ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 43

pommu

Administrator
Staff member

நிலவு 43

ஹாலுக்குள் வந்தவனோ, "சுகானா கல்யாணம் முடிய, ஒரே மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்." என்று சொன்னான்.

சக்திவேலோ, "உங்களுக்கு யாருக்கும் ஆட்சேபனை இல்லன்னா சுகானா, ராம் கல்யாணத்தோட சேர்த்தே வச்சுக்கலாமே? ஒரே சொந்த பந்தங்கள் தானே? ரெண்டு மணமேடையா போட்றலாம்." என்று சொன்னதும்,

ஜீவிதனோ, "இது நல்லா இருக்கே?" என்று புன்னகையுடன் சொல்ல, கஜன் தொடக்கம் எல்லோருக்கும் சிரிப்புதான் வந்தது.

ஜீவிதனை முறைத்த நேத்ரா, "ஒரு வாரம் தான் இருக்கு?" என்று சொல்ல, நந்தினியோ இதனை விட்டால் அவள் நழுவி விடுவாளோ என்ற பயத்துடன், "எல்லாம் பார்த்துக்கலாம் நேத்ரா, அது ஒன்னும் பிரச்சனை இல்ல." என்று சொல்ல,

கஜனும், "சரின்னு சொல்லும்மா..." என்றான்.

கஜனை ஒரு கணம் பார்த்துவிட்டு சக்திவேலைப் பார்த்தவளோ, "சரி மாமா." என்று சொல்லிவிட, அப்போது தான் எல்லோருக்கும் மூச்சே வந்தது.

ராம்குமார் மற்றும் சுகானாவின் திருமணத்துடன் சேர்த்து, ஜீவிதன் மற்றும் நேத்ராவின் திருமணம் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சக்திவேலோ, "அடுத்து நம்ம வந்தனா கல்யாணம் தான். சீக்கிரம் நல்ல மாப்பிளையா பார்க்கணும்." என்று சொல்ல,

விஜயாவோ, "அவ கல்யாணம்னு சொன்னாளே பிடிகொடுக்க மாட்டேங்குறா மாமா." என்று சொல்ல, "ஏன்மா?" என்று கேட்டான் சக்திவேல்.

"இப்போ என்ன அவசரம் மாமா?" என்று கேட்டவள் விழிகள், தன்னையும் மீறி ஜன்னலினூடு தெரிந்த விஜய்யில் படிந்து மீண்டது.

"வாயசாயிட்டே போகுது, ராகவி கூட கல்யாணம் பண்ணிட்டா..." என்று சக்திவேல் சொல்லும் போதே மனதில் பாரம் ஏறினாலும் அடக்கிக் கொள்ள, எல்லோருடைய முகமும் ஒரு கணம் சற்று இறுகி மீண்டது என்னவோ உண்மைதான்.

பைரவியிடம் பெருமூச்சு மட்டுமே!?

பல்லவிக்கோ ராகவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்வதா, வேண்டாமா என்று தடுமாற்றம்.

கஜன் அருகே வந்தவளை ஏறிட்டுப் பார்த்தவன், "உட்காரு." என்று தள்ளி இருக்க, அவன் அருகே அமர்ந்தவள், "ராகவி விஷயத்தை அம்மாகிட்ட சொல்லவா?" என்று கேட்டான்.

அவனோ, "ம்ம்..." என்று மட்டும் சொல்ல, "உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே?" என்று கேட்டாள்.

"இதுல வருத்தப்பட என்னம்மா இருக்கு? எங்க அம்மாகிட்ட சொன்னா, அவங்கதான் அவளை நினைச்சு வருத்தப்படுவாங்க. அதான் யோசிச்சிட்டு இருக்கேன். எப்படியும் சொல்ல தானே வேணும்? இதுல மறைக்க என்ன இருக்கு?அப்படியே என் அம்மாகிட்டயும் சொல்லு, எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை." என்று சொன்னான்.

"அப்போ ஓகே..." என்று சொல்லிக் கொண்டே அவள் எழ முயல, அவன் மெதுவாக புன்னகைத்துக் கொண்டே எழுந்து நின்றவன், அவளுக்கு கையைக் கொடுத்து எழ உதவி செய்து இருந்தான்.

