ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 65

pommu

Administrator
Staff member

நிலவு 65

விஷயத்தைக் கேட்டு மின்னல் வேகத்தில் அடுத்த தெருவை நோக்கி ஓடி வந்தான் கஜன். அவனைத் தொடர்ந்து எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். பாழடைந்து இருந்த காணியில் மிக ஆழமாக வெட்டப்பட்டு இருந்த நீர் ஓடும் ஓடை அது. முதல் நாள் பெய்த மழையினால் சேறும் சகதியுமாக இருக்க, எட்டிப் பார்த்தவனுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.

உடலெல்லாம் சேறு இருக்க, முகத்தில் காயங்களும் ரத்தமுமாக குற்றுயிராக கிடந்தாள் வந்தனா. உடலில் அவள் அணிந்து இருந்த சேலை சுற்றப்பட்டு கிடந்தது. உடுக்கப்படவில்லை, சுற்றப்பட்டு இருந்தது. எந்த உணர்வும் இல்லை. அவளை அதிர்ந்து பார்த்த கஜனுக்கு மூச்செடுக்க முடியவில்லை. நிலை தடுமாறி கீழே விழுந்தே விட்டான்.

"அண்ணா..." என்று அழைத்துக் கொண்டு அவனைத் தொடர்ந்து ஓடிவந்த விஜய்க்கு, அவளை அப்படி பார்த்ததும் உயிரே போய் விட்டது. சட்டென உள்ளே பாய்ந்தவன், அவளை அதற்குள் இருந்து தூக்கிக் கொண்டான். உடலெல்லாம் காயம். ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. கஜனுக்கோ தனது உடலில் உயிர் இப்போவே போய்விட்ட உணர்வுதான்.

இப்படி ஒரு நிலையில் அவன் வந்தனாவைப் பார்ப்பான் என்று நினைத்தது கூட இல்லை. அங்கே ஓடி வந்த விஜயாவோ, "வந்தனா..." என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

எல்லோருக்கும் கண்ணீர். கஜனுக்கு விஜயாவின் அழுகை சத்தம் கேட்டுதான் நிதானம் வந்தது. தாமதிக்க முடியாது, கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்று உடலை வளைத்து குனிய, ஓடைக்குள் நின்றபடியே கஜனின் கையில் வந்தனாவைத் தூக்கி கொடுத்து இருந்தான் விஜய்.

அவன் விழிகள் முழுவதும் கண்ணீர். ‘விஜய்... விஜய்...’ என்று அவனை சுற்றிவரும் பெண், இப்படி இருப்பதை பார்த்தால் எந்த ஆண்மகனால் தாங்கிக் கொள்ள முடியும்? மொத்தமாக நொறுங்கியே விட்டான்.

கஜனோ தனது கையில் உடலெல்லாம் சேறுடன் உணர்வின்றி கிடந்த வந்தனாவைப் பார்த்தான். அவன் இதயம் துடிப்பை நிறுத்தி விட்ட உணர்வு தான் அவனுக்கு. அவள் மார்பு மேலேறி கீழிறங்கியது தெரிந்தது.

"ஆம்புலன்சுக்கு சொன்னீங்களா? அவ உயிரோட தான் இருக்கா..." என்று சத்தமாக கத்தினான்.

அவள் உயிருடன் இருப்பதற்கு சந்தோஷப்படுவதா? இல்லை, இந்த நிலையில் இருப்பதற்கு வருத்தப்படுவதா என்று யாருக்கும் தெரியவில்லை.

ராம்குமார் நேரத்துக்கே வைத்தியசாலைக்கு சொல்லி இருக்க, ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் ஜீப் அங்கே வந்து அக்கணம் நின்று இருக்க, அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான் கஜன். பூ போல இருந்த பெண்ணவளை கசக்கி தூக்கி போட்டு இருக்கின்றார்கள். அவன் வீட்டு பெண்ணிலேயே கை வைத்து இருக்கின்றார்கள். யார் என்று தெரியவில்லை. இக்கணம் இந்த வேலையை செய்தவனைக் கண்டால், அவன் இதயத்தைப் பிய்த்து எடுக்கும் ஆத்திரம் கஜனுக்கு.

