிய பூதகரமாக்கி உன்னோட நிம்மதியவே குழைச்சுடுவாங்க.. அதுக்கப்புறம் இத காரணம் காட்டி உன்னை டிபார்ட்மெண்ட்ல இருந்து தூக்க கூட வாய்ப்பிருக்கு.. அப்படி பண்ணுனா உன்னோட ஆசை என்னோட உழைப்புன்னு எல்லாமே வீணா போயிடும்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.. நீ முதல் கிளம்பு" என்று பெட்டியை தூக்கி கொடுக்க, அதை கலங்கிய கண்களுடன் வாங்கிய அஜய்யின் குரல் தழுதழுத்தது. அதுவரை அவனுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தவன் இப்போதும் கூட அவனுக்காக தானே அங்கிருந்து போக சொல்கிறான். அஜய்க்கோ மனமே கேட்காமல் "கண்டிப்பா போகணுமா சித்தார்த்?" என்று கேட்க, சித்தார்த்துக்கு ஒரு வலி தோன்ற அதனை மறைத்துக் கொண்டு "கண்டிப்பா போய் தான் ஆகணும்.. உன் லைஃபை நீ வாழணும் .. அது என் கூட இருந்தா கண்டிப்பா முடியாது.. இந்த நாட்டுக்கு சேவை செய்யணும்.. உன்னோட டி.என்.ஏ அத கட்சிதமா செய்யும்னு நம்புறேன்.. எல்லாத்துக்கும் மேல என்னை காண்டாக்ட் பண்ணாதே.. அப்புறம் என்னாலயும் என் வேலையில போகஸ் பண்ண முடியாது.. உன்னாலயும் முடியாது.. அண்ட் என் போனை எப்போவுமே ட்ரேஸ் பண்ணுவாங்க.. விதி இருந்தா நாம சந்திக்கலாம்.. உன்னை பத்தி நான் விசாரிக்க கூட மாட்டேன்.. அப்படி விசாரிச்சா உன்னை மிஸ் பண்ணுற போல இருக்கும்.. நம்மளோட பாண்ட் அறுந்தா மட்டும் தான் நீ நீயா இருக்க முடியும்.." என்று சொன்னவன் உணர்வுகளை விழுங்கிக் கொண்டே அவனைப் பார்க்க, அடுத்த கணமே இறுகி அணைத்துக் கொண்டான் அஜய். சித்தார்த்தோ "ஏதும் ஹெல்த் இஸ்ஸு இருந்தா மட்டும் என்னை தேடி வா.. அத தவிர நீ இங்க வரவும் கூடாது.. என்னை சந்திக்கவும் கூடாது.. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழு" என்று சொல்ல, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவன் "அப்போ என் கல்யாணத்துக்கு கூட வரமாட்டியா?" என்று கேட்க இதழ்களை பிதுக்கியவன் "இந்த சித்தார்த்தால உருவான அஜய்யா நீ இருக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன்டா புரிஞ்சுக்கோ.. நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் ஆசைப்படுறேன்.. முதல் ட்ரான்ஸ்பெர் எடுத்துட்டு வேற ஊருக்கு போ.. இங்க இருக்காதே.." என்று சொன்னவன் அவனை அவசரமாக வழி அனுப்பி இருந்தான். அவனும் கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினான்.

அந்த வாரமே அஜய் மீண்டும் தனது போலீஸ் உயரதிகாரியை சந்திக்க அவரோ "அஜய் நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?" என்று தான் கேட்டார். அவருக்கு தான் அஜய் ஹாஸ்பிடலில் வைத்து காணாமல் போன செய்தி கிடைத்து இருந்தது அல்லவா? அவனோ "வேற ஒரு மருத்துவம் செய்ய போனான் சார். இப்போ நான் பெர்பெக்ட்லி ஆல்ரைட் .. நான் திரும்ப டியூட்டி ஜாயின் பண்ணிக்கிறேன். ஆனா எனக்கு ட்ரான்ஸ்பெர் வேணும்" என்று கேட்டான். அவனுக்கும் அங்கே இருந்தால் நோய் எப்படி குணம் ஆனது என்று தூண்டி துருவி தனது வாயில் இருந்து உண்மையை கறந்து விடுவார்களோ என்கின்ற பயம். அவரும் அவனுக்கான ட்ரான்ஸ்பெர் ஆர்டரை கொடுக்க, அன்று புறப்பட்டு வந்தவன் தான் காயத்ரியின் ஊருக்கு.

டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்ததும் அவனோ ஆக்ரோஷமாக வேலை செய்ய ஆரம்பித்து இருந்தவன், குற்றவாளிகளை தீயாக களை எடுத்து இருந்தான். அவன் வீரத்தைப் பார்த்து காயத்ரியின் தந்தையே பிரமித்து போய் இருக்க, ஒரு நாள் காயத்ரியின் பேட்ச் பொலிஸாருக்கு க்ளாஸ் எடுக்க போனவன் அவள் அழகிலும் குறும்பிலும் விழுந்து விட்டான். நேரே காயத்ரியின் தந்தையிடம் வந்து அவன் பெண் கேட்க, அவரும் அவன் குடும்பத்தை பற்றி விசாரித்து விட்டு திருமணத்துக்கு சம்மதம் சொல்ல, காயத்ரியும் அவளது தந்தையின் கட்டாயத்தின் பெயரில் சம்மதித்து இருந்தாள். அதே சமயம், அவன் கீழ் வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஷாந்தியோ அவனில் ஈர்க்கப்பட்டு அவனை ஒரு தலையாக காதலிக்க தொடங்கி இருந்தாள். சித்தார்த்துக்கு தனது திருமண விடயத்தை சொல்ல நினைத்து இருந்தாலும், போன் பண்ணினாலே சித்தார்த் திட்டுவான் என்று அமைதியாக இருந்தான் அவன். அந்த நேரம் தான் காயத்ரி சித்தார்த்தை தேடி சென்றதும், அவன் கருத்தரங்குக்கு வந்ததும் நடந்தது. நண்பனுக்கு ஆபத்து என்றால் சும்மா இருப்பானா அஜய். அடுத்த கணமே ராமிடம் இருந்து அவனை காப்பாற்றி இருந்தான். மேலும் பிரசாத்திடம் விடயத்தைக் கேட்டவனுக்கு நண்பனுக்கு தொந்தரவு கொடுத்த பிரசாத் மீது கொலை வெறி ஆத்திரம் தான் தோன்றியது. சும்மாவே கொதித்து எழுபவன், சித்தார்த்தையே கொலை பண்ண வந்தவர்களை சும்மா விடுவானா? சாதாரணமாக இருந்தவனை ஆக்ரோஷமாக மாற்றி இருந்தது அவனது டி.என்.ஏ.

மேலும் காயத்ரியை மீட்க சித்தார்த்தை தேடி சென்றவன் காயத்ரி திருமண மண்டபத்தில் வைத்து கூறிய விடயத்தினால் முற்றாக நொறுங்கி விட்டான். வலியின் பிடியில் குடிக்க போனவன், போதையில் கண்ட மேனிக்கு உளறி இருந்தாலும் நிதானித்து பிறகு, "ஒரு பெண்ணுக்காக சித்தார்த் கூட சண்டை போடுறதா?" என்று நினைத்தவன் சித்தார்த் கூட பேசி அவனை காயத்திரியுடன் சேர்த்து வைக்க தான் நினைத்து இருந்தான். ஆனால் அந்த நேரத்தில் தான் தானாக வந்து தலையை கொடுத்து இருந்தான் நரேன்.

ஏற்கனவே சித்தார்த் சொன்ன விடயங்களால் நரேன் மீது கொலைவெறியில் இருந்தவன் இந்த சந்தர்ப்பத்தையும் கட்சிதமாக பயன்படுத்தி நரேனைப் போட்டவன் இன்று சித்தார்த்துடன் ஜீப்பில் பயணித்துக் கொண்டு இருக்கின்றான்.

