ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 1

pommu

Administrator
Staff member

நிலவு 1

காலை ஐந்து மணி இருக்கும், அலாரம் அடித்துக் கொண்டு இருந்தது.

மெதுவாக கண்களை விரித்தாள் பெண்ணவள். எட்டி அலாரத்தை அணைத்து இருந்தாள்.

அவளை சுற்றி அணைத்தபடி, அவள் கணவனான சுதர்ஷனின் கைகள் இருக்க, மெல்லிய புன்னகை அவள் இதழ்களில் தவழ்ந்தது.

இதழ்கள் சிரித்தாலும், இதயத்தில் ஒரு மெல்லிய வலி ஊடுருவுவதை அவளால் தடுக்க முடியவில்லை...

அவன் கையை தூக்கி தள்ளி வைத்து விட்டு எழுந்து அமர்ந்தாள்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவனுடனான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றாள்...

அன்பானவன் அவன்...

சந்தோஷமான திருமண வாழ்க்கை தான்.

அவன் வகையில் அவளுக்கு எந்த குறையுமே இல்லை...

ஆனாலும் மனதில் ஒரு வித அழுத்தம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை...

மெதுவாக எழுந்து, உடையை சரி செய்து விட்டு, முடியை தூக்கி கொண்டை போட்டவள், டவலை எடுத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

முகத்தை குளிர் நீரில் அடித்துக் கழுவிக் கொண்டே, தன்னையே பார்த்து இருந்தாள்.

ஆறு மாதங்கள் முன்னே அவள் வாழ்க்கை இப்படி மாறும் என்று கனவில் கூட அவள் நினைத்து இருக்க மாட்டாள்.

அவள் தான் அவள் தந்தையின் இளவரசி...

பணத்துக்கு குறைவே இல்லாத குடும்பம்...

அவள் ஆசைப்பட்டாள் என்று எஞ்சினியரிங் படிக்க வைத்தார்...

அவளும் படிப்பில் கெட்டிக்காரி.

பி எச் டி படிக்க வேண்டும் என்று சொன்னாள், அதற்கும் அனுமதி கிடைத்தது...

ஆனால் அப்போது தான் அவள் வாழ்வில் தென்றலாக வந்து சேர்ந்தான் சுதர்ஷன்...

அதுவரை எந்த ஆண் மீதும் அவளுக்கு ஈர்ப்பு உண்டாகவில்லை... கற்றலிலேயே நாட்களை கடத்தி இருந்தவள் தான் அவள்.

சுதர்ஷன் அவள் கல்லூரியில் கேன்டீன் வைத்து நடத்திக் கொண்டு இருப்பவன்...

அவள் அளவுக்கு பணக்காரன் இல்லை என்றாலும் ஏழ்மை என்று சொல்ல முடியாத நல்ல வருமானம் தான் அவனுக்கு...

கையில் ஒரு டிக்ரீ வைத்து இருக்கின்றான்...

சொந்த தொழில் செய்வதில் பேரானந்தம்.

கடன் வாங்கி கேன்டீன் ஆரம்பித்து, அதுவும் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருந்தது.

அவளும் ஆசைக்கு ஏதாவது சாப்பிட கேன்டீன் செல்வாள்... அப்போது தான் அவனுடன் பழக்கம் உண்டானது...

பார்த்ததும் ஈர்த்தெடுக்கும் தோற்றம் உடையவன்...

ஆறடி உயரத்தில், அழகிய உருவத்தில், இருப்பவனின் ஹாஸ்யமான பேச்சு, சட்டென அவளை ஈர்த்து விட்டது...

அவளும் பேரழகி அல்லவா?

பேசி பேசியே, நண்பர்களானவர்கள், காதலர்களாகியும் விட்டார்கள்...

அவன் கடின உழைப்பு மீது அவளுக்கு எப்போதுமே ஈர்ப்பு...

