நிலவு 22
ராம்குமாரோ, 'தெரிஞ்சிடுச்சோ?' என்று நினைத்து முடிக்க முதலே, "வீட்ல என்ன சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குனீங்க?" என்று கேட்டு விட்டாள்.இதற்கு மேல் மறைப்பது சரி என்று தோன்றவில்லை...
"ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கிறன்னு" என்று அவன் தயக்கத்துடன் ஆரம்பிக்க, "ராம்" என்று அடிக்குரலில் சீற, "சுகா ப்ளீஸ், ரிலாக்ஸ்.... இல்லன்னா நம்ம கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை" என்று சொன்னான்...
"நடக்காம இருக்கட்டுமே" என்றாள்.
அவன் அதிர்ந்து விழி விரித்தவன், "என்னடி பேசிட்டு இருக்க?" என்று கேட்க, "இவ்ளோ அசிங்கப்பட்டு இந்த கல்யாணம் ஒன்னும் நடக்க வேணாம்... என்னை பத்தி என்ன நினச்சு இருப்பாங்க... நான் இந்த வீட்ல வந்து வாழ போறவ ராம்... அசிங்கமா இருக்கு" என்று ஆரம்பித்தவளுக்கு அடக்க முடியாமல் கண்ணீரும் வழிய, சட்டென துடைத்துக் கொண்டாள்.
அவனோ, "ஐயோ சுகா, அந்தளவு போகாது, கல்யாண நாள் ஃபிக்ஸ் பண்ணுனதும் உண்மையை சொல்லிடலாம்னு அண்ணா சொன்னார்" என்று சொல்ல, "அதுவரைக்கும்?" என்று கேட்டாள்.
"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று முடிக்க முதல், "என்ன பேசிட்டு இருக்கீங்க ராம், டாக்டர் தானே கவனமா இருந்து இருக்கலாமேன்னு உங்க அம்மா கேக்கிறாங்க, உடம்பெல்லாம் கூசுது... ஒரு கிஸ்ஸுக்கே நான் எவ்ளோ ரெஸ்ட்ரிக்ஷன் வச்சு இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்... இத என்னால அக்செப்ட் பண்ணிக்கவே முடியாது" என்றாள்.
இடையில் கையை வைத்து இதழ் குவித்து ஊதிய ராம்குமாரோ, "இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற?" என்று கேட்க, "நான் உண்மையை சொல்ல போறேன்" என்றாள்.
"ஹேய் சொதப்பிடாதடி" என்று ராம்குமார் சொல்ல, "இல்ல ராம் என்னால முடியாது, வீட்ல தெரிஞ்சா கவலைப்படுவாங்க" என்று சொல்லிக் கொண்டே அவள் நடக்க, "நில்லுடி" என்று சொல்லி அவள் கையை எட்டிப் பிடிக்க, "விடுங்க ராம்" என்று அவன் கையை உதறிக் கொண்டே, அவள் விறுவிறுவென செல்ல, அவளை எப்படி தடுப்பது என்று தெரியாமல் திணறி விட்டான் அவன்...
இதனிடையே வேகமாக வீட்டினுள் அவள் நுழைய, அவளை தொடர்ந்து ராம்குமாரும் நுழைய, சுகானாவோ, சத்தமாக, "நான் கர்ப்பம் எல்லாம் இல்லை..." என்றாள்.
சட்டென அந்த இடமே மௌனமாகி விட்டது...
எல்லோரும் அவளை ஒருங்கே திரும்பிப் பார்த்தார்கள்.
அவளும் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "நான் கர்ப்பம் இல்லை... நாங்க தப்பும் பண்ணல..." என்றாள்.
அவளை தொடர்ந்து வந்த ராம்குமாரோ, "ஷீட்" என்று சொல்லிக் கொண்டே நெற்றியை வருட, அங்கே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த கஜனோ, "சொதப்பிட்டா" என்று நினைத்துக் கொண்டே, நெற்றியை நீவிக் கொண்டான்...
"ராம்" என்று ஒரு அழுத்தமான அழைப்பு சக்திவேலிடம்...
இனியனோ, "யாரு இப்படி சொன்னது?" என்று கேட்க, முன்னே வந்த ராம்குமாரோ, "நான் தான்" என்று இனியனிடம் சொல்லி விட்டு, சக்திவேலைப் பார்த்து, "கல்யாணம் நடக்கணும்னு தான் பொய் சொன்னேன்" என்றான்.
