ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 75

pommu

Administrator
Staff member
நிலவு 75

கஜனின் வீட்டில் சிரிப்புக்கே பஞ்சமான நிலைதான். என்னதான் வந்தனாவின் வாழ்க்கை சரியாகி விட்டது போல் தோன்றினாலும், எல்லோருக்கும் மனதுக்குள் ஆழ்ந்த வலி இருந்து கொண்டுதான் இருந்தது. ராகவி ஒரு பக்கம், வந்தனா ஒரு பக்கம், சுகானா ஒரு பக்கம் என்று ஏதோ ஒருவித அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள்.

இரவு நேரம் இருக்கும், மொட்டை மாடியில் நின்று சந்திரனைப் பார்த்துக் கொண்டு இருந்தான் கஜன். எத்தனை கஷ்டங்களை அவர்கள் குடும்பம் இப்போது தாங்கிக் கொண்டு இருக்கின்றது. எப்படி அவர்களை மீட்பது என்று அவனுக்கு தெரியவில்லை.

"அண்ணா!" என்று ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தான், அங்கே வந்தனா நின்று இருந்தாள்.

அருகே வந்து அவன் கையைப் பற்றி மார்பில் தலை சாய்த்துக் கொண்டு, "உங்க கையை பிடிச்சுக்கிட்டா கொஞ்சம் தைரியமா இருக்கிறது போல தோனுது." என்றாள்.

அவனும் அவள் தலையை வருடிக் கொடுத்தபடி, "எதையும் யோசிக்காதே வந்தனா... விஜய் உன்னை நல்லா பார்த்துப்பான். உன்னை தனியா கொண்டு போகவும் அவனுக்கு இஷ்டம் இல்லை. நம்ம பக்கத்து வீடு வெறுமையா தானே இருக்கு, அங்கேயே இருக்கலாம்னு சொன்னான். உனக்காக அவ்வளவு பார்த்து பார்த்து பண்ணுறான்..." என்று சொன்னான்.

அவளிடம் பதில் இல்லை. கண்களில் இருந்து கண்ணீர் தான் வழிந்தது. துடைத்துக் கொண்டு, "நான் என்ன தப்பு பண்ணுனேன்? எனக்கு எதுக்கு இந்த பெரிய தண்டனை?" என்று கேட்க,

அவள் தலையை வருடிக் கொண்டு பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான் கஜன். அப்படியே நின்று இருந்தவர்களுக்கு கொலுசு சத்தம் கேட்டது. கஜன் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தான். அங்கே ராகவி நின்று இருந்தாள். கண்களால் அருகே அழைத்தான்.

அவன் அழைப்புக்காக ஏங்கியது போலவே, அவனது அடுத்த பக்கம் சென்று அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கும் அழுகை. கோழிக் குஞ்சுகள் போல அவனுக்குள்ளேயே அடைக்கலம் தேடும் இவர்களுக்கு, எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது என்று அவனுக்கும் வலிதான்.

எப்படி சந்தோஷமாக இருந்த வாழ்க்கை இது!? இப்படி நிலை குலைந்து போய் இருக்கின்றதே?

"என்ன, எல்லாரும் இங்கதான் நிக்கிறீங்களா?" என்று கேட்டுக் கொண்டே குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த பல்லவி, "குழந்தையை பிடிச்சுக்கோ வந்தனா." என்று குழந்தையை அவளிடம் நீட்ட, அவளும் தூக்கிக் கொண்டாள்.

எதற்காக அவள் குழந்தையை வந்தனாவிடம் கொடுக்கின்றாள் என்று கஜனுக்கும் புரிந்தது. அவள் மனதை ஏதோ ஒரு வகையில் திசை திருப்ப முயல்கின்றாள்.

வந்தனா குழந்தையுடன் நிலத்தில் அமர்ந்து குழந்தையையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மனம் லேசான உணர்வு.

அவளைப் பார்த்து விட்டு பல்லவியைப் பார்த்து கஜன் மெலிதாக புன்னகைக்க, "யாருமே சாப்பிடலையா?" என்று பல்லவி கேட்க, "ராகவி சாப்பிடலையா?" என்று கஜன் ராகவியிடம் கேட்டான்.

