நிலவு 56
பல்லவிக்கு சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் இருந்தாலும் அதனை கஜனே பார்த்துக் கொண்டான். அவன்தான் வைத்தியர் ஆயிற்றே? குழந்தையை அவளை விட அவன் கையாண்ட விதம் அழகாக இருந்தது. குளிக்க வைத்து வந்த குழந்தைக்கு அவன்தான் எல்லாமே செய்தான்.பல்லவி அவன் என்ன செய்கின்றான் என்று பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள், அவ்வளவு தான்.
பைரவியோ பல்லவியிடம், "உன்னை விட மாப்பிள்ளை அழகா குழந்தையை பார்த்துக்கிறார்டி." என்று சொல்ல, பல்லவி மெலிதாக சிரித்துக் கொண்டே கஜனைப் பார்த்தாள்.
தூண்டில் போட்டு இழுப்பதைப் போல அவள் மனதை மேலும் மேலும் ஈர்த்து விடுகின்றானே!
காதலிக்க ஆரம்பித்து விட்டாள்!
அதுவும் இவ்வளவு சீக்கிரமாக காதலில் விழுந்து விட்டாள். அவன் மீது எந்த பெண்ணுக்கு தான் காதல் வராமல் இருக்கும்? ஆனால் அதனை எல்லாம் சொல்லும் நிலையில் அவள் இல்லை. குழந்தை பிறந்த அன்று அவள் சொன்ன வார்த்தைகளுக்கு, அவன் கொடுத்த அதிர்ச்சி முகபாவனை கண் முன்னே வந்து போனது. அவள் காதலை சொன்னால் அவனுக்கு அது அழுத்தமாக இருக்கும் என்று அவளுக்கும் தெரியும். தனக்குள் ஆழமாக புதைத்துக் கொண்டு அவனை ரகசியமாக ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.
முதல் தடவை தான் அவன் முன்னே குழந்தைக்கு பால் கொடுக்க சங்கடப்பட்டாள். இப்போது அதனைப் பற்றி எல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. இயல்பான கணவன், மனைவி போல அவர்கள் உறவு இருந்தது. அவனுக்கு பெண் மேனி எல்லாம் புதிது அல்லவே!?
அவனும் அதனைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளவும் இல்லை, தடுமாறவும் இல்லை. தன்னிடம் வரும் கர்ப்பிணிகளை எப்படி கையாள்வானோ அப்படிதான் அவளையும் எதிர்கொண்டான். ஒரு படி மேலதிகமாக மனைவி என்கின்ற நேசம் இருந்தது. யாழினி மீது தனது குழந்தை என்கின்ற பாசம் இருந்தது. அவ்வளவு தான், அவனது உணர்வும் உறவும் அவளிடம்.
அன்று இரவு பால் கொடுத்து விட்டு குழந்தையைப் படுக்க வைத்தவளை ஆழ்ந்து பார்த்த கஜனோ, "தூங்கும்மா, நான் அவளை பார்த்துக்கிறேன். உன் கண்ணை பாரு, எப்படி இருக்குன்னு...?" என்று கேட்டான்.
"தூக்கம் வர மாட்டேங்குதே... கண்ண மூடுனா அவ நினைப்பு தான் வருது. சட்டென முழிச்சு அவளை பார்க்கிறேன், மூச்சு விடுறாளானு செக் பண்ணுறேன்." என்று சொல்ல,
இதழ் பிரித்து சிரித்தவன், "குழந்தை பிறந்த ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும். எல்லாருக்கும் இருக்கிற ஒரு பயம்தான். போக போக சரி ஆயிடும். நீ இப்போ தூங்கு, நான் அவளை பார்த்துப்பேன்னு சொல்றேன்ல..." என்று சொல்ல, அவளும் கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
அறைக்குள் மெல்லிய வெளிச்சம் போடப்பட்டு தான் இருந்தது. அவனும் கட்டிலில் படுத்து இருந்தான். ஆனால் தூங்கவில்லை. சட்டென பல்லவிக்கு வழக்கம் போல முழிப்பு வந்துவிட பதறி எழுந்து கொண்டாள். குழந்தையைத் தொட்டிலில் காணவில்லை. சட்டென கஜனைத் திரும்பிப் பார்க்க, அவனோ அவள் அருகேதான் படுத்து இருந்தான். கண்களை மூடி இருந்தான். அவன் வெற்று மார்பில் யாழினி குப்பற படுத்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.