சந்திக்கவே கூடாது என்று சித்தார்த் நினைத்து இருந்தாலும் இருவரையும் விதி சந்திக்க வைத்து இருக்க, கார் ஓட்டிக் கொண்டு இருந்தபடியே "காயத்ரியை கல்யாணம் பண்ணிக்கோ சித்தார்த்" என்று சொன்னான் அஜய். அவனோ பட்டென கண்களை விழித்தவனுக்கு அந்த வார்த்தைகளை சொல்லும் போது அவன் மனதில் உண்டான வலி புரியாமல் இல்லை.. காதலித்த பெண்ணை விட்டுக் கொடுக்கும் போது எப்படி வலிக்கும் என்றும் அவனும் அறிவான். அஜய் நன்றாக வாழ வேண்டும் என்று காயத்ரியை விட்டுக் கொடுத்தவன் அல்லவா சித்தார்த்? இக்கணம் அஜய்யின் மன நிலையை உணர்ந்தவன் "அந்த விஷயத்தில நீ தலையிடாத, ஜீப்பை ஸ்டாப் பண்ணு, நான் டாக்சில போறேன். நீ கிளம்பு" என்று அழுத்தமாக சொல்ல, அஜய்யோ "நானே கொண்டு விடுறேன்" என்று ஆரம்பிக்க "உன்னை கிளம்ப சொன்னேன்" என்று சொன்னான்.

அவனை வலுக்கட்டாயப்படுத்தி ஒன்றும் பண்ண முடியாது என்று அறிந்த அஜய்யும் அவனை டாக்சி கிடைக்கும் இடத்தில் விட்டபடி அவனை அணைத்து விடைபெற்றுக் கொண்டே புறப்பட்டு இருந்தான். சித்தார்த் வேண்டாம் என்று சொன்ன பிறகு அதை பற்றி பேசும் தைரியம் அஜய்க்கும் இருக்கவே இல்லை. அதே சமயம், மனம் கேட்காமல் அவன் அடுத்து சென்றது என்னவோ காயத்ரியிடம் தான். காயத்ரியின் தந்தையும் அவளை அவன் சந்திக்க அனுமதி அளிக்க, அவளிடம் சென்றவன் அழுது கொண்டு இருந்தவளிடம் "அங்க என்ன தான் ஆச்சு?" என்று கேட்க, அவளும் வாய்விட்டு நடந்ததை சொன்னவள் "ப்ளீஸ் அஜய் என்னை அவர் கூட சேர்த்து வச்சுடுங்க" என்று கை கூப்பி கெஞ்ச அவனுக்கும் மனம் வலிக்க ஆரம்பித்தது. காதலிக்கும் பெண்ணிடம் இருந்து எந்த பையனும் கேட்க விரும்பாத வார்த்தைகள் அவை. ஆனாலும் மனதைக் கல்லாக்கி கொண்டும் அவளை அழைத்துக் கொண்டும் அவனிடம் அடுத்த நாள் புறப்பட்டு இருந்தான்.

அடுத்த நாளோ ஜெட் வேகத்தில் நகர்ந்து விட, ஆய்வுகூடத்தில் தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்த சித்தார்த்தின் இன்டெர்க்காம் அலற அதை எடுத்து காதில் வைத்தான். மறுமுனையில் இருந்த செக்கியூரிட்டியோ "சார் காயத்ரி உங்கள பார்க்க வந்து இருக்காங்க" என்று சொல்ல , கண்களை மூடி திறந்தவன் "மீட் பண்ண முடியாதுன்னு சொல்லு" என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான். அதை செக்கியூரிட்டி அவளிடம் சொல்ல "மீட் பண்ணாம நான் போக மாட்டேன்னு சொல்லுங்க" என்று சொன்னவள் வெளியே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்று இருந்தாள்.. செக்கியூரிட்டியும் விடயத்தை சித்தார்த்திடம் சொல்ல "இடியட்" என்று திட்டி விட்டு போனை வைத்தவன் முன்னே இருந்த சி.சி.டி.வியில் அவளை பார்த்து விட்டு "டேர்ன் ஆப் தெ ஸ்க்ரீன்" என்று சொன்னவன் கையில் இருந்த பைலை புரட்ட ஆரம்பித்து இருந்தான்.

