நிலவு 47
கல்யாண மண்டபம் களை கட்டிக் கொண்டு இருந்தது. வந்தவர்களை எல்லோரும் வரவேற்றுக் கொண்டு இருக்க, கஜனோ வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, எல்லாம் சரியாக நடக்கின்றதா என்று மேற்பார்வை செய்து கொண்டு இருக்க, வாசலில் நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டு இருந்தாள் பல்லவி. அவளுக்கோ கிட்டத்தட்ட நிறை மாதம் நெருங்கிக் கொண்டு இருந்தது. நிற்கவும் முடியவில்லை, அவள் முகத்தில் களைப்பு அப்பட்டமாக தெரிந்தது.ஏற்கனவே இது எல்லாம் செய்ய வேண்டாம் என்று கஜன் சொல்லியும், அவள் செய்யும் போது கோபம்தான் வந்தது. அவளை நோக்கி வேகமாக சென்று, "மிஸிஸ் பல்லவி!" என்றான் அவள் பின்னே நின்று கொண்டு.
அவளும் தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்க்க, "நீங்க கூப்பிடலன்னா எல்லாரும் அப்படியே திரும்ப போயிடுவாங்களா என்ன?" என்று கேட்டான்.
அவன் கேட்ட தோரணையில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட, "என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க?" என்று கேட்டாள்.
"பின்ன என்னடி?" என்றான்.
உரிமையான அழைப்பு!
"நம்ம வீட்டு கல்யாணம். நான் பொண்ணு வீடு, மாப்பிள்ளை வீடுன்னு ரெண்டுமே கவர் பண்ணணும்ல?" என்று சொல்ல, "அதெல்லாம் நீ ஒன்னும் பண்ண தேவல, இங்க ஆட்கள் நிறையவே இருக்காங்க. நீ வந்து முதல்ல உட்காரு." என்று சொல்ல,
"சரி இல்லையே..." என்று அவள் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல், அங்கே இருந்த இருக்கையில் அமரவும் வைத்து விட்டான்.
"காலைல சாப்பிட்டு இருக்க மாட்டியே?" என்று கேட்டான்.
அவள் சாப்பிடவில்லை தான், பொய் சொல்லவும் இஷ்டம் இல்லை. இல்லை என்கின்ற தோரணையில் தலையாட்டினாள்.
"நினைச்சேன், நேத்தே சாப்பிட சொல்லி அவ்ளோ சொன்னேன்..." என்று சற்று கடுப்பாக சொன்னவனோ, அவளுக்கு கேக் மற்றும் வடையை எடுத்து வந்து கொடுத்துவிட்டு அருகே அமர்ந்தான்.
"நான் சாப்பிடுறேன், நீங்களும் இங்கேயே இருந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க?" என்று கேட்டாள்.
"பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கிறேன்னு நினைப்பாங்க." என்றான் சிரித்துக் கொண்டே.
அவளுக்கும் சிரிப்பு வந்துவிட, அவன் கொடுத்ததை சாப்பிட ஆரம்பித்தாள்.
அவனும் அருகே அமர்ந்து கொண்டு அலைபேசியை எடுத்தவன், "விஜய், சாப்பாடு என்னன்னு பாரு." என்று அவனிடம் சொல்லி வேலையை முடிக்க தொடங்கி விட்டான்.
"இருந்த இடத்துல இருந்தே எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாச்சு..." என்று அவள் சொல்ல, "டைம் டிலே பண்ண முடியாதே..." என்றான்.
அவன் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது அவளுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது.
அவளோ, "நீங்க சாப்பிடலையா?" என்று கேட்டுக் கொண்டே கேக்கை நீட்ட, "நானா ப்ரக்னன்ட்டா இருக்கேன்?" என்று கேட்டான்.
"அப்போ ப்ரக்னன்ட் இல்லன்னா யாரும் சாப்பிடுறது இல்லையா?" என்று அவள் கிண்டலாக கேட்க, சத்தமாக சிரித்தவன், "நல்லா பேசுறம்மா..." என்று சொல்லிக் கொண்டே, அங்கே இருந்த சோடாவை எடுத்து குடித்துக் கொண்டான்.
மெதுவாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளைப் பார்த்தவன், "இந்த சாரீல ரொம்ப நல்லா இருக்க...!" என்று சொன்னான்.
