ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 44

pommu

Administrator
Staff member

நிலவு 44

சக்திவேல் வீட்டில் விருந்து தடல் புடலாக இருந்தது. ராம்குமாருக்கு சுகானாவைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை. ஒரு முத்தம் கொடுத்தால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது. அவள், அவன் பக்கமே திரும்பவில்லை. அவளை சுற்றி அவன் உறவுகள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“இருடி... கல்யாணத்துக்கு அப்புறம் வச்சுக்கிறேன்.” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.

நந்தினியும் லாவண்யாவும் கூட பேச ஆரம்பித்து விட்டார்கள். சம்பந்தி ஆயிற்றே?!

இரு குடும்பங்களும் நெருக்கமாகிக் கொண்ட போதிலும் நேத்ரா, வீட்டின் வெளியே மாமரத்தில் இருக்கும் ஊஞ்சலில் தான் தனியாக அமர்ந்து இருந்தாள். திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாள். ஆனால் மனம் எதிலும் லயிக்கவே இல்லை.

அவள் அருகே வந்து அமர்ந்த வந்தனா, "என்னடி, தனியா வந்து இருக்க?" என்று கேட்க, "மனசு ஒருமாதிரி இருக்கு வந்தனா..." என்றாள் அவள்.

“இங்க பாரு நேத்ரா, அண்ணாவை மறக்கிறது கஷ்டம்தான். ஆனா வேற வழி இல்லையே?" என்று சொல்ல, "எனக்கு புரியுது, ஆனா எனக்கு டைம் தராம கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது தான் நெருடலா இருக்கு." என்றாள்.

"எல்லாம் சரி ஆகும் நேத்ரா." என்று அவள் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்க, நேத்ராவை தூர இருந்து பார்த்துக் கொண்டே நடந்து வந்த ஜீவிதனோ, வெளியே இருக்கும் சீமெந்து கட்டில் அமர்ந்து அலைபேசியில் விளையாடிக் கொண்டு இருந்த, நவநீதன் அருகே வந்து அமர்ந்தான்.

நவநீதனோ அலைபேசியை வைத்துவிட்டு ஜீவிதனைப் பார்த்தவன், "சொன்ன போலவே பண்ணிட்டீங்க போல?" என்று கிண்டலாக கேட்க, "டேய்..." என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

"நான் கூட விளையாட்டுக்கு சொல்றீங்கனு நினைச்சேன், ஆனா உண்மையாவே கல்யாணம் தானா?" என்று கேட்க, "ஏன்டா...? ஏன்...?" என்று ஜீவிதன் அவனிடம் சிரித்தபடி கேட்க,

"என் க்ரஷ்ஷு அவ... ஒரு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சான் போல இருக்கலாம்னு கற்பனை எல்லாம் பண்ணி வச்சு இருந்தேன்." என்று சொன்னவனை மேலிருந்து கீழ் பார்த்தபடி அவன் தோளில் கையைப் போட்டவன்,

"இதுவரைக்கும் நீ சைட் அடிச்சு இருக்கலாம் தம்பி, இனி அவ பக்கம் கண்ணு போச்சுன்னா கண்ணை நோண்டிடுவேன்." என்றான்.

"அட! பொசசிவ்வா?" என்று கேட்க, "அப்படி தான் வச்சுக்கோயேன்..." என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் ஜீவிதன்.

"இப்போ எங்க?" என்று கேட்டான் நவநீதன்.

அவனை நோக்கி கொஞ்சமாக குனிந்தவன், "அடுத்த வாரம் கல்யாணம்டா, கொஞ்சமாச்சும் கரெக்ட் பண்ண விடுடா." என்று சொல்ல,

சத்தமாக சிரித்த நவநீதனோ, "உங்கள நான் வேற பெரிய லெவல்ல கற்பனை பண்ணி வச்சு இருந்தேன். இப்படி பொண்ணு பின்னாடி போறீங்க?" என்று கேட்டான்.

