ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 64

pommu

Administrator
Staff member

நிலவு 64

மணி இரவு ஒன்பதரை இருக்கும், மணியும் வந்தனாவை தேடி வினோவின் வீட்டுக்கு சென்று இருந்தான். தெரு முனையில் ஜீப்பை பார்க் செய்துவிட்டு காத்துக் கொண்டு இருந்தான். மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்து இருந்தது. நேரம் சென்றது, அவள் வரும் வாடிக்கையே இல்லை. அலைபேசிக்கு அழைத்தான், அலைபேசி உயிர்பற்றுக் கிடந்தது. அதற்கு மேல் அங்கே நிற்பது உசிதமாக படவில்லை.

அந்த ஒடுங்கிய வீதியினால் வாகனத்தை வீட்டின் அருகே கொண்டு செல்லவும் முடியாது. அதனால் இறங்கி அவனே நடந்து திருமண வீட்டை அடைந்து இருந்தான்.

அவனைக் கண்டதுமே அங்கே வந்த பெண்ணொருத்தியோ, "யார் நீங்க?" என்று கேட்க,

"வந்தனா அம்மாவோட ட்ரைவர்." என்று அவன் தன்னை அறிமுகப்படுத்த, "வந்தனா அப்போவே கிளம்பிட்டா." என்று அவன் தலையில் குண்டை இறக்க, "என்னது அப்போவேயா?" என்று அவன் அதிர்ந்தான்.

"ஆமா, ஒரு அரை மணி நேரம்தான் இருந்து இருப்பா, அப்புறம் கிளம்பிட்டா." என்று சொன்னதும் நெஞ்சே அடைத்து விட்டது அவனுக்கு.

சட்டென அவன் அழைத்தது என்னவோ தயாளனுக்கு தான். அவனும் அலைபேசியை காதில் வைக்க, "வந்தனா அம்மா அப்போவே கிளம்பிட்டாங்களாம் ஐயா." என்று சொன்னதுமே, "என்னது?" என்று அவனுக்கு அதிர்ச்சி.

சட்டென அலைபேசியை கட் செய்துவிட்டு அவள் எண்ணுக்கு அழைக்க, அதுவோ உயிர்பற்று கிடந்தது. பதறி விட்டான்! விஜய்யிடம் சென்று இருப்பாளோ என்று சந்தேகம் வர, அவனுக்கு அழைத்தான்.

அவன் அப்போதுதான் வீட்டுக்கு வந்து இருந்தவன், தயாளனின் எண்ணைக் கண்டதுமே யோசனையுடன் அலைபேசியை எடுத்து காதில் வைக்க, "வந்தனா அங்கே வந்தாளா?" என்று கேட்டான்.

"இல்லையே, என்னாச்சு?" என்று பதட்டமாக கேட்க, அதற்கு எல்லாம் அவன் பதில் சொல்லாமல் அலைபேசியைத் துண்டித்தவன், வேகமாக சக்திவேலை நோக்கி வந்தான்.

"அண்ணா, வந்தனாவை காணோம். விஜய்கிட்ட விசாரிச்சேன், அங்கேயும் போகல, எனக்கு பயமா இருக்கு." என்றான் பதட்டமாக.

"என்னது காணோமா?" என்று விஜயா பதறிக் கொண்டே அழ ஆரம்பித்துவிட, "கொஞ்சம் பதறாதம்மா, தேட சொல்லலாம்." என்று சொல்லிக் கொண்டே கஜனுக்கு அழைத்தான் சக்திவேல்.

கஜனோ ஹாஸ்பிடலில் இருக்க, "வந்தனாவை காணோம்பா." என்று சொன்னான்.

"என்னப்பா சொல்றீங்க?" என்று அவன் அதிர்ந்து கேட்க, விஷயத்தை சொன்னான்.

அவனுக்கோ அப்போது பிரசவம் ஒன்று பார்க்க வேண்டிய தேவை இருந்தது. விட்டு செல்லவும் முடியாது.

