நிலவு 50
அர்ஜுனும் ராகவியும் அருகருகே பந்தியில் உட்கார்ந்து இருந்தாலும் அர்ஜுன் சாப்பிடவில்லை. இலையை மூடி வைத்து விட்டு, மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.யாரும் வந்து கேட்டால், ‘பசிக்கவில்லை.’ என்றான்.
ராகவிக்கோ எரிச்சலாக இருந்தது. 'இதுக்கு வராமலே இருந்து இருக்கலாம்' என்று நினைத்துக் கொண்டவளுக்கு, அவன் செயல் எதனையும் ஜீரணிக்க முடியாத நிலைதான். தனிமையில் அவளுடன் நன்றாகதான் இருக்கின்றான்.
அவள் குடும்பம் என்று வந்து விட்டால் வீம்புக்கென்று ஏதாவது செய்து கொண்டல்லவா இருக்கின்றான்.
சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருந்த கஜன் அருகே வந்த சக்திவேலோ, அவன் தோளில் கையை போட்டு, "என்னப்பா பெரிய மனுஷன் சாப்பிடலையா?" என்று கேட்க, அவனோ இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே, "பசிக்கலையாம்பா" என்றான்.
"சரிதான்..." என்று சக்திவேல் சலித்துக் கொள்ள, பார்த்தீபனுக்கோ அர்ஜுனை பார்த்ததுமே எரிச்சலாகி விட்டது. எல்லாமே வீம்புக்கு செய்து கொண்டு இருக்கின்றான் என்று தோன்றியது.
பைரவி அருகே வந்தவனோ, "உன் புள்ள இன்னைக்கு கல்யாணத்துக்கு வராமலே இருந்து இருக்கலாம்." என்றான்.
"உங்களுக்கும் தான் அவன் புள்ள..." என்று அவள் சொல்ல, "எந்த நேரத்துல பெத்து தொலைச்சியோ...?" என்று அவனுக்கு சலிப்பு வேறு.
ராகவிக்கு ஒரு கட்டத்துக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை. இலையை மடித்து வைக்க, "நீ ஏன் சாப்பிடல?" என்று கேட்டான்.
"பசிக்கல." என்று அவள் சொல்ல, "ம்ம்... அப்போ கிளம்பலாம்." என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன் அவளைப் பார்க்க, அவளும் கையைக் கழுவிக் கொண்டு எழுந்து கொண்டாள்.
நேரே மேடைக்கு அவளை அழைத்துக் கொண்டு சென்றவனோ, இரு ஜோடிகளுக்கும் இறுகிய முகத்துடன் வாழ்த்து சொல்லிவிட்டு இறங்க, ராகவியும் அவர்களுடன் பேசிவிட்டு இறங்கிக் கொண்டாள். அவன் யாரிடமும் சொல்லவில்லை, விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டான்.
"அர்ஜுன்!" என்று அழைத்தாள். திரும்பிப் பார்த்தான்.
"சொல்லிட்டு வர்றேன்." என்றாள்.
"அதொன்னும் தேவல..." என்றான்.
எதையாவது தூக்கி அவன் தலையில் அடித்து விடலாமா என்றுதான் தோன்றியது. அவனுடன் சண்டை போட தெம்பு இல்லை. கோபப்பட்டால் எப்போது என்ன செய்வான் என்று தெரியாது. மனமெல்லாம் வலித்தது.
வேறுவழி இல்லாமல் மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொள்ள, சக்திவேலும் கஜனும் அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தார்கள். மெதுவாக தலையசைத்தாள். கண்களில் நீர் நிரம்பி விட்டது.
அவர்களும் தலையசைக்க அர்ஜூனுடன் வந்து காரில் ஏறிக் கொண்டாள்.
சக்திவேலோ, "பிடிக்கலைன்னா வந்திடலாமே?" என்று சொல்ல, அவனைத் திரும்பிப் பார்த்த கஜனோ, "பிடிக்காமலா கல்யாணம் பண்ணி இருப்பா?" என்று கேட்டான்.
