நின்னை சரணடைந்தேன் மன்னவா
அத்தியாயம் - 1
தன் எதிரில் தலைகுனிந்து கைகளை பிசைந்து கொண்டு நின்றிருக்கும் தன் ஆட்களை திட்டி தீர்த்து கொண்டிருந்தார் எதிர்க்கட்சி தலைவர் வீர பாண்டியன்.
"நீங்க எல்லாம் எதுக்குடா மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்க..? சொன்ன காரியத்தை ஒழுங்காக முடிக்க முடியலை வந்துட்டானுங்க.., அவனவன் தலைமுடியை எடுத்து வர சொன்னால் தலையையே வெட்டி எடுத்திட்டு வரானுங்க ? ஆனா நீங்க தலைமுடியை தொட கூட முடியாமல் வந்து நிற்குறீங்க..? "எல்லாம் என்னை சொல்லனும்' உங்களை எல்லாம் வைத்து கொண்டு அரசியல் செய்கிறேன் இல்ல..அதான் இந்த நிலைமையில் இருக்கேன்" என தன்னையே நொந்து கொண்டு அமர்ந்திருந்தார்.
அது எப்படிடா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் "அவனை தாண்டி எதுவும் செய்ய முடியலை" என்று சொல்வீங்க..? "அவனும் உங்களை மாதிரி தானே, அவனுடைய ஒரு பார்வைக்கே அலறி அடித்து ஒடிவரீங்க..அவனை பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று"..? என அவனை பற்றி பெருமையாக சொன்னாலும், அவனை பற்றி நினைக்க நினைக்க மனம் கோபத்தில் கொதித்தது.
இருக்காதா பின்ன...எம்.பி யாக இருந்த அவரை, முன்னாள் எம். பி யாக மாற்றிய மொத்த பெருமையும் அவனை தானே சாரும்.எப்போது அவன் அந்த சங்கரலிங்கத்துடன் இணைந்தானோ அப்போதிருந்து அவர்களுக்கு ஏறுமுகம் இவருக்கு இறங்குமுகம் அல்லவா ! எப்படி அவரால் கோபப்படாமல் இருக்க முடியும்.
அதுவும் அவ்வளவு மக்கள் செல்வாக்கோடு இருந்த அவரை ஒரே நாளில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி...அதுவரை மக்கள் எதிர்த்து கொண்டிருந்த சங்கரலிங்கத்தை ஒரேநாளில் ஹீரோ போல சித்தரித்தவன் ஆயிற்றே ! அவனை மீறி எதுவும் செய்ய முடியாத இயலாமையில் கைகளை கட்டி கொண்டு இருக்கும் நிலைமையை அறவே வெறுத்தார்.
வீர பாண்டியனுக்கு அவனை எப்படியாவது தன் கட்சியோடு இணைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது..ஆனால் "அதனை செயல்படுத்த'.. ஏன் அவர் சொல்வதை கேட்க கூட அவன் முன் வரவில்லை" என்பது இன்னும் அவரின் கோபத்தை அதிகரித்தது. எத்தனையோ முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதிலும் அவன் அதனை கொஞ்சமும் சட்டை செய்யாது தவிர்த்து விட்டான்.
அனைத்தையும் நினைத்துக்கொண்டு அமர்ந்திருக்க ...அப்போது அலுவலகத்தில் நுழைந்தான் அவரின் மகன் ஜெகன்நாதன். கட்சியின் அடுத்த தலைமுறை தலைவன், அவரின் அரசியல் வாரிசு.எப்படியாவது வர இருக்கும் தேர்தலில் அவனை போட்டியிட வைத்து, ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதே அவரின் ஒரே கனவு. இழந்த அனைத்து மரியாதையையும் மகன் மூலமாக பெற்றுவிடலாம் என கனவுகளை வளர்த்து கொண்டிருந்தார்.
