ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 59

pommu

Administrator
Staff member

நிலவு 59

கடை திறப்பு நாளும் வந்து விட்டது. கடையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு காலையில் வீட்டுக்கு வந்து இருந்தான் அர்ஜுன். குளித்து விட்டு வந்தவன் விழிகள் அங்கே மெரூன் நிற புடவையில் நின்று, தலையை பின்னிக் கொண்டு இருந்த ராகவியில் படிய, "அதுக்குள்ள ரெடி ஆயிட்டியா?" என்று கேட்டபடி குளிக்க சென்றான்.

குளித்துவிட்டு இடையில் டவலுடன் வந்தவன் அலமாரியை திறக்க, அங்கே முழுக்க முழுக்க கருப்பு நிற ஷேர்ட்தான் இருந்தது.

ஓரிரெண்டு வேறு வர்ண ஷேர்ட்டுகள் இருக்க, கையை நீட்டி எதனை எடுப்பது என்று தடுமாற்றம் அவனுக்கு. சக்திவேலுக்கு பத்திரிகை கொடுக்க சென்ற அன்று நடந்த விஷயம் வேறு நினைவுக்கு வந்து போனது. இத்தனை நாட்கள் நிறத்தைப் பற்றி எல்லாம் அவன் கவலைப்படுவது இல்லை. அதில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. யார் என்ன நினைத்தால் என்ன என்கின்ற மனநிலைதான் அவனுக்கு.

"இன்னைக்கும் கருப்பு தானா?" என்று கேட்டபடி அவள் அருகே வந்து ராகவி நிற்க, "ஆமா." என்று சொல்லிக் கொண்டே கருப்பு ஷேர்ட்டை எடுக்க, அவளோ சட்டென ஒரு மெரூன் ஷேர்ட்டை எடுத்து நீட்டியவள், "இத போட்டுக்கோங்க." என்றாள்.

"நீ சொன்னா நான் போட்டுக்கணுமா?" என்று கேட்டவனிடம், "போட்டுக்கலாம், தப்பில்ல..." என்று சொல்லிக் கொண்டே அவன் கையில் இருந்த கருப்பு ஷேர்ட்டை பறித்து எடுத்தாள்.

"ஏய்!" என்று அவளை நெருங்கிய சமயம், அவள் மேடிட்ட வயிறு தான் அவன் மேனியில் முதலாவதாக உரசியது.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அவள் வயிறு வெளியில் தெரிய ஆரம்பித்து இருந்தது.

குரலை செருமிக் கொண்டே இரு அடிகள் பின்னே வைத்தவன், "ஷேர்ட்டை கொடுடி..." என்றான்.

ஒரு கையில் கருப்பு ஷேர்ட், அடுத்த கையில் மெரூன் ஷேர்ட் இருந்தது. மெரூன் ஷேர்ட்டை நீட்டினாள்.

"அத கொடு." என்றான்.

"மாட்டேன்." என்றாள்.

"கொடுக்க போறியா, இல்லையா? காலைலயே என்கிட்ட வம்பு பண்ணாத..." என்றான்.

"இன்னைக்கு கருப்பு போட கூடாது." என்றாள் அழுத்தமாக.

"நீ சொன்னா நான் கேட்கணுமா?" என்று கேட்டான்.

சட்டென மேடிட்ட வயிற்றைக் குனிந்து பார்த்தவள், "டேய், நான் சொன்னா கேட்க மாட்டியா? எப்போ பார்த்தாலும் உதைச்சுட்டே இருக்க..." என்று வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு திட்டிவிட்டு மெரூன் ஷேர்ட்டை நீட்ட, சட்டென அவன் இதழ்களுக்குள் புன்னகை.

கீழ் அதரங்களைக் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் கையில் இருந்த மெரூன் ஷேர்ட்டை வாங்கி போட, அவளோ அடக்கப்பட்ட சிரிப்புடன் வெளியேறி ஹாலுக்குள் சென்று அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் வெண்ணிற வேஷ்டி மற்றும் மெரூன் ஷேர்ட் சகிதம் வெளியேறி வந்தான்.

இருவரும் வெளிப்படையாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும், மெல்லிய ஈர்ப்பு இருவரிடத்திலும் உண்டானது என்னவோ உண்மை தான். ராகவிக்கு அவன் கோபப்படும் நேரங்களிலும் கிண்டலாக பேசும் நேரங்களிலும் அவ்வளவு வெறுப்பாக இருக்கும். அந்த வெறுப்பு எல்லாம் சட்டென ஏதோ ஒரு புள்ளியில் மறந்து விடும். அதற்கு ஏற்ப அவனும் அவளை ஈர்க்கும் வண்ணம் ஏதோ ஒன்று செய்து இருப்பான். அவன் மீது என்ன மாதிரியான உணர்வென்று தெரியவில்லை. கோபமும் இருக்கின்றது, மோகமும் இருக்கின்றது, ஈர்ப்பும் இருக்கின்றது.

