நெஞ்சம் நிறைந்ததே எனதழகா
பார்ட் - 2
நெஞ்சம் 1
ரூபன் இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு,
“பவளா இப்பவும் நல்லா யோசி.. நீ தப்பான முடிவு எடுத்திருக்கன்னு எனக்கத் தோணுது” என்ற ராகினியை ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகளோ அனலை தான் கக்கியது..
“ராகினி.. நீ என் மேல இருக்கிற அக்கறையில் தான் சொல்லுறேன் புரியுது.. ஆனா இப்போதைக்கு நான் எடுத்த முடிவு தான் சரி.. என் ரூபனை கொன்னவனை என் கையால கொன்னாதான் எனக்கு சந்தோஷம்” என்றவள் தான் அணிந்திருந்த புடவையை சரி பண்ணினாள்..
அரக்கு நிற புடவையில் மணமகளுக்கான முழு அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் பவளா..
மிதமான அலங்காரத்தில் இருந்தவளின் கண்களில் அவ்வளவு வன்மம்.
அவள் யாரை இந்த உலகத்திலேயே அதிகமாக வெறுக்கிறாளோ?.. அவனோடு தான் திருமணம் நடக்க இருக்கிறது..
இன்னும் சிறிது நேரத்தில் விதவை என்ற பதவியில் இருந்து மிஸ்ஸஸ்..ஆதிகேஷவ் பதவிக்கு செல்லப் போகிறாள்…
அதை நினைக்கும் பொழுதே உடலெல்லாம் தீப்பற்றி எரிவது போல் தகிக்க ஆரம்பித்தது…
“அழகா இருக்கேனா?..” என்ற பவளாவை சற்று பரிதாபமாக பார்த்தாள் ராகினி.
“நல்லவர்களும், கெட்டவர்களும் உருவாகுவதில்லை.. உருவாக்கப்படுகிறார்கள் என்பது பவளா விஷயத்தில் சரியாக இருந்தது”..
நான்கு மாதம் அவள் அனுபவித்த வலியும், வேதனையும் அவளை இரும்பு மனிதியாக மட்டுமில்லாமல், இரக்கம் இல்லாத மனிதியாகவும் மாற்றியிருந்தது…
ஒரு ஆண் ஒரு பெண்ணோடு எத்தனை காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை.. எவ்வளவு தூரம் அவளை நேசித்திருக்கிறான் என்பது தான் முக்கியம் என்பதை நிரூபித்திருந்தாள் பவளா…
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ..” என்ற ஐயரின் குரலில் மெல்ல எழுந்து நின்றவளின் ஆறு மாத வயிறு குழந்தையின் வளர்ச்சியை அழகான காட்டியது..
தன் வயிற்றில் இருக்கும் குழந்தையினை வருடியவாறே எதிரில் இருந்த கண்ணாடியைப் பார்த்தாள். அவள் விழிகளில் அவ்வளவு ஆவேஷம். அவ்வளவு குரோதம்..
“உன் அப்பாவோட சாவுக்கு காரணமா இருந்தவனை அழிக்கிறதுக்காகத்தான் இந்தப் போராட்டம் செல்லக்குட்டி.. அவனை சிக்கீரமாவே அழிச்சிட்டு நீயும் நானும் மட்டும் இந்த உலகத்துல சந்தோஷமா வாழலாம்” என தன் குழந்தையோடு மனதுக்குள்ளேயே உரையாடியவள் மெல்ல வெளியே வர, அங்கு கோயில் சன்னிதானத்தில் சாமியின் முன்பாக நின்றிருந்தான் ஆதிகேஷவ்..
நேராக வந்தவள் சன்னிதானத்தில் நின்றுக் கொண்டிருந்தவனை தான் பார்த்தாள்..
அவனும் திரும்பி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
“பொண்ணு கழுத்துல மாலையைப் போடுங்கோ” என்ற குரலில் பவளாவின் புறம் திரும்பினான் ஆதிகேஷவ்…
“நீங்க மாப்பிள்ளை கழுத்துல போடுங்கோ” என்றதுமே வேண்டா வெறுப்பாக தன் கையில் இருந்த மாலையை ஆதிகேஷவ்வின் மேல் தூக்கிப் போடாத குறையாக போட்டாள் பவளா..
