ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 88

pommu

Administrator
Staff member
நிலவு 88

ஆண்கள் எல்லோரும் திண்ணையில் அமர்ந்து பிசினஸ், அரசியல் என்று பேசிக் கொண்டு இருந்தார்கள். பெண்களும் தள்ளி அமர்ந்து குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு பற்றி அரட்டை அடித்துக் கொண்டு இருந்த தருணம் அது.

யாழினி மண்ணில் கால் புதைய, கொலுசு சத்தம் சிணுங்க, குடுகுடுவென அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டு இருந்தாள்.

அப்படியே நடந்து ரோஜா செடி அருகே வந்தவள், அதில் இருந்த ரோஜா மலரை பறித்து எடுத்துக் கொண்டு கஜனை நோக்கி ஓடிச் சென்றாள்.

கஜனும், "யாழிக் குட்டி!" என்று கண் சிமிட்டி அழைக்க, "அப்பா பூ..." என்று அவனிடம் பூவை நீட்ட, அதனை மென் சிரிப்புடன் வாங்கிக் கொண்டு குனிந்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்தவன், "இத அம்மாகிட்ட கொடுங்க." என்று அவள் காதில் சொல்ல, அவளும் அதனை வாங்கிக் கொண்டு பல்லவியை நோக்கி சென்றாள்.

குழந்தையையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் கஜன்.

யாழினியும் பல்லவி அருகே சென்று, "அம்மா பூ..." என்று பூவை நீட்ட, அதனை மென் சிரிப்புடன் வாங்கிய பல்லவியோ, "எனக்கா கொண்டு வந்தீங்க?" என்று கேட்க,

அவளோ கையை நீட்டி கஜனைக் காட்ட இப்போது அவள் விழிகள் கஜனில் படிந்தன. அவள் பார்வைக்காக காத்துக் கொண்டு இருந்தவனோ, கையினால் தலையில் வைக்கும்படி சைகை செய்ய அவளுக்கு ஒருவித பரவசம். சின்ன சின்ன செய்கையால் கூட தூண்டில் போட்டு ஈர்த்துக் கொண்டு இருக்கின்றான். சும்மாவே அவனில் மயங்கிக் கிடப்பவள் அவள். அவனும் கொஞ்சம் நெருக்கம் காட்டும் போது, மொத்தமாக நிலை இழந்தே போய் விட்டாள்.

அவனைப் பார்த்துக் கொண்டு தலையில் பூவை அவள் வைத்து இருக்க, ‘சூப்பர்!’ என்று ஒற்றைக் கண்ணை அடித்து சைகை செய்தான்.

சட்டென அவள் கன்னங்கள் சிவந்து விட்டன. டீன் ஏஜ் பெண்கள் காதலிப்பது போன்ற உணர்வு அவளுக்கு.

"மாமா, நாங்களும் இங்கதான் இருக்கோம்..." என்று நேத்ரா சத்தமாக சொல்ல, ‘ஐயோ! இவ கண்ணுலயா படணும்?" என்று நினைத்துக் கொண்டு பிடரியை வருடியவன், அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். பல்லவியோ சத்தமாக சிரித்துக் கொண்டு அவர்களுடன் மீண்டும் பேச ஆரம்பித்து விட்டாள்.

நேத்ராவுக்கு அவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம்தான். சந்தோஷமாக இருப்பான் என்று அவளுக்கு இக்கணம் தோன்றியது. அவர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவளுக்குள் ஒரு இதம் பரவி இருந்தது.

கொஞ்ச நேரம் அங்கே இருந்தவர்களுடன் பேசிய கஜனின் விழிகள், இப்போது பல்லவியில் மீண்டும் படிந்தன. இத்தனை நாட்கள் அவளை எல்லை மீறி யோசித்தது கூட இல்லை. இதற்கு அவள் மொத்த மேனியையும் அவன் பார்த்து இருக்கின்றான். மனித உடல் என்பதை மீறி அவன் யோசித்தது இல்லை. அவள் கையைப் பற்றி இருக்கின்றான், அணைத்து இருக்கின்றான். ஒரு நட்பான உணர்வு மட்டுமே!