"ஆனா உனக்கு ஏதோ தப்பா தோனலையா?" என்று சக்திவேல் கேட்க, "தோனுது, சட்டுன்னு சந்தேகப்பட முடியல. அவ வாய திறந்து ஏதும் சொன்னா தானே ஏதாச்சும் பண்ணலாம்" என்றான். இருவருக்கும் ராகவி, அர்ஜுன் விஷயத்தில் கண் மூடி தனமாக எந்த முடிவும் எடுக்க முடியவே இல்லை.
இதே சமயம், ஜீவிதனும் நேத்ராவும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
லாவண்யா, நேத்ராவின் நெற்றியில் முத்தமிட்டவள், "நான் அப்போவே ஊருக்கு வர சொன்னேன். சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் அங்கேயே பார்த்துக்கலாம்னு சொன்னேன். வேலை இருக்குன்னு சொல்லிட்டான். இங்க யாரு ஏற்பாடு பண்ணுவா?" என்று கேட்க,
"அந்த ஏற்பாடு எல்லாம் நான் பார்த்துக்கிறேன்." என்றான் ஜீவிதன்.
நேத்ராவும் தாயை அணைத்து அழுதுவிட்டு எல்லோரிடமும் சொல்லிவிட்டு இறுதியாக கஜன் முன்னே வந்து நின்றாள்.
அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "இப்போ சந்தோஷமா மாமா?" என்று கேட்டாள்.
அவனுக்காக தான் இந்த திருமணமே செய்து இருக்கின்றாள்.
"நீ சந்தோஷமா வாழணும், அப்போ தான் முழுமையான சந்தோஷம்." என்றான்.
"ம்ம்... முயற்சி பண்ணுறேன்." என்று சொன்னவளுக்கு கண்களும் கலங்கிவிட துடைத்துக் கொண்டாள்.
"அழாதம்மா..." என்று சொல்லிவிட்டு அருகே நின்ற ஜீவிதனை அணைத்து விடுவித்தவன், "சந்தோஷமா பார்த்துக்குவனு நம்புறேன்." என்று சொல்ல, "கண்டிப்பா..." என்று சொல்லிக் கொண்டான் அவன். விடைபெற்று இருவரும் கிளம்பி விட்டார்கள்.
அவர்கள் கிளம்பியதும் ஏனையவர்களும் வீட்டுக்கு கிளம்பி இருந்தார்கள்.
நேத்ராவை அழைத்துக் கொண்டு குவாட்டர்ஸுக்கு வந்து இருந்தான் ஜீவிதன். ஜீப்பில் இருந்த அவள் உடைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தவன் வீட்டைத் திறந்து உள்ளே செல்ல, அவளும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள்.
"இதுதான் நம்ம குவாட்டர்ஸ் நேத்ரா, மொத்தம் மூனு ரூம் இருக்கு. இந்த ரூம் என்னோடது, உனக்கு அடுத்த ரூம் அரேன்ஜ் பண்ணி இருக்கேன். நம்ம ரெண்டு ரூமுக்கும் அட்டாச்ட் பாத்ரூம் இருக்கு. இங்க ஒரு பாத்ரூம் இருக்கு. இது கிச்சன், இது ஹால்..." என்று எல்லாமே சுற்றிக்காட்ட, அவளும் கடமைக்கு சுற்றிப் பார்த்தாள்.
கருத்தில் எதுவுமே பதியவில்லை. அதனை அவனுமே கண்டுகொண்டான். போலீஸ்காரன் அல்லவா? மோப்பம் பிடித்து விட்டான்.
அவள் அறைக்குள் உடைப் பெட்டியை வைத்துவிட்டு, "நேத்ரா!" என்று அழைக்க, "ஹான்!" என்றாள்.
"குளிச்சிட்டு சாப்பிட வா." என்றான்.
"ம்ம்..." என்று அவள் சொல்ல, "என்கிட்ட ஏதும் சொல்லணும்னா சொல்லிடு." என்று சொன்னான்.