அவளோ பெருமூச்சுடன் இல்லை என்று தலையாட்ட, "சரி உட்காரு, நான் சாப்பாடு எடுத்து வர்றேன். இங்க இருந்தே சாப்பிடலாம், நல்லா இருக்கும்." என்று அவ்விடத்தில் பாயை விரித்த பல்லவியும் கீழிறங்கி செல்ல,

ராகவியோ அமர்ந்து கொண்டு அருகே அமர்ந்த கஜனின் கையைப் பற்றியவள், "அன்னைக்கு அண்ணிக்கு நான் அப்படி பேசி இருக்க கூடாதுல..." என்றாள்.

குரல் தழுதழுத்தது.

"அத அவ மறந்து இருப்பா, நீ மனச போட்டு குழப்பிக்காதே..." என்றான்.

"அர்ஜுன் எங்கண்ணா?" என்று கேட்டாள்.

இந்த கேள்விக்காக தான் அவன் பயந்ததே! அவனிடம் மௌனம்.

"உங்களுக்கு தெரியும் தானே?" என்று கேட்டாள்.

பெருமூச்சுடன், "அவனுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடு." என்றான்.

தனது மேடிட்ட வயிற்றைக் குனிந்து பார்த்து விட்டு, மீண்டும் கஜனைப் பார்த்தவள், "எத்தனை நாளைக்கு?" என்று கேட்டாள்.

"அவன் கொஞ்சம் மனசு மாறும் வரைக்கும்..." என்று சொல்ல, "ம்ம்..." என்றாள்.

"நாளைல இருந்து நவநீதன் கூட காலேஜுக்கு போ ராகவி, இங்க இருந்தா தான் மனசு கஷ்டமா இருக்கும். கொஞ்சம் வெளிய போய்ட்டு வா, இப்படி உள்ள அடைஞ்சு இருக்காதே, புரியுதா?" என்று கேட்க, "ம்ம்..." என்றாள்.

"இன்னும் ஒரு மூனு மாசத்துல டெலிவரி, இப்பவே இவ்ளோ ஸ்ட்ரெஸா இருந்தா குழந்தைக்கு ஆகாது. சந்தோஷமா இருக்க முடியலன்னாலும், சந்தோஷமான தருணங்களை உருவாக்கிக்கோ.” என்றான்.

பெருமூச்சுடன் ஆமோதிப்பாக தலையாட்டினாள்.

வந்தனாவோ, "யாழினி, அண்ணி போலவே செம்ம அழகு!" என்று குழந்தையைப் பார்த்துக் கொண்டு சொல்ல, அவள் அருகே நகர்ந்து அமர்ந்து கொண்ட ராகவி, "நான் தூக்கி பார்த்துட்டு கொடுக்கிறேன்..." என்று சொல்லி குழந்தையை வாங்கிக் கொள்ள, அவளும் கொடுத்தாள்.

குழந்தையை வாங்கிக் கொண்டு வந்தனாவின் விழிகளைப் பார்த்த ராகவி, "நீ பயந்த பொண்ணுனு நினைச்சேன், ஆனா நீ ரொம்ப ஸ்ட்ராங் வந்தனா." என்று சொல்ல,

அவளோ ஒரு மென் சிரிப்பை சிந்தி பெருமூச்சை விட்டவள், "நடந்த எதையும் மாத்த முடியாது. விஜய் எல்லாமே பார்த்துப்பாருனு நம்பிக்கைல, எதையும் யோசிக்காம இருக்க முயற்சி பண்ணுறேன். கொஞ்ச நேரம் முன்னாடி கூட அழுதேன், இப்போ அழுது என்ன செய்ய முடியும்னு தோனுது. இனி அழவே கூடாதுனு யோசிச்சு இருக்கேன். விஜய்யும் அப்புறம் வருத்தப்படுவார்." என்று சொல்ல, ராகவியும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள்.

கஜன் அதிகமாக பயந்தது வந்தனாவை நினைத்துதான். அவள் இக்கணம் பேசுவதைக் கேட்டவனுக்கு, அவள் வாழ்க்கை சீராகிவிடும் என்று நம்பிக்கை உருவாக, மனம் கொஞ்சம் நிறைவாக இருந்தது.

