நிலவு 45
அன்று எல்லோரும் சந்தோஷமாக பேசிவிட்டு கிளம்பியும் விட்டார்கள். சக்திவேலின் தோப்பு வீட்டில்தான் பார்த்தீபனின் குடும்பத்தினர் தங்கி இருந்தனர்."கல்யாணத்திற்கு அர்ஜுனுக்கு சொல்ல வேணாமா?" என்று லாவண்யா கேட்க, "அவனா வரணும், சொல்லி வர்ற உறவா அது?" என்று பைரவி ஆதங்கப்பட,
"சொல்லிடுவோம் அண்ணி, அப்புறம் அதுவும் குறையா வந்து நிற்கும்." என்று சொன்னான் இனியன்.
"எதுக்கெல்லாம் பயப்பட வேண்டி இருக்கு..." என்று அவன் மனைவி துளசி சலித்துக் கொள்ள,
சுகானா, "நான் ராம் கூட நாளைக்குப் போய் கார்ட் கொடுத்துட்டு வர்றேன்." என்றாள்.
அனைவரிடமும் மௌனம் தான்.
கபிலனோ அங்கே அலைபேசியுடன் அமர்ந்து இருந்த ஜீவிதனிடம், "உனக்கு கல்யாணம் பத்தி ஒன்னும் சொல்லணும்னு இல்லையாடா?" என்று கேட்க,
இதழ்களைப் பிதுக்கியவனோ, "அந்த பொண்ண பிடிச்சு இருக்கு, சந்தோஷமா வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன் அவ்ளோதான்." என்றான்.
இதற்கு மேல் யார் என்ன பேசிவிட முடியும்?
"நாளைக்கு போய் ஜீவிதனுக்கு கல்யாண உடுப்பெல்லாம் எடுக்கணும்." என்று லாவண்யா சொல்லிக் கொண்டாள்.
***
அன்று இரவு கட்டிலில் சாய்ந்து கண் மூடி அமர்ந்து இருந்தாள் பல்லவி. உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல களைப்பாக இருந்தது. கால் வேறு வீங்கி இருந்தது. அவள் வைவாவுக்கு வேறு படிக்க வேண்டும். கையில் புத்தகம் இருந்தது.
அறைக்குள் வந்த கஜனோ, "ஆர் யூ ஓகே?" என்று கேட்டுக் கொண்டே அவள் அருகே அமர, "ஓகே." என்றாள் மெதுவாக கண்களை திறந்து கொண்டு.
அவளை ஆராய்ச்சியாக பார்த்தவன் விழிகள் அவள் கால்களில் படிய, "கால் வீங்கி இருக்கா?" என்று கேட்டுக் கொண்டே அவள் பாதம் அருகே நகர்ந்து அமர்ந்தான்.
"ம்ம்..." என்று சொல்ல, கையினால் பாதத்தை அவன் அழுத்திப் பார்க்க, "ஐயோ!" என்று அவள் காலை இழுக்க முயல, "ப்ச்... ஃபார் யோர் கைண்ட் இன்ஃபர்மேஷன் நான் டாக்டர்மா." என்றான்.
"சாரி!" என்றாள் தயக்கமாக.
இருபக்கமும் தலையாட்டி சிரித்துக் கொண்டே, "இந்த மெட்டியையும் கொலுசையும் கழட்டிடுறேன், ரொம்ப டைட்டா இருக்கு." என்று சொல்ல,
அவளோ, "அது..." என்று தடுமாற, "இதுல எல்லாம் நம்பிக்கை வைக்காத, உன்னை டெலிவரிக்கு கொண்டு போற நேரம், தாலி எல்லாம் கழட்டி தான் வைக்கணும்." என்று சொல்ல, மெலிதாக சிரித்தவள், "சரிதான்..." என்றாள்.
