நிலவு 46
விஜய் வீட்டின் பின்பக்கம் ஆட்களுடன் நின்று துப்பரவு செய்து கொண்டு இருக்க, அவனை நோக்கி வந்தவளோ, "விஜய்!" என்று அழைத்தே விட்டாள்.திரும்பி அவளைப் புருவம் சுருக்கிப் பார்க்க, "எனக்கு வீட்ல கல்யாணம் பார்க்கிறாங்க." என்றாள்.
"நல்ல விஷயம் தானே?" என்றபடி அவன் வேலையைப் பார்க்க முயல, "எனக்கு உங்கள தான் பிடிச்சு இருக்கு." என்றாள்.
அவனுக்கு மயக்கம் வராத குறைதான். சுற்றி ஆட்கள் நின்றார்கள். யார் காதில் விழுந்தாலும் பிரச்சனை.
விழிகளை சுழல விட்டபடி, "உனக்கென்ன பைத்தியமா?" என்று பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டான். ஆத்திரத்தில் ஒருமையில் தான் பேசினான்.
அவளுக்கு அதுவே ஜிவ்வென்ற உணர்வாகி போனது.
"நீங்க வாங்கன்னு பேசாம இப்படி பேசும் போது நெருக்கமா ஃபீல் ஆகுது." என்றாள்.
"செருப்பால அடிப்பேன்..." என்று சொல்லிவிட்டு அவன் நகர, "விஜய்!" என்றாள் மீண்டும்.
சலிப்பாக திரும்பிப் பார்த்தவன், "யாரும் பார்த்தா பிரச்சனை, உள்ளே போயிடுங்க." என்றான்.
"நான் உங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேன்." என்றாள்.
நெற்றியை நீவிக் கொண்டே அவளை முறைத்தவன் விறுவிறுவென நடக்க, "என்னை கல்யாணம் பண்ணிக்கலன்னா தற்கொலை பண்ணிப்பேன்." என்றாள்.
வேகமாக திரும்பி அவளை நோக்கி கோபமாக வந்தவன், "வந்தனா கனவு உலகத்துல வாழாம கொஞ்சம் எதார்த்தமா யோசி ப்ளீஸ்..." என்றான்.
"என்னை ஏன் பிடிக்கல?" என்று கேட்டாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "உன் அண்ணாகிட்ட சொல்லிடுவேன்." என்றான் மிரட்டலாக.
"சொல்லுங்க, அப்படியாவது நம்ம கல்யாணம் நடக்குதானு பார்ப்போம்." என்று சொல்ல, அவனுக்கோ எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போலதான் இருந்தது.
"உனக்கு எல்லாத்துக்குமே பயம் தானே? இதுக்கு மட்டும் பயம் இல்லையா?" என்று கேட்டான்.
"அவ்வளவு தூரம் உங்கள லவ் பண்ணுறேன் போல..." என்றாள் அவள்.
"எனக்கு வாயில நல்லா வரும்..." என்று அவன் சொல்லிக் கொண்டே நகர, "எனக்கும் நல்லா வரும்." என்று அவள் கண் சிமிட்டி சொல்லிவிட்டு செல்ல, அவள் முதுகை திரும்பி வெறித்துப் பார்த்தான்.
திருமண நாளும் நெருங்கி விட்டது.திருமணத்துக்கு முதல் நாள் அன்று, ராகவி, திருமணத்துக்காக அர்ஜுன் வாங்கி கொடுத்த புடவையை அயர்ன் பண்ணிக் கொண்டு இருந்தாள். அவன் தான் பிடிவாதக்காரன் ஆயிற்றே? அவன் கொடுத்ததை தான் கட்டியாக வேண்டும்.
முடியாது என்று சொன்னால் திருமணத்துக்கே அழைத்து செல்ல மாட்டான். செந்நிற புடவை அது. அழகாக தான் இருந்தது. அதனை அயர்ன் செய்து வைத்தவளுக்கு இன்னும் குமட்டிக் கொண்டே வந்தது. இந்த வாந்திதான் நின்றபாடு இல்லை.
