நிலவு 49
இந்த திருமணத்தில் சந்தோஷமாக இருந்த ஜோடிகளில் ஒன்று ராம்குமார் மற்றும் சுகானா தான். இருவருக்குமே மனமெல்லாம் அப்படி ஒரு ரெட்டிப்பு மகிழ்ச்சி. பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் அவர்களது காதல் திருமணம் கைக்கூட இருக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்? ராம்குமாரும் ஜீவிதனும் சென்று மணமேடையில் அமர்ந்து மந்திரத்தை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.எல்லோரும் மணமேடையை நெருங்கி வந்து நின்று கொள்ள, அங்கே வந்து இருக்கையில் அமரந்த அர்ஜுனின் விழிகள் துளசியுடன் நின்று இருந்த ராகவியில் படிய, அவளும் அவனை அக்கணம் பார்த்து விட்டாள். விழிகளால் அழைத்தான், மறுக்க முடியாது.
மறுத்தால் பிரச்சனை செய்வான் என்று தெரியும். வேறு வழி இல்லை. சொந்தங்களுடன் நிற்க விடாமல் இழுத்து பிடித்துக் கொள்கின்றான் என்று ஆதங்கம் இருந்தாலும், அதனை காட்டிக் கொள்ளாமல் அவன் அருகே செல்ல, "உட்காரு." என்று சொல்லி, அவள் கை பற்றி தனக்கு அருகே அமர வைத்து விட்டான்.
இதனிடையே விஜய்யைத் தேடின சக்திவேலின் விழிகள். கிட்டத்தட்ட சக்திவேலின் குடும்பத்தின் வலதுகை அவன். என்னதான் அவன் ஓடி ஓடி வேலை செய்தாலும், திருமண நேரம் தங்களுடன் நிற்க வேண்டும் என்று சக்திவேலுக்கு ஆசை இருந்தது. அந்தளவு அவன் மீது பற்றும் அன்பும் சக்திவேலுக்கு இருந்தது.
"விஜய் எங்க?" என்று கேட்க, "சமையல்கட்டு பக்கம் கண்டேன் சண்டியர் மச்சான்." என்று சொன்னாள் துளசி.
"விஜய்யை கொஞ்சம் இங்க வர சொல்லும்மா." என்று சக்திவேல் அங்கே நின்ற வந்தனாவிடம் சொன்னதுமே, "இதோ பெரியப்பா..." என்று திருமண மண்டபத்தின் பின்பக்கம் சென்றாள் வந்தனா.
அங்கே சமையல் நடந்து கொண்டு இருக்க, விஜய்யோ வேஷ்டியை மடித்துக் கட்டி இருந்தவன், பச்சை நிற ஷேர்ட்டை முட்டி வரை மடித்தபடி, "டேய் இதை பாருடா, கருகிட போகுது..." என்று சமைப்பவனுக்கு அதட்டிக் கொண்டு இருந்தான்.
அவனையே பார்த்துக் கொண்டு இருந்த வந்தனாவின் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை.
அவனுக்கு பின்னே வந்து நின்றவள், "மாமா!" என்று அழைக்க, சட்டென அவளைத் திரும்பி பார்த்த விஜய்யோ ஒரு முறைப்புடன், "என்னது மாமாவா?" என்றான்.
"ஆமா..." என்று அவள் கண்களை சிமிட்டிக் கொண்டே சொல்ல, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "என்ன வேணும் உனக்கு?" என்று கேட்டான்.
"ஆஹ்! என்ன கேட்டாலும் கிடைக்குமா?" என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க, "உனக்கெல்லாம் ரெண்டு அடி போட்டு வளர்த்து இருந்தா இப்படி கேட்டுட்டு நிற்க மாட்ட..." என்று சொன்னான்.
"சரி, நீங்களே அடிங்க..." என்று அவள் கன்னத்தைக் காட்ட, "யாரும் பார்த்துட போறாங்க..." என்று அவன் பற்களைக் கடித்துக் கொண்டு சீறினான்.
"பார்க்கட்டுமே..." என்று அவன் விழிகளைப் பார்த்தபடி சொல்ல, "உன்னை எல்லாரும் பயந்த பொண்ணுனு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா எனக்கு தான் இப்போ பயமா இருக்கு." என்றான்.
அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
"ஊருக்கே உங்கள பார்த்தா பயம்னு சொல்றாங்க. உங்களுக்கு என்னை பார்த்தா பயமா என்ன?" என்று கேட்க, இடையில் கையை வைத்துக் கொண்டு இதழ் குவித்து ஊதி அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "என்ன வேணும் உனக்கு?" என்று கேட்டான்.
"எனக்கு எதுவும் வேணாம்... பெரியப்பா வர சொன்னார்." என்று சொன்னதுமே அவளை முறைத்தவன், "இத நேரத்துக்கே சொல்ல மாட்டியா?" என்று கேட்டபடி வேஷ்டியை இறக்கி விட்டபடி வேகமாக நடந்து செல்ல,
"வேஷ்டியை மடிச்சு கட்டுங்க மாமோய், அப்போ தான் மாஸா இருக்கீங்க." என்று சொல்லி அவன் முறைப்பை பதிலாக பெற்றுக் கொண்டு, சிரித்தபடி அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
எல்லோரும் மணமேடையை நெருங்கி நின்று இருக்க, வந்தனாவுக்கோ அங்கே சோகமாக அமர்ந்து இருந்த ராகவி தென்பட்டாள். அவளுக்கு அடுத்த பக்கம் ஒரு இருக்கை இருந்தது. அவளுடன் பேச நேரம் கிடைக்கவே இல்லை. அவள் செயலால் உண்டான கோபம் அடங்கவில்லை என்றாலும், இப்போது பார்க்கும் போது பாவமாக இருக்க, நடந்து சென்று அவள் அருகே அமர்ந்தாள்.
"எப்படி இருக்க ராகவி?" என்று கேட்டுக் கொண்டே அணைத்து விடுவிக்க, அவளுக்கோ சட்டென கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டே, "நல்லா இருக்கேன், நீ?" என்று கேட்ட கணம், "ஹாய்!" என்று ஒரு குரல்.
அர்ஜுனுடையது தான், ராகவியைத் தாண்டி எட்டிப் பார்த்து வந்தனாவுடன் பேசினான். அவளுக்கு தான் அவனை பற்றி தெரியாதே?
"ஹாய் மாமா!" என்றாள் முறையாக அழைத்து.
"மாமா!" என்று சிரித்தபடி கேட்டவனோ மேலும், "அப்படி கூப்பிடும் போது நல்லா இருக்கு." என்றான்.
ராகவி இப்போது அர்ஜுனையே வெறித்துப் பார்த்தாள். அவன் பேசும் தோரணை அவளுக்கு சரியாகவே படவில்லை. வந்தனாவை கற்பழிப்பேன் என்று பேசிதான் ராகவியை திருமணமே செய்தான். சற்று முன்னர் கூட, 'அவளை அனுபவிக்க யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ...' என்று கொச்சையாக பேசினான். இப்போது எதுவுமே தெரியாதது போல வந்தனாவுடன் சகஜமாக பேசுகின்றான். அவளுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.
எல்லோரிடமும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பவன், இப்போது வந்தனா வந்ததும் புன்னகைக்கின்றான், இயல்பாக பேசுகின்றான். கிட்டத்தட்ட அவளுடன் கடலை போடும் தோரணையில் பேசிக் கொண்டு இருந்தான். அவன் கடைக்கண் விழிகள் ராகவியில் படிந்து மீண்டது என்னவோ உண்மைதான்.
வந்தனாவும் அவனிடம், "ஏன், ராகவி அப்படி கூப்பிடுறது இல்லையா?" என்று கேட்டாள்.
இதழ்களைப் பிதுக்கி கண்களை சிமிட்டியவனோ, "இல்லையே... பேர் சொல்லி கூப்பிடுறா தெரியுமா? பை த வே உன் புருஷன் கொடுத்து வச்சவன்தான்." என்றான்.
வந்தனாவும், "சொன்னா கூப்பிட போறா..." என்று சொல்லி சிரித்துக் கொண்டாள்.
அதே வார்த்தைகள். ராகவியின் தொண்டைக்குழிக்குள் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு.
இவனுக்கு இப்படி சினேகமாக பேசி சிரிக்கவும் தெரியுமா என்று யோசிக்கும் அளவுக்கு அவன் நடவடிக்கை இருந்தது. சிரிக்கின்றான், கண் சிமிட்டுகின்றான், கொஞ்சி கொஞ்சி வேற பேசுகின்றான். ஏனோ ஒருவகை நடுக்கம். வந்தனாவும் தன்னைப் போல அவனிடம் சிக்கிக் கொள்வாளோ என்று ஒரு படபடப்பு. வந்தனாவை பார்க்கும் அவன் பார்வை சரி இல்லாதது போலவே ஒரு உணர்வு.