வெளியே வந்தவனைப் பார்த்து எழுந்து நிற்க, "கிளம்பலாம்." என்றபடி காரை நோக்கி சென்றவன், "கார் பிளாக்தான், காண்ட் ஹெல்ப்." என்று சொல்ல, அவளும் சிரிப்பை அடக்கிக் கொண்டே காரில் ஏறிக் கொண்டாள். காரும் புறப்பட்டது.

சற்று நேரத்தில் கடையும் வந்து விட்டது. பிரம்மாண்டமாக இருந்தது. அலங்காரங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தன.

அதனை ரசனையாக பார்த்தவள், "அழகா இருக்கு..." என்று சொல்ல, "ஐடியா கொடுத்தது நான்னு தெரிஞ்சா இத சொல்லுவியா?" என்று கேட்டுக் கொண்டே காரில் இருந்து இறங்க,

"அழகா இருக்குன்னா அழகா இருக்குன்னு சொல்லிதான் ஆகணும்." என்று சொன்னபடி அவளும் இறங்கிக் கொண்டாள்.

அவர்கள்தான் நேரத்துக்கே வந்து இருந்தார்கள்.

தீபன் அங்கே நின்று இருக்க, "எல்லாம் ரெடியாடா?" என்று கேட்டுக் கொண்டே தீபனுடன் பேச ஆரம்பித்துவிட,

ராகவி உள்ளே நுழைந்தாள். எல்லாமே நேர்த்தியாக இருந்தது. வேலை செய்யும் பணியாளர்கள் தொடக்கம் எல்லோரும் நின்று இருந்தார்கள்.

அவளைக் கண்டதுமே, "குட் மார்னிங் மேம்!" என்று சொல்லியும் கொண்டார்கள்.

அவளும், "குட் மார்னிங்!" என்று சொல்லிக் கொண்டே கடையை சுற்றிப் பார்த்த சமயம், அவள் அருகே வந்து நின்ற அர்ஜுனோ, "முதன்முதலா என்ன வாங்க ஆசைப்படுற?" என்று கேட்டான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "தோனும் போது வாங்குறேன்." என்று சொல்லிக் கொண்டாள்.

அர்ஜுனும், சக்திவேல் குடும்பம் மேல் இருக்கும் தனிப்பட்ட கோபம் எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, கடை திறப்பு விழாவில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். தனிப்பட்ட கோபங்களை வியாபாரத்தில் காட்ட கூடாது என்று தெளிவாக இருந்தான். பார்த்தீபனும் மீண்டும் மீண்டும் அதனை அழுத்தி சொல்லி இருக்க, இன்று அவன் சிரித்த முகமாகவே நின்று இருந்தான்.

***

சக்திவேல் வீட்டில் இருந்து எல்லோரும் கடைக்கு கிளம்பி விட்டார்கள். வந்தனாவுக்கு தான் முகம் சோர்வாகவே இருந்தது.

'விஜய் என்ன செய்வார்?' என்கின்ற எண்ணம்தான் அவளுக்கு.

கஜனும், "கடைத் திறப்புக்கு கண்டிப்பா வந்திடு." என்று சொல்லிருக்க, அவனும் வேறு வழி இல்லாமல் அங்கு வந்து சேர்ந்து இருந்தான்.

வேனில் இருந்து இறங்கிய வந்தனாவின் விழிகள் அங்கே தீபனுடன் பேசிக்கொண்டு நின்று இருந்த விஜய்யில் தான் படிந்தது. இப்போது தான் மனதிற்கு ஒரு நிம்மதி உணர்வு. அவன் அவளைப் பார்க்கவே இல்லை. வந்தது தெரிந்தாலும் அவள் பக்கம் திரும்பவும் இல்லை.

கஜனைத் தேடி போய் பேசியவன், அவன் கையில் இருந்த குழந்தையை, "குட்டி தூக்கம் போல...?" என்று கேட்டுக் கொண்டே, வருடிவிட்டு, மீண்டும் போய் தனது இடத்தில் நின்று இருந்தான்.

பார்த்தீபன் அருகே நின்று இருந்த அர்ஜுனும் வந்தவர்களை வரவேற்று இருக்க, கஜனும் அவன் அருகே வந்தவன், "வாழ்த்துகள்!" என்று சொல்ல, சிரிக்க முடியவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டே, "தேங்க்ஸ்!" என்றான் அர்ஜுன்.

