ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 62

pommu

Administrator
Staff member

நிலவு 62

வீட்டுக்கு வரும் வரை தயாளன் வாய் திறந்து பேசவே இல்லை. அவன் ஜீப் ஓட்டிய வேகமே அவன் கோபத்தை பறைசாற்ற, வந்தனாவோ நெஞ்சில் நீர் வற்ற தான் அமர்ந்து இருந்தாள். வீடும் வந்து சேர்ந்து விட்டது.

ஜீப்பில் இருந்து இறங்கிய வந்தனாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைய, "அப்பா கை வலிக்குதுப்பா..." என்று பெண்ணவள் அழுகையுடன் கெஞ்ச, அவளை இழுத்து ஹாலில் விட்டவன் ஓங்கி ஒரு அறை. யாருமே எதிர்பார்க்கவில்லை.

அவளோ தடுமாறி விழப் போக அவளை எட்டி பற்றிப் பிடித்த சக்திவேலோ, "வளர்ந்த பொண்ண எதுக்கு அடிக்கிற?" என்று சீற,

"இவ என்ன பண்ணி வச்சு இருக்கா தெரியுமா அண்ணா?" என்று ஆத்திரத்துடன் சீறினான் தயாளன்.

"என்னாச்சு?" என்று சக்திவேல் கேட்க, "கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு விஜய் வீட்டுக்கு போய், என் கண் முன்னாலேயே... ச்சீ... அத எப்படி என் வாயால சொல்றது?" என்று எரிச்சலுடன் கேட்டான்.

எல்லாருக்குமே அதிர்ச்சிதான்.

"என்னம்மா இது?" என்று சக்திவேல் கேட்க, வந்தனாவோ அழுகையுடன், "எனக்கு விஜய்யை பிடிச்சு இருக்கு பெரியப்பா, அவரை தான் கல்யாணம் பண்ணுவேன்." என்றாள்.

"அறைஞ்சேன்னா?" என்று தயாளன் சீறிக் கொண்டே அவளை நெருங்க, அவனை எட்டிப் பற்றிப் பிடித்த கஜனோ, "சித்தப்பா, கொஞ்சம் அமைதியா இருங்க, என்னன்னு விசாரிக்கலாம்." என்று சொல்ல,

"அவனுக்கு என் பொண்ண கட்டி கொடுக்க மாட்டேன்." என்றாள் விஜயா அழுத்தமாக.

"சரி கொஞ்சம் இருங்க, ஆறுதலா பேசலாம்." என்று சொன்ன கஜனோ சக்திவேலைப் பார்க்க, "விஜய்யை வர சொல்லு, விசாரிச்சு ஒரு முடிவுக்கு வரலாம்" என்றான் சக்திவேல்.

"அவன் எதுக்கு இங்க?" என்று தயாளன் எகிற, "விசாரிக்கலாம்டா." என்றான்.

"அப்போ ரெண்டு பேருக்கும் இஷ்டம்னு சொன்னா கட்டி கொடுக்கிறதா? இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்." என்று தயாளன் சொல்ல,

"உன் சம்மதம் இல்லாம எதுவும் பண்ண போறது இல்லை. அவ மேல முழு உரிமை உனக்குதான் இருக்கு. முதல்ல என்னாச்சுன்னு கேட்கலாம்." என்று சொல்ல, கஜனும் விஜய்க்கு அழைத்து இருந்தான்.

விஜய் இதனை எதிர்பார்த்தான் தான்.

கஜன் அழைத்ததும், "அண்ணன்..." என்று அவன் சற்று பதட்டமாகவே சொல்ல, "சீக்கிரம் வீட்டுக்கு வா." என்று சொல்லி கஜன் வைத்துவிட, அவனும் அவர்களின் வீட்டுக்கு கிளம்பி இருந்தான்.

விஜயாவோ அழுகையுடன், "அன்னைக்கே அவன்கிட்ட சொன்னேன், வீட்டு பக்கம் வர வேணாம்னு. அவன் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போல..." என்று திட்டினாள்.

கஜனுக்கு இப்போதுதான் விஜய் ஏன் வீட்டுக்கு வருவது இல்லை என்று தெளிவாக புரிந்தது.