சக்திவேலுக்கு ஆத்திரம், "அதுக்கு அந்த பொண்ணோட மானத்தை அடகு வைப்பியா? கொஞ்சம் கூட அறிவு இல்லையா ராம்" என்று காட்டமாகவே அவ்விடம் வைத்து கேட்டு விட்டான்...
மதியழகனுக்கோ ஆத்திரம், "ராம், உன் கிட்ட நான் இத எதிர்ப்பார்க்கல, கல்யாணத்திற்கு இப்போ என்ன அவசரம்? கஜனுக்கு கல்யாணம் முடியும் வரைக்கும் உன்னால காத்திருக்க முடியாதா?" என்றான் ஆதங்கமாக...
எல்லோருக்குமே கோபம்...
அவனுக்கு திட்ட ஆரம்பித்து விட்டார்கள்...
இதனிடையே வெளியே மரத்தின் கீழ் அர்ஜூனுடன் அமர்ந்து இருந்த பல்லவியோ, "உள்ளே ஏதோ நடக்குது, பார்த்துட்டு வரலாம் வாடா" என்று சொல்ல, அவனோ, "பச், நீ போ" என்று சொல்லிக் கொண்டே, அவ்விடமே அமர்ந்து இருந்தான்
உள்ளே சென்ற பல்லவியோ கண்கள் கலங்க நின்ற சுகானா அருகே வந்து, "என்னடி?" என்று கேட்க, அவளோ, "நான் ப்ரெக்னன்ட்னு சொல்லி, கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து இருக்கார் ராம்" என்று சொன்னாள்.
பல்லவி யோசனையுடன் அங்கே நடப்பதைப் பார்க்க, ராம்குமார் திட்டு வாங்கிக் கொண்டே, மௌனமாக நின்று இருக்க, கஜன் பொறுமை இழந்து விட்டான்.
"இப்போ எதுக்கு அவனுக்கு திட்டுறீங்க எல்லோரும்... பொய் சொன்னது நான் தான்" என்று தனது முழு உயரத்துக்கு எழுந்து நின்று சொல்ல, அவனை எல்லோருமே பார்க்க, "என்னடா இதெல்லாம்?" என்று கேட்டான் சக்திவேல்.
"நான் தான் கல்யாணம் வேணாம்னு சொல்றேன் ல, எனக்காக அவன் கல்யாணத்தை எதுக்கு தள்ளி போடுறீங்க?" என்று கேட்டான்.
"நீ தானே இந்த வீட்ல மூத்த பையன்... உனக்கு கல்யாணம் பண்ணாம எப்படி பண்ணுறது?" என்று மதியழகன் கேட்க, "எனக்கு பண்ண தோணல" என்றான் கஜன்...
"வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்க போறியா?" என்று தயாளனும் சேர்ந்து கொள்ள, "நேத்ராவை கல்யாணம் பண்ணிக்கோப்பா" என்றாள் துளசி...
சட்டென அவன் விழிகள் நேத்ராவில் படிய, அவள் அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
ஒரு கணம் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, "அம்மா எனக்கு கல்யாணம் வேணாம் புரிஞ்சுக்கோங்க" என்றான்... நேத்ரா என்று சொன்னதுமே அவன் குரல் உடைந்து விட்டது...
ஜெயந்தியோ, "உன் கல்யாணம் நடக்காம ராம் கல்யாணம் நடக்காது" என்றாள்.
"அவங்க இவ்ளோ தூரம் வந்து இருக்காங்க, என்ன பேசிட்டு இருக்கீங்க" என்று கஜன் எகிற, "அது பரவாயில்லை, உங்க அம்மா அப்பா சொல்றதும் சரி தானே... உங்க கல்யாணம் முடியவே சுகானா கல்யாணத்தை நடத்திடலாம்" என்று சொன்ன பார்த்தீபன் அருகே நின்று இருந்த இனியனைப் பார்க்க, அவனும், "எனக்கு ஓகே தான் பார்த்தா" என்று சொன்னான்...
கஜனுக்கு ஆத்திரம் வந்து விட்டது.