"அப்பா எடுத்து கொடுத்தாங்க." என்று அவள் சொல்ல, "குட்!" என்று சொல்லிக் கொண்டான்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அவளை விட்டு அவன் நகரவே இல்லை.
***
நவநீதனோ வழக்கமான வாலிப துள்ளலுடன் இருந்தான். அவன் கல்லூரி நண்பர்களும் வந்திருக்க, அவன் விழிகளோ அங்கே வந்த இளம் பெண்களை தான் வட்டமடித்தன. அதில் நீல நிற தாவணியில் ஒரு பெண் பேரழகியாக இருந்தாள்.
அவன் கண்கள் அவள் மீதே பதிந்து இருக்க, "மச்சி, அவ செம்ம கட்டைல..." என்றான்.
அவனுடன் நின்ற காஞ்சனாவின் மகன் கேசவனும், "ஆமா மச்சி..." என்று வாயெல்லாம் பல்லாக சொல்ல, "பேச்சு கொடுக்கட்டுமா?" என்று கேட்டுக் கொண்டே எழ, "உனக்கு தைரியம் ஜாஸ்திடா..." என்றான் அவன்.
குரலை செருமிக் கொண்டே அங்கும் இங்கும் நடந்து திரிந்த பெண் அருகே சென்றவனோ, "ஹலோ!" என்றான்.
அவளோ அவனை மிரட்சியாக பார்த்துவிட்டு நகர, "யாரை தேடுறீங்க?" என்று அவன் கேட்டான்.
விடமாட்டான் என்று நினைத்த பெண்ணோ, "அம்மாவை காணோம்." என்று சொல்ல, "உங்க பேர்?" என்று கேட்டான்.
"எதுக்கு?" என்று அவள் கேட்க, "என்னோட அண்ணாவோட கல்யாணம் தான், என் பேர் நவநீதன்." என்றான்.
இதனை சொன்னதுமே அந்த பெண் இயல்பாகிவிட, "ஓஹ்! என் பேர் சுகன்யா." என்றாள்.
"என்ன படிக்கிறீங்க?" என்று கேட்டான்.
"ப்ளஸ் டூ." என்று அவள் பதில் சொன்னாலும், அவள் விழிகளோ அங்கும் இங்கும் சுழல, "இங்க தான் இருப்பாங்க." என்று சொன்னான்.
"உங்க ஃபோன் கிடைக்குமா?" என்று அவள் கேட்க, அவனும் அலைபேசியை நீட்ட அதில் இருந்து தாயின் எண்ணுக்கு அழைத்தாள்.
"அம்மா எங்க நிக்கிறீங்க?" என்று கேட்க, "சுகானா ரூமுக்குள்ளம்மா, மேல வா." என்று அவள் தாய் பதில் சொல்ல, "சரி வர்றேன்." என்று சொல்லி விட்டு வைத்தவள் அலைபேசியை அவனிடம் நீட்டி, "தேங்க்ஸ்!" என்றாள்.
"உங்க நம்பர்?" என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.
அவள் தயங்காமல் எண்ணை கொடுக்க அவன் மனமோ, 'சட்டுன்னு நம்பர் தர்றா, நம்ம மேல மயங்கிட்டாளோ? ஈஸியா கரெக்ட் பண்ணிடலாம் போலவே?' என்று நினைத்துக் கொண்டே எண்ணை பதிவு செய்ய,
"மிஸ்ட் கால் ஒன்னு கொடுங்க அண்ணா." என்று சொல்லிக் கொண்டே அவள் நகர, "இங்க அண்ணான்னு கூப்பிடுற வேலை வச்சுக்காதே, கால் மீ நவா." என்றான்.
அவளோ அவனை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டே, "ம்ம்..." என்று சொல்லிக் கொண்டே சென்றாள்.
அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் படிந்து இருக்க சட்டென திரும்பியவள், "மாப்பிளை உங்களுக்கு அண்ணன் முறை தானே?" என்று கேட்டாள்.
"கண்டிப்பா." என்றான் கண் சிமிட்டி.
அவளும் ஒரு குழப்பத்துடன் தலையை அசைத்து விட்டு மாடியேறி விட்டாள். நவநீதனுக்கோ குதூகலம். ஒரு பெண்ணின் எண்ணை பெற்று இருக்கின்றான். இதழ் எல்லாம் புன்னகை.