அவனும் அவள் காலில் இருந்த மெட்டியையும் கொலுசையும் கழட்டியவன், அதனை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்து விட்டு, மீண்டும் வந்து அமர்ந்து பாதங்களை மெதுவாக அழுத்தி விட்டான். அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
பாசமானவன், அக்கறையானவன், ஆளுமையானவான், அன்பானவன், எத்தனையோ அழகான பக்கங்கள் உடையவன். அர்ஜுன் விஷயத்தில் அவளை ஒரு வார்த்தை கூட அவன் சொன்னது இல்லை. அவன் குடும்பத்தையும் பேச விட்டது இல்லை. யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்?
விழிகளை உயர்த்தி அவளைப் பார்த்தவன், "என்னையே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? படிம்மா..." என்றான்.
அவள் குரல் தழுதழுத்தது, "தேங்க்ஸ்!" என்றாள்.
"எதுக்கு?" என்று அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே கேட்க, "எல்லாத்துக்கும்..." என்று அவள் சொல்ல, "ரொம்ப எமோஷ்னலா இருக்க..." என்றான்.
"ம்ம்..." என்று மென் சிரிப்புடன் சொல்லி படிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவனும் அவள் காலினை கொஞ்ச நேரம் மசாஜ் செய்துவிட்டு, அவளுக்காக டீ போட்டு கொண்டு வந்து நீட்ட, "ஐயோ இதெல்லாம் நீங்க எதுக்கு பார்க்கிறீங்க?" என்று கேட்டாள்.
"ராகவி படிக்கும் போது போட்டு கொடுப்பேன், இப்போ உனக்கு பண்ணுறேன் அவ்ளோதான்." என்று சாதாரணமாக சொல்லி விட்டு படுக்க,
"நான் வெளியே இருந்து படிக்கிறேன், நீங்க தூங்குங்க." என்று அவள் எழ முற்பட, எட்டி அவள் கையைப் பற்றியவன், "கம்ஃபர்ட்டபிளா இருந்து படி, எனக்கு இந்த லைட் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. எமர்ஜென்சி டைம்ல ஹாஸ்பிடல்ல இத விட பெரிய வெளிச்சத்துல எல்லாம் நான் தூங்கி இருக்கேன்." என்று சொன்னான்.
அவளும், "ம்ம்..." என்று சொல்லிக் கொண்டே படித்தவள், அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
சொன்ன போலவே சற்று நேரத்தில் அவனும் தூங்கி இருந்தான். அவளும் படித்து முடித்து விட்டு லைட்டை அணைத்தவள் தூங்கி இருந்தாள். மனதில் ஏதோ ஒரு அமைதி.
கஜனை என்ன மனநிலையில் அவள் திருமணம் செய்தாள் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது மனமெல்லாம் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. மனம் இதமாக இருந்தது.
***
அடுத்த நாள் ராம்குமாரை அழைத்துக் கொண்டு சுகானா, அர்ஜுன் வீட்டுக்கு வந்து இருந்தாள்.
"நீ போ, நான் வரல..." என்றான் அவன். ஏற்கனவே அர்ஜுன் முகத்தில் அடித்த போல பேசியதால் உண்டான நெருடல் அது...
வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், உள்ளுக்குள் உறுத்தல் இருந்தது.
"ராம்..." என்றாள் அவள் கெஞ்சுதலாக.
"பேசுனா பிரச்சனை ஆயிடும், புரிஞ்சுக்கோ." என்று சுகானா சொல்ல, அவளும் புரிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி சென்றாள்.
கையில் கல்யாண பத்திரிகை இருந்தது. தயக்கத்துடன் வீட்டை நோக்கி சென்றவள் கதவைத் தட்ட, அர்ஜுன்தான் கதவைத் திறந்தான்.
அவளைப் புருவம் சுருக்கிப் பார்க்க, "கல்யாணத்துக்கு வந்திடு அர்ஜுன்." என்று சொல்லி பத்திரிகையை நீட்டினாள்.