அவளைப் பிடிக்கும்! ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவனுக்கு. அவன் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் கூடவே இருந்தவள். இன்று அவளை உரிமையுடன் நோக்கினால் என்ன என்று தோன்றியது. அவளுடன் மோகம் கொள்வது என்று முடிவெடுத்து விட்டான். இனி ஏன் இந்த தயக்கமும் தடுமாற்றமும் என்று தோன்றியது. எந்த எல்லைவரை தனது கடந்த கால நினைவுகள் இல்லாமல் தன்னால் போக முடியுமோ, அந்த எல்லைவரை போக தீர்மானித்து விட்டான்.

தனது இரு கரங்களையும் கோர்த்துக் கொண்டு உடலை முன்னோக்கி சரித்து அமர்ந்திருந்தவன் விழிகள், அவளில் முதல்முறை ரசனையாக படிந்தன. நீளமான முடி அவளுக்கு, பின்னி இருந்தாள். அவன் குழந்தையிடம் கொடுத்து விட்ட ரோஜாப் பூ தலையில் இருந்தது. இளஞ்சிவப்பு நிற காட்டன் புடவைதான் அணிந்து இருந்தாள். பளிங்கு போன்ற நிறம் அவளுக்கு. அவள் வைத்து இருந்த செந்நிற குங்குமம் அவள் முகத்தில் பளிச்சென்று மின்ன, அதனைப் பார்த்தவன் விழிகள் கீழிறங்கி அவள் விழிகளை நோக்கின.

மை பூசிய பெரிய விழிகள். விழிகளை உருட்டி உருட்டி பேசிக் கொண்டு இருந்தாள். அவன் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை. மீண்டும் கீழிறங்கின. கூரிய நாசியில் வைரக்கல் பதித்த குட்டி மூக்குத்தி. அந்த அழகை அவனால் ரசிக்காமல் கடக்க முடியவில்லை. அப்படியே கீழிறங்கி அவள் இதழ்களை நோக்கினான். குரலை செருமிக் கொண்டான்.

மீண்டும் அவன் விழிகள் அவன் கட்டிய தாலி அசைந்தாடிய அவள் கழுத்தில் படிந்து மேலும் கீழிறங்க, இதழ் குவித்து ஊதிக் கொண்டு பார்வையினை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். முதல் முறை ஒரு பெண்ணின அந்தரங்கத்தை ரசிக்கின்றான். ஒரு பெண்ணின் மீது மோகம் கொள்கின்றான். தன்னை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் முடியுமா என்று யோசித்து இருக்கின்றான்.

இன்று அந்த நிலையை அடைந்து விட்டான். இக்கணம் வரை அவனுக்கு எந்த வேண்டாத நினைவுகளும் வரவில்லை. அவனை எந்த நினைவுகளும் கஷ்டப்படுத்தவில்லை. இந்த மோக நினைவுகளையே அவன் இத்தனை வருடங்கள் ஒதுக்கி வைத்தவன் ஆயிற்றே! இன்றுதான் அதனை வெளியே கொண்டு வந்து இருக்கின்றான். இதே நிலைமை, தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லும் போதும் இருக்குமா என்று அவனுக்கே தெரியவில்லை.

அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவன் முன்னேற முற்படுகையில், எந்த நிலையிலும் அவன் பழைய நினைவுகள் வந்து இந்த மோகத்தை அறுபட செய்யலாம். அதனை நினைத்து மொத்தமாக அவளைத் தவிர்க்க முடியாது. எந்த எல்லைவரை தன்னால் அவளுடன் இழைய முடியும் என்று அவனும் அறிந்தாக வேண்டும். எந்த நிலையில் அவன் மோகம் அறுபடுகின்றதோ, அதற்கு அடுத்த நிலைக்கு அவன் செல்ல, என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாக வேண்டும்.

