ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 63

pommu

Administrator
Staff member

நிலவு 63

வந்தனாவோ வீட்டில் யாருடனும் பெரிதாக பேசவில்லை. மிகவும் அமைதியாகி விட்டாள். ஒருவித சோர்வு அவள் முகத்தில். அதே சமயம் அவள் திருமண விஷயத்தையும் சற்று தள்ளிப் போட்டு இருந்தார்கள். அதனைப் பற்றி பேசினால் பிரச்சனை என்று யாருமே எதுவும் பேசவில்லை. ஒரு மாதம் கடந்து விட்டது.

காலையில் எழுந்த சுகானா தூங்கிக் கொண்டு இருந்த ராம்குமார் அருகே வந்து படுக்க, அவனோ அவளை இழுத்து அணைத்து அவள் கழுத்துக்குள் முகம் புதைக்க, "ராம் ஐ ஆம் ப்ரக்னன்ட்..." என்றாள்.

சட்டென கண்களை விரித்தவன், "ஐயோ அதுக்குள்ளயா?" என்று கேட்டான்.

"கல்யாணம் பண்ணி எவ்ளோ நாள் ஆச்சு?" என்று கேட்க, "அட ஆமா... நேத்துதான் தாலி கட்டுன போலவே இருக்கு." என்று சொல்லிக் கொண்டே அவள் மூக்குடன் மூக்கை வைத்து உரசிக் கொள்ள,

அவளோ அவனை மயக்கமாக பார்த்துக் கொண்டே, "இன்னைக்கு கைனோகிட்ட போகலாம்." என்றாள்.

"அண்ணா தானே..." என்று அவன் கண்சிமிட்டி சொல்லிக் கொண்டான்.

வீட்டில் விஷயத்தை சொல்லி இருக்க ஒரே கொண்டாட்டம் தான்.

பல்லவியோ சுகானாவை அணைத்து விடுவித்து, "ரொம்ப சந்தோஷமா இருக்குடி." என்று சொல்ல, அன்று எல்லாருக்குமே விருந்து தடல் புடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுகானாவைப் பார்க்க பார்த்தீபனின் குடும்பத்தினரும் வந்து இருந்தார்கள்.

ராகவிக்கும் விஷயம் தெரிவிக்கப்பட, அவளுக்கோ சுகானாவைப் பார்க்க செல்ல ஆசையாக இருந்தது. அர்ஜூனுடன் அவளுக்கு நல்ல உறவுதான் இப்போதெல்லாம். ஆனாலும் கடந்த இரு நாட்களாக அவள் முகத்தைக் கூட அவன் பார்க்கவில்லை. இரவாகி விட்டால் அவளை முத்தமிட்டு தள்ளுபவன், அவள் பக்கம் திரும்பவும் இல்லை. அவளாக சென்று கேட்கவும் சங்கடமாக இருந்தது.

இன்று சுகானாவின் விஷயத்தை சொல்லி பேசி விடலாம் என்று நினைத்து, அவனுக்காக காத்து இருந்தாள். இரவு பத்து மணி போல தான் வீட்டுக்கே வந்தான். வந்ததுமே குளிக்க சென்று இருந்தான். இப்போதும் அவளைப் பார்க்கவில்லை.

குளித்துவிட்டு ஷார்ட்ஸுடன் வந்தவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துவிட, "அர்ஜுன்!" என்று அழைத்தாள்.

"ம்ம்..." என்றான்.

"சுகானா அண்ணி ப்ரக்னன்ட்." என்றாள்.

"ஐ க்னோ." என்று பதில் வந்தது.

"பார்க்க போகணும்." என்றாள்.

"அவசியமில்லை." என்று முகத்தில் அடித்தது போல பதில் வந்தது.

இவன் எப்போது எப்படி இருப்பான் என்று அவளுக்கும் தெரியவில்லை. சில சமயங்களில் உருகி விடுகின்றான். சில சமயங்களில் எரிமலையாய் குமுறி விடுகின்றான்.