சற்று நேரத்தில் மேலே தட்டில் உணவுடன் பல்லவி வர, அவளைத் தொடர்ந்து நவநீதனும் சாப்பாட்டு தட்டுடன் வந்தவன், "இங்கயே சாப்பிடுறேன், கீழ எல்லாரும் அழுதுட்டே சாப்பிடுறாங்க. மனசு என்னவோ போல இருக்கு." என்று சொல்லிக் கொண்டு அமர்ந்து விட்டான்.

பல்லவியும் உணவைப் பிசைந்து ராகவிக்கும் வந்தனாவுக்கும் ஊட்டி விட்டாள். அதனையே பார்த்து இருந்தான் கஜன்.

"நீங்க சாப்பிடலையா?" என்று அவனைப் பார்த்து கேட்க, "அப்புறம் நம்ம சேர்ந்து சாப்பிட்டுக்கலாம்." என்றான்.

அவளும் மென்மையாக புன்னகைத்தாள். சிரிக்க முடியாத நிலைமை என்றாலும் கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டார்கள். ராகவிக்கு தான் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

அதனைக் கண்ட நவநீதன், "எதுக்கு அழுதுட்டு இருக்க? நான் உன்னை வாழ்க்கை முழுக்க பார்த்துக்கிறேன்..." என்றான்.

அவளுக்கு இன்னுமே அழுகை வந்தது.

"எதுக்குடி அழுற?" என்று கேட்டுக் கொண்டு வந்தனா அவள் கண்ணீரைத் துடைத்துவிட, "ரொம்பவே குற்ற உணர்வா இருக்கு..." என்றாள்.

அவள் அழுகைக்கு காரணமே குற்ற உணர்வுதான். அதுவும் பல்லவி ஊட்டிவிடும் போது, மனம் இன்னுமே உறுத்திக் கொண்டு இருந்தது.

பல்லவியோ, "இதுவும் கடந்து போகும், நீ முதல்ல குழந்தையை பெத்து கொடு. என் பொண்ணு கூட விளையாட குழந்தை வேணும்ல...?" என்று சொல்ல, ராகவியும் கண்களைத் துடைத்துக் கொண்டு, "சரி அண்ணி." என்று சொன்னாள்.

"அண்ணி, எங்க காலேஜ்ல லெக்ஷரர் வேகன்ஸி வந்திருக்கு, அப்ளை பண்ணலாமே?" என்று சொல்ல, பல்லவியை முந்திக் கொண்டு கஜன், "டீடெய்ல்ஸ் அனுப்புடா." என்றான்.

"நாளைக்கு பார்த்துட்டு அனுப்புறேன் அண்ணா." என்று சொல்ல, பல்லவி மெலிதாக சிரித்துக் கொண்டு கஜனைப் பார்க்க, "வேலைக்கு போக ஓகே தானே?" என்று கேட்டான்.

ஆம் என்கின்ற ரீதியில் அவளும் தலையாட்டிக் கொண்டாள்.

அங்கே ராம்குமாரும் சுகானாவும் சாப்பிட்டு விட்டு மாடியேறி வந்திருக்க, "யாழி குட்டி என்ன சொல்றா?" என்று கேட்டுக் கொண்டு, ராகவியின் கையில் இருந்த குழந்தையைத் தூக்கியபடி ராம்குமாருடன் அமர்ந்து கொண்டாள் சுகானா.

"ஹெல்த் ஓகேயா சுகானா? ஏதும் காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கா?" என்று கஜன் கேட்க, "எல்லாம் ஓகே மாமா." என்று சொன்னவளிடம், "அடுத்த மாசமே குட் நியூஸ் வரணும்." என்றான்.

அவளும் சிரித்துக் கொண்டு ராம்குமாரைப் பார்க்க, "சொல்லிடலாம்." என்றான் அவன் மென் சிரிப்புடன்.

சுகானா ஓரளவு மனரீதியாக முன்னேறி விட்டாள் என்று புரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் தத்தமது வலியில் இருந்து வெளியே வர முயன்று கொண்டு இருக்க, இன்னுமே தன்னை மீட்டெடுக்க முடியாமல் இருந்தது என்னவோ ராகவிதான். அர்ஜுனை ஒருமுறை பார்த்து விட்டால் போதும் என்று தோன்றியது. அவனைப் பார்க்கும் வரை அவளுக்கு தன்னை மீட்டெடுப்பது சிரமமான விஷயம் தான்.