தனது மனநிலையை தயார் செய்தாக வேண்டும். ஒதுங்கியே இருக்க முடியாது என்று தெரிந்தது. வந்தனா அவனுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் இருந்து இருந்தால், அவன் இதனைப் பற்றி யோசித்தே இருக்க மாட்டான்.

அவன் கண் முன்னே எல்லாவற்றையும் கடந்து சந்தோஷமாக வாழும் வந்தனா இருக்கின்றாள். தன்னால் ஏன் முடியாது என்று அவனுக்கு தோன்ற வைத்தது வந்தனாதான். மேலும் தன் மீது ரசனையாக படியும் பல்லவியின் விழிகளும், அவள் தனது பழைய வாழ்க்கையில் இருந்து மீண்டு விட்டாள் என்று அவனுக்கு எடுத்துரைத்து இருக்க, இன்று அதனை வார்த்தைகள் மூலம் பேசியே அறிந்து கொண்டவனுக்கு, தனது உணர்வுகளை அடுத்தடுத்து கொண்டு செல்ல எந்த தடையும் இருக்கவில்லை.

வலுக்கட்டாயமாக தான் அவளை ரசிக்க ஆரம்பித்து இருந்தான். ஆனால் ஒரு கட்டத்தில் மானசீகமாகவே ரசிக்க தொடங்கி இருந்தான். 'செம்ம அழகா இருக்கா!' என்று மனதுக்குள் நினைத்தும் கொண்டான்.

அதனைத் தொடர்ந்து எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருந்தார்கள். கலகலவென பேசி சிரித்துக் கொண்டு தான் சாப்பிட்டார்கள். ராகவியின் விழிகள் அர்ஜுனில் படிந்த கணம், அவனும் ஜீவிதனுடன் பேசி சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான். அவனை முறைத்தபடி சாப்பிடாமல் அமர்ந்து இருந்தாள். கண்களால் சாப்பிடும்படி சைகை செய்தான்.

அவனை முறைத்துக் கொண்டு அவளும் சாப்பிட, அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. அடக்கிக் கொண்டு தலையைத் தாழ்த்தினான்.

நவநீதனோ, "இன்னைக்கு கம்மாய்க்கு குளிக்க போகலாம் அண்ணா..." என்று சொல்ல,

அவனும், "கிளைமேட் நல்லா தான் இருக்கு, ஈவ்னிங் கிளம்பிடலாம்." என்று சொன்ன கஜனோ, பார்த்தீபனைப் பார்த்து, "உங்களுக்கு டயர்ட்டா இருந்தா ரெஸ்ட் எடுங்க மாமா." என்றான்.

சக்திவேலோ, "நாங்கெல்லாம் இங்க அரட்டை அடிச்சுட்டு இருக்கோம், நீங்க குளிச்சிட்டு வாங்க." என்று சொல்ல, பெரியவர்கள் வீட்டில் நின்று இருக்க, ஏனையவர்கள் தான் செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.

துளசியோ, "குழந்தைங்களை கொடுத்துட்டு போங்க." என்று சொல்ல, கஜனோ, "யாழினியும் குளிக்கட்டுமே..." என்றான்.

"அதெல்லாம் முடியாது, காத்து கருப்பு திரியுற நேரம் குழந்தையை அழைச்சிட்டு போறதா? விட்டுட்டு போங்க..." என்றாள் அழுத்தமாக.

அவளுடன் பேசி மல்லுக்கட்ட முடியாது என்று நினைத்த கஜனும், "சரி, விட்டுட்டே போறோம்." என்று சொல்லிக் கொண்டான்.

"புள்ளத்தாச்சி பொண்ணுங்களும் போகாதீங்க..." என்று ஜெயந்தி சொல்ல,

சுகானாவோ, "நாங்க பாவம் இல்லையா அத்தை?" என்று கேட்டாள்.

"அதெல்லாம் இல்லை, வீட்ல நில்லுங்க. தண்ணி இருக்கிற இடத்துக்கு நேரம் கெட்ட நேரத்துல போக வேணாம்." என்றாள் ஜெயந்தி.