வந்தனாவை தூக்கிக் கொண்டு ஆம்புலன்சை நோக்கி நடந்தவனுக்கு அழுகை. கண் நிறைய கண்ணீர்.

கைக்குழந்தையுடன் அங்கே ஓடி வந்த பல்லவிக்கோ நெஞ்சே வெடித்துவிடும் உணர்வு.

‘அண்ணி... அண்ணி...’ என்று கொஞ்சிப் பேசும் பெண்ணை இந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை. சக்திவேல் அதனைக் கண்டதுமே தொய்ந்து தெருவில் அமர்ந்து விட்டான்.

அவன் அமர்ந்த நிலை கண்டு, "அண்ணா... அண்ணா..." என்று மதியழகன் பதறி விட்டான்.

எல்லோரும் அங்கே கூடி விட்டார்கள். கஜனுக்கோ தனது ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை. அவளை தூக்கிக் கொண்டு சத்தமாக ஆத்திரத்துடன் கத்தினான். அடக்க முடியாமல் கத்தினான். வலியுடன் சேர்ந்த கோபம். கர்ஜனை போல இருந்தது. அந்த இடமே அவன் சத்தத்தைக் கேட்டு ஸ்தம்பித்து போனது.

எவ்வளவு வலியும் கோபமும் இருந்தால் அப்படி ஒரு சத்தம் அவன் தொண்டையில் இருந்து வரும் என்றுதான் தோன்றியது. ஒரு கட்டத்தில் விஜயா அழுதழுதே மயங்கி விழுந்து விட்டாள். தயாளனை கேட்கவே தேவை இல்லை. அவன் உயிருடன் இருப்பதே அதிசயம் என்கின்ற நிலைதான்.

வந்தனாவை ஆம்புலன்ஸ் அருகே தூக்கிக் கொண்டு கஜன் வந்து இருக்க, அவளை அவசரமாக உள்ளே ஏற்ற ஏற்பாடு செய்தார்கள். ஸ்ட்ரெச்சரில் அவளைப் படுக்க வைத்த கஜனுக்கு ஆத்திரம் தாங்கவே முடியவில்லை. அப்படியே மண்டியிட்டு நிலத்தில் அமர்ந்தவனோ, ஆத்திரத்துடன் இரு கைகளையும் விரித்துக் கொண்டே கத்தினான், பேச முடியவில்லை.

பேச வார்த்தைகளும் இல்லை. வெறி பிடித்தவன் போல, நிலத்தை கையினால் குத்திக் கொண்டே கத்தினான். தனது கோபத்தை, ஆத்திரத்தை எங்கே காட்டுவது என்று தெரியாத நிலை.

கையில் ரத்தம் வேறு வடிந்தது. அவனையே பார்த்து இருந்த பல்லவிக்கு அழுகை நிற்கவே இல்லை. எந்த பெண்ணுக்கும் வரக் கூடாத நிலை அது. அவள் எப்படி மீண்டு வருவாள் என்கின்ற எண்ணம்தான் அவள் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

ஜீவிதனோ வேகமாக கஜன் அருகே வந்து "அண்ணா..." என்று அழைத்துக் எழுப்பிவிட, அவன் ஷேர்ட்டை ஒற்றைக் கையால் பற்றிப் பிடித்து அவன் விழிகளைப் பார்த்தவன், "இதுக்கு காரணமானவன் உயிரோட இருக்கவே கூடாது. நீ கொல்லலைன்னா நானே கொல்லுவேன்." என்று சொல்லிவிட்டு கண்ணீரைத் துடைத்தவன், அடுத்த கணமே ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

சற்று நேரம் முன்னர் வரை அவள் அண்ணனாக துடித்தவன், இனி ஒரு வைத்தியராக அவளுக்கான சிகிச்சையை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், தனது வேலையில் ஈடுபட ஆரம்பித்து இருந்தான்.

