நிலவு 55
கஜனின் வீட்டில் இருந்து எல்லாருமே பார்க்க வந்து இருந்தார்கள். எல்லோருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி."நிறைய நாள் கழிச்சு நம்ம வீட்ல குழந்தை..." என்று துளசி குழந்தையைத் தூக்கி முத்தமிட்டாள்.
சக்திவேலோ, "சீக்கிரம் வந்திடும்மா..." என்று சொல்ல, அனைவரும் அவர்களைப் பார்த்துவிட்டு கிளம்பி விட்டார்கள்.
யாழினி, கஜனின் உயிர்நீரில் உருவான குழந்தை அல்ல என்றாலும், எல்லோருமே குழந்தையை கஜனின் குழந்தையாக ஏற்றுக் கொண்டது பல்லவிக்கே ஆச்சரியம் தான்.
நெகிழ்ந்து விட்டாள். அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம்.
கஜன் அவளுடனேயே இரு வாரங்கள் பார்த்தீபன் வீட்டில் தங்கி விட்டு, அவளையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வருவதாக சொல்லி இருந்தான்.
***
வீட்டில் இருந்த ராகவிக்கோ மனம் எல்லாம் வலி. அண்ணனின் குழந்தையை கூட பார்க்க விடமாட்டேன் என்கின்றானே இந்த ராட்சஷன். அறைக்குள் படுத்து இருந்தவள் அருகே வந்து அமர்ந்தான் அர்ஜுன். அவள் அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.
"நாளைக்கு ஊருக்கு போகணும், ரெடியா இரு." என்றான்.
சட்டென அவனைத் திரும்பி பார்த்தவள் இதழ்கள் விரிய, "குழந்தையை பார்க்க போறோமா?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை, இன்னும் மூனு வாரத்துல புது கடை திறக்கணும். அத பத்தி அப்பாகிட்ட பேசணும்." என்றான்.
அதனை அலைபேசியிலேயே பேசலாம் அவன். அது அவளுக்கும் தெரியும். கேட்டால் வாய்ப்பு கெட்டுவிடுமோ என்று நினைத்தவள், "ஓகே" என்றாள்.
"கொஞ்ச நேரத்துக்கு முதல்ல சிரிச்ச, அதே போல சிரிக்கலாமே...?" என்றான்.
"சிரிப்பு வந்தா சிரிப்பேன்." என்றாள்.
அவன் இதழ்களுக்குள் இப்போது புன்னகை ஒளிந்து கொள்ள, குரலை செருமிக் கொண்டே, "டயர்ட்டா ஃபீல் பண்ணுறியா என்ன?" என்று கேட்டான்.
"இல்லையே..." என்று சொன்னவளுக்கு, சட்டென அவன் எதற்கு கேட்கின்றான் என்று புரியவில்லை.
"அப்போ..." என்று சொல்லிக் கொண்டே கட்டிலைக் காட்ட, "இது ஏதோ புதுசு போல பெர்மிஷன் வேற..." என்று அவள் முணுமுணுத்தது அவனுக்கும் கேட்க,
சத்தமாக சிரித்துக் கொண்டே அவளை இழுத்து அணைத்து கழுத்தினுள் முகம் புதைக்க, அவள் விழிகளும் இப்போது மோகமாக மூடிக் கொண்டன.
அடுத்த நாள் காலையிலேயே அவளை அழைத்துக் கொண்டு பார்த்தீபன் வீட்டுக்கு புறப்பட்டு இருந்தான். அவள் தூங்கிக் கொண்டே வந்தாள்.
“இவ முழிச்சு இருக்கிற நேரத்தை விட தூங்குற நேரம் தான் அதிகமா இருக்கு...” என்று அவளை ரசனையாக பார்த்துக் கொண்டே வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான் அர்ஜுன்.
அவர்கள் வீடு வந்து சேர்ந்து விட்டது.