"நான் தான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றேன் ல, திரும்ப திரும்ப என் கல்யாணத்தை பத்தி எதுக்கு பேசிட்டு இருக்கீங்க?" என்று ஆக்ரோஷமாக கேட்டவனுக்கு கழுத்து நரம்பும் கோபத்தில் புடைத்துக் கிளம்ப, அவர்களை முறைத்துப் பார்த்து விட்டு, ஒற்றைக் காலை தூக்கி வேஷ்டி நுனியை தூக்கிக் கொண்டே, விறு விறுவென மாடியேறி விட்டான்...
அவன் முதுகை எல்லோரும் அதிர்ந்து பார்த்துக் கொண்டே நிற்க, அவன் பிரச்சனை புரிந்தாலும் அதனை சொல்ல முடியாமல் சக்திவேல் வாய் மூடி நின்று இருக்க, "எல்லாம் சரி ஆயிடும் சம்பந்தி" என்று சக்திவேலிடம் பார்த்தீபன் சொல்லி இருக்க, "ம்ம்" என்று சொன்ன சக்திவேலோ, "நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க, நம்ம எப்படியும் சம்பந்தி தான்" என்றான்...
மதியழகனோ, "என் பையன் பண்ணுன தப்புக்கு, மன்னிச்சிடும்மா" என்று சுகானாவிடம் சொல்ல, "ஐயோ, மாமா, அதெல்லாம் எதுக்கு?" என்று கேட்டு விட்டு, அருகே நின்ற ராம்குமாரை முறைத்தவள், உள்ளே சென்று, அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
ராம்குமாருக்கு அவளை சமாதானப்படுத்த வேண்டும்...
ஆனால் சுற்றி ஆட்கள் இருக்கும் போது என்ன செய்வது என்று தெரியாமல் ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான்...
நேத்ராவுக்கோ கஜனை நினைத்து கவலை...
சற்று நேரம் அங்கேயே நின்றவள், விறு விறுவென மாடியேறி கஜனை தேடி சென்றாள்.
அவனோ மொட்டை மாடியின் சுவரில் இரு கைகளையும் வைத்துக் கொண்டே வெளியே வெறித்துப் பார்த்தபடி நின்று இருந்தான்...
அவன் அருகே சென்ற பெண்ணவளோ, "மாமா" என்றாள் தழுதழுத்த குரலில்...
அவளைப் பார்க்கவில்லை...
அப்படியே நின்று இருந்தான்.
"என்னை கல்யாணம் பண்ணிக்கலாமே மாமா" என்றாள்.
அவனோ பெருமூச்சுடன், மெதுவாக அவளை திரும்பிப் பார்த்து இல்லை என்கின்ற தோரணையில் தலையாட்டியவன், "நீ சந்தோஷமா இருக்கனும் நேத்ரா, ஏன்னா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றான்...
"பிடிக்கும்னா ஏன் மாமா வேணாம்னு சொல்றீங்க?" என்று அவள் அழுகையுடன் கேட்க, "பிடிச்சதால தான் டி வேணாம்னு சொல்றேன், புரிஞ்சுக்கோ" என்று அடிக்குரலில் சீறினான்...
அவன் கண்கள் சிவந்து இருந்தன...
பெண்ணவள் பயந்தே போனாள்...
அவளது அரண்டு போன விழிகளைப் பார்த்து விட்டு, தன்னை நிதானப்படுத்தியவன், "புரிஞ்சுக்கோ நேத்ரா" என்றான் உடைந்து போன குரலில்...
"ஏன்னு சொல்லுங்க மாமா" என்று மீண்டும் அவளிடத்தில் கேள்வி...
பொறுமை இழந்து விட்டான்...
"ஏன்னா என்னால உன் கூட செக்ஸுவல் லைஃப் வாழ முடியாது... என்னோட பழைய ஞாபகங்கள் என்னை குடும்ப வாழ்க்கைல ஈடுபட விடாது... நீ தொட்டாலே அருவருத்து போவேன்... அத நீ தாங்கிப்பியே... இதுக்கு மேல என்னால வெளிப்படையா பேச தெரியல" என்று உடைத்து சொன்னதுமே, அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
இத்தனை நாட்கள் மறைமுகமாக சொல்லி இருக்கின்றான்...
அப்போதெல்லாம் அவளுக்கு புரியவில்லை...
இப்போது புரிந்தது...
அவளுக்காக தானே வேண்டாம் என்கின்றான்...
அது இன்னுமே அவளுக்கு வலித்தது...
அவன் மேல் இருக்கும் அவளது நேசம் ஆழமானது...
அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தவளது கண்களில் நீர் வழிய அதனை துடைத்துக் கொண்டே, "அதெல்லாம் எனக்கு வேணாம் மாமா, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று முடிக்கவில்லை, "அறைஞ்சேன்னா" என்று புறங்கையை ஓங்கியே விட்டான்...
சட்டென அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே இரு அடிகள் பெண்ணவள் பின்னால் வைக்க, முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டே, அவளை ஆழ்ந்து பார்த்தவன், "எதுக்குடி என்னை இவ்ளோ லவ் பண்ணுற?" என்று கேட்டான்...
குரலிலே அப்படி ஒரு வலி...
அவனை அழுகையுடன் பார்த்துக் கொண்டே நின்றவளோ, "பிடிச்சு இருக்கே" என்றாள்.
இதழ் கடித்து, தன்னை நிலைப்படுத்தியவன், "வேணாம் நேத்ரா, உனக்குன்னு ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமையும்... என்னை வாழ்க்கை முழுக்க குற்ற உணர்வுல கூனி குறுக வச்சுடாதே" என்றான்...
"எனக்கு தான் அதெல்லாம் வேணாம்னு சொல்றேன் ல" என்று சொன்னவளை உறுத்து விழித்தவன், "நீ என்ன ஜடமா?" என்று கேட்டான்...
"எனக்கு நீங்க மட்டும் போதும் மாமா" என்றாள்.
நொறுங்கியே போய் விட்டான்.
இவ்வளவு வெளிப்படையாக தனது பிரச்சனையை சொல்லியும், தான் வேணும் என்று கெஞ்சுபவளை என்ன செய்வது என்று தெரியவில்லை...
பாவமாக இருந்தது...
அவள் அழுகை அவனுக்கும் வலித்தது...
"பச் அழாதம்மா" என்று சொல்லிக் கொண்டே, முகத்தை முன்னால் திருப்பிக் கொண்டான்...
அவள் அழுவதை அவனால் பார்க்கவே முடியவில்லை...
மனம் பிசைய ஆரம்பித்து விட்டது...
நேத்ராவை திருமணம் செய்து விடுலாமா? என்று சில கணங்களில் தோன்றியது என்னவோ உண்மை தான்...
ஆனால் அவள் வாழ்க்கை முழுவதும் அழக் கூடாது என்கின்ற எண்ணம் வரும்...
தன்னை அடக்கிக் கொள்வான்...
ஒரு பெருமூச்சுடன் அவள் விழிகளுடன் தனது விழிகளை கலக்க விட்டவன், "இங்க பாரு நேத்ரா, இப்போ உனக்கு இதெல்லாம் வேணாம்னு தோணும், ஆனா அப்படியே வாழ்க்கை முழுக்க தோணாது... ஒரு கட்டத்துல ஆசை வரும், என் கிட்ட எதிர்பார்ப்பு வரும், என்னால அந்த நேரத்துல நீ எதிர்பார்க்கிறத நிறைவேத்த முடியலைன்னா, என் மேல கோபம் வரும், வெறுப்பு வரும், ஏன் இந்த கல்யாணம் பண்ணுனோம்னு யோசிக்க தோணும்... என்னை இப்போ ஆசையா பார்க்கிற இந்த கண், அப்போ என்னை வெறுப்பா பார்க்கும், அத தாங்குற சக்தி எனக்கு இல்ல நேத்ரா, ஏன்னா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், இதுக்கு நீ என்ன பேர் வேணும்னாலும் வச்சுக்கலாம், ஈர்ப்பு, நட்பு, காதல்ன்னு எதுன்னாலும் வச்சுக்கோ... எனக்கே பேர் தெரியல... உன்னை நான் பிடிக்காம உன்னை வேணாம்னு சொன்னேன்னு நீ எப்போவும் நினைச்சிட கூடாது... உன் கிட்ட இப்போவே ஒரு உண்மைய சொல்றேன். நான் மட்டும் ஓகே யா இருந்து இருந்தா, கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணி இருப்பேன், இந்நேரம் நமக்கு குழந்தைங்க கூட இருந்து இருக்கும்... என்னை இவ்ளோ நேசிக்கிற பொண்ண நான் ஏன் டி வேணாம்னு சொல்ல போறேன்?" என்று உருகும் குரலில் சொன்னான்...
அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னான்...
