ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 70

pommu

Administrator
Staff member
நிலவு 70

அர்ஜுன் முன்னே அமர்ந்து இருந்தான் ஜீவிதன். எல்லாமே அவனுக்கு சொல்லி விட்டான். அர்ஜுனின் முகமெல்லாம் அடி வாங்கி சிவந்து போய் இருந்தது. அவன் சொன்னவற்றைக் கேட்டவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. எல்லாமே விட்டுப் போன உணர்வு தான். மனமெல்லாம் மரத்து விட்டது. எந்த உறவும் வேண்டாம் என்று தோன்றவும் ஆரம்பித்து விட்டது. அவனுக்கு தேவை தனிமை. எல்லார் மீதும் வெறுப்பும் ஆதங்கமும் மட்டுமே!

செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கின்றான். இந்த ஜெயிலில் வாழ்க்கை முழுவதும் இருந்தால் என்ன என்றுதான் தோன்றியது. அவனை எந்த உறவும் நம்பவில்லை. கஜன் மட்டுமே, 'அவன் செய்து இருக்க மாட்டான்' என்று சொல்லி இருக்கின்றான்.

ஜீவிதன் வாயினால் அதனைக் கேட்கும் கணம், அவன் உலகத்தில் அதிகமாக வெறுத்த ஒருவன் மட்டுமே, தன்னை நம்பி இருக்கின்றான் என்று தோன்றியது. அழுவதா, சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. மெதுவாக ஜீவிதனை ஏறிட்டுப் பார்த்தான்.

அவன் விழிகள் உயிர்ப்பைத் தொலைத்து இருக்க, "வந்தனா கண் விழிச்சிட்டா, அவகிட்டயும் ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிட்டா கோர்ட்ல சப்மிட் பண்ணிடுவோம். இந்த கேஸை க்ளோஸ் பண்ணி உன்னை ரிலீஸ் பண்ணிடலாம்." என்று சொல்ல,

"ஜெயில் உள்ளேயே வாழ்க்கை முழுக்க இருந்தா கூட நிம்மதியா இருக்கும்னு தோனுது சார்." என்று சொன்னபடி எழுந்தவன், "என்கிட்ட வேற ஏதும் பேசணுமா?" என்று கேட்டான்.

இல்லை என்று ஜீவிதன் தலையாட்ட, அவனும் நடக்க ஆரம்பித்து விட்டான். நடையில் நிதானம் இருந்தது. முதலில் இருந்த வேகம் கொஞ்சமும் இல்லை.

கொஞ்ச தூரம் சென்றதும் அவனைத் திரும்பிப் பார்த்தவன், "எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுங்க சார்." என்று சொல்ல, "என்ன?" என்று கேட்டான்.

"நான் வெளிய போற அன்னைக்கு யாரையும் பார்க்க விரும்பல. என்னை பார்க்க யாரையும் வர வேணாம்னு சொல்லுங்க." என்று சொன்னவனோ ஒரு கணம் நிறுத்தி, "கேட்க கூடாதுனு வைராக்கியமா நினைச்சாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அப்பா எப்படி இருக்கார்?" என்று கேட்டான்.

ஜீவிதனோ ஒரு பெருமூச்சுடன், "மாமா நல்லா இருக்கார் அர்ஜுன்." என்று சொல்ல, "பத்திரமா பார்த்துக்கோங்க." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று இருந்தான்.

எப்படி இருந்தவன் அவன்?! சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டு திரிபவன் ஆயிற்றே? செய்யாத தவறுக்கு தண்டனை கொடுத்து, அவனை மொத்தமாக உருக்குலைத்து விட்டார்களே?! இத்தனை நாட்கள் அவன் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையை பொய் என்று உணர வைத்து விட்டார்களே?! அவன் கோபக்காரன் தான், ஆனால் அதே அளவுக்கு பாசக்காரனும் கூட.

அவன் தாய் செருப்பால் அடித்து இருக்கின்றார். தந்தை, ‘கொன்னுடு’ என்று சொல்லி இருக்கின்றார். மனைவியோ, ‘செத்துப் போ’ என்று திட்டி இருக்கின்றாள். அக்காவோ, ‘அவன் என் தம்பியே இல்லை’ என்று இருக்கின்றாள். அவன் நேசித்த எல்லா உயிர்களும் அவனை மொத்தமாக நொறுக்கி விட்டன.

