நிலவு 26
அறைக்குள் வந்ததுமே, "அவன் என்ன பேசுனான் தெரியுமா?" என்று பைரவி பார்த்தீபனிடம் புலம்ப, "விடும்மா, அவனுக்கு போக போக புரியும்" என்று சொல்லிக் கொண்டான்.இதே சமயம் அறைக்குள் வந்த அர்ஜுனுக்கோ நிலை கொள்ள முடியவே இல்லை...
அங்கும் இங்கும் நடந்தான்...
ஏதோ அனாதை ஆகி விட்ட உணர்வு...
அதுவும் பைரவி அறைந்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை...
கண்ணாடி முன்னே நின்றவன் கன்னத்தை வருடிக் கொண்டே தன்னையே பார்த்து இருந்தான்...
அதீத கோபத்தில் கண்கள் சிவந்தும் விட்டன...
எல்லா கோபமும் சேர்ந்து திரும்பியது என்னவோ கஜன் மீதும் சக்திவேல் மீதுமே...
தன்னை குடும்பத்திடம் இருந்து அவன் பிரித்து விட்டானோ என்கின்ற எண்ணம் தான் தோன்றியது...
ஏற்கனவே இருந்த கோபம், வன்மமாக உருப்பெற்று வளர்ந்து இருந்தது...
வாழ்க்கையில் தோல்வியையும் நிராகரிப்பையும் பார்க்காமல் வளர்ந்தவன் அவன்...
அவனுக்கு என்றுமே ஏறு முகம் தான்...
நினைத்ததை முடிக்க எந்த எல்லைக்கும் செல்பவன்...
இந்த கஜன் விஷயத்தில் தான் முதலிருந்தே அவமானப்பட்டுக் கொண்டு இருக்கின்றான்...
தன்னையே பார்த்துக் கொண்டே அலைபேசியை எடுத்து, தனது நெருங்கிய நண்பனுக்கு அழைத்தான்...
அவன் பெயர் தீபன்...
அர்ஜுனின் வலது கை என்றும் கூறலாம்... அவன் பிசினஸை இவ்வளவு வெற்றிகரமாக நடத்த அவனும் ஒரு காரணம்...
அர்ஜுன் என்ன சொன்னாலும் செய்து விடுவான்...
தீபனும் ஒரே அழைப்பில் அழைப்பை எடுத்து இருந்தான்.
"நாளைக்கு நான் சொல்ற ஊருக்கு வா, இங்க நமக்கு வேலை இருக்கு" என்றான் அர்ஜுன்...
ஏன் எதுக்கு என்று கூட கேட்கவில்லை, "சரி அர்ஜுன்" என்று தான் பதில் வந்தது...
'இந்த கல்யாணம் நடக்குதோ இல்லையோ, ஆனா இந்த கஜனுக்கு வாழ்க்கை முழுக்க நிம்மதி இருக்கவே கூடாது' என்று கறுவிக் கொண்டான்...
அன்று தூங்கி எழுந்தவன், காலையில் வாசலுக்கு வந்த சமயம், தீபன் அங்கே வந்து இருந்தான்...
அவனைக் கண்ட பார்த்தீபனோ, "நீ எதுக்குடா இங்க வந்த?" என்று கேட்க, "நான் தான் வர சொன்னேன்" என்றான் பார்த்தீபனுக்கு பின்னால் நின்று இருந்த அர்ஜுன்...
"எதுக்கு?" என்று பார்த்தீபன் கேட்க, "புது சூப்பர் மார்க்கெட் இங்க தொடங்கலாம்னு இருக்கோம்" என்றான் தோள்களை உலுக்கி...
"அதுக்காக?" என்று பார்த்தீபன் கேட்க, "இங்கேயே வீடெடுத்து, கொஞ்ச காலம் தங்கலாம்னு இருக்கோம்" என்றான்.
ஏதோ தவறாக பட்டது பார்த்தீபனுக்கு...
அர்ஜுனும் தீபனும் சேர்ந்தால் என்ன எல்லாம் செய்வார்கள் என்று பார்த்தீபனுக்கு தெரியாதா என்ன?