வந்தனாவை அருகே அமர்த்திக் கொண்டு, சக்திவேல் அவள் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான். இல்லை என்றால் அவளை ஒரு வழி பண்ணி விடுவார்களே? அவன் மகள் என்றால் அவன் நடவடிக்கை வேறுதான். விஜய் பற்றி அவனுக்கு நல்ல அபிப்ராயம் தான். இருவரும் மனம் ஒத்துப்போனால் திருமணமே செய்து வைத்து விடுவான். அவனுக்கு இந்த ஜாதி, தகுதியில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் விஜயாவைப் பற்றி அவனுக்கு தெரியும். கொஞ்சம் தகுதி, தராதரம் பார்ப்பாள்.

அவள் மகளின் முடிவில் அவன் தலையிட முடியாது. என்னதான் ஒரு தாய், பிள்ளைகள் போல வளர்ந்தாலும் கஜனுக்கும் சட்டென அவள் விஷயத்தில் முடிவெடுக்க முடியாத நிலைதான். வந்தனாவோ அழுகையுடன் தலையைத் தாழ்த்தியபடி அமர்ந்து இருக்க, விஜய்யின் வண்டியும் வீட்டினுள் நுழைந்தது. ஜீன்ஸ் மற்றும் ஷேர்ட்டுடன் வீட்டினுள் நுழைந்தவனுக்கு கொஞ்சம் சங்கடம்தான்.

கையைக் கட்டிக் கொண்டு நின்று இருந்தவனை ஏறிட்டுப் பார்த்த சக்திவேலோ, "தயாளன் சொல்றது உண்மையா?" என்று கேட்டான்.

விஜய்யும், "நான் உங்களுக்கு எப்போவும் துரோகம் பண்ண மாட்டேன் ஐயா." என்றான்.

வந்தனா விலுக்கென அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"அப்போ ஏன் அவ உன்னை தேடி வந்தா? அதுவும் வீட்டுக்கு ஏன் வந்தா?" என்று கேட்க, அவனோ எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு வந்தனாவைப் பார்க்க, "இத்தனை நாள் பார்க்கலன்னு தேடி போனேன்." என்று அவள்தான் அவனுக்காக பதில் சொன்னாள்.

சக்திவேல் இப்போது தயாளனைப் பார்க்க, "எவ்ளோ நெஞ்சழுத்தம் பாருங்க, எப்படி பதில் சொல்றானு...?" என்று சீற, "எனக்கு அவரை பிடிச்சு இருக்குப்பா..." என்றாள் அவனை ஏறிட்டு அழுகையுடன் பார்த்துக் கொண்டே.

"அவன்தான் வேணாம்னு சொல்றான்ல, எதுக்குடி பின்னால போற? அசிங்கமா இல்லையா?" என்று விஜயா ஆத்திரத்தில் கத்த, "வார்த்தையை பார்த்து விடு விஜயா." என்றாள் ஜெயந்தி.

"என்னால் முடியல அக்கா, எனக்கு ஆத்திரமா வருது. அவளை அடிச்சு கொல்லணும் போல இருக்கு." என்று சொன்னாள்.

விஜய்க்கு அந்த இடத்தில் என்ன சொல்லிவிட முடியும்? மௌனம்தான்! வந்தனாவைப் பார்க்க பாவமாக இருந்தது. அவனுக்கும் அவளைப் பிடித்து இருந்தது. ஆனால் இந்த தகுதியும் தராதரமும் அவனுக்கு தடையாக இருக்க மௌனித்துப் போனான். கஜன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான் தவிர எதுவும் பேசவில்லை.

சக்திவேலோ, "உனக்கு வந்தனா மேல...?" என்று இழுவையாக கேட்டான் விஜய்யிடம்.

வந்தனாவின் பார்வை அவனிலேயே பதிந்து இருந்தது. அவன் தன்னை காதலிக்கிறான் என்று அவளுக்கும் தெரியும். இப்போது அவன் சொல்லும் வார்த்தையில் தான் அவள் காதலை, அவள் போராடி வாழ வைக்கலாம். அவன் மட்டும் இல்லை என்று சொல்லி விட்டான் என்றால், எதுவுமே இல்லை என்று ஆகிவிடும்.

அவனோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவன், "நான் உங்களுக்கு எப்போவும் துரோகம் பண்ண மாட்டேன் ஐயா." என்று சொல்லி விட்டான்.

அவள் மனதுக்குள் ஏதோ அழுத்துவது போல இருந்தது. அவனையே உயிர்ப்பில்லாமல் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

சக்திவேலும், "அப்போ தப்பு நம்ம பொண்ணு மேலதான் தயாளன்." என்று சொல்ல, "இவளை என்ன பண்ணுறது அண்ணா? கல்யாணம் பேசுற நேரத்துல இப்படி பண்ணிட்டு இருக்கா..." என்று எரிச்சலாக சொல்ல,

மதியழகனோ, "சீக்கிரம் கல்யாணத்த பண்ணி வச்சுட்டா சரி ஆயிடும்." என்றான்.

நொறுங்கி விட்டாள் அவள். ஏதோ அவள் திருமணத்துக்கு அலைவது போல அல்லவா பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவள், "எனக்கு கல்யாணம் வேணாம், விஜய்யை மட்டும்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்." என்று அழுத்தமாக சொல்ல,

"என்னடி சொன்ன?" என்று கேட்டுக் கொண்டே எட்டி அவள் முடியை தயாளன் பிடித்து இருக்க, அவன் கையைப் பற்றிய சக்திவேலோ,

"கையை எடு தயாளன், இது ஒன்னும் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு முடிக்கிற விஷயம் இல்லை. நிதானமா பேசலாம்..." என்று சொன்னான்.

"இவளை பெத்ததுக்கு நான் செத்து இருக்கலாம்." என்று அவன் சொல்ல, "உள்ளே போம்மா..." என்று சொன்னான் சக்திவேல்.

அவளும் எழுந்து அழுகையுடன் உள்ளே செல்ல, அவள் முதுகைப் பார்த்த விஜய்க்கு பெருமூச்சுதான்.

கஜனோ அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு வெளியே அழைத்து வந்தான். அவன் காரில் சாய்ந்து நின்று கொண்டு, "உண்மையாவே உனக்கு அவளை பிடிக்காதா என்ன?" என்று கேட்டான்.

அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே, "உங்களுக்கு துரோகம் பண்ண மாட்டேன்." என்றான்.

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே?" என்று சொல்ல, "பிடிச்சது எல்லாம் அடைஞ்சிட முடியுமா?" என்று அவன் கேட்டுக் கொண்டே நகர,

"எனக்கு அதிக உரிமை இருக்கிற பொருள்னா நானே தூக்கி கொடுத்துடுவேன். இப்போ வேற வழி இல்லை, நானும் மௌனமா தான் இருக்கணும்." என்று சொல்லிக் கொண்டே விறுவிறுவென உள்ளே நுழைய, அவன் முதுகை அதிர்ந்து பார்த்தான் விஜய்.

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்தவனோ, வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அறைக்குள் வந்த வந்தனாவுக்கோ அழுகை நிற்கவே இல்லை. கட்டிலில் படுத்து அழ ஆரம்பித்து இருந்தவளது முதுகை வருடினாள் பல்லவி.

கண்ணீருடன் எழுந்து அமர்ந்தவளோ, "அவருக்கும் என்னை பிடிக்கும் அண்ணி, அது எனக்கு நல்லாவே தெரியும். இவங்களுக்காக பிடிக்கலன்னு சொல்றார்..." என்று சொல்ல, அவளை அணைத்துக் கொண்டவளோ, "இப்போ என்ன பண்ணிட முடியும்? ரெண்டு பக்கமும் சம்மதம்னு சொன்னா தானே மேற்கொண்டு பேசலாம். இப்போ பேசவும் முடியாதே..." என்று சொல்ல,

"ஆனா என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது." என்றாள் ஆணித்தரமாக.

"சரி, இப்போ கொஞ்சம் அமைதியா இரு. உடனே யாரும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறது இல்லை, நிதானமா பேசலாம்." என்று சொல்ல, அவளுக்கும் அந்த வார்த்தை தெம்பைக் கொடுக்க, அழுகையுடன் பல்லவியை அணைத்துக் கொண்டாள்.