அவளோ, "சட்டுன்னு இங்க அடாப்ட் ஆக கஷ்டமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா பழகிடுவேன். நீங்க எதுவும் மனசுல எடுத்துக்காதீங்க..." என்றாள்.
"நான் என்னடி எடுத்துக்க போறேன்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டவன் வெளியேற, கதவைத் தாழிட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
ஜீவிதன் நல்லவன் தான். அவன் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் அவளுக்கு இந்த இடைவெளியை கொடுத்து இருக்க மாட்டார்கள். அவளை கஜனுடன் பேச அனுமதித்தும் இருக்க மாட்டார்கள். அது அவளுக்கும் புரிந்தது. கழுத்தில் தாலி இருந்தாலும் திருமணமாகி விட்ட எண்ணம் அவளுக்கு கொஞ்சமும் இருக்கவில்லை.
அலங்காரங்களைக் கழட்டிவிட்டு குளித்து உடைமாற்றி வெளியே வர, அங்கே ஆர்ம் கட் மற்றும் ஷார்ட்சுடன் அமர்ந்து இருந்த ஜீவிதனோ, "கல்யாண வீட்டு சாப்பாடு தான் நைட்டுக்கும், உனக்கு ஓகே தானே?" என்று கேட்டான்.
அவளும், "ஓகே." என்று அவனுடன் அமர்ந்து சாப்பிட்டாள்.
சாப்பிட்டதும் இருவரும் தத்தமது அறைக்குள் நுழைந்து தூங்கி விட்டார்கள்.
***
கஜனின் வீட்டில் ராம்குமாருக்கும் சுகானாவுக்கும் சாந்திமுகூர்த்த ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டு இருந்தன. ராம்குமார் குளித்து விட்டு வேஷ்டி, சட்டை என்று ஆயத்தமாகி இருக்க, சுகானாவை அலங்கரித்துக் கொண்டு இருந்தார்கள்.
பல்லவி அவள் தலையில் பூக்களை வைத்த சமயம் ஜெயந்தியோ, "பதினொரு மணிக்கு தான்மா முகூர்த்தம். அதுவரைக்கும் பேசிக்கிட்டு இருங்க." என்று சொல்ல,
சுகானாவோ மனதுக்குள், 'உங்க பிள்ளையை பத்தி தெரியாம சொல்றீங்க அத்தை.' என்று நினைத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தாள்.
மணி அப்போதுதான் எட்டைக் காட்டியது.
"சரி அத்தை." என்று அவள் சொல்ல, "மூனு மணி நேரம் என்ன பேசுறது?" என்று விஜயா கேட்க,
"நாட்டு நடப்பு பேசலாம்ல அத்தை." என்றாள் பல்லவி சிரித்துக் கொண்டே.
"நாட்டு நடப்பு பேசுற நேரமா அது?" என்று அங்கே வந்த வந்தனா கேட்க,
"ஏய் நீ எதுக்கு இங்க வந்த?" என்று விஜயா அதட்ட, "அம்மா, நானும் பெரிய பொண்ணு தான்... இதெல்லாம் தெரிஞ்சுக்கிற வயசு தான்." என்றாள்.
"அதெல்லாம் அப்புறம் தெரிஞ்சுக்கலாம், இப்போ நீ கிளம்பு." என்று அதட்ட, "நாசமா போச்சு, நீங்களாச்சும் சொல்லுங்க அண்ணி..." என்று பல்லவியிடம் கேட்க,
"என்னை ஏன்மா மாட்டி விடுற?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள்.
"அண்ணி நீங்க..." என்று சுகானாவிடம் கேட்க, "இப்போ நான் என்ன சொன்னாலும் தப்பாயிடும்." என்றாள் அவள்.
"சரி விடுங்க, இதுக்காகவே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று சொல்ல, "சரியான வாலுடி நீ..." என்று செல்லமாக திட்டி இருந்தாள் ஜெயந்தி.
துளசியோ அறைக்குள் பால் கிண்ணத்துடன் நுழைய, அதனை எட்டிப் பார்த்த வந்தனா, "பெரியம்மா எதுக்கு இவ்ளோ பாதாம்?" என்று கேட்டாள்.
