நிலவு 66
அவன் கேட்டதுமே அர்ஜுனோ சட்டென ஒரு கணம் அதிர்ந்து பின் தன்னை நிதானப்படுத்த முயற்சித்தபடி, "எனக்கு... எனக்கு..." என்று தடுமாறினான். என்ன சொல்வது என்று தெரியவில்லை. வாயில் வார்த்தைகள் வர மறுத்தன. எல்லாவற்றையும் உடைத்துப் பேசுபவன் அவன்... இப்போது பேசக் கூட முடியவில்லை...ராகவியோ தனது கையில் இருந்த ஜிமிக்கியை தூக்கி வெறித்துப் பார்த்து விட்டு, அருகே அதிர்ந்து நின்ற பல்லவியைப் பார்த்தவள், "இது வந்தானாவோடதா?" என்று கேட்டாள். குரலில் அழுகையுடன் வலி சேர்ந்து இருந்தது. பல்லவி இல்லை என்று சொல்லி விட வேண்டும் என்கின்ற வேண்டுதல் அவளுக்குள்.
ஆனால் கடவுளுக்கு அவள் மீது கொஞ்சம் கூட இரக்கம் இல்லை போலும்...
அந்த ஜிமிக்கியை அதிர்ந்து பார்த்த பல்லவியோ, "ஆமா... இது நான் நேத்து செலக்ட் பண்ணி கொடுத்தது. உனக்கு எப்படி கிடைச்சது?" என்று கேட்டதுமே, ராகவியின் உயிர் அந்த இடத்தில் இருந்து மொத்தமாக நீங்கிவிட்ட உணர்வு. கண்ணில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது. அவள் இதயத்தை யாரோ உயிருடன் பிடுங்கி எடுத்த உணர்வு தான் அவளுக்கு இப்போது.
அப்படியே திரும்பி பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டு இருந்த அர்ஜுனைப் பார்த்தவள், "நீயெல்லாம் மனுஷன் தானா?" என்று சத்தமாக கேட்டாள். அந்த இடமே அதிரும் வகையில் கேட்டாள். எல்லோரும் ஒருங்கே அவளை தான் திரும்பிப் பார்த்தார்கள். யாருக்கும் எதுவும் புரியவில்லை.
"ராகவி என்னாச்சு?" என்று அங்கே நின்றவர்கள் கேட்க, "இன்னும் என்ன ஆகணும்? எல்லாம் பண்ணுனது இவன்தான். இந்த நாய்தான்... இந்த ஜிமிக்கி அவன் கார்ல இருந்து காலைல தான் எடுத்தேன். அவன் தோள்பட்டைல கூட நகம் கீறி இருக்கு. அவன் நேத்து முழுக்க வீட்டுக்கு வரவே இல்லை. வந்தனாவை நாசமாக்குனது இவன்தான்... எல்லாம் பண்ணிட்டு வந்து எதுவும் தெரியாத போல நிக்குறான்..." என்று ஆக்ரோஷமாக, சத்தமாக கத்தினாள். அவள் வலி, வேதனை எல்லாமே அவள் கோபத்துடன் சேர்ந்து வெளிப்பட்டு இருந்தது.
ராகவி சொன்னதைக் கேட்டதுமே, பார்த்தீபன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். பல்லவிக்கு நெஞ்சே அடைத்து விட்டது.
"ராகவி முதல்ல விசாரிக்கணும்..." என்று பல்லவி அவசரமாக சொல்ல, "என்ன விசாரிக்க போறீங்க? உங்க தம்பி ஒன்னும் உத்தமன் இல்லை, அவனை நான் காதலிக்கவும் இல்லை. அவன் எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு உங்களுக்கு தெரியுமா? மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
அவன் ஃபிரெண்ட்ஸ் முன்னாடி கிஸ் பண்ணி, அத ஃபோட்டோ எடுத்து, போஸ்டர் அடிப்பேன்னு மிரட்டினான். வந்தனாவை ரேப் பண்ணுவேன்னு மிரட்டினான். பச்சை பொறுக்கி அவன்... என்னை வலுக்கட்டாயப்படுத்தி தான் ஒன்னா இருந்தான். உங்க தம்பி ஒன்னும் உத்தமன் இல்லை.