***

வீட்டுக்கு வந்த விஜய்க்கு தலை விண்விண்னென்று வலித்தது. சாப்பிடவும் மனம் இல்லை. அறைக்குள் வந்து தொப்பென கண் மூடி படுத்துக் கொண்டான். இன்னும் அவள் முத்தம் பதித்த இதழ்கள் குறுகுறுத்துக் கொண்டு இருந்தன. இருவருக்குமான முதல் முத்தம் அது. இதழ் ஈரம் காய முதலே, அவள் காதலைக் குழி தோண்டி புதைத்து விட்டு வந்திருக்கின்றான். அவளைப் பிடித்து இருக்கின்றது என்பதைத் தாண்டி காதலும் இருக்கின்றது.

அதுவும் முத்தமிட்ட பிறகு அவள் தனக்கே உரியவள் என்கின்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது. அவளை விட்டுக் கொடுப்பது அவனுக்கும் வலிதான். ஆனால் அவனால் வேறு என்ன செய்துவிட முடியும்? இரு கைகளாலும் அழுந்த முகத்தைத் தேய்த்துக் கொண்டவனுக்கு, சட்டென அவள் நினைவில் இருந்து வெளியே வரவே முடியவில்லை.

***

இதே சமயம், அன்று இரவு எல்லோரும் வந்தனாவைப் பற்றிதான் சக்திவேல் வீட்டில் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

"பேங்க் மாப்பிள்ளையை பார்த்து முடிச்சிடலாம் அண்ணா, எனக்கு வந்தனாவை நினைச்சு பயமா இருக்கு." என்று சொன்னான் தயாளன்.

கஜனோ, "இவ்ளோ உறுதியா அவ பேசும் போது சம்மதிப்பானு நினைக்கிறீங்களா சித்தப்பா?" என்று கேட்டான்.

"வேற என்ன வழிதான் இருக்கு? நான் கூட அந்த விஜய் மேல சந்தேகப்பட்டேன். இவதான் தேடி அவனையும் தொந்தரவு பண்ணிட்டு இருக்கா..." என்று சொல்ல,

சக்திவேலோ, "கல்யாணம் பண்ணி வைக்கிறது சரி, கையை, காலை கட்டியா மணமேடைல உட்கார வைக்க முடியும்? அவ கொஞ்சமாச்சும் சரின்னு சொல்லணும். அதுக்கு நம்ம கொஞ்சம் டைம் எடுத்துக்கிறது தப்பில்லை." என்று சொன்னான்.

"அவ எப்போ சரின்னு சொல்லி... எப்போ கல்யாணம் பண்ணுறது?" என்று விஜயா பதற,

"என்ன பண்ணலாம்னு அப்போ நீயே சொல்லு." என்று கேட்டான் சக்திவேல்.

அவளிடம் அதற்கு பதில் இல்லை, மௌனமாகி விட்டாள்.

கல்யாண மேடையில் உட்கார அவள் சம்மதித்து ஆக வேண்டும். இப்படி முரண்டு பிடிப்பவளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்? அவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியவில்லை. அதே சமயம் விஜய்யை திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு மனமும் இல்லை.

சக்திவேல் மற்றும் கஜன் இதனைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், விஜயா தராதரம் பார்ப்பதில் உறுதியாக இருந்தாள்.

அன்று இரவு பல்லவியோ, "விஜய்க்கும் வந்தனாவை பிடிக்கும்னு தோனுது." என்றாள்.

"பிடிக்கும்தான்..." என்றான் கஜன்.

அவனை அதிர்ந்த பார்த்த பல்லவியோ, "அப்போ கல்யாணம் பண்ணி வைக்கலாமே?" என்று சொல்ல, "அவ என் சொந்த தங்கச்சின்னா நானே முடிவு எடுத்து இருப்பேன். இப்போ அவ அம்மா, அப்பாவை தாண்டி என்னால முடிவு எடுக்க முடியாது பல்லவி. என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாருன்னு ஒரு வார்த்தை கேட்டாலே குடும்பம் உடைஞ்சிடும்." என்று உண்மையான வருத்தத்துடன் சொல்ல,

"அவளை பார்க்கவே பாவமா இருக்கு." என்றாள் பல்லவி.

"எனக்கும் தான்... ஆனா என்ன பண்ணிட முடியும்?" என்று அவனும் சலிப்பாக சொல்லிக் கொள்ள, அவர்களை எப்படி சேர்த்து வைப்பது என்று தெரியாமல் யோசித்தபடி தூங்கி இருந்தாள் பெண்ணவள்.
 
Top