"இந்த ஆராய்ச்சி எல்லாம் உனக்கு எதுக்கு? நீ சின்ன பொண்ணு..." என்று துளசி சொல்ல, "ஆளாளுக்கு என்னை சின்ன பொண்ணுனு சொல்றீங்க, ச்ச..." என்று சலித்துக் கொண்டே அவள் வெளியேற,
மேசையில் பாதாம் பாலை வைத்த துளசி, "பதினொரு மணிக்கு தான்மா முகூர்த்தம்..." என்றாள் மீண்டும்.
"சரி அத்தை, பேசிட்டே இருக்கோம்." என்று சுகானா சிரித்துக் கொண்டே சொன்னாள்.
ஜெயந்தி, "ரெண்டு பேரும் பாதி பாதி பால் குடிக்கணும்." என்று சொல்ல, சுகானாவுக்கு இதனை எல்லாம் கேட்டு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டே, "ம்ம்..." என்றாள்.
"முதலிரவுல என்ன நடக்கும்னு தெரியும் தானே?" என்று துளசி கேட்க, சத்தமாக சிரித்த பல்லவியோ, "அத்தை அவ டாக்டர், அதெல்லாம் தெரியாம இருக்குமா?" என்று கேட்க,
"அட! ஆமால... ஏதும் சந்தேகம் இருந்தா வெட்கப்படாம பெரியவங்ககிட்ட கேளு." என்று சொன்னாள் அவள்.
ஜெயந்தியோ, "இந்த காலத்து புள்ளைங்களுக்கு என்ன வெட்கம்?" என்று சொல்ல,
சுகானாவும், "சந்தேகம் ஒன்னும் இதுவரைக்கும் வரல, வந்தா கேட்கிறேன்." என்றாள்.
பல்லவி அவள் சொல்வதைக் கேட்டு சிரித்துக் கொள்ள, சுகானாவும் சிரித்துக் கொண்டாள்.
***
ராம்குமாரோ ஒரு ஆர்வத்துடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.
"எத்தனை நாள் கனவு இது... இன்னைக்கு வந்ததுமே இழுத்து வச்சு..." என்று சொல்லிக் கொண்டு இருக்க, அவன் அறைக் கதவு தட்டப்பட்டது.
அவனும் ஆர்வமாக சென்று கதவைத் திறக்க, வாசலில் நின்றது என்னவோ ஜெயந்திதான்.
"ஐயோ! நீங்களா?" என்றான்.
"நீ யாரை எதிர்பார்த்த?" என்று கேட்டுக் கொண்டே கையில் கொண்டு வந்த பழத்தட்டை டீப்பாயில் வைத்துவிட்டு செல்ல, "வேற யாரை எதிர்பார்ப்பாங்க..." என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே கதவை மூட, மீண்டும் கதவு தட்டப்பட்டது.
இப்போது சலித்துக் கொண்டே திறக்க வாசலில் நின்று இருந்தது சுகானாதான். மஞ்சள் நிற புடவையில் தலை நிறைய மல்லிகை பூ இருக்க, கையில் பால் செம்புடன் பேரழகியாக நின்றவளை, இமைக்காமல் பார்த்தபடி எச்சிலைக் கூட்டி விழுங்கியவன், "உள்ளே வா." என்று சொல்ல அவளும் உள்ளே வந்தாள்.
கதவை அவன் மூட அவளோ பாலை நீட்டி, "குடிங்க." என்றாள்.
"இதெல்லாம் ரொம்ப அவசியமா?" என்று கேட்டுக் கொண்டே அவன் பால் செம்பை வாங்கி மேசையில் வைத்துவிட்டு, அவளை நோக்கி அணைக்க வர அவன் மார்பில் கையை வைத்து தள்ளியவள், "பதினொரு மணி வரைக்கும் பேசிட்டு இருக்கட்டுமாம்..." என்றாள்.
நேரத்தைப் பார்த்தான் எட்டரை.
