நிலவு 54
"யாருக்கு யார் குழந்தை? அது என் குழந்தை. எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டி மேல கையை வைப்ப?" என்று கேட்டுக் கொண்டே ஆத்திரத்துடன், கீழே கன்னத்தை பொத்தியபடி விழுந்து கிடந்தவன் மார்பில் காலினால் எட்டி மிதித்து இருந்தான்.கோபம் அடங்கவே இல்லை கஜனுக்கு.
சற்று நேரம் முன்னர், நண்பர்களை சந்தித்து விட்டு வந்தவனோ, பார்க்கிங்கில் வண்டியை விட்ட பின்னர் அவளைத் தேடி வந்து இருந்தான். அவனுக்கு இந்த குறுக்கு வழி எல்லாம் தெரியாது. புது இடம் ஆயிற்றே?
நேர் வழியிலேயே தேடி வர, அவள் கிளம்பி விட்டாள் என்று அங்கிருந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது. கொஞ்சம் பதறி விட்டான் தான். சுற்றி தேடினான்.
அங்கே வேலை செய்யும் பெண் ஒருத்திதான், "இந்த வழியால போனாங்க, இதாலயும் பார்க்கிங் போகலாம்." என்று சொல்ல, அவனும் அந்த ஓடை வழியை நோக்கி வந்தான்.
அப்போது தான் சத்தம் கேட்டது. வேகமாக வந்தவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவளை கிட்டத்தட்ட பலவந்தப்படுத்திக் கொண்டு இருந்தான் சுதர்ஷன். வெகுண்டெழுந்து விட்டான். அதுவும் அவள் குழந்தையை உரிமை வேறு கொண்டாடுகின்றான். பொறுத்துக் கொள்ள முடியுமா என்ன? அடித்து கொன்று விடும் ஆத்திரம்தான். இன்னுமே ஆத்திரம் தீரவில்லை.
சுதர்ஷனோ ஒரே அடியில் சுருண்டு விழுந்தாலும், கஜனால் தன்னை கட்டுப்படுத்த முடியவே இல்லை. ஷூ காலினால் அவன் விலா எலும்பில் ஓங்கி அடித்து இருந்தான். பல்லவிக்கோ அழுகை வேறு. அப்படியே சுவரில் சாய்ந்து நின்றவளுக்கு சுள்ளென்று இடையில் வலி.
இடுப்பை பற்றிக் கொண்டே, "கஜன்...!" என்றாள். கத்தவும் முடியவில்லை.
அவனோ ஆக்ரோஷமாக சுதர்ஷனின் கழுத்தில் காலை வைத்து மிதித்து, "இன்னொரு தடவை, என் பொண்டாட்டி மேல உன் மூச்சு காத்து பட்டாலே கொன்னுடுவேன்..." என்று சொல்ல,
"கஜன்!" என்று அவளும் முழுபலத்தை திரட்டி கத்தி இருந்தாள். திரும்பிப் பார்த்தான்.
அவள் சுவரில் சாய்ந்து கஷ்டப்பட்டு நின்று இருக்க, "பல்லவி ஆர் யூ ஓகே?" என்று கேட்டுக் கொண்டே அருகே வர, "இடுப்பு பெயினா இருக்கு..." என்று மூச்சு வாங்க சொன்ன கணம், சட்டென குனிந்து பார்த்தான்.
அவள் காலினால் நீர் வழிந்து கொண்டு இருந்தது.
பனிக்குடம் உடைந்து விட்டது என்று அவனுக்கு தெரிய, "ஷிட்! வாட்டர் பிரேக் ஆயிடுச்சு..." என்று சொன்னவனோ, சட்டென அவளை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டான்.
அவளால் நடக்க முடியாது என்று அவனுக்கு தெரியும். வேகமாக அந்த வழியால் சென்று தனது காரில் அவளை ஏற்ற, அவளோ வலியில் கதற ஆரம்பித்து விட்டாள். சட்டென அவள் முகத்தை இரு கைகளாலும் பிடித்தவன், அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டு,
"ரிலாக்ஸ்! நான் இருக்கேன்ல? எதுவும் ஆகாம பார்த்துப்பேன்." என்று சொன்னதுமே, அவளும் அழுகையுடன் ஆமோதிப்பாக தலையாட்டினாள்.