அவள் தந்தையும் அதே போல என்பதால், அவனை முழுமையாக காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

அப்போது தான் அவள் வீட்டில், மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள்...

சுதர்ஷனை காதலிக்க முன்னரே, "நீங்க யாரை கை காட்டுறீங்களோ, அவரையே கல்யாணம் பண்ணுறேன் அப்பா" என்று சொல்லி இருந்தாள்.

அவள் விட்ட முதல் பிழை அங்கே தான்...

அது இப்போது பெரு விருட்சமாகி, பிரச்சனையாக உருவாகி இருந்தது.

வீட்டில் செல்ல பிள்ளையாக வளர்ந்தவளுக்கு தனது காதல் விஷயத்தை சொல்ல தயக்கம்...

தந்தையின் விழிகளை பார்த்துப் பேச தைரியம் வேறு இல்லை.

அவள் வீட்டிலோ, டாக்டர், எஞ்சினியர், தொழிலதிபர் என்று வரன் தேடிக் கொண்டு இருக்க, கேன்டீன் வைத்து இருப்பவனை அவளால் எப்படி காதலன் என்று தந்தை முன்னே கொண்டு நிறுத்த முடியும்?

எப்படி சொல்வது என்று யோசித்துப் பார்த்து நாட்கள் நகர, அவளை பெண் பார்க்கவும் வீட்டில் ஏற்பாடு செய்து விட்டார்கள்...

சுதர்ஷனிடம் வந்தவளோ, "அப்பா கிட்ட பேசலாம் சுதா" என்று சொல்ல, அவனுக்குமே பயம்...

அவள் தந்தையின் செல்வாக்கு அதிகமாயிற்றே...

"பிரிச்சுட்டாங்கன்னா என்ன பண்ணுறது பவி?" என்று கேட்டான்.

"அப்போ என்ன தான் முடிவு?" என்றவளுக்கு அவன் கொடுத்த யோசனை தான் இந்த திருட்டுக் கல்யாணம்...

அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

"அப்பா மனசு கஷ்டப்படுவார் சுதா" என்றாள்.

"வேற வழி இல்ல பவி, இல்லன்னா நம்ம பிரிஞ்சுட வேண்டியது தான்" என்றாள்.

இப்படி பட்டவனை விட்டுக் கொடுக்கவும் அவளுக்கு இஷ்டம் இல்லை.

மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் சம்மதித்தாள்...

கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொண்டார்கள்...

அவன் நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு வந்து இருக்க, திருமணத்தையும் சட்ட பூர்வமாக பதிவு செய்து கொண்டார்கள்...

அதனை தொடர்ந்து, வீட்டுக்கு அவனுடன் வந்து காரில் இறங்கினாள் அவள்...

அன்று அவளை பெண் பார்க்க வேறு மணமகன் வீட்டில் இருந்து வந்து இருக்க, அவளோ மணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக வந்து இறங்கி இருந்தாள்.

அவள் தந்தைக்கு பேரதிர்ச்சி...

கைக்குள் பொத்தி பொத்தி வளர்த்த பெண் கல்யாண கோலத்தில் வந்து நின்றால் எப்படி இருக்கும்?

தாங்கவே முடியவில்லை...

ஒரு வார்த்தை சொல்லவில்லை என்கின்ற ஆதங்கம்...

வேகமாக வந்து ஓங்கி அறைந்து விட்டார்...

பெண்ணவள் கீழேயும் விழுந்து விட்டாள்...

அவளை எதற்கும் அடிக்காத தந்தை அடித்து விட்டார்...

தாங்கிக் கொள்ள முடியுமா என்ன?

அவளுக்கோ வலி ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் ,ஆத்திரம் ஒரு பக்கம்...

அதே வேகத்தில் எழுந்தவள், "இப்ப எதுக்கு அடிச்சீங்க? நான் சுதாவை லவ் பண்ணுறேன்? அவர் கூட தான் வாழப் போறேன்" என்று ஆணித்தரமாக அவள் தந்தையின் விழிகளை பார்த்துக் கொண்டே சொல்ல, "இவன் அந்த கேன்டீன் வச்சு இருக்கிறவன் தானே, உனக்கு வேற ஆள் கிடைக்கலையா?" என்று பற்களை கடித்துக் கொண்டே, சிங்கக் குட்டி போல பாய்ந்து கொண்டே வந்தான் அவள் தம்பி அர்ஜுன்...

அவளை விட இளையவன், இந்த காட்சியை பார்த்து சீறிக் கொண்டு நின்று இருந்தான். வந்த வேகத்தில் சுதர்ஷனின் ஷேர்ட்டை பிடித்து ஓங்கி அடிக்க, பெண்ணவள் வெகுண்டு விட்டாள்.

"எதுக்குடா மேல கை வைக்கிற?" என்று கேட்டுக் கொண்டே, அர்ஜுனின் மார்பில் இரு கைகளையும் வைத்து தள்ளி விட்டாள்.

அவனை உறுத்து விழித்தவள், "மரியாதையா நடந்துக்கோ அர்ஜுன்" என்று அவள் விரல் நீட்டி மிரட்ட, "இவனுக்கு என்னடி மரியாதை? எங்க வீட்டு பொண்ண இழுத்துட்டுப் போய் திருட்டு கல்யாணம் பண்ணி இருக்கான்... சொத்துக்காக தானே இவ்வளவும் செய்து இருக்கான்" என்று அவன் எகிற, "உங்கட சொத்து எதுவும் எங்களுக்கு வேணாம்" என்று ஆணித்தரமாக சொன்னாள்.

அவள் தந்தை அவளையே பார்த்து இருந்தவர், "ஒரு வார்த்தை என் கிட்ட சொல்ல தோணலை ல?" என்று கேட்டார்.

குரலில் ஒரு வலி...

"இவ கிட்ட என்ன பேச்சு? வெளியே போ, இப்படி எங்களை சந்தி சிரிக்க வச்ச உனக்கு இங்க இடம் இல்ல" என்று புடவையை இழுத்து சொருகிக் கொண்டே, கண்ணீருடன் சீறினார் அவள் தாய்...

சுற்றி உறவினர்கள் நின்று இருக்க, அவள் தந்தை ஏதும் சொல்வார் என்று தான் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

எதுவுமே சொல்லவில்லை...

இன்னும் அவரால் அவள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை...

"அப்பா" என்றாள்.

"அவர் கிட்ட என்ன கெஞ்சிட்டு இருக்க?" என்று அர்ஜுன் மீண்டும் எகிற, "சரி தான் போடா" என்று கோபமாக சொல்லிக் கொண்டே, "எனக்கு நீங்க யாரும் வேணாம், என் சுதா மட்டும் போதும்" என்று சொன்னவள், அவள் போட்டு இருந்த நகைகளை கழட்டி வீட்டு வாசலில் எறிந்து இருந்தாள். அதனை தொடர்ந்து அவனுடன் ஆட்டோவில் கிளம்பி விட்டாள்.

அவனோ, "இப்ப எதுக்கு இவ்ளோ கோபம் பவி?" என்று கேட்க, "உங்க மேல கையை வைக்கிறான் ராஸ்கல், பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?" என்று கேட்க, அவனோ, "தப்பு நம்ம மேல தானே" என்று சொல்ல, "அதுக்குன்னு அடிப்பானா? என் மேல கையை வைக்கட்டும், உங்க மேல எதுக்கு வைக்கணும்?" என்று அவனுக்காக பேச, அவள் கன்னத்தை தட்டியவன், "என்னை ரொம்ப பிடிக்குமாடி?" என்று கேட்க, "ரொம்ப ரொம்ப" என்று சொன்னாள் பெண்ணவள்.

சுதர்ஷனுக்கு ஒரு ஃப்லாட் மட்டுமே இருந்தது.

அங்கே அவன் தாய் ருக்மணியுடன் தான் அவன் வசித்து வந்தான்.

தன்னவளை அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்து விட, ருக்மணி அடுத்த பேயாட்டம் ஆட தொடங்கி விட்டார்.

"உனக்கு சீதனத்தோட எத்தனை வரன் வந்திச்சு? திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்து என் தலைல மண் அள்ளி போட்டுட்டியே" என்று புலம்பியவருக்கு வேறு வழி இல்லாமல், அவர்களை வீட்டினுள் எடுக்க வேண்டிய நிலைமை...

அன்று சுதர்ஷனுடன் அவள் வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தாள்.

ருக்மணியின் நச்சரிப்பு தான் அவளுக்கு தாங்கவே முடியவில்லை...

தனது பி எச் டியை தொடர ஆசை தான்...

ஆனால் கையில் பணமே இல்லை.

படிப்பை கை விட்டாள்.

ருக்மணியோ, "இந்த வீட்ல சும்மா இருக்க முடியாது... சமைக்கணும், வீட்டு வேலை செய்யணும்" என்று கட்டளைகளை விதித்து, அவளை சம்பளம் வாங்காத வேலைக்காரியாகவே மாற்றி விட்டார்...

கோபம் வந்தாலும் பொறுத்துக் கொண்டாள்.

சுதர்ஷனுக்காக மட்டும்...

அவள் ஆளுமையானவள், எதையும் எதிர்த்து நிற்பவள்...

இன்று அவள் இயல்பையே மாற்றி இருந்தது சுதர்ஷன் மேல் அவள் வைத்து இருந்த காதல்...

அமைதியான மருமகளாகி விட்டாள்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அமைதியாக இருந்தவளுக்கு வீட்டில் அடைந்து இருக்க விருப்பம் இல்லை.

"வேலைக்கு போகவா சுதா?" என்று கேட்க, அவன் சம்மதித்தாலும், "வேலைக்கு போய் என்ன கிழிக்க போறா?" என்று ருக்மணி அதற்கும் தடை போட்டார்...

இப்போது ஆறு மாதங்கள் கடந்து இருக்க, "வயித்துல புழு பூச்சி ஒன்னும் இல்லையா?" என்று நச்சரிப்பும் ஆரம்பித்து இருந்தது.

அனைத்தையும் நினைத்து முடித்தவளுக்கு, அவள் தந்தையின் எண்ணத்தை மட்டும் தவிர்க்க முடியவில்லை...

அவள் மீது சின்ன துரும்பு கூட படாமல் அவளை வளர்த்து இருந்தவர்...

அவருக்கு அவள் செய்தது பெரிய துரோகம் தான்.

இப்போதும் கூட அவருடன் சேர ஆசை தான்... அவரும் ஏற்றுக் கொள்வார் என்று அவளுக்கு தெரியும்... இந்த ஆறு மாதங்கள் அவரை பார்க்காதது அவளுக்கு என்னவோ போல உணர்வைக் கொடுத்தது...

தான் இல்லாமல் அவரும் தவிப்பார் என்று தெரியும்...

ஆனால் தன்னை தேடி வர வீட்டில் விட்டு இருக்க மாட்டார்கள் என்றும் தெரியும்...

அவளாக சென்றால் 'பணத்துக்காக திரும்பி வந்து இருக்கின்றாள்' என்று யாரும் சொல்லி விடுவார்களோ என்று பயம்...

அதனாலேயே வீரப்பாக இருக்கின்றாள்...

இதுவரை இருந்து விட்டாள்...

இனியும் இருப்பாள்...

ஒரு பெருமூச்சுடனேயே சமையலறைக்குள் சென்றவள் சமைக்க ஆரம்பித்து இருந்தாள்.

நேரம் நகர, ருக்மணி எழுந்து வெளியே வர, அவருக்கு காஃபி போட்டவள், அதனைக் கொண்டு நீட்ட, "பச்சை தண்ணி போல இருக்கு" என்று சொல்லிக் கொண்டே, காஃபியை குடித்து முடித்தார்.

எதுவும் அவள் மறுபேச்சு பேசாமல் சமையலறைக்குள் மீண்டும் நுழைந்து கொண்டாள்.

நேரத்தைப் பார்த்துக் கொண்டே, அவசரமாக சமைத்தாள்.

சுதர்ஷன் கிளம்ப முதல் அவனுக்கு எல்லாம் தயார் செய்து கொடுத்தாக வேண்டும்...

என்ன தான் கேன்டீன் வைத்து இருந்தாலும், அவன் வீட்டு உணவு தான் சாப்பிடுவான்.

இதனிடையே சமையலறைக்குள் நுழைந்து, " பவி... " என்று முனகளாக அவள் இடையினை பற்றி கழுத்தினுள் முகம் புதைத்து இருந்தான் அவள் கணவன் சுதர்ஷன்.

அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை.

அவனுக்காக அவள் இழந்தது ஏராளம்...

குடும்பம் சகோதரங்கள் என்று எல்லாவற்றையும் உதறி தள்ளி விட்டு வந்து இருக்கின்றாள்.

ஏன் என்று கேட்டால் ஒரே பதில் காதல் தான்.. அவன் மேல் இருக்கும் அளவு கடந்த காதல்...

அதற்கு ஏற்ற போல தான் அவனும் அவளை உருக வைத்துக் கொண்டே இருப்பவன்.

காலையிலேயே அவளை அவன் எழுந்ததுமே தேடி வந்து இருக்க, "என்ன தலையணை மந்திரத்தை போட்டு தொலைச்சாளோ" என்று முன்னறையில் இருந்து ஒரு குரல்.

சட்டென அவள் மோனநிலை அறுபட, "ஐயோ விடுங்க , கடைக்கு போகணும்ல" என்று சொல்லிக் கொண்டே, அவனை விட்டு தள்ளி நிற்க , " படுத்துற டி, செம்ம மூட் ல இருக்கேன் " என்று அவளை மோகமாக பார்த்துக் கொண்டே சொல்ல, "போய் குளிச்சிட்டு வாங்க" என்று புன்னகையுடன் அவன் முதுகில் கையை வைத்து தள்ள, அவனும் சிரித்தபடி குளியலறைக்குள் சென்றான்.

சமைத்து முடித்து விட்டு வந்தவள் கண்ணில் அன்றைய பத்திரிகை தென்பட்டது. எடுத்துப் பார்த்தாள்.

நர்சரி டீச்சர் வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று இருந்தது....

அவளுக்கும் வேலைக்கு செல்ல ஆசை தான்.

சுதர்ஷன் எதுவும் சொல்வது இல்லை. ஆனால் ருக்மணியோ, "அவ வேலைக்கு போனா வீட்டு வேலை யார் பார்க்கிறது??" என்று தொடங்கி விடுவார். அவளும் அடங்கி விடுவாள்.

வேலைக்கு சென்று, வீட்டு வேலையையும் பார்க்கும் அளவுக்கு அவளுக்கு திறமை இருக்கிறது...

அடக்க நினைத்தாலும் முடியாமல் வேலைக்கு செல்லும் ஆசை அவளை ஆட்கொண்டது.

பத்திரிகையை எடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

சுதர்ஷன் ஷேர்ட் பட்டனை போட்டுக் கொண்டே நின்றிருக்க, "சுதா" என்றாள்.

"என்னடி??" என்று அவன் கேட்க, "நான் வேலைக்கு போகவா??" என்று தட்டு தடுமாறி கேட்டு விட்டாள்.

அவனோ ஒரு பெருமூச்சுடன், "அம்மா கிட்ட கேட்டியா ??" என்றான்.

