ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 48

pommu

Administrator
Staff member

நிலவு 48

இருவரையும் தள்ளி அமர்ந்து பல்லவியும் கஜனும் பார்த்துக் கொண்டு இருக்க, கஜனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே எழுந்தவன், "இங்கேயே இருக்கணும் புரியுதா? உன் கால் வேற வீங்கி இருக்கு, நிறைய நேரம் கஷ்டப்பட்டு நிற்காதே..." என்று சொல்ல, "ம்ம்..." என்று சொல்லிக் கொண்டாள்.

கஜன் அர்ஜுனைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

தன்னைக் கடந்து நடந்து செல்லும் கஜனை ஒரு வன்ம சிரிப்புடன் பார்த்த அர்ஜுனோ, "ஹலோ!" என்றான் சொடக்கிட்டு.

ராகவிக்கு தூக்கிவாரிப் போட்டது.

"அர்ஜுன்!" என்றாள் அதிர்ச்சியுடன்.

கஜன் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவனைத் திரும்பிப் பார்த்தவன், "சொல்லுங்க சார்." என்றான்.

சாரில் ஒரு கிண்டலும் ஒளிந்து கொண்டது.

ஒரு கையால் ராகவியை அணைத்துக் கொண்டே கால் மேல் கால் போட்டு, காலை வேறு வேகமாக ஆட்டிக் கொண்டல்லவா அமர்ந்து இருந்தான்.

"ஒரு சோடா..." என்று சொல்ல, அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு சற்று நகர்ந்து சென்று, அங்கிருந்த சோடாவை எடுத்துக் கொண்டு திரும்பிய கணம், அர்ஜுன் முன்னே சோடாவுடன் நின்று இருந்தான் நவநீதன்.

அவனையும் சோடாவையும் மாறி மாறி பார்த்த அர்ஜுனோ, "நான் உன்கிட்ட கேட்கலையே?" என்று சொல்ல, "கேட்டவங்க தான் கொடுக்கணும்னு இல்லையே? நானும் கல்யாண வீட்டுக்காரன் தான்." என்று சொல்லிவிட்டு கஜனைப் பார்த்தவன்,

"சாரை நான் கவனிச்சுக்கிறேன் அண்ணா, நீங்க உங்க வேலையை பாருங்க." என்று சொல்ல, கஜனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே நகர்ந்து விட்டான். இதனை தூர இருந்து பார்த்த பல்லவிக்கு அர்ஜுன் கஜனை சொடக்கிட்டு அழைத்ததும் நெஞ்சு அடைத்தே விட்டது.

இப்போது தான் மூச்சு வந்தது. 'சோ ஸ்வீட் நவா!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அர்ஜுனோ அவனை முறைத்துக் கொண்டே சோடாவை வாங்கிக் கொள்ள, அவனும் நகர முற்பட எட்டி அவன் கையைப் பிடித்த அர்ஜுனோ, "உட்காரு." என்று அவனுக்கு அடுத்த பக்கம் இருந்த நாற்காலியை காட்ட, நவநீதன் அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.

"என்னை பக்கத்துல இருந்து கவனிச்சுக்கோ." என்று அர்ஜுன் கிண்டலாக சொல்லிக் கொண்டே சோடாவைக் குடிக்க, ராகவிக்கோ மயக்கம் வாராத குறைதான்.

தலையைத் தாழ்த்திக் கொண்டு சங்கடமாக அமர்ந்து இருந்தாள். நவநீதனுக்கு கடுப்பாக இருந்தாலும் பொறுமையாக அவன் அருகே அமர்ந்து இருந்தான்.

"அப்புறம், சொல்லுடா..." என்று நவநீதனின் கன்னத்தைத் தட்டி அர்ஜுன் கேட்க, அவனை ஆழ்ந்து பார்த்த நவநீதனோ, "என்ன சொல்லணும்?" என்று கேட்டான்.

"அக்கா வீட்ல இல்லாம எப்படி ஃபீல் பண்ணுற?" என்று கேட்டான்.