பயந்து இருப்பாள் என்று அவனுக்கு தெரியும். வண்டியில் ஏறிக் கொண்டு இனியனுக்கு அழைத்தான். இனியனின் வைத்தியசாலையில் தான் அவளுக்கு பிரசவம் பார்க்க வேண்டிய நிலைமை.
"பல்லவிக்கு வாட்டர் பிரேக் ஆயிடுச்சு, டெலிவரிக்கு ரெடி பண்ணுங்க, வந்துட்டே இருக்கேன். அப்படியே அத்தை, மாமாகிட்ட சொல்லிடுங்க." என்று சொல்லி விட்டு வைத்து இருந்தவன், வண்டியை கிளப்பி இருந்தான்.
அவளுக்கோ வலி தாங்கவே முடியவில்லை. வாய் விட்டே கதறினாள். அவன் இந்த கதறல் எல்லாமே கேட்டவன் தானே? எந்த பதட்டமும் இல்லாமல் வண்டியை ஓட்டி, ஒரு வழியாக ஹாஸ்பிடலையும் அடைந்து விட்டான்.
அவளை ஸ்ட்ரெச்சரில் ஏற்றியவன், "எல்லாம் ரெடி பண்ணுங்க, வந்திடுறேன்." என்று சொல்லி மருத்துவ அங்கியை அணிந்து மாஸ்க்கை கட்டிக் கொண்டு லேபர் வார்டினுள் செல்ல, அங்கே பிரசவத்துக்கு உடைகளை அணிந்து இருந்த பல்லவியோ, வாய் விட்டு கதறி அழுதுகொண்டு இருந்தாள்.
அவளால் வலியைத் தாங்கவே முடியவே இல்லை, சத்தம் போட்டு கத்தினாள். அவனிடம் சின்ன பதட்டம் கூட இல்லை.
"செர்விக்ஸ் டைலேட் ஆயிடுச்சா?" என்று கேட்டுக் கொண்டே வந்தவன் அவளை ஆராய்ந்து, "பல்லவி புஷ்!" என்றான்.
அவளும் முயன்றாள், உயிர் போகும் வலி.
"பல்லவி புஷ் ஹார்ட்..." என்றான் மீண்டும்.
அவளும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்க, அவனோ பெருமூச்சுடன் எழுந்து அவள் அருகே வந்தவன், "கொஞ்சம் புஷ் பண்ணும்மா..." என்று சொல்லி அவள் கையைப் பற்றி வருடிக் கொடுத்துவிட்டு, மீண்டும் அவள் குழந்தையை ஆராய சென்று விட்டான்.
அவளும் கத்தி, கதறி குழந்தையை பெற்று எடுக்க பாடுபட்டுக் கொண்டு இருக்க, குழந்தையின் தலை வெளியே வர தொடங்கியது.
அவன் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள, மாஸ்க் போட்டு இருந்ததால் விழிகளிலும் புன்னகை.
"பேபியோட தலை வெளிய வர ஸ்டார்ட் பண்ணிடுச்சு. புஷ் ஹார்ட், யூ கேன்..." என்று சொல்ல, அவளும் தனது பலம் முழுவதும் தேக்கி வைத்து அழுத்தத்தைக் கொடுக்க, குழந்தையின் தலை வெளியே வந்து விட்டது.
அவனோ மாஸ்க்கை இறக்கி விட்டு கையை நீட்டி லாவகமாக குழந்தையை வெளியே இழுத்து எடுத்தவன், "வெல்கம் மை பிரின்சஸ்!" என்று புன்சிரிப்புடன் சொல்ல, குழந்தையோ வீறிட்டுக் கத்தியது.
இதழ் பிரித்து தாராளமாக அவன் சிரிக்க அங்கே இருந்தவர்களோ, "கங்கிராட்ஸ் டாக்டர்!" என்று சொன்னார்கள்.