"அது ஒன்னும் தேவல" என்று சொல்ல, "என்னப்பா? நீங்க தானே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கனும்னு சொன்னீங்க, இப்படி மாத்தி பேசலாமா?" என்று கேட்டான்...
இதழில் புன்னகை தவழ்ந்தது...
ஆனால் விழிகளில் ஒரு வித வன்மம் இருந்தது...
பார்த்தீபன் அவன் புன்னகையையும் பார்த்தான், அவன் வன்மத்தையும் கவனித்தான்...
குரலை செருமிக் கொண்டே, "கொஞ்ச காலம் போகட்டும்" என்று சொன்னான்...
"அப்பா, ஐ ஆம் ஓகே" என்று சொல்லிக் கொண்டே பைரவியை பார்த்தவன், "நீங்களாச்சும் சொல்லலாமே" என்றான்...
அவளுக்கு அவன் இப்படி நிதானமாக பேசுவதே அதிர்ச்சி தான்...
சிரித்துக் கொண்டே பேசுகின்றானே...
பைரவியும், "பிசினஸ் வேலை தானே" என்று சொல்ல, பார்த்தீபனோ, "அவனை குறைச்சு எடை போடாதே" என்று சொல்ல, அர்ஜுனோ சிரித்துக் கொண்டே, "என்னை வில்லன் போலவே பார்க்கிறீங்கப்பா, நேத்து டீப் ஆஹ் யோசிச்சேன்... பல்லவிக்கு நல்ல வாழ்க்கை அமையுறது எனக்கும் சந்தோஷம் தான்" என்றான்...
பார்த்தீபன் அவனை யோசனையாக பார்க்க, பைரவிக்கு நேற்று அர்ஜுனுக்கு அறைந்த வருத்தம் இருந்ததால் என்னவோ, "விடுங்க, இங்கேயே இருக்கட்டும்" என்றாள்.
"ம்ம்" என்று சொல்லிக் கொண்டான் பார்த்தீபன்...
அன்று காலையிலேயே சக்திவேல் மற்றும் கஜன் அவர்களை பார்க்க வந்து இருந்தார்கள்...
கூடவே ராகவி, வந்தனா மற்றும் நவநீதனை அழைத்து வந்து இருந்தார்கள்...
ராம்குமாருக்கும் அன்று டியூட்டி இருந்தது...
சுகானாவுக்கும் அன்று டியூட்டி இருந்தது...
இருவரும் வைத்தியசாலைக்கு கிளம்பி விட்டார்கள்...
அர்ஜுனோ, வந்தவர்களை பார்த்து மெலிதாக சிரித்தான்...
கஜனின் புருவம் ஒரு கணம் சுருங்கி விரிய, அவனும் மெலிதாக புன்னகைக்க, சக்திவேலோ, "நேத்து பேசுனத மனசுல வச்சுக்காதே தம்பி" என்றான்.
அர்ஜுனோ, "ஐயோ அதெல்லாம் மறந்துட்டேன் மாமா" என்று சொன்னான்...
அவன் இவ்வளவு இயல்பாக பேசுவது அவன் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி...
சக்திவேல் குடும்பத்தினருக்கு அவனை பற்றி தெரியாது தானே...
இயல்பாக எடுத்துக் கொண்டார்கள்...
அதனை தொடர்ந்து எல்லோரும் கலகலவென பேச ஆரம்பித்து இருக்க, காரில் தீபனுடன் சாய்ந்து நின்ற அர்ஜுனின் விழிகள் ராகவியிலும் வந்தனாவிலும் படிந்து மீள, "இந்த ரெண்டு பொண்ணுங்கள பத்தி டீடெய்ல் வேணும் தீபன்" என்றான் தனது தாடையை நீவிக் கொண்டே...
தீபனுக்கு அதிர்ச்சி...
பெண்களை பற்றி எல்லாம் அவன் விசாரிக்க சொல்வது இல்லை...
இன்று சொல்கின்றான்...
ஆனால் மறுத்து பேசி பழக்கம் இல்லை...
"ம்ம் ஓகே" என்று மட்டும் சொல்லிக் கொண்டான்...