ஆம்புலன்சில் மயங்கி விழுந்த விஜயாவையும் ஏற்றிக் கொண்டு வைத்தியாசாலையை நோக்கி விரைந்தனர்.

***

இதே சமயம், ஷவரின் கீழ் நின்று இருந்தான் அர்ஜுன். நீர்த் துளிகள் அவன் தலையில் பட்டு மேனியில் வழிந்து ஓடியது. இன்னுமே நிதானம் இல்லாத உணர்வு அவனுக்கு. தலையை உலுக்கிக் கொண்டவனுக்கு தோள்பட்டையில் எரிச்சல். பக்கவாட்டாக தலையை திருப்பிப் பார்த்தான், நகக்கீறல் இருந்தது.

விரல்களால் வருடிக் கொண்டே, ‘கிழிச்சு வச்சு இருக்கா...’ என்று நினைத்தபடி குளித்து முடித்தவனுக்கு சிரிக்கவும் முடியவில்லை. சிரிக்கும் மனநிலையிலும் அவன் இல்லை.

மூளைக்குள் என்னென்னவோ விஷயங்கள் ஓடிக் கொண்டு இருந்தன. பயம், பதட்டம், தடுமாற்றம், குற்ற உணர்வு என்று எத்தனையோ உணர்வுகளின் நடுவே தத்தளித்துக் கொண்டு இருந்தான். மொத்தத்தில் அவன் அவனாக இல்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலைதான் அவனுக்கு.

அவன் இருக்கும் நிலைக்கு அவன் வாழ்க்கை முழுவதும் சிறைக்குள் கழிய வேண்டிய நிலை கூட வரலாம். எல்லாவற்றிற்கும் மேல் அவன் தந்தை முன்னே எப்படி நிற்பான்? கூனி குறுகி போய் தான் நிற்க வேண்டும். ராகவியை எப்படி அவனால் எதிர்கொள்ள முடியும்? அனைத்துக்கும் மேல் அவனால் எப்படி தலையை வெளியே காட்ட முடியும்? நினைக்கவே மயக்கம் வாராத குறைதான்.

இடையில் டவலைக் கட்டிக் கொண்டு கண்ணாடி முன்னே நின்று தன்னையே பார்த்தான்.

கண்கள் சிவந்து இருந்தன. தடுமாற்றங்கள் அவனுக்குள் நிறையவே இருந்தன. நிதானமாக யோசிக்க முடியவும் இல்லை. பல்வேறு எண்ணங்கள் அவனை அழுத்திக் கொண்டு இருந்தன. அவனிடம் நிதானமும் இல்லை. போதையின் தடுமாற்றம் இன்னுமே அவனுக்குள். தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்த முயன்றவன், காரை காலையில் வீடு வரை ஓட்டி வந்ததே பெரிய சாதனைதான்.

அவன் நேற்று முழுவதும் வீட்டுக்கு வரவில்லை. அப்படி அவன் வெளியில் தங்குவதும் இல்லை. கர்ப்பமாக இருக்கும் தனியாக விட்டுச் சென்று இருக்கின்றான்.

இரவு முழுவதும் வெளியே தங்கி விட்டு காலையில் தான் வீட்டுக்கு வந்திருந்தான்.

அவன் உள்ளே வந்த நேரம், ராகவி சமைத்துக் கொண்டு இருந்தாள்.

அவளுக்கும் அவன் வந்த சத்தம் கேட்டது...

ஹாலுக்குள் வந்து அவனுடன் பேச அவள் முற்பட முதலே, அவளைப் பார்க்காமல் குளியலறைக்குள் நுழைந்து இருந்தான். இப்போது குளித்து விட்டு வந்து விட்டான். இன்னும் ராகவியின் முகத்தை அவன் பார்க்கவே இல்லை.

சற்று நேரம் தன்னையே பார்த்துக் கொண்டு கண்ணாடி முன்னே நின்று இருந்தவனோ, தலையை உலுக்கி விட்டு, அலமாரியைத் திறந்து ஷேர்ட்டை எடுத்த கணம், "நேத்து எங்க போனீங்க?" என்று ஒரு அழுத்தமான கேள்வி ராகவியிடம் இருந்து வந்தது. அவனுடன் பேசவே காத்துக் கொண்டு இருந்தாள் போலும்.

அவன் பதில் சொல்லவில்லை.

"கேக்கிறேன்ல, எங்க போனீங்க அர்ஜுன்? நான் ப்ரக்னன்ட்டா இருக்கேன்னு தெரிஞ்சும் எங்க போனீங்க?" என்று மீண்டும் கேட்டாள்.

அவள் கேள்வி கேட்க கேட்க கோபம்தான் வந்தது அவனுக்கு.

"வாயை மூடுடி..." என்று ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே திரும்பினான்.

தவறை அவன் செய்துவிட்டு அவளுக்கு திட்டுகின்றான். கண்கள் ரத்த சிவப்பு நிறத்தில் வேறு இருந்தன.

அவனை மிரட்சியாக பார்த்துக் கொண்டே அவள் இரு அடிகள் பின்னே சென்றவள், "தப்பை நீங்க பண்ணிட்டு இப்போ எதுக்கு கோபப்படுறீங்க?" என்று கேட்டாள்.

"இங்க பாரு, இன்னொரு வார்த்தை பேசுனா செவ்வில்லையே விடுவேன்." என்று ஆத்திரமாக சொன்னவனுக்கு, அவளுடன் பேசும் அளவுக்கு நிதானம் இல்லை. தொட்டது எல்லாவற்றிக்கும் கோபம்தான் வந்தது.

அவனை அதிர்ந்து பார்த்தவளது விழிகள் அவன் தோள்பட்டையில் படிய, அதில் இருந்த நகக்கீறல் அவள் கவனத்தைத் திருப்பியது.

அவனும் சட்டென டீஷேர்ட் மற்றும் ஜீன்ஸை அணிய, அந்த நகக்கீறலை பார்த்துவிட்டு தனது கையைப் பார்த்தாள்.

கையில் நகம் இல்லை, அவள் நகங்கள் வளர்ப்பதும் இல்லை. சட்டென ஏதோ ஒன்று இதயத்தில் இருந்து மொத்தமாக வெளியேறும் உணர்வு அவளுக்கு. அப்படியே தொய்ந்து கட்டிலில் அமர, அவனோ உடையை அணிந்து கொண்டு வெளியேறப் போன சமயம், ராகவியின் அலைபேசி அலறியது.

எடுத்து காதில் வைத்தாள். மறுமுனையில் நவநீதன் எடுத்து இருந்தான்.

"நம்ம வந்தனா..." என்று அவன் அழுகையுடன் ஆரம்பித்து விடயத்தை சொல்ல, தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

"என்னடா சொல்ற?" என்று பதட்டமும் அழுகையுமாக கேட்க, "சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு வா." என்று சொன்னதுமே,

அர்ஜுனோ, "என்னாச்சு?" என்று ராகவியிடம் கேட்டான்.

"வந்தனா... வந்தனா..." என்று விம்மலுடன் சொன்னவளுக்கு பேச்சும் வரவில்லை, அழுகைதான் வந்தது.

"சொல்லுடி, என்னாச்சு?" என்று அவனும் அவளை உலுக்கிக் கொண்டு கேட்க, "யாரோ ரேப் பண்ணி சேத்துக்குல தூக்கி போட்டு இருக்காங்களாம். இப்போ ஹாஸ்பிடல்ல..." என்று சொல்லி, "ஐயோ!" என்று தலையில் கையை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்ததுமே,

அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டே சுவரில் சாய்ந்து நின்றான் அர்ஜுன். ராகவிக்கு நிலை கொள்ளவே முடியவில்லை.