"எந்த ஃபீலிங்கும் இல்ல." என்று எங்கோ பார்த்துக் கொண்டே பதில் சொன்னான்.

"ஒரே மாசத்துல உன்னை மாமாவா ஆக்கி இருக்கேன், சந்தோஷப்பட வேணாமா?" என்று அவன் தாடையைப் பற்றி தன்னை நோக்கி திருப்பிக் கொண்டே கேட்டான்.

ராகவிக்கோ எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. அன்று கஜனிடம் அர்ஜுன் அந்தரங்கம் பற்றி பேசியதற்கே அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அதுவும் அவன் வைத்தியர்... அப்படி இருந்தும் அர்ஜுன் அவனிடம் பேசியதை அவளால் ஜீரணிக்க முடியவே இல்லை. நவநீதன் அவளை விட சின்ன பையன் வேறு. அவனிடம் பேசும் பேச்சா என்றுதான் அவளுக்கு தோன்றியது.

"அர்ஜுன் ப்ளீஸ்..." என்றாள், அவன் தொடையில் கையை வைத்து அழுத்தத்தைக் கொடுத்து.

அவளைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த அர்ஜுனோ, "என்ன ராகவி, என்ன ஆச்சு? ஒரே மாசத்துல அவனை மாமாவாக்குனது நான் தானே?" என்று கேட்டான்.

குரலில் கேலி அப்பட்டமாக இருந்தது. அவளுக்கோ மேனி எல்லாம் கூசிப் போன உணர்வு. மீண்டும் மீண்டும் என்ன பேசிக் கொண்டு இருக்கின்றான் என்று தோன்றியது. அர்ஜுனை அடிபட்ட பார்வை பார்த்தாள். அவன் பேச்சு நவநீதனுக்கே சங்கடமாகி விட்டது. பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கின்றது அல்லவா? எழுந்து கொள்ளவும் முடியவில்லை. அமர்ந்து இருக்கவும் முடியவில்லை. அர்ஜுன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த ராகவி மேலும் கோபம் வந்தது. அவனுக்கு திட்டாமல் கெஞ்சிக் கொண்டல்லவா இருக்கின்றாள்? நவநீதனுக்கு தான் அர்ஜுனைப் பற்றி மொத்தமாக தெரியாது. அதனால் ராகவியின் மௌனம் கோபத்தைக் கொடுத்தது.

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே முஷ்டியை இறுக பற்றி கோபத்தை அடக்கிக் கொண்டு இருந்தவனது தோளில், கையை வைத்து இருந்தாள் பைரவி. திரும்பிப் பார்த்தான்.

"நீ போப்பா, சாரை நான் கவனிச்சுக்கிறேன்." என்று சொல்ல, இப்போது தான் நவநீதனுக்கு மூச்சே வந்தது.

"சரி அத்தை." என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன் அங்கிருந்து நகர, இப்போது அர்ஜுன் அருகே அமர்ந்து கொண்டாள் பைரவி.

அர்ஜுனுக்கோ தூக்கிவாரிப் போட்டது. அவளை அதிர்ந்து பார்த்தான்.

"வேற என்ன சார் வேணும்? கேக் வேணுமா? இல்ல..." என்று கேட்க, "எனக்கு எதுவும் வேணாம்." என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்து ஜீவிதனை தேடி செல்ல,

அவன் முதுகை முறைத்துப் பார்த்துவிட்டு ராகவியைப் பார்த்தவள், "நீ போய் அப்பாகிட்ட பேசும்மா, அவனை நான் பார்த்துக்கிறேன்." என்று சொல்ல, அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன.

மென்மையாக சிரித்துக் கொண்டே எழுந்தவளை ஆழ்ந்து பார்த்த பைரவி, "ஏன் இவ்ளோ அமைதியா இருக்கிற? அவன்கிட்ட அடிச்சுப் பேசு, ஏதாவது மிரட்டி வச்சு இருக்கானா?" என்று கேட்டாள்.