"ஆஹ்! நான் சராசரி ஆம்பிளைதான், போதுமா?" என்று கேட்டுக் கொண்டே ஊஞ்சல் அருகே சென்றான்.

தங்களை நோக்கி வரும் ஜீவிதனைக் கண்டதுமே சட்டென எழுந்து நின்று விட்டாள் வந்தனா.

அவளைப் பார்த்து விட்டு ஜீவிதனை நேத்ரா பார்க்க, "நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்டி." என்று சொல்லிக் கொண்டே அவள் ஓடிச் சென்றாள்.

"கொஞ்சம் நில்லு..." என்று நேத்ரா கத்தியது காற்றில்தான் கரைந்து போனது.

தனக்கு முன்னே வந்து நின்றவனை நேத்ரா ஏறிட்டுப் பார்க்க, ஊஞ்சலில் கயிறைப் பிடித்துக் கொண்டு மரத்தில் சாய்ந்து நின்றவனோ, "ஆர் யூ ஓகே?" என்று கேட்டான்.

"இல்லன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?" என்று கேட்டாள்.

மெலிதாக சிரித்துக் கொண்டே, "எதுவும் பண்ண மாட்டேன்..." என்றான்.

"அப்போ எதுக்கு கேக்கிறீங்க?" என்று கேட்டாள்.

"சும்மா கேட்கவும் கூடாதாடி?" என்றான்.

"இல்ல, கூடாது..." என்று சொல்லிக் கொண்டே முகத்தைத் திருப்ப, "கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணாச்சே, கொஞ்சம் பேசி பழகலாம்னு பார்த்தா ரொம்பதான் பண்ணுற...?" என்றான்.

அவனை இப்போது ஆழ்ந்து பார்த்தவள், "இப்போவும் உங்களுக்கு டைம் இருக்கு, தப்பிச்சிடுங்க." என்றாள்.

முத்துப் பற்கள் தெரிய சத்தமாக சிரித்தவன் கண்களை சிமிட்டி, "அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர, அவன் முதுகை வெறித்துப் பார்த்தாள் பெண்ணவள்.

சற்று நேரத்தில் அவள் அருகே வந்து லாவண்யா அமர, சட்டென எழுந்து நின்று கொண்டாள் நேத்ரா.

"இரும்மா..." என்று சொன்ன லாவண்யா, அவள் கையைப் பிடித்து அருகே அமர வைக்க அவளுக்கோ தயக்கம்.

ஜீவிதனிடம் பேசுவது போல பேச முடியாது.

அவள் கையை அழகாக பற்றிக் கொண்டே, "உன் மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு புரியுது. உனக்கு பிடிக்கலன்னா ஏன்டா கஷ்டப்படுத்துற அப்படின்னு ஜீவிகிட்ட கேட்டேன். பிடிக்க வச்சிடுவேன்னு அவ்ளோ உறுதியா சொன்னான்." என்று சொல்ல, என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிப் போனாள் நேத்ரா.

வாயில் வார்த்தைகளும் வரவில்லை.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல..." என்றாள் நேத்ரா தட்டுத் தடுமாறி.

"ஜீவி ரொம்ப நல்ல பையன். எல்லாத்துலயும் ரொம்பவே நிதானம். உன்னை எப்போவும் கஷ்டப்படுத்த மாட்டான்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. என் பையன ரொம்ப காக்க வச்சுடாத, ஒரு அம்மாவா இத மட்டும் தான் உன்கிட்ட கேக்கிறேன்." என்று சொன்னதுமே, சற்று திணறிதான் போனாள்.

தனது நிலையில் இருந்து மட்டுமே இவ்வளவு நேரம் யோசித்து இருக்கின்றாள். இதில் அவள் வாழ்க்கையும் ஜீவிதனின் வாழ்க்கையும் மட்டும் இல்லை, அனைவரின் நிம்மதியும் இருந்தது.

தனது மனதை மாற்றி அவனுடன் வாழ்ந்தே ஆக வேண்டும் என்கின்ற நிலைக்கு, வலுக்கட்டாயமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருக்கின்றாள்.

கஜன் சொன்னதற்காக, அவன் குற்ற உணர்வில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக, கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னாலும், இப்போது அவளுக்குள் நிறைய குழப்பங்கள் உருவாக ஆரம்பித்து விட்டது.

மாற்றம் என்பது தன்னில் வருமா என்றே அவளுக்கே தெரியாது. மாறவே மாட்டேன் என்கின்ற மனநிலையில் இருந்து, மாறி ஆக வேண்டும் என்கின்ற மனநிலைக்கு அவள் இழுத்து செல்லப்பட்டுக் கொண்டு இருந்தாள்.

"ரொம்ப எல்லாம் காக்க வைக்க மாட்டேன் அத்தை." என்று தலையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னாள்.

அவளது அத்தை என்கின்ற அழைப்பை மென் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட லாவண்யா, அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு நகர்ந்துவிட, அவள் முதுகை வெறித்துப் பார்த்த நேத்ராவுக்கு மயக்கம் வராத குறைதான்.

சற்று நேரத்தில் துளசி, பைரவி மற்றும் பல்லவி என மூவரும் காரில் வந்து சேர, சக்திவேலும் பார்த்தீபனும் அவர்களையே பார்த்துக் கொண்டு முன்னறையில் அமர்ந்து இருந்தார்கள். இருவருக்குமே தத்தமது வாரிசுகள் மீது கோபம் இருந்தாலும், அக்கறையும் சேர்ந்தே இருந்தது. காட்டிக் கொள்ளவில்லை, அவ்வளவு தான்.

உள்ளே வந்த பைரவி, பார்த்தீபன் அருகே அமர்ந்ததுமே, "என்னவாம் உன் பையன்?" என்று கேட்டான் பார்த்தீபன்.

"இருக்கான், அதே முரட்டு பிடிவாதம் அப்படியே இருக்கு." என்று சொல்ல, "அந்த பொண்ண ஒழுங்கா பார்த்துக்கிறானா?" என்று கேட்க, "ம்ம்... நல்லா பார்த்துக்கிறான். நான் போனதால எதுவும் பேசாம வெளியே போய்ட்டான்." என்று சொல்ல,

"அவன் கொஞ்சம் தன்மையா பேசுனா நல்லா இருக்கும்." என்று தனது ஆதங்கத்தையும் சேர்த்து சொன்னான்.

***

அறைக்குள் சென்ற துளசியைத் தேடி சென்றான் சக்திவேல். அழுவாள் என்று தெரியும். அதனால் தான் தேடியே வந்து விட்டான். அவன் நினைத்தது போலவே கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள்.

அவள் அருகே அமர்ந்தவனோ, "செல்லம்மா!" என்று சொல்ல, கண்ணீருடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "அவளை நான் குழந்தை போலதான் பார்த்து இருக்கேன். அவளுக்கே குழந்தைன்னு சொல்லும் போது சந்தோஷமா இருந்தாலும், அவ தனியா இருக்கிறத நினைச்சு ஒருமாதிரியா மனசு கிடந்து அடிச்சுக்குது." என்றாள்.

அவளை இழுத்து மார்பில் சரித்துக் கொண்டவன், "ப்ச்! இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க செல்லம்மா? அந்த பையன் ஏதும் சொன்னானா?" என்று கேட்டான்.

தனது மனைவிக்கு யாரும் எதுவும் சொல்லிவிட கூடாது என்கின்ற கவனம் அவனிடம். மாறியும் பேச மாட்டாள் என்று அவனுக்கும் தெரியும் தானே?

அவளும் கண்களைத் துடைத்துக் கொண்டே, "இல்ல, நாங்க போனதுமே அந்த பையன் கிளம்பிட்டான். அவங்க அம்மா முன்னாடி வாயை திறக்கவே இல்லை." என்று சொல்ல,

"உலக அதிசயமா இருக்கு..." என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

அவனை ஏறிட்டுப் பார்த்து முறைத்த துளசி, "என்ன இருந்தாலும், நம்ம மாப்பிள்ளை மச்சான். இப்படி கிண்டல் பண்ணிட்டே இருக்காதீங்க." என்று சொல்ல,

"நான் கிண்டல் பண்ணலடி, சும்மா சொன்னேன்." என்று சொல்ல, "சரிதான்..." என்று இதழ்களை சுளித்துக் கொண்டாள்.