கஜன் அதற்காக மருந்துகளை கொடுத்து இருந்தான் தான். சில சமயம் அவளையும் மீறி குமட்டிக் கொண்டே வரும். வேகமாக குளியலறைக்குள் செல்ல முற்பட்டாள். உள்ளே அர்ஜுன் நின்று இருந்தான். வேகமாக கதவைத் தட்டினாள்.
"என்னடி?" என்று அவன் கதவைத் திறக்க முதலே, அவளால் கட்டுபடுத்த முடியாமல் வாந்தி எடுத்து விட்டாள்.
கதவைத் திறந்தவனின் காலிலும் தெறித்து இருக்க, அவனோ அவளை ஏறிட்டு அதிர்ந்து பார்த்தான்.
"சாரி! சாரி!" என்று சொல்லிக் கொண்டே தலையை பிடித்துக் கொண்டே சுவரில் சாய்ந்து நிற்க, "ஆர் யூ ஓகே? உள்ளே வந்து வாஷ் எடு." என்று சொல்லி அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்து செல்ல, "ஐ ஆம் சாரி!" என்றாள் மீண்டும்.
"தட்ஸ் ஓகே." என்றான் மென்மையாக.
வழக்கமாக எல்லாவற்றிற்கும் வானுக்கும் பூமிக்கும் குதிப்பவன் அவன். அவள் என்று வந்தால் மட்டும் ஒரு மென்மை இப்போதெல்லாம். அவளும் குளியலறைக்குள் குளித்துவிட்டு வெளியே வந்த சமயம், அவன்தான் நிலம் எல்லாம் மாப் செய்து கொண்டு இருந்தான். இடையில் டவலுடன் எல்லா வேலையும் முடித்து இருந்தான்.
அவளுக்கோ சங்கடம். என்னதான் அவன் மீது கோபம் இருந்தாலும், இப்படி அவன் மேல் வாந்தி எடுத்தது சற்று நெருடலாக இருக்க, "சாரி!" என்றாள் மீண்டும்.
"ரெஸ்ட் எடு, வாந்திக்கு டேப்லட்ஸ் போடலையா?" என்று கேட்க, "போட்டேன் தான்... திடீர்னு இப்படி ஆச்சு." என்றாள்.
"ம்ம்..." என்று சொன்னவன் அன்று கடை வேலையைப் பார்க்கவும் செல்லவில்லை. அவர்கள் கடை கிட்டத்தட்ட முழுவதுமாக கட்டி முடிந்து விட்டது. பொருட்கள் எடுக்கும் வேலைகளும் உள்ளக அலங்காரங்களும் மீதம் இருந்தன. மின்னல் வேகத்தில் வேலையை முடித்து இருந்தான் அர்ஜுன்.
தலைக்கு மேல் வேலை இருந்தது. ஆனாலும் வீட்டில் தான் இருந்தான். அவளுக்கோ அன்று களைப்பாக இருக்க, தூங்கிக் கொண்டு இருந்தாள். மாலை நேரம் போலதான் கொஞ்சம் சரியானாள்.
தூங்கிக் கொண்டு இருந்தவள் அருகே சென்று படுத்த அர்ஜுனோ, அவள் கன்னத்தை வருடி முத்தம் பதிக்க, "ம்ம்..." என்றாள் முனகும் குரலில்.
"ஓகேயா?" என்று கேட்டான்.
மெதுவாக கண் விழித்தவள், "படிக்கிற பொண்ண ப்ரக்னன்ட் ஆக்கிட்டு ஓகேயானு கேள்வி வேற...?" என்று திட்ட,
"இந்த நிலைமைலயும் எனக்கு திட்டுற பாரேன்..." என்று சிரித்தபடி சொல்லி, அவள் முறைப்பையும் பதிலாக பெற்றுக் கொண்டான்.
***
அன்று இரவு நேத்ராவுக்கு தூக்கமே இல்லை. நாளை ஜீவிதன் அவள் கழுத்தில் தாலி கட்டி விடுவான். அதன்பிறகு வாழ்க்கை எப்படி செல்லும் என்று அவளுக்கே தெரியாத நிலைமைதான். ஜன்னல் அருகே வந்து நின்று இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கஜனை தவிர யாரையும் தெரியாது. பருவம் தெரிந்த வயதில் இருந்தே கஜன் மட்டும்தான்.
‘உன் மாமன் தான் உன்னை கட்டிப்பான்.’ என்று அவள் மனதில் ஆசையை வளர்த்ததில் சக்திவேலின் முந்தைய தலைமுறையின் பங்கு அதிகம். விவரம் தெரிந்த நாளில் இருந்தே அவன்தான் தனது கணவன் என்று மனதில் பதிய வைத்து விட்டாள். சட்டென ஒரே நாளில் எல்லாமே கைவிட்டு சென்றது. போராட தெம்பில்லை, ஜீரணித்துக் கொண்டாள்.
அவனுக்காக மட்டுமே!
இத்தனை நாட்கள் மனமெல்லாம் மரத்துப் போய் இருக்க, இப்போது திருமணம் என்று வந்து நிற்கின்றாள். அதுவும் அவனுக்காக மட்டும். அவளுக்காக அவள் எதுவுமே செய்யவில்லை. அவள் ஆசைப்பட்ட திருமணமும் நடந்தேறவில்லை, வேண்டாம் என்று சொன்ன திருமணமும் நின்று விடவில்லை. அவள் மட்டும் ஒரு இடத்தில் தேங்கி நின்று இருக்கின்றாள்.
ஆனால் அவளை சுற்றி உலகம் சுழன்று கொண்டுதான் இருந்தது. ஜீவிதனுடன் பேசியதில் இருந்தே ஓரளவு நிம்மதி அவளுக்கு. தோன்றும் போது வாழலாம் என்று சொல்லி விட்டான். அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது. இல்லை என்றால் மனமே ரணமாகி இருக்கும்.
பிடிக்காத திருமணம் கூட சகித்துக் கொள்ளலாம், ஆனால் பிடிக்காத தொடுகைகளை எப்படி சகித்துக் கொள்வது? அவள் சம்மதம் இல்லாமல் அப்படி மட்டும் ஒரு விஷயம் நடந்து விட்டால், ஜீவிதனுடன் வாழ்க்கை முழுக்க அவளால் ஒன்ற முடியாமல் போய் விடும். நாளை அவள் திருமதி நேத்ரா ஜீவிதன் ஆகிவிடுவாள். அவனுடனான வாழ்க்கை அவளுக்கு என்னென்ன ஆச்சரியங்களை வைத்து இருக்கிறது என்று அவளுக்கு தெரியாது. கடவுள் மேல் பாரத்தைப் போட்டவளோ குழப்பங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தூங்க சென்று இருந்தாள்.
ஜீவிதனுக்கு எந்த அலட்டலும் இல்லை. அவனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்ய போகின்றான். அவளுக்கான இடைவெளி கொடுத்து விலகி இருக்க போகின்றான், அவ்வளவுதான். இவர்கள் மனநிலைகள் இப்படி இருக்க, கல்யாணம் ஆகும் சந்தோஷத்தில் இருந்தது என்னவோ ராம்குமார் மற்றும் சுகானாதான்.
அவனோ படுத்துக் கொண்டே அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.
‘இந்த நேரம் நமக்கு எல்லாம் முடிஞ்சு இருக்கும்ல?’ என்று கேட்க, அவளோ அதனைப் பார்த்துக் கொண்டே, ‘ராம், எப்போவும் இதே நினைப்பு தானா?’ என்று பதில் அனுப்பினாள்.
‘வேற நினைக்க என்னடி இருக்கு?’ என்று அவனிடம் இருந்து பதில் வந்தது.
‘குட் நைட்! நாளைக்கு பேசுறேன்.’ என்று அவள் சொல்ல, ‘பேச நான் விட்டா தானே? குட் நைட்!’ என்று பதில் வர, “ராம்!” என்று சிணுங்கிக் கொண்டே முகத்தை தலையணைக்குள் புதைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் விடிந்தது...
எல்லோரும் திருமணத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள். ராகவி ஆயத்தமாகியவள் நேரத்தைப் பார்த்தாள். நேரம் இருந்தது. தலைக்கு குளித்தவளுக்கோ தலைமுடி காய வேண்டும். அவளுக்கு வேறு அநியாயத்துக்கு நீண்ட முடி. புடவையை மட்டும் அணிந்தவள் ஜிமிக்கியை போட்டபடி ஹாலில் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு, முடியை விரித்து விட்டபடி கண் மூடி இருந்தவள், எப்போது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது.
வேஷ்டி சட்டையுடன் அறைக்குள் இருந்து வெளியே வந்த அர்ஜுனின் கண்ணில் பட்டது என்னவோ, சோபாவில் சரிந்து படுத்து இருந்த ராகவிதான். சிவப்பு நிற புடவை அணிந்து இருந்தவள் இன்னும் சரியாக ஆயத்தம் ஆக கூட இல்லை. அதற்குள் சோஃபாவில் படுத்து தூங்கி இருந்தாள்.
நெற்றியில் குங்குமமும் காதில் ஜிமிக்கி மட்டும் இருக்க, ஓவியமாக படுத்து இருந்தவளை ரசனையாக பார்த்தபடி அருகே வந்து அமர்ந்து விட்டான் அர்ஜுன்.
அவன் இதழ்களோ, "சரியான கும்பகர்ணி... கிடைக்குற கேப்ல எல்லாம் தூங்குறா..." என்று முணுமுணுக்க, 'நீ இரவுல ஒழுங்கா தூங்க விட்டா தானே?' என்று அவன் மனசாட்சி அவனுக்கு காறி துப்பியது.
அவளை எழுப்பியாக வேண்டும், முகூர்த்தத்துக்கு நேரமாகிக் கொண்டு இருந்தது. நேரத்தைப் பார்த்து விட்டு மெதுவாக அவளை நோக்கி குனிந்தவன், அவள் முடியை கையால் அளைந்தபடி அவள் காதருகே இதழ்கள் உரச, "ராகவி!" என்றான்.
"ம்ம்..." என்கின்ற முனகல் மட்டும் அவளிடம் இருந்து.
"எந்திரிடி..." என்றான்.
அதற்கும், "ம்ம்..." தான் வந்தது. எழுந்து கொள்ளும் எண்ணமே இல்லை போலும். அவள் கன்னத்துடன் கன்னம் வைத்து உரசியபடி, "ராகவி!" என்றான்.
அவளே தனது இதழ்களை நகர்த்தி அவன் இதழ்களுடன் இணைத்து அவன் பேச்சைத் தடுத்து இருக்க, அவன்தான் சித்தமிழந்து போனான். அவள் இதழ் பொருத்தினாள், அவன் தொடர்ந்தான்.
நிற்காமல் தொடர்ந்த முத்தத்தின் எச்சில் ஈரத்தை உணர்ந்தவளும் நிதானத்துக்கு வர, அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட்டபடி எழுந்து அமர்ந்தவளோ, "கல்யாணத்துக்கு போற நேரத்துல என்ன இது? காய்ஞ்ச மாடு கம்புல பாயுற போல..." என்றபடி தனது புடவையை சரி செய்தாள்.
விலகி அமர்ந்த அர்ஜுனோ, "யாரு? நான் பாய்ஞ்சத நீ பார்த்த?" என்றான்.
அவளோ, "வேற யாரு, நானா பாய்ஞ்சு இருக்க போறேன்?” என்று கேட்டபடி அவள் எழுந்து கொள்ள, அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன், "நான் தான்டி பாய்ஞ்சேன்... போதுமா?" என்று தனது மார்பில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டே சொல்ல,
"அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே?" என்று சொல்லிக் கொண்டே அறையை நோக்கி நடக்க, "சரிதான், சீக்கிரம் ரெடி ஆகி வா." என்றான் அவன்.
சற்று நேரத்தில் ஆயத்தமாகி வெளியே வந்த பெண்ணவளும் காரில் ஏறிக் கொண்டாள். கல்யாண மண்டபத்தை நெருங்க நெருங்க மனதில் ஒரு படபடப்பு. அவள் தந்தையை அவள் எதிர்கொள்ள வேண்டுமே? நெஞ்சே அடைத்து விடும் உணர்வு.