"ஐயோ... அப்படி இல்ல அத்தை." என்று அவசரமாக மறுத்தவளுக்கோ, உண்மையை சொல்லி விடலாமா என்று தோன்றினாலும் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டு இருந்தது.

இப்போது அவள் விழிகள் சக்திவேலை தேடின. மணமேடை அருகே நின்று வந்தவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான். அருகே தான் துளசியும் நின்று இருக்க, அவர்களைத் தேடி சென்றாள்.

துளசியோ அவள் அருகே வந்தவள், "எப்படிம்மா இருக்க?" என்று அணைத்து விடுவித்தவளுக்கு கண்ணில் நீர் சுரந்தது. துடைத்துக் கொண்டாள்.

"அழாதீங்க அம்மா..." என்று சொல்லிக் கொண்டே ஏறிட்டு சக்திவேலைப் பார்த்தாள்.

அழுகை அவளுக்கு முட்டிக் கொண்டு வந்தது. சக்திவேலும் பேசிக் கொண்டு இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு அவளை நோக்கி வந்தவன், "என்னம்மா?" என்று கேட்க,

அவள் இதழ்கள் கீழ் நோக்கி வளைய, "என்னை மன்னிப்பீங்களா அப்பா?" என்று கேட்டாள்.

அவள் தவறே செய்யவில்லை. மொத்த தவறும் செய்தது அர்ஜுன். ஆனால் மன்னிப்பு கேட்டாள். வேறு வழியும் அவளுக்கு தெரியவில்லை.

"உன் மேல கோபம் எல்லாம் இல்லை, வருத்தம் மட்டும்தான். மாசமா இருக்கிற நேரம் அழுதுட்டு இருக்காத..." என்று சொன்ன அடுத்த கணமே அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. சுற்றி அவ்வளவு பேர் இருக்கும் போது, இப்படி அணைத்து அழுதால் ஆளாளுக்கு இஷ்டத்துக்கு ஏதும் பேசுவார்கள் என்று தெரிந்தது. ஆனாலும் அவள் அழுகைக்கு தீர்வாக, அந்த அணைப்பு தேவைப்படும் போது ஒன்றும் செய்யவும் முடியாது. தலையை வருடிக் கொடுத்தான்.

சட்டென விலகியவள், "ஐயோ! உங்க ஷேர்ட்..." என்றபடி அவன் ஷேர்ட்டில் படிந்து இருந்த கண்ணீரைத் துடைக்க, "அது பரவாயில்லை..." என்று அவனே கையால் துடைத்த சமயம்,

அங்கே வந்த கஜனோ, "இப்போ எதுக்கு அழுதுட்டே இருக்க? சாப்பிடுறியா?" என்று கேட்டான்.

"இல்ல, பசிக்கல..." என்று சொன்னவளது கையைப் பற்றி அங்கே அமர வைத்தவன், "சாப்பிடு." என்று கேக்கை கொண்டு வந்து கொடுத்து விட்டு சக்திவேலைப் பார்த்தவன்,

"பக்கத்துல இருந்துக்கோங்க, இந்த சார் எங்க போய்ட்டாருனு பார்க்கணும்." என்று கிண்டலாக சொல்லிவிட்டு விழிகளை சுழற்றி தேட, ராகவிக்கே சிரிப்பு வந்து விட்டது.

அழுது கொண்டே சிரித்தும் கொள்ள சக்திவேலோ, "என்னை கிண்டல் பண்ண வேணாம்னு சொல்லிட்டு, பெரிய மனுஷன நீ கிண்டல் பண்ணலாமா?" என்று கேட்க,

கஜனோ சத்தமாக சிரித்துக் கொள்ள, "அப்பாவுக்கும் மகனுக்கும் மாப்பிள்ளையை கிண்டல் பண்ணுறது தான் வேலையா இருக்கு. கொஞ்சம் சும்மா இருங்க..." என்று துளசி ஆதங்கப்பட,

"மாப்பிள்ளைக்கு அத்தையோட சப்போர்ட்டை பார்த்தீங்களா?" என்று சிரித்துக் கொண்டே கேட்ட கஜனின் விழிகள், அர்ஜுனை தான் தேடின.