இதே சமயம், பல்லவியை ஓரமாக அழைத்த கஜனோ, "கல்யாணத்துக்கு முதல் ஏதாவது சொல்லனும்னா சொல்லிடு" என்று சொல்ல, அவளோ, இதழ்களை பிதுக்கியவள், "சொல்றதுக்கு எதுவும் இல்லை" என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தி, "யூ ஆர் எ ஜென்டில் மேன்" என்றாள்.
அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை படர, "எனக்கும் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை... படிச்சு முடிச்சு, ஏதாவது வாழ்க்கைல நீ சாதிக்கணும்... புரியுதா?" என்றான்...
"கண்டிப்பா" என்று பெண்ணவளும் கண் சிமிட்டி சொல்லிக் கொண்டாள்.
இருவரும் புன்னகையுடன் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜுனின் விழிகள் அவர்களையே பார்த்து இருந்தன...
அடுத்த கணம், அவர்களில் இருந்து பார்வையை அகற்றிக் கொண்டவன், உஷ்ண மூச்சை விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்...
அதனை தொடர்ந்து சக்திவேல் அருகே வந்தவனோ, "பக்கத்துல வாடகைக்கு வீடு கிடைக்குமா? இங்க நான் ஒரு மூணு மாசம் தங்க வேண்டி இருக்கும்" என்று சொல்ல, "எங்க வீடே இருக்கு தம்பி" என்றான் அவன்...
"இல்ல நான் வாடகைக்கு தங்கிக்கிறேன்" என்று சொல்ல, சக்திவேலும் அங்கே நின்ற விஜய்யிடம், "தம்பிக்கு ஒரு வீடு ஏற்பாடு பண்ணி கொடு" என்று சொல்லி இருந்தான்...
அதனை தொடர்ந்து, "அந்த காணி சம்பந்தமா பேசணும்... சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்றான்...
"ஓஹ் பேசலாமே... நாளைக்கு வீட்டுக்கு வா, இத பத்தி பேசிடலாம்" என்று சக்திவேல் சொல்ல, மெலிதாக அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான் அர்ஜுன்...
இதே சமயம், ஹாஸ்பிடலுக்கு வந்த சுகானாவோ ராம்குமாரை திரும்பிக் கூட பார்க்கவில்லை...
முகத்தை தூக்கிக் கொண்டே திரிந்தாள்...
"சுகா" என்று அவன் அழைத்தாலும், "டோன்ட் டிஸ்டர்ப் மீ" என்று எரிந்து விழுந்தாள்.
டியூட்டியை முடித்துக் கொண்டே, அவள் கார் பார்க் அருகே வந்த சமயம், அவளது காரில் சாய்ந்து நின்று இருந்தான் ராம்குமார்...
விடமாட்டான் என்று தெரிந்தது...
'படுத்துறான்' என்று முணுமுணுத்துக் கொண்டே, அவனை நோக்கி வந்தவள், "மூவ்" என்றாள்.
பேசுடி" என்றான் கெஞ்சுதலாக...
"ப்ளீஸ் ராம், இது ஹாஸ்பிடல், பிஹேவ் யோர் செல்ஃப் என்றாள்.
"சரி என்னையும் பிக்கப் பண்ணிக்கோ, அத்தை மாமாவை நான் வழியனுப்பணும்" என்று சொன்னவனை உறுத்து விழித்தவள், "ஏன் உங்க வண்டி என்னாச்சு?" என்று கேட்க, "எனக்கு உன் கூட தான் வரணும்" என்றான்...
'சரியான இம்சை' என்று முணுமுணுத்துக் கொண்டே, கார் கீயை நீட்ட, அவன் அதனை வாங்கிக் கொண்டே உள்ளே ஏறி ட்ரைவர் சீட்டில் அமர, அவளும் மறுபக்கம் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளை பார்க்கவே இல்லை, முன்னே பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
அவன் காரோ, வழக்கமாக அவர்கள் செல்லும் கரும்பு தோட்டத்தை நோக்கி செல்ல, "வீட்டுக்கு போகாம எங்க போறீங்க?" என்று அவள் கத்தியது காற்றில் தான் கரைந்து போனது.
கரும்பு தோட்டத்திற்கு முன்னே வண்டியை நிறுத்தி விட்டு அவளைப் பார்க்க, "வீட்டுக்கு போகணும் ராம்" என்றாள் அவனை உறுத்து விழித்துக் கொண்டே.