இப்போது வந்தனாவில் இருந்து விழிகளை அகற்றி தன்னையே வெறித்துப் பார்த்த ராகவியை ஆழ்ந்து பார்த்தவன், "எதுக்குடி என்னையே பார்த்துட்டு இருக்கிற?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க,
சட்டென பார்வையை வந்தனா பக்கம் திருப்பியவள், "சாரீ நல்லா இருக்கு வந்தனா." என்று சொல்ல,
"எஸ்! நானும் சொல்ல நினைச்சேன், இந்த ப்ளூ கலர் ரொம்ப சூட் ஆகுது உனக்கு." என்றான் அர்ஜுன்.
ராகவி கண்களை மூடி திறந்து கொள்ள, "தேங்க்ஸ்!" என்று சொன்ன வந்தனா, "அப்புறம் பேசுறேன், முகூர்த்தம் ஆரம்பிக்க போகுது." என்று சொல்லிக் கொண்டே நடந்து செல்ல, அவளையே பார்த்து இருந்தான் அர்ஜுன்.
வேண்டுமென்றே பார்த்தான். ராகவியை கடுப்பேற்ற வேண்டும் என்றுதான் பார்த்தான். அவள் தன்னை விட்டு குடும்பத்தினருடன் இவ்வளவு நேரமும் சந்தோஷமாக பேசிய ஆத்திரம் அவனுக்கு. இந்த வகையில் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டு இருந்தான்.
ராகவி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, "செம்ம ஸ்ட்ரக்ச்சர்ல வந்தனாவுக்கு..." என்றானே பார்க்கலாம்.
உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடையும் உணர்வு.
அவளும் சட்டென பார்வையை முன்னே திருப்பிக் கொண்டு எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்ள, அவளைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் வன்மம் மட்டும் நிறைந்து இருந்தது.
சிறிது நேரத்தில் மணப்பெண்கள் மணமேடைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். சுகானா மென் சிரிப்புடன் மேடையை நோக்கி வர, அவளை இமைக்காமல் ரசனையாக பார்த்தபடி அமர்ந்து இருந்தான் ராம்குமார். அவளும் அவன் அருகே வந்து அமர்ந்து விட்டாள்.
"செம்ம அழகா இருக்க சுகா!" என்று அவள் காதருகே அவன் முணுமுணுக்க, அவனை ஏறிட்டுப் பார்த்த பெண்ணவளும், "நீங்களும் செம்ம ஸ்மார்ட்டா இருக்கீங்க." என்றாள்.
அவன் விழிகள் அவள் இதழ்களில் படிந்து மீள, "ராம் சுத்தி ஆட்கள் இருக்காங்க." என்று சிணுங்கலாக சொல்லிக் கொள்ள, "எப்போ நைட் வரும்னு இருக்கு." என்று ஏக்கமாக சொல்லிக் கொண்டான் அவன்.
ஜீவிதன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள் நேத்ரா. அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. மௌனமாக தலையை குனிந்தபடியே அமர்ந்து இருந்தாள். ஜீவிதன் அவளை ஒரு கணம் திரும்பி ரசனையாக பார்த்துவிட்டு அவள் காதை நோக்கி குனிந்தவன்,
"கொஞ்சம் சிரிம்மா, அப்புறம் ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு, இந்த ஃபோட்டோ பார்க்கும் போது ஏன் சிரிக்காம விட்டோம்னு ஃபீல் பண்ணுவ..." என்று சொல்ல, சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவளை காயப்படுத்தாத போல அழகாக சொல்லி விட்டானே!? அவளையே பார்த்து இருந்தவனது இதழ்கள் மெலிதாக இப்போது விரிய, இதற்கு மேல் இதழ்களை இறுக பற்றிக்கொண்டு இருப்பது அவளுக்கும் சரியாக படவில்லை.