இந்த காட்சியைப் பார்த்ததுமே பல்லவியின் இதழ்கள் தாராளமாக விரிந்து கொண்டன. அவ்வளவு அழகாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. மெதுவாக கண்களைத் திறந்து அவளைப் பார்க்க, அவள் அவனை ரசனையாக பார்த்துக் கொண்டு புன்னகைக்க, "தூங்கு" என்று சத்தம் வராமல் இதழ் அசைத்து சொன்னவன், படுக்கையைக் கண்களால் காட்ட அவளும் ஒரு நிறைவுடன் படுத்து விட்டாள்.
இப்போது அவளுக்கு ஆழமான தூக்கம் வந்தது, முழிப்பு வரவில்லை. கஜன் பார்த்துக் கொள்வான் என்கின்ற நம்பிக்கை மனதில் வேரூன்றி இருக்க, பால் கொடுப்பதற்காக கஜன் அவளை எழுப்பிய சமயம்தான் அவளே எழுந்தாள்.
குழந்தையை வாங்கிக் கொண்டு அவனைப் பார்த்தவள், "ரொம்ப அழகா குழந்தையை பார்த்துக்கிறீங்க..." என்று சொல்ல,
அவனோ, "என் தொழிலே இதுதான்." என்று சிரித்தபடி சொல்ல, "ஆனாலும் யூ ஆர் சம்திங் ஸ்பெஷல்!" என்று சொல்லிக் கொண்டே குழந்தைக்கு பால் கொடுத்தாள்.
***
இதே சமயம், போன வாரம் முழுவதும் நைட் டியூட்டியை முடித்து விட்டு வந்த ராம்குமாரோ நன்றாக தூங்கி எழுந்தான். நேரத்தைப் பார்த்தான், மாலை நான்கு மணியைக் காட்டியது. இன்னும் சுகானா வரவில்லை.
"இன்னைக்கு நைட் இருக்கு..." என்று குதூகலமாக நினைத்தவன், குளித்துவிட்டு வந்து வேஷ்டி மற்றும் டீஷேர்ட்டுடன் ஆயத்தமாகி இருக்க, சுகானாவும் வேலை விட்டு வந்து அறைக்குள் நுழைந்தாள்.
அவளை ராம்குமார் சிரிப்புடன் பார்த்து இருக்க, அவளோ ஒரு பெருமூச்சுடன் குளிக்க சென்று விட்டாள்.
குளித்துவிட்டு அவள் வந்ததுமே அதற்காக காத்துக் கொண்டு இருந்த ராம்குமாரோ வேகமாக வந்து, அவளை அணைத்து இதழில் இதழ் பதிக்க, சட்டென அவன் மார்பில் கையை வைத்து தள்ளிய சுகானா, "ராம் ப்ளீஸ்..." என்றாள் சிணுங்கலாக.
"என்னடி? செம்ம மூட்ல இருக்கேன்..." என்று அவன் சொல்லிக் கொண்டே அவள் இதழில் மீண்டும் இதழ் பதிக்கப் போக, "ராம் எனக்கு பீரியட்." என்று சொன்னவள் சட்டென விலகி நிற்க, அவனுக்கோ தலையில் இடி விழுந்த உணர்வு.
"என்னடி சொல்ற?" என்று கேட்டான்.
ஆம் என்கின்ற ரீதியில் அவளும் தலையாட்ட, ஆடிப் போய் கட்டிலில் அமர்ந்தவனோ, "கடவுளுக்கு என் மேல கொஞ்சமும் இரக்கம் இல்ல..." என்று சொல்ல,
"ராம், ஒரு அஞ்சு நாள்..." என்று முடிக்க முதல், "நீ பேசாதே..." என்று சொன்னவன் விறுவிறுவென வெளியேறி விட்டான்.