"தேங்க்ஸ்!" என்று குழந்தையை ஏந்திக் கொண்டு பல்லவியைப் பார்த்தான். களைத்து விட்டாள் பெண்ணவள்.
அவனைப் பார்த்து கண்ணீருடன் புன்னகைத்துக் கொள்ள, குழந்தையைத் தூக்கி அவள் மார்பில் படுக்க வைத்தவன், "பொண்ணு பிறந்து இருக்கா..." என்றான் கண்சிமிட்டி.
பல்லவி, "நீங்க சொன்னதுல இருந்து டவுட் இருந்திச்சு." என்று சொல்ல, "ஓகே, ரெஸ்ட் எடு. நானே அவளை செக் பண்ணிடுறேன்." என்றபடி குழந்தையைத் தூக்கி அடிப்படை பரிசோதனைகளை அவனே செய்தான்.
அதனைத் தொடர்ந்து குழந்தையை தாதியிடம் நீட்டியவன், "ஷீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஃபைன்." என்று சொல்லிவிட்டு அங்கே வந்தவன், "நானே ஸ்டிச் பண்ணுறேன்." என்று பல்லவிக்கான சிகிச்சைகளை அவனே செய்தான்.
குழந்தையை அவன் தூக்கியதில் இருந்து அவனில் மட்டுமே பல்லவியின் விழிகள் படிந்து இருந்தன. என்ன மாதிரியான மனிதன் இவன் என்று, அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. சுதர்ஷனை வதைத்ததில் இருந்து இப்போது வரை அவன் செய்து கொண்டு இருக்கும் ஒவ்வொன்றும், அவள் மனதில் படமாக ஓட, இமைக்க மறந்து அவனையே பார்த்து இருந்தாள்.
எல்லாவற்றையும் முடித்துவிட்டு அவள் அருகே வந்தவனை ஏறிட்டு பார்த்து, "ஐ லவ் யூ!" என்று அழுத்தி சொன்னாள்.
அவன் விழிகள் சட்டென விரிய, "இது எமோஷனலி நான் சொல்றேன் கஜன். என் அப்பாகிட்ட சொல்றது போல ஃபீல் பண்ணி சொல்றேன். உங்கள ரொம்ப பிடிச்சு இருக்கு, தேங்க்ஸ் சொல்லி அசிங்கப்படுத்த விரும்பல. ஐ லவ் யூ!" என்று சொல்லும் போதே நெகிழ்வாக இருந்தவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய,
சத்தமாக சிரித்தவனோ, "கொஞ்ச நேரத்துல எனக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சு இருப்ப..." என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவள் தலையை வருடிக் கொடுத்தவன்,
"லேபர் எமோஷன்ல என்னென்னவோ பேச தோனும். நாளைக்கு இதெல்லாம் நினைச்சு நீ சிரிக்காம விட்டா சரிதான். நீ சொன்னதுக்காக பதில் சொல்லணும்ல, ஐ டூ லவ் யூ..." என்று கண்சிமிட்டி சொல்லிக் கொண்டு எழுந்தவனோ,
"குழந்தைக்கு ஃபீட் பண்ணணும்." என்று சொன்னான்.
அவளும் மென்மையாக சிரித்துக் கொள்ள, அவளை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக் கொண்டு வார்டுக்கு மாற்றி இருந்தார்கள். அங்கே அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருந்தாள் பைரவி.
எந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னாளோ, அந்த குழந்தையை ஆசையுடன் தூக்கி இருந்தாள். எல்லோருக்கும் இப்போது இது கஜன் குழந்தைதான்.
அவர்களை மென்சிரிப்புடன் பார்த்துவிட்டு பார்த்தீபன் அருகே வந்தவன், "மாமா கொஞ்சம் பேசணும்." என்று சொல்ல, அவனும் கஜனுடன் வெளியே வர,
"இன்னைக்கு காலேஜ்ல என்ன ஆச்சு தெரியுமா...?" என்று கேட்டு எல்லாமே சொன்னான்.
பார்த்தீபனுக்கோ ஆத்திரம், "அந்த நாய் இன்னுமா சுத்திட்டு இருக்கான்?" என்று எரிச்சலாக கேட்க,
"கொஞ்சத்துக்குள்ள கொன்னே இருப்பேன், தப்பிட்டான். அவன் இனி வெளிய சுதந்திரமா இருக்க கூடாது. உங்க இன்ஃப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி ஜெயிலுக்குள்ள போட்ருங்க. அவனை எல்லாம் விட்டு வச்சது தப்பு. பல்லவி மேலயே கை வைக்கிறான், ராஸ்கல்..." என்று திட்டியவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.
"சரி, நான் அத பார்த்துக்கிறேன். நீங்க குழந்தைய பாருங்க மாப்பிள்ளை." என்று சொன்னவன், அடுத்து ஜீவிதனுக்கு அழைத்து செய்ய வேண்டியதை சொன்னான்.
பல்லவி கையில் குழந்தையை பைரவி கொடுத்து இருக்க, ஆசையாக குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே வந்த கஜனைப் பார்த்தவள், "என்ன பேர் வைக்கலாம்?" என்று கேட்டாள்.
"நீ யோசிச்சு இல்லையா?" என்று கேட்க, "நீங்க யோசிச்சு இருப்பீங்களே, பொண்ணுன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும் தானே?" என்று அவனை பார்த்துக் கொண்டே கேட்க,
"ம்ம்... யாழினின்னு யோசிச்சேன், உனக்கு பிடிச்சா வைக்கலாம்." என்றான்.
அவளோ கண்சிமிட்டி சிரித்தவள், "யாழினி கஜன்!" என்று சொல்ல, அவனும் அழகாக சிரித்துக் கொண்டே, "ஃபீட் பண்ணும்மா..." என்றான்.
கொஞ்சம் சங்கடம் அவளுக்கு. தடுமாறிக் கொண்டாள். பைரவியோ சங்கடத்துடன் வெளியேறி இருந்தாள்.
குரலை செருமிக் கொண்டே, "காண்ட் ஹெல்ப்! நான் டாக்டர், இத செக் பண்ணிதான் ஆகணும்." என்றான்.
அவளும் சங்கடத்துடன் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்து விட, "சக் பண்ணுறா, சோ நோ ப்ராப்ளம்..." என்று சொன்னான் அவன்.
அவன் என்னவோ ஒரு கர்ப்பிணி பெண்ணுடன் பேசுவது போல தான் அவளைக் கையாண்டான். தடுமாறி போனதென்னவோ பல்லவி தான். கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அவன் விழிகளில் மோகம் இல்லை, தாய்மை உணர்வுதான் இருந்தது.
ஆனாலும் பல்லவி கொஞ்சம் நெளிய அவள் சங்கடப்படுகின்றாள் என்று உணர்ந்தவனோ, "ஓகே, ஃப்ரீயா ஃபீட் பண்ணு. ஏதும்னா லெட் மீ க்னோ." என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தவன்,
அங்கே நின்ற பைரவியிடம், "உள்ளே போங்க அத்தை." என்று சொல்லிக் கொண்டான்.
அவன் விஷயத்தை வீட்டுக்கு சொல்ல, எல்லோரும் கிளம்பி வர தொடங்கி விட்டார்கள்.
"அர்ஜுனுக்கு சொல்லிடு." என்று பார்த்தீபன், பைரவியிடம் சொல்ல அவளும் அவனுக்கு அழைத்தாள்.
ராகவியை காரில் ஏற்றிக் கொண்டு வந்து இருந்தவனோ, பைரவியின் எண்ணைப் பார்த்து புருவம் சுருக்கி பார்த்துவிட்டு, காரை ஓரமாக நிறுத்தி அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன், "ஹலோ!" என்று சொல்ல,
"பல்லவிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு, நம்ம ஹாஸ்பிடல்ல தான் டெலிவரி ஆச்சு." என்றாள் பைரவி.
அவனிடம் ஒரு மௌனம்.
"ஹலோ!" என்றாள் பைரவி.
"ஓகே." என்று மட்டும் பதில் வர, பைரவியும் கடுப்பாக வைத்து விட்டாள்.
அலைபேசியை சிறிது நேரம் பார்த்து விட்டு அருகே அமர்ந்து இருந்த ராகவியைப் பார்த்தான்.
அவள் வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க, "ராகவி!" என்றான். திரும்பிப் பார்த்தாள்.
"உன்னோட அண்ணாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்காம்..." என்று சொல்ல, அவள் இதழ்கள் தாராளமாக விரிய, "நிஜமாவா?" என்று கேட்டாள்.
அவனை அறியாமலே அவன் பல்லவிக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று சொல்லாமல், கஜனுக்கு பிறந்து இருக்கின்றது என்று சொல்லி இருந்தான்.
கஜன் மீது கோபம் இருந்தாலும், அந்த குழந்தையை அவனால் சுதர்ஷனின் குழந்தையாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. கஜன் மீது கோபம் இருக்கின்றது தான். ஆனால் சுதர்ஷன் மீது இருப்பதோ வெறுப்பு.
அவள் புன்னகையை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "ம்ம்..." என்றான்.
"இப்போ பார்க்க போவோம்." என்றாள்.
"இங்க இல்ல, எங்க ஊர்ல..." என்றான்.
"நாளைக்கு எனக்கு காலேஜ்ல பெருசா ஒன்னும் இல்லை, கிளம்பலாமே..." என்றாள்.
"என்னால முடியாது." என்றான் நறுக்கென்று.
சட்டென அவள் கண்கள் கலங்கி விட்டன. முன்னால் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். என்ன மனிதன் இவன் என்றுதான் தோன்றியது. அவன் அக்காவுக்கு குழந்தை பிறந்ததை கூட பார்க்க முடியாது என்கின்றான். வெறுப்பாக இருந்தது.
"கொஞ்சம் கூட பார்க்கணும்னு தோனலையா?" என்று கேட்டாள்.
"இல்லை." என்று வண்டியை எடுக்க, "எனக்கு பார்க்கணும்." என்றாள் அவள்.
"அதெல்லாம் தேவை இல்ல." என்றான்.
சட்டென கண்கள் கலங்க, அவனை வெறுப்பாக பார்த்துவிட்டு இதழ் கடித்து வலியை அடக்க முயன்றாள், முடியவில்லை. கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருந்தது.
***
இதே சமயம், பாலை கொடுத்துவிட்டு பல்லவி குழந்தையை தூங்க வைத்து இருக்க, உள்ளே வந்த கஜனோ, "மேடம் தூக்கமா?" என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்த இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.
இருவர் மட்டும்தான் இருந்தார்கள்.
"கஜன்!" என்றாள். ஏறிட்டுப் பார்த்தான்.
"எனக்கு பயமா இருக்கு, நம்ம குழந்தையை யாருமே உரிமை கோர கூடாதுனு ஆசைப்படுறேன்." என்றாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவனோ, "அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துட மாட்டேன். அவ யாழினி கஜன்! என்னை மீறி வேற யாரும் அந்த உரிமையை எடுக்க யோசிக்க கூட முடியாது." என்று சொல்ல,
அவளுக்கு அவன் வார்த்தைகள் தைரியத்தைக் கொடுக்க, "உங்க மேல நம்பிக்கை இருக்கு." என்றாள்.
அவள் கையைப் பற்றி அழுத்தத்தைக் கொடுத்தவனோ, "அவ்ளோ தான்..." என்று மென்சிரிப்புடன் சொல்ல, அவளும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள்.
"ஆஹ்! இந்த ரணகளத்துல கேட்கவே மறந்துட்டேன், ரிசர்ச் என்னாச்சு?" என்றவனை மென் புன்னகையுடன் பார்த்தவள், "இனி நானும் டாக்டர் ஆக்கும்..." என்றாள்.
அவன் இதழ்கள் சந்தோஷமாக விரிய, "டாக்டர் பல்லவி கஜன்!" என்றான் கண்களை சிமிட்டி. அவளும் அதே நிறைவுடன் புன்னகைத்துக் கொண்டாள்.