ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 58

pommu

Administrator
Staff member

நிலவு 58

அர்ஜுனும் கடை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து இருக்க, திறப்பு விழா நாளும் நெருங்கி இருந்தது. பார்த்தீபன் வீட்டினர் சக்திவேலின் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். ராகவிக்கோ உறவுகளைப் பார்க்க போகின்ற குதூகலம். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. அர்ஜுன் வீட்டில் நிற்கவே இல்லை. கடையில் தான் நின்று இருந்தான்.

வழக்கம் போல சக்திவேல் வீட்டில் விருந்து தடல் புடலாக நடைபெற கஜனோ, 'எங்க விஜய் போனான்?' என்று யோசித்துக் கொண்டே அவனுக்கு அலைபேசியில் அழைத்து இருந்தான்.

வீட்டில்தான் விஜய் நின்று இருந்தான். அலறிக் கொண்டு இருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தவனுக்கு, எதற்காக கஜன் அழைக்கின்றான் என்று தெரியும். ஆனால் அவர்கள் வீட்டுக்கு செல்லும் நிலைமையில் அவன் இல்லையே?

எப்படி சமாளிப்பது என்று தடுமாறிக் கொண்டே அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன், "அண்ணன் சொல்லுங்க..." என்றான்.

"எங்கடா போன? பசங்க எல்லாரும் நிக்கிறாங்க, உன்னை மட்டும் காணோம்?" என்று கேட்க, "கொஞ்சம் உடம்பு சரி இல்ல..." என்றான் குரலை சோர்வாக மாற்றிக் கொண்டு.

"என்னாச்சு?" என்று கேட்க, "ஜுரம்..." என்றான்.

"சரி, பசங்ககிட்ட டேப்லட்ஸ் கொடுத்து விடுறேன், போட்டுட்டு ரெஸ்ட் எடு." என்று கஜன் சொல்லிவிட்டு வைத்துவிட, அவனுக்கோ மனம் எல்லாம் அழுத்தம். கஜனிடம் எதுவுமே அவன் மறைத்தது இல்லை.

இன்று உடல்நிலை சரி இல்லை என்று பொய் சொல்லி இருக்கின்றான். ஒரு மாதிரியான உணர்வு.

“ப்ச்!” எனறபடி அலைபேசியை தூக்கிப் போட்டவனோ, நாற்காலியில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அவன் ஆதரவு இல்லாமல் இருந்த நேரம், அவனைப் படிக்க வைத்து இந்த கௌரவமான நிலைக்கு ஆளாக்கியவன் சக்திவேல். சக்திவேலின் குடும்பத்துக்கு துரோகம் செய்யும் மனநிலை அவனுக்கு கொஞ்சமும் இல்லை. என்னதான் படித்து, வேலை பார்த்து சம்பாதித்துக் கொண்டு இருந்தாலும், அவனது நிலைமை அவனுக்கே தெரியும். வந்தனாவை திருமணம் செய்யும் தகுதியும் தராதரமும் அவனுக்கு கொஞ்சமும் இல்லை.

வந்தனாவைப் பிடிக்குமா என்று கேட்டால் பிடிக்கும், மிகவும் பிடிக்கும். துறுதுறுவென பேசிக் கொண்டே அவனை சுற்றி வரும் அழகான பெண்ணை எப்படி பிடிக்காமல் போகும்? தனிமையில் அவள் பேசியதை எண்ணி சிரித்து இருக்கின்றான், ரசித்தும் இருக்கின்றான். ஆனால் அவனால் ரசிக்க மட்டும்தான் முடியும். அடைவதைப் பற்றி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. அழுத்தமாக இருந்தது. இப்போதும் கூட அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. தன்னை அடக்கிக் கொண்டான்.

அவனுக்கே இப்படி என்றால் வந்தனாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். காலையில் இருந்தே விஜய் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டாள். காலையில் இருந்து அங்கும் இங்கும் அலைந்து தேடிக் கொண்டு இருக்கின்றாள். காணவே கிடைக்கவில்லை. அலைபேசியை எடுத்து அவன் இலக்கத்துக்கு அழைத்துப் பார்த்தாள். அவன் அழைப்பைப் பார்த்துவிட்டு அலைபேசியை தள்ளி வைத்து இருந்தான்.