"சாரி டி, நான் வேணும்னே பண்ணல, அண்ணா சொன்னார், என்னால இல்லைன்னு சொல்ல முடியல, அந்த பொய்யை சொல்லிட்டு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?" என்று சொன்னவனை வெறித்துப் பார்த்தவள், "பேசுனா கொன்னுடுவேன்" என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டலாக சொன்னாள்.
"சரி பேசல, கிஸ் பண்ணுறேன்" என்று சொல்ல, "முடியாது" என்றாள் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டே...
"சாரி சொல்விட்டேன் ல" என்று அவன் சொல்ல, "சாரி சொன்னா நடந்தது இல்லன்னு ஆயிடுமா?" என்று கேட்டாள்.
"அது தான் நீ உண்மையை சொல்லிட்டே, பல்லவிக்கும் கல்யாணம் சரி வந்திடுச்சு... சொன்ன பொய்யால ஏதோ ஒரு நன்மை நடந்து இருக்குல்ல, அதுக்காகவே என்னை மன்னிக்கலாமே" என்று சொன்னதுமே சுகானா சற்று நிதானமடைந்தாள்.
அவள் இந்த திசையில் யோசிக்கவே இல்லையே...
ஏதோ ஒரு நன்மை இந்த பொய்யால் நடந்து இருக்கின்றது அல்லவா...
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, அவனைப் பார்த்தவள், "சரி அதுக்காக உங்கள மன்னிக்கிறேன்" என்று சொல்ல, அவனோ மென் சிரிப்புடன், "அப்போ கிஸ்" என்றான் கண்களை சிமிட்டி...
கையை நீட்டினாள்.
"ஹெலோ அன்னைக்கு கன்னத்தை நீட்டுன, நான் மூட் சரி இல்லன்னு முடியாதுன்னு சொன்னேன்... என்னால கைல கிஸ் அடிக்க முடியாது, அது தான் கல்யாண நாள் ஃபிக்ஸ் பண்ணியாச்சே... அப்புறம் என்னடி?" என்று கேட்க, அவளோ, "அது சான்ஸ் முடிஞ்சு போச்சு" என்று குறும்பு சிரிப்புடன் அவள் சொல்ல, அவளையே பார்த்து இருந்தவன், "சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்" என்று சொல்லி அடுத்த கணம், அவள் முகத்தை தாங்கி, அவள் இதழ்களுடன் இதழ்களை அழகாக பொருத்தி இருக்க, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
அவள் விழிகளோ அதிர்ந்து விரிய, ஆழ்ந்த முத்தமிட்டு விலகிக் கொண்டே, அவளை மையலுடன் பார்த்தான்...
அவள் இன்னுமே நிதானத்துக்கு வரவில்லை...
"சுகா" என்றான் கன்னத்தை தட்டி, அவனை அதிர்ந்து பார்த்தவள், "இப்போ என்னடா பண்ணுன?" என்று கேட்க, "டாவா?" என்று அவன் அதிர, "ஆமா, நீங்க பண்ணுனதுக்கு மரியாதை தான் ஒரு கேடு" என்று சொல்லிக் கொண்டே, தனது இதழ்களை புறங்கையால் துடைத்தவளோ, "பொறுக்கி மாதிரி" என்று முடிக்கவில்லை, மீண்டும், அவள் இதழ்கள் அவன் வசமானது...
இப்போது அவள் மெதுவாக கண்களை மூடிக் கொள்ள, இந்த முத்தம் சற்று ஆழாமாகி போக, மெதுவாக அவளை விட்டு விலகிக் கொண்டே, அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவன், "பொறுக்கி தான் டி, உன் கிட்ட மட்டும்" என்று சொன்னான் ரகசிய குரலில்.
அவன் கையில் அடி போட்டு விட்டு, ஜன்னலினூடு வெளியே பார்த்தவள், "வீட்டுக்கு போகலாம்" என்றாள்.
அவளுக்கு வெட்கத்தில் கன்னங்களும் சிவந்து விட்டன...
இருவருக்குமான முதல் முத்தம்...
அதனால் கிளர்ச்சிகளும் அதிகமாக இருந்தன...