"ஏன், என்னாச்சு?" என்று அவள் கேட்க, "ஏன்னு உனக்கு சொல்லி தான் ஆகணுமா?" என்று குரல் உயர்த்தி அவனிடம் இருந்து பதில் வந்தது.

அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. சற்று கோபமும் வந்தது.

"இப்போ அங்க போறதுல என்ன பிரச்சனை?" என்று கேட்டாள்.

"உனக்கெதுக்குடி அது? போக கூடாதுன்னா போக கூடாதுதான்." என்றான்.

"அதுதான் ஏன்?" என்று அவள் கேட்க, "ஏய்..." என்று சீறிக் கொண்டே எழுந்து அமர்ந்தான்.

அவன் விழிகள் சிவந்து இருந்தன. அவளுக்கோ நெஞ்சில் நீரே வற்றிப் போனது. ஏன் இந்த கோபம் என்று அவளுக்கே தெரியவில்லை.

"எதுக்கு இவ்ளோ கோபம்?" என்று கேட்டாள்.

அவளை உறுத்து விழித்தவன், "வாய மூடிட்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா? எப்போ பாரு நொய் நொய்ன்னு சொல்லிட்டு... இந்த கல்யாணத்த பண்ணியே இருக்க கூடாது." என்றான்.

அவளுக்கு அவன் பேசியது ஒருவித வலியைக் கொடுக்க, "வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டது நீங்கதான்..." என்றாள் ஆத்திரத்துடன்.

"ஆமாடி... நான்தான்... முட்டாள்த்தனமா நடந்து இருக்கேன். போதாதற்கு கர்ப்பம் வேற..." என்று வார்த்தைகளை விட்டு விட்டான்.

நொறுங்கியே விட்டாள்!

"இதுக்கு காரணமும் நீங்கதான் அர்ஜுன்." என்று உடைந்து வந்தது அவள் வார்த்தைகள்.

"ஆமா... நான்தான்... கட்டில் சுகத்துக்கு ஆசைப்பட்டு எல்லாமே பண்ணிட்டேன். பொண்ணு தேவைன்னா நான் ப்ரொஸ்டியூட்கிட்ட போய் இருக்கணும். அத விட்டுட்டு உன்கிட்ட வந்துட்டேன்." என்று மீண்டும் அவன் வார்த்தைகள் கத்தி போல வெளியே வந்தன.

என்ன பேசி விட்டான் அவன்? அவளை விபச்சாரிகளுடன் ஒப்பிட்டு அல்லவா பேசுகின்றான். நொறுங்கியே விட்டாள்.

"இப்போவும் போக வேண்டியது தானே?" என்று அழுகையும் ஆத்திரமுமாக அவள் பதில் வர,

"ஆமாடி போவேன்தான், அது என் இஷ்டம்." என்று தான்தோன்றி தனமாக பதிலும் வந்தது.

அவனை இமைக்காமலே பார்த்து இருந்தாள்.

"ப்ச்!" என்று சொல்லிக் கொண்டே நெற்றியை நீவியவன், "சரியான இம்சை... இவளை கட்டுறதுக்கு பதிலா வந்தனாவை கட்டி இருக்கலாம். வாயை மூடிட்டு சும்மா இருந்து இருப்பா, எப்போ பாரு நொய் நொய்ன்னு பேசிட்டு..." என்று அப்போதும் வார்த்தைகளை வீசிவிட்டு வெளியேறி, ஹாலில் இருக்கும் சோஃபாவில் படுத்துக் கொள்ள மொத்தமாக நொறுங்கி விட்டாள் பெண்ணவள்.