"நான் விஜய்கிட்டயும் ஜீவிதன்கிட்டயும் சொல்றேன்." என்று சொன்னவன் அடுத்து விஜய்க்கு அழைத்து, "டேய் வந்தனாவை காணோம்டா, நம்ம பசங்க கூட ஊரெல்லாம் தேடி பாரு." என்று சொல்லி ஜீவிதனிடமும் சொல்லி இருக்க,

போலீஸ் ஒருபக்கம், அவன் வீட்டினர் ஒரு பக்கம் என்று எல்லா இடமும் அவளைத் தேட ஆரம்பித்து இருந்தார்கள். ஏழரைக்கு வீட்டை விட்டு கிளம்பியதைத் தவிர எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எங்கே சென்று தேடுவது? நேரம் செல்ல செல்ல, பதட்டம் அதிகரித்தது தான் மிச்சம். விஜயா அழ ஆரம்பித்து விட்டாள்.

இரவு பன்னிரண்டு மணியையும் நெருங்கி விட்டது. அவளைக் காணவே இல்லை. விஜய்க்கு உயிரே போய்விட்ட உணர்வு.

"எங்கடி போய் தொலைஞ்ச...?" என்று திட்டிக் கொண்டே எல்லா இடமும் தேடினான்.

எந்த இடத்திலும் அவள் கிடைக்கவே இல்லை. மழை என்றும் பார்க்காமல் நனைந்துகொண்டே தேடினான்.

அந்த கும்மிருளிலும் மழையிலும் தேடிப் பிடிப்பது அவ்வளவு இலகுவா என்ன?

***

இதே சமயம், வீட்டில் அமர்ந்து நேரத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ராகவி. நேரம் பன்னிரண்டு மணியைக் கடந்து விட்டது. இன்னும் அர்ஜுன் வீட்டிற்கு வந்த பாடு இல்லை. அழைத்தால் பதில் இல்லை.

‘ஐ வில் கால் யூ லேட்டர்.’ என்று மெசேஜ் மட்டும் விழுந்தது.

மிஞ்சி மிஞ்சி போனால் பத்து மணிக்கு வந்து விடுவான். இவ்வளவு தாமதம் ஆனதே இல்லை. அதுவும் அவளைத் தனியாக விட்டு சென்றதும் இல்லை. நேற்று, வேறு பெண்களிடம் செல்வேன் என்று அவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னது கண் முன்னே வந்து போனது. அப்படி சென்று இருப்பானோ என்று சந்தேகமும் வலுத்தது. அவளைப் பொறுத்தவரை அவன் ராட்சஷன் தானே?

அவள் உடலுக்காக அவளை எப்போதுமே நாடுவான். நேற்றுகூட கர்ப்பம் என்று பார்க்காமல் பேசுவதையும் பேசிவிட்டு, உடல் தேவையையும் தீர்த்துக் கொண்டானே? எப்படி நல்ல எண்ணம் வரும்? அவனுடன் சந்தோஷமான நாட்கள் அவள் வாழ்ந்து இருக்கின்றாள் தான். ஏன், அவனைக் காதலிக்கவும் இப்போது ஆரம்பித்து இருந்தாள் தான்.

ஆனால் எல்லாமே நேற்று ஒரு நாள் அவன் பேசியதில் மொத்தமாக துடைத்து எறியப்பட்டு இருந்தது. வந்தனாவைக் காணவில்லை என்றும் கேள்விப்பட்டாள். இந்த இருளில் அவள் எப்படி எங்கே செல்வது? தனியே இந்த வீட்டில் வயிற்றில் குழந்தையுடன் அமர்ந்து இருக்கின்றாள்.

வெளியே மழையும் இடியும் இருக்க, கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அழுகையும் வந்தது. சத்தம் போட்டு அழுது கொண்டாள்.

***

நிலைமை இவ்வாறு இருக்க, இடைப்பட்ட நேரத்தில், கஜன் ஆப்ரேஷனை முடித்துவிட்டு வீட்டுக்கும் வந்து விட்டான். வந்தனாவை இன்னும் தேடிப் பிடிக்கவில்லை.

வீட்டுக்கு வந்ததுமே, "வந்தனாவை இன்னும் காணோம் ப்பா..." என்று துளசி அழ ஆரம்பித்துவிட, எல்லோரும் இடிந்து விட்டார்கள்.

"பதறாதீங்கம்மா, தேடி கண்டுபிடிச்சுடலாம்." என்று விஜய்க்கு அழைத்தவன், "என்னடா ஆச்சு?" என்று கேட்க,

"ரெண்டு ஊர்லயும் தேடிட்டேன் அண்ணா, காணோம்." என்று சொன்னான் அவன்.