அவனும் அடக்கப்பட்ட சிரிப்புடன், "போகலாமே" என்று சொல்லிக் கொண்டே காரை கிளப்பி இருக்க, அவளோ அவன் பக்கம் திரும்பவே இல்லை...
அவன் முத்தத்தை அசை போட்டவளுக்கு கன்னங்கள் சூடேறி போக, அவனுக்கும் அதே உணர்வு தான்...
ஒரு வழியாக அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததுமே, பார்த்தீபன் வீட்டினர் எல்லோரும் கிளம்ப ஆயத்தமாகி விட்டார்கள்...
இதே சமயம், விஜய்யுடன் சென்று வாடகைக்கு வீடு பார்த்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தான் அர்ஜுன்...
விஜய் மீதும் அவனுக்கு ஆத்திரம்...
ஆனால் காட்டிக் கொள்ளவில்லை...
"சாரி தம்பி" என்றான் விஜய்...
"அத மறந்துட்டேன் அண்ணன்" என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டவன், தோப்பு வீட்டை அடைந்த நேரம், எல்லோரும் கிளம்புவதற்காக வண்டியில் ஏறி விட்டார்கள்...
பார்த்தீபனோ, வண்டியில் அமர்ந்தபடியே, "அர்ஜுன்" என்று அழைக்க, அப்போது தான் உள்ளே நுழைந்த தனது காரில் இருந்து இறங்கிய அர்ஜுன் பார்த்தீபனின் வண்டியை நோக்கி செல்ல, "கடை வேலையை மட்டும் பார்க்கணும் புரியுதா?" என்று சொன்னான்...
"எதுக்குப்பா என்ன பார்த்து பயப்படுறீங்க? நான் என்ன வில்லனா?" என்று புன்னகையுடன் கேட்க, "நான் உன் அப்பாடா, உன்னை பத்தி தெரியாதா என்ன?" என்று சொல்லி விட்டு, இதழ்களுக்குள், 'சரியான வன்மம் புடிச்சவன்' என்று முணுமுணுத்து விட்டு, ஜீவிதனிடம், "போகலாம் ஜீவி" என்று சொல்ல, அவர்கள் வண்டியும் கிளம்பியது...
அவர்கள் செல்வதை ஆழ்ந்து பார்த்த அர்ஜுனின் விழிகள் அங்கே கிளம்பியவர்களுக்கு கையை காட்டிக் கொண்டு நின்று இருந்த ராகவி மற்றும் வந்தனாவில் ஒரு கணம் படிந்து மீண்டது.
அதனை தொடர்ந்து எல்லோரும் கிளம்பி விட, கஜனுக்கு உலக அதிசயமாக கையை குலுக்கி அனுப்பி வைத்து இருந்தான் அர்ஜுன்... நேற்று பார்த்த அர்ஜூனுக்கும் இன்று பார்த்த அர்ஜுனுக்கும் மலையும் மடுவும் போல வித்தியாசம்...
வண்டியில் ஏறிய சக்திவேலோ, "நேத்து வேற பையனை அழைச்சு வந்துட்டாங்களோ?" என்று கேட்க, கஜனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "ஏன் பா அவனை கலாய்ச்சிட்டே இருக்கீங்க" என்று சொல்ல, "டேய் நான் நிஜமா தான் டா கேக்கிறேன்... ஒரே நாளுல இப்படி மாறிட்டான் ல" என்று சொன்னான் அவன்...
வந்தனாவும், "அதே சந்தேகம் தான் எனக்கு, நேத்து அந்நியன் போல இருந்தார், இன்னைக்கு அம்பி போல இருக்கார்" என்று சொல்லி சிரித்துக் கொண்டாள்.
ராகவிக்கு ஏனோ அவனை பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை...
தன்னை அறைந்ததில் இருந்தே, அவன் மீது வெறுப்பு தான்...
அவர்கள் வீட்டில் எல்லோரையும் பிடித்து இருந்தது அவனை தவிர...
அர்ஜுனின் மாற்றம் பற்றி ஆச்சரியமாக பேசியவர்களுக்கு அப்போது தெரியவில்லை, அர்ஜுன் என்கின்ற புலி பதுங்குவதே பாய்வதற்காக தான் என்று...