“என்னம்மா இப்படி போடுற?..” என புஷ்பவள்ளி பாட்டிதான் குறை படித்தார்.
“மாலை தானே போடணும். எப்படி போட்டா என்ன?. அதான் போட்டுட்டேன்ல...” என நக்கலாக சொல்லிவிட்டு முன்னோக்கி திரும்பி நின்றாள்…
“தம்பி நீங்க போடுங்கோ” என்றதுமே பவளாவின் கழுத்திற்கு வலிக்குமோ என்றெண்ணி மிக மெதுவாக அவளின் கழுத்தில் மாலையை போட்டான் ஆதி..
“இந்தத் தாலியை வாங்கி கட்டுங்கோ” என்ற குரலில் பவளா, ஆதி இருவரின் கண்களுமே தாலியை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது..
பவளாவிற்கு “தான் தவறு செய்கிறோமோ?..” என்ற எண்ணமே அதிகமாக வந்தது..
ஆதிக்கோ, “உண்மையை இந்த நொடியே சொல்லிவிடலாமா?” என தவிப்பு தான் மேலோங்கியது..
இருவரின் மனதிலுமே திருமணம் என்பது ஏதோ ஒரு சடங்கு என்பதை போல் தான் தோன்றியது.
“தாலி கட்டுங்க தம்பி” என்ற புஷ்பவள்ளி பாட்டியின் குரலில், தாலியை வாங்கியவன் பவளாவை தான் பார்த்தான்…
மெதுவாக அவளின் கழுத்தருகே கொண்டு செல்ல, பவளாவிற்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது விட்டது..
இதயமோ படபடவென துடிக்க, இரத்த அழுத்தமோ அநியாயத்திற்கு எகிற ஆரம்பிக்க, “இந்தக் கல்யாணம் வேண்டாம்” என சொல்ல நினைப்பதற்குள், அவளின் நெஞ்சில் வந்து விழுந்தது பொன் தாலி..
தன் கழுத்தில் ஆதியும், அந்தமும் வந்து விழுந்த தாலியை தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“தம்பி குங்குமம் வைங்கோ”, என்றதுமே குங்குமத்தை எடுத்து பவளாவின் உச்சி வகுட்டில் எடுத்து வைத்த அடுத்த கணமே பவளாவின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது..
எதிரில் நிற்கும் ஆதியின் நினைவை விட, தன் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ரூபனின் நினைவு தான் அதிகமாக வந்தது..
“ரூபாஆஆ” என தன்னை மறந்து அழைத்தவளுக்கு, எதிரில் இருந்த பிம்பம் இரண்டு இரண்டாக தெரிய ஆரம்பித்தது..
கண்களோ மயக்கத்தை தழுவ நிலைகுலைந்து அப்படியே மயங்கி விழப்போனவளை தன் இரு கைகளில் தாங்கியிருந்தான் ஆதி..
“பவளா..பவளா” என புஷ்பவள்ளி ஒரு புறம் அழ ஆரம்பிக்க,
“பாட்டி காலையில சரியா சாப்பிடாததுனால வந்த மயக்கமா இருக்கும். நீங்க ஏன் நல்ல காரியத்துல அழுறீங்க.. அழுறதை முதல்ல நிறுத்துங்க” என சற்று கண்டிப்புடன் கூறினாள்..
“என்னப்பா பொண்ணு இப்படி மயங்கி விழுந்திருச்சு…” என ஆங்காங்கே திருமணத்திற்கு உறவினர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்..
“காலையில சரியா சாப்பிடலை.. அதான்” என சமாளித்த புஷ்பவள்ளியை நம்பாத பார்வை பார்த்துக் கொண்டு சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் என திருமணத்திற்கு வந்தவர்களே மிகக்குறைவு தான்.
இரண்டாம் திருமணம் என்பதை விட, முதல் கணவனின் அண்ணனையே கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறாள் என பவளாவின் மேல் சேற்றை வாரியிறைக்க வந்தக் கூட்டம் தான் அதிகம்..