மாடியில் நின்று இரு கைகளையும் கம்பியில் வைத்தபடி அவர்களை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் அர்ஜுன் பார்த்தீபன். அவனுக்கு இன்னுமே தான் தனித்து விடப்பட்ட உணர்வு அதிகரித்து இருந்தது. அதுவும் ஏனையவர்களிடம் சிரித்துப் பேசும் ராகவியைப் பார்க்க பார்க்க ஆத்திரம் வந்தது. அவனுடன் மட்டும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டல்லவா இருக்கின்றாள்? அவன் கொஞ்சம் இறங்கி வந்தாலே, எல்லோரும் அணைத்துக் கொள்ள தயாராக தான் இருந்தார்கள்.

ஆனால் அவன் அழுத்தமும் திமிரும் அவனை தன்னிடத்தில் இருந்து இறங்கி வர அனுமதிக்கவே இல்லை. மேலும் மேலும் வன்மத்தை அவனே தனக்குள் வளர்த்துக் கொண்டவன் விழிகள் கஜனில் படிய, அவனும் இப்போது அர்ஜுனைதான் பார்த்தான்.

இருவரின் விழிகளும் சந்தித்துக் கொள்ள, சட்டென கஜனில் இருந்து விழிகளை அகற்றிய அர்ஜுனோ, ஜீவிதனின் அறைக்குள் புகுந்து கொண்டான்.

ஷேர்ட்டின் கையை மடித்துக் கொண்டு ஜீவிதனின் அறைக்குள் நுழைய, "டேய் வாடா!" என்றான் அவன்.

"நான் உன் கண்ணுக்கு தெரியுறேன் போல?" என்று கேட்டுக் கொண்டே அவன் அமர, "திடீர் கல்யாணம்டா..." என்றான் அவன்.

"தெரியுது... தெரியுது... அந்த குடும்பத்துலயே ஏன்டா போய் விழுற?" என்று கேட்டவனை மேலிருந்து கீழ் பார்த்தவன், "நீயும் அதே குடும்பத்துல தான் கல்யாணம் பண்ணி இருக்க, நினைவிருக்கா?" என்று கேட்க,

"என் பிரச்சனை வேற..." என்று அர்ஜுன் சலித்துக் கொண்டான்.

"வந்ததுல இருந்து ஒரே வேலை, உன்னை சந்திக்க நேரமும் கிடைக்கல. ப்ரோமோஷன் கிடைச்சுட்டாம்னு கேள்விப்பட்டேன். கங்கிராட்ஸ்!" என்று கையை நீட்ட, அதனை குலுக்கிக் கொண்டே, "ம்ம்ம்..." என்றான்.

"என்னை விட சின்ன பையன் நீ, அப்பா ஆயிட்ட. எனக்கு இனிதான் கல்யாணமே நடக்க போகுது." என்று சொல்ல, அர்ஜுனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "பொறாமை படாதடா..." என்று சொன்னான்.

"அது இருக்கட்டும், வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்கிற பிளானா?" என்று அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு கேட்க, "என்ன மாறணும்னு ஆசைப்படுற?" என்று கேட்டான்.

"எல்லார் கூடவும் பேசலாமே?" என்று சொன்னான்.

"பேசிட்டு தானே இருக்கேன், கல்யாணத்துக்கு கூட வந்திருக்கேன். உன் மாமனார் தான் என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிட்டு போறார்." என்றான்.

"ஹலோ, உன் அப்பான்னு சொல்லு." என்று சொல்ல, அவனிடம் ஒரு அலட்சியமான தோள் குலுக்கல் மட்டுமே.

"ரொம்ப கஷ்டம்டா, உங்க எல்லாரையும் வச்சுட்டு..." என்று ஜீவிதன் சலித்துக் கொண்டான்.

