ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மா 15

pommu

Administrator
Staff member
பிரம்மா 15

அஜய்யோ ஜீப்பை ஓட்டிக் கொண்டே செல்ல, அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்துக் கொண்டே சீட்டில் தலை சாய்ந்து இருந்த சித்தார்த்தோ மென் சிரிப்புடன் கண்களை மூடிக் கொண்டான். இருவர் மனதிலும் பழைய எண்ணங்கள் சுழல ஆரம்பித்தன.

இருவருக்குமான அந்த பிணைப்பு சாதாரணமாக உருவாகியது அல்ல, துரோகத்திற்கும் வலிக்கும் மருந்தாக உருவான பிணைப்பே அது.

ஆம், நரேனும் சித்தார்த்தும் ஆய்வுகூடம் ஒன்றை நடத்திக் கொண்டு இருந்த தருணம் அது. படித்து முடித்ததும் ஆராய்ச்சியில் இறங்கியவர்களது கண்டுபிடிப்புகள் எல்லாமே அபாரமாக தான் இருந்தது. என்ன தான் ஒரே கல்வியை கற்று இருந்தாலும் நரேனை விட சித்தார்த்தின் திறமை எப்போதுமே ஒரு படி மேலே தான். ஒன்றாக ஆய்வுகூடம் நடத்திக் கொண்டு இருந்தாலும் தனி தனியாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டபடி இருந்தார்கள். கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் சில பல ஆராய்ச்சிகளை சித்தார்த் அனுமதி பெறாமல் சட்டத்துக்கு புறம்பாக செய்தது என்னவோ உண்மை தான். அது தான் அந்த ஜீனோம் எடிட்டிங்.

ஒருவரின் மரபணுவை திருத்தி அமைக்கும் அந்த ஆராய்ச்சி பிரம்மனின் படைப்புக்கே சவாலாக தான் இருந்தது. "கடவுளின் படைப்பு அதனை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்" என்கின்ற கோட்பாடு மாறி, "எனக்கு நானே கடவுள். நான் எப்படி இருக்க வேண்டும் என்று நான் தான் தீர்மானிக்க வேண்டும்" என்கின்ற கோட்பாடு உருவாகும் என்பதாலோ என்னவோ அவ்வளவு சீக்கிரம் அதற்கு அனுமதி கிடைக்கவே இல்லை. எல்லோரும் தமக்கு விரும்பியபடி தம்மை செதுக்கிக் கொண்டால் உலகத்தில் அமைதி எங்கனம் உலா வரும்? அதனாலேயே இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி அளிப்பதற்கு உலக நாடுகள் யோசனையில் ஈடுபட்டு இருக்க, ஆர்வத்தின் மிகுதியால் அந்த ஆராய்ச்சியில் உச்சம் தொட்டு இருந்தான் சித்தார்த்.

அவனது முதல் வெற்றி பீட்டர் தான். ஜெலி பிஷ் உடைய நிறத்தை ஜீனோம் எடிட்டிங் மூலம் பீட்டரில் தோன்ற வைத்து இருந்தான் அவன்.

அது ஆரம்பமாக இருந்ததால் என்னவோ அதை பற்றி அவன் யாரிடமும் மூச்சுக் கூட விடவில்லை நரேன் உட்பட. அடுத்து அவனுக்கு ஒரு படைவீரனின் டி.என்.ஏ அமைப்பு கிடைத்து இருக்க, அதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்தவனுக்கு கிடைத்தது என்னவோ பாரிய வெற்றி தான்.

அன்று ஆராய்ச்சி அறைக்குள் சென்றவனோ "ஓஹ் மை காட்" என்று வாய் விட்டு புன்னகையுடன் சொன்னவன் நரேனுக்கு அடுத்த கணமே அழைத்து "நரேன் கம் டு தெ ரூம் நம்பர் 4. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு" என்று சொல்ல, அவனும் அவசரமாக அந்த அறைக்குள் வந்து சேர்ந்தான். உடனே சித்தார்த் "இத பாரு" என்று சொல்ல, அந்த கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த எலியை எடுத்துப் பார்த்த நரேனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன. அடுத்த கணமே "சித்தார்த், அமேஸிங்.. இது எப்படி?" என்று கேட்க, அவனோ " நமக்கு கிடைச்ச சோல்ஜர்.கரண் உடைய டி.என்.ஏ உடைய அமைப்பை போலவே இந்த எலியோட டி.என்.ஏ வை எடிட் பண்ணினேன். குட்டி சோல்ஜர் போல ஆயிடுச்சு பாரேன்." என்று சொல்ல, நரேனும் அந்த படிக்கட்டு தேகம் உடைய எலியை ஆழ்ந்து பார்த்தான்.