இதழ்களைப் பிதுக்கியவன், "பத்திரிகை வச்சு வர்ற அளவுக்கு தூரமா போய்ட்டேன்..." என்று சொல்லிக் கொண்டே அதனை வாங்க, "தூரமா போனது நீதான், நாங்க ஒன்னும் தள்ளி வைக்கல." என்று சொல்ல,
"அதுதான் பல்லவி கல்யாணத்துல பார்த்தேனே...?" என்று சொல்லிக் கொண்டே, "என் பொண்டாட்டியையும் கூட்டி வரணுமா என்ன?" என்று கேட்டான்.
வம்பிழுக்கவே பேசுகின்றான் என்று அவளுக்கு தெரியும்.
"மிஸ்டர் அண்ட் மிஸஸ் அர்ஜுன்னு தான் பேர் போட்டு இருக்கேன், பாரு." என்றாள்.
"ஓஹ்! ஓகே..." என்று சொல்லிக் கொண்டே எட்டி வெளியே நின்ற காரை பார்த்தவன், "மாப்பிளை கோச்சுக்கிட்டு உள்ளேயே இருக்கார் போல...?" என்றான் கிண்டலாக.
அவளை உள்ளே அவன் கூப்பிட கூட இல்லை. வெளியே நிற்க வைத்தே பேசிக் கொண்டு இருக்க, "நீ இப்போ பேசுறதையும் என்னை நடத்துறதையும் நான் தாங்கிப்பேன். அவருக்கு என்ன அவசியம்?" என்று கேட்க,
சட்டென அர்ஜுனுக்கு ஒருமாதிரி ஆகிவிட, "சரி, உள்ள வா." என்றான்.
அவள் மீது பெரிய மனஸ்தாபம் எல்லாம் அவனுக்கு இல்லை.
அவளோ, "இல்ல, நான் கிளம்புறேன்." என்று சொன்னவள் விறுவிறுவென வெளியேற,
அவள் முதுகை வெறித்துப் பார்த்துவிட்டு உள்ளே சென்ற அர்ஜுனோ, அங்கே மேசையில் கல்யாண பத்திரிகையை வைத்துக் கொண்டு, அறைக்குள் இருந்து வெளியே வந்த ராகவியிடம், "கல்யாணத்துக்கு பத்திரிகை வச்சுட்டு போய் இருக்காங்க." என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டான்.
அவளும் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள்.
‘மிஸ்டர் அண்ட் மிஸிஸ் அர்ஜுன்.’ என்று இருந்தது. அவள் பெயர் கூட போடவில்லை. அவள் நின்று வேலை செய்ய வேண்டிய திருமணம்.
யாரோ ஒரு மூன்றாவது மனிதர் போல அழைப்பு வைத்து விட்டு சென்று இருக்க, உள்ளுக்குள் ஏதோ உடைவது போன்ற உணர்வு.
மேசையில் பத்திரிகையை வைத்துவிட்டு அறைக்குள் சென்றவள், கட்டிலில் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டாள்.
***
இதே சமயம், அடுத்த நாள் காலையிலேயே, "பல்லவி, இன்னைக்கு வெளிய போகலாம்." என்று கஜன் சொல்ல, "ம்ம், என்ன திடீர்னு?" என்று கேட்டாள்.
"கொஞ்சம் கடைக்கு போகணும்." என்று சொல்ல, அவளும் புறப்பட்டு இருந்தாள்.
புடவை கடைக்கு தான் அழைத்து வந்தான். காரை பார்க் செய்து விட்டு பல்லவியைப் பார்த்தவன், "நேத்ராவுக்கு கல்யாணத்துக்கு புடவையும் நகைகளும் வாங்கி கொடுக்க நினைச்சேன்." என்றான்.
அவளிடம் இதனை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சொன்னதும் அல்லாமல் அழைத்து வேறு வந்து விட்டான்.
பல்லவியுடன் சேர்ந்து அவளுக்கு பட்டுப்புடவையை எடுத்தவன், அவளுடன் நகைக் கடைக்கும் சென்று ஆபரணங்களை வாங்கிக் கொண்டு, நேத்ராவின் வீட்டுக்கு புறப்பட்டு இருந்தான்.
அவன் வரவை அவர்கள் வீட்டில் எதிர்பார்க்கவே இல்லை.