பவளா மயங்கி விழுந்ததுமே ஆதி அவளை தூக்கிக் கொண்டு வந்து விட்டான். அவனின் பிஏ மிதுனும, ராகினியும் தான் அங்கிருந்தவர்களை கவனித்தது…
பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலில் அழைத்துச் செல்ல, அவர்கள் பவளாவிற்கு குளூக்கோஸ் ஒன்றை ஏற்றிவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அவர்கள் நேராக சென்றது, பவளாவின் வீட்டிற்கு நேர் எதிராக ஆதி வாங்கியிருக்கும் புது வீட்டிற்கு தான்..
பழைய கால கட்டிடம் என்பதால் பல புதுமைகளை கொண்டு வந்து, பழமையும் புதுமையும் கலந்து ஒரு கட்டிடத்தை எழுப்பியிருந்தான்..
“சோர்ந்து போய் காரில் அமர்ந்திருந்த பவளாவை தன் இரு கைகளில் ஏந்தியவன், அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, கட்டிலில் அமர வைத்தவன, ஜன்னல்களை திறந்து விட்டான்..
சில்லென்ற காற்று ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்தது..
“ஏதாவது குடிக்கிறீயா பவளா? ரொம்ப டயர்டா இருக்க?..”
“ஏன்.. அதுல என்னை மயக்குறதுக்கு ஏதாவது கலக்கப் போறீயா?..” என்றவளின் சுடு வார்த்தையில் உள்ளுக்குள் கோபம் கனன்றாலும் வெளியில் அமைதியாக இருந்தான்..
“இங்கே பாரு பவளா. உன்னை மயக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை… அத்தோட ஒரு பொண்ணை மயக்கி என் காரியத்தை சாதிக்கிற அளவுக்கு நான் தரங்கெட்டவனும் இல்லை.. அதுக்கான அவசியமும் எனக்கில்லை” என தன்னை நம்ப வைத்துவிடும் முயற்சியில் போராடினாள்…
“ஓஹ்ஹ்.. எந்த அவசியமும் இல்லையா?.. உன் நடிப்பெல்லாம் பார்த்து ஏமாறுறதுக்கு நான் ஒன்னும் மயூரியோ, ரூபனோ இல்லை.”
“உன்கிட்ட நடிச்சு அப்படி நான் எதை சாதிக்கப் போறேன்? அதைச் சொல்லு.” என கோபத்தில் எரிந்து விழ,
“எதை சாதிக்கப் போறீயா?..” என எகத்தாளமாக சிரித்தவளின் சிரிப்பு, பழைய கால சுவர் என்பதால் நாலு பக்கமும் எதிரொலித்தது…
“சொத்தெல்லாம் என் குழந்தை பேர்ல இருக்குன்னு தெரிஞ்சு தானே.. நீ என்னைத் தேடி ஊருக்கு வந்தது. என் பின்னாடி நல்லவன் வேஷம் போட்டது.. இப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது” என்றவளை பார்த்து விரக்தியான புன்னகை ஒன்றை உதிர்த்தான்..
“நான் உன்னைத் தேடி வந்த காரணம் உன் குழந்தைங்கிறது எவ்வளவு உண்மையோ.. அதே அளவு அந்தக் குழந்தை மேல உள்ள சொத்துக்காக வரலை அப்படிங்குறதும் உண்மை” என சொல்லி முடிப்பதற்குள், அருகிலிருந்த புக்கை தூக்கி அவன் மேல் வீசிறியடித்தாள்..
“என்ன நடிக்கிறீயா?.. ஹான் நடிக்கிறீயா டா.. நீ எப்படி நடிச்சாலும் நான் ஏமாற மாட்டேன். தாலி கட்டிட்டோம் இவளை நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்னு நினைச்சே.. இந்தக் குழந்தையை கொன்னுட்டு நானும் செத்துருவேன்” என ஆக்ரோஷமாக கத்தியவளுக்கு, இருமல் தொடர்ந்து வந்துக் கொண்டேயிருந்தது..
