நிலவு 68
இவ்வளவு தூரம் மனக் கஷ்டப்படுகிறவன் கண்டிப்பாக தவறு செய்து இருப்பான் என்று தோன்றவில்லை.
"இத்தனை நாள் நீ பண்ணி இருப்பியா, இல்லையானு சந்தேகம் இருந்திச்சு. ஆனா இப்போ இத நீ பண்ணலன்னு உறுதியா தெரியுது அர்ஜுன்." என்று ஜீவிதன் சொல்ல, அவனை ஏறிட்டு புரியாமல் பார்த்தான் அர்ஜுன்.
"ட்ரக் மட்டும் இல்ல, மயக்க மருந்தும் உன் பிளட்ல இருக்கு. சோ யூ ஆர் ட்ராப்ட் பை கலப்ரிட்." என்று சொல்ல, அவன் விழிகள் அதிர்ந்து விரிந்தன.
"முதல் நாள் என்னாச்சுன்னு சொல்லு..." என்று ஜீவிதன் கேட்க, இப்போதுதான் அர்ஜுனுக்கு எல்லாமே படமாக விரிந்தது.
போதை மருந்தின் பிடியில் இருந்து மெதுவாக வெளியில் வந்தவனுக்கு இப்போது தான் கொஞ்சம் நிதானமாகவே யோசிக்கவே முடிந்தது. அவன் இப்படி எல்லாம் நடந்த சம்பவங்களை இணைத்து யோசிக்கவே இல்லை. தானே தப்பு செய்து இருப்பேனோ என்று யோசிக்க வைத்து விட்டார்களே?
கண்களை மூடி திறந்தவன், ஜீவிதனிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்து இருந்தான்.
"கொஞ்ச நாள் முன்னாடி லாவண்யா ஸ்டோர்ஸ் பிரான்ச் ஒன்னுல, ட்ரக் சேல் இன்டைரக்ட்டா நடக்குதுனு ஒரு பையன் ஃபோன் பண்ணி சொன்னான், கொஞ்சம் பதறிட்டேன். நானே இறங்கி உள்ளுக்குள்ள விசாரிச்சேன், உண்மைன்னு தெரிஞ்சுது. என்னையும் மீறி நடக்குதுனு ரொம்ப அப்செட்டா இருந்தேன். அந்த நேரம்தான் ராகவி மேல எல்லாம் எரிஞ்சு விழுந்து கோபமா நடந்துக்கிட்டேன். அவ அன்னைக்கு எனக்கு எதிரா பேச, அது கூட காரணமா இருக்கலாம். வந்தனா கேஸுக்கு முதல் நாள்தான் நேர்லயே பார்த்துட்டு வரலாம்னு அந்த ப்ராஞ்சுக்கு கிளம்பி இருந்தேன்.
தனியா குடோனுக்கு போனோம். ட்ரக் ரிலேட்டட் தின்க்ஸ் எங்க கண்ணுல பட்டுச்சு, பதறியே போய்ட்டேன். அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? இவ்ளோ கேர்லெஸ்ஸா இருந்து இருக்கேன்னு நெஞ்சே வெடிச்சு போச்சு. அப்பா முகத்துல எப்படி முழிப்பேன்னு நினச்சு பயமா இருந்திச்சு. கடையோட பேரும் கெட்டு போயிடும். தீபனுக்கு அழைச்சு விஷயத்தை சொல்ல, அவனும் அங்கே பதறிட்டு வந்து சேர்ந்தான்.
ரிஷி என்கிறவன் தான் இத டீல் பண்ணுறான் அப்படின்னு நானும் தீபனும் விசாரிச்சு கண்டுபிடிச்சோம். அவன் கோபத்துல எங்க பேரை சொன்னா என்ன பண்ணுறதுனு தீபன் கேட்டான். ரொம்ப பயந்துட்டேன். அப்படி அவன் பெயரை சொன்னா, வாழ்க்கை முழுக்க நானுமே ஜெயில்ல தானே இருக்கணும்? இத எப்படி டீல் பண்ணுறதுனு தெரியல. உங்ககிட்ட இத பத்தி பேசணும்னு நினச்சேன். இங்க கிளம்பி வர்றதுக்கு முன்னாடி, அப்படியே பக்கத்து கடைல போய் டீ குடிச்சோம். எனக்கு அவ்ளோ தான் நினைவுல இருக்கு.