அவளும் மென் புன்னகையுடன் பைரவி அருகே சென்று அமர்ந்து கொண்டு, "அம்மா!" என்றாள்.

"என்னடி?" என்றாள் அவள்.

"ராகவி ப்ரக்னன்ட்டா இருக்கா." என்று சொன்னதுமே பைரவியின் விழிகள் அதிர்ந்து விரிய, "நிஜமாவா? படிக்கிற பிள்ளைடி..." என்றாள்.

"ம்ம்..." என்று பல்லவி சொல்ல, "யாருக்கும் தெரியாதா?" என்று கேட்டாள் பைரவி. இல்லை என்று தலையாட்டினாள்.

"அவனை..." என்று வாய்க்குள் அர்ஜுனுக்கு திட்டுதான் விழுந்தது.

"இப்போ எதுக்கு திட்டுறீங்க?" என்று கேட்க, "வேற என்ன பண்ண சொல்ற?" என்று பைரவி சலித்துக் கொள்ள, "அவங்க சந்தோஷமா தான் இருக்காங்க." என்றாள் பல்லவி.

"சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோசம் தான்." என்று பைரவி சொல்லி இருந்தாள்.

அதனைத் தொடர்ந்து துளசியிடமும் விஷயம் போனது. பல்லவி தான் சொன்னாள். துளசிக்கோ அழுகை.

சமையல்கட்டை பற்றிக் கொண்டு அழுத துளசியை பல்லவி அணைத்துக் கொள்ள, அந்த நேரம் கஜனும் உள்ளே வந்தான்.

"அம்மா..." என்று சொன்னதுமே, "அவ எப்படிடா தனியா எல்லாமே பார்ப்பா? அத்தை, மாமான்னு கூட அவளுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுக்க யாரும் இல்லையே..." என்று ஆதங்கமும் அழுகையுமாக கேட்க, அவனோ பெருமூச்சுடன் அவரை அணைத்து முதுகை வருடிக் கொடுத்தான்.

துளசி, "அவளை பார்க்கணும் போல இருக்கு." என்று சொல்ல, "எப்படி அங்கே போவீங்க? கல்யாணத்துக்கு வருவா தானே? அப்போ பார்த்துக்கோங்க." என்றான்.

பல்லவி, "நான் அழைச்சு போகட்டுமா?" என்று கேட்டாள்.

அவளை அழுத்தமாக பார்த்தவன், "அவங்களுக்கு ஏதும் உன் தம்பி சொல்லிட்டான்னா என்னால தாங்க முடியாது." என்றான்.

அந்த குரலில் அழுத்தமும் அக்கறையும் சேர்ந்து இருக்க, "அவன் எதுவும் பேசாம நான் பார்த்துக்கிறேன்." என்றான்.

"அவங்க அவமானப்படாம உன்னால ஹேண்டில் பண்ண முடியும்னா அழைச்சு போ." என்று சொன்னான்.

பல்லவியோ கண்களை மூடி திறந்தவள், "என்னால முடியும்." என்றாள்.

"எப்படி?" என்று கேட்க, "இன்னைக்கே போறோம், மதிய சாப்பாடு கொண்டு போறோம்." என்றாள்.

"என்ன விளையாடுறியாம்மா? உன் தம்பி அன்னைக்கு உன்னை கண்டிப்பா அவமானப்படுத்தி இருப்பான், ஐ க்னோ. ஆனாலும் நான் கேட்கல. தம்பி, அக்கா வேற விஷயம். ஆனா என் அம்மா எந்த இடத்துலயும் யார்கிட்டயும் அசிங்கப்பட கூடாது." என்றான்.

"என் மேல நம்பிக்கை இல்லையா?" என்று சற்று ஆதங்கமாக அவள் குரல் வர, "இப்போ எதுக்கு ரெண்டு பேரும் வாக்குவாதம் பண்ணிட்டு இருக்கீங்க? நான் போகல, போதுமா?" என்று கேட்டுக் கொண்டே துளசி கண்ணீரை துடைத்துக் கொள்ள, கஜனோ பெருமூச்சுடன், "உன்னை அவன் அவமானப்படுத்தினான் தானே?" என்று கேட்டான்.

பல்லவியோ, "ஆமா." என்றாள்.