மேலே கலகலவென சத்தம் கேட்டு, "மேல பிள்ளைங்க பேசிட்டு இருக்காங்க போல, வாங்க மேல போகலாம் சண்டியர் மச்சான்." என்று துளசி அவனை அழைத்து செல்ல, அவர்களைத் தொடர்ந்து மதியழகன், ஜெயந்தி, தயாளன் மற்றும் விஜயா என்று எல்லோரும் மேலே சென்றார்கள்.

மேலே சென்றவர்களுக்கு இந்த காட்சியைப் பார்க்கவே மனம் லேசான உணர்வு. இவ்வளவு நேரமும் சிரிக்க முடியாமல் தவித்துக் கொண்டல்லவா இருந்தார்கள். என்னதான் முதிர்ச்சி அவர்களுக்கு இருந்தாலும், அவர்களது சந்தோஷத்தை மீட்டு எடுத்தது இளைய தலைமுறை தான்.

அதுவும் யாழினி தான்!

அவளைத் தூக்கி, கொஞ்சி, அணைத்து, ஏதோ ஒரு வகையில் அவள் ஸ்பரிசம் அங்கு இருந்தவர்களுக்கு மருந்தாகிக் கொண்டு இருந்தது.

"ஏன் குழந்தையை போட்டு கசக்கிறீங்க?" என்று கேட்டுக் கொண்டு துளசி குழந்தையைத் தூக்கிக் கொள்ள, "ஆஹ்! நீங்க மட்டும் என்ன பண்ணுறீங்க?" என்று கேட்டான் நவநீதன்.

"நான் சும்மா தூக்கி இருக்கேன்டா..." என்று துளசி சொல்ல, "தெரியுது... தெரியுது..." என்று அவன் சொல்லிக் கொள்ள, அந்த கணம் மெல்லிய புன்னகை எல்லாருடைய இதழ்களிலும் படர்ந்தது.

பல்லவி இருவருக்கும் ஊட்டிவிட்டு கஜனைப் பார்த்தவள், "சாப்பாடு போட்டு கொண்டு வரட்டுமா?" என்று கேட்க, "ரெண்டு பேருக்கும் போட்டு எடுத்துட்டு வா." என்றான்.

அவளும் இறங்கி சென்று இருக்க, விஜயாவோ அடக்க நினைத்தும் முடியாமல் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அதனைக் கண்ட நவநீதனோ, "ஐயையே! என்ன சித்தி இது, எப்போவும் அழுதுட்டே இருக்கீங்க? இனி எல்லாமே நல்லதா நடக்கும்." என்று சொல்லிக் கொண்டு வந்தனாவைப் பார்க்க, அவளோ அவன் தலையை எட்டி தடவி விட்டாள்.

"பாட்டுக்கு பாட்டு வைக்கலாமா?" என்று கேட்டான்.

"வைக்கலாமே..." என்று சுகானா சொல்ல,

ராம்குமாரோ, "இங்க மட்டும் பாடாதடி..." என்றான்.

"ஏன்டா சுகானாவோட பாட்டு அவ்வளவு மோசமா?" என்று கஜன் கேட்க, "பி சுசிலா தோத்து போயிடுவாங்க." என்று சொல்ல,

பல்லவி அங்கே உணவு தட்டுடன் வர, "சின்ன அண்ணி அவ்ளோ பெரிய பாடகியா? அப்போ நான் அவங்க பக்கம்தான்." என்று நவநீதன் சொன்னான்.

"என்ன நம்பி வர்ற பாரு..." என்று சுகானா சொல்ல, "ஓல்ட் பீப்பிள் ஒரு பக்கம், யங் பீப்பிள் ஒரு பக்கம், போட்டி வைக்கலாம்." என்றாள் ராகவி.

சக்திவேல், "சரி, அப்போ நான் இந்தப் பக்கம்." என்று சொல்லி ராகவி அருகே அமர்ந்து கொள்ள, "இது என்ன போங்காட்டமா இருக்கு?" என்று கேட்டாள் வந்தனா.