"ரெண்டரை மணி நேரம் என்ன பேசுறது?" என்று கேட்க, "தெரியல..." என்றாள்.
அவனோ எரிச்சலாக, "என் மூடே போகுது..." என்று சலித்துக் கொண்டே பாலை எடுத்து குடிக்க, "எனக்கும் கொடுங்க ராம்." என்றாள்.
"அவ்ளோ பசியா உனக்கு?" என்று கேட்க, "பாதி பாதி குடிக்கட்டுமாம்..." என்றாள்.
"சரிதான்..." என்று சொல்லிக் கொண்டே பால் செம்பை நீட்ட அவளும் குடித்தாள்.
அவன் தவிப்பு பார்த்து சிரிப்பு வந்தது.
அடக்கிக் கொண்டே கட்டிலில் அமர, "இப்போ என்ன பேசுறது?" என்று கேட்டான்.
"டயர்ட்டா இருக்கு, நான் கொஞ்சம் படுத்துக்கட்டுமா?" என்றவளை முறைத்தவன், "என்னடி விளையாடுறியா? அதெல்லாம் இல்லை, பதினொரு மணி வரைக்கும் இப்படியே இரு. நான் ஏதும் பேசுறேன், கேளு." என்று சொல்லிக் கொண்டே அருகே இருந்தவன்,
"நேத்து கிரிக்கெட் பார்த்தியா?" என்று ஆரம்பித்து என்னென்னவோ பேச, அவளுக்கோ ஒரு கட்டத்துக்கு மேல் தூங்கி வழிந்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நிறுத்தாமல் பேசியவன், "இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு..." என்று சொல்லி விட்டு அவளைப் பார்க்க, அவளோ அமர்ந்தபடியே கண்கள் சொருக அமர்ந்து இருந்தாள்.
"ஏய் தூங்காதடி..." என்று சொல்லி அவளை உலுக்க,
அவளோ, "ஆஹ்! தூங்கல... தூங்கல... சும்மா கண்ணை மூடி இருந்தேன்." என்று சொல்லி அவனை ஏறிட்டுப் பார்க்க, அவள் விழிகளோ சிவந்து சொருகி இருந்தன.
"பொய் சொல்லாத, நீ தூங்குற... உன் கண்ணை பார்த்தாலே தெரியுது." என்று அவன் சொல்ல, "என் கண்ணே அப்படி தான் ராம்..." என்று சொல்லிக் கொண்டே கஷ்டப்பட்டு கண்ணை விரித்து அவனைப் பார்த்தாள்.
"இது சரிப்பட்டு வராது, நீ ஒரு பாட்டு பாடு." என்றான்.
"எனக்கு பாட வராது ராம்." என்றாள் அவள்.
"பரவாயில்லை, ஏதோ பாடு. அப்போ தான் தூங்க மாட்ட..." என்று சொன்னவனை ஒரு மார்க்கமாக பார்த்தவளோ, "இஞ்சி இடுப்பழகி..." என்று ஆரம்பித்து பாடினாள்.
கட்டிலில் அமர்ந்து கொண்டு, "அடுத்த பாட்டு, பதினொரு மணி வரைக்கும் பாடு..." என்றான்.
ராகமும் சுருதியும் சேராமல் அவளும் வாய்க்கு வந்த பாட்டெல்லாம் தூக்க கலக்கத்தில் பாடிக் கொண்டு நேரத்தைப் பார்த்தாள் பத்தரை.
"இன்னும் அரை மணி நேரம் தான் ராம் இருக்கு, எனக்கு இதுக்கு மேல பாட முடியாது..." என்று அவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ கட்டிலில் படுத்து தூங்கி இருந்தான்.
சுகானாவுக்கு சிரிப்பு வந்து விட்டது. மெலிதாக சிரித்துக் கொண்டு எழுந்து வந்து அவன் அருகே படுத்தவள், எம்பி அவன் நெற்றியில் முத்தம் பதித்து, "சோ சுவீட் ராம்!" என்று சொன்னபடி லைட்டை அணைத்துவிட்டு தூங்கி இருந்தாள்.