அவன் பார்வை இப்போது கஜனின் கையில் இருந்த குழந்தையில் படிந்து மீண்டது. அவர்கள் விசேஷத்துக்கு முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்றது போல, அர்ஜுனினால் இங்கே நிற்க முடியாத நிலை. விருந்தினர்களுக்கு முகத்தைக் காட்டினால் பார்த்தீபன் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான்.

அதனால் புன்னகையுடன் எல்லாரையும் வரவேற்க, சக்திவேலோ கஜன் அருகே வந்தவன், "நேரத்துக்கு ஒருமாதிரி இருக்கார் பெரிய மனுஷன்?" என்று கேட்க,

கஜனோ சட்டென வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, "அப்பா, அவன் உங்க மருமகன். எப்போ பார்த்தாலும் சீண்டிட்டே இருக்கீங்க..." என்று கேட்டான்.

"இல்லடா, நிஜமா அவனை எனக்கு புரிஞ்சுக்க முடியல. கல்யாணத்துக்கு ஒருமாதிரி வந்தான், அப்புறம் பத்திரிகை கொடுக்க ஒருமாதிரி வந்தான், இப்போ ஒருமாதிரி நிக்கிறான். சில நேரம் வில்லன் போல இருக்கான், சில நேரம் ஹீரோ போல இருக்கான்." என்று சொன்னான்.

இதழ்களைப் பிதுக்கிய கஜனும், "உங்கள போல தான் நானும்... எனக்கும் புரிஞ்சுக்க முடியல." என்று சொல்ல, "பேத்தியை கொடு, தூக்கிடுவோம்." என்று அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொஞ்ச ஆரம்பித்து விட்டான் சக்திவேல்.

இதனிடையே ராகவிக்கோ வீட்டினர் எல்லாரையும் பார்த்ததுமே குதூகலம்.

"அம்மா எப்படி இருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டே துளசியை அணைத்துக் கொள்ள, "ரொம்ப நல்லா இருக்கேன் தங்கம், நீ எப்படி இருக்க? உடம்பை பார்த்துக்கிறியா? அண்ணாகிட்ட போனியா?" என்று கேட்டாள்.

"அடுத்த வாரம் தான் ஸ்கேனிங் போகணும், யாழினி கூடவே உங்களுக்கு நேரம் போயிடும்ல?" என்று கேட்டாள்.

"ஆமா, செம்ம அழகான குட்டி, நம்ம பல்லவி போலவே..." என்று சிரித்துக் கொண்டே சொல்ல, அவ்விடம் வந்த பைரவி ராகவியிடம், "குழந்தை பிறந்த பிறகு உன் புருஷன சும்மா விட்றாதே, எல்லா வேலையும் வாங்கணும், புரியுதா?" என்று சொன்னார்.

துளசி, "பசங்கள வேலை வாங்க கூடாதுனு சொல்ற மாமியார் தான் பார்த்து இருக்கேன், நீங்க புதுசா இருக்கீங்க சம்பந்தி." என்று சொல்ல,

"அவனை வேலை வாங்கதான் வேணும்..." என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டாள் பைரவி.

கடையைத் திறந்து வைக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அர்ஜுன் கத்தரிக்கோலை சக்திவேலிடம் நீட்ட, புன்னகையுடனும் மனநிறைவுடனும் கடையைத் திறந்து வைத்தான் சக்திவேல். அந்த இடமே கரகோஷத்தில் நிரம்பி இருக்க, ராகவியின் இதழ்களில் அப்படி ஒரு புன்னகை. பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் நடுவே நின்று தடுமாறிக் கொண்டு இருப்பவள் அவள். அர்ஜூனுடன் சக்திவேல் சகஜமாக பேசுவது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவளுக்கு. அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்த ராகவியைப் பார்த்து இருந்தான் கஜன்.

அவன் இதழ்களிலும் ஒரு அழகான புன்னகை. ராகவியின் புன்னகையே அவன் மனதை இதமாக்க போதுமாக இருந்தது. எல்லாரும் உள்ளே நுழைந்து குத்துவிளக்கை ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பொங்கல் பொங்கினார்கள். எல்லாமே சேர்ந்து நின்று செய்தார்கள்.

"முதலாவதா சம்பந்தி நீங்க வாங்குங்க." என்று பார்த்தீபன் சொல்ல, சட்டென அர்ஜுனோ, "ராகவி வாங்கட்டுமே..." என்றானே பார்க்கலாம்.

எல்லோருக்குமே ஆச்சரியம்.

சக்திவேலோ, "நான் வாங்கினா கூட இவ்ளோ சந்தோஷமா இருக்காது." என்று சிரித்தபடி சொல்ல, பார்த்தீபனும் மென் சிரிப்புடன், "வாம்மா ராகவி..." என்று சொல்ல,

அவளும் தயக்கமாக சென்றவள், "எதுக்கு என் பேரை சொன்னீங்க?" என்று அருகே நின்ற அர்ஜுனின் காதில் கேட்டாள்.

அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "தோனுச்சு." என்றான்.

அவனை ஒரு கணம் பார்த்து விட்டு பார்த்தீபனை நோக்கியவள், "என்ன வாங்குறதுன்னு தெரியல மாமா." என்று சொல்ல, "ஏதாவது வாங்கும்மா." என்று சொல்ல,

அவளோ அர்ஜுனைப் பார்த்து, "காசு..." என்று சொல்ல, அவனும் பர்ஸில் இருந்து எடுத்து பணத்தைக் கொடுத்தான்.

அவளும் அங்கே சுற்றிப் பார்த்து குங்குமத்தை எடுத்து அதனை விலை போட கொடுத்து இருந்தாள்.

"மங்களகரமா வாங்கி இருக்கா..." என்று பைரவி சொல்லிக் கொள்ள, எல்லாரும் நிறைவாக புன்னகைத்துக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து எல்லோரும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அர்ஜுன் தான் வந்தவர்களுக்கு பொங்கல் கொடுக்க, அவன் அருகே வந்து தட்டை நீட்டிய பைரவி, "இன்னும் கொஞ்சம் போடு." என்று சொல்ல,

அவனோ, "சுகர் வந்திடும் மேடம், அளவா சாப்பிடுங்க." என்றான்.

"ஓஹோ மேடமா?" என்று அவள் கேட்க, "அம்மான்னு கூப்பிட வேணாம்னு சொன்ன ஞாபகம்." என்றான் அவளைப் பார்க்காமலே.

"சரிடா, கூப்பிடாதே..." என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தவளின் முதுகை, மென் சிரிப்புடன் பார்த்தபடி நின்று இருந்தான் அர்ஜுன்.

எல்லாமே முடிய, குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மூத்த தலைமுறையினர் எல்லாரும் நாற்காலியில் அமர்ந்து இருக்க, நடுவில் சக்திவேலுக்கு பின்னே கஜன் நின்று இருக்க, அவனுக்கு வலது பக்கம் பல்லவி குழந்தையுடன் நிற்க, அவளுக்கு அடுத்த பக்கம் சுகானா, ராம்குமார் மற்றும் நவநீதன் நின்று இருந்தார்கள்.

கஜனுக்கு இடது பக்கம் அர்ஜுன், அவனுக்கு அருகே ராகவி, அவளுக்கு அடுத்து நேத்ரா, ஜீவிதன் மற்றும் அவனுக்கு அடுத்து வந்தனா நின்று இருந்தாள்.

புகைப்படம் எடுப்பவனோ, "அர்ஜுன் சார், டாக்டர் பக்கத்துல தள்ளி நில்லுங்க. ஃபிரேம்ல எல்லாரும் கவர் ஆகணும்." என்று சொல்ல, அவனோ கொஞ்சமாக தள்ளி நின்றான்.

தனக்கும் அவனுக்கும் இடையான இடைவெளியைப் பார்த்த கஜனோ, "ப்ச்!" என்று அவன் தோளில் கையைப் போட்டு இழுத்து நெருக்கிக் கொள்ள, அவனை அதிர்ந்து பார்த்தான் அர்ஜுன்.

"இப்படியே என்னை பார்த்துட்டு இருந்தா ஃபோட்டோ ஒருமாதிரி இருக்கும். முன்னால பாருடா..." என்று முன்னே பார்த்துக் கொண்டே கஜன் சொல்ல, அவனுக்கு அடுத்த பக்கம் இருந்த பல்லவி சிரித்துக் கொண்டாள்.

அர்ஜுனும் இப்போது அதே அதிர்ச்சியுடன் முன்னே பார்க்க, அழகான குடும்ப புகைப்படமும் எடுக்கப்பட்டது. கடை திறப்பு நிகழ்வு கோலாகலமாக முடிந்து இருக்க, எல்லோரும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள். இன்று ராகவி மனம் கஷ்டப்படுவது போல அர்ஜுன் எதுவும் செய்யவே இல்லை.

ஆனாலும் சின்ன சின்ன வழக்கமான சீண்டல் பேச்சுக்கள் இருக்க தான் செய்தன. வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்த சமயம், "உலக அதிசயமா இருந்திச்சு..." என்றாள் அவள்.

அவனோ வண்டியை ஓட்டிக் கொண்டே, "ப்ரோக்ராம் என்னோடது, நானே குழப்ப மாட்டேன்." என்றான்.

"அதுதானே பார்த்தேன், சரியான செல்ஃபிஷ்." என்று சொல்ல, "எஸ் அஃப்கோர்ஸ்." என்று ஒரு முறைப்பை அவளிடம் இருந்து பதிலாக பெற்றுக் கொண்டான்.
 
Top