"தென் ஹவ்?" என்று அவன் கேட்க, "நானும் அத்தையும் மட்டும் போனாதான் ஏதாவது பேசுவான். நான் அம்மாவையும் அழைச்சு போக போறேன்." என்றாள்.

கஜனின் விழிகள் அதிர்ந்து விரிய, "உன் அம்மாகிட்ட எதுவும் பேச மாட்டானா?" என்று கேட்டான்.

"வாயே திறக்க மாட்டான்." என்று சொன்னதுமே மெல்லிய சிரிப்புடன், "சும்மா சொல்ல கூடாது, நீ பிரில்லியண்ட் தான்." என்று கஜன் சொல்ல,

மெலிதாக புன்னகைத்தவளோ துளசியிடம், "அத்தை, நீங்க ராகவிக்கு என்ன செய்து கொடுக்க ஆசைப்படுறீங்களோ, எல்லாமே செய்து எடுங்க. நம்ம மூனு பேரும் போறோம். அவனை வாய மூடிட்டு ஓரமா இருக்க வச்சுட்டு, நம்ம ராகவிகூட இருந்தே சாப்பிட்டுட்டு வர்றோம், ஓகேயா?" என்று கேட்க,

கஜன் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "இது தெரிஞ்சு இருந்தா, அர்ஜுன் என்கூட சண்டைக்கு வரும் போதெல்லம் அத்தையை முன்னாடி நிற்க வைக்கலாம் போலவே? இந்த சீக்ரெட்டை இப்போ தான் சொல்லுவியா?" என்று கேட்க, பல்லவியும் மனம் விட்டு சிரிக்க, இருவரையும் மென் புன்னகையுடன் பார்த்த துளசி, "நீங்க இப்படி சிரிக்கும் போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. கண் பட்டுட கூடாது." என்று, கையால் சுற்றி திருஷ்டி போட்டுவிட்டு ராகவிக்கு தேவையானதை சமைக்க ஆரம்பித்து விட்டார்.

பல்லவியோ மென் சிரிப்புடன் கஜனைப் பார்த்து, "நம்ம இவ்ளோ பேசிட்டோம், இடைல அம்மா வருவாங்களானு தெரியல. கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சதுமே படிக்கிற பிள்ளையாம்னு சொல்லி அர்ஜுனுக்கு திட்டு விழுந்திச்சு, கூப்பிட்டு பார்க்கிறேன்." என்று சொல்லிக் கொண்டே செல்ல அவனும் அவளைப் பின்தொடர்ந்தான்.

கஜனும் சக்திவேல் அருகே அமர்ந்து விஷயத்தை சொல்ல, சக்திவேலுக்கு ஒரு பக்கம் ராகவி தனியாக கஷ்டப்படுவாள் என்கின்ற வருத்தம் இருந்தாலும், தாயாகி விட்டாள் என்கின்ற சந்தோஷமும் உண்டானது. ஆனாலும் துளசி அங்கே செல்வது கொஞ்சம் உறுத்தலாக இருக்க, "துளசிக்கு ஏதும் பேசுனா, நான் மனுஷனா இருக்க மாட்டேன்." என்றான் சக்திவேல்.

"பல்லவி பார்த்துப்பா அப்பா." என்றான் அவன்.

பல்லவியும் பைரவியை அழைத்துக் கொண்டு வெளியே வர, "என்னம்மா?" என்றாள் அவள்.

"அம்மா, அத்தைக்கு ராகவியை பார்க்கணும். நீங்களும் எங்க கூட வரணும்." என்றாள்.

"அவன் வீட்டுக்கு என்னால வர முடியாது." என்று பைரவி சொல்ல, "நீங்க வந்தாதான் அர்ஜுன் எதுவும் பேச மாட்டான். இல்லன்னா அத்தைக்கு ஏதும் பேசிடுவானோனு கஜன் யோசிக்கிறார்." என்று தயங்கி சொன்னவளோ, மேலும் தான் அவனைப் பார்க்க சென்ற அன்று நடந்ததையும் சொன்னாள்.

"ஏன் இப்படி நடந்துக்கிறான்னு தான் தெரில. உன் அத்தைக்காக வர்றேன்." என்று சொல்ல, மதியம் போல ராகவிக்கு சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு மூவரும் புறப்பட்டு விட்டார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை...