***

நேத்ரா தனது அறைக்குள் கண்ணாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். கொஞ்ச நேரத்தில் அவள் திருமதி ஜீவிதன் ஆகிவிடுவாள். ஏனோ சட்டென திருமணத்தில் அவளால் ஒன்ற முடியவில்லை. வலுக்கட்டாயமாக கூட சிரிக்க முடியவில்லை. அவள் தலைக்கு பூவை வைத்து விட்ட நந்தினி அவள் கன்னத்தை வருடி, "நீ எதுக்கும் வருத்தப்படாத, உன் நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை அமையும்." என்றாள்.

எதுவும் சொல்லவில்லை அவள். கண்களில் நீர் தேங்கி நின்றது. கீழே விழுந்து விடாமல் டிஸ்ஸுவினால் துடைத்துக் கொண்டாள்.

"உன்னை விட பல்லவிகிட்ட என்ன இருக்குன்னு தெரியல, அதுவும் கல்யாணம் ஆன பொண்ணு..." என்று ஆரம்பிக்க, "அம்மா!" என்று அதட்டல் நேத்ராவிடம் இருந்து.

"பேசுறது தப்புன்னு தெரியுதுடி, ஆனா மனசு பொறுக்க மாட்டேங்குதே..." என்று சொல்ல, "மாமாவையும் அக்காவையும் தப்பா பேசாதீங்கம்மா, ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அவங்க சந்தோஷமா இருக்கணும், எந்த சாபமும் போட்றாதீங்க ப்ளீஸ்..." என்று உருக்கமாக தாயிடம் கெஞ்ச, நந்தினிக்கு அழுகை வந்து விட்டது.

நேத்ராவை அணைத்துக் கொண்டு, "உன் நல்ல மனசை யாரும் புரிஞ்சுக்கலையேனு ஆதங்கமா இருக்கும்மா. சரி விடு, ஜீவிதன் உன்னை நல்லா பார்த்துப்பார்." என்று சொல்ல,

அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டு கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டுக் கொண்டாள். இந்த வாழ்க்கையில் ஆசைப்படுவது எல்லாமே எல்லாருக்கும் கிடைத்து விடாது. கிடைக்கவில்லை என்பதற்காக வாழ்க்கை முடிந்து விடவும் போவது இல்லை. சில வலிகளைக் கடந்து வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஏதோ ஒரு இடத்தில், வாழ்க்கை நமக்கு ஆச்சரியங்களை சேர்த்து வைத்து இருக்கும். நேத்ராவின் வாழ்க்கையும் அப்படிதான்.

அவள் ஆசைப்பட்ட கஜன் கிடைக்கவில்லை. ஆசைப்படாத ஜீவிதன் கிடைத்து இருக்கின்றான். இப்போதைக்கு அவளால் அவனை மொத்தமாக உள்வாங்க முடியாது என்றாலும், என்றோ ஒரு நாள் மாற்றம் வரும் என்று, நம்பிக்கையுடன் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க இருக்கின்றாள். கடலை சேராத நதிகள், நீர் நிலைகளாக எங்கோ தேங்கி நின்றுவிடும் போது, அதில் தாமரை பூக்கள் அந்த நீர் நிலைகளை அழகாக்க மலர்ந்து இருக்கும். தேங்கி நிற்கும் நீர் நிலையாக நேத்ரா இன்று இருக்கின்றாள்.

அவளை அழகாக்க அவள் வாழ்க்கைக்குள் தாமரையாக நுழைந்து இருக்கின்றான் ஜீவிதன். சூரியனின் ஒளியை வாங்கி, பிரகாசித்து தான் வானத்தை இந்த நிலவு அழகாக்க வேண்டும் என்று இல்லை. ஒளியில்லாமல் இருளாகி இருக்கும் வானத்தை நட்சத்திரங்கள் கூட பிரகாசிக்க செய்யும். ஒளியின்றி உருகும் நிலவுக்கு துணையாக வந்த நட்சத்திரம் தான் இந்த ஜீவிதன்.

இருண்டு கிடக்கும் அவள் வானத்தை, கண்டிப்பாக பிரகாசிக்க வைத்து விடுவான் அவன். எப்படியோ மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு திருமணத்துக்கு தயாரானாள் நேத்ரா.
 
Top