அவன் தவறு செய்யவில்லை. ஆனால் இத்தனை பழியையும் தூற்றலையும் தாங்கி இருக்கின்றான். ராகவி விஷயத்தில் இது எல்லாம் நடந்து இருந்தால் கூட, அவனுக்கு வலித்து இருக்காது. செய்த தவறுக்கு தண்டனை என்று நினைத்து இருப்பான். இப்போது செய்யாத தவறுக்கு அல்லவா தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான்.

தனக்காக பேச, தான் நேசித்த ஒருவர் கூட இல்லையே என்று சொல்லும் போது நெஞ்சே வெடித்து விட்டது. அவன் சொன்னதை அங்கே யாருமே நம்ப தயாராக இருக்கவில்லையே?! சாட்சிகள் எல்லாம் அவனுக்கு எதிராக இருந்ததால் தான், அவர்கள் இப்படி நடந்தார்கள் என்று அவனுக்கு புரிந்தாலும், அவர்களை மன்னிக்கும் அளவுக்கு அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

மொத்தமாக விலகிவிடும் எண்ணம்தான். யாருமே தேவை இல்லை என்று தோன்றியது. வாழ்க்கை முழுக்க தனியாக வாழ்ந்து விட்டு இறந்து விடுவோம் என்கின்ற மனநிலைக்கே வந்து விட்டான். நம்பிய நண்பனும் துரோகம் செய்து இருக்கின்றான். அர்ஜுன் மூர்க்கமானவன் தான், கோபக்காரன் தான். ஆனால் சுற்றி இருந்தவர்கள் மீது உயிரையே வைத்து இருந்தான். ராகவி என்றாலே உருகி விடுபவன் அவன். என்ன வார்த்தை எல்லாம் அவனைப் பார்த்து சொல்லி விட்டாள்...

தாலியை கழட்டி அவன் முகத்தில் அல்லவா எறிந்து இருந்தாள்.

எல்லாவற்றையும் நினைத்தவனது மனம் மொத்தமாக மரத்துப் போய் இருக்க, ஜீவிதனும் அவனை வெளியே கொண்டு வரும் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து இருந்தான். வந்தனாவிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டான். அவள் முதலில் மறுத்தாலும் அர்ஜுனுக்காக சம்மதித்து நடந்ததை கூறி இருக்க, எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டவன் அர்ஜுனின் கேஸை முடிக்கும் விஷயத்தில், மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தான்.

இதே கணம், நடந்த விஷயங்களைக் கேட்டு பார்த்தீபன் நொந்து போய் விட்டான். பைரவியோ, "அவனை செருப்பால அடிச்சு இருக்கேன். எவ்ளோ மனவருத்தப்பட்டு இருப்பான். செய்யாத தப்புக்கு நானே தண்டனை கொடுத்து இருக்கேனே..." என்று தலையில் அடித்துக் கொண்டு கதற,

"அவன் தப்பு பண்ணலன்னு சந்தோஷப்படுறதா? இல்லை, இவ்ளோ கஷ்டப்படுத்திட்டோம்னு வருத்தப்படுறதானு தெரியலம்மா..." என்று சொன்ன பார்த்தீபனின் கண்ணில் இருந்து மகனுக்காக இன்று முதல் முறை நீர் துளிர்த்தது.

***

இப்படியான ஒரு நாளில், விஜய்யை தேடி அவன் வீட்டுக்கே வந்து இருந்தான் கஜன். அவனும் கஜனை யோசனையாகப் பார்க்க, அவன் தோளில் கையைப் போட்டு உள்ளே அழைத்து சென்றான்.

"என் ப்ரேஸ்லெட் ரிஷியையும் தீபனையும் தூக்குல போட்ட இடத்துல மிஸ் ஆயிடுச்சு விஜய். ஜீவிதன் அத எடுத்து இருக்கான். என்னை எப்போ வேணும்னாலும் அரெஸ்ட் பண்ணலாம், நீ வாயை திறக்க கூடாது, புரியுதா?" என்று கேட்டான்.

