ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 69

pommu

Administrator
Staff member
நிலவு 69

முதல்நாள் ஹாஸ்பிடலில் இருந்து கஜன் கிளம்பும் போதே, "அவனுங்கள பிடிச்சிட்டோம் அண்ணா, ஃபேக்டரி பக்கத்துல இருக்குற குடோன்ல இருக்கோம்." என்று விஜய் சொன்னதுமே, கஜனும் கிளம்பி சென்று விட்டான். மனதில் அப்படி ஒரு ஆத்திரமும் வலியும்.

வேகமாக உள்ளே சென்றவனோ ஷேர்ட்டை முட்டிவரை மடித்துக் கொண்டு, அங்கே கட்டி வைக்கப்பட்டு இருந்த தீபனின் நெஞ்சிலேயே ஷூ காலினால் உதைக்க, அவன் கீழே விழுந்தான்.

விஜய்யோ, "நீங்க அடிக்க வேணாம்னு சொன்னதால, கை வைக்கல. ஆனா ஆத்திரமா வருது..." என்று தழுதழுத்த குரலில் சொல்ல,

"அதுக்கு காரணம் இருக்கு விஜய்..." என்று சொல்லி விட்டு, தீபனைப் பார்த்தவன், "தப்பு பண்ணுனது நீ, அர்ஜுன் ஜெயில்ல இருக்கான். அது உங்களுக்கான பிரச்சனை. இடைல என் தங்கச்சி என்னடா பண்ணுனா? சின்ன பொண்ணுடா அவ, அவளை போய்..." என்று சொன்னவனுக்கு தீபனை கையால் அடித்துக் கொள்ளும் அளவுக்கு ஆத்திரம்.

முஷ்டியை அடக்கி கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவன் ஷேர்ட்டை பிடித்து எழ வைத்தவன், "நீ பண்ணுனதை நீ இப்போ சொல்லணும், வாக்குமூலமா கொடுக்கணும். என் தங்கச்சி எந்திரிச்சிட்டாடா, அவ உண்மையை சொன்னா. இந்த கேஸ் எப்படியும் முடிஞ்சிடும். ஆனா நீ பயத்துல தற்கொலை பண்ணிக்க போறதா வாக்குமூலம் கொடுக்கணும்." என்று மிரட்டலாக ஆரம்பித்து இரு அடிகளும் போட, தீபனும் ரிஷியும் பயத்திலேயே வாயைத் திறந்தார்கள்.

அவர்கள் பேசுவதை அவர்களின் அலைபேசியிலேயே பதிவு செய்தார்கள். அதன் பிறகு, அதனை மேசையில் வைத்துவிட்டு விஜய்யைப் பார்த்த கஜனோ, "அந்த கயிறை எடுத்து வா." என்று சொல்ல,

தீபனோ, "சார், எங்களை போலீஸ்ல கொடுத்துடுங்க, இது வேணாம்..." என்று பதற ஆரம்பித்து விட்டான்.

"ஏன் அப்படியே ஜாலியா இருந்துட்டு வெளியில வரவா?" என்று கேட்ட கஜனுக்கு, அடக்க நினைத்தாலும் ஆத்திரம் அடங்கவில்லை.

விஜய்யும் கயிறை கஜனிடம் கொடுத்துவிட்டு இருவரின் இதழ்களையும் பிளாஸ்டரினால் ஒட்டிருக்க, அவர்களை நோக்கி கோபமாக வந்தவன், ஷூ காலினால் இருவரின் அந்தரங்க பகுதிகளிலும் உதைத்தான்.