அவள் முகத்தைத் தாங்கியவன் அவள் விழிகளுடன் விழிகளைக் கலக்க விட்டபடி, "சந்தோஷமா இருக்கியா?" என்று கேட்க, "அவளை பார்த்த பிறகுதான் மனசு நிறைவா இருக்கு." என்றவளோ மேலும், "உங்களுக்கு பார்க்க தோனலையா?" என்று கேட்டாள்.

"தோனாம இருக்குமா? அர்ஜுன் ஏதும் பேசுனா நானும் ஏதும் பேசிடுவேன். எதுக்கு பிரச்சனைனு தான் விலகி இருக்கேன். ராம் கல்யாணத்துக்கு வர்ற நேரம் பார்த்துக்கலாம்." என்று சொல்ல, அவளும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள்.

கஜன், விஜய் எல்லாம் வெளியே அமர்ந்து அப்போதுதான் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். எல்லோருக்கும் விருந்து பரிமாறி முடிந்ததும்தான் அவன் ஆட்களுடன் அமர்ந்து கஜன் சாப்பிட்டான்.

அவன் விழிகளோ வீட்டினுள் நுழைய போன பல்லவியில் படிய, "பல்லவி!" என்று அழைத்தான்...

அவனுக்கு ராகவி வீட்டில் நடந்தது என்ன என்று தெரிந்தாக வேண்டும். தாமதமாக கேட்கும் அளவுக்கு பொறுமை இல்லை.

அவளும் அவன் அழைத்ததும் அவ்விடம் செல்ல, "உட்காரு." என்று தன் அருகே இருந்த இருக்கையைக் காட்ட, அவளும் மென் புன்னகையுடன் அமர்ந்தாள்.

விஜய் அவளைக் கண்டதுமே தலையை குனிந்து கொள்ள, அதனை கவனித்தாள் பல்லவி.

எப்போதுமே அவளைக் கண்டாலே தலையைக் குனிந்து கொண்டே செல்வான்.

இன்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்தவள் கஜனிடம், "ஏன் இவர் என்னை பார்த்தாலே தலையை குனிஞ்சுக்கிறார்?" என்று கேட்க,

கஜனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "உருட்டு கட்டையால அடிச்சிடுவனு பயம்தான்..." என்று சொல்ல,

விஜய்யோ, "அண்ணன்..." என்று சிரித்துக் கொண்டே அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

கஜனோ அவனை சிரித்தபடி பார்த்துவிட்டு பல்லவியைப் பார்த்தவன், "உன் தம்பிக்கு அடிச்சான்ல, அதுல இருந்து உன்னை பார்த்ததும் தயக்கம்." என்று சொல்ல,

பல்லவியும், "ஓஹ்..." என்று சொன்னவளோ, "நானும் தானே அடிச்சேன்." என்று சொல்ல,

"அது அவனுக்கு எறும்பு கடிச்சது போல இருந்து இருக்கும்." என்று சொல்லிக் கொண்டே விஜய்யைப் பார்க்க, "அப்படி எல்லாம் இல்லை, வலிச்சுது தான் அண்ணி..." என்று சொல்ல, "ஐயோ! சாரி..." என்றாள் அவள் அவசரமாக.

கஜனோ, "டேய் பொய் சொல்லாதடா..." என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டவன் பல்லவியிடம், "போன இடத்துல என்ன ஆச்சு?" என்று கேட்டான்.