இந்த குற்றத்தை செய்யுற அளவுக்கு கொடூரமானவன் தான். இவன் செத்து போனா கூட எனக்கு சந்தோசம் தான்... இவன் இந்த பூமிக்கே பாரம்" என்று அழுத்தமாகவும் ஆக்ரோஷமாகவும் சொல்லிக் கொண்டே, கழுத்தில் அவன் கட்டியை தாலியை கழட்டி அவன் முகத்திலேயே வீசி இருந்தாள் பெண்ணவள்... அவளை அதிர்ந்து பார்த்தான் அர்ஜுன்.
அவன் விழிகளில் உயிர்ப்பு மொத்தமாக தொலைந்து இருந்தது. அவனால் மூச்செடுக்க கூட முடியவில்லை. அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். இவ்வளவு சொல்லியும் சக்திவேல் அமைதியாக இருப்பானா? அவனைக் கொன்றுவிடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும்? மனைவியே அவனைப் பற்றி மோசமாக சொல்லி இருக்கும் போது, அவன் பக்கம் யார் நின்றுவிட முடியும்? அவன் மீது இருந்த அடிப்படை நம்பிக்கையே மொத்தமாக அறுந்து விட்டதே...
வேகமாக அவனை நோக்கி வர முதல், அவன் ஷேர்ட்டை பிடித்து செருப்பைக் கழட்டி அடித்து இருந்தது வேறு யாருமல்ல, பைரவிதான். அவள் கண்களில் அழுகை, வேதனை, வலி, ஏமாற்றம் என்று எத்தனையோ உணர்வுகள்...
அவனோ, "அம்மா..." என்று அதிர்ந்து அழைத்தவனுக்கு நிதானம் கொஞ்சமும் இல்லை. ஏற்கனவே நிதானம் இல்லாமல் இருந்தவன், இப்போது மொத்தமாக நிதானமிழந்து போனான்.
"என்னடா அம்மா? நீ எல்லாம் எதுக்கு என் வயித்துல வந்து பிறந்த? செத்துப் போ... உன்னை பெத்ததுக்கு என்னை நானே கொளுத்தி இருக்கணும். அந்த மனுஷன பாருடா..." என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்த பார்த்தீபனை காட்டினாள்.
"அத்தை, நான் பார்த்துக்கிறேன்..." என்று சொன்ன ஜீவிதன், பைரவியை விலக்கி நிறுத்த,
பைரவியைப் பார்த்துவிட்டு ஜீவிதனைப் பார்த்த பார்த்தீபன், "ஜீவிதன், இத்தனை நாள் அவனை காப்பாத்த சொல்லி நான் எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன். இன்னைக்கு சொல்றேன், இவனை கொன்னுடு... எனக்கு இப்படி ஒருத்தன் புள்ளையா வேணாம்..." என்று கஷ்டப்பட்டு மூச்சு வாங்கியபடி சொன்னவன், அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்து இருக்க, "சம்மந்தி..." என்று சக்திவேல் தான் அவனை நோக்கி முதலில் ஓடிச் சென்றான்.
அர்ஜுன் மட்டும் இக்கணம் சக்திவேல் கையில் அகப்பட்டு இருந்தால், அவன் இருந்த கோபத்துக்கு, அர்ஜுனின் உயிர் கூட எஞ்சி இருக்காது...
பார்த்தீபன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்ததால், சக்திவேலின் கவனம் பார்த்தீபனில் திரும்பி விட்டது.
அர்ஜுன் செய்த தவறுக்கு பார்த்தீபனை தண்டிக்கும் அளவுக்கு குறுகிய மனப்பான்மை சக்திவேலுக்கு இல்லை...
அதனைத் தொடர்ந்து எல்லோரும் பார்த்தீபன் அருகே செல்ல, சத்தம் கேட்டு வேகமாக வெளிய வந்த கஜனோ, "என்னாச்சு? இங்க என்ன நடக்குது?" என்று கேட்டான்.
அங்கே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பார்த்தீபன் மயங்கி சரிந்த காட்சியைக் கண்டவன், வேகமாக வந்து அவன் ஷேர்ட்டை கழட்டி நெஞ்சில் இரு கைகளையும் வைத்து, தொடர்ச்சியாக அழுத்தி முதலுதவி கொடுக்க பார்த்தீபனுக்கு மெதுவாக உணர்வு வந்தது.
அவனை அங்கே வந்த ஸ்ட்ரெச்சரில் ஏற்றியவனோ, "சீக்கிரம் ட்ரீட்மெண்ட் கொடுங்க..." என்று சொல்லிவிட்டு திரும்பிய கணம்,
அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்ட ராகவி, "வந்தனாவை நாசம் பண்ணுனது இவன்தான் அண்ணா, இவனை கொன்னுடுங்க..." என்று கையை நீட்டி அர்ஜுனைக் காட்ட, கஜனுக்கு தூக்கிவாரிப் போட்டது. பேச்சும் வர மறுத்தது.