காரினுள் அமர்ந்து இருந்து கொண்டு வீட்டைப் பார்த்த ராகவி, "இவ்ளோ பெரிய வீடா இருக்கு..." என்று சொல்ல, "அப்படின்னு சொல்ல முடியாது, உங்க வீடு விசாலமா இருக்கும். எங்க வீடு உயரமா இருக்கு அவ்ளோ தான்..." என்று சொல்லிக் கொண்டே அவன் இறங்க, அவளும் இறங்கிக் கொண்டாள்.
முதல்முறை அவர்கள் வீட்டுக்கு வருகின்றாள். கொஞ்சம் தயக்கமாக இருந்தது. வலது காலை எடுத்து வைத்துதான் உள்ளே சென்றாள். அவர்கள் சொல்லிவிட்டு எல்லாம் வரவில்லை. தடாலடியாக வந்து இறங்கி இருக்கின்றார்கள். யாருமே எதிர்பார்க்கவில்லை.
கார் வரும் சத்தம் கேட்டது தான். இனியனின் கார் என்று நினைத்து இருக்க, உள்ளே வந்தது என்னவோ அர்ஜுனும் ராகவியும் தான்.
ஹாலில் யாழினியை கையில் தூக்கி வைத்தபடி அமர்ந்து இருந்த கஜனுக்கோ, அவர்களைப் பார்த்ததுமே அதிர்ச்சி.
ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. பல்லவி குளியலறைக்குள் இருந்தாள். பைரவி குழந்தையை குளிக்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தாள்.
பார்த்தீபன் அப்போதுதான் அறைக்குள் இருந்து வெளியே வந்தவன், "வாம்மா!" என்று ராகவியை மட்டும் அழைத்து இருந்தான்.
ராகவி மெலிதாக புன்னகைத்து விட்டு கஜனின் கையில் இருந்த குழந்தையை ஆசையாக பார்க்க, அர்ஜுனோ பார்த்தீபனிடம், "கடை திறக்கிறத பத்தி பேச வந்தேன்." என்று சொல்லிக் கொண்டே சோஃபாவில் அமர,
அவனும் அமர்ந்து கொண்டே, "ம்ம்... எல்லாம் முடிஞ்சதா?" என்று கடையைப் பற்றி கேட்டான்.
ராகவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கஜன் அருகே செல்ல ஆசையாக இருந்தது. கஜன் அவளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான் தவிர, எதுவும் வாய் திறந்து பேசவில்லை. இந்த அர்ஜுனை மீறி சென்றால் அவன் வானுக்கும் பூமிக்கும் குதிப்பான். வார்த்தைகள் வரம்பின்றி வரும்.. அதனை தாங்கிக் கொள்ளும் தெம்பு அவளுக்கு இப்போது கொஞ்சமும் இல்லை... மனதளவில் பலவீனமாக இருக்கின்றாள்.
தவிப்பாக நின்றவளைப் பார்த்த பார்த்தீபனோ, "உட்காரும்மா, உன் வீடு போலதான்..." என்று சொல்ல, அவளோ அங்கே அமர்ந்து இருந்த அர்ஜுனைப் பார்க்க, அவளை ஏறிட்டுப் பார்த்தவனோ கண்களால் குழந்தையைக் காட்டிவிட்டு பேச ஆரம்பித்து விட்டான்.
விழிகளாலேயே சம்மதம் சொல்லி விட்டான். அவள் இதழ்கள் சட்டென விரிய வேகமாக கஜன் அருகே வந்து அமர்ந்து கொண்டு, "குட்டி அழகா இருக்கா..." என்று சொல்லி குழந்தையை வருட,
அவனோ, "தூக்கி பாரும்மா..." என்று சொல்லி குழந்தையை அவளிடம் நீட்டியவன், எப்படி தூக்க வேண்டும் என்று சொல்லியும் கொடுத்தான்.