"அண்ணா, அவனுங்க உடம்பில காயம் இருந்தா போலீஸ் பிடிச்சிடுவாங்க..." என்று சொல்ல, "ப்ச்! முடியலடா, ஆத்திரமா வருது... அடிச்சே கொல்லணும் போல இருக்கு. ஆனா என் குடும்பத்தை நினைச்சு கோபத்தை கட்டுப்படுத்த வேண்டி இருக்கு..." என்று இயலாமையுடன் சொல்லிவிட்டு கையில் க்ளவுசை போட்டவன்,

அந்த கயிற்றினால் அவர்கள் கழுத்தை நெரிக்கப் போக, அவன் கையைப் பற்றிய விஜய்யோ, "இந்த கையால கொலை பண்ணிடாதீங்க அண்ணன்... எத்தனையோ பேருக்கு உயிர் கொடுக்கிற கை இது. அழுக்கு பட வேணாம், நான் பண்ணுறேன்." என்று சொல்ல, கஜனோ அவனை அதிர்ந்து பார்க்க, "என்னோட ஆத்திரத்தை தீர்த்துக்கணும் அண்ணன்..." என்று கண்கள் கலங்க கேட்டான்.

கஜனும் கயிறை அவனிடம் கொடுத்து க்ளவுஸையும் நீட்ட விஜய்தான் இருவரையும் கயிற்றினால் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்று இருந்தான்.

அவர்கள் துடி துடித்து இறப்பதை, மார்புக்கு குறுக்கே கையை கட்டியபடி பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் கஜன்...

அவர்கள் உயிர் நீத்த கணத்தில், அவன் மனதில் ஏதோ ஒரு வலி இறங்கிய உணர்வு...

விஜய்க்கும் இப்போது தான் ஆத்திரம் தீர்ந்த உணர்வாகி போக, கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டான்.

அதனை தொடர்ந்து, மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு நின்று இருந்த கஜன் அருகே வந்து கையைப் பற்றிப் பிடித்தவன், "எனக்கு வந்தனாவை பிடிக்கும், நானும் அவளை லவ் பண்ணுறேன், இத நான் அன்னைக்கே சொல்லி போராடி சம்மதம் வாங்கி இருக்கணும். அப்படி பண்ணி இருந்தா, அவளுக்கு இப்படி நடந்து இருக்காதுன்னு தோனுது. அவ என்னை திருட்டு தனமா பார்க்க வந்து இருக்க வேண்டிய அவசியமே இருந்து இருக்காது. அவ என்னை பார்க்க வந்ததால தான அவளுக்கு இப்படி ஆயிடுச்சு. அவளை என்கிட்டயே கொடுத்துடுங்க... நான் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா வச்சு பார்த்துப்பேன்..." என்று உருக்கமாக கேட்டான்.

கேட்கும் போதே, அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது...

அவன் கேட்டு அடுத்த வினாடியே, அவனை இறுக அணைத்து இருந்தான் கஜன்.

அத்துடன் இருவரும் பிணங்களை தூக்கிக் கொண்டு சென்று, ஊருக்கு வெளியே இருக்கும் அரசமரத்தில் கட்டி தொங்கவிட்டும் இருந்தார்கள்.

முடிந்தவரை எந்த தடயமும் சிக்காமல் இருக்க என்னதான் ஏற்பாடு செய்து இருந்தாலும், கஜனின் கஷ்டகாலத்துக்கு அவன் ப்ரேஸ்லெட் அங்கே விழுந்து விட்டது. அவனும் கவனிக்காமல் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டான்.

வந்தனா சொன்ன விஷயத்தை அவன் யாரிடமும் இதுவரைக்கும் சொல்லவில்லை. போலீஸ் மூலம் உண்மை தெரியட்டும் என்றுதான் நினைத்து இருந்தான். காலையில் முகம் கழுவும் சமயம்தான் கையில் ப்ரேஸ்லெட் இல்லை என்பதையே கவனித்தான்.