ராகவியும் சரி, அர்ஜுனும் சரி வீட்டில் தான் இருந்தார்கள். அர்ஜுன் தான் சமைத்துக் கொண்டு இருந்தான். இப்போதெல்லாம் அவன் கடையில் உணவு எடுப்பது இல்லை. அவனே அவளுக்கு சமைத்துக் கொடுப்பான்.

அவளோ சோஃபாவில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தவாறே தூங்கி இருக்க, இடையில் எட்டிப் பார்த்தவனோ, "கும்பகர்ணி..." என்று வாய்க்குள் திட்டிவிட்டு டிவியை அணைத்தான்.

அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் படுக்க வைக்கலாம் என்று அவன் நினைத்த சமயம், வீட்டின் கதவு தட்டப்பட்டது.

அவனும், ‘இந்த நேரத்துல யாரு?’ என்று நினைத்தபடி கதவைத் திறக்க, அங்கே நின்று இருந்தது பைரவி. அவளுக்கு பின்னே பல்லவியும் துளசியும் நின்று இருந்தார்கள்.

பைரவியைக் கண்டதுமே அவன் வாய் கப்பென்று மூடிக் கொள்ள, ஒரே பார்வை தான். அவனே மெதுவாக விலகி வழியை விட்டான்.

பல்லவி அடக்கப்பட்ட சிரிப்புடன் அருகே நின்ற துளசியைப் பார்க்க, "நீ சொன்னது சரியா தான்மா இருக்கு." என்றாள் துளசி.

அர்ஜுனோ பின்னே வந்த பல்லவியை முறைத்துப் பார்க்க, "நீங்க வாங்க அத்தை." என்று வீட்டினுள் துளசியை அழைத்துக் கொண்டே அவள் நுழைந்து இருக்க, சத்தம் கேட்டு மெதுவாக கண் விழித்த ராகவிக்கு உள்ளே வந்தவர்களைப் பார்த்ததுமே அதிர்ச்சி.

கண்களைக் கசக்கி மீண்டும் பார்த்தாள். கனவல்ல, நிஜம்தான். அழுகை வந்தது.

சட்டென எழுந்து கொண்டவள், "அம்மா!" என்று அழைத்துக் கொண்டே துளசியை அணைத்துக் கொண்டாள்.

துளசிக்கும் அழுகை. இத்தனை மாதங்கள் அவளைப் பிரிந்து இருந்ததே இல்லை. ஆண்கள் வலியை அடக்கிக் கொள்வார்கள். பெண்களால் முடியாதே? துளசியும் அணைத்து விம்மி அழ,

பைரவியோ அருகே நின்ற பல்லவியிடம், "நீயும் இருக்கியே... எப்போவாச்சும் அம்மான்னு ஓடி வந்து இருக்கியா? அப்பான்னு அப்படியே ஓட வேண்டியது..." என்று சொல்ல, பல்லவிக்கு சிரிப்பும் வந்து விட்டது.

"பொறாமை படுற நேரமா இது? உங்க மகன் இருக்கானே உங்களுக்கு...?" என்று கண்களால் அங்கே துளசியையும் ராகவியையும், உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற அர்ஜுனைக் காட்டினாள்.

"க்கும்... அவன் பக்கத்தில வந்துட்டாலும்..." என்று சொல்லிக் கொண்டே சோஃபாவில் அமர்ந்தவள், "நீயும் இருடி." என்று சொல்ல, பல்லவியும் அருகே அமர்ந்து கொண்டு அர்ஜுனைப் பார்க்க, அவன் சலிப்புடன் சமையலறைக்குள் நுழைந்து இருந்தான்.

பல்லவி எதிர்பார்த்தது போலவே பைரவி அங்கே இருக்கும் போது அவன் வாயைத் திறக்கவே இல்லை.

துளசி, "எப்படிம்மா இருக்க? வாந்தி இருக்கா?" என்று ராகவியின் வயிற்றில் கையை வைத்துக் கொண்டு கேட்க, "கொஞ்சமா இருக்கு அம்மா." என்றாள்.

