ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 61

pommu

Administrator
Staff member

நிலவு 61

அனைவரின் நாட்களும் அழகாக நகர்ந்த போதிலும், சோகமே உருவாக இருந்தது என்னவோ வந்தனா தான். அவளது திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்த தருணம் அது. அவளுக்கு எப்படி அதனை தடுத்து நிறுத்துவது என்று தெரியவில்லை. விஜய் வேறு அவர்கள் வீட்டுப் பக்கமே வருவது இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போன பெண்ணவளுக்கு, விஜய்யை வீட்டுக்கு சென்றே பார்த்து விட்டு வந்தால் என்ன என்று தோன்றியது.

ஆனால் எப்படி வீட்டில் சொல்வது? அவளுக்கு வேறு வண்டி ஓட்ட தெரியாது. எப்படியும் டிரைவருடன் தான் செல்ல வேண்டும். விஜய்யின் வீடு கோவிலுக்கு அருகே தான் இருக்கின்றது. அதனை யோசித்து திட்டமும் போட்டு விட்டாள்.

அன்று மாலை, "கோவிலுக்கு போறேன் அப்பா." என்று சொன்னவள் டிரைவருடன் கோவிலுக்கு புறப்பட்டு இருந்தாள்.

"நான் பஜனை எல்லாம் முடிச்சுதான் வருவேன், நீங்க போங்க. நான் வர்ற நேரம் கூப்பிடுறேன்." என்று ட்ரைவரை அனுப்பிய பெண்ணவளும், கார் அங்கிருந்து சென்றதுமே பொடி நடையாக விஜய்யின் வீட்டுக்கு வந்து விட்டாள்.

அவன் வண்டி வாசலில் நிற்க, ‘உள்ளே தான் சார் இருக்கார் போல’ என்று நினைத்தபடி கதவைத் தட்டினாள்.

அவன் அப்போது தான் வேலை முடிந்து குளித்துவிட்டு வந்தவன் கதவை திறந்தான். தூக்கிவாரிப் போட்டது. நீல நிற புடவை, தலையில் மல்லிகை பூக்கள் சூடி பெண்ணவள் நின்று இருந்தாள்.

"நீ எங்க இங்க?" என்று அவன் அதிர, "ஆஹ்! இத்தனை நாள் பார்க்கவே கிடைக்கல..." என்று அவனை உரசிக் கொண்டே உள்ளே வர, அவனோ சட்டென விலகி நின்றான்.

அவன் வேஷ்டி மட்டுமே அணிந்து இருக்க, "வெளிய போ." என்றான் அவன் அவசரமாக.

"ஹலோ, அதெல்லாம் முடியாது." என்று சொல்லிக் கொண்டே வீட்டினை சுற்றிப் பார்த்தவள், "பரவாயில்லையே, வீடு அழகா இருக்கு. எனக்கு வேலை குறைவு அப்போ..." என்றாள்.

அவனுக்கோ பதட்டம். அவளுக்கு கொஞ்சமும் பயம் இல்லை.

"வெளிய போ வந்தனா." என்றான் ஆத்திரத்துடன்.

அவன் முன்னே வந்து நின்றவள், "எனக்கு கல்யாணம் பேசுறாங்க விஜய், எனக்கு உங்கள தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை." என்றாள்.

"எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல." என்றான் அழுத்தமாக.

"உங்க கண் அப்படி சொல்லவே இல்லையே? என்னை ரசிச்சு தானே பார்க்குது." என்று சொன்னவளை முறைத்தவன், "லூசுத்தனமா பேசாம கிளம்புடி..." என்றான்.

அவளோ அவனை நெருங்கி நின்றவள், "உண்மையாவே என்னை பிடிக்கலையா?" என்று அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

"பிடிக்கல." என்றான் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

"கண்ண பார்த்து சொல்லுங்க." என்றாள்.

அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன், "இப்போ எதுக்கு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க? பிடிச்சு இருந்தா போல கல்யாணம் பண்ணிக்க முடியுமா? தகுதின்னு ஒன்னு இருக்கும்மா..." என்றான்.

அவள் இதழ்கள் மெலிதாக விரிய, "பிடிக்கலன்னு கண்ண பார்த்து சொல்ல முடியலைன்னா பிடிச்சு இருக்குன்னுதானே அர்த்தம்?" என்றாள்.

அவளை முறைத்துக் கொண்டே, "யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க வந்தனா, ப்ளீஸ் கிளம்பு." என்றான் கெஞ்சும் குரலில்.

அவள் கண்கள் கலங்கி விட்டன.

"விஜய் என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது." என்றாள்.

"அதுக்கு நான் என்ன பண்ணுறது?" என்று கேட்டான்.

"ஓகே சொல்லி, வீட்ல பேசிப் பார்க்கலாம்." என்றான்.

"இங்க பாரு வந்தனா, இதெல்லாம் சும்மா ஒரு ஈர்ப்பு தான். கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழப் பாரு ப்ளீஸ்..." என்று கெஞ்சுதலாக கேட்டான்.

"என்னால முடியாது விஜய்..." என்று சொல்லிக் கொண்டே அவனை இறுக அணைத்து இருக்க, அவனுக்கோ தூக்கிவாரிப் போட்டது.

அணைத்துக் கொண்டே அவள் அழ, அவள் கண்ணீர் அவன் வெற்று மார்பை வேறு நனைத்தது.

"வந்தனா தள்ளு..." என்று சொல்லிக் கொண்டே அவள் தோள்களைப் பிடித்து வலுக்கட்டாயமாக தன்னில் இருந்து பிரித்து தள்ளி நிறுத்தியவனோ, "வந்தனா புரிஞ்சுக்கோ, இது எல்லாம் சரி வராது. எனக்கு சோறு போட்ட குடும்பத்துக்கு நான் எப்போவும் துரோகம் பண்ண மாட்டேன். நீ முதல்ல கிளம்பு..." என்றான்.

"விஜய், நான் எவ்ளோ கெஞ்சுறேன்? உங்களுக்கும் என்னை பிடிக்கும் தானே? அப்புறம் ஏன் இப்படி பேசுறீங்க?" என்று கேட்டாள்.

"பிடிச்ச எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது வந்தனா..." என்று அவன் சொல்லி முடிக்க முதலே, நுனி விரலில் எம்பியவள், அவன் முகத்தைத் தாங்கி அவன் இதழில் இதழ் பதித்து இருக்க, அவனுக்கோ தூக்கிவாரிப் போட்டது.

இப்படி ஒரு அதிரடியை அவன் அவளிடம் எதிர்பார்க்கவே இல்லை. அவன் மீது எந்தளவு நம்பிக்கை இருந்து இருந்தால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இதழ் அணைத்து இருப்பாள்?

வேகமாக அவளைத் தன்னில் இருந்து பிரித்து எடுத்தவனோ, ஓங்கி ஒரே அறை. அவள் நிலை குலைந்து கீழே விழுந்து விட்டாள்.

"ப்ச்!" என்று பிடரியை வருட, அவளோ நிலத்தில் அமர்ந்து கன்னத்தைப் பொத்தியபடி அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ, விம்மலுடன் அழ ஆரம்பித்து விட,

"சாரி... சாரி..." என்று சொல்லிக் கொண்டே அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன், "எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க?" என்று கேட்டான்.

"எனக்கு நீங்க வேணும்." என்றாள்.

"வந்தனா கொஞ்சம் பேசுறத கேளு..." என்று அவன் ஆரம்பிக்க, "எனக்கு நீங்க வேணும்." என்றாள் அவள் மீண்டும்.

அவன் விளக்கத்தை அவள் கேட்கவே தயாராக இல்லை. “இதெல்லாம் விளையாட்டு இல்ல வந்தனா, கொஞ்சம் யோசிச்சுப் பாரு. உங்க வீட்ல சம்மதிக்கவே மாட்டாங்க." என்றான்.

"திருட்டு கல்யாணம் பண்ணிக்கலாம், ராகவி பண்ணிக்கிட்டா தானே?" என்றாள்.

ஐயோடா என்று இருந்தது அவனுக்கு.

"அதுக்காக நீயும் அவங்க மனச உடைக்க போறியா? கொஞ்சமாச்சும் நல்ல விஷயங்களை யோசிக்க மாட்டியா?" என்று கேட்டான்.

"அண்ணாகிட்ட சொல்லிடலாம் விஜய், அண்ணா எப்படியும் சேர்த்து வைப்பார்." என்றாள்.

"வந்தனா, நீ உன்னை பத்தி மட்டுமே யோசிக்கிற... என்னை பத்தி யோசிச்சுப் பாரு. எனக்கு யாருமே இல்லாத நேரம் என்னை படிக்க வச்சது சக்திவேல் ஐயா. என்னை இவ்ளோ ஆளாக்குனது அவர்தான். உண்ட வீட்டுக்கு நான் ரெண்டகம் பண்ண மாட்டேன். உனக்கு பொருத்தமான மாப்பிள்ளை வருவான். கல்யாணம் பண்ணி சந்தோஷமா இரும்மா." என்றான்.

"மனசுல உங்கள வச்சுட்டு இன்னொருத்தன் கூட நான் எப்படி சந்தோஷமா இருக்கிறது விஜய்?" என்று அவள் கண்ணீருடன் கேட்க, "திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்கியே... உன்னை யாரு இங்க வர சொன்னது?" என்று சீறினான்.

"நீங்க ஏன் வீட்டுக்கு வர்றது இல்லை? அதான் தேடி வந்தேன்." என்றாள்.

நெற்றியை அழுத்தமாக வருடிவிட்டு அவளைப் பார்த்தவன், "சரி கிளம்பு, அப்புறம் பேசிக்கலாம்." என்றான்.

"அப்புறம் எப்படி பேசுறது?" என்றாள் அவள்.

"இப்போ எப்படி பேசுறது?" என்று அவன் கேட்க, "என்னை பிடிக்குமா? இல்லையா? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க." என்றாள்.

"பிடிக்கும், ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியாது." என்று அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

"அப்போ கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்கலாம் மாமா." என்றாள்.

"செருப்பு பிஞ்சிடும்." என்றான்.

"பிஞ்சா தச்சுக்கலாம்." என்றாள்.

அவளை முறைத்தவன், "இப்போதான் அடி வாங்கின, இப்படி பேசிட்டு இருக்க?" என்று கேட்டுக் கொண்டே அவள் தாடையைப் பற்றி திருப்பி அவள் கன்னத்தைப் பார்த்தவன், "வலிக்குதா?" என்று கேட்டான்.

"ம்ம்... ஒரு கிஸ் கொடுங்க, சரி ஆயிடும்." என்று சொல்ல, "இன்னும் ரெண்டு கொடுத்து இருக்கணும்." என்று சொல்லிக் கொண்டே எழ முற்பட, அவள் அப்போதும் அடங்காமல் எட்டி அவன் இதழில் அதிரடியாக இதழ் பதித்து விலக, அவளை முறைத்துக் கொண்டே இதழ்களைப் புறங்கையால் துடைத்தபடி எழுந்தவன், "இதெல்லாம் தப்பு வந்தனா." என்றான்.

அவளோ கையை நீட்டினாள்.

"நீயே எந்திரி." என்றான்.

"இல்ல மாட்டேன், இங்கேயே இருந்திடுவேன்." என்று சொன்னவளை முறைத்துக் கொண்டே கையை நீட்ட, அவளும் அவன் கையைப் பற்றிக் கொண்டு எழுந்தாள்.

"உனக்கு அடிச்சாலும் சொரணை வராதா?" என்று கேட்டான்.

"உங்ககிட்ட நோ வெட்கம், நோ சூடு, நோ சொரணை..." என்று கண் சிமிட்டி சொல்ல, "சரி கிளம்பு." என்றான் வாசலைக் கையினால் காட்டி.

அவனையே மயக்கமாக பார்த்தவள், "கிஸ் எப்படி இருந்திச்சு மாமா?" என்று கேட்டாள்.

"கொன்னுடுவேன், போடி..." என்றான்.

"எனக்கு செமயா இருந்திச்சு..." என்று அவள் கண்களை சிமிட்டி சொல்ல, "ஐயோ! ப்ளீஸ்... போயிடு வந்தனா..." என்று தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி கெஞ்சுதலாக கேட்டான்.

அவனே முரடன், அவனையே கெஞ்ச வைத்து விட்டாளே?!

அவனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே, "உங்கள நான் புருஷனாவே நினைச்சுட்டேன், அதான் இவ்ளோ உரிமை எடுத்துக்கிறேன்." என்றாள்.

இடையில் கையைக் குற்றி அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், இதழ் குவித்து ஊதிக் கொண்டே, "யாராச்சும் பார்த்தா பிரச்சனை வந்தனா, நீ முதல்ல கிளம்பு." என்று சொன்னான்.

"மாமா..." என்றாள் இழுவையாக.

"என்னடி வேணும்?" என்று எரிச்சலாக கேட்டான்.

"நீங்க தான்..." என்றாள்.

"இது தப்பு, புரிஞ்சுக்கோ..." என்றான்.

"தப்பாவே இருக்கட்டும், நீங்க இல்லன்னா செத்திடுவேன்." என்றாள்.

"வயசு கோளாறுல பேசிட்டு இருக்க..." என்று சொன்னான்.

"சரி, ஒரு கிஸ் கொடுங்க, கிளம்புறேன்." என்றாள்.

"செருப்பால அடிப்பேன், போடி..." என்று திட்டினான்.

"செருப்பால அடிச்சுட்டாவது கிஸ் கொடுங்க." என்றாள்.

அவளை எப்படி சமாளிப்பது என்றே அவனுக்கு தெரியவில்லை.

"உனக்கு பயமே இல்லையா?" என்று கேட்டான்.

"உங்கள நினைச்சாலே தைரியசாலி ஆயிடுறேன்." என்று சொல்ல, "தயவுசெய்து வீட்டுக்கு போம்மா..." என்று சொன்னபடி வாசல் கதவைத் திறந்தான்.

"அப்போ கிஸ் இல்லையா?" என்று கேட்டாள்.

"காலுல விழட்டுமா?" என்று கேட்டான்.

"காலுல எல்லாம் விழ வேணாம், ஒரு கிஸ் மட்டும்..." என்றாள் கண்களை சிமிட்டி கெஞ்சுதலாக.

"வெளிய போடி..." என்று அவன் சொல்ல, "உங்கள பார்க்கவும் பாவமா தான் இருக்கு, இன்னொரு நாளைக்கு வச்சுக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டே அவன் இடையில் கிள்ள,

"மேல கை வைக்காதடி, யாரும் பார்த்துட போறாங்க..." என்று திறந்திருந்த கதவினூடு பார்த்தபடி அவன் சொல்லிக் கொண்டு இருந்த தருணம், அவர்கள் வளாகத்தினுள் நுழைந்தது தயாளனின் ஜீப்.

கோவிலுக்கு சென்று இருக்கின்றாள் என்று விஷயம் அறிந்து, அவளை வரும் வழியில் ஏற்றிவர சென்ற தயாளனின் கண்ணில் அவள் படவில்லை.

விசாரித்துப் பார்த்தான், அவள் நடந்து சென்ற வழியை கைகாட்டினார்கள். ஏதோ தவறாக பட்டது. எங்கே சென்றாள் என்றும் தெரியவில்லை. விஜய்யிடம் சொல்லி தேட சொல்லலாம் என்றுதான் வந்தான். ஆனால் அவள் நின்றதே விஜய் வீட்டில்தான். அதுவும் யாரும் இல்லாத வீட்டின் உள்ளே இருவரும். அவள் கைகள் அவன் இடையைக் கிள்ளியதைக் கண்டுகொண்டவனுக்கு ரத்தம் கொதித்தது.

வந்தது தயாளனின் ஜீப் என்று அறிந்த விஜய்க்கு மயக்கமே வராத குறைதான். விழிகள் வெளியே வந்து விடும் அளவுக்கு விரிந்து கொள்ள, அதே பயமும் பதட்டமும் வந்தனாவிடமும். எதிர்பார்க்கவே இல்லை அவள். என்னதான் தைரியமாக விஜய்யிடம் பேசி நடந்து கொண்டாலும், இப்படி கையும் களவுமாக சிக்குவாள் என்று கனவில் கூட நினைத்தது இல்லை.

அவளை முறைத்துக் கொண்டே தலையை ஜீப் ஜன்னலினூடு விட்டு அவளைப் பார்த்த தயாளனோ, "ஏறு." என்றான்.

மூச்சே போய் விட்டது அவளுக்கு. நடுக்கத்துடன் ஏறி அவள் ஜீப்பில் அமர, ஜீப்போ மின்னல் வேகத்தில் கிளம்பி இருந்தது.
 
Appadaa epdiyo intha matter therinjuduchu ilana rendu perum ipdi sollamale kadhal panitu irundhurupanga... Ini intha vishayatha kajan, sakthivel pathupanga😃...
 
Top