அவன் இவ்வளவு நேரம் சுகன்யாவுடன் பேசிக் கொண்டு இருந்தது அங்கே பல்லவி அருகே இருந்த கஜனின் விழியில் பட, "நவா!" என்று அழைத்து இரு விரல்களால் அருகே அழைக்க அவனும் சென்றான்.
"அந்த பொண்ணுகிட்ட என்ன பேசுன?" என்று கேட்க, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கஜனுக்கு அடுத்த பக்கத்தில் அமர்ந்தவன், "எனக்கு அந்த பொண்ணு நம்பர் கொடுத்து இருக்கா." என்று விழிகளை உருட்டி குஷியுடன் சொல்ல, அவனை மேலிருந்து கீழ் பார்த்தவன், "நாசமா போச்சு." என்றான்.
பல்லவிக்கும் நவநீதன் சொன்னது கேட்க, சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
"அண்ணி ஏன் சிரிக்கிறீங்க?" என்று நவநீதன் கேட்க, "அவ யார் தெரியுமா?" என்று கஜன் கேட்க, "யாரு?" என்று கேட்டான் அவன்.
"அவ பல்லவியோட அப்பாவோட தங்கச்சி, வாணி சித்தியோட பொண்ணு." என்று சொல்ல, "என்னது வாணி சித்தியா?" என்று அதிர்ந்து கேட்க, "ம்ம்... நமக்கு சித்தி முறைதான்." என்றான்.
வாயில் கையை வைத்தவனோ, "அப்போ எனக்கு?" என்று கேட்டான்.
"தங்கச்சிடா..." என்றான் அவன்.
"இன்னைக்கு தான் பார்க்கிறேன்..." என்று நவநீதன் அதிர, "இன்னைக்கு தான் வந்து இருக்காங்க, ரொம்ப தொலைவுல இருக்காங்க." என்றான்.
நவநீதனுக்கு கடலலைகள் நின்று விட்ட உணர்வு.
"தங்கச்சியா?" என்று மீண்டும் கேட்டான்.
பல்லவி வாயில் கையை வைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
கஜனுக்கும் சிரிப்பு வந்து விட இதழ் கடித்து புன்னகையை அடக்கிக் கொண்டே, "ம்ம், தங்கச்சி தான்..." என்றான் இதழ்களை பிதுக்கிக் கொண்டே.
"அவ கேட்டதும் நம்பர் கொடுத்த நேரமே சுதாரிச்சு இருக்கணும். அண்ணானு வேற சொன்னா, அப்போவும் சுதாரிச்சு இருக்கணும். இப்படி என் ஹார்ட்ல குண்டு விழுந்துட்டே..." என்றான்.
கஜனும் அவன் தோளில் கையைப் போட்டு, "உன் லக் அவ்ளோ தான்..." என்றான்.
"எனக்கும் லவ்வுக்கும் தூரம் போல... இன்னைக்கு பாருங்க, என் க்ரஷ்க்கு கல்யாணம்." என்று சொல்ல, "இன்னுமே நீ இந்த பேச்சை விடலையா? அவ புருஷன் போலீஸ், உன்னை தலைகீழா கட்டி வச்சு தோலை உரிக்க போறான்." என்று சொல்ல,
"என் தோஸ்த் தான், நான் பார்த்துக்கிறேன்." என்றான் நவநீதன்.
"என்ன வாய்டா உனக்கு?" என்று கஜன் கேட்க, "அத விடுங்க, அண்ணிக்கு தங்கச்சி முறைல யாரும் பொண்ணுங்க இருக்கா?" என்று கேட்க,
அவனை முறைத்த கஜனோ, "நான் உன் அண்ணாடா, என்ன கேள்வி எல்லாம் என்கிட்ட கேக்கிற?" என்று கேட்டான்.
"சரி விடுங்க, அண்ணி நீங்க சொல்லுங்க, உங்களுக்கு தங்கச்சி முறைல யாரும் பொண்ணுங்க இருக்காங்களா?" என்று கேட்டான்.
இதழ்களைப் பிதுக்கிய பல்லவி, "இருந்தா சொல்றேன்." என்று சொல்ல, "நான் கண் கலங்காம பார்த்துப்பேன்." என்று சொல்ல,
"அடிங்... ஓடுடா, படிக்கிற வயசுல பேச்சை பாரு..." என்று கஜன் துரத்திவிட, "க்கும்..." என்று சொல்லிக் கொண்டே கேசவனை நோக்கி சென்றான் நவநீதன்.