அவளுக்கோ ஏமாற்றம்!

ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அங்கே நின்ற கஜன் அருகே சென்றவளோ, "விஜயை எங்கண்ணா காணோம்?" என்று சாதாரணமாக விசாரிப்பது போல விசாரிக்க,

"உடம்பு சரி இல்லம்மா, வீட்ல இருக்கான்." என்று சொல்லிவிட்டு, கஜன் தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

'உடம்பு சரி இல்லையா?' என்று நினைத்தவளுக்கு மனம் எல்லாம் பிசைய ஆரம்பித்து விட்டது. அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. எப்படி செல்வது என்று தெரியாத நிலை. முகம் சோர்ந்து போய் விட்டது.

அவளைப் பார்ப்பவர்கள் எல்லோரும், "என்னாச்சு?" என்று கேட்கும் நிலைக்கு அவள் இருந்தாள். வலுக்கட்டாயமாக கூட சிரிக்க முடியாத நிலை. கஜனின் குழந்தையுடன் நேரத்தை செலவழித்தாள். அப்படியாவது இந்த அழுத்தம் குறைகின்றதா என்று பார்த்தாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டவளுக்கு மனம் சற்று லேசானது.

இதனிடையே விஜயாவோ பார்த்தீபனிடம், "வந்தனா கல்யாண விஷயம் பத்தி பேசுனீங்களா?" என்று கேட்க,

அவனோ, "ஆஹ்! பேசினாங்க, சரி வரும் போலதான் இருக்கு. ஜாதகம் பொருந்திடுச்சுன்னு சொன்னாங்க, இந்த கடை வேலை முடிய நானே பேசலாம்னு இருந்தேன்." என்றான்.

அங்கே அமர்ந்து இருந்த வந்தனாவுக்கு நெஞ்சே அடைத்து விட்டது. சபையினர் முன்னால் உடைத்து பேசவும் முடியவில்லை. விஜய்யும் காதலிக்கின்றான் என்று தெரிந்தால் ஏதோ செய்யலாம். இப்போது என்னதான் செய்வது?

தடுமாறி விட்டாள். வேறு ஒருவனுடன் திருமணத்தை நடத்தி விடுவார்களோ என்று பயம் வேறு.

சக்திவேலோ, "அர்ஜுன் அன்னைக்கு வந்திருந்தான்..." என்று ஆரம்பித்து நடந்ததை சொல்ல, மெலிதாக சிரித்த பார்த்தீபனோ, "அவன்கிட்ட இவ்ளோ மாற்றம் வந்ததே சந்தோஷமா இருக்கு சம்பந்தி." என்று சொல்லிக் கொண்டான்.

சக்திவேலும், "கால் பண்ணி விருந்துக்கு வர சொல்லி ராம் சொன்னான், வேலை இருக்காம்..." என்று சொல்ல, "ஆமா, கடை வேலைல பிசியா இருப்பான்." என்று சொன்னான் பார்த்தீபன்.

ராகவியையாவது அனுப்பி இருக்கலாம் என்கின்ற ஆதங்கம் சக்திவேலுக்கு இருந்தாலும், பார்த்தீபனை வருத்தப்பட வைக்க கூடாது என்கின்ற காரணத்தினால் அதனைப் பற்றி பேசவில்லை.

ஜீவிதனும் நேத்ராவும் கூட ஒன்றாக வந்து சேர்ந்து இருந்தார்கள். நேத்ராவின் கையைப் பற்றி அமர்த்திய லாவண்யா, "எப்படிம்மா இருக்க? நல்லா பார்த்துக்கிறானா?" என்று கேட்க, "ரொம்ப நல்லா பார்த்துக்கிறார் அத்தை." என்று சொன்னவள் விழிகள், அங்கே பேசிக் கொண்டு நின்று இருந்த ஜீவிதனில் படிந்து மீண்டது.