"எனக்கு ஒன்னும் வயசாகல..." என்று சொன்ன சக்திவேலின் கையைப் பற்றி, "மீசை நரைச்ச வயசுல பேசுற பேச்சைப் பாரு..." என்று துளசி அவன் கையை இழுக்க, "உனக்கு பொறாமைடி..." என்றபடி பெரியவர்கள் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டார்கள்.

ராம்குமாரோ, "அம்மா நல்லா பாடுவாங்க, அங்கே எப்படியும் வின்தான்..." என்றான்.

"என்னை விடவா?" என்று சுகானா கண் சிமிட்டி கேட்க, ராம்குமார் சத்தமாக சிரித்துக் கொண்டான்.

அவர்கள் கவலைகளை கொஞ்ச நேரம் தள்ளி வைத்துவிட்டு சிரித்தபடி பாடுவதை, சற்று தள்ளி இருந்து உணவைப் பிசைந்து கொண்டு பார்த்த பல்லவி, அவர்களையே மென் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த கஜனுக்கு ஊட்டிவிட, அதனை சாப்பிட்டுக் கொண்டு அவளைப் பார்த்தவன், "ஐ லவ் யூ பல்லவி!" என்றான்.

அவள் விழிகள் அதிர்ந்து விரிய, "உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்றீங்க போல...?" என்று சொல்ல, அவனோ உணவு தட்டை வாங்கி அவள் வாய்க்குள் ஊட்டி விட்டவன், "நாளைக்கு கேட்டாலும் சொல்லுவேன்." என்று சொல்ல,

அவளோ, "இப்போ நான் ஐ டூ லவ் யூ சொல்லணுமா?" என்று கேட்டாள்.

"அது உன் விருப்பம்." என்று அவன் மென் சிரிப்புடன் சொல்ல, "நீங்க சொல்றதுக்காக சொல்றேன், ஐ டூ லவ் யூ!" என்று கண் சிமிட்டி சொல்ல, "அப்படியே பழி வாங்குற..." என்று சொல்லி சிரித்துக் கொண்டான் அவன்.

வாழ்க்கையில் வலிகள் இல்லாத மனிதர்கள் இல்லை. இறப்புகள் இல்லாத வீடுகள் இல்லை. அழுகை இல்லாத குடும்பம் இல்லை. எல்லாம் இருந்தும் சந்தோஷமான சந்தர்ப்பங்களை உருவாக்கி சிரிக்கும் குடும்பம் அமைவது கூட ஒரு வரம்தான். அந்த வரம் கஜனின் குடும்பத்துக்கு அமைந்து இருந்தது. எல்லாவற்றையும் எதிர்கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கை மட்டுமே போதும், நம் இதழ்களில் புன்னகை என்றுமே தவழ்ந்து கொண்டு இருக்கும்.
 

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 75)


கஜன் பல்லவி... இவங்க ரெண்டு பேருமே ஒருத்தடவை லைஃப்பை இழந்துட்டு, திரும்பவும் வாழும் வாய்ப்பை பெற்றிருப்பவர்கள்.
ராம் குமார் சுகானா... விரும்பிய வாழ்க்கையை விரும்பியபடியே அமைத்துக் கொண்டவர்கள். அர்ஜூன் ராகவி.. இவங்க விருப்பமில்லாமலே வலுக்கட்டாயமாக வாழ்க்கையில் இணைக்கப் பட்டவர்கள்.
விஜய் வந்தனா..... முதலில் இருந்தே ஒருவரையொருவர் நேசித்தவர்கள். நேசிப்பதை தைரியமாக வெளிப்படுத்தாதலால்...
விதி வசத்தால் வினைகள் நேர்ந்து, விபரீதங்கள் நுழைந்து, திரும்பவும் இணைந்து வாழ ஆசிவாதிக்கப்பட்டவர்கள்.


அனைவரின் வாழ்க்கையிலும்
ஒரு துன்பம், அதை கடந்தவுடன் தான் ஒரு இன்பம், என்பது தான் வாழ்க்கையின் நியதியோ என்னவோ...? அதுப்படியே நடக்கட்டும். நம்மால் அதை தவிர்க்க முடிவதும் இல்லை.


ஆனால், எல்லாவற்றையும் எதிர்கொள்ளலாம் என்கிற
சிறு துளி நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், நம் இதழ்களில் என்றுமே புன்னகை தவழ்ந்துக் கொண்டே தான் இருக்கும்.


😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top