கிட்டத்தட்ட அவள் மீதான நேசத்தை சொல்லி விட்டான்...
ஆனால் அவர்களிடையே பெரிய தடுப்பு சுவர் இருக்கும் போது என்ன செய்து விட முடியும்?
அவளை திருமணம் செய்ய கூடாது என்று அவ்வளவு உறுதியாக இருக்கின்றான்...
அவளுக்காக மட்டுமே.
அவன் பேச பேச, அவளுக்கு அழுகை தான் வந்தது...
இத்தனை நாட்கள் அவனுக்கு தன்னை பிடிக்காது என்று நினைத்து இருந்தாள்.
பிடித்து இருக்கின்றது என்று தெரியும் போது, இன்னுமே வலித்தது...
இருவருக்குமே பிடித்தும் சேர முடியாத நிலையை நினைத்து வலித்தது...
"மாமா" என்றாள் நேத்ரா விம்மலுடன்...
இக்கணம் அவனுக்குள் ஒரு நடுக்கம்...
அவள் தனது மனதை மாற்றி விடுவாளோ என்று ஒரு பயம்...
சொல்லவே கூடாது என்று இருந்த நேசத்தையே அவள் அருகாமையில் உளறிக் கொட்டி இருக்கின்றானே...
கொஞ்ச நேரம் பேசினால் கூட, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விடுவானோ என்கின்ற எண்ணம் தான் தோன்றியது...
அவள் குரலை கொஞ்ச நேரம் கேட்காமல் இருந்தால் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தவனோ, "என்னை கொஞ்சம் தனியா விடு நேத்ரா. ப்ளீஸ்" முன்னால் பார்த்துக் கொண்டே...
அவளுக்கும் அவனை தொந்தரவு செய்ய மனம் இல்லை...
கண்ணீரை துடைத்துக் கொண்டே கீழிறங்கி சென்று விட்டாள்.
அவனுக்கு கீழே செல்லவே மனம் இல்லை...
போனாலே, திருமணம் என்று பேச ஆரம்பித்து விடுவார்களே...
கோபப்பட வேண்டி இருக்கும் என்று மேலேயே நின்று விட்டான்...
இதே சமயம் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டே, சக்திவேலும் பார்த்தீபனும் பேசிக் கொண்டே நடந்தார்கள்...
பார்த்தீபனோ, "ஏன் கஜன் கல்யாணம் வேணாம்னு சொல்றான்" என்று கேட்க, சக்திவேலிடம் பெருமூச்சு...
"அவனுக்கு இஷ்டம் இல்லை" என்று மட்டும் சொன்னான்...
"நம்ம குழந்தைங்க தனியா இருக்கும் போது ரொம்பவே வலிக்கும் ல" என்றான் பார்த்தீபன்...
அவன் விழிகளில் வலியின் சாயல், அவனை திரும்பிப் பார்த்த சக்திவேலுக்கு அவன் சொல்ல வருவது புரிந்து விட, "என்னோட வலியை விட உங்க வலி அதிகம்னு தோணுது" என்றான்...
"ம்ம், பல்லவிக்கு வேற கல்யாணம் பண்ணி பார்க்க எனக்கும் ஆசை தான்... நான் சொன்னா கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பா... குழந்தையோட யார் ஏத்துப்பா? வர்றவன் கூட பணத்துக்காக தான் வருவான்... நான் உயிரோட இருக்கும் வரைக்கும் அவளோட நான் இருப்பேன்... எனக்கு பிறகு? அப்படின்னு யோசிக்கும் போது மனசெல்லாம் என்னவோ பண்ணுது... அர்ஜுன் பார்த்துப்பான் தான்... ஆனா எல்லோருக்கும் தனி தனி குடும்பம் வந்த பிறகு, இதெல்லாம் எப்படி நடக்கும்னு சொல்ல முடியாது ல" என்று நீளமாக பேச, அதனை பார்த்துக் கொண்டே விரக்தியாக சிரித்த சக்திவேலும், "இத தான் நானுமே கஜனுக்கு சொல்லிட்டு இருந்தேன்" என்று ஆரம்பித்தவன் சட்டென நிறுத்தி, பார்த்தீபனைப் பார்த்து, "உங்க பொண்ண என் பையனுக்கு கொடுக்கிறீங்களா?" என்று கேட்டு விட்டான்...
பார்த்தீபனுக்கு தூக்கி வாரிப் போட்டது...