கஜனோ அர்ஜுனின் விழிகளைத் தான் இப்போது பார்த்தான். அவன் விழிகள் ராகவியையே அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தன. என்னவெல்லாம் பேசுகின்றாள், என்கின்ற எண்ணம்தான் அவனுக்கு.
ஜீவிதனோ வேகமாக ராகவியின் அருகே வந்தவன், "அந்த ஜிமிக்கியை கொடு." என்று சொல்ல,
அவளும் அந்த ஜிமிக்கியை அவனிடம் நீட்ட, அதனை வாங்கிக் கொண்டு அர்ஜுன் அருகே வர, "உங்க மச்சான் என்கிறதுக்காக காப்பாத்தி விட்றாதீங்க. கடவுள்கூட உங்கள அப்புறம் மன்னிக்க மாட்டார்..." என்றாள் அழுகையுடன் ராகவி.
கஜன் எதுவுமே பேசவில்லை. அர்ஜுனை அதிர்ந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். இவனா இப்படி செய்தான் என்கின்ற எண்ணம்தான் அவனுக்கு. அர்ஜுன் இதனை செய்து இருக்க மாட்டான் என்று, அவன் ஆழ்மனம் இப்போதும் சொல்லிக் கொண்டு இருந்தது. அர்ஜுன் மீது கோபம் வந்தாலும் நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்று இருந்தான். அர்ஜுன் தவறு செய்து இருப்பது நிரூபிக்கப்பட்டு மட்டும் விட்டால் அவனை உயிருடன் கொளுத்தி விடுவான் கஜன்...
ஆனால் அடுத்தவர்கள் போல ஒழுங்காக விசாரிக்காமல் அர்ஜுன் மீது இவ்வளவு பெரிய பழியை தூக்கிப் போட கஜனுக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை...
இது ஒன்றும் பொய் சொல்வது போன்ற சின்ன தவறு இல்லையே...
கற்பழிப்பு, கொலை முயற்சி என்று எந்தப் பெரிய குற்றம்...
வந்தனா விஷயத்தில் ஏற்கனவே வலியில் துடித்துக் கொண்டு இருந்தவனுக்கு இப்போது இன்னுமே வலித்தது... நடப்பதை மௌனமாகவே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.
ராகவியைத் திரும்பிப் பார்த்த ஜீவிதனும், "கண்டிப்பா காப்பாத்த மாட்டேன் ராகவி." என்று அர்ஜுனை ஆழ்ந்து பார்த்தவன், "இது எப்படிடா உன் கார்ல வந்திச்சு?" என்று கேட்க,
அர்ஜுனோ, "எனக்கு தெரியல..." என்று ஆரம்பிக்க, "என்னடா தெரியல...? காலைல நீ வந்தனாவை தூக்கி போட்ட லேண்ட் முன்னாடி கார்ல நின்னு இருக்க. இந்த ஜிமிக்கி உன் கார்ல இருந்து இருக்கு. எப்படி உனக்கு தெரியாம இருக்கும்? உண்மையை சொல்லிடு அர்ஜுன், அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்." என்றான்.
அர்ஜுனோ அவனை அடிபட்ட பார்வை பார்த்தவன், "நீயுமா என்னை நம்பல?" என்று கேட்க, "எப்படிடா நம்புறது? உன் பொண்டாட்டி இவ்ளோ சொல்லும் போது எப்படி நம்புறது? மொத்த குடும்பத்தையும் சிதைச்சுட்ட அர்ஜுன்..." என்று உடைந்து வந்தது அவன் குரல்.
அர்ஜுனோ, "டேய் என்ன நடந்திச்சுன்னு எனக்கே தெரியலடா..." என்று சொல்ல, அவனை முறைத்து விட்டு அங்கே நின்ற போலீஸ்காரர்களை பார்த்தவன், "இவன் காரை முழுசா செக் பண்ணுங்க." என்று சொல்லிக் கொண்டே, அவனிடம் கையை நீட்ட, அவன் கையில் தனது பாக்கெட்டில் இருந்து எடுத்த கார் திறப்பை வைத்தான் அர்ஜுன்.
தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்றுகூட அவனுக்கு தெரியவில்லை.