என்னவெல்லாம் பேசிவிட்டு செல்கின்றான். வார்த்தைகளை எப்படி எல்லாம் வீசுகின்றான்? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா என்றுதான் அவளுக்கு தோன்றியது. குனிந்து தனது மேடிட்ட வயிற்றைப் பார்த்தாள். படிக்க வேண்டிய பெண்ணை, இப்படி அமர வைத்து விட்டு இலகுவாக வார்த்தைகளை விடுகின்றானே? கத்தி அழ வேண்டும் போல இருந்தது.

கட்டுப்படுத்த முடியாமல், வாயை மூடி அவள் அழ ஆரம்பித்து இருக்க, மீண்டும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன், "செம்ம ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு, ஐ நீட் யூ." என்றான்.

அதிர்ந்து விட்டாள்!

சற்று முன்னர் எப்படி எல்லாம் பேசி சென்றவன், இப்போது அவளை கட்டிலுக்கு அழைக்கின்றானே? "நோ..." என்று அவள் அழுத்தமாக சொல்ல,

"அப்போ வேற பொண்ணுகிட்ட போகட்டுமா?" என்று அவளை உறுத்து விழித்துக் கொண்டே கேட்டான்.

"எனக்கும் மனசு இருக்கு அர்ஜுன்." என்று அழுகையுடன் சொன்னாள்.

"எனக்கு நீ இப்போ வேணும்." என்றான் அவன்.

அவள் பேசுவதைக் காது கொடுத்து கேட்கும் நிலையில் அவன் இல்லை என்று தெரிந்தது. அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

"சரி, நான் வெளிய போறேன்." என்று சொல்ல, சட்டென கையை எட்டி பிடித்துக் கொள்ள, அவனோ அவளை அணைத்துக் கொண்டு கட்டிலில் சரிந்து இருந்தான். மென்மையான கூடல்தான். ஆனாலும் அவளால் ஒன்றவே முடியவில்லை. அவ்வளவு பேசிவிட்டு அவன் முத்தம் கொடுத்தால் ரசிக்கவா முடியும்? மனமெல்லாம் வலித்தது.

அவளை ஆட்கொண்டவனோ, அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான். விட்டத்தைப் பார்த்துக் கொண்டே படுத்த பெண்ணவளுக்கு தூக்கம் வரவில்லை, அழுகை தான் வந்தது. கண்ணீருடன் மெதுவாக தூங்கிப் போனவள், காலையில் கண் விழித்த போது கட்டில் வெறுமையாக இருந்தது.

அவன் காலையிலேயே கிளம்பி இருந்தான். எங்கே செல்கின்றான் என்று சொல்லவும் இல்லை. அவளுக்கோ அன்று கல்லூரியும் இல்லை. எழுந்து வெளியே வந்தாள். வழக்கமாக சமைத்து வைப்பவன், இன்று சமைத்தும் வைக்கவில்லை. தலையை அழுந்த பற்றிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தவள், தனக்குத் தானே டீ போட தொடங்கி இருந்தாள்.

***

இதே சமயம், சக்திவேல் வீட்டில் வந்தனாவின் திருமண விஷயத்தைப் பற்றி பார்த்தீபன் கேட்க, "கொஞ்ச நாள் போகட்டும் சம்பந்தி." என்று அவன் சமாளித்து இருந்தான்.

வந்தனாவோ விருந்து என்றாலே வழக்கமாக துறுதுறுவென ஓடித் திரிவாள். இன்று அறைக்குள்ளேயே முடங்கி இருக்க அவள் அலைபேசி அலறியது. எடுத்தது அவள் கல்லூரி நண்பிதான்.

"வினோவோட மெஹந்தி ஃபங்க்ஷனுக்கு வர்றியா வந்தனா?" என்று கேட்க, அப்போதுதான் கூடப் படித்த நண்பியின் திருமண நிகழ்வே நினைவுக்கு வந்தது.