"அண்ணன்...!" என்று அவன் அதிர, "நல்லா வாழணும்டா வந்தனா. ரொம்பவே உடைஞ்சு போய் இருக்கா. உன்னால மட்டும் தான் அவளை மீட்டு கொண்டுவர முடியும். அதனால நான் சொல்றத கேளு..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட,

அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டு கதவு நிலையில் சாய்ந்து நின்று இருந்தான் விஜய்.

இதே சமயம், ஜீவிதனோ அர்ஜுனை வெளியே எடுக்கும் ஏற்பாடுகளை பார்த்து விட்டு, ஜீப்பை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

அடுத்த நாளும் விடிந்து விட்டது.

வீட்டுக்கு செல்லவே மனம் இல்லை. இன்னுமே நேத்ரா சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருந்தன. கஜனுக்காக தான் திருமணம் செய்தாள், அது அவனுக்கும் தெரியும். அவள் காதலை அறிந்து தான் திருமணமும் செய்து இருந்தான். மாற்றிவிட நினைத்தான், இப்போது வரை முடியவில்லை. அவனால் சின்ன பாதிப்பைக் கூட அவளிடம் ஏற்படுத்த முடியாத நிலை.

ஒரு நண்பனாக ஏற்றுக் கொள்கின்றாள். ஆனால் கணவனாக ஏற்றுக் கொள்ளவே இல்லை. மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் தனித்தனி அறைகளில் தான் தங்குகின்றார்கள். அது எல்லாம் கூட சரிதான். அவன் ஆசைப்பட்ட பெண் அவள். என்றோ ஒரு நாள் மாறி விடுவாள் என்று தெரியும்.

தன்னைப் பிடித்து தன்னுடன் வாழ்க்கையைத் தொடங்கி இருந்தால் வானுக்கும் பூமிக்கும் குதித்து இருப்பான். ஆனால் இப்போது கூட கஜன் ஜெயிலுக்கு செல்ல கூடாது என்பதற்காக, அவனுடன் படுக்கையைப் பகிர தயாராகி விட்டாள். நினைக்கும் போதே சுள்ளென்று வலித்தது. அவனுக்கும் மனம் இருக்கின்றது. அவன் ஒன்றும் ஜடம் இல்லையே? ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றாள் என்னும் ஆதங்கம் அவனிடம்.

காலையில் தான் வீட்டை அடைந்தான். அவன் வீட்டுக்குள் நுழைந்த நேரம் அவள் அலுவலகம் செல்ல ஆயத்தமாகி இருக்க, "ஆஃபீஸ் போக போறியா?" என்று கேட்டான்.

"ம்ம்..." என்று சொன்னவளோ, "நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் ஆட்டோவில போறேன்." என்று சொல்ல, "ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணு, ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து நானே டிராப் பண்ணுறேன்." என்று அவளைப் பார்க்காமல் அறைக்குள் நுழைந்து விட்டான்.

கருப்பு டீஷேர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து வந்தவன் கண்ணில் கூலர்சை அணிந்து கொண்டு வண்டியை எடுக்க, அவளும் அருகே ஏறி அமர்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் மௌனம். அவளே வாயைத் திறந்தாள்.

"மாமாவோட கேஸ் என்னாச்சு?" என்று கேட்டாள். பதில் இல்லை அவனிடம்.

"என் மேல இருக்கிற கோபத்தை அவர்கிட்ட காட்டாதீங்க..." என்றாள்.

என்ன பேசிக் கொண்டு இருக்கின்றாள் என்றுதான் தோன்றியது.

"உன் மேல எனக்கு என்ன கோபம்?" என்று அவனும் கேட்டபடி வண்டியை செலுத்த, "இன்னும் உங்க கூட வாழ்க்கையை தொடங்கலன்னு..." என்று அவள் இழுவையாக சொல்ல, ஒரு பெருமூச்சுடன் வண்டியை செலுத்தினான்.

"ஆஃபீஸ் இந்த பக்கம்..." என்று அவள் சொல்ல, அவன் பதில் சொல்லாமல் வண்டியை கஜனின் வீட்டின் முன்னே நிறுத்த, "இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?" என்று கேட்டாள்.