காலைல கண் முழிச்சப்போ அந்த லேண்ட் முன்னாடி கார்ல படுத்து கிடந்தேன். நைட் என்ன ஆச்சுன்னே தெரியல. என் ஷேர்ட் திறந்து இருந்திச்சு. தலை வலிச்சுட்டே இருந்திச்சு, தட்டுத் தடுமாறி தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்தனாக்கு இப்படி ஆச்சுன்னே எனக்கு அப்புறம்தான் தெரியும்." என்று சொல்ல, அனைத்தையும் கேட்ட ஜீவிதனோ, "தீபன் எங்க?" என்று கேட்டான்.
"தெரியல..." என்று பதில் வந்தது.
ஜீவிதனோ யோசனையுடனேயே எழுந்து கொண்டான். 'முதல்ல அந்த தீபனை தேடி பிடிக்கணும்...' என்று நினைத்துக் கொண்டு அவனைத் தேட ஆரம்பித்து விட்டான்.
***
இதே கணம், வந்தனா மெலிதாக கண் விழித்து இருந்தாள். வைத்தியசாலையில் இருப்பது தெரிந்தது. உயிருடன் இருக்கின்றாள் என்று நினைத்தவளுக்கு அதிர்ச்சியும் வலியும். மீண்டும் மீண்டும் அவளுக்கு அந்த கோர நினைவுகள் வர சத்தமாக கத்தினாள்.
கத்திய சத்தம் கேட்டு எல்லோரும் அங்கே ஓடிவர கஜனோ, அவள் தோள்களைப் பற்றி எழ வைத்தவன், "வந்தனா ரிலாக்ஸ்...!" என்று சொல்ல, அவளோ வாய் விட்டு கதறிக் கொண்டு, "என்னை எதுக்கு காப்பாத்துனீங்க... கொன்னு இருக்கலாமே..." என்று கேட்க, கஜனோ அவளைப் பரிதாபமாக பார்த்தான். அவள் வலியை அவனால் உணரக் கூடியதாக இருந்தது.
"நீ எதுக்கும்மா சாகணும்?" என்று கேட்க, "என்னால உயிரோட இருக்க முடியாது அண்ணா, என்னை கொன்னுடுங்க..." என்று தலையில் அடித்துக் கொண்டு கதற, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவனுக்கு, அவளை மீட்டு எடுப்பது பெரிய சவால் என்றுதான் தோன்றியது.
அழுது ஓய்ந்து அமர்ந்து இருந்தவளோ, "நான் யாரையும் பார்க்க விரும்பல அண்ணா..." என்று சொன்னாள்.
"அம்மாவை பாரும்மா..." என்றான்.
"இல்ல... அவங்க அழுறத என்னால பார்க்கவே முடியாது..." என்று விம்மி அழுது கொண்டு சொன்னவளிடம், "ஓகே... போலீஸ் உன்கிட்ட விசாரிக்கணும்னு சொன்னாங்க. உன்னோட வாக்குமூலம் ரொம்ப முக்கியம் வந்தனா..." என்றான்.
"ஐயோ! என்னால யாரையும் பார்க்க முடியாதுனு சொல்றேன்ல..." என்று ஆத்திரமாக கத்தியவளிடம், "அர்ஜுன் ஜெயில்ல இருக்கான்." என்று சொன்னான் கஜன் அவசரமாக.
"அர்ஜுனா?" என்று அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, இப்போது அவனுக்கு மனதில் இருந்த ஏதோ ஒரு அழுத்தம் இறங்கிவிட்ட உணர்வு.
அந்த அதிர்ச்சியே அவனுக்கு போதுமானதாக இருந்தது, அர்ஜுன் இதற்கு காரணம் இல்லை என்று அறிவதற்கு.
அவள் கைகளைப் பற்றிக்கொண்டு, "இந்த கேஸுல அவனை தான் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க." என்று சொல்ல, "அர்ஜுன் கார்ல தான் இது நடந்திச்சு. ஆனா அர்ஜுன் பண்ணல..." என்று சொன்னாள்.