"சீக்கிரம் போகணும்..." என்று அழுகையுடன் அவசரமாக உடையை மாற்றிக் கொள்ள, "ஆட்டோவுல போ." என்றான் அவன்.

அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.

அங்கே ஒருத்தி உயிருடன் போராடிக் கொண்டு இருக்கின்றாள், ஆட்டோவில் போக சொல்கின்றானே?

"கொஞ்சம் கூட உங்களுக்கு மனசாட்சி இல்லையா?" என்று அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

என்ன மனிதன் இவன் என்று அவளுக்கு தோன்றாமல் இல்லை.

"நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா? ஆட்டோவில் போ." என்று அழுத்தி சொல்லிவிட்டு அவன் நகர, அவன் ஷேர்ட்டை எட்டி பிடித்தவளோ, "அர்ஜுன்..." என்றாள்.

சட்டென அவளில் இருந்து பார்வையை அகற்றி, "கையை எடு ராகவி." என்றான்.

"என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்று அவள் கேட்க, "கையை எடுன்னு சொல்றேன்ல..." என்று அவள் கையை ஆக்ரோஷமாக தட்டி விட்டவனோ, "வந்து தொலை..." என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறிக் கொண்டான்.

அவனுக்கு காரை ஓட்டும் அளவுக்கு நிதானம் இல்லை. தலையை அடிக்கடி உலுக்கிக் கொள்ள, ராகவிக்கோ நிற்காத அழுகை. விம்மி வெடித்து அழுது கொண்டே அவள் அமர்ந்து இருக்க, அவள் அழுகையில் அவனுக்கு வண்டியை ஓட்டவே முடியவில்லை... எங்கேயாவது மோதி விடுவான் என்கின்ற நிலை தான்.

"கொஞ்சம் அழாம வர்றியா?" என்று சீறினான்...

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு... நடந்து இருக்கின்றது என்ன சின்ன விஷயமா? அழ வேண்டாம் என்கின்றானே... மனிதனா இவன்? ராட்சஷன் என்று தான் தோன்றியது... விம்மலுடன் வாயை இரு கைகளாலும் மூடி, அழுகை வெளியே வராமல் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அவனும் ஒரு வழியாக வைத்தியசாலை வளாகத்தை அடைந்த கணம், ஸ்டியரிங் வீலை பற்றிக் கொண்டு சற்று நேரம் கண் மூடி அமர்ந்து இருந்தான்.

அவனைப் புரியாமல் பார்த்தவள் கண்ணீரை துடைத்து சீட்பெல்ட்டை கழட்டிய சமயம், அவள் கைகளுக்குள் ஏதோ தட்டுப்பட்டது.

எடுத்துப் பார்த்தாள், குட்டி ஜிமிக்கி.

சட்டென அவள் விழிகள் அதிர்ந்து விரிய, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டாள். எதற்காக அவள் இப்போது அழுவது என்று தெரியாத நிலைதான்.

"நீ இன்னும் போகலையா?" என்று அவன் கண்களை மூடிக் கொண்டே கேட்க, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு கைக்குள் ஜிமிக்கியை அடக்கிக் கொண்டவளோ, "நீங்க வரலையா?" என்று கேட்டாள்.

அவனோ, "நீ போடி முதல்ல..." என்று சீறினான்.

தொட்டது எல்லாவற்றுக்கும் சீறிப் பாய்ந்து கொண்டு பதில் சொல்கின்றான். அவளுக்கு ஏதோ தவறாக பட்டது.

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே கார் கதவைத் திறக்க போனவள் கண்ணில், காலின் கீழே கிடந்த வெற்று காண்டம் பாக்கெட் தென்பட, அவள் அக்கணம் உயிருடன் மரித்தே போனாள்.