கூலர்சை கழட்டி பாக்கட்டில் வைத்து ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்த கஜனின் ப்ரேஸ்லெட்டை எடுத்து நீட்டினான்.

அவளும் அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டு வாங்கிக் கொள்ள, "உன் மாமா கைல போட்டுட்டு வா." என்று சொன்னான்.

அவள் இதழ்கள் மெலிதாக விரிந்தன. கண்களில் கண்ணீர்.

"தேங்க்ஸ்!" என்றாள் உருக்கமாக.

பதில் சொல்லவில்லை. பார்வையை முன்னே திருப்பிக் கொள்ள, வேகமாக ஜீப்பில் இருந்து இறங்கினாள். அவனும் இறங்கி ஜீப்பில் சாய்ந்து நின்றான். வீட்டினுள் செல்லவில்லை. பல்லவி தான் வரவேண்டாம் என்று சொல்லி இருந்தாளே? உள்ளே செல்லவே அவனுக்கு மனமில்லை.

நேத்ரா அவர்களின் வளாகத்தினுள் நுழைந்த சமயம், கஜனும் ஹாஸ்பிடல் செல்வதற்காக தனது வண்டி அருகே வர, அவனை நோக்கி ஓடி வந்தவளோ, "மாமா!" என்றாள்.

இதழ்களில் புன்னகை. கஜன் அவளைப் புருவம் சுருக்கிப் பார்க்க, "கையை நீட்டுங்க..." என்றாள்.

அவனும் புரியாமல் நீட்ட அதில் அவனது ப்ரேஸ்லெட்டை அவள் போட்டுக் கொண்டு இருந்தாள். அதனை அதிர்ந்து பார்த்துவிட்டு எட்டி வாசலைப் பார்த்தான் கஜன்.

ஜீப்பில் சாய்ந்து நின்ற ஜீவிதன் மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு அவர்களைப் பார்த்து இருக்க, கஜனின் விழிகளும் ஜீவிதனின் விழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்ள, அவனைப் பார்த்து மென்மையாக, மிக மென்மையாக சிரித்துக் கொண்டான் ஜீவிதன். கஜனின் இதழ்களில் ஒரு நன்றியுடன் கூடிய புன்னகை.

அவனில் இருந்து விழிகளை அகற்றி நேத்ராவைப் பார்க்க, அவளோ இதழ்கள் எல்லாம் புன்னகையுடன், "நீங்க சந்தோஷமா இருக்கணும் மாமா." என்று சொல்லி விட்டு மீண்டும் ஜீவிதனை நோக்கி செல்ல, அவள் முதுகை ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டான்.

"நேத்ரா!" என்று ஒரு அழைப்பு, திரும்பிப் பார்த்தாள்.

பல்லவிதான் அவளை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். அருகே வந்தவள் அடுத்த கணமே இறுக அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பில் அத்தனை ஆத்மார்த்தம்.

அழுகை! அவள் மேனி கூட குலுங்கியது.

"அக்கா...!" என்று அவள் முதுகை நேத்ரா வருட, அவள் தோள்களைப் பற்றி அவள் விழிகளைப் பார்த்தவள், "என் உயிரே இப்போ தான் வந்திச்சு..." என்றாள்.

நேத்ராவோ மென்மையாக சிரித்துக் கொண்டு, "நான் கிளம்புறேன்." என்று சொன்னதுமே, பல்லவி வெளியே எட்டிப் பார்த்தாள்.

ஜீவிதன் ஜீப்பில் ஏற முனைய, "வீட்டுக்குள்ள வா ஜீவி." என்றாள்.

அவன் இதழ்களில் ஒரு விரக்தி புன்னகை.

குரலை செருமிக் கொண்டு, "இன்னொரு நாளைக்கு வர்றேன் பல்லவி." என்று ஜீப்பில் ஏற, நேத்ராவும் சென்று ஏறிக் கொண்டாள்.

அவனுக்கு பல்லவி மேல் வருத்தம் இருந்தாலும், அவள் நிலைமையை அவனால் புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது. ஆனால் நேத்ராவின் பேச்சின் ஆழத்தில் இருந்து அவனால் வெளிவர முடியவில்லை. அவளை எவ்வளவு நேசிக்கின்றான். அவனுடனான தாம்பத்தியத்தை பேரம் பேசி விட்டாளே என்கின்ற ஆதங்கம்.