அவளோ, "ஐயோ! எவ்ளோ ஸ்வீட்...!" என்று குழந்தையை ஆசையாக கொஞ்ச, அவளைக் கடைக்கண்ணால் பார்த்த அர்ஜுனின் இதழ்களுக்குள் புன்னகை ஒளிந்து கொள்ள, அதனை இதழ் கடித்து அடக்கிக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்தபடி பார்த்தீபனைப் பார்த்தவன் கடையைப் பற்றி பேசினான்.
இத்தனை நாட்கள் கழித்து பார்த்தீபனும் அர்ஜுனும் பேசினார்கள். கடையை தவிர வேற எந்த பேச்சும் அவர்கள் பேசவில்லை.
அங்கே வந்த பல்லவி, "வாங்க!" என்று இருவரையும் அழைத்து கஜனுக்கு அடுத்த பக்கம் அமர, "எப்படி இருக்கீங்க அண்ணி?" என்று கேட்டாள் ராகவி.
"நல்லா இருக்கேன்மா... நீ எப்படி இருக்க?" என்று கேட்டு அவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
பார்த்தீபனும், "கடையை திறக்கிறதுக்கு இன்விடேஷன் அடிக்கணும். சம்பந்தி குடும்பத்துல எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுக்கணும். சம்பந்தி கடையை திறக்கணும்னு நான் ஆசைப்படுறேன். நிகழ்ச்சியை பெருசா பண்ணிடலாம்." என்று சொல்ல,
"அவர்தான் திறக்கணுமா?" என்று சட்டென கேட்டுவிட்டு கஜனைப் பார்க்க, "அவர்தான் கண்டிப்பா திறக்கணும்." என்று பார்த்தீபனிடம் இருந்து பதில் வந்தது.
கஜன் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் நிதானமாக அமர்ந்து இருந்தான். அர்ஜுனுக்கு கடை பற்றிய முடிவுகளை தனியாக எடுக்கும் அதிகாரம் இல்லை. பார்த்தீபன் சொல்பவற்றை தான் செய்ய வேண்டிய கட்டாயம். மறுக்க முடியாத நிலை. அழுத்தமாக மறுக்கவும் தோன்றவில்லை.
ஏன் இந்த மாற்றம் என்று அவனுக்கே தெரியாத நிலைமை தான். இப்போதெல்லாம் அவன் அழுத்தமும் மூர்க்கமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை அவனே உணர்ந்தான். சற்று நிதானமும் வந்து சேர்ந்து இருந்தது. எல்லாவற்றுக்கும் ராகவி மட்டுமே காரணம்.
வேறு வழி இல்லாமல், "ம்ம்... பார்த்துக்கிறேன்." என்று மட்டும் சொல்லிக் கொண்டவன் கண்ணில், அங்கே வந்த பைரவி தென்பட்டாள்.
அவள் அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு நகர்ந்து சென்றவள், குழந்தையை வாங்கிக் கொண்டு அர்ஜுன் அருகே வந்து, "குழந்தையை குளிக்க கொண்டு போக போறேன், தூக்கிப் பார்த்துட்டு கொடு." என்று நீட்ட, அர்ஜுனோ அவளை அதிர்ந்து பார்த்தான்.
அவன் அதிர்ச்சியைப் பார்த்த ராகவிக்கு சிரிப்பு வந்து விட்டது.
அடக்கிக் கொண்டே அவனைப் பார்த்து இருக்க, "தூக்குடா..." என்று ஒரு அதட்டல் பைரவியிடம் இருந்து.
அவளை முறைத்துக் கொண்டே கையை நீட்டி இருந்தான் அர்ஜுன்.