குரல் கம்மி இருந்தது, அழுது கொண்டே பேசுகின்றான் என்று தெரிந்தது. அவன் உணர்வை கஜனாலும் புரிந்துகொள்ள கூடியதாக இருந்தது.

ஜீவிதனுக்கு அழைத்தான், அவனும் தேடிக் கொண்டுதான் இருந்தான். அடுத்த ஊரில் என்பதால், அந்த ஊர் போலீஸாரின் உதவியுடன் அவளைத் தேடினான்.

அடித்துப் பெய்து கொண்டு இருந்த கனமழை நடுவே, தேடுவது அவ்வளவு இலகுவான விஷயமும் அல்ல. ஆனாலும் நம்பிக்கையை தளர விடாமல் தேடினார்கள், கிடைக்கவே இல்லை. கஜனும் வண்டியை எடுத்துக் கொண்டு வினோவின் ஊருக்கு சென்று இருந்தான்.

அங்கேதான் வந்தனா காணாமல் போய் இருந்ததால் தேடலும் அந்த ஊரில் தான் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல விடிந்தும் விட்டது. யாருக்கும் ஒரு பொட்டு தூக்கம் இல்லை.

காலை ஐந்தரை இருக்கும், கஜனும் வீட்டுக்கு வந்து விட்டான். வரும் போது அவனை அறியாமலே அடக்கி வைத்து இருந்த அழுகை வெளியே வந்தது. கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே வண்டியை ஓட்டினான். அவளுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று பதட்டம் வேறு. நெஞ்சே அடைத்து விடும் உணர்வு. அவளைக் காணவே இல்லை. தொலைத்து விட்டானே? எங்கே தேடிப் பிடிப்பது?

வீடு இழவு வீடு போல அழுகையுடன் இருந்தது. அவனுக்கு வண்டியில் இருந்து இறங்கவே மனம் இல்லை. அவனைக் கண்டதுமே எப்படியும் உடைந்து போய் அழுவார்கள். யாருக்கு என்ன ஆறுதல் அவனால் சொல்லிவிட முடியும்?

வண்டியில் இருந்து இறங்கியதுமே, "எல்லா இடமும் தேடியாச்சுப்பா, கண்டு பிடிக்கவே முடியல..." என்று உடைந்த குரலில் கஜன் சக்திவேலிடம் சொல்ல,

"என்னப்பா சொல்ற?" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேட்டான் அவன்.

அப்போது அங்கே வேகமாக ஓடி வந்தான் ஒருவன்.

"ஐயா, அடுத்த தெருமுனைல இருக்கிற பாழடைந்த காணிக்குள்ள, ஒரு பொண்ணோட பிணம் கிடக்கு..." என்று சொன்னதுமே, "ஐயோ!" என்கின்ற அலறலுடன் எல்லோரும் அந்த காணியை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டார்கள்.
 

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 64)


அச்சோ...! அந்த பாவி சொன்னபடி செஞ்சிட்டானோ???
அப்ப அந்த பிணம் வந்தனாவோடதா...?


இதோ பாருங்க பொம்மு அக்கா
இம்புட்டு டென்ஷனை ஏத்தக் கூடாது, இம்புட்டு அழுத்தமாவும்
கதையை கொண்டு போகக் கூடாது. நீங்க எப்பவும் விளையாட்டுப் பிள்ளை கணக்கா, விளையாட்டுத் தனமாத்தானே எழுதுவிங்க...! இன்னைக்கு என்ன இப்படி பண்ணிப்பூட்டிங்க...?
இதனால விஜய், ராகவி, அர்ஜூன்.... எல்லோரோட லைஃப்பும் கேள்விக் குறியாகுது...
தகிடுனத்தோம் ஆகுது...
அது உங்களுக்குப் புரியுதா இல்லையா...?


நீங்க பாட்டுக்கு எங்க சின்ன இதயத்துமேல அம்புட்டு பெரிய குண்டைத் தூக்கி போட்டா அது ரெண்டா உடைஞ்சிடாது....!
வீ பாவம்...!
😪😪😪
CRVS (or) CRVS 2797
 
Top