ஜீவிதனோ ஒரு பெருமூச்சுடன், "கிளம்பலாமா?" என்று கேட்க, அவளும் தலையசைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் மௌனம் தான்.

"தேங்க்ஸ்!" என்றாள்.

"உனக்காக ஒன்னும் பண்ணல, அவரோட நல்ல மனசுக்கு பண்ண தோனுச்சு." என்றான்.

இக்கணம் அவன் நினைவுகள் சற்று முன்னர் விஜய், அவனைத் தேடி வந்து பேசியதை விடயத்தை சுற்றி சுழன்று கொண்டு இருந்தன.

***

"இந்த கையால தான் கொலை பண்ணுனேன் சார். அவர் எதுவும் பண்ணல, அவரை விட்ருங்க... என்னை அரெஸ்ட் பண்ணுங்க, ஒரு நல்ல மனுஷன் ஜெயிலுக்குள்ள போகவே கூடாது... அவரை நம்பி, எத்தனையோ பேர் இருக்கிறாங்க." என்று ஜீவிதனை தேடி வந்து வாக்குமூலமே கொடுத்து விட்டான் விஜய்.

"நீ போ, நான் பார்த்துக்கிறேன்." என்று சொன்ன ஜீவிதனுக்கு கஜன் மேல் இருந்த பிரமிப்பு அதிகரித்தது.

வழக்கமாக கொலைகள் எல்லாம் பெரிய தலைகள் செய்து விட்டு, கூலிக்கு வேலை பார்ப்பவர்களை ஜெயிலுக்கு அனுப்பிதான் அவன் அறிந்து இருக்கின்றான், பார்த்து இருக்கின்றான். முதல்முறை இப்படி ஒரு தன்னலம் இல்லாத ஜீவன். கஜனுக்காக இதனை செய்யவில்லை என்றால், மனசாட்சி அவனை நிம்மதியாக தூங்கவே விடாது. எப்படியும் கஜன்தான் கொலை செய்ததாக தான் வாக்குமூலம் கொடுப்பான்.

பிரேஸ்லெட் வேறு அங்கே இருப்பதால், அவன் குற்றவாளி ஆவதற்கு தான் வாய்ப்புகளும் அதிகம். இவ்வளவு நல்ல மனம் உள்ளவனைத் தண்டிக்க அவன் மனசாட்சி இடம் கொடுக்கவே இல்லை. அதனால் தான் ப்ரேஸ்லெட்டை திரும்ப கொடுத்து, கேஸை க்ளோஸ் பண்ண நினைத்து இருந்தான்.

***

ஒரு வழியாக கஜனின் கேஸ் முடிந்தாலும், ஜீவிதனுக்கு இன்னுமே நேத்ரா மேல் கோபம் இருந்தது. அவள் பேசிய விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. ஜீப்பில் ஏறியதில் இருந்து அவள் விழிகளை அவன் விழிகள் சந்திக்கவே இல்லை. கோபமாக இருக்கின்றான் என்று அவளுக்கு புரிந்தது. இன்றுதான் அவள் மீது அவன் கோபப்பட்டு பார்க்கின்றாள். ஒருமாதிரி ஆகிவிட்டது.

"என் மேலே ஏதும் வருத்தமா?" என்று கேட்டாள்.

"இல்லாம இருக்குமா?" என்று கேட்டான்.

"என்னன்னு சொல்லிடுங்களேன்..." என்று சொன்னதுமே, ஜீப்பை ஓரமாக நிறுத்தியவன் அவளை ஆழ்ந்து பார்த்து, "நீ பேரம் பேசுறதுக்கு நம்ம வாழ்க்கைதான் கிடைச்சுதா?" என்று மனதில் பட்டதைக் கேட்டு விட்டான்.

அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

"ஐயோ! நான் அந்த அர்த்தத்துல சொல்லவே இல்லை..." என்று சொன்னவளிடம், "அப்போ?" என்று கேட்டான்.

என்ன சொல்வாள் அவள்?