போலீசில் சிக்காமல் வீடியோ தொடக்கம் எல்லாமே எடுத்து இருந்தான். ஆனால் முக்கியமான தடயத்தை விட்டு வந்து இருக்கின்றானே?! அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. எப்படியும் அவன் கைது ஆகபோகிறான் என்று தெரியும். அதற்காக விஜய்யை அவனால் சிக்க வைக்க முடியாது. அந்தளவு அவனுக்கு சுயநலமான மனநிலையும் இல்லை. விஜய் நேற்று இரவு அவனின் கையைப் பிடித்து பேசியது இன்னுமே நினைவில் இருந்தது. வந்தனா சந்தோஷமாக வாழ வேண்டும்.

இத்தனை வலிகளை அனுபவித்தவள், விஜய் ஜெயிலுக்குள் சென்றால் கண்டிப்பாக நொறுங்கி விடுவாள். அவளை இந்த வலியில் இருந்து மீட்க கூடியது விஜய் ஒருத்தன்தான். அதற்காக இந்த பழியை தானே ஏற்றுக் கொள்ளவும் துணிந்து விட்டான். ஜெயிலுக்கு செல்லும் மனநிலையும் அவனுக்கு இப்போது வந்து விட்டது. அதனால் போலீஸ் விசாரித்தால் தானே கொலை செய்ததாக சொல்லியும் விடுவான். இப்போது பல்லவியிடம் கூட அதை தானே சொன்னான்...

விஜய்யை அவன் எந்த இடத்திலும் காட்டிக் கொடுக்க தயாராக இல்லை.

அவன் விழிகளோ அவளையே பார்த்து இருக்க, நெஞ்சில் கையினை வைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டாள் பல்லவி. கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

அவனை ஏறிட்டுப் பார்த்து கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்த கணம், வாசலில் போலீஸ் ஜீப்பின் சத்தம் கேட்டது.

பதறி எழுந்து கொண்டு, "நம்ம பொண்ணு மேல சத்தியமா நீங்க வெளிய வர கூடாது." என்று சொல்லிவிட்டு விறுவிறுவென சென்றாள்.

அழுகையாக வந்தது, அடக்கிக் கொண்டு தன்னை நிலைப்படுத்தியபடி வாசலுக்கு வந்து நிற்க, ஜீவிதன் ஜீப்பில் வந்து இறங்கி இருந்தான்.

வாசலைக் கடந்து உள்ளே வந்தவனோ, "டாக்டர் எங்க?" என்று தான் கேட்டான்.

அண்ணா என்கின்ற அழைப்பு காணாமல் போய் இருந்தது. அவளுக்கு புரிந்து விட்டது.

"எதுக்கு?" என்று கேட்டாள்.

"விசாரிக்கணும்..." என்றான். முகத்தில் இறுக்கம் இருந்தது.

கஜன் மட்டும் குற்றத்தை ஒப்புக் கொண்டால் எல்லாமே முடிந்து விடும். குற்றத்தை ஒப்புக் கொள்ளும் மனநிலையில் தான் கஜன் இருக்கின்றான் என்று அவளுக்கும் புரிந்தது.

"வெளிய போ ஜீவிதன்." என்றாள்.

அவளைத் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவனோ, "பல்லவி!" என்று அழுத்தமாக அழைக்க, "வெளிய போக சொன்னேன்..." என்றாள் வாசலைக் காட்டி.

அவளை மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு, "புருஷன காப்பத்த பார்க்கிறியோ?" என்று கேட்க, "வெளிய போக சொன்னேன்." என்றாள் மீண்டும்.

நேத்ராவும் அங்கே நின்று இருக்க, "என்னாச்சு?" என்று பல்லவி அருகே வந்து நிற்க, "உன் புருஷன கூட்டிட்டு போ." என்று அவளிடம் சொல்லிவிட்டாள் பல்லவி.

நேத்ரா, பல்லவியை அதிர்ந்து பார்த்து விட்டு ஜீவிதனைப் பார்க்க,

"அதிரடியா உன் புருஷன இழுத்துட்டு போக எனக்கு ஒரு செகண்ட் போதும். ஏதோ ஒன்னு தடுத்துட்டு இருக்கு. இன்னைக்கு போறேன், ஆனா..." என்று ஒற்றை விரலை நீட்டி சொல்லிவிட்டு நேத்ராவைப் பார்க்க,

"மாமா என்ன பண்ணுனார்?" என்று பதட்டமாக கேட்டாள் அவள்.