"என்ன மச்சி நம்பர் வாங்கிட்ட போல?" என்று அவன் கேட்க, "வாங்கி என்ன பயன்? அவ எனக்கு தங்கச்சி முறையாம்..." என்று சொல்ல,
"எனக்கு கொடுடா, எனக்கு அப்போ செட் ஆகும்." என்று அவன் கேட்க, "அஸ்கு புஸ்கு... அதெல்லாம் முடியாது." என்றான்.
"சரியான பொறாமை பிடிச்சவன்..." என்று சொன்ன கேசவன் தோளில் கையைப் போட்டவன், "தங்கச்சிய அண்ணன் பத்திரமா பார்த்துக்கிறேன்டா. உன்னை போல பொறுக்கிக்கு எல்லாம் கட்டி கொடுக்கிறதா இல்லை." என்றான்.
"சரியா போச்சு..." என்று சொல்லிக் கொண்டான் கேசவன்.
இதே சமயம், அர்ஜுன் மற்றும் ராகவியின் காரும் மண்டப வளாகத்தை அடைந்தது. வாசலில் நின்று இருந்த பார்த்தீபனோ, "நான் உள்ளே போறேன்." என்று சொல்லிக் கொண்டே கிளம்பி விட,
பைரவியோ, 'அப்பாவுக்கும் புள்ளைக்கும் நடுவில, நான் படுறேன் பாடு...' என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
சக்திவேல் உள்ளே செல்லவில்லை. அங்கேதான் நின்று இருந்தான். அவனுக்கு ராகவியை பார்த்தாக வேண்டும். அவளது செல்ல மகளை இத்தனை நாட்கள் கழித்து பார்க்க போகின்றான். கர்ப்பமாக வேறு இருக்கின்றாள்.
காரையே பார்த்துக் கொண்டே நின்று இருக்க ராகவியும் கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள். கொஞ்சம் பதட்டம், கொஞ்சம் ஆர்வம் என்று பல உணர்வுகள் அவளிடம்.
அர்ஜுனும் காரில் இருந்து இறங்கி நடந்த சமயம் அவன் அருகே வந்த ராகவி, மெதுவாக வாசலில் நின்ற சக்திவேலை ஏறிட்டுப் பார்த்தாள்.
ஓடிச் சென்று, ‘அப்பா!’ என்று அணைக்க வேண்டும் போல இருந்தது. அணைத்து அழ வேண்டும் போல இருந்தது.
அவனைக் கண்டதுமே அவள் விழிகள் கலங்கிவிட சக்திவேலோ, "வாங்க!" என்று அழைத்தான் மெல்லிய புன்னகையுடன்.
அர்ஜுன் ஒரு தலையசைப்புடன் சக்திவேலைக் கடந்து செல்ல, அங்கு நின்ற பைரவிக்கோ ஆத்திரம். 'நானும் உள்ளே போய் இருக்கலாம்.' என்று நினைத்துக் கொண்டாள்.
கொஞ்சம் தன்மையாக ஆட்களை எதிர்கொண்டால் தான் என்ன என்று தோன்றியது. அவன் பின்னே வந்த ராகவியோ சக்திவேல் அருகே நின்று விட்டாள். தாண்டி செல்ல முடியவில்லை.
மெதுவாக அவனை ஏறிட்டுப் பார்த்தவளது கண்ணீர் சட்டென விழ, "அப்பா...!" என்று அவள் அழைத்து முடிக்க முதல், "ராகவி!" என்று திரும்பிப் பார்த்து அழைத்து இருந்தான் அர்ஜுன்.
ஆத்திரமாக வந்தது. நிம்மதியாக யாருடன் பேசவும் விடமாட்டேன் என்கின்றானே? எரிச்சலாக இருந்தது.
சக்திவேலோ, "உள்ளே போம்மா, மாப்பிள்ளை கூப்பிடுறார்." என்றான்.
'அவனுக்கு மரியாதை தான் ஒரு கேடு...' என்று ராகவியால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
"ராகவி!" என்று மீண்டும் ஒரு அழைப்பு.