அவன் முகத்தில் சின்ன பொறாமை தோன்றினாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டவன் "நீ ஜீனியஸ் டா" என்று புகழ்ந்து கொண்ட சமயம், அந்த டி.ன்.ஏ யின் வீரியத்தை அந்த எலியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும். அடுத்த கணமே நரேனின் கையில் அது படுத்து உயிரை துறந்து கொள்ள, "வாட், ஹப்பெண்ட், மை காட்" என்று சொல்லிக் கொண்டே அந்த எலியை வாங்கி இருந்தான் சித்தார்த். இந்த கணம் அவனோ எலியை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க, நரேனுக்கோ ஒரு குரூர புன்னகை இதழில் தோன்றியது.

சித்தார்த்தோ "ஐ வில் செக் டா" என்று சொல்ல, நரேனும் "நீ பீல் பண்ணாதே, இது சக்ஸஸ் ஆகும்" என்று போலியாக சொல்லி விட்டு வெளியேறி இருந்தான். அந்த எலியை நீண்ட நேரம் ஆராய்ச்சி செய்தவன் அப்போது தான் இந்த ஆராய்ச்சியில் இருக்கும் குறைபாடுகளை கண்டு கொண்டான். முக்கியமாக மனிதனின் ஜீனால் உண்டாக்கப்படும் புரதங்களின் செயற்பாட்டை அந்த எலியால் கையாள முடியாமல் இருந்த அதே சமயம், அந்த பரிசோதனை தனி அறைக்குள் வைத்து சிறப்பு உபகாரணங்கள் மத்தியில் செய்யப்பட வேண்டும் என்றும் கண்டு பிடித்து இருந்தான். சிறிது நாட்களில் குறைபாடுகள் எல்லாம் நிவர்த்தி செய்து ஒரு ரிப்போர்ட்டை தயாரித்தவன் அதனை ஒரு சி.டியில் பதிவு செய்து தன்னுடைய படுக்கையறை அலுமாரிக்குள் வைத்து இருந்தான். அதே சமயம், குறைகளை நிவர்த்தி செய்யாத ரிப்போர்ட் வேறு ஒரு சி.டி யாக அவனது அலுவலக மேசையினுள் இருந்தது. சொந்தங்கள் என்று யாரும் இல்லாத சித்தார்த்துக்கு இருந்த ஒரே நண்பன் நரேன் தான். வெற்றியோ தோல்வியோ அதனை அவனிடம் பகிர்ந்து பழகியவன் அவனை உயிர் நட்பாக நினைத்தாலும் அவனது திறமையை தான் பயன்படுத்தும் பொருட்டே நரேன் அவனுடன் நட்பு பாராட்டி இருந்தான்.

பணத்துக்கு விலை போகும் நரேனுக்கோ வெளிநாட்டு கம்பெனிகளுடன் நிறைய தொடர்பு இருந்தது. சித்தார்த்துக்கு அதில் நாட்டமும் இல்லை. அதை பற்றி அவன் கவலைப் படுவதும் இல்லை. நண்பன் மீது அளப் பரிய நம்பிக்கை அவனுக்கு. அப்போது தான் ஒரு வெளிநாட்டு சுற்றுலாவுக்கு சென்ற நரேன், ஒரு கம்பெனியிடம் தான் செய்த போல சித்தார்த்தின் கன்டுபிடிப்பை பற்றி சொல்ல, அவர்களோ அந்த ஆராய்ச்சிக்கு விலையாக பல கோடி பணத்தை பேரம் பேசி இருந்தார்கள். சொந்த உழைப்பு என்றால் தானே அந்த கண்டுபிடிப்பின் மகிமை தெரியும்.. மாற்றான் உழைப்பு என்பதால் என்னவோ கிடைத்த வரைக்கும் லாபம் என்று சித்தார்த்தின் கண்டுபிடிப்பை விற்க அவன் முடிவெடுத்து இருந்தான்.