"நீ வீட்டுக்கு வர்றியா? இல்லை, இங்கயே நிற்க போறியா?" என்று சற்று காட்டமாக வந்தது அவன் குரல்.

நேத்ரா அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு, "வர்றேன்." என்று சொல்ல, அவனும் விறுவிறுவென சென்று ஜீப்பில் ஏற, அவளும் வந்து ஏறிக் கொண்டாள்.

ஜீப்பை ஸ்டார்ட் செய்தவனுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை. அர்ஜுனை எத்தனையோ விஷயங்களில் இருந்து காப்பாற்றி இருக்கின்றான் தான். ஆனால் இந்த கொலை, கற்பழிப்பு எல்லாம் அளப்பரிய குற்றங்கள். அவன் கடமையை இன்னொருத்தன் கையில் எடுத்து இருக்கின்றான், ஜீரணிக்க முடியவில்லை.

என்னதான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாக்குமூலம் கொடுத்து இருந்தாலும், அங்கே ப்ரேஸ்லெட் இருக்கின்றதே? இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் அவனுக்கு?

கஜனை விசாரித்து ஆக வேண்டும். ஆனால் பல்லவி அதற்கு விடமாட்டேன் என்கின்றாள். அதிரடியாக அவனை இழுத்து சென்று விசாரிக்கும் அளவுக்கு, நிதானம் கெட்டவன் அல்ல ஜீவிதன். நேத்ராவை வீட்டில் விட்டவன், குளிக்க வேண்டி இருந்தது.

அவனும் சேர்ந்து வீட்டினுள் நுழைந்து இருக்க, "மாமா என்ன பண்ணுனார்?" என்று நேத்ரா சற்று பதட்டத்துடன் கேட்டாள்.

அவன் எதுவும் சொல்லாமல் அவளைக் கடந்து செல்ல, "கேக்கிறேன்ல..." என்று அவனை மறித்துக் கொண்டு நின்றாள்.

"இப்போ என்னடி?" என்று எரிச்சலாக கேட்டான்.

"மாமாவை எதுக்கு நீங்க விசாரிக்கணும்?" என்று கேட்டாள். அவள் விழிகளில் பயம் இருந்தது.

"உன் மாமா கொலை பண்ணி இருக்கார். அதுவும் ரெண்டு கொலை. வந்தனாவை நாசமாக்கினவனுங்கள கொலை பண்ணி இருக்கார், போதுமா?" என்று ஆக்ரோஷமாக கேட்க, அவளோ நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தவள், "என்ன சொல்றீங்க?" என்று கேட்டாள்.

"புத்திசாலித்தனமா வீடியோ எல்லாம் எடுத்து தற்கொலை போல செட் பண்ணுனா போதுமா? நீ கொடுத்த ப்ரேஸ்லெட் கொலை நடந்த இடத்துல கிடைச்சுது." என்று சொன்னவனோ, அதிர்ந்து நின்றவளைப் பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, அவளுக்கோ கால்கள் நடுங்கின.

கஜன் கொலை பண்ணி இருக்கின்றான். அதுவும் வந்தனாவை கற்பழித்தவர்களை தான். அதெல்லாம் கூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை, நியாயமாக பட்டது. ஆனால் அவன் ஜெயிலுக்குள் செல்ல வேண்டுமே? நினைக்கவே நெஞ்சு வெடித்து விடும் உணர்வு. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

அவன் ஜெயிலுக்குள் செல்லக் கூடாது என்பதைத் தவிர, எந்த எண்ணமும் அவள் மனதுக்குள் இல்லை. ஜீவிதன் நினைத்தால் காப்பாற்ற முடியும். ஆனால் அவன் காப்பாற்றும் மனநிலையில் இல்லை என்று, அவன் பேசுவதில் இருந்தே தெரிந்தது.

கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தவள், கட்டிலில் அமர்ந்து அவனுக்காக காத்துக் கொண்டு அமர்ந்து இருக்க, அவனும் குளித்துவிட்டு இடையில் டவலுடன் வெளியே வந்தான்.

தனது அறைக்குள் அமர்ந்து இருந்தவளை அவன் விசித்திரமாக பார்க்க, அவன் முன்னே வந்து நின்றவளோ அவன் கையைப் பற்றிக் கொண்டு, "என் மாமாவை எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்..." என்று சொன்னாள்.

"சின்ன விஷயம்னா விட்ருவேன் நேத்ரா, ஆனா ரெண்டு கொலை... சட்டத்தை அவர் கைல எடுத்தா நாங்க எதுக்கு?" என்று அவள் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டு நகர, "அப்போ எனக்காக இத பண்ண மாட்டிங்களா?" என்று கேட்டாள்.

சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தவன், "உனக்காக நான் எதுக்கு பண்ணணும்?" என்று கேட்டான்.

"சோ, உங்ககூட நான் வாழ ஆரம்பிச்சா எனக்காக பண்ணுவீங்களா?" என்று கேட்டாளே பார்க்கலாம்.

தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. சட்டென அவளை நோக்கி வந்தவன், "என்னடி பேசிட்டு இருக்க?" என்று அவளை உறுத்து விழித்து கேட்க,

"உங்களுக்கு நான் தானே வேணும், எடுத்துக்கோங்க. ஆனா என் மாமாவை விட்ருங்க..." என்று சொன்னாள்.

சுருங்க சொல்லப் போனால் அவள் மேனியை, பேரம் பேசிக் கொண்டு இருக்கின்றாள். அவளை ஆழ்ந்து பார்த்த அவன் விழிகள், மொத்தமாக உயிர்ப்பைத் தொலைத்து விட்டது.

"உன்னை கல்யாணம் பண்ணி இத்தனை நாள் உன்கிட்ட நான் எந்த பாதிப்பும் உண்டாக்கல. ஆனா உன் மாமாவுக்காக என்கூட படுக்க ரெடி ஆயிட்டல்ல?" என்று கேட்டான்.

அந்த கேள்வியில் சட்டென அவள் விழிகளைத் தாழ்த்திக் கொள்ள, அவளை உறுத்து விழித்தவனோ, "ப்ச்!" என்று சொல்லி, நெற்றியை நீவிவிட்டு யூனிஃபார்மை அணிந்தவன் வெளியேறப் போக, "நான் கேட்டது?" என்றாள்.

ஆத்திரம் வந்தது, விடமாட்டேன் என்கின்றாளே?

"நீ கேக்கிறது என்னோட நேர்மையை..." என்றான்.

"உங்க மச்சானுக்காக நிறைய தடவை நேர்மையை விட்டு கொடுத்து இருக்கீங்களே?" என்றாள்.

"இது கொலைடி..." என்றான் ஆத்திரமாக.

"செத்தவன் ஒன்னும் யோக்கியம் இல்லையே...?" என்றாள்.

அவளை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு அவன் வெளியேற, அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள் நேத்ரா.

***

ஜீவிதனை அனுப்பிவிட்டு அறைக்குள் வந்த பல்லவியிடம், "எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க?" என்று கஜன் கேட்க,

"நீங்க வாயை திறந்தா எல்லாமே முடிஞ்சிடும்..." என்றாள் தழுதழுத்த குரலில்.

"என்னை எத்தனை நாளைக்கு தான் காப்பாத்த முடியும் உன்னால?" என்று அவன் வெளியேற முற்பட, "சாகுற வரைக்கும்..." என்று பதில் வந்தது.

சட்டென திரும்பிப் பார்க்க, "ஒரு நல்லவர் ஜெயில் போக கூடாதுனு நினைக்கிறேன்." என்றவளோ, ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே, "அர்ஜுன்" என்றாள் தழுதழுத்த குரலில்...