"நான் சொன்னது போலவே அர்ஜுன் வாயை திறக்கலை. வெளியே ரெடி ஆகி போய்ட்டான்." என்று சொல்ல,

கஜனோ, "ஓஹ்! அப்போ இனி அத்தைதான் நம்ம ட்ரம்ப் கார்ட்..." என்று சொல்ல, பல்லவியும் சிரித்துக் கொள்ள, "சாப்பிட்டியா?" என்று கேட்டான்.

"ராகவி கூட இருந்து கொஞ்சமா சாப்பிட்டேன். அவ்ளோ நேரம் பசிக்கல, இப்போ தான் பசிக்குது." என்று சொன்னாள். சாப்பிட்டுக் கொண்டு இருந்த எல்லோரும் சட்டென சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஏறிட்டுப் பார்த்தார்கள்.

அவர்களைப் பார்த்த கஜனோ சாப்பிடும்படி சைகை செய்ய, கொஞ்சம் சங்கடமாக தான் சாப்பிட்டார்கள்.

"சரி, சாப்பிடு." என்று சொல்லி அவன் ஊட்டிவிட போக, "ஐயோ! வேணாம்..." என்றாள் அவசரமாக.

"சாப்பிடுன்னு சொல்றேன்ல...?" என்று சற்று அதட்ட, அவளும் மறுக்க முடியாமல் அவன் ஊட்டிவிட சாப்பிட்டாள்.

அவன் சாப்பிடவே இல்லை. அவளுக்குத் தான் சாப்பிட கொடுத்தான்.

"நீங்க சாப்பிடலையா?" என்று கேட்டாள்.

"நீ சாப்பிட்டு முடிய நான் சாப்பிடுறேன்." என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு ஊட்டி விட்டான்.

அவன் இந்தளவு நெருக்கமாக அவளுடன் இருப்பது இல்லை. அவளுக்கே சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த காட்சியே ஓவியமாக இருக்க, வீட்டினுள் இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்த பைரவி மற்றும் பார்த்தீபனின் விழிகள் நிறைவாக புன்னகைத்துக் கொண்டன.

ஊஞ்சலில் இருந்த நேத்ராவின் விழிகளிலும் இந்த காட்சி படிய, அவளுக்கு வருத்தமோ வலியோ இருக்கவில்லை. ஏதோ ஒரு நிறைவான சந்தோஷம்தான் தோன்றியது.

அவன் சந்தோஷமாக இருக்கின்றான். பல்லவியை சந்தோஷமாக வைத்து இருக்கின்றான். அதுவே அவள் இதழ்களில் புன்னகையை ஏற்படுத்த, அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்த நேத்ராவை, சற்று தொலைவில் இருந்து பார்த்த ஜீவிதனோ, “இதுதான்டி உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கவே காரணம்.” என்று இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டான்.

அவளும் சாப்பிட்டு முடித்தவள், "நீங்க சாப்பிடலையா?" என்று கேட்க, "நான் சாப்பிடுறேன், உனக்கு போதுமா?" என்று கேட்க,

"ம்ம், போதும்." என்று சொல்ல, "சரி, அப்போ உள்ளே போ." என்று சொல்ல, அவளும் அங்கிருந்து நகர, அவனோ பெருமூச்சுடன் அங்கே இருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தான்.

"சாப்பாடு ஆர்டர் பண்ணட்டுமா அண்ணன்?" என்று விஜய் கேட்க, "பசி இல்லடா." என்று சொல்லிக் கொண்டே தட்டைக் கழுவ சென்றான்.

பல்லவி நீர் அருந்துவதற்காக சமையலறைக்குள் நுழைந்த சமயம், அங்கே கழுவிய உணவு சமைத்த பாத்திரங்கள் எல்லாம் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டு இருந்தாள், அங்கே வேலை செய்யும் பெண் கமலா.

"அக்கா, சாப்பாடு முடிஞ்சுதா?" என்று அவசரமாக கேட்டாள் பல்லவி.

கஜனிடம் இருந்த உணவை தானே அவள் சாப்பிட்டு முடித்தாள்.