வெளிநாட்டில் இருந்து வந்தவனோ நேரே சென்றது சித்தார்த்தின் அறைக்குள் தான். அவனோ "வா மச்சி" என்று சொல்லிக் கொண்டே கையில் இருந்த டெக்னிகல் பேப்பரைப் பார்த்தான். நரேனோ குரலை செருமிக் கொண்டே முன்னால் அமர்ந்தவன் "ஜீனோம் எடிட்டிங்ல இருக்கிற இஸ்சு எல்லாம் ரெக்டிபை பண்ணிட்டியா?" என்று கேட்க அவனோ "எஸ் டா.. ஆனா இன்னும் பிராக்டிகல் ஆஹ் ட்ரை பண்ண ஒரு ஹியூமன் தான் வேணும்.. எலிக்கு செட் ஆகாது " என்று சொல்ல அவனோ " ம்ம் " என்று சொன்னவன் "அது இப்போ தடை செய்யப்பட்டு இருக்கு.. சோ உன்னால பேட்டண்ட் வாங்க முடியாது.. தெரியும் தானே" என்று கேட்டவன் அவனை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டே "ஹ்ம்ம்.. அப்புறம் அத பார்த்துக்கலாம்" என்று சொன்னான். உடனே அவன் "இத ஏன் நாம விற்க கூடாது.. கோடி கணக்குல பணம் கிடைக்குமே" என்று ஆசை வார்த்தை காட்ட அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவன் "இது என்னோட முழு உழைப்பு.. சும்மா தூக்கி கொடுத்துட்டு போறதுக்கு நான் ஒன்னும் கையாலாகாதவன் இல்ல.. அண்ட் எல்லாத்துக்கும் மேல இத வாங்குற கம்பெனி நிறைய மிஸ்யூஸ் பண்ண வாய்ப்பிருக்கு. எப்படியும் இல்லீகல் ஆஹ் தான் நம்ம கிட்ட இருந்து வாங்குவான் " என்று சொல்ல நரேனோ சற்று கடுப்பாக "விற்கவும் மாட்ட , பேட்டண்ட் எடுக்கவும் முடியாதுன்னா என்ன தான் பண்ண போற?" என்று காட்டமாகவே கேட்க அவனை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன் "இப்போ எதுக்கு இவ்ளோ அவசரப்படுற? இதனால் எவ்வளவோ பெனிபிட் இருக்கு.. கான்செர் லாஸ்ட் ஸ்டேஜ் பேஷண்ட் அண்ட் எச்.ஐ.வி பேஷண்ட் என்று எல்லாரயும் கியோர் பண்ணலாம்.. அந்த எமனுக்கே டஃப் கொடுக்கலாம்.. சோ கீப் காம்" என்று சொன்னான். சித்தார்த் என்ன தான் சொன்னாலும் பல கோடி பேரம் பேசிய நரேனுக்கு நிதானம் இருக்குமா என்ன?

"ஓகே டா.. நான் கிளம்புறேன்" என்று சொன்னவன் அடுத்து தனது அறைக்குள் அழைத்தது என்னவோ சித்தார்த்தின் உதவியாளனை தான்.

தன் முன்னே நின்ற உதவியாளன் முன்னே ஒரு கட்டுப் பணத்தை வைத்தவன் "அவனோட ஜீனோம் எடிட்டிங் ரிப்போர்ட் இருக்கிற சி.டி என் கைக்கு வந்தாகணும்" என்று கட்டளை இட , " சார் பயமா இருக்கு.. அவருக்கு அதிகமா கோபம் வருமே" என்று சொன்ன உதவியாளனின் இதழ்கள் அடுத்த கட்டுப் பணத்தைப் பார்த்ததுமே கப்பென்று மூடிக் கொண்டது.

சித்தார்த்தும் ஆராய்ச்சியில் மும்முரமாக இருந்ததால் அந்த சி.டி யை எடுத்து கொடுப்பது ஒன்றும் அவனுக்கு கஷ்டமான விடயமாக இருக்கவே இல்லை. இப்படி தன்னை சுற்றி துரோகிகள் இருப்பதை அறிந்தானோ என்னவோ குறைகள் திருத்தி அமைக்கப்பட்ட சி.டியை தனது படுக்கை அறைக்குள் வைத்தவனோ பழைய சி.டியைத் தான் தனது அலுவலக அறைக்குள் வந்து இருந்தான். அவனது உதவியாளன் திருடியது என்னவோ பழைய சி.டியைத் தான்.