அவளை ஆழ்ந்து பார்த்த கஜனோ, "யார் பண்ணுனா?" என்று கேட்க, அவளோ அழுகையுடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
***
சம்பவம் நடந்ததற்கு முதல் நாள் திருமண நிகழ்வுக்கு சென்ற வந்தனா, விஜய்யைப் பார்க்க செல்வதற்காக அர்ஜுனின் காரிற்கு கை காட்டி நிறுத்தி இருந்தாள். ஆனால் அங்கே கார் கண்ணாடியை இறக்கியது என்னவோ தீபன்தான். தீபனுக்கு பக்கத்து சீட்டில் கண்மூடி அமர்ந்து இருந்த அர்ஜுனைப் பார்த்தாள்.
"அவன் தலை வலிக்குதுனு படுத்திருக்கான், எங்கயும் கொண்டு விடணுமா?" என்று கேட்க, "எங்க ஊர் கோவில் பக்கத்துல கொண்டு விடுறீங்களா?" என்று கேட்டாள்.
அவளுக்கு தீபன் மேல் இருக்கும் நம்பிக்கையை விட அர்ஜுன் மேல் நம்பிக்கை இருந்தது. அவனும் உள்ளே தானே இருக்கின்றான், அந்த நம்பிக்கையில் தான் கேட்டாள்.
தீபனின் இதழ்கள் இப்போது குரூரமாக விரிய, "சரி, பின்னாடி ஏறு..." என்று சொல்ல, அவளும் ஏறியபின் தான் திரும்பிப் பார்த்தாள், அவள் அருகே ஒருத்தன் அவளையே ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். கொஞ்சம் பயந்து விட்டாள்.
"நான் ஆட்டோல போறேன் அண்ணா..." என்று அவசரமாக சொல்லிக் கொண்டு இறங்கப் போனவளை, இழுத்துப் பிடித்து இருந்தான் அவள் அருகே இருந்தவன்.
அவன்தான் ரிஷி!
காரும் வேகமாக கிளம்ப அவள் கத்த ஆரம்பித்து விட்டாள்.
ரிஷி ஆஜானுபாகுவான தோற்றம் உடையவன். "கத்தாதே..." என்று திட்டிக் கொண்டு அவள் கைகளைக் கட்டி, அவள் கதற கதற வாயையும் பிளாஸ்டரினால் ஒட்டி விட்டான்.
தீபனோ, "நான் ட்ரைவ் பண்ணுறேன், நீ என்ஜாய் பண்ணுடா..." என்று சொல்ல,
ரிஷியோ, "செம்ம மூட்ல தான் இருக்கேன் தீபன், மாட்டிக்க மாட்டோம்ல?" என்று கேட்டான்.
"வாய்ப்பே இல்லடா... அதுக்கு தான் நம்ம பலி ஆடு இருக்கே..." என்று அருகே மயக்கத்தில் கிடந்த அர்ஜுனைக் கண்களால் காட்டினான்.
"அப்போ நம்ம பிளான்?" என்று கேட்க,
தீபனோ, "ரேப் அண்ட் மர்டர் பண்ண போறது நம்மதான். ஆனா பழி இந்த அர்ஜுன் மேல... இத்தனை நாள் இவன் கண்ணுல மண்ணை தூவிட்டு ட்ரக் டீல் பண்ணுனோம். எவன் போட்டு கொடுத்தான்னு தெர்ல, நாளைக்கு போலீசுக்கு போனா நீயும் நானும் ஜெயிலுக்குள்ள தான் இருக்கணும். இவன் மேல கையையும் வைக்க முடியாது. இவன் செல்வாக்கு அப்படி. நம்மள சீக்கிரம் போலீஸ் கண்டுபிடிச்சிடுவானுங்க.
அதனால இந்த க்ரைம் சீனை பக்காவா ப்ளான் பண்ணி இவனை ஜெயிலுக்குள்ள தள்ளி வாயை அடைக்கணும். என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே இருந்தேன், இந்த மான்குட்டியே வந்து சிக்கிடுச்சு. இவ மேல எனக்கு ஏற்கனவே கண்ணுடா. இன்னைக்கு அனுபவிச்சுட வேண்டியது தான், காண்டம் யூஸ் பண்ணிக்கோ..." என்று ரியர் வியூ மிரர் ஊடாக அவளை மோகமாக பார்த்துக் கொண்டு சொல்ல, வந்தனாவுக்கு குப்பென்று வியர்த்து விட்டது.
கைகள் கட்டப்பட்டு இருக்க, பேச முடியாமல் வாயும் பிளாஸ்டரினால் ஒட்டப்பட்டு இருக்க, அவளால் சத்தம் போடவும் முடியவில்லை.