அன்று மாலை ஷிப்ட் முடிந்து அனைவரும் சென்ற போதும் கூட அவள் அங்கிருந்து நகரவே இல்லை. அடுத்த ஷிப்டுக்கு வந்தவர்களும்.அவளை விசித்திரமாக பார்த்து விட்டு செல்ல அவளது கஷ்டகாலத்துக்கு மழையும் அடித்து பெய்ய ஆரம்பித்தது. அடுத்த கணமே சி.சி.டி.வியைப் போட்டவன் அதில் நனைந்து கொண்டு இருந்தவளை பார்த்து விட்டு செக்யூரிட்டிக்கு அழைத்து "அவளை வராண்டாவுக்குள்ள வந்து நிற்க சொல்லு.." என்று சொல்ல அவனும் அதை அவளிடம் சொல்ல அவளோ "உங்க சயின்டிஸ்ட்டை வர சொல்லுங்க அப்புறமா நான் உள்ளே வரேன்" என்று சொன்னவள் கையை கட்டியபடி நடுங்கிக் கொண்டே நின்று இருந்தாள். அவள் சொன்னதை அறிந்த சித்தார்த்தோ "என்னவோ பண்ணட்டும்" என்று முணு முணுத்து விட்டு கண்ணாடியோடு பார்க்க அங்கே மதிலின் வெளியே அஜய்யின் ஜீப் நிற்பது தெரிந்தது. "இவன் தான் அழைச்சிட்டு வந்திருக்கான்" என்று முணுமுணுத்து விட்டு கோபமாக ஷேர்ட்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டே கீழே இறங்கியவன் வாசலுக்கு சென்று அவளை முறைத்துக் கொண்டே நெருங்க அவளோ இதழ்கள்.விரிய "சித்தார்த் " என்று பெயரை உச்சரித்தாள். அவனோ அவளது கையை பிடித்து இழுக்க கொண்டே கேட்டை நோக்கி செல்ல அவளோ "சித்தார்த் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... ப்ளீஸ் நான் சொல்றத கேளுங்க" என்று சொல்லும் போதே அவளை இழுத்துக் கொண்டே வர ஜீப்பில் இருந்த அஜய்யோ "இப்படி இழுத்துட்டு வர்றானே" என்று யோசித்தபடி இறங்கி கொள்ள , அவளை கொண்டு அஜய் முன்னே விட்ட சித்தார்த் " இனி இவளை அழைச்சு வந்தா உன்னை முதல் கொல்லுவேன்.. கூட்டிப் போடா " என்றவன் அவளிடம் "போடி" என்று சொன்னான். அவளோ "சித்தார்த் நான் பண்ணுனது தப்பு தான் உங்க கிட்ட இருந்து மறைச்சு இருக்க கூடாது" என்று ஆரம்பிக்க மறுபக்கம் திரும்பி செல்ல எத்தனித்தவன் ஒரு கணம் நின்று அவள் முன்னே வந்து "நீ அஜய் விஷயத்தை என் கிட்ட சொல்லலைன்னு கோவிச்சேன்னு நினைச்சியா? நான் கோபப்பட்டது எனக்கு பண்ணின துரோகத்துக்கு இல்லடி... துரோகம் எனக்கு பழகி போன ஒன்னு.. ஆனா அவன் கூட கல்யாணத்தை வச்சிட்டு என்னை லவ் பண்ணி அவனுக்கு ஒரு துரோகம் பண்ணுன பாரு.. அதுக்கு தான்.. அவனுக்கு வலிக்க வலிக்க நான் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சியா.. அது கனவிலையும் நடக்காது.. இப்போவும் சொல்றேன்.. எனக்கு என்ன ஆச்சுன்னாலும் கூட தாங்கிப்பேன் .. அவனுக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்.. ஹீ இஸ் க்ளோஸ் டு மை ஹார்ட்" என்றவன் நடக்க முற்பட அஜய் அவன் வார்த்தைகளில் சிலிர்த்துப் போனான். நட்பை தாண்டிய உன்னத உணர்வு.. அதற்கு என்ன பெயர் என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனாலும் அழுது கொண்டு இருந்த காயத்ரியைப் பார்க்க முடியாமல் "சித்தார்த் அவ பாவம்டா" என்று ஆரம்பிக்க ஒரு கணம் திரும்பி அவனை முறைத்தவன் " மூடிட்டு கிளம்பு " என்று சொல்லி விட்டு உள்ளே நுழைந்து கொண்டான்.