நரேனும் அவசரத்தில் அதை எல்லாம் பார்க்காமல் அதில் இருந்த விபரங்களை காப்பி பண்ணி எடுத்தவன் சி.டியை மீண்டும் அந்த உதவியாளனிடம் கொடுத்து இருக்க அவனும் அதனை உரிய இடத்தில வைத்து இருந்தான். நரேனோ அவசர அவசரமாக டீலிங்கை முடித்தவன் பணத்தையும் அடுத்தடுத்த நாட்களில் பெற்று இருந்தான்.

நாட்கள் சுமூகமாக செல்ல ஆரம்பித்த தருணம் அதில் சித்தார்த்தும் அந்த பழைய சி.டியைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அன்று ஒரு முக்கியமான பைலை எடுக்க ட்ராயரைத் திறந்தவன் புருவங்களோ சுருங்கி போயின. வழமையாக நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த சி.டி இன்று மறுபக்கம் மாற்றி வைக்கப்பட்டு இருக்க "இத யார் துறந்து இருப்பாங்க?" என்று நினைத்தவன் அடுத்த கணமே லேப்டாப்பை போட்டு அந்த அறையில் இருந்த சி.சி.டி.வியை ட்ரேஸ் பண்ணினான். அதிலேயே அந்த உதவியாளன் சி.டியை எடுத்துக் கொண்டு போனதும் மீண்டும் திரும்ப கொண்டு வந்து வைத்ததும் தெளிவாக இருந்தது. அந்த உதவியாளனும் சி டி யை திரும்ப வைத்தால் சந்தேகம் வராது என்று யோசித்தவன் அறியவில்லை சின்ன மாற்றம் இருந்தால் கூட சித்தார்த்திடம் அகப்பட வேண்டி வரும் என்று. சித்தார்த் எதை வேண்டும் என்றாலும். தாங்கி கொள்வான் ஆனால் துரோகம் என்றால் மட்டும் உக்கிரமாகி விடுவான். அடுத்த கணமே அந்த உதவியாளனை அழைக்க, அவனும் உள்ளே வந்தவன் "சார்" என்று அழைத்தபடி நின்று இருந்தான். சித்தார்த்தின் விழிகளோ கோபத்தில் சிவந்து இருக்க அதைக் கண்டு அந்த உதவியாளன் நடுங்கியது என்னவோ உண்மை தான்.

ஆனாலும் பயத்தை வெளிக் காட்டாமல் நின்று இருக்க, மேசையில் கை குற்றி எழுந்த சித்தார்த் அவனை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே அடிமேல் அடி வைத்து நகர்ந்தவன் அங்கிருந்த மேசையில் சாய்ந்து அவன் முன்னே நின்று கொண்டே மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு அவனை மேலிருந்து கீழ் பார்க்க, சித்தார்த் நின்ற தோரணையைக் கண்ட உதவியாளனுக்கு அந்த ஏ சி யிலும் வியர்த்து வடிந்தது. சித்தார்த்தோ கையை நீட்டி அவன் வெண்ணிற கோர்ட்டில் இருந்த தூசை தட்ட அவனோ பயத்தில் ரெண்டடி பின்னே செல்ல சித்தார்த்தோ "தூசு டா" என்று சொன்னான் . அவன் நடுக்கமும் பயமுமே.அவனைப் பற்றி எடுத்துரைக்க "எவ்ளோ பணம் யார் கிட்ட வாங்குன?" என்று கேட்டான். அவனோ "சார்" என்று நடுக்கமாக கூற சித்தார்த்தோ "எவ்ளோ பணம் யார் கிட்ட வாங்குன என்று கேட்டேன்" என்றான் அழுத்தமாக. அந்த உதவியாளனோ,"நான் ஏன் சார் பணம் வாங்கணும்?" என்று கேட்க , வாய் விட்டு சிரித்தவன் லேப்டாப்பை திருப்பிக் காட்ட அவன் விழிகளோ அதிர்ச்சியில்.விரிந்து கொள்ள "ஐயோ சார் என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க.. நான் உண்மைய சொல்றேன்.. நரேன் சார் தான் அந்த சி.டியைக் கேட்டார் " என்று சொல்ல அவன் முகம் இன்னும் இறுகி போனது.

அவனுக்கோ அதனை நம்புவதா வேண்டாமா என்கின்ற குழப்பம், மனமோ அது உண்மையாக இருக்கக் கூடாது என்று தான் நினைத்து இருந்தது. ஆனாலும் நம்பாமல் இருக்க முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றான். அந்த கண்டுபிடிப்பை நரேன் விற்பதைப் பற்றி பேசி இருக்காவிட்டால் கூட அவன் நம்பி இருக்க மாட்டான். ஆனால் அவன் பேசியதால் என்னவோ அவனால் நம்பாமலும் இருக்க முடியவே இல்லை. உடனே அவன் "எவிடென்ஸ் இருக்கா?" என்று தான் கேட்டான். இந்த ரணகளத்திலும் அவன் அந்த உதவியாளனிடம் நிதானமாக நடந்து கொள்ள ஒரே காரணம் அந்த சி.டி குறைகளுடன் கூடிய கண்டுபிடிப்பையே பற்றி இருந்ததால் ஆகும். மேலும் அவனால் மட்டுமே அந்த குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று அவனுக்கு தெரியும். என்ன தான் பல கோடி பேரம் பேசி வாங்கி இருந்தாலும் அந்த கண்டுபிடிப்பால் அவர்களுக்கு பயன் இல்லை தான். அதே சமயம், அனைவரிடமும் அவன் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது அல்லவா? பணத்துக்காக அவனிடம் வேலை செய்பவனின் துரோகம் அவனைத் தாக்காது. ஆனால் அவன் உயிருக்கு மேலாக மதித்த நண்பனின் துரோகம் அவனை உயிருடன் மரிக்க வைத்து விடும் அல்லவா? அதனாலேயே நரேனின் பெயரைக் கேட்டதுமே அவனுள் ஒரு நடுக்கம்.

அந்த உதவியாளனோ "இப்படி ஏதும் வரும்னு தெரிஞ்சு தான் சார், நான் அவர் கூட பேசுனத ரெக்கார்ட் பண்ணி வச்சு இருந்தேன்” என்று சொன்னவன் போனை எடுத்து நரேனுடன் பேசியதைப் போட்டுக் காட்ட, அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்த்தின் கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்ப, அடுத்த கணமே ஷேர்ட்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டே முன்னால் நின்றவனுக்கு ஓங்கி அறைந்து இருந்தான். அவன் அறைந்த வேகத்தில் அவனது போன் ரெண்டடி தள்ளிக் கொண்டு விழ, அவனோ கன்னத்தைப் பொத்தியபடி ஏறிட்டுப் பார்க்க, சித்தார்த்தோ "நீ எனக்கும் விசுவாசமான இல்ல, அவனுக்கும் விசுவாசமா இல்ல" என்று சொல்லி விட்டு விறு விறுவென வெளியேறியவன் அடுத்து சென்றது என்னவோ நரேனின் அறைக்குள் தான். உள்ளே நுழையும் போதே அவன் விழிகள் சிவந்து இருக்க, அவனால் நண்பன் செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதே கோபத்துடன் உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்து இருந்தவனின் ஷேர்ட்டை ஒற்றைக் கையால் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் "எதுக்குடா இப்படி பண்ணுன?" என்று அவன் விழிகளை நோக்கி கேட்க அவனோ "சித்தார்த் என்ன இது? எல்லாரும் பார்க்கிறாங்க.. கையை எடு.. நான் என்ன பண்ணுனேன்?" என்று கேட்டான்.

அதைக் கேட்ட சித்தார்த்துக்கு கோபம் உச்சத்தில் வர, "துரோகிடா நீ, எதுக்கு என்னோட கண்டுபிடிப்பை திருடி வித்த?" என்று கேட்க, இப்போது அதிர்ச்சியில் இருந்த நரேனின் இதழ்கள் குரூரமாக புன்னகைக்க, தனது ஷேர்ட்டில் இருந்த அவனது கையை தட்டி விட்டவன் "எல்லாம் அவன் சொல்லிட்டானா?' என்று கேட்டுக் கொண்டே மேலும் "இதுக்கு மேல எதுக்கு மறைக்கணும்? ஆமா நான் திருடி தான் கொடுத்தேன், பல கோடி பணமும் வாங்கிட்டேன்.. இப்போ உன்னால என்னடா பண்ண முடியும்?" என்று கேட்க சித்தார்த்தோ ஆத்திரத்தின் உச்சத்தில் கண்களை மூடித் திறந்தான். அவன் மன்னிப்பு கேட்டு இருந்தால் கூட மன்னித்து இருப்பான். ஆனால் அவனோ இப்படி பேசப் பேச சித்தார்த்தினால் தன்னையே கட்டுப்படுத்த முடியவே இல்லை. " உன்னை எவ்ளோ நம்புனேன் இப்படி பண்ணிட்டியே" என்று கேட்ட போதே அவன் குரலில் அப்படி ஒரு வலி. நரேனோ வாய் விட்டு சிரித்தவன் "உன்னை யாரு நம்ப சொன்னா? நீ தான் என்னை பிரென்ட் என்று நினச்சுட்டு இருக்க, ஆனா எனக்கு நீ நத்திங்... உன் கூட பணத்துக்காக தான் பார்ட்னெர்ஷிப் வச்சுக்கிட்டேன்.. என்ன தான் சொன்னாலும் பிரம்மன் அவருக்கு இணையா உன்னை படைச்சு இருக்கிறான்.. இப்போ எனக்கு அளவுக்கு அதிகமான பணம் கைல கிடைச்சு இருக்கு.. இனி நீ எனக்கு குப்பை தான். உன் பிரெண்ட்ஷிப்பும் குப்பை தான்" என்று சொல்லி முடிக்க முதலே ஓங்கி அவன் பேசிக் கொண்டு இருந்த வாயில் குத்தி இருந்தான் சித்தார்த். அவனால் இப்படி நட்பை கேவலமாக பேசிக் கொண்டு இருப்பதை தாங்கவே முடியவில்லை..

அவன் குத்தியதில் நரேனின் இதழ் வெடித்து ரத்தம் பீச்சியடிக்க, அங்கிருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றார்கள். நரேனோ "ஆஅ" என்று வலியில் அலறியவன் வாயை பொத்திக் கொண்டே அவனை கோபமாக பார்க்க, அவன் கழுத்தை பிடித்து சுவரில் சாத்திய சித்தார்த் "குப்பை தாண்டா உன்னை நம்புனேன் பாரு, நானும் குப்பை தான் என்னோட பிரென்ஷிப்பும் குப்பை தான். எதிரியை கூட மன்னிப்பேன் ஆனா துரோகியை நான் மன்னிக்கவே மாட்டேன்.. இதுவரைக்கும் இந்த சித்தார்த்தை உன்னோட பிரென்ட் ஆஹ் நல்லவனா தானே பார்த்து இருக்க, எதிரியா கெட்டவனா பார்த்தது இல்ல தானே.. இனி பார்ப்ப.. எப்போ என்னோட கண்டுபிடிப்புல கை வச்சியோ அப்போவே உனக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுடுச்சு டா, திருடுறதும் தான் திருடுற, கரெக்ட் ஆஹ் திருடி இருக்க வேணாமா?" என்று ஆக்ரோஷமாக கேட்டவன் திமிறிக் கொண்டு இருந்தவனின் கழுத்தை விட்டபடி நடந்து செல்ல, அவன் கூறிய இறுதி வார்த்தையில் அதிர்ந்தது என்னவோ நரேன் தான்.

பணத்தையும் வாங்கி விட்டான் ஆனால் திருடி கொடுத்தது தவறான பைல் என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்? நரேனுக்கு இதழில் வேறு ரத்தம் வடிய, அதற்கு மேல் தவறான கண்டுபிடிப்பை விற்று விட்டோம் என்கின்ற பதட்டம் உருவானது. அக்கணம் அவன் போன் அலற, அதை எடுத்தவன் காதில் வைக்க, மறுமுனையில் இருந்து அவனிடம் கண்டுபிடிப்பை வாங்கிய கம்பெனி முதலாளி "நரேன், பிழையான கண்டுபிடிப்பை கொடுத்து ஏமாத்த பார்க்கிறியா? இட்ஸ் பெயிலியர் மேன், என் பணத்தை திருப்பிக் கொடு" என்று ஆக்ரோஷமாக கத்தியது வெளியே இருந்த சித்தார்த்துக்கும் கூட விளங்க, ஒரு கணம் திரும்பி தன்னையே அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்த நரேனை நோக்கி கண்ணடித்து சிரித்தவன் "யோர் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்" என்று சொல்லி கையில் படிந்து இருந்த நரேனின் ரத்தத்தை டிஸ்ஸுவினால் துடைத்து விட்டு வெளியேறி விட்டான். அவன் என்ன தான் திடமாக இருப்பது போல தோன்றினாலும் நண்பன் கொடுத்த வலி ஆறாத வடுவாக அவனை உயிருடன் உருக் குலைத்துக் கொண்டு தான் இருந்தது.
 
Top