அவன் மீது இப்போதெல்லாம் நல்ல அபிப்ராயம் தான். அவளை எப்போதுமே அவன் தொந்தரவு செய்வது இல்லை. அவளுக்கு தேவையான இடைவெளியை கொடுத்து விலகி நிற்கின்றான். கஜனுடன் பேசுவதற்கு எல்லாம் அவன் தடை சொன்னதே இல்லை. இதுவே அவன் இடத்தில் வேறு ஆண்மகன் இருந்து இருந்தால், அவளை இதற்கெல்லாம் அனுமதித்து இருப்பானா என்று தெரியாது. இப்படி ஏதாவது யாரும் கேட்டால்தான் அவனைப் பற்றி எண்ணிப் பார்ப்பாள்.

திருமணமான உணர்வே இல்லை அவளுக்கு. தானுண்டு, தனது வேலையுண்டு என்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றாள். மாற நினைத்தால் மாறலாம். மாறும் எண்ணம் கூட வரமாட்டேன் என்கின்றதே! தான் செய்வது தவறு என்று தெரியும். மாற வேண்டும் என்று நினைத்துக் கொள்ள மட்டுமே முடிந்தது. செயற்படுத்துவது பெரும்பாடாகி போனது. அதற்கு ஜீவிதனும் ஒரு வகையில் காரணம்.

அவன் அவளிடத்தில் கொஞ்சம் உரிமையை எடுத்து பேசினால், அவளும் மாற முயற்சித்து இருப்பாளோ என்னவோ?! அவளுக்கான இடைவெளியைக் கொடுத்து ரொம்பவே தள்ளி நின்று விட்டான். அதுதான் இக்கணம் அவர்களிடத்தில் பெரிய பிரச்சனையாகி போனது.

இதே சமயம், ராம்குமாரின் விழிகள் தன்னவளைத் தேடிக் கொண்டு இருந்தன. அவளை முத்தமிட வேண்டும் போலவே அவனுக்கு உணர்வு.

'பட்டப் பகல் ராம்...' என்று தனக்குத் தானே திட்டிக் கொண்டாலும், இந்த மோக உணர்வுகளை அவனால் தவிர்க்கவே முடியவில்லை. குடும்ப வாழ்க்கைக்குள் புதிதாக நுழைந்தவன் அல்லவா? கேட்கவும் வேண்டுமா?

அவளை எல்லா இடமும் தேடி கடைசியாக சாப்பாட்டு அறைக்குள் நின்று, பேசிக் கொண்டு இருந்த பெண்களின் நடுவே கண்டுகொண்டான். செம்மஞ்சள் நிற புடவை அணிந்து இருந்தாள்.

அவளை மேலிருந்து கீழ் ரசனையாகப் பார்த்தவனுக்கு, 'ப்பா! எவ்ளோ அழகா இருக்கா!?' என்று நினைப்பு தோன்றியது.

அவளை அழைக்க வேண்டும். எப்படி அழைப்பது என்று தெரியவே இல்லை. பேர் சொல்லி சத்தமாக அழைக்க ஒருமாதிரி இருந்தது.

அங்கே இருந்த பேனா மற்றும் பேப்பரை எடுத்தவன், ‘ரூமுக்கு வா, இறுக்கி அணைச்சு ஒரு முத்தா தா...’ என்று எழுதி, அதனை நான்காக மடித்துக் கொண்டு, சுகானாவிடம் கொடுத்துவிட ஆளைத் தேடினான்.

அவன் விழிகளில் மேசையில் பொருட்களை அடுக்கிக் கொண்டு இருந்த வேலை செய்யும் பெண் தான் தென்பட்டாள். "இங்க வாம்மா..." என்று அவளை அழைத்தவன், அவள் கையில் பேப்பரை வைத்து, "இத யாருக்கும் தெரியாம சுகானா அக்காகிட்ட கொடு." என்று சொன்னான்.

வழக்கமாக சுகானாவை வேலை செய்யும் பெண், 'அக்கா!' என்று அழைப்பதால் அப்படி சொல்லி இருந்தான்.