ஒரு பெருமூச்சுடன், "அர்ஜுன் சீக்கிரம் வெளிய வந்திடுவான்." என்று சொல்ல, அவளோ ஒரு விம்மலுடன் கட்டிலில் அமர்ந்து கொண்டு, "மொத்தமா உடைஞ்சு போய் இருப்பான்ல..." என்று சொல்ல, "ம்ம்... எல்லார்கிட்டயும் சொல்லணும்." என்று சொல்லிக் கொண்டு ஹாலுக்குள் வந்தான்.

ஜீவிதன் வந்து போனதில் இருந்தே என்ன நடக்கின்றது என்று புரியாத நிலையில் அனைவரும் இருக்க,

சக்திவேலோ, "என்னப்பா பிரச்சனை?" என்று கேட்டான்.

"காலைல ரெண்டு பேர் தூக்கு மாட்டி இறந்து போனது கேள்விப்படீங்களா?" என்று கேட்டான் அவன்.

சக்திவேலோ, "ஆமா, நம்ம பையன் ஒருத்தன் கால் பண்ணி சொன்னான். லாவண்யா ஸ்டோர்ஸ்ல வேலை பார்க்கிற தீபனும் ரிஷியுமாமே? என்ன விஷயம்னு தெரியலனு சொன்னான். நானும் இப்போ அங்கே போகதான் நினைச்சேன்." என்று சொன்னான்.

விஷயம் அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பரவ ஆரம்பித்து இருந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடத்தில் தானே சம்பவம் நடந்தது. இன்னும் சக்திவேல் காதை மொத்தமாக வந்து அடையவில்லை என்று தெரிந்தது.

வந்தனா கண் விழித்தது எல்லோருக்கும் தெரிந்து இருந்தாலும், அவள் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று அறிந்தவர்களுக்கு, அவள் கஜனிடம் உண்மையை சொன்ன விஷயம் தெரியவும் இல்லை. அவள் உண்மையை கஜனிடம் மட்டும் தானே சொல்லி இருந்தாள்.

குரலை செருமிக் கொண்டு அங்கே சோஃபாவில் மேடிட்ட வயிற்றுடன் அமர்ந்து இருந்த ராகவியைப் பார்த்தவன், "நேத்து வந்தனா என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா..." என்று சொன்னதுமே, அனைவரின் விழிகளும் அதிர்ந்து விரிந்தன.

"என்ன சொன்னா? யார் இத பண்ணுனது? அர்ஜுன் தானா?" என்று ஆளுக்கொரு பக்கம் கேள்விகளைக் கேட்க, கஜனோ இல்லை என்று தலையாட்ட, இப்போது ராகவிக்கு ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் உடையும் உணர்வு.

"இன்னைக்கு காலைல தூக்கு மாட்டி செத்தவனுங்க தான் இத பண்ணி இருக்காங்க..." என்று சொல்ல, சக்திவேலின் விழிகள் கஜன் மேல் ஆராய்ச்சியாக நிலைத்தது.

சட்டென அவன் விழிகளை சந்திக்க முடியாமல் பார்வையைத் திருப்பிய கஜனோ, "அர்ஜுன் எந்த தப்பும் பண்ணல, பிளான் பண்ணி சிக்க வச்சு இருக்காங்க..." என்று சொன்னதுமே ராகவி அவனை வெறித்துப் பார்த்தாள்.

இப்போது ராகவியைப் பார்த்தவன், "அவன் உன்னை பார்த்த பார்வை ஏதோ சொல்லிச்சுன்னு சொன்னேன்ல..." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட,

துளசியோ, "அவனுங்க சாகதான் வேணும்..." என்று அழுது கொண்டு சொன்னாள்.

ஜெயந்தியோ, "கடவுளே அவனுங்களுக்கு தண்டனை கொடுத்துட்டார்..." என்று அழுதுகொண்டு சொன்னாள்.