"இதுல எவ்ளோ பிரச்சனை இருக்கு?" என்று அவனுக்கு தயக்கம்...
"கொடுக்க உங்களுக்கு இஷ்டமா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க, கல்யாணத்த நான் நடத்தி வைக்கிறேன்" என்றான்...
பார்த்தீபனோ, "அதுக்கு கஜன் சம்மதிக்கணுமே" என்று சொல்ல, "உங்க பொண்ணுன்னா சம்மதிப்பான்" என்றான்...
"இல்ல புரியல" என்று சொன்ன பார்த்தீபனிடம், "அவன் ஏன் கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னு கேட்டீங்க தானே... சொல்றேன் கேளுங்க" என்று சொல்லி, எல்லாமே சொன்னவன், "உங்க பேத்திக்கு நல்ல அப்பாவா இருப்பான், உங்க பொண்ண நான் என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன், ரெண்டு பேரும் வாழ்க்கைல உடைஞ்சு போனவங்க, இப்போ இல்லன்னாலும் எப்போவோ ஒரு நாள் சந்தோஷமா வாழுவங்க, இப்போ கவுன்சிலிங் போயிட்டு இருக்கான்... அவன் டாக்டர் என்கின்றதால கண்டிப்பா இதுல இருந்து வெளியில் வந்திடுவான்... எனக்கு நம்பிக்கை இருக்கு..." என்று சொன்னதுமே, பார்த்தீபனுக்கு கண்கள் கலங்க, "கஜன் கிட்ட கேட்டு சொல்லுங்க, மேல பேசிக்கலாம்" என்றான்.
பல்லவிக்கு ஒரு வாழ்க்கை என்று சொன்னதுமே, பார்த்தீபனுக்கு ஒரு வகை எதிர்பார்ப்பு...
அவள் குழந்தைக்கு இனிஷியலாக ஒரு நல்லவன் பெயர் வந்தால் சந்தோஷப்படுவான்...
கஜனை பற்றி உச்சி முதல் பாதம் வரை தெரியும்...
அவன் கடந்த கால வாழ்க்கையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றான் என்று தெரிந்ததுமே ஒரு வித பரிதாபம் அவன் மேல்...
எல்லாவற்றுக்கும் மேல், அவனை கட்டிக் கொள்ள அவனது முறைப் பெண் நேத்ரா இருந்தும், அவளுக்காக கல்யாணம் வேண்டாம் என்கின்றான்...
இப்படி சுயநலமாக யோசிக்காத ஆண்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? இது ஒன்று போதாதா அவனுக்கு தனது பெண்ணை கொடுப்பதற்கு...
பார்த்தீபனுக்கு தெரியும் தனது மகளுக்கு தேவை அக்கறையான சுற்றமும், அவள் குழந்தைக்கு அன்பான தந்தையும் என்று...
சக்திவேல் சொன்னதன் படி, என்றோ அவர்களின் வாழ்க்கை இயல்பாக வாய்ப்பிருக்கின்றது...
இருவருமே நல்லவர்கள்...
அன்பானவர்கள்... பொறுப்பானவர்கள்... ஆளுமையானவர்கள்... பாசமானவர்கள்...எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள்...
இருவருமே திருமணம் வேண்டாம் என்று இருப்பவர்கள்...
இந்த திருமணத்தை பேசி முடிக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுவதும் தனித்து தான் வாழ தொடங்கி விடுவார்கள்...
அதனால் இந்த திருமணத்தை நடத்தி ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் பார்த்தீபனுக்கும் சரி, சக்திவேலுக்கும் சரி உறுதியாக மனதில் இருந்தது.
இரு உடைந்த உள்ளங்களை ஒட்ட வைக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்...
கண்டிப்பாக நல்ல நேசம் அவர்களிடையே உருவாகும் என்றும் தெரியும்...
கஜனைப் பற்றிய உண்மையை யாரிடமும் பார்த்தீபன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை...
எல்லோரும் அவனைப் போல இயல்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்...
அதனையே காரணம் காட்டி கல்யாணத்தை நிறுத்த வாய்ப்பும் இருக்கின்றது...
பல்லவியிடம் மட்டும் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டான்...
உரியவளுக்கு தெரிய வேண்டும் தானே...
சக்திவேலும் கஜனும் ஒரே வகை சிந்தனை உடையவர்கள் தான் போலும்.