அதற்கு பெரும் தடையாய் இருப்பது அவன் ஒருவனே ( பில்ட்டப் எல்லாம் ஓவரா இருக்கே...யாரு அவன் )
"அப்பா தேவையில்லாமல் கவலை படுறீங்க,அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் கேட்ட மாட்டேன் என்கிறீர்கள்" என கோபமாக இரைந்தான் ஜெகன்.
டேய் ! அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதே..இப்போ அனைவரின் பார்வையும் உன்மேல் தான் இருக்கும். இப்போ உன்னால் ஏதாவது சிறு தவறோ,பாதிப்போ ஏற்ப்பட்டால் அது உன் அரசியல் வாழ்க்கையே கேள்வி குறி ஆக்கிவிடும். அதனால் கொஞ்சம் அமைதியாக இரு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என மகனை சமாதான படுத்தியவர், அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கினார்.
அதேநேரம் இங்கே சங்கரலிங்கத்தின் அலுவலகத்தில் அன்றைய நாளுக்கான அலுவல்களையும் முக்கியமான கூட்டங்களை பற்றியும் தங்கள் கட்சி தொண்டர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார் சங்கரலிங்கம்.
அவருமே தொண்டர்களின் முகத்தையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவனின் வருகையை எதிர்பார்த்து…
அவன் தான் இவரின் வலது கை, இடது கை, பி.ஏ , அரசியல் ஆலோசகர், அடியாள்,பாடி கார்ட் என எல்லாமே...அவனில்லாமல் ஒரு அணுவும் அசையாது அவருக்கு. தன் குடும்பத்தினர்க்கு அடுத்து அவரை நெருங்க கூடிய ஒரே நபர் அவன் மட்டுமே…
இப்படி அனைவரின் சிந்தையிலும் ஓடிக்கொண்டிருக்கும் அவன்…
தன் எதிரில் கோபத்தில் தன்னை எரித்துவிடுவது போல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவரை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்... அசால்ட்டாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு விழிகளாலேயே அவர் முன்பிருந்த காகிதத்தை சுட்டிக் காட்டினான்.
அவரோ மீண்டும் தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு "இங்க பார் தம்பி, இது எனக்கு இருக்கிற ஒரே சொத்து...இதை வைத்துதான் என் பொண்ணு கல்யாணத்தை நடத்தனும்.இதுவும் இல்லையென்றால் நாங்க குடும்பத்தோடு சாக வேண்டியது தான்" என அப்போதாவது மனதை மாற்றிக் கொள்ள மாட்டானா ? என்ற நற்பாசையில் கெஞ்ச தொடங்க...அவனோ கொஞ்சமும் இரக்கம் என்பது இல்லாமல், தன் நிலையில் இருந்து கொஞ்சமும் இறங்காமல் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளை நுழைத்துக் கொண்டு...அங்கு மாட்டப்பட்ட அவரின் குடும்ப படத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் நின்றுக் கொண்டிருந்த நிலையே அவன் தன் முடிவில் இருந்து மாற மாட்டான் என்பதை அவருக்கு எடுத்துரைக்க...மீண்டும் ஆத்திரமாக "இந்த பாவம் எல்லாம் உன்னை சும்மா விடாது டா'..நான் வயிறேரிந்து சாபம் விடுறேன், நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டாய், நாசமாக தான் போவாய்" என கத்த...அவனோ கையெழுத்து போட்டதுக்கு அப்பறம் சாபத்தை கண்டினியூ பண்ணலாம்.இப்போ முதலில் சைனை போடு. எனக்கு நிறைய வேலை இருக்கு என எதுவும் நடவாதது போல் சொல்ல,அப்போதும் அவர் அமைதியாக இருந்தார். தன் மகளின் எதிர்காலம் அதில் இருக்கிறது அல்லவா ! அதனால் அவரால் இவனின் மிரட்டலுக்கு உடனடியாக பணிந்து போக முடியவில்லை.
இவனுக்கோ அவரின் உறுதி இன்னும் கோபத்தை கிளப்ப..தன் அருகில் நின்றிருந்தவனை ஓங்கி அறைந்திருந்தான்."ஏண்டா இதுக்கெல்லாம் என்னை எதுக்கு கூப்டீங்க ?" முடியாதுன்னு சொன்னால் குடும்பத்தை தூக்க வேண்டியது தானே ...அதைவிட்டுட்டு கெஞ்சிட்டு என்னையும் கூப்பிட்டு பஞ்சாயத்து வேற" என எரிச்சலாக மொழிந்தவன் அவர் புறம் திரும்ப... "குடும்பத்தை தூக்குவேன்" என்ற சொல்லிலேயே அதிர்ந்து விழித்தவர், வேறு வழியில்லாமல் கையெழுத்து போட்டார்.
வந்த வேலை முடிந்தவுடன் அந்த காகித கோப்புகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவன் ஒரு நிமிடம் திரும்பி பார்த்து…"இப்போ உங்க சாபத்தை கண்டின்யூ பண்ணுங்க, நான் தடுக்க மாட்டேன்" ஏனென்றால் "எனக்கும் இந்த பூமியில் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை, அட்லீஸ்ட் உங்க வார்த்தையாவது பலிக்கட்டும்" என சொன்னவன் தன் காரில் ஏறி அலுவலகம் நோக்கி சென்றான்.
அவரோ ' இவன் எல்லாம் மனிதன் தானா ' என்பது போல் வெறுப்பான பார்வையை அவன் போகும் திசையில் செலுத்தியவர்க்கு அடுத்து என்ன செய்வது என்பது சுத்தமாக தெரியவில்லை. அவர்களை இவரால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதும் நன்றாக தெரியும்...நிச்சயம் முடிந்த நிலையில் கல்யாணத்தை எப்படி நிறுத்தமுடியும் அதுவும் பணத்தை காரணம் காட்டி...கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய நிலைத்தை இப்படி மிரட்டி வாங்கி செல்வார்கள் என்று கனவா கண்டார்.
"விழலுக்கு இறைத்த நீர் போல" தன் உழைப்பு வேறு எவனோ ஒருவனுக்கு பயன்படுவதை யாரால் ஏற்க முடியும். இழப்பவனுக்கு மட்டுமே அந்த இழப்பின் வலி தெரியும்.வலி மனம் முழுவதும் வலி மட்டுமே...இனி என்ன செய்வது என புரியாமல் விழி பிதுங்கி நின்றார் அந்த நடுத்தர குடும்பத்தின் தலைவர்.
காரில் தன் கன்னத்தை பிடித்துக்கொண்டு எதற்கு இந்த பிரச்சனையில் என்னை அடித்தான்.இவனும் என்னை மாதிரி சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தானே, எல்லாம் நம்ம தலைவர் கொடுக்கும் இடம் என மனதுக்குள்ளேயே திட்டி கொண்டிருந்தான் அந்த அடிவாங்கிய அல்லக்கை. அவனால் அதனை வெளியே சொல்லிவிட முடியாது,அப்படியே சொன்னால் அடுத்த நிமிடம் உயிரோடு இருப்பதே கேள்விக்குறி தான் என்பது நன்றாகவே தெரிந்திருந்தால் அமைதியாக பல்லை கடித்து கொண்டு இருந்தான்.
இப்போது கூட அசால்ட்டாக ஒரு கொலையை செய்து முடித்துவிட்டு வந்தவனை தான், வரவழைத்து இருந்தனர் இந்த பிரச்சனைக்காக...அப்படி பட்டவனை எதிர்ப்பது என்பது முட்டாள்தனமான செயல் அல்லவா..? அதனால் வேறுவழி இல்லாமல் 'வெளியே சொல்ல நினைத்ததை மனதுக்குள் சொல்லியபடி' அவனை தாளித்துக் கொண்டிருந்தான் அந்த அடியாள்.
அடித்தவனோ ரிவர் வியூ கண்ணாடி வழியாக கன்னத்தில் கை தாங்கி அமர்ந்திருந்தவனை பார்த்தவாறே "மனசுக்குள்ள திட்டினது போதும்,நானும் வேலைக்காரன் தான். நான் ஒன்றும் முதலாளி என்று சொல்லவில்லை…அந்த வேலையை நீயே முடித்திருந்தால், ஏன் என்னிடம் அடி வாங்க போகிறாய் ? உன்னால் எனக்கு எத்தனை வேலை தாமதமாகி இருக்கு தெரியுமா..? என்றவன் "இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு இறங்குடா" இருக்குற கோபத்தில் இந்த கன்னத்திலும் அடிவாங்காதே என்றபடி கீழே இறங்கினான் சூரிய பிரகாஷ்.
இவனை பக்கத்தில் வைத்துக் கொண்டு மனதில் கூட எதையும் நினைக்க முடியவில்லை கடவுளே என திரும்பவும் மைண்ட் வாய்சில் நினைக்க… அவன் திரும்பி பார்த்த பார்வையில் ஒரு நொடி அரண்டு விழித்தவன்,அங்கேயே நின்றால் மீண்டும் அடிக்கவும் தயங்க மாட்டான் என கருதி, அவனை முந்திக்கொண்டு அலுவலகத்தினுள் நுழைந்தான்.
சூரிய பிரகாஷ்.. நிற பாண்ட் மற்றும் வெள்ளை நிற முழுக்கை சட்டையை லேசாக மடித்து விட்டபடி... ஆறடிக்கு மேலான உயரம் அதற்கேற்ற முறுக்கேறிய தேகம், தீட்சண்யமான விழிகள். பெயருக்கேற்றார் போல் அந்த சூரியனின் உக்கிரம் நிறைந்த அனல் தெறிக்கும் பார்வை, எதிரில் இருப்பவரை நிச்சயம் ஒரு நிமிடம் பயம் கொள்ள வைக்கும்.
எனக்கு சிரிக்கவே தெரியாது என சொல்ல துடிக்கும் அழுத்தமான இதழ்கள். அவன் சிரித்து யாருமே இதுவரை பார்த்ததில்லை.கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வரும். அதுவும் சங்கரலிங்கம் தவிர வேற யாருக்கும் அதுவும் கிடையாது.அவனிடம் கனிவையோ இரக்கத்தையோ எதிர்ப்பார்க்க முடியாத இரும்பு மனிதன். கட்சியின் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தொண்டன் என்பதை விட கட்சியின் அசைக்க முடியாத தூண்.அவனில்லையேன்றால் இந்த கட்சி இந்நேரம் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
உள்ளே நுழைந்தவனை பார்த்த பின்பு தான் சங்கரலிங்கத்திற்கு உயிரே வந்தது. அவன் முகத்தில் இருந்த அமைதியே போன காரியம் வெற்றியடைந்ததை உணர்த்த, அதுவரை மனதின் ஓரத்தில் இருந்த படப்படப்பு அடங்கி.. தான் ஒரு எம்.பி என்பதையும் மறந்து தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனை அணைத்துக் கொண்டார். அவனோ எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாக தனது தலையாசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான்.
"உன்கிட்ட ஒரு காரியத்தை கொடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டாய் என்பது எனக்கு தெரியும்".ஆனால் "அதையும் மீறி இந்த விஷயத்தில் சின்ன பயம் இருந்துட்டே இருந்தது, அதையும் நீ ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாய்" என ஒரேடியாக புகழ்ந்து தள்ள...சுற்றி இருந்த அனைவருக்கும் காதில் புகை வந்தது.அதுவும் கட்சியில் பெரிய பதவியில் இருக்கும் அனைவருக்கும் அவன்மேல் தானாக ஒரு வெறுப்பும் முளைத்தது.