'தண்டனை கொடுத்தது கடவுள் இல்லை, கஜன்தான்.' என்று சக்திவேல் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

"அந்த பையன் பாவம்... சும்மா போட்டு அடிச்சு ஜெயிலுக்குள்ள வச்சு இருக்காங்க..." என்று மதியழகனிடம் ஆதங்கம்.

ராகவிக்கோ உயிர் மொத்தமாக தன்னைவிட்டு சென்ற உணர்வு. எந்த பெரிய பழியைத் தூக்கி அவன்மீது போட்டு இருக்கின்றாள். இப்போதும் அவன் பார்த்த பார்வை அவள் மனதில் தேங்கி இருக்க, மெதுவாக எழுந்தவள் அடி மேல் அடி வைத்து தனது அறையை நோக்கி சென்றாள். நிலை கொள்ளவே முடியவில்லை. நடைப்பிணமாகி விட்டாள்.

அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டவளோ, "அர்ஜுன்..." என்று இதழ் பிரித்து சொல்லிக் கொண்டு, தனது மேடிட்ட வயிற்றை வருடிக் கொண்டவளுக்கு, கத்தி அழ வேண்டும் என்கின்ற உணர்வு. ஆனால் அழுவதற்கு தான் தெம்பில்லை. அவள் வார்த்தைகளால் ஒருவனை மொத்தமாக உருக்குலைய வைத்து விட்டாளே!?

அவன்மீது நம்பிக்கை கொண்டு இருக்க வேண்டியது அவள் தானே?! அவன் பக்கம் நின்று இருக்க வேண்டியதும் அவள் தானே?! கஜனுக்கு இருந்த நம்பிக்கை கூட அவளுக்கு அவன் மீது இல்லாமல் போய் விட்டதே? உண்மை தெரியும்வரை வார்த்தைகளை விடாமல், அமைதியாக இருந்து இருக்கலாமோ என்று இக்கணம் தோன்றியது.

அவன் காலில் விழுந்தால் கூட இந்த பாவத்தை அவளால் கரைக்க முடியாது என்று அவளுக்கு தெரிந்தது. செய்யாத பாவத்துக்கு எந்த பெரிய தண்டனையை கொடுத்து விட்டாள்? அவன் வலுக்கட்டாயமாக தான், அவளுடன் வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அவளும் ஆசைப்பட்டு வாழ்ந்தாள் தானே?! வந்தனாவின் பிரச்சனைக்கு முந்தைய இரு நாட்களாக தான் அவனுடன் பிரச்சனை பட்டு இருந்தாள். அதற்கு முதல், அவன் மீது அவளுக்கு காதல் மலர்ந்து தானே இருந்தது?

அவளைப் புரிந்து கொள்ளாமலே போய் விட்டாளே?! அவன் மேல் பழி போடும் கணம், அவனுடனான சந்தோஷமான தருணங்கள் எதுவுமே அவளுக்கு நினைவுக்கு வரவில்லையே? எந்த பெரிய பழியை இலகுவாக தூக்கிப் போட்டு விட்டாள்? பைரவி கூட அவள் பேச்சை நம்பி தானே அவனை செருப்பால் அடித்து இருந்தாள்.

அந்த கணங்கள் இப்போது நினைவுக்கு வர, அவள் இதயமே வெடித்துவிடும் உணர்வுதான். எவ்வளவு வருந்தி இருப்பான்? எவ்வளவு அவமானப்பட்டு இருப்பான்? அவனுமே வந்தனாவின் இந்த பிரச்சனையில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவன் ஆயிற்றே... இனி அவன் முகத்தில் எப்படி அவளால் விழிக்க முடியும்?
 

AmmuLeela

Member
அருமை அருமை அருமையான நகர்வுகள் 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 அடுத்த பதிவிற்கு ஆவளுடன் 🤩 🤩
 
Top