மெலிதாக புன்னகைத்து விட்டு முன்னால் திரும்ப, அவளையே பார்த்துக் கொண்டு மார்புக்கு குறுக்கே கையைக் கட்டியபடி நின்று இருந்தான் கஜன். கஜனைப் பார்த்த நேத்ராவுக்கோ சிரிக்க கஷ்டமாக இருந்தது. அவனோ ஒற்றைக் கையால் சிரிக்கும்படி சைகை செய்ய, மீண்டும் மெதுவாக புன்னகைத்தாள். கண்கள் கலங்கி இருந்தன. கஜனுக்கு அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டுமே!
ஜீவிதன் மேல் இருக்கும் அளப்பரிய நம்பிக்கையில் அவளை, அவனிடம் கைப்பிடித்து கொடுக்க ஏற்பாடுகளை செய்தும் விட்டான்.
அதனைத் தொடர்ந்து மந்திரங்கள் ஒலிக்க, தாலியை ஐயர் எடுத்து முதலில் ராம்குமார் கையில் கொடுக்க, அவன் சுகானா கழுத்தில் கட்டி தன்னவளாக்கி இருந்தான். அடுத்து தாலியை வாங்கிய ஜீவிதனும் நேத்ரா கழுத்தில் கட்ட, தலையை தாழ்த்தி இருந்தவள் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை விட்டுக்கொள்ள, கஜனோ அவர்களுக்கு சந்தோஷமாக வாழ்த்து அரிசி தூவி இருந்தான்.
அதே புன்னகையுடன் அருகே நின்று இருந்த பல்லவியைப் பார்க்க, அவளும் அவனைப் பார்த்து நிறைவாக சிரித்துக் கொண்டாள்.
மணமக்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, பந்தியும் தடல் புடலாக ஆரம்பமானது. அப்போது தான் பார்த்தீபனும் சக்திவேலும் வாணியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
"வருணுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கிறாங்கனு சொன்ன தானே?" என்று பார்த்தீபன் கேட்க, "ஆமா அண்ணா, இன்னும் சரிவர மாட்டேங்குது. ஜாதகம் பொருந்துறது தான் பெரியபாடா இருக்கு..." என்று சொல்ல,
"சம்பந்தியோட தம்பி பொண்ணுக்கும் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க, ஜாதகம் பொருந்திச்சுன்னா மேற்கொண்டு பேசலாமே..." என்று சொல்ல,
சக்திவேலோ, "ஜாதகம் பார்க்கிறதுல எங்களுக்கு பெருசா நம்பிக்கை இல்லை. உங்க விருப்பப்படி பார்த்துடலாம்." என்று சொன்னான்.
வாணியும், "சரி அண்ணன், நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்." என்று சொல்ல,
"வந்தனாவை ஒரு தடவை நேர்ல பார்த்துக்கோ." என்று சொன்ன பார்த்தீபனோ சக்திவேலைப் பார்க்க, "வந்தனா!" என்று அழைத்தான் சக்திவேல்.
உணவு பரிமாறிக் கொண்டு இருந்தவள் நவநீதனிடம் கொடுத்து விட்டு அவ்விடம் வர, "இதுதான் வந்தனா." என்று அவளை வாணிக்கு அறிமுகப்படுத்த,
"ஆஹ்! துறுதுறுன்னு இருக்கா... நானும் யாருடா இந்த பொண்ணுன்னு அப்போ இருந்து பார்த்துட்டே இருந்தேன்." என்று சொன்னாள்.
"நீ இன்னைக்கு தானே வந்து இருக்க, எல்லாரையும் அறிமுகப்படுத்தவே நேரம் பத்தல." என்று சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டே, "நான் வீட்ல பேசுறேன் அண்ணா" என்று சொல்ல,
அங்கே எதனையும் பற்றி யோசிக்காமல் வந்த வந்தனாவுக்கு இப்போது தூக்கிவாரிப் போட்டது. தனது திருமணம் பற்றிதான் பேசுகின்றார்கள் என்று நினைத்ததுமே இதயத்தில் ஒரு படபடப்பு.
"நான் போகட்டுமா பெரியப்பா?" என்று இதழ்கள் நடுங்க கேட்க, "சரிம்மா" என்று சொன்னதும் அங்கிருந்து வந்தவளுக்கு மனம் பிசைய ஆரம்பித்து விட்டது.