ரிஷியோ, "இன்ஸ்டன்ட் ஐடியா, கிங் தல நீ...!" என்று சொல்ல, தீபனோ, "மூளை இருக்கிறதால தான் இந்த அர்ஜுன் கண்ணுல இத்தனை நாள் மண்ணை தூவிட்டு இருக்கேன். நடிப்பு திறமையும் மூளையும் இருந்தா இந்த உலகத்தையே ஆளலாம் ரிஷி." என்று சொல்லிக் கொண்டு வண்டியை செலுத்தினான்.
ரிஷியோ அவளை பார்த்துக் கொண்டு புடவையில் கையை வைத்தான். அவளுக்கு கண்ணில் கண்ணீர் வழிந்தது. துடித்தாள், தன்னை விடுவிக்க போராடினாள்.
பயன் இல்லை!
அர்ஜுன் அங்கேதான் இருந்தான், ஆனால் உணர்வின்றி இருந்தான். உணர்வு இருந்து இருந்தால் அவளைக் கண்டிப்பாக காப்பாற்றி இருப்பான். ரிஷி முடிய, தீபன் அவளை வெறியுடன் வேட்டையாடி இருந்தான். இருவரும் போதை பழக்கம் உடையவர்கள் வேறு.
காரையும் நிறுத்தாமல் மாறி மாறி ஓட்டிக் கொண்டு இருந்தார்கள்.
"தல இவன் ஃபோன் அடிச்சுட்டே இருக்கு, அவன் பொண்டாட்டி தான் எடுத்துட்டே இருக்கா" என்று ரிஷி சொல்ல,
"ஐ வில் கால் யூ லேட்டர்னு ஆட்டோமெடிக் மெசேஜை தட்டிவிடுடா..." என்று சொல்லி இருந்தான் தீபன்..
ஒவ்வொரு ஊராக தாண்டி காரும் சென்றது. உள்ளுக்குள் வந்தனாவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. ஒரு இடத்தில் நின்று இருந்தால் கூட சந்தேகம் வந்து இருக்கும். கார்தான் நிற்கவே இல்லையே? வந்தனாவைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு இருந்தவர்கள் கண்ணில், கார் படவே இல்லை.
ஆனால் வண்டியோ எல்லா இடமும் ஓடி முடித்து இருக்க, காருக்குள் அதற்கு ஏற்றது போல எல்லா சாட்சிகளையும் வைத்தவர்கள், அவள் கையைத் தூக்கி அர்ஜுனின் ஷேர்ட்டை கழட்டி, அவன் தோள்பட்டையில் வேறு அழுத்தமாக நகக் கீறலை உருவாக்கிய சமயம், அவளோ உணர்வின்றி இருந்த அர்ஜுனை பார்த்துக் கொண்டே மெதுவாக உணர்விழந்து போனாள்.
அர்ஜுனுக்கு போதை மருந்தை வேறு ஊசி மூலம் ஏற்றியவர்கள், போதை பழக்கம்தான் அவன் இப்படி செய்ய காரணம் என்று, அதற்கான சாட்சியையும் ஏற்படுத்தி இருந்தார்கள். சாட்சி இருக்கும் போது அர்ஜுன் சொல்வது செல்லாது என்று, அவர்களுக்கும் நன்றாக தெரிந்து இருந்தது. அதனால் தான் உறுதியான சாட்சிகளை உருவாக்கி இருந்தார்கள். மழை வேறு அடித்துப் பெய்து கொண்டு இருக்க, இறுதியாக ஊருக்குள் நுழைந்து இருந்தது கார்.
அவளை எங்கே தூக்கிப் போடுவது என்று தெரியவே இல்லை.
ரிஷியோ, "இவள தான் ஆட்கள் தேடிட்டு இருக்காங்க, சிக்கிட்டா என்ன பண்ணுறது தல?" என்று கேட்க,
அவனோ, "இங்க ஒரு பாழடைஞ்ச காணி இருக்கு, நான் இப்போ இருக்கிற வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு. அங்கே ஒரு தண்ணி ஓடை இருக்கு, அதுக்குள்ள போட்டுட்டு காரை காணி முன்னாடி நிறுத்திட்டு, நம்ம காணிக்கு பின்னாடி இருக்கிற வழியால எஸ்கேப் ஆகி வீட்டுக்கு போய், என் காரை எடுத்துட்டு ஊரை விட்டு கிளம்பிடலாம்." என்று சொன்னான்.