அவளும் என்னதான் செய்வாள்? விதி அவர்களின் முதலிரவில் விளையாடிக் கொண்டு இருந்தது.
அவளும் வெளியேறி வந்தவள் அங்கே அமர்ந்து இருந்த ஜெயந்தியுடன் பேச ஆரம்பித்து விட்டாள். ஆனாலும் ராம்குமாரை நினைத்து கஷ்டமாகி விட்டது. அவன் எதிர்பார்ப்பு புரிந்தாலும் எதையும் செய்ய முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றாள்.
நேரம் சென்றது, சாப்பிட ஒவ்வொருவரும் வந்து அமர்ந்தும் விட்டார்கள்.
"ராம் எங்கம்மா?" என்று துளசி கேட்க, அங்கே இருந்த நவநீதனோ, "மொட்டை மாடில பார்த்தேன்." என்றான்.
"நான் பார்த்துட்டு வர்றேன்." என்று சுகானா மாடியேறி சென்றாள்.
மொட்டை மாடியில் நிலவைப் பார்த்துக் கொண்டே படுத்து இருந்தான் ராம்குமார்.
"எங்கே செல்லும் இந்த பாதை..." என்று விரக்தியாக பாடிக் கொண்டு இருக்க, அவன் அருகே வந்து அமர்ந்த சுகானாவோ, "ராம் சாப்பிட வாங்க." என்றாள்.
சட்டென அவளை முறைத்தபடி எழுந்து அமர்ந்தவன், "பக்கத்தில வராதே... தள்ளி இரு. நான் வாழ்க்கை முழுக்க மொட்டை மாடில சந்நியாசி போல படுத்துக்கிறேன்." என்றான்.
"இப்போ எதுக்கு சலிச்சுக்கிறீங்க... அஞ்சு நாள் தானே?" என்க, அவளை சோர்வாக பார்த்தவன், "இன்னைக்கு எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா? எல்லாம் நாசமா போச்சு..." என்று சொன்னான்.
"சரி, விடுங்களேன்..." என்று சொன்னவளை முறைத்தவன், "எப்படிடி விடுறது? கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் ஆக போகுது. நானும் கன்னி கழியல, நீயும் கன்னி கழியல. என்னோட எத்தனை வருஷ கனவு தெரியுமா?" என்று கடுப்பாக சொன்னான்.
"இப்போ எதுக்கு என் மேல கோபப்படுறீங்க? நான் என்ன பண்ணட்டும்?" என்று கேட்க, "தூக்கம் வர மாட்டேங்குது, ஒரு பாட்டு பாடு தூங்கிடுறேன்." என்று சொல்லிக் கொண்டே மீண்டும் படுத்துக் கொள்ள, அவனை விழி விரித்துப் பார்த்தாள் சுகானா.
அவன் தோளில் கையை வைத்தவள், "சாப்பிட்டு படுங்க ராம்." என்றாள்.
அவளை இழுத்து தனது கை வளைவுக்குள் படுக்க வைக்க, "ராம், யாரும் பார்த்துடுவாங்க..." என்று அவள் விலக முற்பட, "சும்மா இருடி, யாரு பார்த்தும் எந்த யூசும் இல்ல." என்று இதழ் பிதுக்கி சொல்லி அவளைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்க்க, அவளோ சிரித்தபடி அவன் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டே "சோ கியூட்!" என்றாள்
அவனும் அவள் மூக்குடன் மூக்கு வைத்து உரசியவன், "அஞ்சு நாள் முடிய நடக்கும்ல?" என்று கேட்க, "ம்ம்... கண்டிப்பா!" என்று சொன்னாள்.
அவனோ, "கடவுளுக்கு நம்ம மேல ஏதோ கோபம் போல சுகா, உன் தம்பி என்னை விட சின்ன பையன் தானே? அப்பா ஆயிட்டான், நான் இன்னுமே சந்நியாசியா இருக்கேன்." என்று சொன்னான்.