"ஆமா அக்கா, எல்லாருக்கும் போட்டு கொடுத்து மீதி இருந்ததை நாய்க்கும் வச்சாச்சு. இனிதான் சமைக்கணும்." என்று சொல்ல, அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.

"கொஞ்சமும் இல்லையா?" என்று கேட்டாள்.

"இல்லையே..." என்று சொல்ல, சட்டென ஒருமாதிரி ஆகிவிட்டது.

இப்போது அவன் அனைவரின் முன்னே ஊட்டிவிட்ட காரணம் புரிந்தது. அவளிடம் உணவைக் கொடுத்து இருந்தால் அவள் வேண்டாம் என்று இருப்பாள். தானே போட்டு சாப்பிடுவதாக சொல்லி இருப்பாள். அவளை சமாளிக்கவே இப்படி செய்து இருக்கின்றான்.

“டூ பிரில்லியண்ட்.” என்று இதழ்களுக்குள் கடுப்பாக சொல்லிக் கொண்டாள்.

விறுவிறுவென வெளியே வந்தவள் விழிகளை சுழற்றி கஜனைத் தேடினாள். அவன் கையை கழுவிவிட்டு நவநீதன் அருகே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தான்.

கஜன் முன்னே வந்து நின்றவள், "எதுக்கு இப்படி பண்ணுனீங்க? நீங்க சாப்பிடல தானே?" என்று கேட்க, நவநீதன் சட்டென ஏறிட்டுப் பார்த்தான்.

"உங்க அண்ணா கூட நான் சண்டை பிடிக்க போறேன்." என்று சொல்ல, "சண்டையை நான் பார்க்க கூடாதா அண்ணி?" என்று கேட்டான் அவன்.

கஜனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு, "டேய், போடா..." என்று சொல்ல, அவனும் தோள்களை உலுக்கிக் கொண்டே, "ஓகே." என்று சொல்லிக் கொண்டே எழுந்து கொள்ள,

"உட்காரும்மா." என்று சொல்லி அவள் கையைப் பற்றி அருகே அமர வைத்தவன், அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே, "பசிக்கல." என்றான்.

"பொய் சொல்லாதீங்க." என்றாள்.

"நிஜமா பசிக்கலடி..." என்று சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே எழ முற்பட, "இப்போ என்ன?" என்று கேட்டுக் கொண்டே அவள் கையைப் பற்றி மீண்டும் அமர வைத்தான்.

"நீங்க சாப்பிடாம எனக்கு எதுக்கு சாப்பாடு கொடுத்தீங்க? நான் ராகவி வீட்ல சாப்பிட்டேன் தானே?" என்று சொல்ல, "ஆஹ்! நான் ஒன்னும் உனக்காக கொடுக்கல, என் குழந்தை பாவம்..." என்றான்.

எப்படி பேசினால் அவள் வழிக்கு வருவாள் என்று அவன் அறிந்து இருக்க, அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், "இப்படி பேசியே என் வாயை அடைச்சிடுங்க..." என்றாள்.

மெலிதாக கண் சிமிட்டி சிரித்தவன், "பசிச்சா, கடைல கூட வாங்கி நான் சாப்பிடுவேன். உனக்கு கடை சாப்பாடு வாங்கிதர எனக்கு இஷ்டம் இல்லை. உன்னை விட்டுட்டு நான் சாப்பிட்டேன்னு தெரிஞ்சா, என் அப்பாவே என்னை கல்லை கொண்டு அடிப்பார். என்னால அவர் கையால அடி எல்லாம் வாங்க முடியாது." என்று சொல்ல,

அவளுக்கோ அதுவரை இருந்த அழுத்தம் அவன் பேச்சில் சட்டென இறங்க, இதழ் பிரித்து சத்தமாக சிரித்துக் கொண்டே, "ரொம்ப தான் பயந்தவர் போல..." என்று சொல்ல, "இல்லையா பின்ன?" என்று கேட்டான்..

இல்லை என்கின்ற தோரணையில் கண்களை சிமிட்டி சொல்லிக் கொண்டாள் பல்லவி.
 
Top