"பெரிய ஆள்தான் தலை நீ... செம்ம ப்ளான் பண்ணுற..." என்று சொல்ல, தீபனும் சத்தமாக சிரித்துக் கொண்டான்.
வெற்றுக் காணி அருகே அவர்கள் வண்டி வந்து நின்றது. அவர்கள் அதிர்ஷ்டத்துக்கு அங்கே யாரும் இல்லை.
ரிஷி, வந்தனாவின் மூக்கில் கையை வைத்துப் பார்த்தவன், "இவ செத்துட்டாளா, இல்லையானு தெரியலையே..." என்று சொல்ல, “இப்போ இருக்கிற உயிர் அந்த ஓடைக்குள்ள தூக்கி போட்டதும் மொத்தமா போயிடும். இப்போ அவளை கொன்னுட்டு இருக்க நேரம் இல்லை. எல்லா இடமும் இவளை தேடுறாங்க. நல்லவேளை இங்க ஆட்கள் இல்லை, சீக்கிரம் அவளை தூக்கி போட்டுட்டு ஓடிடலாம், வா." என்று சொன்னவன்,
ரிஷியுடன் சேர்ந்து அவளைத் தூக்கிக் கொண்டு அங்கே வெட்டப்பட்டு இருந்த ஓடைக்குள் போட்டுவிட்டு, அங்கிருந்து குறுக்குவழியில் தப்பி ஓடி இருந்தார்கள். அர்ஜுனையும் காரையும் அங்கேயே நிறுத்திவிட்டு சென்று இருந்தார்கள்.
உணர்விழந்து இருந்த பெண்ணவளோ, ஓடும் சேற்று நீரினுள் புதைந்து இறந்து விடுவாள் என்று ரிஷியும் தீபனும் நினைத்து இருக்க, அவளோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தாள். காலையில் எழுந்த அர்ஜுனுக்கு எதுவும் தெரியவில்லை. அவனுக்கு நிதானமும் இருக்கவில்லை. தனது கார் நின்று இருந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு, திறந்து இருந்த ஷேர்ட்டை மூடியவன், காரை ஓட்டிக் கொண்டு வீட்டுக்கும் வந்து விட்டான்.
ஆனால் அங்கே அவன் கார் நின்றதை நிறைய பேர் பார்த்து இருக்க, விசாரித்த ஜீவிதனும் அவனைப் பிடித்துக் கொள்ள, அதற்கு சாட்சியாக அவன் மனைவி ராகவியே வந்தனாவின் ஜிமிக்கியுடன் வந்து நின்றுவிட்டாள்.
***
அனைத்தையும் கஜனிடம் சொல்லி முடித்து இருந்தாள் வந்தனா.
நடந்ததை அழுதுகொண்டு சொன்னவளை ஆழ்ந்து பார்த்து அவள் கையைப் பற்றிய கஜனோ, "அவனுங்கள என்ன பண்ணணும்?" என்றுதான் கேட்டான்.
இதே கேள்வியை காந்தாரி விஷயத்தில் சக்திவேல் கஜனிடம் கேட்டு இருந்தான். இப்போது அதையே கஜன் வந்தனாவிடம் கேட்க, "கொன்னுடுங்க அண்ணா... அவனுங்க எல்லாம் உயிரோட இருக்கவே கூடாது..." என்றுதான் அவள் பதில் வந்தது.
அவளையே பார்த்து இருந்தவன் பெருமூச்சுடன் எழுந்து நின்று அங்கே வந்த சுகானாவிடம், "கொஞ்சம் பார்த்துக்கோ, யாரையும் உள்ளே விடாதே... அவ ரிலாக்ஸா இருக்கட்டும்." என்று சொல்ல,
சுகானாவும், "ஓகே" என்று சொல்லிக் கொண்டு வந்தனா அருகே அமர்ந்து கொண்டாள்.
இப்போது வெளியே வந்த கஜன் அழைத்தது என்னவோ விஜய்க்கு தான்.
"விஜய், ஒரு வேலை பண்ணணும்." என்று விஷயத்தை சொல்ல, ஏற்கனவே வந்தனா விஷயத்தில் கொதித்துப் போய் இருந்த விஜய்யோ, "சரி அண்ணன்..." என்று குரல் தழுதழுக்க சொல்லிவிட்டு வைத்தான்.
***
அன்று முழுவதும் தீபனைத் தேடி களைத்துப் போன ஜீவிதன் தூங்க சென்று இருக்க, அதிகாலையில் அவன் அலைபேசி அலறியது.
பதறி எழுந்தவன் அதனை எடுத்து காதில் வைக்க, "சார், நம்ம ஊர் ஆலமரத்துல ரெண்டு பேர் தூக்கு மாட்டி இறந்து இருக்காங்க..." என்று சொன்னதுமே, "வர்றேன்" என்று சொல்லிவிட்டு டீஷேர்ட்டை அணிந்தவன், ஜீப்பை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து இருந்தான்.
ஜீப்பை நிறுத்திவிட்டு விழிகளை உயர்த்திப் பார்த்தான். தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தது வேறு யாருமல்ல, தீபனும் ரிஷியும் தான்.
அவன் அருகே ஓடி வந்த சப் இன்ஸ்பெக்டரோ, "இது அவனுங்க ஃபோன்ல இருந்த வீடியோ சார்..." என்று சொல்லி காட்ட, அதில் இருவரும் தாங்கள் செய்த தவறு எல்லாம் வாக்குமூலமாக பதிவு செய்து இருந்தார்கள். அவன் விழிகள் இடுங்கியது. அவர்கள் பேசும் போது குரலில் நடுக்கம் தெரிந்தது.
அதனை பார்த்துக் கொண்டு இடையில் கையை வைத்து, இரு உடல்களையும் பார்த்தவன், "பாடியை இறக்க ஏற்பாடு பண்ணுங்க." என்று, அங்கே நடந்து திரிந்து விழிகளை சுழல விட்டவன் கண்ணில், சருகுகள் நடுவே தங்க நிறத்தில் ஏதோ ஒன்று மின்னுவது போல தெரிந்தது.
பாக்கெட்டில் இருந்த கர்சீஃபை எடுத்தவன் குனிந்து அதனை எடுத்து பார்த்தான். இப்போது அவன் விழிகள் அதிர்ந்து விரிந்து கொண்டன.
***
இதே சமயம், முகத்தை அடித்துக் கழுவிய கஜனோ, பாத்ரூமில் இருக்கும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு, "ப்ச்!" என்று சலித்தபடி மணிக்கட்டை வருடிக் கொண்டான். அவன் கையில் இருந்த கஜன், பல்லவி என்கின்ற ப்ரேஸ்லெட் காணாமல் போய் இருந்தது. அவன் திருமணத்துக்கு நேத்ரா அணிவித்த ப்ரேஸ்லெட் அது.
நெற்றியை நீவிக் கொண்டு வெளியே வந்தவன் விழிகள், அங்கே நின்ற பல்லவியில் படிய, அவள் அருகே வந்தான்.
அவனைப் புரியாமல் அவள் பார்க்க, அவளை சட்டென இறுக அணைத்துக் கொண்டு, "நான் இல்லாத நேரத்துல இந்த குடும்பத்தை நீதான் பார்த்துக்கணும் பல்லவி." என்று சொல்ல,
அவன் அணைப்பில் அதிர்ந்து இருந்தவளுக்கு, இப்போது அவன் சொன்னதைக் கேட்டதுமே உயிரே போய்விட்ட உணர்வு.
"எங்க போக போறீங்க?" என்று அவசரமாக கேட்டாள்.
எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு மெதுவாக பிரிந்து நின்றவன், தனது கையைத் தூக்கிக் காட்டி, "இந்த கையால ரெண்டு கொலை பண்ணிட்டேன் பல்லவி. எத்தனையோ உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து இருக்கேன். முதல் தடவை ரெண்டு கொலை பண்ணிட்டு வந்து நிக்கிறேன். அர்ஜுன் தப்பு பண்ணல, தப்பு பண்ணுனது தீபனும் ரிஷியும். வந்தனாவை சீரழிச்சவனுங்கள கொன்னுட்டு வந்து இருக்கேன்.
என்னோட ப்ரேஸ்லெட் அங்கே விழுந்திடுச்சு. இப்போ தான் கவனிச்சேன். எப்போ வேணும்னாலும் அரெஸ்ட் ஆகலாம்..." என்று சொன்னதுமே, நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, அவனை அதிர்ந்து பார்த்த பெண்ணவளோ இரண்டடி பின்னால் சென்றாள்.