சுகானா சத்தமாக சிரித்துக் கொள்ள கீழிருந்து, "ராம், சுகா, சாப்பிட வாங்க." என்று ஜெயந்தியின் குரல் கேட்க, "ஐயோ ராம், சாப்பிட வாங்க. நானும் மறந்து உங்ககூட பேசிட்டு இருக்கேன்." என்று சொல்லிக் கொண்டே எழுந்துகொள்ள, அவனும் அவளைத் தொடர்ந்து எழுந்து அவள் கையைப் பற்றியவாறு கீழிறங்கி சென்றான்.
***
நாட்கள் நகர்ந்தன...
அர்ஜுனும் கடையைத் திறக்கும் வேலையில் தீபனுடன் சேர்ந்து மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து இருந்தான். கடையின் கட்டிடமும் பெரிதாக கட்டப்பட்டு இருக்க, ‘லாவண்யா ஸ்டோர்ஸ்’ என்னும் பெயர் அதில் மின்னிக் கொண்டு இருந்தது.
இடையில் கையை வைத்து அதனை பார்த்தபடி நின்ற அர்ஜுன், "இன்விடேஷன் என்னாச்சு தீபன்?" என்று கேட்க, அவனும் கையுடன் கொண்டு வந்த சாம்பிளை கொடுத்தவன், "இது ஓகேயா?" என்று கேட்டான்.
அதனை விரித்துப் பார்த்தவன், "ம்ம்... நல்லா இருக்கு, நாளைக்கு எடுத்துடலாம்ல?" என்று கேட்க, "ம்ம்..." என்று சொன்னான் அவன்.
"அவர் சம்பந்தி தான் கடையை திறக்கணுமாம்..." என்று சலிப்பாக அவன் சொல்ல, "நல்ல விஷயம் தானே...?" என்றான் தீபன்.
"கடை விஷயம் என்கிறதால என்னால தனியா முடிவு எடுக்க முடியல. இத பத்தி பேச அவங்க வீட்டுக்கு போறத நினைச்சாலே எரிச்சலா இருக்கு." என்று அவன் சலித்துக் கொள்ள,
"ராகவியை அழைச்சிட்டு போறியா? இல்லை, தனியா போறியா?" என்று கேட்டான்.
"தனியா தான்... ராகவி கூட போனா ஒரே சென்டிமெண்ட் சீனா இருக்கும், அத பார்க்கிற பொறுமை எனக்கு இல்ல." என்று சொல்லிக் கொண்டே வேலையைப் பார்க்க தொடங்கியவன், அடுத்த நாள் அழைப்பிதழுடன் சக்திவேலின் வீட்டுக்கும் வந்து விட்டான்.
அவன் கார் உள்ளே வந்ததுமே அங்கே நின்ற நவநீதன் வேகமாக உள்ளே சென்று, "அப்பா, உங்க மருமகனோட கார் வந்திருக்கு." என்று எரிச்சலாக சொன்னான்.
"உனக்கென்னடா இந்த வயசில இவ்ளோ கோபம்?" என்று கேட்டுக் கொண்டே வாசலுக்கு வந்து நின்றான் சக்திவேல்.
காரை திறந்து கொண்டு இறங்கிய அர்ஜுனுக்கு சற்று சங்கடமாக இருந்தது. ஏனோ ஒருவகை நெருடல். தவிர்க்க முடியாமல் பேசியாக வேண்டிய கட்டாயம். அழைப்பிதழுடன் எடுத்தெறிந்து பேசவும் முடியாது. கஜன் வீட்டில் இல்லாதது அவனுக்கு பெரிய நிம்மதிதான்.
பிடரியை வருடிக் கொண்டே வாசல் வரை வந்தவனை ஆழ்ந்து பார்த்த சக்திவேலோ, "உள்ளே வர இஷ்டம்னா உள்ளே இருந்து பேசலாம், இல்லன்னா இங்க நின்னே பேசலாம்." என்றான்.
அழைத்தால் தான் அவன் வருவது இல்லையே? அழைத்து அவமானப்படவும் சக்திவேல் தயாராக இல்லை.
"உள்ளே வந்து பேசுறேன்." என்றான்.