"உனக்கு சமைச்சு கொண்டு வந்து இருக்கேன், சாப்பிடுறியா?" என்று கேட்க, "ஆமா ரொம்ப பசிக்குது." என்று சொல்லிக் கொண்டே அங்கே அமர, இதனை சமையலறைக்குள் இருந்து கேட்ட அர்ஜுனோ,

"அவளுக்கு நம்ம கஷ்டப்பட்டு சமைச்சா, அம்மா கையால தான் சாப்பிடுவாளாம்..." என்று முணுமுணுத்துக் கொண்டே, அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வந்தான்.

அவர்களைப் பார்க்காமல் அறைக்குள் சென்று டீஷேர்ட்டை அணிந்து கொண்டு வந்தான். வெளியே செல்ல போகின்றான் என்று தெரிந்தது. யாரையும் பார்க்கவில்லை.

"ஜீவிதனுக்கும் நேத்ராவுக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிருக்கு. ராம், சுகானா கல்யாண நாள் அன்னைக்கே கல்யாணம்." என்று தகவலை அவனிடம் மறைமுகமாக பைரவி சொல்ல,

'எல்லோரும் அந்த குடும்பத்துலயே கொண்டு விழ வேண்டியது...' என்று நினைத்துக் கொண்டான்.

இதனிடையே, "மாப்பிள்ளை நீங்களும் சாப்பிடலாமே?" என்றாள் துளசி.

"என்னது மாப்பிள்ளையா?" என்று பைரவி வாய்விட்டே கேட்டு விட்டாள்.

பல்லவியோ, "அம்மா!" என்று அழைக்க, "இல்லடி, இன்னமும் அவனை சின்ன பையனா தான் நினைக்க தோனுது." என்று சொல்ல, "நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல." என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியேறப் போக, "சாப்பிட்டு போடா." என்றாள் பல்லவி.

"வந்த வேலையை மட்டும் பாருங்க." என்று சொன்னவன் விறுவிறுவென வெளியேறி இருக்க, "அவன் அப்படி தான் சம்பந்தி..." என்று சொல்லிக் கொண்டே ராகவியை பார்த்த பைரவி, "நல்லா பார்த்துக்கிறானாம்மா?" என்று கேட்க, அவளும் இல்லை என்றா சொல்ல முடியும்? நிஜமாகவே நன்றாக தானே பார்த்துக் கொள்கின்றான்.

"ஆமா அத்தை." என்று சொல்ல, கார் கீயை அர்ஜுன் எடுப்பதற்காக மீண்டும் வீட்டினுள் நுழைந்தான்.

அந்த நேரம் பார்த்து பைரவியோ, "இவன் மேல எப்படி உனக்கு லவ் வந்திச்சு?" என்று ராகவியிடம் கேட்க,

அவளோ, 'லவ்வா? நாசமா போச்சு...' என்று நினைத்துக் கொண்டே அர்ஜுனை பார்க்க, அந்த கணம் அவனும் அவளைப் பார்த்து விட்டு கீயை எடுத்தான்.

அவளோ, "எனக்கே தெரியல அத்தை." என்று சொல்ல, "சரி தான்" என்று சொல்லிக் கொண்டாள் பைரவி.

அதனைத் தொடர்ந்து அர்ஜுன் யாரையும் பார்க்காமல் வெளியேறி விட, நான்கு பெண்களும் அமர்ந்து சிரித்து பேசி சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

ராகவிக்கோ தாயைப் பார்த்ததில் இருந்தே மனம் லேசாகி விட்டது.

"உங்க கையால சாப்பிட்டு எவ்ளோ நாள் அம்மா?" என்று சொன்ன ராகவிக்கு கண்ணீர் துளிர்க்க துடைத்துக் கொண்டாள்.

"பல்லவி, நீ அடிக்கடி சாப்பாடு கொண்டு வந்து கொடுடி." என்று பைரவி சொல்ல, "சரிம்மா" என்று சொல்லிக் கொண்டாள்.

நீண்ட நேரம் பேசி முடித்தவர்கள் ராகவிக்கும் எப்படி உடலை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு இருந்தார்கள். அர்ஜூனுக்கும் சாப்பாடு கொடுக்க சொல்லி கொடுத்து இருந்தார்கள்.

அவர்கள் செல்லும் வரை வீதியின் முனையில் காரை பார்க் செய்து இருந்த அர்ஜுனும், அவர்கள் சென்றதும் வீட்டுக்கு வந்தான்.