"வா..." என்று சொல்லி ஜீவிதன் முன்னே செல்ல, அவனைத் தொடர்ந்து சென்ற அர்ஜுனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் கஜன். பார்வையை அவனில் இருந்து கொஞ்சமும் அகற்றவில்லை.
கஜனின் மார்பில் அழுகையுடன் சாய்ந்து நின்ற ராகவியோ, "என் தப்புதான் அண்ணா... அவனை பத்தி நான் ஏற்கனவே சொல்லி இருக்கணும்... அவன் எப்படி எல்லாம் மிரட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான் தெரியுமா? அங்க நான் விட்ட தவறுதான், இப்போ வந்தனா விஷயத்துல வந்து நிற்குது. அவ என்ன பாவம் பண்ணுனா? எதுக்கு அவளுக்கு இப்படி ஒரு நிலைமை?
அவனை கொன்னுடுங்க அண்ணா... அந்த நாய் உயிரோட இருக்கவே வேணாம்..." என்று எல்லாம் சொல்லி விம்மி வெடித்து அழ, அவளை ஒற்றைக் கையால் அணைத்துக் கொண்டு, கலங்கிய விழிகளுடன் அங்கே நின்ற பல்லவியைப் பார்த்தான்.
"என்னை அப்படி பார்க்காதீங்க கஜன்... அவன் என் தம்பியே இல்லை." என்று வெறுப்புடன் வந்தது அவள் வார்த்தைகள். ராகவி சொன்ன விஷயத்தைக் கேட்டவளுக்கு தனது தம்பியா இப்படி என்று அதிர்ச்சியும் ஆத்திரமும்... அவன் மீது இருந்த மொத்த நம்பிக்கையும் சிதைந்து போய் விட்டது... அர்ஜுன் கோபக்காரன், மூர்க்கமானவன் என்று மட்டும் தான் அவளுக்கு இத்தனை நாட்கள் தெரியும்... ஆனால் இப்படி கேடு கெட்டவன் என்று இன்று தான் தெரியும்...
அவனது மனைவியின் வார்த்தையை மீறி யாருடைய வார்த்தை அங்கே சபையேறும்...
அவளை இப்படி கீழ்த்தரமாக மிரட்டி திருமணம் செய்து இருக்கின்றான்... இதற்கு மேல் அவன் தவறு செய்து இருக்க மாட்டான் என்று யாரினால் அவன் பக்கம் பேசி விட முடியும்?
கஜனோ கண்களை மூடி திறந்து கொண்டே, "குற்றவாளி அவன்தான்னு உறுதியான அப்புறம் பார்த்துக்கலாம்." என்று சொல்ல,
"இதுக்கு மேல உறுதியாக என்ன இருக்கு?" என்று ஆதங்கமாக கேட்டாள் ராகவி.
"அவன் உன்னை பார்த்த பார்வைல ஏதோ ஒன்னு இருக்கு..." என்று சொன்னவனோ, மீண்டும் ஐசியூ உள்ளே சென்று விட்டான்.
ஏற்கனவே உடைந்து போய் இருந்தவர்கள், இப்போது அர்ஜுனின் விஷயத்தினால் மொத்தமாக நொறுங்கிப் போய் விட்டார்கள்.
போலீஸ்காரர்கள் எல்லோரும் அவன் காரை சோதனை செய்ய, அவனோ அதனை கை கட்டி நின்று பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் காருக்குள் இருந்து முதலில் எடுத்தது என்னவோ காண்டம் பாக்கெட்டுகள் தான். அதுவும் உடைக்கப்பட்ட பாக்கெட்டுகள்.
"இது எப்படி இங்க வந்திச்சு?" என்று ஜீவிதன் கேட்க, அதனை அதிர்ந்து பார்த்துக் கொண்டு, "தெரியலடா..." என்றான்.
"தெரியல சார்!" என்று அழுத்தமாக திருத்தினான் ஜீவிதன்.
அவனை அதிர்ந்து பார்த்தான் அர்ஜுன். அவன் விழிகளில் கோபம் கனன்று கொண்டு இருந்தது.
"உன்கிட்ட இத எதிர்பார்க்கல அர்ஜுன்." என்று சொல்லிவிட்டு, கண்களை மூடி திறந்தவன், "சேர்ச்..." என்று சொல்ல, காரை மொத்தமாக அலசி தேடினார்கள்.