பேசியது பிழை என்று தெரிந்தது.

"சாரி!" என்றாள் தலையைக் குனிந்து கொண்டு.

"சாரி சொன்னா பேசுனது இல்லன்னு ஆயிடுமா? நீ உன் மாமாவை லவ் பண்ணுனது தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உன் மேல ஆசை இருக்கு, காதல் இருக்கு. நேசம் நிறையவே இருக்கு. இப்போ நீ இருக்கிற ஸ்பேஸ் நானா உனக்கு கொடுத்தது தான். உன்னை வலுக்கட்டாயமா என் கூட வாழ வைக்க என்னால முடியும். ஆனா எனக்கு அதுக்கு இஷ்டம் இல்லை. உன் மனசு எப்போவும் கஷ்டப்பட கூடாதுனு நினைக்கிறேன் நேத்ரா. ஆனா நீ என் மனசை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே?

ஈஸியா எல்லாமே பேசிட்ட... நீ என் கூட வாழல என்கிறதுக்காக உன் மாமாவை ஜெயில்ல போடுவேன்னு நினச்சுட்ட... அப்போ உன் மனசுல நான் அவ்ளோ வக்கிரம் பிடிச்சவனா பதிஞ்சு இருக்கேன், ரைட்? எந்த இடத்துல நேத்ரா, நான் உன்கிட்ட தோத்து போனேன்?" என்று கேட்டான்.

உருக்கமாக கேட்டான், அவன் குரல் கூட தழுதழுத்தது. வேலை என்று வந்து விட்டால் சிங்கம் போல கர்ஜிப்பவனின் குரலில் அப்படி ஒரு நெகிழ்வு. அவன் கேட்ட கேள்வியில் அவளுக்கு மனம் பிசைய ஆரம்பித்து விட்டது. அவள் மனதைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருந்தாளே?

அவளையே நேசித்துக் கொண்டு இருக்கும் ஜீவனை எப்படி மறந்தாள்? பதில் இல்லை அவளிடம். அவனையே பார்த்து இருந்தாள். அவனது சிவந்த விழிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். குற்ற உணர்வாக இருந்தது. கூனிக் குறுகி விட்டாள்.

"ஜீவிதன்..." என்று தவிப்பாக வந்தது அவள் வார்த்தைகள்.

"நமக்கு ஒருத்தரை பிடிச்சு, அவங்க நம்ம நேசத்தை புரிஞ்சுக்கலன்னா எப்படி இருக்கும்னு உனக்கும் தெரியும். உன் இடத்துல என்னை பொருத்தி பாரு, உன் காதல் கிடைக்கிற அளவுக்கு நான் கொடுத்து வைக்கல போல..." என்று சொன்னவன் விழிகள் கலங்கிப் போக, சட்டென கூலர்ஸை போட்டுக் கொண்டு வண்டியை கிளப்பி இருந்தான்.

நேத்ராவினால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவள் இடத்தில் பொருத்திப் பார்க்க சொல்கின்றான். சரி தானே? அந்த வலி எப்படி இருக்கும் என்று அவளுக்கு தெரியும் தானே? அதே வலியை தானே அவன் இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான்.

கை தவறிப் போன பொக்கிஷத்தை நினைத்து, கையில் இருக்கும் பொக்கிஷத்தை நிராகரித்துக் கொண்டல்லவா இருக்கின்றாள். அதுவும் அவனிடம் நேற்று பேசிய பேச்சு, அவனை மொத்தமாக நொறுக்கி விட்டது என்று புரிந்தது. அப்படியே சிலையாக அமர்ந்து இருந்தாள்.

அவளை அவளது அலுவலகத்தில் விட்டு இருக்க, அவளும் இறங்கிக் கொண்டு அவனைத் திரும்பிப் பார்க்க, "வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சு வேலைக்கு கிளம்பிடுவேன், நைட்தான் திரும்ப வருவேன். நீ ஆட்டோவில வீட்டுக்கு கிளம்பு." என்று சொல்லிக் கொண்டு ஜீப்பை கிளப்ப, அதனை ஒரு கணம் வெறித்துப் பார்த்துவிட்டு அலுவலகத்தினுள் நுழைந்தாள்.
 
Top