அவன் சொன்னதைக் கேட்ட காயத்ரிக்கு, அஜய் மற்றும் சித்தார்த்தின் பிணைப்பு புதிதாக இருக்க, சட்டென திரும்பி அஜய்யை பார்த்தவள் "சித்தார்த்தை உங்களுக்கு முதலே தெரியுமா?" என்று கேட்க அவனோ குரலை செருமிக் கொண்டே "பிரெண்ட்" என்று சொல்லிக் கொண்டே ஜீப்பில் ஏற பக்கத்தில் ஏறியவள் "ஐ ஆம் சாரி அஜய்" என்று வலியுடன் மன்னிப்பு கேட்டாள். அதுவரை அவன் மனதை பற்றி அவள் அவ்வளவு கவலைப் பட்டது கிடையாது. ஆனால் இன்று சித்தார்த் சொன்னதும் தான் மனதில் ஒரு குற்ற உணர்வு.. அஜய்யோ "ஜஸ்ட் லீவ் இட்" என்று சொல்லிக் கொண்டே ஜீப்பை ஸ்டார்ட் பண்ண, அவளோ "இல்ல அஜய், நான் பண்ணுனது தப்பு தான்.. உங்க கிட்ட சொல்லி இருக்கணும் இல்லன்னா சித்தார்த் கிட்ட சொல்லி இருக்கணும்.. என்ன பத்தி மட்டுமே யோசிச்சி சுயநலமா இருந்துட்டேன்.. கல்யாணத்தை கூட மேடையில வச்சு நிறுத்தினது ரொம்ப தப்பு.. ஆனா நீங்க அதெல்லாம் மறந்துட்டு இப்படி எனக்காக" என்று சொல்லிக் கொண்டே முகத்தை மூடி அழ, அவளை ஆழ்ந்து பார்த்தவன் "உனக்காக மட்டும் இல்ல, அவனுக்காகவும் தான்" என்று சொல்லி விட்டு ஜீப்பை கிளப்பினான். அதே சமயம் மனதில் வலியுடன், கண் மூடி சீட்டில் அமர்ந்து இருந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது. சித்தார்த்துக்கும் மனதெல்லாம் கோபத்துடன் கூடிய வலியே நிலைத்து இருக்க, அஜய் தான் எப்படி இருவரையும் சேர்த்து வைப்பது என்று யோசித்துக் கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தான். அன்று இரவு முழுதும் யோசித்தவன் ஒரு முடிவோடு அடுத்த நாள் ஸ்டேஷனுக்கு செல்ல, அவனைக் கண்ட ஷாந்தியோ அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள். அவன் முகமோ சவரம் செய்யாமல் இருக்க, அவள் மனமோ "என்ன இப்படி இருக்கிறார்? காயத்ரி இல்லன்னா ஊர்ல பொண்ணா இல்ல.." என்று திட்டிக் கொண்டது.

அவன் வந்து இருந்த அடுத்த கணமே ஷாந்தியை தனது அறைக்குள் அழைத்து இருந்தான். அவளும் "எதுக்கு கூப்பிடுறாரோ?" என்று யோசித்தபடியே உள்ளே நுழைந்தாள்..

