நிலவு 67
கோர்ட் அனுமதியுடன் அர்ஜுன் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருந்தான்.
"ஏதாவது வாயை திறந்து சொல்லு அர்ஜுன்..." என்று ஜீவிதன் சொல்ல, "எனக்கு எதுவுமே தெரியல..." என்றுதான் பதில் வந்தது.
இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்த ஜீவிதனோ, "நீங்களே பாருங்க..." என்று அங்கிருந்த ஏனைய போலீஸ்காரர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து நிற்க, அர்ஜுனை முட்டி போட வைத்து லத்தியால் முதுகில் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அவன் வலி தாங்க முடியாமல் கத்தும் சத்தம், வெளியே வந்து நின்ற ஜீவிதனுக்கு கேட்டது.
"ப்ச்!" என்று சொல்லிக் கொண்டு கழுத்தை வருடிக் கொண்டான்.
அவன் தவறு செய்து இருக்கின்றான் என்று உறுதியாக தெரிந்தால், இந்த வலி ஜீவிதனுக்கு வந்து இருக்காது. அவன் பேச்சில் இருந்தே ஏதோ ஒன்று, தவறாக சென்று கொண்டு இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.
ஜீவிதன் அருகே வந்து நின்ற சப் இன்ஸ்பெக்டரோ, "என்ன சார், மச்சான் என்கிறதால கரிசனமா?" என்று கேட்க, "வாட்?" என்று ஜீவிதன் அதிர்ந்து கேட்டான்.
"அடுத்தவங்களை நீங்க இப்படி சாஃப்ட்டா விசாரிக்க மாட்டிங்களே? ரேப் கேஸ் சார்... எனக்கும் அந்த வயசுல பொண்ணு இருக்கு. இவனுக்கு எல்லாம் சலுகை வேணாம், தப்பான உதாரணம் ஆயிடும். அடிச்சு விசாரிங்க, உண்மையை சொல்லுவான்." என்று சொல்ல, ஜீவிதனுக்கு நெஞ்சில் ஆணி அடித்த உணர்வு.
அர்ஜுனுக்கு உண்மையாகவே எதுவும் தெரியவில்லை என்று அவன் பேச்சில் இருந்தே தெரிந்து விட்டது. அதனை ஒரு போலீஸ்காரனாக இங்கே இருப்பவர்களிடம் சொல்ல முடியாது.
"நான் ஒன்னும் சலுகை கொடுக்கல." என்று அழுத்தமாக சொல்லி, மணிக்கட்டில் இருந்த ஐம்பொன் காப்பை இறக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே நின்றவனிடம் லத்தியை வங்கியது மட்டும்தான் தெரியும்.
அர்ஜுன் அடிக்குரலில் அலறியது, வாசலில் நின்ற சப் இன்ஸ்பெக்டருக்கு கேட்க, “இததான் சார் உங்ககிட்ட எதிர்பார்த்தேன். ரேப் பண்ணுனவன் நிம்மதியா இருக்கவே கூடாது.” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார் அவர்.
அடித்த ஜீவிதனுக்கே கை வலித்து இருக்க வேண்டும். லத்தியை தூக்கி எறிந்தவன், அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்து, முடியைப் பிடித்து தலையை நிமிர்த்தி அவன் விழிகளைப் பார்த்து, "ஏதாவது சொல்லுடா..." என்றான்.
குரல் மொத்தமாக உடைந்து விட்டது. இப்படி போட்டு அடித்து இருக்கின்றானே? மனசே கேட்கவில்லை. அவனுக்கு எதுவும் நினைவில இல்லை என்று தெரிந்தும் அடித்து இருக்கின்றான். ஒரு வார்த்தை இந்த கேஸை பற்றி ஆழமாக ஆராய கிடைக்காதா என்கின்ற நப்பாசையில் கேட்க,
"எனக்கு எதுவுமே நினைவுக்கு வருது இல்ல சார்..." என்று சொல்லிக் கொண்டே அப்படியே கண்கள் சொருக, கீழே மயங்கி விழுந்து இருந்தான் அர்ஜுன்.
இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்தவனின் விழிகள், அவன் வெண்ணிற மேனியில் இருந்த லத்தியின் தடங்களில் பரிதாபமாக படிந்து மீண்டது. அவனை ஆழ்ந்து பார்த்துவிட்டு வெளியே வந்த ஜீவிதனோ,
"மயங்கிட்டான்... என்னன்னு பாருங்க, நான் வீட்டுக்கு கிளம்புறேன். காலைல வந்து பார்க்கிறேன்." என்று சொல்லிக் கொண்டு ஜீப்பில் ஏறியவன் நேத்ராவுக்கு தான் அழைத்தான். அவள் சக்திவேலின் குடும்பத்துடன் தான் நின்று இருந்தாள்.