போய் விட்டதா? எல்லாமே போய் விட்டதா? குனிந்து தனது மேடிட்ட வயிற்றைப் பார்த்தாள்.

தனது நிலையை நினைத்து அழுவதா? இல்லை வந்தனாவை நினைத்து அழுவதா? என்கின்ற தடுமாற்றம். சேர்த்தே அழுது கொண்டாள்.

வேகமாக காரில் இருந்து இறங்கியவள், விறுவிறுவென ஹாஸ்பிடலை நோக்கி சென்ற கணம், அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. துடைத்துக் கொண்டே நடந்து சென்றாள்.

அர்ஜுன் இன்னுமே கார் சீட்டில் கண் மூடி அமர்ந்து இருந்தான். அவன் அவனாக இல்லை.

இதே சமயம், விஷயம் கேள்விப்பட்டு பார்த்தீபனும் பைரவியும் அங்கே காரில் வந்து இறங்க, அர்ஜுனின் பார்வை இப்போது அவர்கள் வண்டியில் படிந்தது.

இதயமே நின்றுவிட்ட உணர்வு அவனுக்கு. பதட்டமாக இறங்கி உள்ளே சென்று கொண்டு இருந்த பார்த்தீபனும் பைரவியும் அவன் காரை கவனிக்கவே இல்லை.

அவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடி இருக்கையில் அர்ஜுன் சாய்ந்து அமர்ந்து, இதழ் குவித்து ஊதிக் கொண்ட சமயம், அங்கே ஜீவிதனின் போலீஸ் ஜீப்பும் வந்து சேர்ந்தது.

அவனும் வேகமாக வைத்தியசாலையினுள் நுழைய, அர்ஜுனின் கைகள் கிட்டத்தட்ட நடுங்கி போயின. எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைதான். இனியும் இங்கேயே இருக்க முடியாது என்று யோசித்தவன், கார் கதவை திறந்து இருந்தான்.

கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கியவன் வைத்தியசாலை நோக்கி நடந்தான். கால்களில் ஒருவித நடுக்கம். வந்தனா ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள்.

அந்த வழியில் நடந்தவன் கண்களில், அங்கே அழுது கொண்டு இருந்த அவள் குடும்பத்தினர் தென்பட்டனர். எல்லோருமே அங்கேதான் நின்று இருந்தார்கள். ஜீவிதனும் ஒரு சில போலீஸ்காரர்களும் அங்கே நின்று இருந்தார்கள்.

ராம், சுகானா மற்றும் கஜன் என மூவரும் உள்ளே வந்தனாவுக்கு சிகிச்சை அளிப்பதில் மும்முரமாக இருக்க, அர்ஜுன் ஒரு தடுமாற்றத்துடன் அங்கே வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்ட ஜீவிதனின் புருவங்கள் சட்டென சுருங்கின. அர்ஜுனுக்கோ அவன் தன்னைப் பார்த்ததுமே குப்பென்று வியர்த்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே ஜீவிதன் விழிகளைப் பார்க்க முடியாமல் நடந்து வந்தவன், அருகே வந்ததும் தான் அவனை ஏறிட்டுப் பார்த்து, "ஜீவி..." என்று ஆரம்பிக்க,

"உன் கார் ஏன் வந்தனாவை கண்டுபிடிச்ச லேண்ட் முன்னாடி காலைல நின்னுச்சு?" என்று கேட்டானே பார்க்கலாம்.

குரலில் போலீஸ்காரனுக்கு உரித்தான ஒரு அழுத்தமும் சேர்ந்து இருந்தது.

இப்போது அனைவரின் விழிகளும் சட்டென அர்ஜுனில் படிய, அப்படியே சுவரில் சாய்ந்து நின்று அவனைப் பார்த்த ராகவியின் விழிகள் உயிர்ப்பைத் தொலைத்து இருந்தன.



தொடரும்...
 
Top