வழி விட்டு விலகி நின்று கொள்ள அவனும் உள்ளே நுழைந்தான்.
இருக்கையில் அமர்ந்த சக்திவேலோ, "உட்காருங்க." என்று சொல்ல, அவனும் அமர்ந்து கொண்டு, "இன்னும் ரெண்டு வாரத்துல கடையை திறக்க இருக்கோம்..." என்றான்.
"ம்ம்..." என்று சக்திவேல் சொல்ல, "நீங்க வந்துதான் கடையை திறந்து வைக்கணும்னு அப்பா ஆசைப்படுறார்." என்று தட்டுத் தடுமாறி சொல்லி விட்டான். சக்திவேலின் விழிகளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
குரலை செருமிக் கொண்டு, "சம்பந்தி சொன்னதற்காக பண்ணிடலாம்." என்றான். அவனிடம் கையில் இருந்த அழைப்பிதழை நீட்டினான்.
"இந்த சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம் பழக்கம் இல்ல போல, கொஞ்சம் இருங்க வந்திடுறேன்." என்று சொன்னபடி உள்ளே சென்றான்.
போகும் போது அவன் விழிகள் அர்ஜுன் அணிந்து இருந்த கருப்பு சட்டையில் படிந்து மீண்டது. உள்ளே இருந்து அவன் வெளியே வந்த சமயம் தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சளுடன் வந்தாள் துளசி.
அவனிடம் அந்த தட்டை நீட்டியவள், "இதுல வச்சு கொடுங்க." என்று சொல்ல, அர்ஜுனுக்கு மறுக்கவும் முடியாத இக்கட்டான நிலை.
அவனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. வேறு வழி இல்லாமல் தட்டில் அழைப்பிதழை வைத்தான். துளசி மஞ்சளை அழைப்பிதழில் எடுத்து பூசி இருக்க, அர்ஜுனின் தோளில் வந்து நவநீதன் மஞ்சள் நிற சால்வையை போட்டுவிட, அர்ஜுன் அவனை அதிர்ந்து பார்த்தான்.
அவன் இத்தனை விஷயங்கள் செய்தும் அவனை யாரும் மரியாதை குறைவாக நடத்தவில்லை. எடுத்தெறிந்து பேசவும் முடியாது. அவனுக்குள்ளேயே ஒரு மாற்றம்.
சக்திவேலோ, "நல்ல விஷயம் பண்ணுறீங்க, மங்களகரமாக ஆரம்பிக்கட்டும்னு ஆசைப்படுறேன்." என்று சொல்ல, அவனும் தட்டை நீட்டினான்.
அதனை வாங்கிக் கொண்டு, "டீ குடிச்சு போறீங்களா?" என்று கேட்டான்.
அவ்வளவு மரியாதையான அழைப்பு!
"இல்ல, நான் கிளம்புறேன்." என்ற அர்ஜுன் சால்வையை நவநீதனிடம் நீட்ட, அவனும் வாங்கிக் கொண்டான்.
வாசல் வரை வந்தவனிடம் ஒரு பையை நீட்டினாள் வந்தனா.
அவனும் அவளைப் புரியாமல் பார்க்க, "ராகவிக்கு மாங்காய் பறிச்சு பெரியப்பா கொடுக்க சொன்னார்." என்று சொல்ல, அவனும் எதுவும் சொல்லாமல் அதனை வாங்கி இருந்தான். காரிலும் ஏறி விட்டான்.
அவனையே பார்த்துக் கொண்டு சக்திவேல் நின்று இருக்க, "மாப்பிள்ளைகிட்ட மாற்றம் தெரியுதுல?" என்றாள் துளசி.
"ம்ம்..." என்று சொல்லிக் கொண்டான் சக்திவேல்.
காரை கிளப்பிக் கொண்டு வந்த அர்ஜுனுக்கு தன்னை நினைத்தே தடுமாற்றம்.
'அர்ஜுன் உனக்கு என்னாச்சு? ஏன் இவ்ளோ அமைதியா ஆயிட்ட?' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனை, அவன் காதல் மென்மையாக்கிக் கொண்டு இருந்தது.