"நீங்களே கேட்டு பாருங்களேன்" என்று சொல்ல, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே ஷேர்ட்டின் கையை முட்டி வரை மடித்து விட்டவன் ஹாலுக்குள் வர அங்கே ருக்மணி டி வி பார்த்தபடி அமர்ந்து இருந்தார்.

"அம்மா" என்றபடி அவர் அருகே அமர, "என்னடா??" என்றார் அவர்.

குரலை செருமிக் கொண்டே, "பவி வேலைக்கு போறேன்னு சொல்றா" என்று ஆரம்பிக்க, "வீட்டு வேலை யாரு பார்க்கிறது?? ஏதோ கோடி கோடியா கொண்டு வந்திருந்தா அவ ஆசைப்படி இருக்க விடலாம்.. கைய ஆட்டிட்டு வந்தவளுக்கு இதுவே அதிகம்..." என்றார்.

"அதுலயும் வருமானம் வரும் தானே" என்றான்.

" அந்த பிச்சை காசு எதுக்கு டா?? அவ அப்பா கிட்ட சொல்லி சீதனம் வாங்கி தர சொல்லு... பிறகு பார்க்கலாம்" என்றார்.

அவனவளை திரும்பி பார்த்தான்.

"இல்லை" என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்..

மீண்டும் அவள் வீட்டுக்கு போவதா?? நினைத்து கூட பார்க்க மாட்டாள்.

மீண்டும் அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பது அவள் கனவில் கூட நடக்காது.

இப்போது இருவருக்கும் நடுவே தவித்தது என்னவோ சுதர்ஷன் தான்.

"அம்மா" என்றான் மீண்டும்...

"இது தான் என் முடிவு" என்றார் அவர்.

"அவ வீட்டு வேலையும் செய்வா, நர்சரி டீச்சர் வேலை தான். நேரத்துக்கே வீட்டுக்கு வந்திடுவா" என்று சொல்ல அவர் மனம் இரங்கிய பாடு இல்லை.

திரும்பி தன்னவளைப் பார்த்தான். முகம் சோகமே உருவாக இருந்தது.. என்ன நினைத்தானோ தெரியவில்லை...

அவருக்கு ஈடு கொடுத்து பேசினான்.

முடிவில், "உனக்கு அவ என்ன வசியம் பண்ணுனான்னு தெரில.. ஒரு வாரம் போகட்டும். வீட்டு வேலை சரியா செய்யலன்னா நிறுத்திடுவேன்" என்றவர் எழுந்து சென்று இருக்க, அவள் முன்னே வந்து நின்றவன், "ஓகே யா??" என்று கேட்டான்.

இது தானே அவனில் அவளுக்கு பிடித்த ஒன்று...

கண் சிமிட்டலுடன், "ஓகே" என்று சொன்னவள் எம்பி அவன் கன்னதில் முத்தமிட அவனும் சட்டென ருக்மணி இல்லை என்று உறுதி செய்ய, அவளோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "சாருக்கு ரொம்ப தான் பயம்" என்றாள் கிண்டலாக...
 

CRVS2797

Member
உருகும் நிலவே, விலகும் ஒளியே !
(அத்தியாயம் - 1)

அய்யோடா...! என்ன இந்த ருக்மணிம்மா இந்த போடு போகுது..? பெத்தவங்களை சொல்லியும் தப்பில்லை, பிள்ளைங்க இப்படி திடீர்ன்னு காதல்ன்னு சொல்லிக்கிட்டு அவங்க கனவுகள்லேயும், எதிர் பார்ப்புகள்லேயும் கையை வைச்சா
அத்தனை சீக்கிரமா ஜீரணிக்க முடியாது தானே..? இது காதலிக்கறவங்களுக்கு மட்டும் இல்லை, பெத்தவங்களுக்கும்
சோதனையான காலம் தான்.

அது சரி, இந்த சுதர்ஷன்
நல்லவனா ? கெட்டவனா...?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
Top