"கஜன் சொல்லாமலே வந்து இருக்க?" என்று நந்தினி கேட்க, "நேத்ராவை பார்க்க தான் அத்தை..." என்று பல்லவியுடன் ஹாலில் அமர, "டெலிவரிக்கு எல்லாமே ரெடியா?" என்று கேட்க,
மெலிதாக புன்னகைத்த பல்லவி, "எல்லாமே கஜன் பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கார், நான் எதுவும் பண்ணல." என்று சொல்ல,
அங்கே வந்த சுரேஷோ, "அவனே எல்லாம் பார்த்துப்பான், நீ கவலையே இல்லாமல் பிரசவத்துக்கு போகலாம்." என்று சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டாள்.
அறைக்குள் படுத்து இருந்த நேத்ரா முகத்தை கழுவிக் கொண்டு ஹாலுக்குள் வந்தாள். சிரிக்க தான் முடியவில்லை. கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டாள்.
கஜனோ எழுந்து கையை நீட்டி பல்லவியையும் எழ வைத்தவன், வாங்கி வந்த பொருட்களை பல்லவியிடம் நீட்டி கண்களைக் காட்ட, "நீங்களே கொடுக்கலாமே?" என்றாள்.
"நீயே கொடு." என்று அவன் சொன்னதுமே, அவளும் நேத்ரா அருகே நடந்து சென்று, "உனக்காக உன் மாமா வாங்குனது." என்று சொல்ல, "ரெண்டு பேரும் சேர்ந்தே வாங்குனது..." என்று திருத்தினான் கஜன்.
நேத்ரா அவனை ஒரு கணம் பார்த்து மென்மையாக புன்னகைத்து விட்டு, "தேங்க்ஸ்!" என்று சொல்ல, பல்லவி அவளை மெதுவாக அணைத்து விடுவித்தவள், "உன் நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பம்மா." என்றாள்.
சட்டென அவள் கண்கள் கலங்கிவிட, "ம்ம்..." என்று மட்டும் சொல்ல, அவர்களும் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி இருந்தார்கள்.
காரில் சென்ற சமயம், "அவளால சிரிக்க கூட முடியல கஜன், கட்டயப்படுத்திட்டோமோனு தோனுது." என்றாள் பல்லவி.
"அப்படியே விட முடியாது பல்லவி. அவளே மாறி வேற வாழ்க்கை எல்லாம் அவ்ளோ சீக்கிரம் அமைச்சுக்க மாட்டா. சில விஷயம் கஷ்டமா இருக்கும், ஆனா கடந்துதான் ஆகணும். எனக்கு ஜீவிதன் மேல நம்பிக்கை இருக்கு." என்று சொல்ல, பல்லவியிடம் பெருமூச்சு மட்டுமே.
அறைக்குள் வந்த நேத்ரா புடவையை எடுத்துப் பார்த்தாள். மெரூன் நிற புடவையில் அழகான மயில் வேலைப்பாடு இருந்தது. அதற்கு பொருத்தமான தங்க ஆபரணங்கள் வேறு. வருடிக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவளுக்கு, இந்த கல்யாணத்தை நினைத்தாலே அழுத்தமாக இருந்தது.
கஜன் பல்லவி திருமணத்தை ஏற்றுக் கொண்டு கடந்து விட்டாள் தான். ஆனால் இன்னொரு திருமணத்துக்கு செல்லும் அளவுக்கு அவள் மனநிலை சரியாகவில்லை. அதில் ஜீவிதனின் வாழ்க்கையும் அடங்கி இருந்தது. மாறுவாளா? இல்லையா? என்று அவளுக்கே தெரியாத நிலைதான். லாவண்யாவுடன் பேசியதில் இருந்து அழுத்தம் கூடிய உணர்வு. கஜனுக்காக தான் சம்மதித்து இருந்தாள். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் தான் இருக்கின்றாள். இப்போது தான் அவள் தந்தையின், கை வேலைப்பாடுகள் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனியை, எட்டிப் பார்க்க தொடங்கி இருக்கின்றாள்.