அவளும் அலைபேசியை எடுத்து காதில் வைக்க, "வீட்டுக்கு வர்றியா? இல்ல, அங்கேயே நிற்க போறியா?" என்று கேட்டான்.
"இங்கேயே நிக்கிறேன் ஜீவிதன்." என்று விம்மலுடன் அவள் பதில் வர, அவனும் ஜீப்பை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான். அவன் நேரே சென்றது என்னவோ கஜனிடம்தான்.
கஜனும் அவனை ஏறிட்டுப் பார்த்து முன்னே இருக்கும் இருக்கையில் அமர சொல்ல,
அதில் அமர்ந்தவனோ, "அர்ஜுன்கிட்ட விசாரிச்சோம், ஆனா அவனுக்கு எதுவும் தெரியல." என்றான்.
கஜனின் புருவம் சுருங்க, "அவன் கார்ல ட்ரக் இன்ஜெக்ஷன் இருந்திச்சு. அவன் இன்னுமே நிதானத்துக்கு வரல. அவன் மைண்ட் பிளாங்க்கா இருக்கு. வந்தனா விஷயம் அவனோட தப்பா இருந்தா, கண்டிப்பா அது நிதானத்துல நடந்த விஷயமா இருக்காது." என்று சொல்ல,
கஜனோ, "அவன் பண்ணி இருக்க மாட்டான்னு என் மனசு சொல்லிட்டே இருக்கு ஜீவிதன். ஏன் அப்படி தோனிட்டே இருக்குன்னு தெரியல. இத்தன சாட்சியும் அவனுக்கு எதிரா இருந்தாலும், அவன் பண்ணி இருக்க மாட்டான்னு தோனுது." என்றான்.
ஜீவிதனோ பெருமூச்சுடன், "அவன் பிளட் சாம்பிள் தொடக்கம், வந்தனா நகத்துல இருந்த ஸ்கின் வரை, எல்லாமே ஃபாரென்ஸீக் ரிப்போர்டுக்கு அனுப்பி இருக்கோம். என்ன ஆச்சுன்னு வந்தனா சொன்னாதான் அது ஸ்ட்ராங் எவிடென்ஸா இருக்கும்." என்று சொல்ல,
"அவ ஓகே ஆகுறதுக்கு எப்படியும் நிறைய நாள் ஆகும்." என்று சொல்ல, "ம்ம்..." என்று சொன்னவனோ ஒரு கை குலுக்கலுடன் கிளம்பி விட்டான்.
சக்திவேல் உட்பட எல்லோரும் வீட்டுக்கு கிளம்பி இருந்தார்கள். ஹாஸ்பிடலில் விஜயாவும் தயாளனும் நின்று இருக்க, அங்கே ராம், சுகானா மற்றும் கஜன் ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருந்தார்கள். விஜயாவோ வந்தனா இருக்கும் அறைக்குள் நுழைந்தாள். மருத்துவ உபகரணங்கள் நடுவே உணர்வின்றி இருந்தாள் பெண்ணவள்.
அவளைக் கண்டதுமே மனம் வலிக்க, "இவ என்ன பாவம் பண்ணுனா? இப்படி கடவுள் தண்டிக்கிறாரே..." என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கதற, அவளை நெஞ்சுடன் அணைத்துக் கொண்ட கஜனோ, "சித்தி..." என்று சொல்லிக் கொண்டான்.
"இவனை இந்த நிலைக்கு ஆளாக்கினவன் உயிரோடவே இருக்க கூடாது..." என்று விம்மி வெடித்துக் கதறியவள், "உன் மச்சான் என்கிறதால காப்பாத்திடுவியா கஜன்?" என்று கேட்க,
அவனோ இல்லை என்று அழுத்தமாக தலையாட்டியவன், "அவன் தான் குற்றவாளினு கண்டிப்பா தெரிஞ்சா, தண்டனை நானே கொடுப்பேன் சித்தி." என்று சொல்ல, விஜயாவும் அழுகையுடன் வெளியேறி இருந்தாள்.
***
சக்திவேல் வீட்டில் யாருக்கும் உயிர்ப்பே இல்லை. சமைக்கவே இல்லை. வீட்டின் மூலையில் ஒவ்வொருவரும் சோகமாக அமர்ந்து இருந்தார்கள். சக்திவேலின் மடியில் அழுகையுடன் படுத்து இருந்தாள் ராகவி.