'அவங்க போனதும் சட்டுன்னு வர்றானே? ரோட்ல நின்னு வேவு பார்த்துட்டு இருந்து இருப்பான் போல?' என்று நினைத்தபடி, வீட்டினுள் நுழைந்தவனிடம், "அர்ஜுன் சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள் ராகவி.

டீஷேர்ட்டை கழட்டி சோஃபாவில் போட்டு அதில் தொப்பென்று சாய்ந்து அமர்ந்து அருகே அமர்ந்து இருந்த ராகவியைப் பார்த்தவன், "ஏன் ஊட்டிவிட போறியா?" என்று கேட்டான்.

'என்ன கேட்டாலும் எடக்கு முடக்கா பதில் சொல்ல வேண்டியது' என்று நினைத்தவளோ, "அம்மா தந்த சாப்பாடு இருக்கு, கொடுக்க சொன்னாங்க." என்று சொல்ல, "எனக்கு வேணாம்." என்றான்.

"ஏன் வேணாம்?" என்று கேட்டாள்.

"எனக்கு வேணாம், தட்ஸ் இட்." என்றான்.

"அதுதான் ஏன்?" என்று கேட்டவளை முறைத்தவன், "உங்க வீட்டு சாப்பாடு நான் சாப்பிட மாட்டேன்." என்றாள்.

"சக்திவேல் வீட்டு சாப்பாட்டை தொடுறதுக்கு மட்டும் மானம், ரோஷம் இருக்கு. ஆனா சக்திவேல் பொண்ண தொடுறதுக்கு அதெல்லாம் இருக்காதோ?" என்றாள்.

சட்டென அவளை அதிர்ந்து பார்த்தான்.

"சரியா தானே பேசி இருக்கேன்?" என்றாள் அவன் விழிகளை தைரியமாக பார்த்துக் கொண்டு.

"அதுவும் இதுவும் ஒன்னாடி?" என்று கேட்டான்.

"எனக்கு ஒன்னுதான், அவ்ளோ ரோஷம் இருக்கிற ஆள் என் மேல கை வச்சு இருக்கவும் கூடாது. என்னை இந்த நிலைக்கு ஆள் ஆக்கி இருக்கவும் கூடாது." என்று தனது வயிற்றைக் குனிந்து பார்த்து சொல்லிக் கொண்டே அவனை ஏறிட்டுப் பார்க்க,

"லூசு போல பேசிட்டு இருக்காத, இப்போ நான் சாப்பிடணும், அவ்ளோ தானே? கொடு, சாப்பிட்டு தொலைக்கிறேன்." என்று சொல்ல, அவளோ சிரிப்பை அடக்கிக் கொண்டே எழுந்தாள்.

அவனுக்கு வைத்து விட்டு போன உணவை நீட்ட, எழுந்து சென்று கையைக் கழுவி வந்தவன் அதனை சாப்பிட்டான். அருகே தான் அமர்ந்து இருந்தாள். அவன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

"இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டான்.

"சாப்பாடு எப்படி இருக்கு?" என்று கேட்க, அவனோ அடுத்த வாயை சாப்பிட்டு மென்று முழுங்கியவன், "உங்க அம்மா நல்லா சமைப்பாங்க போல?" என்றான்.

அவள் இதழ்களில் மென் புன்னகை தோன்ற அடக்கிக் கொண்டே, "ம்ம்..." என்று சொன்னாள்.

அவனும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தவன், "சக்திவேல் வீட்டு பொண்ணு தான் நல்லா இருக்குன்னு பார்த்தேன். பரவாயில்லை, சாப்பாடும் நல்லா இருக்கு." என்று சொல்லிக் கொண்டே செல்ல,

"என்னது?" என்று அவள் அதிர்ந்து கேட்க,

திரும்பிப் பார்த்தவன், "ரெண்டும் ஒன்னுன்னு நீ தான சொன்ன?" என்று அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே மேலும், "சாப்பிடும் போது ரெண்டுமே நல்லா இருக்கு." என்றான்.

"ச்சீ... எப்போ பார்த்தாலும் அசிங்கமா பேச வேண்டியது..." என்று திட்டிக் கொண்டே எழுந்தவள் அறைக்குள் நுழைய, அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான்.
 
Top