"இப்படியா குழந்தையை தூக்குவாங்க? கையை ஒழுங்கா பிடி, நீ எல்லாம் பிள்ளை பெத்து எப்படிதான் தூக்க போறியோ...?" என்று சொல்ல,
அவனோ அவளை முறைத்துக் கொண்டே குழந்தையை வாங்கி இருந்தான். குழந்தையை மார்புடன் அணைத்து பிடித்துக் கொண்டு குழந்தையின் முகத்தைப் பார்த்தவனின் விழிகளில் மெல்லிய கனிவு. அவ்வளவு முரட்டுத்தனம் உள்ளவனையும் இளக வைத்து விட்டதே இந்த குழந்தை. கஜன் அவனைதான் ஆராய்ச்சியாக பார்த்தபடி இருந்தான். அவனால் அர்ஜுனை சட்டென புரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றான் அர்ஜுன்.
பைரவி முன்னே இன்னுமே அவள் சொல் பேச்சு கேட்கும் குழந்தையாகி விடுகின்றான். குழந்தையைத் தூக்கும் போது சற்று முன்னர் வரை இருந்த இறுக்கம் எங்கோ ஒளிந்து கொண்டது. ராகவி விஷயத்தில் மட்டும் இன்னுமே நெருடல் இருக்கின்றது தான்.
சற்று நேரம் குழந்தையைப் பார்த்த அர்ஜுனோ, "பேர் என்ன?" என்று பைரவியிடம் கேட்க, "யாழினி!" என்று பதில் வந்தது கஜனிடம் இருந்தது.
"ம்ம்..." என்று சொல்லிக் கொண்டே குழந்தையை பைரவியிடம் நீட்ட, அதனை வாங்கிய பைரவி, "குழந்தைக்கு ஆய் கழுவி பழகிக்கோ, அந்த பொண்ண கஷ்டப்படுத்தாம எல்லாமே நீயே பார்க்கணும், புரியுதா?" என்று கேட்க,
"என் பொண்டாட்டியை எனக்கு பார்த்துக்க தெரியும்." என்று முறைத்துக் கொண்டே பதில் சொன்னான் அவன்.
"உன்னை ஒழுங்கா பார்த்துகிறானாம்மா?" என்று ராகவியை பார்த்துக் கொண்டே பைரவி கேட்க, "ம்ம்..." என்று தலையை அசைத்து பதில் சொல்ல, கஜனின் விழிகள் அவளில் ஒரு கணம் ஆராய்ச்சியாக படிந்து மீண்டது.
அதனைத் தொடர்ந்து பைரவியும் நகரப் போக, "நாங்க கிளம்புறோம்." என்று சொல்லிக் கொண்டே எழுந்து கொண்டான் அர்ஜுன்.
"சாப்பிட்டு கிளம்பலாமே?" என்று பார்த்தீபன் சொல்ல, "கடை பத்தி பேச வந்தேன், பேசிட்டேன் கிளம்புறேன்." என்று சொல்லிக் கொண்டே ராகவியைப் பார்க்க, அவளும் எழுந்து கொண்டாள்.
அவளை விழிகளால் அருகே அழைத்தான், அவளும் சென்றாள்.
பாக்கெட்டில் இருந்த நகைப் பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டியவன், பல்லவியைக் கண்களால் காட்டிவிட்டு வெளியேறிவிட, அவனை ஆச்சரியமாக பார்த்துவிட்டு பல்லவி அருகே சென்ற ராகவி, "அண்ணி!" என்று நீட்ட, அவள் கஜனைப் பார்க்க, "வாங்கிக்கோ." என்றான் அவன்.
அவளும் அதனை மென் புன்னகையுடன் வாங்கிக் கொள்ள, "அப்போ நான் வர்றேன்." என்று வெளியேறி விட்டாள்.
அவர்கள் சென்றதும், "ரொம்ப மாறிட்டான்ல..." என்று மென் புன்னகையுடன் பார்த்தீபன் சொல்ல, "ம்ம்..." என்ற பல்லவி அதனை பிரித்துப் பார்க்க, குழந்தைக்காக குட்டி ஜிமிக்கி இருந்தது.