முதலில் 'இல்லை' என்று சொல்ல யோசித்தவள், சட்டென 'ஆம்' என்று சொல்லி இருந்தாள். அவள் மனதில் விஜய்யின் எண்ணம். இன்று அவனைப் பார்த்து விடலாம் என்று தோன்றியது. அவளை சும்மா வெளியே விடமாட்டார்கள். இதனை சொல்லிதான் அவள் வெளியே செல்ல வேண்டும். வினோவின் வீடு அடுத்த ஊரில் இருக்கின்றது.

இந்த ஊர் என்றால் தானே விஜய்யை பார்ப்பதற்காக செல்கின்றாள் என்று சந்தேப்படுவார்கள். அடுத்த ஊர் என்றால் இந்த சந்தேகம் எல்லாம் வராது தானே? அந்த நம்பிக்கையிலேயே சம்மதம் சொல்லி இருந்தாள். அலைபேசியில் பேசி முடிய, சற்று நேரம் யோசித்துவிட்டு வெளியே வந்தவள் தயாளனை தேடிதான் சென்றாள்.

அவன் வாசலில் நின்று இருக்க, "அப்பா!" என்றாள்.

அவனும், "ம்ம்..." என்று சொல்ல, "வினோவோட மெஹந்தி ஃபங்க்ஷன் இருக்கு இன்னைக்கு." என்று சொல்ல, "போகணும்னு இல்லை." என்றான் அவன்.

"ஏன்பா இப்படி சொல்றீங்க? பக்கத்து ஊர் தானே?" என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், "அதெல்லாம் வேணாம்." என்று சொல்ல,

"என் மேல அவ்ளோ தான் நம்பிக்கையா? ட்ரைவர் கூட தானே போக போறேன். திரும்ப எப்படியும் ட்ரைவர் கூடதான் வருவேன். இடையில் இவ்ளோ தூரம் எல்லாம் நான் தனியா வர மாட்டேன். போகலன்னா தப்பாயிடும்பா." என்று கெஞ்சுதலாக கேட்க, அவளை ஒரு கட்டத்துக்கு மேல் அடக்கி வைக்க அவனுக்கும் இஷ்டம் இல்லை.

விஜய்யும் காதலிக்கின்றான் என்றால் விட்டு இருக்கவே மாட்டான். அவளுடையதோ ஒருதலை காதல். அடுத்த ஊரில் இருக்கும் வினோவின் வீட்டில் இருந்து, இந்த ஊரில் இருக்கும் விஜய்யின் வீட்டுக்கு அன்று நடந்து சென்றது போல நடந்து செல்லவும் முடியாது.

எல்லாவற்றையும் யோசித்தவன், "போறதும் வர்றதுமா இருக்கணும்." என்றான்.

அவளும் புன்னகையுடன், "சரிப்பா." என்று சொன்னவள், அன்று மாலை செல்வதற்கு உடைகளை எடுத்து ஆயத்தமாக ஆரம்பித்து விட்டாள்.

கற்கள் வேலைப்பாடு செய்யப்பட்ட நீல நிற புடவையை எடுத்துக் கொண்டு, அதற்கான நகைகளைத் தேடி எடுத்துக் கொண்டு இருக்க, "என்னம்மா பண்ணுற?" என்று கேட்டுக் கொண்டே குழந்தையுடன் உள்ளே வந்தாள் பல்லவி.

"ஈவ்னிங் ஃப்ரெண்டோட மெஹந்தி ஃபங்க்ஷன் அண்ணி." என்று சொல்ல, அவற்றைப் பார்த்தவளோ, "இந்த புடவைக்கு மேட்ச்சா என்கிட்ட ஜிமிக்கி இருக்கு, கொடுக்கவா?" என்று கேட்க, "கொடுங்களேன்..." என்றாள்.

பல்லவியும் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்தவள், ஜிமிக்கியை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க, "ஐயோ! எவ்ளோ அழகா இருக்கு...!" என்று சொல்லிக் கொண்டே அதனை காதில் வைத்துப் பார்த்தவள், "எனக்கு அழகா இருக்கா?" என்று கேட்க, "ரொம்ப ரொம்ப அழகா இருக்கு." என்றாள் பல்லவி.