தன் முன்னே சாலியூட் அடித்தபடி நின்றவளைப் பார்த்த அஜய் "கொஞ்சம் பெர்சனலா பேசணும்" என்று சொல்ல, அவளோ மனதுக்குள் "மறுபடி மாப்பிளை பார்க்க போறதா சொல்ல போறாரோ.. இந்த முறை அப்படி ஏதும் பேசுனா லெப்ட் ரைட் வாங்கிடணும் " என்று நினைத்துக் கொண்டே "ஓகே சார்" என்று சொன்னாள். அவனோ "ஓகே.. அப்போ வா வெளிய போய் பேசலாம்" என்றவன் ஜீப்பின் கீயை எடுத்துக் கொண்டே முன்னே செல்ல அவளோ "பில்ட் அப் எல்லாம் பயங்கரமா இருக்கே.. என்னவா இருக்கும்??" என்று யோசித்துக் கொண்டே பின்னே சென்றாள். அவளை அழைத்துக் கொண்டே கடற்கரைக்கு வந்தவன் அங்கே அலையை வெறித்தபடி பாக்கெட்டில் கையைப் போட்டுக் கொண்டே "நான் உன் கிட்ட ஹெல்ப் கேட்டுத் தான் வந்திருக்கேன்" என்று சொல்ல , அவளோ "என்ன ஹெல்ப் சார்??" என்று கேட்டாள். அவனோ பெருமூச்சுடன் "நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.. சித்தார்த் காயத்ரி கல்யாணம் நடக்கணும்னா இப்போ இருக்கிற சிட்டுவேஷன்ல நான் கல்யாணம் பண்ணி ஆகனும்" என்று சொல்ல அவளோ "ஓஹ் அப்படியா? அதுக்கு??" என்று கேட்டாள். அவனோ "ஆனா கல்யாணம் பண்ணி இன்னொரு பொண்ணோட வாழுற அளவுக்கு என்னோட மனசு இல்ல.. மனசு மாற நாள் ஆகலாம்.. சிலவேளை மாறாம கூட போகலாம்.. ஒரு கட்டத்துல மனசு மாறலன்னா என்ன நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணோட வாழ்க்கையே போயிடும்" என்று சொல்ல அவளோ "இதுல நான் என்ன ஹெல்ப் பண்ணனும்??" என்று கேட்டாள். அவனோ அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்து "உனக்கும் லவ் பெயிலியர்.. எனக்கும் லவ் பெயிலியர்.. ரெண்டு பேருக்கும் வேற கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல. சோ என் கிட்ட இருந்து எதுவும் நீ எதிர்பார்க்க மாட்ட.. கல்யாணம் பண்ணிட்டு பிரெண்ட்ஸ் ஆஹ் இருக்கலாம்.. செட் ஆகலன்னா டிவோர்ஸ் கூட பண்ணிக்கலாம்" என்று சொல்ல அவள் விழிகளோ பூரிப்பில் விரிந்து கொள்ள "ஷாந்தி இது ஜாக்போட் ஆச்சே.. மிஸ் பண்ணிடாதே" என்று நினைத்தவள் சட்டென முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள். அவனோ அவள் முகத்தைப் பார்த்து " உனக்கு இஷ்டம் இல்லன்னா சொல்லிடு.. நான் உன்ன போர்ஸ் பண்ணல" என்று சொல்ல அவளோ "ஐயோ ஓவர் பெர்போர்மன்ஸ் பண்ணி சொதப்பிட்டேனோ" என்று நினைத்தவள் "அப்படி எல்லாம் இல்ல சார்.. காயத்ரிக்காக நான் ஓகே சொல்லுறேன் . ஆனா உங்க நுனி விரல் கூட என் மேல பட கூடாது" என்று வாயில் வந்ததை அடித்து விட்டாள். அவனோ "ச்ச ச்ச.. நீ நினைக்கிற போல எல்லாம் நான் மோசமானவன் இல்ல.. உனக்கே தெரியும் காயத்ரி கூட அவ்ளோ டிஸ்டன்ஸ் ஆஹ் தான் இருந்தேன்.. வேணும்னா சத்யம் பண்ணி கொடுக்கட்டுமா?" என்று கேட்க அவளோ "அய்யய்யோ சத்யம் எல்லாம் வேணாம்.. உங்கள நம்பாம வேற யாரை நம்ப போறேன்?" என்று சொன்னாள்.. அவனோ "ம்ம் அப்போ இத பத்தி பேசிட்டே போகலாம்" என்று சொன்னபடி முன்னே செல்ல, பின்னால் வந்தவளோ விழி விரித்து இதழ் குவித்த ஊதியபடி பின்னே "அப்பாடா" என்று சொல்லிக் கொண்டே பின்னால் சென்றாள். அவள் மனமோ "மாப்பிளையோட சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நிக்கிற போல, இவர் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க கல்யாணம் எப்படி நடக்கும்?" என்று தான் யோசித்தது. அவளுக்கு தான் சித்தார்த் மற்றும் அஜய்யின் பிணைப்பு பற்றி எதுவும் தெரியாது அல்லவா? அவளுக்கோ இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை. ஆனாலும் அவள் இப்போது இருக்கும் நிலையில் தெரிந்து கொள்ளவும் யோசிக்கவும் இல்லை. "நமக்கு கல்யாணம் நடந்தா ஓகே" என்று மட்டும் நினைத்துக் கொண்டே அவனுடன் ஸ்டேஷனை நோக்கி புறப்பட்டு இருந்தாள்.
 
Top