"அப்போ நாங்களும் வீட்ல தானா?" என்று வந்தனாவும் நேத்ராவும் சலித்துக் கொள்ள,

"நாங்க போகலாம்ல? இல்ல, புள்ளத்தாச்சி பொண்ணுங்களோட புருஷனுங்களும் போக கூடாதா?" என்று ஜீவிதன் கேட்டான்.

எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட, "என்னை விட்டுட்டு குளிக்க போறதுல அப்படி ஒரு சந்தோஷமா?" என்று கேட்டாள் நேத்ரா.

அவளைப் பார்த்து கண்களை சிமிட்டியவன், "நிற்கணும்னா சொல்லு, நின்னுடுறேன்." என்றான்.

"ச்ச... ச்ச... போயிட்டு வாங்க, வரும் போது ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வாங்க." என்று சொன்னாள்.

ராம்குமார் சுகானாவைப் பார்க்க, "அதுதான் போறதுனு முடிவாயிடுச்சுல்ல, இப்போ என்ன பார்வை?" என்று கேட்டாள்.

அவனும் சிரித்துக் கொண்டு, "தேங்க்ஸ்!" என்று சொல்ல, "ரொம்ப ஆக்ட் பண்ணாதீங்க ராம், ஏதோ பொண்டாட்டி சொல்ல கேக்கிறது போல எல்லாரும் கற்பனை பண்ணிட போறாங்க..." என்று சொல்ல,

"அவர் நடிக்கிறதே அதுக்காக தானே?" என்று சொன்னான் நவநீதன்.

"நீ ஒருத்தன் போதும்டா, என் குடும்பத்துல குண்டு போட..." என்று சொல்லிக் கொண்டான் ராம்குமார்.

"விஜய் இன்னும் ஃபேக்டரில தான் நிக்கிறான். வர சொல்லி கால் பண்ணி மூனு தடவை சொல்லிட்டேன். என்னடி பண்ணுறான் அவன்?" என்று வந்தனாவிடம் கஜன் சலித்துக் கொள்ள,

சக்திவேலோ, "அவகிட்ட சொல்லு, அவ ஒரு பார்வை பார்த்தாலே அவன் வந்திடுவான்." என்றான்.

"பெரியப்பா, அப்படி எல்லாம் இல்ல..." என்று வந்தனா சிணுங்கிக் கொண்டு விஜய்க்கு அழைத்தவள், "வீட்டுக்கு வாங்களேன்" என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

"இப்போ பாரு, பத்து நிமிஷத்துல ஜீப் வரும்." என்று சக்திவேல் சொன்னது போலவே அவன் ஜீப் வந்து வாசலில் நின்றது.

"நான் சொன்னேன்ல?" என்று சக்திவேல் சொல்ல, வீட்டினுள் நுழைந்தவனிடம், "உன்னை அவ்ளோ கூப்பிட்டேன்ல, வரவே இல்லை. உன் பொண்டாட்டி கூப்பிட்டதும் ஓடி வர்ற..." என்று கஜன் கேட்க,

அவனோ சிரித்துக் கொண்டு வந்தனா அருகே அமர்ந்து கொள்ள, "தட் இஸ் லவ்!" என்றான் நவநீதன்.

"டேய்..." என்று அவன் தோளில் சிரித்துக் கொண்டு தட்டி இருந்தான் விஜய்.

"ஈவ்னிங் கம்மாய்க்கு போகலாம் மச்சி..." என்றான் கஜன்.

"சரி அண்ணன்." என்றான் விஜய்.

"அண்ணன்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது? எனக்கும் அண்ணன், உங்களுக்கும் அண்ணனா?" என்று கேட்டாள் வந்தனா.

"அப்படி கேளுடி, இப்பவும் அண்ணன்னு கூப்பிடுறான். எனக்கு ஒரு மாதிரி இருக்கு..." என்று கஜன் சொல்ல, "சட்டுன்னு மாத்த முடியலையே, அண்..." என்று ஆரம்பித்து நிறுத்தியவன், "மச்சான்... ஓகேயா?" என்றான்.