அந்த பெண்ணோ சுகானாவை தாண்டி செல்ல, "ஹேய்... ஹேய்... எங்க போற?" என்று மெதுவாக அவன் கதறியது காற்றுக்கும் கூட கேட்டு இருக்காது.

விறுவிறுவென சென்றவளோ அங்கே குழந்தையை மடியில் வைத்தபடி, கஜனுடன் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த பல்லவி முன்னே கடிதத்தை நீட்டினாள். ராம்குமாருக்கு விழிகள் இரண்டும் வெளியே விழுந்து விடும் அளவுக்கு விரிந்து கொண்டன.

"என்ன லெட்டர்?" என்று பல்லவி கேட்க, அதனை வாங்கியது என்னவோ கஜன்தான்.

ராம்குமாரோ, "போச்சு... போச்சு..." என்று சொல்லிக் கொண்டே தலையில் கையை வைத்தபடி திரும்பிக் கொள்ள, "அவர் கொடுத்து விட்டார்..." என்று தலையில் கையை வைத்துக் கொண்டு திரும்பி நின்ற ராம்குமாரைக் காட்ட,

அவனைப் பார்த்து விட்டு, "ராம் என்ன கொடுத்தான்?" என்று கேட்டபடி கடிதத்தைப் பிரித்த கஜனுக்கு புரையேறி விட்டது.

இருமிக் கொண்டே அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ திரும்பி கஜனை அழுது விடும் தோரணையில் பார்த்தவன் நெஞ்சில் கையை கூப்பியபடி இல்லை என்று தலையாட்ட, கடிதத்தை எட்டிப் பார்த்த பல்லவிக்கும் சிரிப்பு வந்து விட்டது.

சுகானாவுக்கு தான் கொடுத்து விட்டு இருப்பான் என்று தெரியும்.

பல்லவியோ கீழ் அதரங்களைக் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு, "இத ஏன்மா என்கிட்ட கொடுத்த?" என்று அங்கே நின்ற பெண்ணிடம் கேட்க, "சுகானா அக்காகிட்ட கொடுக்க சொல்லி, அவர்தான் கொடுத்தார். அதுதான் உங்ககிட்ட கொடுத்தேன்." என்றாள்.

"சரி, நீ போ." என்று சொன்ன கஜனுக்கும் சிரிப்பு.

புறங்கையால் இதழ்களைத் துடைப்பது போல சைகை செய்து கொண்டு, சிரிப்பை கட்டுப்படுத்த முயன்று தோற்றவனின் உடம்பு சிரிப்பினால் குலுங்க, அருகே அமர்ந்து இருந்த பல்லவியைப் பார்த்தான்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தவளுக்கு, சிரித்தால் குழந்தை எழுந்து விடுமோ என்ற எண்ணம் இருக்க, சிரிப்பைக் கட்டுப்படுத்தி கண்களும் கலங்கி விட்டன.

"இவனை..." என்று சிரிப்புடன் சொன்ன கஜனின் விழிகள் ராம்குமாரில் படிய, அவனோ அவர்களைப் பார்த்து கொண்டே பாவமான தோரணையில் நின்று இருக்க, "சுகானா!" என்று கஜனே அவளை அழைத்தான்.

அவளும், "சொல்லுங்க மாமா..." என்று அவர்கள் முன்னே வந்து நிற்க, "உன் புருஷன் உனக்கு கொடுத்துவிட்டு இருக்கான்." என்று சொல்லி கடிதத்தை மடித்து நீட்டியவன் சிரித்துக் கொண்டே பல்லவியைப் பார்க்க, அவளும் மென் சிரிப்புடன் சுகானாவைப் பார்த்தாள்.

கடிதத்தைத் திறந்து பார்த்த சுகானாவுக்கு மயக்கம் வராத குறை தான்.

"ராம்..." என்று பற்களைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்து முறைக்க, அவனோ இதழ்களைப் பிதுக்கி இல்லை என்ற தோரணையில் சைகை செய்ய, சுகானாவோ விறுவிறுவென அவனை நோக்கி சென்றவள், "என்ன இது?" என்று கேட்டாள்.