அவள் இறும ஆரம்பித்ததுமே வேகமாக தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்திருந்தவன்… அவளுக்கு குடிக்க கொடுத்தான்…
அவள் கொடுத்த தண்ணீரை குடித்தவள், “உன்னைப் பார்க்க பார்க்க எனக்கு அப்படியொரு ஆத்திரம் வருது..”
“ப்ளீஸ் பவளா.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதே.. நீ இப்போ ப்ரெக்னென்டா இருக்க.. உன் வயித்துல இருக்கிற குழந்தைக்காகாவது அமைதியா இரு..”
“நடிக்காதே டா… உன்னை நல்லவன் நினைச்சு உன் மேல உசிரையே வச்சிருந்த எம் புருஷனை கொன்னுட்டீயே.. பாவி நீ நல்லா இருப்பீயா டா நீ.. நல்லாவே இருக்க மாட்டே டா.. நாசமா போயிடுவ பாரு” என சாபம் இட்டவளை அடிபட்ட பார்வை பார்த்தான்..
அவனின் பார்வையில் மேலும் மேலும் கோபமும், ஆத்திரமும் தான் வந்தது…
“ஏன்டா இப்படி பண்ண?.. ஏன் என் ரூபனை கொன்ன?.. அவர் உன்னை அப்பா ஸ்தானத்துல வச்சி பார்த்தானே.. அவனுக்கு இப்டி நம்பிக்கை துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது..” ஈன மனதுக்குள் இருந்த கோபம், ஆத்திரம், அழுகை என அனைத்தையும் கொட்ட ஆரம்பித்தாள்…
“அவுங்க எந்தளவுக்கு மனசை திறந்து வெளியே சொல்லுறாங்களோ?.. அந்தளவுக்கு அவுங்களோட ஹெல்த்க்கு நல்லது” என டாக்டர் சொன்ன வார்த்தைகள் அவன் காதில் விழுந்துக் கொண்டேயிருந்தது..
மனசுக்குள் இருக்கும் ஆத்திரமும், துக்கமும் தீர்ந்ததாலோ என்னவோ?..
“பசிக்குது. ரூபா” என அரை மயக்க நிலையில் அப்படியே கட்டிலில் சரியப் போனவளை அணைத்துக் கொண்டவன்.. மெல்ல அவளைப் படுக்க வைத்தான்…
இரண்டு மாத காலத்தில் ஒட்டு மொத்த நரகத்தையும் கண்ணில் காட்ட முடியும் என நிரூபித்துக் கொண்டிருந்தாள் பவளா.
அவளுக்குள் இருக்கும் ஏக்கம், அழுகை, கண்ணீர் என அனைத்தையும் அவனிடத்தில் கொட்டிவிட்டு அமைதியாக தூங்குபவளை பார்க்கும் பொழுதே துக்கம் தொண்டையடைத்தது..
“ஏன் ரூபா என்னை விட்டுப் போன?” என வாய் விட்டுச் சொன்னவனின் தோளில் கைப்போட்டார் புஷ்பவள்ளி..
அவரைப் பார்த்ததும் உதட்டில் போலியான சிரிப்பைக் கொண்டு வந்தவன், “என்ன பாட்டி?.. பவளா தூங்கிட்டா..”
“ஆனா நீ தூங்கவே இல்லையேப்பா.. இரண்டு மாசம் அவ உனக்குக் கொடுக்கிற கொடுமையெல்லாம் தாங்கிட்டு எப்படிப்பா அவ கழுத்துல தாலி கட்ட தோணிச்சு…”
“பாட்டி.. உங்க பேத்தி மாதிரி ஒருத்திக் கிடைக்கணும்னு தானோ என்னவோ?.. மயூரியை என் வாழ்க்கையில இருந்து அந்தக் கடவுள் நகட்டிட்டாரு..” என தன் வேதனையை மறைத்துக் கூறியவனை அழுகையுடன் பார்த்தான்..
“என் மனசுல இருந்த பாரம் கூட தீர்ந்திருச்சுப்பா.. நீ போ ப்பா. கொஞ்ச நேரம் போய்த்தூங்கு” என்றவனின் உடலும், மனதும் சோர்வாகிட, மெல்ல பவளா இருக்கும் அறைக்குள் செல்ல, அங்கு அவன் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து விட்டான்.