"ரொம்ப அழகா இருக்கு." என்று கஜன் சொல்ல, பல்லவியும், "ஆமா..." என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டாள்.
பைரவியும் ஒரு மென் புன்னகையுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குளிக்க வைக்க சென்று விட்டாள்.
***
இதே சமயம், காரினுள் அர்ஜுனைத் தொடர்ந்து ஏறிய ராகவி அவனை இறுக அணைத்து இருக்க, அவனோ இந்த அணைப்பை எதிர்பார்க்கவே இல்லை. கொஞ்சம் அதிர்ந்து விட்டான்.
மெதுவாக கண்களை அவன் மூடிக் கொள்ள, அவளோ அணைப்புடன் நிறுத்தாமல் அவன் முகம் தாங்கி நெற்றியில் முத்தம் பதித்தவள், கன்னம், நாசி என்று நிற்காமல் முத்தமிட்டு, இறுதியில் அவள் இதழ்களில் ஆழ்ந்து இதழ் பதித்து இருக்க, அவன் விழிகளோ மெதுவாக மூடிக் கொண்டது.
உஷ்ண பெருமூச்சு ஒன்றையும் விட்டுக் கொண்டு அவளை மெதுவாக தன்னில் இருந்து பிரித்து எடுத்தவன், "உள்ளே இருந்து பார்த்தா தெரியும்..." என்று சொல்ல,
சட்டென விலகி அமர்ந்தவளுக்கு எதற்காக அவனுக்கு இப்போது முத்தமிட்டாள் என்று அவளுக்கே தெரியாது. உணர்ச்சிவசப்பட்டு முத்தமிட்டு விட்டாள். சட்டென வெளியில் பார்த்துக் கொண்டே, "கிளம்பலாம்." என்றாள்.
அவன் இதழ்களுக்குள் சிரிப்பு வந்துவிட, "ஓகே." என்று காரை கிளப்பி இருந்தான் அர்ஜுன்.
***
கடந்த இரு நாட்கள் ஜீவிதனுக்கு வேலை இருந்ததால் இன்றுதான் அவர்களும் பல்லவி மற்றும் கஜனின் குழந்தையைப் பார்க்க கிளம்பி இருந்தார்கள்.
ஏற்கனவே சென்ற நந்தினி மற்றும் சுரேஷுடன் செல்லும்படி நேத்ராவிடம் ஜீவிதன் கூறிய போது, "உங்க கூட போறது தான் முறை." என்று சொல்லி மறுத்து இருக்க, அங்கே செல்ல ஜீன்ஸ் மற்றும் நீல ஷேர்ட் சகிதம் ஆயத்தமாகி ஹாலில் வந்து அமர்ந்து விட்டான் ஜீவிதன்.
சற்று நேரத்தில் நேத்ராவும், "நான் ரெடி." என்றபடி அறைக்குள் இருந்து வெளியே வர, அவளை மேலிருந்து கீழ் இமைக்காமல் பார்த்தான். பிங்க் நிற புடவை அணிந்து இருந்தாள். தலையில் பூ வைத்து இருந்தாள். மிதமான மேக்கப்பில் பேரழகியாக இருந்தாள். எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டான்.
அவள் மேல் அவனுக்கு அதீத காதலும் அடங்காத மோகமும் உண்டு. அடக்கிக் கொண்டு இருக்கின்றான், அவளைக் காயப்படுத்தி விட கூடாது என்று. எப்போதுமே அவளை உரிமையுடன் ரசிப்பான், அவளுக்கு தெரியாமல் ரசிப்பான். அவளை அணைத்து சரசமாட தோன்றும் உணர்வுகளை அடக்கிக் கொள்வான்.
"ரொம்ப அழகா இருக்க..." என்று சொல்லிக் கொண்டே அவன் எழுந்துகொள்ள, அவள் முகம் இறுகிவிட்டது.
முக மாற்றத்தைக் கவனித்தவனோ, 'இடியட்!' என்று தனக்குத் தானே மானசீகமாக திட்டிக் கொண்டான்.
அவளும் தன்னை நிலைப்படுத்தியபடி, "தேங்க்ஸ்!" என்று அவனைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டு நகர, அவளுடன் ஜீப்பில் ஏறியதும் கூலர்ஸை அணிந்து கொண்டான்.
அவளைத் தடையில்லாமல், அவளுக்கு தெரியாமல் ரசிப்பதற்கு அவன் கையாளும் யுக்தி அது.
வண்டியும் புறப்பட்டது. மூன்றரை மணி நேர மௌனமான பயணத்தின் இறுதியில், பல்லவியின் வீட்டையும் அடைந்து விட்டார்கள்.
உள்ளே வந்தவர்களைப் பார்த்த பார்த்தீபனோ, "வாங்க... வாங்க... இப்போதான் அர்ஜுனும் ராகவியும் வந்து போறாங்க." என்று சொல்ல,
கஜனும் அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, "உட்காருங்க" என்றான்.
ஜீவிதன் குழந்தையை கஜனிடம் இருந்து வாங்கி தூக்கிக் கொள்ள, நேத்ராவும் அவன் அருகே வந்து குழந்தையின் பாதத்தை வருடியபடி, "குட்டி ரொம்ப அழகு!" என்றான்.
தன்னை நெருங்கி நின்றவளைத் திரும்பி பார்த்த ஜீவிதனின் விழிகள், ஒரு கணம் அவள் இதழ்களில் படிந்துமீள, "ம்ம்..." என்றான் உஷ்ண பெருமூச்சுடன்.
"நான் உட்காருறேன், மடியில கொடுங்க." என்று சொல்லிக் கொண்டே அவள் அமர, அவள் மடியில் குழந்தையை வைத்த ஜீவிதனும் பார்த்தீபனுடன் பேச ஆரம்பித்து விட்டான்.
அதனைத் தொடர்ந்து பல்லவியும் நேத்ராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்.
"தொட்டில்லே போடுங்க, என் கைல இருந்து கஷ்டப்படுறா..." என்ற நேத்ரா குழந்தையை பல்லவியிடம் கொடுக்க, அவளும் உள்ளே சென்று விட்டாள்.
இப்போது நேத்ராவின் விழிகள் கஜனில் படிய மெலிதாக புன்னகைத்தவன், "எப்படி இருக்க?" என்று கேட்டான்.
"நீங்க சந்தோஷமா இருக்கீங்களா மாமா?" என்று அவள் மாறி கேட்க, "ரொம்ப சந்தோஷமா இருக்கேன்." என்றான் அவன் மெல்லிய புன்னகையுடன்.
"நானும் நல்லா இருக்கேன்." என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன், "எப்போ நல்ல விஷயம் சொல்ல போற?" என்று கேட்க,
அவள் முகம் சட்டென இறுக, "இதுவாச்சும் எனக்கு தோனுற நேரம் நடக்கட்டுமே..." என்றாள் தலையைத் தாழ்த்திக் கொண்டு.
"ஹேய் நேத்ரா, நான் ஜஸ்ட் ஃபார்மாலிட்டிக்கு கேட்டேன். ரியலி சாரி!" என்றான் அவசரமாக.
"ஐயோ! இல்ல மாமா, நீங்க வருத்தப்படாதீங்க... நான்தான் லூசு போல உளறிட்டேன்..." என்று அவசரமாக மறுத்தவள், அவனை ஏறிட்டு பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்துக் கொள்ள, அவனும் மெலிதாக புன்னகைத்தான் தான். ஆனாலும் மனதில் ஆழமான ஒரு வலி அவள் பேச்சினால் ஊடுருவி இருந்தது. சற்று நேரம் பேசிவிட்டு அவர்களும் கிளம்பி விட்டார்கள்.
Last edited: