நிலவு 21
வந்ததில் இருந்து இடக்கு முடக்காக அல்லவா பேசிக் கொண்டு இருக்கின்றான்.அவன் அருகில் இருந்த பல்லவியோ, "அர்ஜுன்" என்று அவன் கையில் அழுத்தத்தைக் கொடுக்க, ராம்குமாரோ, "இவனே கல்யாணத்தை நிறுத்திடுவான் போல" என்று புலம்பிக் கொள்ள, கஜனோ, "அவனுக்கு கோபம் என் மேல தான்" என்று சொல்லிக் கொண்டே, அவன் அருகே வந்தவன், "அர்ஜுன்" என்று சொல்ல, அவனை ஏறிட்டுப் பார்த்தான்...
சக்திவேலோ, "தம்பி கொஞ்சம் சூடா இருக்கார் போல, இளநீ குடிச்சா சரி ஆயிடுவார்" என்று சொல்ல, கஜனுக்கு சிரிப்பும் வந்து விட்டது...
சக்திவேலிடம் அர்ஜூனால் இந்த திமிரை காட்ட முடியுமா? கலாய்த்து விடுகின்றான் என்று தெரிந்தது...
சிரித்தால் அர்ஜுனை இன்னும் சீண்டுவது போல இருக்கும் என்று நினைத்த கஜனோ, "நான் பேசிக்கிறேன் அப்பா" என்று சக்திவேலிடம் சொல்லி விட்டு, அர்ஜுனைப் பார்த்து, "கொஞ்சம் பேசலாமா?" என்று கேட்டான்.
ஏற்கனவே சக்திவேல் கிண்டல் செய்ததில் கோபமாக இருந்தவனுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.
"பேச எதுவும் இல்லை" என்று அவன் சொல்ல, "டேய் போடா" என்று பல்லவி அதட்ட, அங்கே எல்லோரும் அவனையே பார்க்க, சின்ன பையன் போல அடம் பிடிப்பது சங்கடமாக இருந்தது...
"என்னோட பேச என்ன பயம்?" என்று அவனை சீண்டும் வண்ணம் கஜன் கேட்க, "எனக்கென்ன பயம்?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து கொண்டான்...
கஜனும் அவனை அழைத்துக் கொண்டே, மொட்டை மாடிக்கு வர, அவனும் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டே, அவனை உறுத்து விழித்தபடி நின்றான்.
"அன்னைக்கு நீ பண்ணுனதும் தப்பு, நான் பண்ணுனதும் தப்பு, தப்புக்கு தப்பு சரி ஆயிடுச்சு... இப்போ எதுக்கு பிரச்சனை பண்ணுற?" என்று நேரடியாக கேட்டு விட்டான்.
"நான் ஒன்னும் பிரச்சனை பண்ணலயே" என்று சொல்ல, "ம்ம் சரி பண்ணல" என்று சொல்லிக் கொண்டே, கையை நீட்டி, அவன் கன்னத்தை தட்டப் போக, அவனோ சட்டென முகத்தை பின்னால் எடுத்தான்.
"அடிக்க வரல டா" என்று சொல்லிக் கொண்டே, அவன் கன்னத்தை தட்டியவன், "சாரி" என்றான்...
அர்ஜுன் அவனை முறைத்துக் கொண்டே, அங்கிருந்து நகரப் போக, அந்த நேரம், பல்லவியும் அங்கே வந்தவள், "அர்ஜுன், எல்லாம் ஓகே யா?" என்று கேட்க, அவனோ அவளையும் முறைத்து விட்டு கீழிறங்கி சென்றான்.
"உன் தம்பி என்ன இவ்ளோ சூடா இருக்கான்" என்று கஜன் அவளிடம் கேட்க, "அவன் கோபக்காரன் தான்" என்றாள்.
அவனோ, அங்கே இருந்த கட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டே, "அப்புறம் டாக்டர் செக்கப் போறியா?" என்று கேட்க, "ம்ம், டாக்டர் ராம் பிரசாத் கிட்ட போறேன்" என்றாள்.
"ஹீ இஸ் ஜீனியஸ்" என்றவனோ மேலும், "வீட்ல எல்லாம் ஓகேயா?" என்று கேட்டான்.
"அம்மா பேசுறது இல்லை, அப்பா, ஓகே தான்" என்றாள் பெருமூச்சுடன்...
"இன்னுமா பேசல?" என்று அவன் கேட்க, இதழ்களை பிதுக்கியவளோ, "குழந்தை பிறந்தா என்னால இன்னொரு வாழ்க்கைக்குள்ள போக முடியாதுன்னு நினைக்கிறாங்க, அந்த அக்கறைல வந்த கோபம் தான்" என்றாள்.
"அவங்க நிலைல இருந்து பார்க்கும் போது சரியா தான் இருக்கு" என்றவனிடம், "ஆனா இன்னொரு வாழ்க்கை எனக்கு வேணாம்" என்றாள்.
"ஏன் வேணாம்? லைஃப் எப்படி வேணும்னாலும் மாறலாம்" என்று சொன்னவனை ஆழ்ந்து பார்த்தவள், "இன்னொரு வாழ்க்கைல நான் எப்படி நிம்மதியா வாழ முடியும்? என் குழந்தையை ஏத்துக்கணும்... எல்லாத்துக்கும் மேல எனக்கு இந்த கல்யாணம் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு... வர்றவன் யார் கூட கனெக்ஷன்ல இருக்கான்னு யோசிச்சிட்டே இருக்கணும்" என்று நிதானமாக பேசினாள்.
வாழ்க்கை அவளுக்கு நிறையவே நிதானத்தையும் பக்குவத்தையும் கற்றுக் கொடுத்து இருக்கின்றது என்று அவள் பேச்சில் இருந்து அறிந்து கொண்டான்...
"ம்ம், புரியுது... இந்த காயம் எல்லாம் ஆற நாள் ஆகும்... அதுக்கு பிறகு இன்னொரு வாழ்க்கை பத்தி யோசி... இன்னும் உனக்கு வயசாயிடல, உலகத்துல எல்லா ஆம்பிளைங்களும் கெட்டவனுங்க இல்ல" என்று சொல்ல, அவளும் மென்மையாக சிரித்துக் கொண்டே, "பார்க்கலாம்" என்று மட்டும் சொன்னாள்.
"சரி அத விடு, பேபியோட துடிப்பு ஃபீல் பண்ணுறியா?" என்று கேட்டான்.
தாய்மை என்றால், அவனிடமும் ஒரு நெகிழ்வும் மென்மையும் வந்து விடும் போலும்...
"ம்ம், இப்போவும் துடிச்சிட்டு தான் இருக்கா" என்றவள் ஒரு கணம் நிறுத்தி, "இருக்காவா? இருக்கானான்னு தெரியலையே" என்றாள்.
"பிறந்த அப்புறம் பார்த்துக்கோ" என்றான்.
"உங்களுக்கு ஸ்கான் பண்ணுனா தெரியும் தானே" என்று கேட்டாள்.
"சொல்ல கூடாதும்மா" என்றான் சிரித்துக் கொண்டே...
"சரி விடுங்க, பிறந்த பிறகே பார்த்துக்கிறேன்" என்று சொல்ல, அவனுக்கோ தனக்குள் உறுத்திக் கொண்டு இருந்த கேள்வியை கேட்க வேண்டும் போல இருந்தது...
"ஒன்னும் கேட்கணும், கோபப்பட மாட்டியே" என்றான்.
அவள் அவனிடம் இனி கோபப்படுவது நடக்காதே...
அவள் குழந்தையை மீட்டுக் கொடுத்தவன் ஆயிற்றே...
"இல்ல மாட்டேன்" என்று அவள் சொல்ல, "உன் விஷயம் கேள்விப்பட்டேன்... நீ ஒரு அறை கூட அறையாமலா வந்த?" என்று கேட்க, அவள் முகம் சட்டென இறுக, பெருமூச்சுடன், அங்கே தள்ளி தெரிந்த மரத்தைப் பார்த்துக் கொண்டே, "மொத்தமா வேணாம்னு தோணிச்சு... அதனால சண்டை பிடிக்கவும் தோணல" என்றவள் ஒரு கணம் நிறுத்தி, "அர்ஜுன் அடிச்சிட்டு வந்தான்" என்றாள்.
"அட உன் தம்பி, ஹீரோயிசம் உம் பண்ணுவானா? நான் வில்லத்தனம் மட்டும் தான் பண்ணுவான்னு நினச்சேன்" என்று சொல்ல, அவளோ மென்மையாக சிரித்துக் கொண்டே, "அவன் நல்லவன் தான்... முன் கோபம் அதிகம்... அன்னைக்கு உங்க தங்கச்சிக்கு கை நீட்டுனதுக்கு சாரி" என்றாள்.
அவனோ, "இன்னும் அந்த விஷயத்துல அவன் மேல கோபம் போகல தான்... ஆனா வேற வழி இல்லை... மறந்திடுறேன்" என்றான்.
பல்லவியோ, "நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா?" என்று கேட்டாள்.
அவனும், "தோணலையே" என்று இதழ் பிதுக்கி சொல்ல, "உங்க வீட்ல உங்களுக்கு முதல் ராமுக்கு கல்யாணம் பண்ண எப்படி சம்மதிச்சாங்க" என்று அடுத்த கேள்வி வந்தது...
கஜனோ, "அத அப்புறம் சொல்றேன்" என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்டே, "என்ன படிச்சு இருக்க?" என்று கேட்டான்.
"நான் எஞ்சினியரிங் படிச்சேன், இப்போ பி எச் டி பண்ணிட்டு இருக்கேன், இடைல என்னோட முட்டாள் தனத்தால எட்டு மாசம் கேப் விழுந்திடுச்சு... ஃபைனல் தீஸிஸ் கொடுத்துட்டேன்... இனி வைவா இருக்கு, அதுக்கு படிக்கணும்" என்று சொல்ல, "பிரில்லியண்ட், அப்போ இனி டாக்டர் பல்லவி பார்த்தீபன்" என்று சொல்ல, அவளும் முத்துப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டாள்.
இருவரின் புன்னகையும் மனதார இருந்தது...
உடைந்த உள்ளங்களுக்கு ஏதோ ஒரு இதம் இந்த சம்பாஷணையில் இருவருக்குமே கிடைத்தது...
அவர்கள் பேசிக் கொண்டு இருந்த போதே, மேலே வந்த ராகவியோ, "இங்கேயா நிக்கிறீங்க அண்ணி, உங்கள் கீழ தேடுறாங்க" என்றாள்.
"அண்ணியா?" என்று பல்லவி கேட்க, ராகவியும், "சுகானா அண்ணியோட அக்கா, அண்ணி தானே" என்று சொல்ல, "அதுக்குள்ள முறையா?" என்று கேட்டான் கஜன்...
"ஆமா" என்று பெண்ணவள் கண்களை சிமிட்ட, அவள் அருகே சென்ற பல்லவியோ, அவள் கன்னத்தை வருடி, "மறுபடியும் சாரி" என்றாள்.
ஏனோ அர்ஜுன் செய்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை...
அதுவும் அந்த பெண் இப்படி அன்பாக முறை வைத்து அழைக்கும் போது, அர்ஜுன் அவளுக்கு அடித்ததை நினைக்கவே ஆதங்கமாக இருந்தது.
"ஐயோ அதெல்லாம் எப்போவோ மறந்துட்டேன்" என்று சொன்ன ராகவியும் பல்லவியுடன் கீழிறங்கி சென்றாள்.
இதே சமயம், தயாளனோ அர்ஜுனிடம், "அன்னைக்கு யாரோ அடிச்சாங்கன்னு உன் அக்கா சொன்னாங்களே, யார் அது?" என்று சபை நடுவே கேட்டு விட, அர்ஜுனுக்கு சுரென்று கோபம்...
'உங்க வீட்டு பையன் தான்' என்று சொல்லி, தன்னை தானே அவமானப்படுத்த அவனுக்கு இஷ்டம் இல்லை... மேலும் கஜன் அடித்ததை சொன்னால், தான் ராகவிக்கு அடித்ததையும் சொல்ல வேண்டி இருக்கும்... பெண் மீது கை வைத்தது தெரிந்தால், எல்லோர் பார்வையும் அவன் மீது தான் திரும்பும்... முக்கியமாக பார்த்தீபனுக்கு சுர்ரென்று கோபம் வரும்...
வந்ததில் இருந்தே அவமானப்பட்டுக் கொண்டல்லவா இருக்கின்றான்...
பார்த்தீபனோ, "அடிச்சாங்களா? யார் டா?" என்று சற்று காட்டமாகவே கேட்டான்...
மகன் அடி வாங்கி இருக்கின்றான் என்றால் அவனால் தாங்கிக் கொள்ள முடியுமா?
ஜீவிதனுக்கும் ஆத்திரம்...
"யார்டா அடிச்சது? அது தான் இந்த ஊருக்கு வர முடியாதுன்னு சொன்னியா?" என்று கேட்க, அர்ஜுனுக்கு ஐயோடா என்று ஆகி விட்டது...
"யாருமே அடிக்கல, என்னை கொஞ்சம் சும்மா விடுங்க" என்று சொல்லிக் கொண்டே, விறு விறுவென எழுந்து சென்று வெளியே நின்று விட்டான்...
சக்திவேலோ பார்த்தீபனைப் பார்க்க, அவனோ, "கொஞ்சம் கோபக்காரன்... நல்ல பையன் தான்... சட்டுன்னு கை நீட்டிடுவான்..." என்று சொல்ல, "சின்ன பையன் தானே" என்று ஆரம்பித்த சக்திவேலோ சட்டென நாக்கை கடித்துக் கொண்டே, "ஐயோ, இத சொன்னா கோச்சுக்க போறான்" என்று சொல்ல, எல்லோரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள்...
வெளியே நின்ற அர்ஜுனுக்கு அவர்கள் சிரிப்பது கேட்டது...
அவமானமாக இருந்தது...
வெளியிலேயே இருந்த கட்டில் அமர்ந்து கொண்டே, மாமரத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் விழிகள் அங்கே தள்ளி நின்ற வந்தனாவில் படிந்தது...
அழகாக இருந்தாள்.
"இது யாரோட பொண்ணு?" என்று யோசித்துக் கொண்டே இருந்தவன் அருகே வந்து அமர்ந்த பல்லவியோ, "என்னடா?" என்று கேட்க, "இதுக்கு தான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன்" என்றான்.
"சரி விடு, சுகானா கல்யாணம் வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... அவங்களுக்கு நீ சின்ன பையன் தான்... அவங்க மூத்த பையனை வச்சு உன்னை எட போடுறாங்க" என்று சொல்ல, அவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டான் அவ்வளவு தான்...
இதே சமயம் சுகானாவை சுற்றி ராம்குமாரின் வீட்டு பெண்கள் அமர்ந்து இருந்தார்கள்...
ராம்குமாருக்கோ, குண்டு எப்போது வெடிக்கும் என்கின்ற மனநிலை தான்...
முடிந்தவரை அங்கே நிற்காமல் நழுவி செல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
சுகானா அருகே அமர்ந்து இருந்த சக்திவேலின் மனைவி துளசியோ, "எத்தனை மாசம் மா?" என்று கேட்க, சுகானாவுக்கு இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை...
துளசியை புருவம் சுருக்கிப் பார்த்தவள் மனமோ, 'பல்லவியை கேக்கிறாங்க போல' என்று நினைத்துக் கொள்ள, "அஞ்சு மாசம் அத்தை" என்றாள்.
"அஞ்சு மாசமா? வயிறு ஒன்னும் பெருசா தெரியலையே" என்று விஜயா சொல்ல, சுகானாவின் மனமோ, 'பெருசா தானே இருக்கு... இவங்க என்ன சொல்றாங்கன்னு தெரியலையே' என்று நினைத்துக் கொண்டாள்.
அக்கணம், அங்கே பப்பாளி ஜூஸை கொண்டு வந்து ராகவி அவர்களுக்கு நீட்டினாள்.
சுகானாவும் அதனை எடுக்க முற்பட, "ஐயோ இதெல்லாம் நீ குடிக்க கூடாதும்மா" என்று தடுத்த துளசியோ, "அண்ணிக்கு இளநீ கொண்டு வந்து கொடும்மா" என்றாள்.
ஜெயந்தியோ, "அப்போ தான் குழந்தைக்கு நிறைய முடி வளரும்" என்று சொல்ல, சுகானாவுக்கு ஏதோ தவறாக பட்டது...
"நான் எதுக்கு இளநீ குடிக்கணும்?" என்று அவள் கேட்க, ஜெயந்தியோ, "ராம் எல்லாமே சொல்லிட்டான்" என்றாள்...
சுகானாவுக்கு புரியவில்லை...
"என்ன சொன்னார்?" என்று கேட்க, "கஜனுக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் ராமுக்கு பண்ணலாம்னு இருந்தோம், ஆனா இப்படி அவசரப்பட்டுட்டீங்களே, டாக்டர் தானே கொஞ்சம் கவனமா இருந்து இருக்கலாம் ல" என்று ஜெயந்தி ஆதங்கத்தை கொட்டி விட, தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...
என்ன பேசிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைக்கவே உடலில் ஒரு நடுக்கம்... ஒரு முத்தத்துக்கே அவ்வளவு கட்டுப்பாடு போட்டவள், கர்ப்பம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன?
துளசியோ, "அத விடுங்களேன், பொண்ணு சங்கடப்படுறா போல" என்று சொல்ல, கஷ்டப்பட்டு சிரித்த சுகானாவோ, "இதோ வந்திடுறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள், தேடிச் சென்றது என்னவோ ராம்குமாரை தான்...
அவனோ பயத்தில், வீட்டின் பின் பக்கம் நின்று இருந்த ஜீப்பில் சாய்ந்து நின்று இருந்தவனோ, 'இன்னைக்கு என்ன ஆக போகுதோ?' என்று நினைத்து முடிக்கவில்லை, "ராம்" என்று அவனை அழுத்தமாக அழைத்துக் கொண்டே, அவன் முன்னே வந்து நின்று இருந்தாள் சுகானா.
Last edited: