நிலவு 53
அன்று இரவு வைத்தியசாலைக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்த ராம்குமாரை, கதவில் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள் சுகானா.அவனும் ஷேர்ட்டின் பட்டன்களை மூடிக் கொண்டே, "உனக்கு நாளைக்கு டே டியூட்டில?" என்று கேட்க, "ம்ம்..." என்றாள்.
"சரி விடு, அடுத்த வாரம் பார்த்துக்கலாம்." என்று சொன்னவனை நெருங்கி வந்தவள், அவனுக்கு ஷேர்ட் பட்டன்களை போட்டுவிட,
அவனோ, "பக்கத்துல வந்து டெம்ப்ட் பண்ணாத, நான் ஒரு வாரம் கண்ட்ரோலா இருக்கணும்." என்று சொல்லிக் கொண்டே விலகி நிற்க,
"ரொம்ப பண்ணாதீங்க..." என்று சொல்லிக் கொண்டே, அவன் ஷேர்ட்டை பற்றி இழுத்து பட்டன்களை மூடியவள் அவனை ஏறிட்டுப் பார்க்க, இருவரின் மூச்சுக் காற்றுகளும் கலந்து வெளியேறின.
அவளையே பார்த்து இருந்தவனோ, "சுகா ப்ளீஸ்..." என்றான் கெஞ்சுதலாக.
அவளோ அவன் தோள்களைப் பற்றி எம்பி அவன் இதழில் இதழ் பதிக்க, கண்களை மூடி உஷ்ண மூச்சுக்களை விட்டவன் தன்னை அடக்க படாதபாடு பட்டான். அவனும் முத்தமிட்டு விட்டால் அவனை நிறுத்த முடியாது என்று அவனுக்கு தெரியும்.
கை முஷ்டியை மடக்கி தன்னை கட்டுப்படுத்த முயன்று தோற்றவன் ஒரு கட்டத்தில் முடியாமல், "ப்ளீஸ்..." என்று தோள்களைப் பற்றி விலக்க, "ராம்!" என்றாள் அவள் சிணுங்கலாக.
"டெம்ப்ட் பண்ணாதடி, நானும் மனுஷன் தானே?" என்று சொல்லிக் கொண்டே கார் கீயை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறியவனை, பின்தொடர்ந்தது அவளது புன்னகை.
"ராட்சஷி!" என்று அவன் முணுமுணுக்க, அவளோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "சோ ஸ்வீட் ராம்..." என்று சொல்லிக் கொண்டாள்.
அவன் காலையில் வேலை விட்டு வந்த போது, அவள் வேலைக்கு கிளம்பி இருந்தாள். இப்படிதான் அவர்கள் நாட்கள் நகர்ந்தது.
***
இதே சமயம், ஜீவிதன் வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருக்க, நேத்ராதான் சமைத்துக் கொடுத்தாள். தேவைக்கு மட்டும் பேசிக் கொள்வாள். அவனும் அவளைத் தொந்தரவு செய்வது இல்லை.
"நான் அப்பாவோட பிஸ்னசை பார்த்துக்கலாம்னு இருக்கேன்." என்றாள்.
அவனோ, "ட்ரைவ் பண்ண தெரியாதா?" என்று கேட்க, "லைசென்ஸ் இருக்குதான், ஆனாலும் கொஞ்சம் பயம்." என்று சொல்ல,
"மார்னிங் ரெடியா இரு, நாளைல இருந்து டியூட்டிக்கு போற நேரம் டிராப் பண்ணிடுறேன். நைட் வர லேட் ஆகும், சோ நீ ஆட்டோவில் வந்திடு." என்று சொல்ல, "ஓகே." என்று சொன்னவள் அதனையே பழக்கமாக்கி இருந்தாள்.
ஒட்டியும் ஒட்டாமல் தாமரை இல்லை தண்ணீர் போல அவர்கள் வாழ்க்கை நகர ஆரம்பித்து இருந்தது.
***
இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்க பல்லவிக்கோ பி.ஹச்.டி வைவாவுக்கான நாளும் வந்து விட்டது. அவளை கஜன்தான் அவள் ஊருக்கு அழைத்து சென்று இருந்தான். பார்த்தீபன் வீட்டில் தான் அவர்கள் தங்கி இருக்க, விருந்து எல்லாம் தடல் புடலாக தான் இருந்தது.
அடுத்த நாள் அவளுக்கு நேர்முக கேள்வி பதில் இருக்க, கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தாள்.
அவள் முகத்தைப் பார்த்த கஜனோ, "ரிலாக்ஸ் பல்லவி!" என்று சொல்ல, "பயமா இருக்கே..." என்றாள்.
"இப்போ தூங்குனா தான் காலைல எந்திரிக்கலாம்." என்று சொல்லி அவளைப் படுக்க வைக்க, அவளோ கண்களைத் திறந்து கொண்டே படுத்து இருந்தாள்.
"இன்னும் தூங்கலையா?" என்று கேட்டான்.
"நாளைக்கு டிஃபெண்ட் பண்ணிடுவேனா?" என்று கேட்க, "கண்டிப்பா!" என்று கண்சிமிட்டி சொல்ல, அவளும் கண்களை மூடி தூங்க ஆரம்பித்து இருந்தாள்.
அடுத்த நாள் காலையில் அவள் எழுந்த நேரம் கஜன் இல்லை. நேரத்துக்கே ஆயத்தமாகி ஹாலில் இருந்து பார்த்தீபனுடன் டீ குடித்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தான்.
"அர்ஜுன் விஷயத்துல எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு மாப்பிள்ளை..." என்று பார்த்தீபன் சொல்ல, "அத ஃப்ரீயா விடுங்க மாமா, இனி எதுவும் மாத்த முடியாது. சந்தோஷமா சேர்த்து பிடிச்சுக்கலாம்." என்று சொன்னான் கஜன்.
"அவன் எங்க சேர்த்து பிடிக்கிற போலவா இருக்கான்?" என்று பார்த்தீபன் சலிக்க, "விடுங்க பார்த்துக்கலாம், கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறும், டைம் கொடுக்கலாம்." என்று சொல்லிக் கொண்டு இருந்த சமயம், புடவை அணிந்து வந்து இருந்தாள் பல்லவி.
மேடிட்ட வயிற்றுடன் மஞ்சள் நிற புடவையில் அவளைப் பார்க்க, அவனுக்கு கண்ணுக்கு நிறைவாக இருந்தது.
"சாப்பிட்டு வா பல்லவி, கிளம்பலாம்." என்று அவன் நேரத்தைப் பார்த்துக் கொண்டே சொல்ல, "நீங்க சாப்பிட்டிங்களா?" என்று கேட்டாள் அவள்.
"ம்ம்... நான் சாப்பிட்டேன்." என்று சொல்ல, அவளும் சாப்பிட அமர்ந்தாள்.
கையில் புத்தகம் இருந்தது. சாப்பிட்டுக் கொண்டே அவள் படிக்க, அவள் அருகே வந்து அமர்ந்த கஜனோ, "முதல்ல சாப்பிடு, அப்புறம் படிச்சுக்கலாம்." என்று சொன்னான்.
"உங்க வேலை எல்லாம் விட்டு வந்து இருக்கீங்க, நான் அதுக்காகவே எல்லாம் செஞ்சு முடிக்கணும்." என்று சொல்ல, "எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு, உனக்கு இல்லையா?" என்று திட்டிவிட, அவளும் சிணுங்கலுடன் புத்தகத்தை மூடி வைத்து சாப்பிட்டாள்.
பார்த்தீபனோ, "அவ சின்ன வயசுல இருந்தே இப்படிதான்... எக்ஸாம்னா போதும், அவ அம்மா ஊட்டி விடுற நேரமும் படிச்சுட்டே இருப்பா..." என்று சொல்ல, கஜன் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து அவளை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றான்.
காரில் இருந்து இறங்கியதுமே, "வாஷ்ரூம் போயிட்டு வா." என்று சொல்ல, "இல்ல, வரல..." என்றாள் அவள்.
"மேடம் நீங்க ப்ரக்னன்ட்டா இருக்கீங்க, நிறைய நேரம் ஹோல்ட் பண்ண முடியாது. அப்புறம் உனக்குதான் சிரமம்." என்று அப்போதும் ஒரு மருத்துவனாக அறிவுரை சொல்ல,
"அதுவும் சரிதான்..." என்று சொல்லிக் கொண்டே கழிப்பறைக்குள் சென்றுவிட்டு வந்து இருந்தாள்.
அடுத்து அவள்தான் உள்ளே செல்ல வேண்டும். படபடப்பாக இருந்தது.
"ரிலாக்ஸ்!" என்றான்.
"எனக்கு பயந்து வருது..." என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், அவள் கையை அழுந்த பற்றிக் கொண்டு, "ரிலாக்ஸ்! என் கையை கொஞ்ச நேரம் பிடிச்சுக்கோ." என்று சொன்னான். அவள் கை வியர்த்துப் போய் இருந்தது.
அவனே கைக்குட்டையால் துடைத்து விட்டான். காதலும் காமமும் இல்லாத நட்புடன் கூடிய தொடுகை அது. அவளும் அவன் கையைப் பற்றிக் கொண்டு இதழ்களைக் கடித்து தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.
அவள் கையைப் பற்றிய அழுத்தத்தை வைத்தே, அவள் எந்தளவு பதட்டமாக இருக்கின்றாள் என்று புரிய, "டீப் ப்ரீத்..." என்றான்.
அவளும் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்ட சமயம் அவள் உள்ளே செல்ல வேண்டிய தருணம் வர, "நான்தான் உள்ளே போகணும்..." என்றாள்.
"பார்க்கிங்ல வெய்ட் பண்ணுறேன், வந்திடு." என்றான்.
"நீங்க ஃப்ரெண்ட்ஸை பார்க்கணும்னு சொன்னீங்க தானே, கிளம்புங்க. நான் வர ரொம்ப நேரம் ஆகும்." என்று சொன்னாள்.
"ஓகே, லெட்ஸ் சீ! பெஸ்ட் விஷஸ்!” என்றான் கண்களை சிமிட்டி.
"தேங்க்ஸ்!" என்று சொன்னவளும் உள்ளே நுழைய, அவனும் கழுத்தை வருடிக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தவன், கொஞ்சம் நேரம் அங்கேயே நின்று இருந்தான்.
சில நிமிடங்கள் கடந்தன. எப்படியும் தாமாதமாகும் என்று அவனுக்கு தெரியும். அவன் கல்வி கற்றதும் அந்த ஊர்தான், மெடிசின் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்ததும் அதே ஊர்தான். அதனால் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். இடைப்பட்ட நேரத்தில் சந்தித்து விட்டு வரலாம் என்று யோசித்துக் கொண்டே வண்டியை கிளப்பி இருந்தான்.
அதே காலேஜில் தானே சுதர்ஷனின் கேன்டீனும் இருக்கின்றது. பல்லவி வாஷ்ரூம் சென்று வந்த சமயம், தூரத்தில் இருந்து பல்லவியைப் பார்த்த சுதர்ஷனுக்கு அதிர்ச்சி தான். .
கர்ப்பமாக இருக்கின்றாள்! கணக்கிட்டுப் பார்த்தான், அவன் குழந்தை தான். தூக்கிவாரிப் போட்டது. விவாகரத்து ஆகிவிட்டது தான். ஆனால் அவள் கழுத்தில் தாலி இருந்தது, நெற்றியில் குங்குமம் இருந்தது. யாரோ ஒருவனின் கையைப் பற்றிக் கொண்டு நின்று இருக்கின்றாள். மனம் புகைய தொடங்கியது.
தனது குழந்தையை சுமந்து கொண்டு மீண்டும் திருமணம் செய்து விட்டாள் என்று நினைத்தவனுக்கோ பேரதிர்ச்சி. கஜனை நோட்டமிட்டான். அவன் வண்டியில் இருந்த மருத்துவ அடையாளத்தை வைத்து, அவன் மருத்துவன் என்று கண்டுகொண்டவனுக்கு இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
'என் குழந்தையை சுமந்துட்டு, இன்னொருத்தன எப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்? நான் இங்க ஒண்டிக் கட்டையா இருக்கேன்...' என்ற ஆதங்கம் இருந்தது. அர்ஜுன் அடித்துவிட்டு சென்ற கோபமும் இருந்தது.
ஆம், அவன் வாழ்க்கையும் சீராக இல்லை. சிதைந்து போய் இருந்தது. திருமணமாகி ருக்மணியுடன் பிரச்சனையில் வாகினி மீண்டும் பிரிந்து சென்று விட்டாள். அவன் இப்போது தனித்த மரம் தான். வாகினியை சட்டப்பூர்வமாக வேறு அவன் திருமணம் செய்யவில்லை. அதனால் அவள் வேறு இடத்துக்கு மாற்றலாகி, வேறு ஒருவனைப் பிடித்தும் விட்டாள்.
இடையில் ருக்மணியும் உடல் நிலை சரியில்லாமல் இருக்க, அவன்தான் தனியாக கஷ்டப்பட்டு பார்த்துக் கொள்கின்றான். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைதான் சுதர்ஷனுக்கு. வாகினி சென்றதுமே அர்ஜுனுக்கு பயந்துதான் அவன் பல்லவியைத் தேடி செல்லவில்லை. இன்று அவளைக் கண்டதுமே அவனால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அதுவும் அவள் இன்னொருவனின் கையைப் பற்றிக் கொண்டு நின்றதை இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை. அவள் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று கோபமாக இருந்தது. கடையின் பின்பக்கம் சென்று அங்கே வாங்கி வைத்து இருந்த சரக்கை ஊற்றிக் குடித்தான்.
அதனைத் தொடர்ந்து வெளியே வந்தவன் நீண்ட நேரம் கஜனை நோட்டமிட்டான். அவன் வண்டி அங்கிருந்து புறப்பட்டதும், கேன்டீனில் அமர்ந்து அவளை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தான்.
நேரம் கடந்தது...
அவளும் வெற்றிகரமாக பி.ஹச்.டி நேர்முக பரிட்சையை பூர்த்தி செய்து இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷம். கஜனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தவளுக்கு, கஜன் பார்க்கிங்கில் இருப்பதாக சொன்ன விஷயம் நினைவுக்கு வர, அங்கே சென்றாள்.
நேர்முக பரீட்சைக்கு கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், அவளிடம் கைப்பேசியும் இருக்கவில்லை. பார்க்கிங் காலேஜின் பின்பக்கம் இருக்க, அதனை நோக்கி செல்லும் பல்லவியைப் பார்த்தபடி சுதர்ஷனோ, "கடையை பார்த்துக்கோ." என்று அங்கிருந்தவனிடம் சொல்லிக் கொண்டு வெளியேறி வந்தான்.
கல்லூரியில் இருந்து பார்க்கிங் செல்வதற்கு ஒரு ஓடை வழி இருந்தது. வெற்றுக் காணியைத் தாண்டி அந்தப்பக்கம் இருக்கும் பார்க்கிங் ஏரியாவுக்கு செல்ல வேண்டும். அது குறுக்கு வழியும் கூட. அந்த வழியால் செல்லதான் பெண்ணவள் நினைத்து இருந்தாள். அன்று பெரிதாக ஆட்களும் இருக்கவில்லை.
அதுவே சுதர்ஷனுக்கும் வசதியாகிப் போக அவனுக்கு தெரிந்த குறுக்கு வழிகளில் சென்று, அந்த ஓடையினால் நடந்து சென்று கொண்டு இருந்த பல்லவியை மறித்தபடி நின்று இருந்தான் சுதர்ஷன்.
அவனைக் கண்டதுமே அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது. மதுவாடை குப்பென்று முகத்தில் அடித்தது. இவனை எப்படி மறந்தாள்? இந்த கல்லூரி என்று சொன்னதுமே சுதர்ஷன் தானே நினைவுக்கு வந்து இருக்க வேண்டும்? எப்படி அவன் நினைவு வராமல் போனது?
அவனை விழி விரித்து அவள் அதிர்ந்து பார்க்க, "கல்யாணம் பண்ணிட்டியா பவி?" என்று கேட்டான்.
"ம்ம்..." என்று சொல்லிக் கொண்டே அவள் நகர முற்பட, கையை நீட்டி தடுத்தவன், "என்னை மறந்துட்டு கல்யாணம் பண்ணிட்டியா பவி?" என்றானே பார்க்கலாம்.
தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. என்ன பேசிக் கொண்டு இருக்கின்றான் அவன்? கோபமும் வந்தது.
"சுதர்ஷன் தள்ளுங்க, நான் போகணும்." என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டே நகர முற்பட, "என் குழந்தை தானே பவி இது?" என்று உருக்கமாக கேட்டான்.
குப்பென்று வியர்த்தது அவளுக்கு.
வயிற்றில் கையை வைத்துக் கொண்டே, "என் புருஷனோட குழந்தை." என்றாள் அழுத்தமாக.
"பொய் சொல்லாத பவி, இப்போ உனக்கு நிறை மாசம் போல இருக்கு. கணக்கு போட்டு பார்த்தா இது என் குழந்தை தான்." என்றான்.
ஆத்திரம் வந்தது...
"இப்போ உங்களுக்கு என்ன வேணும்?" என்று ஆக்ரோஷமாக கேட்டாள்.
"நீதான் பவி... நீ, நான், நம்ம குழந்தைன்னு சந்தோஷமா இருக்கலாம்." என்றான்.
சுர்ரென்று கோபம் வந்தது.
"செருப்பால அடிப்பேன்டா நாயே!" என்று ஆத்திரத்தில் திட்டியும் விட்டாள். அதுவரை அவன் அடக்கி வைத்து இருந்த பொறுமை எங்கோ போனது.
ஏற்கனவே அழுத்தத்தில் இருப்பவனுக்கு அவள் திட்டியதும் தாங்க முடியவில்லை. ஆத்திரம் மேலிட்டது.
"யாருடி நாய்? என் குழந்தையை சுமந்திட்டு, இன்னொருத்தனை கல்யாணம் பண்ணி இருக்கியே, உனக்கு அசிங்கமா இல்லையா?" என்று கேட்க, அவளுக்கோ பொறுமை போய் விட்டது.
"அசிங்கத்தை பத்தி யார் பேசுறது? நாய் போல ஒரே நேரத்துல ரெண்டு பேர் கூட படுத்த நீ, என்னை பத்தி பேசுறியா? என் புருஷனுக்கு தெரிஞ்சா உன்ன கொன்னுடுவார். இது அவர் குழந்தை." என்றாள் குரலை உயர்த்தி.
"என்னடி பெரிய புருஷன்? இந்த இடத்துல உன்னை என்ன பண்ணுனாலும் கேட்க நாதி இல்லை..." என்று சொல்ல, அவளும் சுற்றிப் பார்த்தாள்.
யாருமே இல்லை, நெஞ்சில் சட்டென நீர் வற்றிப் போனது. நிறைமாத குழந்தையை வேறு சுமந்து கொண்டு இருக்கின்றாள். எப்படி ஓடி தப்புவது என்று தெரியவில்லை. சுதர்ஷனின் நடவடிக்கை வேறு சரியாக படவில்லை. குடித்து வேறு இருக்கின்றான்.
"யாராச்சும் இருக்கீங்களா?" என்று சத்தமாக கத்தினாள்.
அவனோ எட்டி அவள் வாயை மூடி இருந்தவன், "என்னடி கத்துற? கொன்னுடுவேன் உன்னை... இது என் குழந்தை... நீ என் கூட தான் இருக்கணும்..." என்று அவன் சொல்ல, அவளோ அவனில் இருந்து விடுபட திமிறினாள்.
மூச்சு வேறு அடைத்தது.
"எனக்கு உன்னை பிடிக்கும் பவி... " என்று சொல்லிக் கொண்டே அவளை இறுகி அணைக்க, அவளுக்கோ தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.
நிறைமாத கர்ப்பம் வேறு, மூச்சு வாங்கியது.
"விடு..." என்று சொல்லிக் கொண்டே திமிறினாள்.
அவன் குடித்து இருப்பதால் குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.
"இது என் குழந்தை தானே? என் கூட வாடி..." என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தை தாங்கி முத்தமிட முயல, அவன் தோள்களைப் பற்றி இழுத்து ஓங்கி ஒரே அறை.
கீழே விழுந்து விட்டான் சுதர்ஷன். அங்கே கையை உதறிக் கொண்டு ருத்ர மூர்த்தியாக நின்று இருந்தது வேறு யாருமல்ல, கஜன்தான்.
அடித்த அவனுக்கே கை வலித்தது என்றால், அடிவாங்கியவனின் கன்னத்தின் நிலைமையை கேட்கவும் வேண்டுமா?