"ஐயோ சுகா! நான் உனக்கு கொடுத்து விட்டேன், அண்ணிகிட்ட மாறி கொடுத்துட்டா." என்று சொல்ல, "ரூமுக்கு வாங்க, வச்சுக்கிறேன்..." என்று சொன்னபடி அவள் அறைக்குள் செல்ல, அவனும் பின்னால் சென்றான்.

"சோ கியூட்ல இவங்க..." என்று பல்லவி சொல்ல, "ஆமா." என்று கஜனும் சொல்லிக் கொண்டான்.

அறைக்குள் வந்ததுமே, "இவ்ளோ பேர் இருக்கும் போது இது தேவையா?" என்று சுகானா கேட்க, "ஹேய், என் பொண்டாட்டிகிட்ட தானே நான் கேக்கிறேன்?" என்றான் அவன்.

"அதுக்குன்னு மாமாகிட்ட கொடுத்து விடுவீங்களா?" என்று கேட்க, "ஆள் மாறி போச்சுடி..." என்றான் அவன்.

"என்ன சொன்னாலும் இது தப்பு." என்று அவள் வெளியேற முயல, அவளை இழுத்து சுவருடன் சாய வைத்தவன், "என்னடி தப்பு?" என்று கேட்டான் அவளை மோகமாக பார்த்துக் கொண்டே.

அவன் நெருக்கத்தில் அவள் கோபம் எங்கே சென்றது என்றுகூட தெரியவில்லை.

"வெளிய ஆட்கள் இருக்காங்க ராம்." என்றாள் அவன் விழிகளுடன் விழிகளைக் கலக்க விட்டுக் கொண்டு.

"இருக்கட்டுமே..." என்றான் ரகசிய குரலில்.

"தேடுவாங்க..." என்றாள்.

"தேடட்டுமே..." என்றான்.

"இப்போ என்ன வேணும்?" என்று அவள் கேட்க, "ஒரு டீப் கிஸ்." என்றான் அவள் இதழ்களில் பார்வையை நிலைக்க விட்டபடி.

"கிஸ்ஸோட நிறுத்திடணும்." என்றாள்.

"கஷ்டம்தான், ட்ரை பண்ணுறேன்." என்றவன் அவள் கன்னத்தைப் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தி இருக்க, அவள் விழிகள் மெதுவாக மூடிக்கொள்ள, அவளை மோகமாக பார்த்துக் கொண்டே அவள் இதழ்களில் தன்னிதழ்களைப் பொருத்தி இருந்தான். நீண்ட, நெடிய, ஆழமான இதழ் முத்தம். நெகிழ்வான இதழ் யுத்தம். எவ்வளவு நேரம் தொடர்ந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

அவன் கரம் அவள் மேனியில் தாறுமாறாக அத்துமீற, சட்டென நிதானத்துக்கு வந்த பெண்ணவளோ அவன் மார்பில் கையை வைத்து தள்ளிக் கொண்டு புடவையை சரி செய்தபடி, "ராம்!" என்றாள் சிணுங்கலாக.

"என்னடி?" என்று அவளை மோகமாக பார்த்துக் கொண்டே கேட்க, "கிஸ்ஸுன்னு சொல்லிட்டு என்ன எல்லாம் பண்ணுறீங்க?" என்று கேட்க, "செம மூட்ல இருக்கேன் சுகா." என்றான்.

"நைட் பார்த்துக்கலாம்." என்று சிரித்தபடி சொன்னவள் கண்களை சிமிட்டிவிட்டு வெளியேற, சட்டென கட்டிலில் மல்லாக்க விழுந்தவன், “ஹையோ! இந்த ஃபீலிங்கை எப்படி கன்ட்ரோல் பண்ணுறதுனு தெரியாம இருக்கே...” என்று புலம்பிக் கொண்டான்.

அன்று விருந்தை முடித்துவிட்டு எல்லோரும் கிளம்பியும் விட்டார்கள்.
 
Top