ஃபாரென்சிக் டிபார்ட்மெண்டும் வந்து விட்டார்கள். உள்ளுக்குள் வந்தனாவின் முடி, கிளிப், ஜாக்கெட்டில் இருக்கும் ஹூக் என்று நிறைய பொருட்கள். எல்லாவற்றையும் புரியாமல் வெறித்துப் பார்த்தான். கார் சீட்டில் ரத்த கறைகள் வேறு. எல்லா விதமான சாட்சிகளையும் சேகரித்துக் கொண்டார்கள். இறுதியாக டிக்கியை திறந்த சமயம், அர்ஜுனே அதனைக் கண்டு இரண்டடி பின்னே சென்று விட்டான். இதயமே நொறுங்கிவிட்ட உணர்வு.
வந்தனாவின் ஜாக்கெட் மற்றும் உள்ளாடைகள்!
அவனுக்கு மயக்கமே வராத குறைதான்.
"இது எப்படி வந்திச்சுன்னு..." என்று ஆரம்பிக்க முதலே, அவன் கைகளில் விலங்கை மாட்டி இருந்தான் ஜீவிதன்.
"ஜீவி..." என்று ஆரம்பித்தவன் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு, "எனக்கு எதுவும் நினைவுல இல்ல சார்..." என்று சொல்ல, அவனை ஆழ்ந்து பார்த்த கணம், அவன் முன்னே காருக்குள் இருந்து எடுக்கப்பட்ட சிரின்ஞ் கொண்டு வந்து காட்டப்பட்டது.
"ஆர் யூ ட்ரக் அடிக்ட்?" என்று ஜீவிதன் அவனைப் பார்த்து அதிர்ந்து கேட்க, அவன் இல்லை என்கின்ற தோரணையில் அதிர்ச்சியுடன் தலையாட்ட, ஒற்றை விரலை அவனை நோக்கி நீட்டியவன், "பொய் சொல்லாத அர்ஜுன்... நீ இப்போ கூட நிதானமா இல்லை." என்றான்.
ஜீவிதனுக்கு அவன் மீது இருந்த நம்பிக்கை மொத்தமாக போய் விட்டது. ஒரு போலீஸ்காரனாக அவன் மீது சந்தேகம் வலுத்தது. இப்போது அர்ஜுனுக்கே தன் மீது சந்தேகம் வரும் நிலைதான். போதை பொருளின் கட்டுப்பாட்டில் வந்தனாவை அவனே ஏதாவது செய்து இருப்பானோ என்று தோன்றியது. அவனுக்கு தான் எதுவுமே நினைவில் இல்லையே?
தோள்பட்டையில் இருக்கும் நகக்கீறல் ராகவியுடையது என்று நினைத்து இருந்தான். ஆனால் இன்று அவள் பேசியதை வைத்து, அது அவளுடையது அல்ல என்று தெரிந்தது. என்ன நடந்தது என்று அவனுக்கே கிரகிக்க முடியவில்லை. ஜீவிதன் சொன்னது போல, காலையில் அவன் கண் விழித்த போது காரினுள் அமர்ந்து இருந்தான். கார் அவன் சொன்ன லேண்ட் அருகேதான் நின்று இருந்தது.
தலை விண்விண்ணென்று வலிக்க, காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். அவனுக்கு நிதானம் கொஞ்சமும் இல்லை. தலைக்கு குளித்தான், அப்போதும் நிதானம் அடைய முடியவில்லை. அந்த கணம்தான் வந்தனாவின் விஷயம் கேள்விப்பட்டான். ராகவி வேறு கர்ப்பமாக இருப்பதால், நிதானம் இல்லாமல் அவளை வண்டியில் ஏற்றி செல்ல முடியாது என்பதால் தான், முடியாது என்று சொன்னான். அதற்கும் அவளுடன் சண்டைதான் வந்தது. வேறு வழி இல்லாமல் தான் ஏற்றி வந்தான்.
அவனுக்கும் நிறைய பிரச்சனைகள் இருந்தன. அதனால் தான் பார்த்தீபனை எதிர்கொள்ள பயந்தான். ஆனால் இப்படி வந்தனா விஷயத்தில் சிக்கிக் கொள்வான் என்று அவனே நினைத்தது இல்லை. எல்லா ஆதாரங்களும் அவனுக்கு எதிராக இருந்தன. அவனுக்கு முதல் நாள் இரவு என்ன நடந்தது என்றே நினைவில் இல்லை. போதை மருந்து எப்படி அவன் காரினுள் வந்தது என்றும் தெரியாது. வந்தனா காரினுள் எப்படி வந்தாள் என்றும் தெரியாது.