நிலவு 20
அறைக்குள் வந்து ஷேர்ட்டை போட்டுக் கொண்டே, தன்னையே பார்த்தான் கஜன்...தான் செய்வது சரியா தவறா என்று தெரியாவில்லை...
அவள் மனதில் ஆசையை வளர்க்கின்றோமோ என்று தோன்றிக் கொண்டு இருந்தது...
அவன் மனமும் இப்போது தடுமாறிக் கொண்டு தானே இருக்கின்றது...
தடுமாற வைத்து விட்டாளே இந்த சின்னப் பெண்...
தவறு என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டான்...
அவள் மீது பாசம் என்றுமே இருக்கும்...
அந்த பாசம் இப்போது மெதுவாக நெசமாகின்றது...
அந்த நேசத்தில் கண்டிப்பாக காமம் இல்லை... அவள் விழிகளை தாண்டி அவன் பார்த்தது கூட இல்லை...
தூய நேசம் அது...
தன் மேல் உயிரையே வைத்து இருக்கும் பெண்ணவளை சந்தோஷமா வைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றான்...
திருமணம் செய்தால் கூட மனதளவில் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும்...
ஆனால் உடலளவில்? என்கின்ற கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.
முதல் முறை தன்னையே வெறுத்தான்...
பெண்ணுடல் எல்லாம் அவனுக்கு புதிதல்ல...
ஆனால் எந்த பெண் மீதும் மோகம் என்கின்ற ஒன்று அவனுக்கு இதுவரை தோன்றவே இல்லை...
நடிகைகளை ரசிக்க வேண்டும் என்று கூட அவன் நினைத்தது இல்லை.
நேத்ரா மட்டும் எம்மாத்திரம்... அவளிடமும் எந்த மோக உணர்வும் அவனுக்கு தோன்றவும் இல்லை...
அவள் மீது நேசம் இருந்தது...
அவள் அழும் போது வலித்தது...
தன் மேல் அவள் காட்டும் தூய அன்பை அவனால் மொத்தமாக நிராகரிக்க முடியவில்லை...
தவிப்பாக இருந்தது...
அவன் வீட்டுப் பெண் அவள்...
சின்ன வயதில் இருந்தே கூடவே வளர்ந்தவள்...
அவள் அழக் கூடாது என்று நினைக்கின்றான்...
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றான்...
ஆனால் எப்படி? என்கின்ற கேள்விக்கு பதில் இல்லை...
அவனுக்கு தான் பெண்கள் மீது மோகம் இல்லை...
ஆனால் ஒரு சராசரி ஆணினதும் பெண்ணினதும் அடிப்படை உணர்வுகள் அவனுக்கும் தெரியும்...
அவள் தேவைகளை அவன் எப்படி பூர்த்தி செய்வான்? அவனால் அது முடியுமா?
கலவி என்று நினைத்தாலே அவன் மேனி அருவருகின்றது...
வரக் கூடாத நினைவுகள் எல்லாம் வந்து இம்சிக்கின்றன...
திருமணம் செய்த பெண் தன்னை தீண்டும் போதெல்லாம் அவனால் அந்த நினைவுகளை ஒதுக்க முடியுமா? அந்த கணம் அந்த நினைவு வந்து, சட்டென அவள் தொடுகையை அருவருத்து விலகி விட்டால், அந்த பெண்ணின் மனநிலை என்ன ஆகும்?
எவ்வளவு வலிக்கும்?
அந்த வலியை அவன் நேத்ராவுக்கு எப்படி கொடுப்பான்?
அவள் விழிகள் அவன் மேனியில் அடிக்கடி படிவதை கண்டு இருக்கின்றான்...
சற்று முன்னர் கூட அவனை ரசனையாக பார்த்தாளே...
சாதாரணமாக பெண்களுக்கு தோன்றும் உணர்வு அது...
அதனை அவனால் தவறாக நினைக்க தோன்றவில்லை...
இயல்பான ஒன்று தான்...
எந்த பெண்ணுமே தன்னவனை, தீண்ட, முத்தமிட, ஸ்பரிசிக்க ஆசை கொள்வாள்...
அந்த ஆசையை அவனால் நிறைவேற்ற முடியுமா? என்று அவனுக்கே தெரியவில்லை...
அவள் ஸ்பரிசத்திற்கு பதிலாக சின்ன வெறுப்பை அவன் முகத்தில் காட்டி விட்டாலே பெண்ணவள் நொறுங்கி விடுவாள்...
அந்த குற்ற உணர்வு அவனுக்கு வாழ்க்கை முழுவதுமே வலிக்கும்...
யோசித்துக் கொண்டே ஷேர்ட்டின் பட்டன்களை போட்டு முடித்தவன் மனம் இன்னுமே சமநிலை அடையவில்லை...
"பச்" என்றபடி கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டான்.
நேத்ரா விஷயத்தில் அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...
ஒரு வித அழுத்தமாக இருந்தது...
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டே வெளியேற, ராம்குமாரும் வெண்ணிற வேஷ்டி மற்றும் நீல நிற ஷேர்ட் சகிதம் ஹாலுக்குள் வந்தான்...
முகத்தில் ஒரு பதட்டம்...
அவன் அருகே வந்த கஜனோ, "என்னடா?" என்று கேட்க, "நம்ம சொன்ன பொய்யை பத்தி சுகானா கிட்ட சொல்லாம விட்டேன்" என்று சொன்னதுமே கஜனுக்கு அதிர்ச்சி...
"ஏன் ராம் சொல்லாம விட்ட?" என்று அதட்டினான்...
"சொன்னா அவ அக்செப்ட் பண்ணிக்க மாட்டா" என்று சொல்ல, "நம்ம ஆட்கள் யாரும் சொன்னா பிரச்சனை ராம்" என்றான்.
"அது தான் பயமா இருக்கு" என்று சொல்ல, "சொதப்பாம பார்த்துக்கணும்" என்று முணுமுணுத்த சமயம், பார்த்தீபனின் வீட்டினரின் வண்டி வரிசையில் வந்து அவர்கள் வீட்டின் வாசலில் நின்றது.
வரும் போது சுகானாவையும் அழைத்து வந்து இருக்க, முதலில் பார்த்தீபன் தான் இறங்கினான்...
அவனை நோக்கி சென்ற சக்திவேலோ, "வணக்கம், வாங்க சம்பந்தி" என்று மென் புன்னகையுடன் அழைக்க, அவனும் மென்மையாக புன்னகைத்தவன், "வணக்கம்" என்று சொல்லிக் கொண்டே, பைரவியை காட்டி, "என்னோட வைஃப்" என்று சொல்ல, பைரவியும், மென் புன்னகையை சிந்திக் கொண்டாள்.
பைரவிக்கு ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் கஜன் நிற்பது தெரிந்தது தான்...
ஆனால் அவன் பக்கம் திரும்பவே இல்லை...
கஜன் அவளை சாதாரணமாக பார்த்துக் கொண்டான்...
அவன் எதனைப் பற்றியும் அலட்டிக் கொள்ளவும் இல்லை.
அதனை தொடர்ந்து, ஒவ்வொருவராக அறிமுகமானார்கள்...
சுகானாவோ காரில் இருந்து இறங்கியதுமே அங்கே நின்ற ராம்குமாரைப் பார்க்க, அவனோ வலுக்கட்டயமாக சிரித்துக் கொண்டான்.
'இவர் முகம் கொஞ்ச நாளா ஏன் இப்படி இருக்கு?' என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவே இல்லை...
"நீ தான் சுகானாவாம்மா" என்று ஜெயந்தி அவள் கையினை பற்றிப் பேச ஆரம்பிக்க, ராம்குமாருக்கோ நெஞ்சில் நீர் வற்றிப் போனது...
"அண்ணா உளறிடுவாங்களோ?" என்று ராம்குமார் தடுமாற, "பார்த்துக்கலாம் டா" என்றான் கஜன்...
ஜீவிதனைக் காட்டிய பார்த்தீபனோ, "என்னோட மருமகன்... போலீஸ் இன்ஸ்பெக்டரா இருக்கான், இங்க தான் கூடிய சீக்கிரம் ட்ரான்ஸ்ஃபர் ல வர இருக்கான்" என்று சொன்னான்.
"அப்படியா? ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லிக் கொண்டான் சக்திவேல்...
எல்லோரும் இறங்கி விட்ட போதிலும் பல்லவியும் இறங்கவில்லை, காரினை ஓட்டி வந்த அர்ஜுனும் இறங்கவில்லை...
"இறங்கலையா டா?" என்று பல்லவி கேட்க, "நீ முதல் இறங்கு" என்றான் அவன்...
ஏற்கனவே இங்கே வந்து இருக்கின்றாள்...
அதனை பற்றி பார்த்தீபனிடம் சொல்லி விடுவார்களோ என்று ஒரு தடுமாற்றம்... அர்ஜுன் அடி வாங்கிய விஷயம் யாருக்கும் தெரியாதே...
அதற்கும் மேல், திருமணமாகாவில்லை என்று அவர்கள் வீட்டில் சொல்லி இருந்தாள்.
இப்போது மேடிட்ட வயிற்றுடன் இறங்கினால் என்ன நினைப்பார்கள் என்று யோசனை வேறு...
கையை பிசைந்து கொண்டே அவள் இருக்க, சக்திவேலோ, "எங்க உங்க ஆட்களை காணோம், ஒரு பொண்ணு ஒரு பையன் ல" என்று கேட்டான்.
"ஆமா, இன்னும் கார்லயே இருக்காங்க போல, பல்லவி" என்று அழைக்க, அவளுக்கோ திக்கென்று இருந்தது...
அந்த பெயரைக் கேட்டதுமே, கஜனிடம் ஒரு ஆர்வம்...
அவளை கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்னே பார்த்து இருக்கின்றான்...
குழந்தை விஷயம் என்ன ஆயிற்று என்று ஒரு யோசனை...
கார் கதவையே பார்த்துக் கொண்டு இருந்தான்...
பல்லவியும் கையை பிசைந்து விட்டு, கார் கதவை திறந்து கொண்டே இறங்கி இருந்தாள்.
மெரூன் நிற புடவை தான் கட்டி இருந்தாள்.
மேடிட்ட வயிறு அப்பட்டமாக தெரிந்தது.
அவளை புருவம் சுருக்கிப் பார்த்த சக்திவேலின் விழிகள் அவள் மேடிட்ட வயிற்றில் பதிந்து மீள, "கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்டான்...
அவள் தான் ஆகவில்லை என்று சொல்லி இருந்ததாளே.
"டைவர்ஸ் ஆயிடுச்சு" என்று பார்த்தீபனிடம் இருந்து பதில் வந்தது...
அவளுக்காக அவனே பேசினான்...
இப்போது அவள் ஏன் திருமணமாகவில்லை என்று சொன்னாள் என்று அங்கே நின்ற எல்லோருக்கும் புரிந்தது...
யாரும் தூண்டி துருவவும் விரும்பவில்லை...
"ஓஹ்" என்று சாதாரணமாக சொன்ன சக்திவேலோ, "இங்க பாரும்மா, என்ன வேணுமோ கேட்டு சாப்பிடு... மாசமா இருக்கிற பொண்ணு தானே, புடிச்சது எல்லாமே சாப்பிடணும்" என்று சொல்ல, அவனை ஏறிட்டுப் பார்த்த பல்லவியோ, "ம்ம்" என்று தலையை ஆட்டிக் கொண்டாள்.
அவள் விழிகள் மெதுவாக எல்லோரிலும் படிந்து கடைசியாக கஜனில் நிலைக்க, அவனோ அவள் மேடிட்ட வயிற்றை பார்த்து விட்டு, விழிகளைப் பார்த்தவன், "ஓகே யா?" என்று இதழசைத்துக் கேட்க, அவளும் ஆம் என்கின்ற ரீதியில் தலையசைத்துக் கொண்டாள்.
இதனை பார்த்துக் கொண்டு இருந்த ராம்குமாரோ, "இது என்ன சைலன்ட் சைன்?" என்று கேட்டான்.
அவனை திரும்பிப் பார்த்தவனோ, "என்னோட பேஷண்ட் டா" என்று சொல்ல, "ஓஹ்" என்று சொல்லிக் கொண்டான் அவன்.
அடுத்து, "அர்ஜுன்" என்று பார்த்தீபன் அழைத்ததும், காரை திறந்து கொண்டே இறங்கினான் அவன்...
நல்ல விஷயம் என்று சொல்ல சொல்ல கேட்காமல் கருப்பு நிற ஷேர்ட் மற்றும் ஜீன்ஸ் தான் அணிந்து வந்தான்...
அடுத்தவர்கள் எல்லோரும் புன்னகைத்தார்கள் அவனைத் தவிர...
விழிகளில் ஒரு வகை அனல்..
சிரிக்க கூட அவன் இதழ்களுக்கு தோன்றவில்லை...
முகமே இறுக்கமாக இருந்தது...
"என்னோட பையன் அர்ஜுன்... எல்லா பிஸினஸும் அவன் தான் பார்த்துக்கிறான்" என்று சொல்ல, "பெருசா வயசு இருக்கும்னு தோணலையே... சின்ன வயசுலயே இவ்ளோ பார்த்துக்கிறது பெரிய விஷயம் தான்" என்றான் சக்திவேல்...
அதற்கும் சிரிக்கவில்லை...
"ம்ம்" என்று ஒரு தலையசைப்பு மட்டுமே...
சட்டென கஜன் முஷ்டியை இறுக்கிக் கொள்ள, ராம்குமாரோ, "திமிரை பார்த்தியா?" என்று கேட்டான்.
"அன்னைக்கு இன்னும் ரெண்டு சாத்தி இருக்கணும்" என்றான் கஜன்...
பார்த்தீபனுக்கே அவன் செயல் கொஞ்சம் கடுப்பாகி விட, "அவன் சுபாவமே அப்படி தான்" என்று சொன்னான்...
சக்திவேலோ, "அதுல என்ன இருக்கு, சின்ன பையன் தானே" என்று சொல்ல, "நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை" என்று முகத்தில் அடித்த போல பதில் வந்தது.
அவன் ஒன்றும் சின்ன பையன் இல்லை தான்... கஜனுடன் ஒப்பீடு செய்தே, எல்லோரையும் சின்ன பையனாக தான் நினைக்க தோன்றியது சக்திவேலுக்கு...
அர்ஜுன் முகத்தில் அடித்த போல பேசியதுமே, "இவன் வேற என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறான் டா" என்று கஜன் ராம்குமாரிடம் முணுமுணுக்க, "சாரி தம்பி பெரிய பையன் தான், ஆறடி இருப்ப தானே" என்று சக்திவேல் மென் சிரிப்புடன் கிண்டலாக சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய, இப்போது முகம் இறுகியது என்னவோ அர்ஜுனுக்கு தான்...
ராகவிக்கும் வந்தனாவுக்கும் சிரிப்பு வேறு வந்து விட்டது... கஜன் இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
ராகவிக்கோ அடக்க முடியாமல் போய் விட, ஒரு மெல்லிய சத்தத்துடன் அவள் சிரிப்பு வெளியே வந்து விட்டது...
ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தவன் விழிகள் சட்டென சிரிப்பு வந்த திசையில் திரும்ப, அவளோ, கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே, அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு, அருகே நின்ற கஜனைப் பார்க்க, அவனும் ராகவி தோளில் கையை போட்டுக் கொண்டே, "உள்ளே வாங்க அர்ஜுன் சார்" என்றான்...
அர்ஜுன் சாரில் ஒரு அழுத்தம்...
கஜனைப் பார்த்ததுமே, அவனுக்கு அந்த அறை தான் நினைவுக்கு வந்தது...
சட்டென கண்களை மூடி திறந்தவனுக்கு உள்ளே செல்ல இஷ்டமே இல்லை...
வேகமாக மறுபக்க திரும்ப போனவனின் தோளில் கையை போட்ட ஜீவிதனோ, "உள்ளே வாடா, சின்ன பையன்னு சொன்னதுக்காக எல்லாமா கோவிச்சுட்டு போவ?" என்று கேட்டான்...
அர்ஜுனும் கோபத்தை அடக்கிக் கொண்டே, முன்னே பார்த்துக் கொண்டே ஜீவிதனுடன் நடந்தான்...
கஜனோ, "ஹெலோ" என்று கை குலுக்கி ஜீவிதனிடம் பேச, அர்ஜுன் சட்டென ஜீவிதன் தனது தோளில் போட்டு இருந்த கையை உதறி விட்டு உள்ளே சென்று அங்கே அமர்ந்து விட்டான்...
அவனுக்கு யாரையும் பார்க்கவே பிடிக்கவில்லை...
அலைபேசியை பார்த்துக் கொண்டே இருந்தான்...
பார்த்தீபனா, "அந்த காணில சூப்பர் மார்க்கெட் கட்டலாம்னு முடிவு எடுத்து இருக்கோம் சம்பந்தி" என்று சொல்ல, சக்திவேலும், "நானும் என்னடா பேச்சை காணோம்னு நினச்சேன், கண்டிப்பா கட்டிடலாம்" என்று சொல்ல, "கஜனும் இப்போ இங்க தானே, அவனும் பார்த்துக்குவான்" என்று சக்திவேல் சொல்ல, "எங்க சூப்பர் மார்க்கெட்டை உங்க பையன் எதுக்கு பார்த்துக்கணும்" என்று மீண்டும் முகத்தில் அடித்த போல ஒரு கேள்வி அர்ஜுனிடம் இருந்து...