இதழ் பிரித்து சத்தமாக சிரித்த கஜனோ, "அது...!" என்று சொல்ல, துளசி விஜய்க்கு சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"ஐயோ! இப்போ தான் சாப்பிட்டேன் அத்தை..." என்று அவன் சொல்ல, "இங்க விருந்துனு தெரியுதுல, எதுக்கு வெளிய சாப்பிட்ட? பரவாயில்ல, சாப்பிடு. உனக்கு பிடிக்கும்னு வந்தனா சொல்லி கத்தரிக்காய் கூட்டு வச்சேன்." என்றாள் துளசி.

அதற்கு மேல் எப்படி மறுக்க முடியும்?

கையைக் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்து விட்டான்.

"இப்போ யார் யார் போறது?" என்று நவநீதன் கேட்க,

ராம்குமாரோ, "கஜன் அண்ணா, விஜய், நான், ஜீவி, நவா, அர்ஜுன் சரிதானே?" என்று சொல்ல,

கஜனோ பல்லவியைப் பார்த்து, "உனக்கு குளிக்க இஷ்டம் இல்லையா என்ன?" என்று கேட்டான்.

"அவளுக்கு குளிக்க ரொம்ப பிடிக்கும். நல்லா ஸ்விம் பண்ணுவா..." என்று அர்ஜுன் சொல்ல, கஜன் அவளை விழி விரித்து பார்த்தவன், "நிஜமாவா?" என்று கேட்டான்.

"நல்லா எல்லாம் இல்ல, ஓரளவு..." என்றாள் மென் சிரிப்புடன்.

"அப்போ நீயும் வா." என்று கஜன் சொல்ல, "நான் மட்டும் தனியா எப்படி?" என்று சங்கடமாக கேட்டாள்.

"ராகவி வர்ற தானே?" என்று கேட்டான் கஜன்.

இல்லை என்று அவள் தலையாட்ட, "ஏன்டி?" என்று கேட்டான்.

அர்ஜுனை முறைத்துப் பார்த்து விட்டு, "முடியாது." என்றாள்.

"அவன் மேல இருக்கிற கோபத்தை எங்க எல்லார் மேலயும் காட்டாம, எங்க கூட வா" என்று ராம்குமார் அதட்ட,

"எனக்கு யார் மேலயும் கோபம் இல்ல..." என்றாள் அவள் அவசரமாக.

"அவ வருவா மச்சான்..." என்று அர்ஜுன் சொல்ல, "அப்படின்னு நான் சொன்னேனா?" என்று அர்ஜுனை பார்த்துக் கொண்டு கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. சாப்பிட தொடங்கி விட்டான்.

"நான்தான் வர மாட்டேன்னு சொல்றேன்ல?" என்றாள்.

கஜனோ, "ராகவி..." என்று அழைத்தான்.

திரும்பிப் பார்த்தாள், "நீ வர்ற, உனக்கு குளிக்க பிடிக்கும்ல?" என்றான்.

அவளுக்கு அதற்கு மேல் மறுப்பது அபத்தமாக தெரிய, "ம்ம்..." என்று சொல்லிக் கொள்ள, அர்ஜுன் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை ஏறிட்டுப் பார்த்து விட்டு மீண்டும் சாப்பிட்டான்.

சக்திவேலோ, "சம்பந்தி, மருமகளுக்கு எல்லாமே சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றான் நிறைவாக.

பார்த்தீபனும் மகளைப் பார்த்து பெருமிதமாக சிரித்துக் கொண்டான்.

அதனைத் தொடர்ந்து எல்லோரும் குளித்து விட்டு மாற்றுவதற்கான உடைகளை அடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அறைக்குள் நின்று இருந்த பல்லவி தனது உடைகளை அடுக்கிக் கொண்டு, "உங்க ட்ரெஸ் கொடுங்க, சேர்த்து வச்சிடுறேன்." என்று சொல்ல, அவனும் தனது உடைகளை எடுத்து நீட்டி இருந்தான்.