எந்த தவறும் அவள் வாழ்க்கையில் செய்தது இல்லை. ஆனால் எல்லா பழியையும் சுமந்து கொண்டு இருக்கின்றாள்,அர்ஜூனால் மட்டுமே! படிக்கும் வயதில் திருமணம், இப்போது கர்ப்பம் வேறு. சக்திவேலுக்கு பெண் குழந்தைகள் என்றாலே பிடிக்கும். அவள் என்றால் உயிர். எல்லாமே கற்றுக் கொடுத்து இருந்தான். கஜன் போல அவளையும் டாக்டர் ஆக்க ஆசைப்பட்டான்.
"அப்பா, எனக்கு எஞ்சினியரிங் தான் பிடிச்சிருக்கு." என்றாள்.
மறுபேச்சு பேசவில்லை, கல்லூரியில் சேர்த்து விட்டான். அவள் ஆசைப்பட்ட எதையும் அவன் இல்லை என்று சொன்னது இல்லை. இன்று இப்படி ஒரு நிலைமையில் சக்திவேலை சந்திக்க வேண்டும் என்று நினைக்கவே மூச்செடுக்க முடியவில்லை. இந்த கணம் அர்ஜுனை நினைக்க ஆத்திரமாக வந்தது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு தந்தையிடம் அடைக்கலம் தேடலாமா என்றுதான் தோன்றியது.
ஆனால் குழந்தை என்று வந்து விட்டது. இருவரின் குடும்பங்களிலும் பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதும் நடந்து கொண்டு இருக்கின்றது. இரு குடும்பங்களுக்கும் மனஸ்தாபங்கள் வந்து விட்டால் என்ன செய்வது என்று தடுமாற்றம் வேறு. அர்ஜுன் பற்றி அவள் மனதில் என்ன கணிப்பு இருக்கின்றது என்று அவளுக்கே தெரியாத நிலைதான். அவன் மீது வெறுப்பு நிறையவே இருக்கின்றது. ஆனால் மேனியளவில் ஒன்றிப் போய் விடுகின்றாள். அதுகூட அவன் வலுக்கட்டாயமாக அவளை ஆரம்பத்தில் ஒன்ற வைத்து இருக்கின்றான்.
இப்போதெல்லாம் அவன் முத்தத்தையும் அணைப்பையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள் என்பது கசப்பான உண்மை. அது அவனுக்கும் தெரியும். சில சமயம் தன்னையும் மீறி அவனிடம் நெருக்கத்தை நாடி இருக்கின்றாள். நினைக்கும் போதே தன் மீது எரிச்சலாக வந்தது. வெட்கத்தை விட்டு நெருங்கி இருக்கின்றாள்.
சற்று முன்னர் கூட முத்தமிட்டாளே? உடலளவில் உணர்வுகளிடத்தில் அந்தளவு பலவீனமாக இருக்கின்றோமா என்று நினைக்க நினைக்க, தன்னை நினைத்தே ஒரு அருவருப்பு. என்னவெல்லாம் அவளை செய்து இருக்கின்றான். அத்தனை பேர் மத்தியில் இதழ் அணைத்து இருக்கின்றான். அதனை புகைப்படம் வேறு எடுத்து இருக்கின்றான். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து இருக்கின்றான். வலுக்கட்டாயமாக அவளை அடைந்தும் இருக்கின்றான்.
இதனை எல்லாம் மறந்துவிட்டு அவன் தொடுகையை உடல் நாடுகின்றதே என்று, யோசிக்கும் போதே ஆதங்கம் அவளுக்கு. காதல் என்கின்ற ஒன்று அவன் மீது கண்டிப்பாக இல்லை. ஈர்ப்பு என்று வேண்டும் என்றால் சொல்லலாம். கடமையும் பயமும் சேர்ந்த ஒரு வாழ்க்கை. மனரீதியான சந்தோஷம் கொஞ்சமும் இல்லை. ஆனால் அவன் சந்தோஷமாக இருக்கின்றான். நினைக்கவே எரிச்சலாக இருந்தது. வாழ்க்கை முழுவதும் இப்படிதானா என்று நினைக்க கோபமும் வந்தது.
கல்யாண மண்டபம் நெருங்க நெருங்க, அவள் இதயம் வேகமாக துடிப்பதை அவளால் தடுக்கவே முடியவில்லை.