அப்போது கஜனும் வீட்டினுள் நுழைந்தவன் யாரையும் பார்க்காமல் அறைக்குள் நுழைய, அவளோ குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவன் அவளை ஒரு பார்வையுடன் கடந்து குளியலறைக்குள் சென்று விட்டான். என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. வார்த்தைகள் மௌனமாகி விட்டன. வீட்டின் ஆணிவேரே ஆடிப் போய் இருந்த தருணம் அது. பல்லவியும் குழந்தையைத் தூங்க வைத்து விட்டு வெளியே வந்து பார்த்தாள். யாருக்கும் சாப்பிடும் எண்ணம் இல்லை போலும். காலையில் இருந்தே சாப்பிடவில்லை. அனைவரையும் பார்த்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தவள், சமைக்க ஆரம்பித்து விட்டாள்.
துளசியும் ஜெயந்தியும் சாமி அறைக்குள்ளேயே கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்கள். சமைக்கும் போதே பல்லவிக்கு கண்ணீர் வழிந்தது. அழுதுகொண்டு சமைத்து முடித்தவள், கண்ணீரை துடைத்துக் கொண்டு ஹாலுக்குள் வந்து, "யாருக்குமே சாப்பிடுற எண்ணம் இல்லையா?" என்று கேட்டாள். பதில்கூட சொல்ல யாருக்கும் தெம்பில்லை.
வேகமாக ராகவி அருகே வந்தவள், "சாப்பிடு ராகவி, நீதான் முக்கியமா சாப்பிடணும். வயித்தில குழந்தைய வச்சிட்டு இப்படி பட்டினி கிடக்கலாமா?" என்று கேட்க,
அவளை ஏறிட்டுப் பார்த்து எழுந்து அமர்ந்தவளோ, "உங்க தம்பி குழந்தை என்கிறதால அக்கறையா கேக்கிறீங்களா?" என்றாளே பார்க்கலாம்.
"ராகவி!" என்ற அதட்டல் சக்திவேலிடம் இருந்து வந்தது.
"முடியலப்பா... நானும் பேச கூடாதுனு பார்க்கிறேன். ஆனா இவங்கள பார்க்கும் போதே அந்த நாயோட நினைப்பு தானே வருது. இவங்க அண்ணாவை கல்யாணம் பண்ணி இருக்கலன்னா, அர்ஜுன் என்கிற அத்தியாயமே இங்க இருந்து இருக்காது. நம்ம எல்லாரும் நிம்மதியா இருந்து இருப்போம், எல்லாத்துக்கும் இவங்க தானே காரணம்..." என்று சொல்ல,
"ராகவி!" என்று ஒரு அதட்டலுடன் வந்து அங்கே நின்று இருந்தான் கஜன்.
அவனைத் திரும்பி பார்த்த பல்லவி பேச வேண்டாம் என்கின்ற தோரணையில் தலையாட்ட ராகவியும், "பொண்டாட்டியை சொன்னதுமே கோபம் வருதுல? அப்போ என்னை பத்தியோ, வந்தனாவை பத்தியோ கொஞ்சமும் யோசிக்க தோனலைல? ரெண்டு பேரோட வாழ்க்கையை அவன் அழிச்சு இருக்கான். நான் எப்படி இருக்கேன்னு பாருங்க அண்ணா...
படிக்கிற வயசு அண்ணா எனக்கு. என்னை படிக்க கூட விடல, மிரட்டி மிரட்டியே எல்லாமே சாதிச்சிட்டான். இருபது வயசுல வாழ்க்கையை இழந்துட்டு வயித்துல குழந்தையோட நிக்கிறேன்..." என்று தனது மேடிட்ட வயிற்றைப் பார்த்துக் கொண்டு சொன்னவள் முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள்.
கஜனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மனவலியில் அழும் பெண்ணுக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்?
அவள் கையைப் பற்றிய பல்லவி, "நீ எனக்கு என்ன வேணும்னாலும் திட்டிக்கோ, வந்து சாப்பிடு." என்று சொல்ல, அவளுக்கே, தான் அதிகமாக பல்லவியை காயப்படுத்திக் கொண்டு இருக்கின்றோமோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.
பல்லவி மாறி பேசி இருந்தால் விவாதம் ஆகிருக்கும். முதிர்ச்சியாக அவளை அணுகும் போது ராகவிக்கு மனம் பிசைய பல்லவியை ஏறிட்டுப் பார்த்தவள், "என்னை மன்னிச்சிடுங்க அண்ணி... என்னால முடியல... நான் பேசுறது தப்புன்னு தெரியும். ஆனா எனக்கு வலிக்குது. இந்த கோபத்தை யார் மேல காட்டுறதுன்னு தெரியல..." என்று அழ,
அவளை அணைத்த பல்லவி அவள் முதுகை மெதுவாக வருடிக் கொண்டு, அவளையே பார்த்து இருந்த சக்திவேலைப் பார்த்தவள், "சாப்பிட வாங்க மாமா, நீங்க கூப்பிட்டா தான் எல்லோரும் வருவாங்க." என்று சொல்ல,
அவனும் எழுந்தவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்து விட்டான். யாருக்கும் உணவு இறங்கவே இல்லை. கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தார்கள்.
கஜன் மீண்டும் ஹாஸ்பிடல் கிளம்பிவிட, அன்று இரவு யாருக்கும் தூக்கம் இல்லை. விஜய் மூலம் ஜெகதீஷை தூக்கி இருந்தான் கஜன். அவன் அறிந்து ஊரில் அவனுக்கு எதிராக பேசக் கூடிய ஒருத்தன் ஜெகதீஷ் தான்.
அவனும் இப்போதெல்லாம் எதுவும் கஜனுக்கு எதிராக செய்வது இல்லை. ஆனாலும் அவன் மீது சின்ன சந்தேகம் இருக்க, அவனை தூக்கி இருந்தான். அவனோ கஜனின் காலிலேயே விழுந்து விட்டான்.
"என் பொண்டாட்டிக்கு நீதான் பிரசவம் பார்த்த கஜன். நன்றி இல்லாம நான் நடக்க மாட்டேன். அறியா வயசுல ஏதோ பண்ணி இருக்கேன். இப்போ நான் அப்படி இல்ல..." என்று கெஞ்சினான்.
அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்தான் கஜன். உண்மையாக தான் கெஞ்சுகின்றான். ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்யவும் கஜனுக்கு இஷ்டம் இல்லை. குற்றவாளியைத் தண்டிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நிரபராதியை தண்டிக்க கூடாது என்று நினைத்து விட்டான்.
அங்கே நின்ற விஜய்யிடம், "இவனை அவிழ்த்து விடு..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அர்ஜுன் இதனை செய்யவில்லை என்று மட்டும் கஜனுக்கு உறுதியாக தெரிந்தது. அவன் உள்மனம் அதனையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தது. அவன் ராகவியைக் காதலாக பார்க்கும் பார்வையைக் கண்டு இருக்கின்றான். அவளுக்காக அவனிடம் உண்டான மாற்றங்களைக் கண்கூடாக பார்த்து இருக்கின்றான். முரட்டுத்தனமான அவனை, இந்த காதல் மென்மையாக மாற்றிக் கொண்டு இருந்தது அவனுக்கும் புரிந்தது. அப்படிப் பட்டவன் இதனை நிதானத்தில் செய்து இருக்க மாட்டான் என்று ஆழமாக நம்பினான். ஆனால் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலைதான்.
நாட்கள் மெதுவாக நகர்ந்தன. வந்தனாவுக்கு சுய உணர்வு வரவே இல்லை. அர்ஜுனும் அதுவரை ஜெயிலுக்குள் இருக்க வேண்டிய நிலைதான். சக்திவேல் வீட்டினர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாகிக் கொண்டு இருந்தார்கள்.
ஜெயிலில் இருந்த அர்ஜுன் முன்னே வந்து அமர்ந்த ஜீவிதனோ, "உன் பிளட்ல ட்ரக் இருக்குன்னு ரிப்போர்ட் வந்து இருக்கு..." என்று சொல்ல, மொத்தமாக உடைந்து விட்டான் அர்ஜுன்.
தலையைத் தாழ்த்தி இதழ் கடித்து அழுகையை அடக்க முயன்றான், முடியவில்லை. கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அழுகின்றான் என்று ஜீவிதனுக்கு தெரிந்தது.
"அர்ஜுன்..." என்று அழைக்க, "நான்தான் நிதானம் இல்லாம ஏதும் பண்ணி இருக்கேன் போல... என்னை கொன்னுடுங்க சார்... நான் எல்லாம் வாழ தகுதியே இல்லை" என்றான்.
அவனையே பரிதாபமாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் ஜீவிதன்.