அதனை பைக்குள் வைத்தவளைப் பார்த்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்து இருந்தான் கஜன்.

அவளுக்கு அவன் தன்னையே பார்ப்பது தெரிந்தாலும், அவனை ஏறிட்டுப் பார்க்க கூச்சமாக இருந்தது.

அவனைப் பார்க்காமலே எல்லாம் அடுக்கி வைத்தவளோ, "எல்லாம் ரெடி..." என்று அவனிடம் சொல்ல, முட்டியில் கை குற்றி எழுந்து அவள் அருகே சென்றான்.

அவனைப் புரியாமல் பார்த்து இருக்க, உரசியும் உரசாத நெருக்கத்தில் வந்து நின்று விட்டான். குப்பென வியர்த்தது அவளுக்கு. அவன் நெருக்கத்தில் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி வேறு பறக்க, விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

அவள் கழுத்தைப் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தியவன், அவள் விழிகளுடன் விழிகளைக் கலக்க விட்டபடி, "இத்தனை நாள் ஏன் ரசிக்காம விட்டேன்னு இன்னைக்கு ஃபீல் பண்ணுறேன்." என்றான்.

கஜனா இப்படி எல்லாம் பேசுகின்றான் என்றுதான் அவளுக்கு தோன்றியது. விழிகள் இன்னுமே அவன் பேசியதை கிரகிக்க முடியாமல் அதிர்ந்து விரிந்து இருக்க, பெருவிரலால் அவள் கன்னத்தை வருடிக் கொண்டு, "செம்ம க்ளோயிங்கா இருக்கு..." என்று அவள் கன்னத்தைப் பார்த்தபடி சொன்னவன்,

அத்துடன் நிறுத்தாமல் குனிந்து அதில் அழுத்தமாக இதழ் பதித்து இருக்க, அவளோ உஷ்ண பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டாள்.

அவனது தாடி, மீசை கொடுத்த குறுகுறுப்பைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.

அவள் மனதைக் கவர்ந்தவனின் முதல் முத்தம் அது. பெண்மை உணர்வுகள் ஏகத்துக்கு எகிறின. அவளது அடுத்த கன்னத்திலும் முத்தம் பதித்தான். சட்டென கையை உயர்த்தி அவன் ஷேர்ட்டின் காலரை பற்றிக் கொண்டாள்.

இப்போது அவள் விழிகளைப் பார்த்து விட்டு இதழ்களைப் பார்த்தவன், அதனை நெருங்கிய சமயம், "கஜன்!" என்று அழைப்பு.

சக்திவேல் அழைத்து இருந்தான்.

அவளோ சட்டென விலகி நின்று அவனையே பார்க்க, இதழ்களைப் பிதுக்கியவன், "மிஸ் ஆயிடுச்சு..." என்று சொல்ல, அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

மீண்டும், "கஜன்!" என்று சக்திவேல் அழைத்தான்.

"மாமா கூப்பிடுறார், சீக்கிரம் போங்க..." என்றாள் ஒரு வெட்கம் கலந்த புன்னகையுடன்.

அவனும் திரும்பி இரண்டடி வைத்து இருப்பான். முதல்முறை பீறிட்டு கிளம்பிய மோகத்தை அவனால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

சட்டென வேகமாக திரும்பி அவளை நோக்கி வந்தவன், அவள் முகத்தைத் தாங்கி அவள் இதழில் ஆழமாகவும் அழுத்தமாகவும் இதழ் பதித்து இருக்க, அவள் விழிகள் அதிர்ந்து விரிந்து மெதுவாக முடிய கணம், அவனோ மெதுவாக கண்களை விரித்து கண நேர முத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவன், அவளைப் பார்க்காமலே விறுவிறுவென வெளியேறி விட்டான்.

அவளுக்குத் தான் அவன் கொடுத்த அதிரடி முத்தத்தில் உண்டான உணர்வுகளைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அப்படியே நிலை தடுமாறி சுவரில் சாய்ந்து கண் மூடி நின்றவள், பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
 
Top