நிறைய நாட்கள் கழித்து அவள் முகத்தில் புன்னகையைப் பார்த்த பல்லவிக்கு நிறைவாக இருந்தது.

அன்று இரவு ஏழு மணி போலதான் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, அழகாக புடவை அணிந்து வெளியே வந்தவளைப் பார்த்த துளசி, "ரொம்ப அழகா இருக்க வந்தனா." என்று கையால் சுற்றிப் போட்டுக் கொள்ள,

விஜயாவோ பெருமூச்சுடன் அவளைப் பார்க்க, "அப்போ நான் கிளம்புறேன்." என்று சொல்லி, அவர்களின் சாரதியான மணியுடன் கிளம்பினாள்.

மணியுடன் சென்று கல்யாண வீட்டில் இறங்கிக் கொண்டவள், "ஒன்பதரை போல வாங்க அண்ணன்." என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு, வீட்டினுள் நுழைந்து கொண்டாள்.

ஒரு அரை மணி நேரம் தான் அங்கே கழித்து இருப்பாள்.

அதன்பிறகு, "நான் இப்போ கிளம்புறேன் வினோ." என்று சொல்ல, "சாப்பிட்டு போடி." என்றாள் அவள்.

"அட! இல்லை, கொஞ்சம் வேலை இருக்கு." என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தவள், அங்கே இருந்த தெருவில் வந்து ஆட்டோ ஏதும் வருமா என்று பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அவளுக்கு விஜய்யின் வீட்டைத் தேடி செல்ல வேண்டும். ஆட்டோவில் அவ்வளவு தூரம் செல்வது தான் உசிதம் என்று தோன்றியது. ஒரு ஒடுங்கிய வீதியினூடு தான், அவர்கள் வீட்டில் இருந்து மெயின் வீதிக்கு வர வேண்டும். இருளில் பயம் இல்லாமல் நடந்து வந்து விட்டாள். விஜய் என்று சொன்னாலே, அவளுக்கு எங்கிருந்து இந்த குருட்டு தைரியம் எல்லாம் வருகின்றது என்று அவளுக்கே தெரியாது...

சற்று நெரிசல் குறைவான அந்த வயல்கள் சுற்றி இருக்கும் இடத்தில், பெரிதாக ஆட்கள் நடமாட்டமே இல்லை. நேரம் எட்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது. மழை தூறிக் கொண்டு வேறு இருந்தது.

கொஞ்சம் அவளுக்கு பயமாக இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நின்று இருந்தவள் கண்ணில் பட்டது என்னவோ, அந்த வழியால் வந்த அர்ஜுனின் கருப்பு நிற ஜாகுவார்தான்.

"மாமா..." என்று மென் புன்னகையுடன் சொல்லிக் கொண்டவள் மனமோ, 'இவர் கூடவே போயிடலாம்.' என்று நினைத்து அதற்கு கை காட்ட, அர்ஜுனின் காரும் அவள் முன்னே பிரேக் அடித்து நின்று இருந்தது.
 

Lakshmi CT

Member
வந்தனா போற ஸ்பீட பாத்தா விஜய கல்யாணம் பண்ணிட்டு தான் ஓய்வா போல😍 ஆனா சுத்தம் சாத்தான்ட்ட உதவி கேக்குறதப் பாரு, இவன் ஒரு வீணாப் போன கிறுக்கனாச்சே. இவனுக்கு கல்யாணம் ஒரு கேடு😡😡
 
Last edited:

AmmuLeela

Member
அர்ஜுனுக்கு ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன் அப்படியே இருந்தாலும் ராகவி கிட்ட இப்படியா பேசுவான் 😡😡😡 பாவம் ராகவி.வந்தனா அர்ஜுன் கிட்ட லிஃப்ட் ஆ சுவாரஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👏👏👏👏👏👏 அடுத்த பதிவிற்கு ஆவளுடன்.
 
Top