அவளுக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு தைரியமும் இல்லை, காரணமும் இல்லை. அதற்காக யாரோ ஒருவனை திருமணம் செய்யவும் இஷ்டம் இல்லை. யோசனையுடன் மண்டபத்துக்கு பின்பக்கம் சென்று தனியாக அமர்ந்து விட்டாள். மனம் சோர்ந்து விட்டது. இந்த இடைப்பட்ட நாட்களில் இந்த திருமணம் பற்றி அவள் நினைக்கவில்லை.
இன்று நடப்பதைப் பார்த்தால் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் நடந்து விடுமோ என்று தோன்ற, சாப்பிட்டு முடிந்த இலைகளைத் தூக்கி போட அங்கே வந்த விஜய்யின் கண்களில், தனியாக அமர்ந்து இருந்த பெண்ணவள் தென்பட்டாள்.
'இவ என்ன தனியா இருக்கா?' என்று யோசித்துக் கொண்டே அவள் அருகே வந்தவன், "இங்க என்ன பண்ணுற?" என்று கேட்க, அவனை ஏறிட்டுப் பார்த்தவளது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.
"எதுக்கு இப்போ அழுற? யார் என்ன சொன்னாங்க?" என்று கேட்டான்.
"யாரும் எதுவும் சொல்லவே இல்ல." என்றாள்.
"அப்போ?" என்றான்.
"வீட்ல கல்யாணம் பேசுறாங்க." என்றாள். அவனிடம் ஒரு கண நேர மௌனம்.
குரலை செருமிக் கொண்டே, "கட்டிக்க வேண்டியது தானே? பொருத்தமா தானே பார்ப்பாங்க." என்று சொல்ல, "என்ன விளையாடுறீங்களா?" என்று ஆதங்கமாக கேட்டாள்.
அவள் குரல் சற்று உயர சுற்றிப் பார்த்த விஜய்யோ, "மெதுவா பேசு." என்றான்.
கண்களைத் துடைத்துக் கொண்டே எழுந்து நின்றவள், "நீங்க வேற யாரையும் லவ் பண்ணல தானே? நான் நல்லா விசாரிச்சிட்டேன்.” என்றாள்.
"பண்ணல." என்றான்.
"அப்போ ஏன் என்னை பிடிக்கல?" என்று கேட்டாள்.
சுற்றிப் பார்த்துவிட்டு, "இங்க பாரு வந்தனா, கல்யாணம் என்கிறது சின்ன விஷயம் இல்லை. எல்லாத்துக்கும் தகுதி ரொம்ப முக்கியம். நீ முட்டாள்தனமா என் மேல ஆசைய வளர்த்துக்காதே... வீட்ல சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கோ." என்று சொல்ல,
"என்னால முடியாது, உங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேன்." என்றாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "தாலி நான்தான் கட்டணும், நீ ஆசைப்பட்டா மட்டும் போதுமா?" என்று கேட்டான்.
"கட்டுங்க." என்றாள்.
"செவில்லயே விடுவேன்..." என்றான்.
அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "லவ் பண்ணதான் முடியாதுனு சொல்றீங்க, கல்யாணம் பண்ணிக்கலாமே?" என்றாள்.
"விளையாடுறியா நீ?" என்று கேட்க, "இல்ல, நிஜமாதான் சொல்றேன். எனக்கு இன்னொருத்தர் கூட வாழ முடியாது. இந்த மனசும் உடம்பும் உங்களுக்கு மட்டும்தான்." என்றாள்.
அவளை முறைத்தவன், "நீ வர வர ரொம்ப மோசமா பேசிட்டு இருக்க, மனஸாம்... உடம்பாம்..." என்று வாய்க்குள் திட்டியும் கொள்ள, அவளுக்கு அழுகை மறந்து மெல்லிய சிரிப்பு தோன்ற,
"வெட்கப்படாதீங்க மாமா, இப்படி எல்லாம் வெட்கப்பட்டா நமக்கு எப்படி முதலிரவு நடக்கும்?" என்று சொல்ல,
"அடிங்..." என்று சொல்லிக் கொண்டே அவன் சுற்றும் முற்றும் பார்க்க, அவளோ குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே அங்கிருந்து ஓடிச் சென்றாள்.
"சரியான வாலு!" என்று திட்டிக் கொண்டவன் மனதில் ஒருவிதமான அழுத்தம்.
அவளை பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. பிடிக்கும் தான். ஆனால் அவன் தகுதியும் விசுவாசமும் தடையாக இருக்க, அவள் பக்கம் மனம் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தான்.