பைரவிக்கோ எரிச்சல் வந்து விட்டது. விறுவிறுவென உள்ளே அவனைக் கடந்து சென்று விட்டாள். அவன் யாரிடமும் நேரடியாக வம்புக்கு செல்லவில்லை என்றாலும், அவன் செயல்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் யாரையோ காயப்படுத்துவது போல இருந்தது. ராகவி அவள் குடும்பத்துடன் பேசவே கூடாது என்று, கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றான் என்று புரிந்தது.
சக்திவேலும், "உள்ளே போம்மா" என்று சொல்லிவிட்டு, அங்கே வந்தவர்களுடன் பேச ஆரம்பித்து விட்டான்.
அவன் அவ்வாறு செய்யவில்லை என்றால், ராகவி தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பாள் என்று தெரியும். அர்ஜுனோ அவளை அழைத்துக் கொண்டு தான் இருப்பான். கண்டிப்பாக மனஸ்தாபம் வரும் என்று புரிந்தது. சக்திவேல் அவனாகவே விலகிக் கொண்டான்.
ராகவி எரிச்சலுடன் அர்ஜுன் அருகே சென்றவள், "என்னை கொஞ்சம் பேச விடலாமே...?" என்றாள்.
"என்ன பேசிட போற?" என்று கிண்டலாக கேட்டு அவளுடன் சென்று இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்ள, அவளுக்கோ எரிச்சலாக இருந்தது.
அழுகை வேறு முட்டிக் கொண்டு வந்தது. எதற்காக அவனுடன் இருக்கின்றோம் என்று அவளுக்கே தெரியவில்லை. விட்டெறிந்து விட்டு போகலாமா என்றுதான் இக்கணம் தோன்றியது.
அவனோ அவள் தோளில் கையினைப் போட்டு நெருக்கிக் கொண்டு முன்னால் பார்த்தபடி அமர்ந்து இருக்க, அவளோ முன்னால் பார்த்து, அவன் பற்றி இருந்த தோளை உலுக்கி, தனது பிடித்தமின்மையை வெளிப்படுத்தினாள்.
"ஓஹோ!" என்று சொல்லிக் கொண்டே கையை எடுத்தவனுக்கு அவள் பிடித்தமின்மையை பார்த்ததுமே சுர்ரென்று கோபம் வந்தது... ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன், மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு முன்னால் பார்க்க, அங்கே வந்தனா வந்தவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.
"செம்ம அழகுல வந்தனா... அவளை கட்டிக்க போறவன் ரொம்ப கொடுத்து வச்சவன்." என்றான் வேண்டுமென்றே.
அவளை முதலில் ரசித்து இருக்கின்றான்தான். இப்போது எல்லாம் ரசிக்க தோன்றவில்லை. ஆனால் ரசிப்பது போலவே ராகவியிடம் காட்டிக் கொள்ள, அவனைத் திரும்பி அதிர்ந்து பார்த்தாள் அவள்.
ஒருமாதிரி ஆகிவிட்டது அவளுக்கு. என்ன மனிதன் இவன் என்று நினைக்காமல் இருக்கவே முடியவில்லை.
"அர்ஜுன்..." என்று அவனை அழைக்கும் போதே குரல் கம்மியது.
அவளைத் திரும்பி ஆழ்ந்து பார்த்தவன், "என்னடி?" என்றான்.
"அவ என் அக்கா." என்றாள்.
"சோ வாட்? அழகா இருக்கா, யாருக்கு அனுபவிக்க கொடுத்து வச்சு இருக்கோ..." என்றான்.
அவன் பேசுவது கொச்சையாக இருந்தது.
ராகவியோ கண்ணில் வழிய இருந்த கண்ணீரை உள்ளே இழுத்தபடி, "ப்ளீஸ்... இப்படி அசிங்கமா பேசாதீங்க." என்றாள் பற்களைக் கடித்துக் கொண்டு.
அவளை ஆழ்ந்து பார்த்து அவள் தோளில் மீண்டும் கையைப் போட்டவன், "ஓகே." என்று சொல்ல, அவளுக்கோ அவன் கையைப் போட்டது எரிச்சலாக இருந்தாலும், பொறுத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
தனது பிடித்தமின்மையை கூட அவளால் இயல்பாக வெளிப்படுத்த முடியாத நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றான் அவன்...