கல்யாணத்திற்கு பிறகு அதில் கவனம் முழுமையாக செலுத்த வேண்டும் என்று, உறுதியாக முடிவும் எடுத்துக் கொண்டாள் பெண்ணவள்.
***
கல்யாண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டன. அர்ஜுன், ராகவியை தவிர எல்லோரும் இணைந்துதான் திருமண வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். கஜனின் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. பார்த்தீபனின் குடும்பமும் அங்கே அடிக்கடி வந்து சென்று கொண்டு இருந்தது.
சக்திவேலோ, "வந்தனாவுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கோம் சம்பந்தி, நல்ல இடமா யாரும் இருந்தா சொல்லுங்க." என்று சொல்ல, அவனும் யோசித்துக் கொண்டே, "என்னோட தங்கச்சி முறையான பொண்ணு பத்தி சொல்லி இருக்கேன்ல வாணி..." என்று சொல்ல, "ஆமா..." என்று சக்திவேலும் சொன்னான்.
"அவளோட புருஷனோட அக்காவோட பையன் பெயர் வருண். அவனுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க, எப்படியும் வந்தனாவுக்கு முறைதான் வரும். பேங்க்ல வேலை பார்க்கிறான். ரொம்ப நல்ல பையன். என்கிட்ட சொல்லி இருந்தாங்க, எப்படியும் நம்ம சுகானா கல்யாணத்துக்கு வாணி வருவா. அப்போ வந்தனாவுக்கு பேசி பார்க்கலாம்." என்று சொன்னது, அந்த வழியில் வந்த வந்தனா காதில் விழுந்து தொலைக்க, அவளுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.
அவள் மனதில் இருப்பதோ விஜய். வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்டும் அளவுக்கு அவளுக்கு மனமும் இல்லை. வீட்டில் விஜய்யை காதலிப்பதை சொல்லும் அளவுக்கு தைரியம் இல்லை. அவன் காதலிக்கவும் இல்லையே, எப்படி சொல்ல முடியும்? வேகமாக அறைக்குள் நுழைந்தவளுக்கோ தலை வலிக்கும் உணர்வு.
இத்தனை நாட்கள் கஜனின் திருமணம் நடக்காமல் இருந்ததால், அடுத்தவர்களின் திருமணம் பற்றி யாரும் பேச்சு எடுக்காமல் இருந்தார்கள். இப்போது அவசரமாக எல்லா திருமணங்களும் நடந்து முடிந்து இருந்தன.
ராம்குமார் மற்றும் நேத்ராவின் திருமணம் முடிந்தால் வந்தனாவின் திருமணம்தான் அடுத்தது. சற்று பதட்டமாக இருந்தது. முடியாது என்று சொல்ல அவளிடம் காரணமே இல்லை. விஜய் அவளிடம் சம்மதம் சொல்லி இருந்தால் கூட, ஏதாவது செய்து இருக்கலாம். ஒருதலை காதலை வைத்து என்ன செய்துவிட முடியும்?
ஜன்னல் அருகே வந்து நின்றவள் விழிகளோ, அங்கே திருமண ஏற்பாட்டை செய்து கொண்டு நின்ற விஜய் மீது படிந்தது. வேஷ்டியும் பனியனும் அணிந்து இருந்தான். வேஷ்டியை மடித்து கட்டி இருந்தான். அவனே இறங்கி துப்பரவு செய்வது தொடக்கம் எல்லாமே பார்த்துக் கொண்டு இருந்தான். வியர்த்துப் போய் இருந்தது.
அவனையே பார்த்து இருந்தவளுக்கு ஒரு வகை வேகம் வந்து சேர, தன்னை கண்ணாடி முன்னே வந்து நின்று பார்த்தாள். அன்று ஆசைக்கு நீல நிற புடவைதான் அணிந்து இருந்தாள்.
தலையில் பூவும் வைத்து இருக்க, மெலிதாக கலைந்து இருந்த முடியை கையினால் சரி செய்துவிட்டு, விறுவிறுவென அவனைத் தேடி சென்று விட்டாள்.