தன் கையில் உள்ள நில ஆக்கிரமிப்பு பத்திரத்தையும் அவரிடம் நீட்ட… "இதையும் நீ தான் செய்தாயா" என்பது போல் பார்த்துவிட்டு, திரும்பி தனது ஆட்களை இளக்காரமாக பார்த்தார். "உங்ககிட்ட கொடுத்த ஒரு வேளையாவது உருப்படியா முடிச்சிருக்கீங்களா..? உங்களுக்கு எல்லாம் எதுக்கு வெட்டிய சம்பளம் கொடுக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை" என கத்த தொடங்கினார்.அவர்களுக்கு தங்களை திட்டியதை காட்டிலும் சூரிய பிரகாஷை பராட்டியதை தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
" என்னமோ இந்தியாக்காக கோல்டு மெடல் வாங்கிட்டு வந்தது போல் இவனுக்கெல்லம் பாராட்டு ஒன்று தான் கேடு… பண்ணியது கொலை,அதற்கான குற்ற உணர்ச்சியோ, பயமோ எதுவும் இல்லாமல் திமிராக வேறு நடந்து கொள்கிறான்" என அடிவாங்கியவன் முதல் அங்கு அலுவலக அறையில் உள்ள மூத்த தொண்டர்கள் வரை..அது ஒன்றையே மனதில் நினைத்துக்கொண்டு வெளியே சொல்லாமல் நின்றிருந்தனர்.
பின்னர் சற்று நேரத்தில் அன்றைய முக்கியமான சட்டமன்ற கூட்டத்திற்கு அவனுடன் கிளம்பி சென்றுவிட்டார். கட்சி சம்பந்தமாக எங்கே சென்றாலும் அவன் இல்லாமல் செல்ல மாட்டார்.
கூட்டம் நடைபெறும் இடத்திற்க்கு சென்று இறங்க..அதேநேரம் வீர பாண்டியனும் தன் மகனுடன் வந்து இறங்கினார்.
அவர்களை பார்த்து நக்கலாக சிரித்த சங்கரலிங்கம் "இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என பெரியவர்கள் சொல்லி இருக்காங்க" இனி மேலாவது என் வழியில் தலையிடாமல் இருப்பீங்க என்று நினைக்கிறேன்."அதையும் மீறி ஏதாவது முயற்சி செய்தால் சேதாரம் உங்களுக்கு தான் எனக்கில்லை" என்றவர் படிகளில் ஏறியபடி அரங்கம் நோக்கி சென்றார்.
வீர பாண்டியனும் தன்னை தானே நொந்து கொண்டு கூட்டம் நடக்கும் இடத்திற்க்கு நடையை செலுத்தினார்.
அதன்பின் அங்கே தனித்து விட பட்டது என்னவோ ஜெகனும் சூரியாவும் தான்.
ஜெகனுக்கோ அவனை பார்க்க பார்க்க கொல்லும் வெறியே எழுந்தாலும்..அதனை முகத்திலோ செயலிலோ காட்டாமல் அமைதியாகவே இருந்தான். பதவி கிடைக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு. அதுவும் இன்று எல்லை மீறி கொலை செய்யும் அளவுக்கு துணிந்தவனை நெருங்க பயமும் தடுத்தது என்று சொன்னால் அது மிகையில்லை.
பதவி கைக்கு வந்த பிறகு " முதல் வேலையே அவனை தீர்த்துக் கட்டுவது தான்" என்ற உறுதியுடன் அவன் பார்வைக்கு எதிர்ப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகன். சூரியாவோ "அவனை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் இளக்காரமான பார்வையை மட்டுமே செலுத்தினான்.அதில் கொஞ்சமும் கோபமோ பழி உணர்ச்சியோ இல்லை". ஆனால் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற உறுதி மட்டும் இருந்தது.
மாலை அனைத்து அலுவல்களையும் முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.அப்போது தான் தனது காரில் இருந்து இறங்கிய மகனை சலிப்பாக பார்த்த சங்கரலிங்கம்.
ஏண்டா ! "கொஞ்சம் கூட ஒரு பொறுப்பே இல்லாமல் இருக்க, எனக்கு அப்பறம் நீதாண்டா இந்த கட்சிக்கு தலைவர்". நமக்கு செல்வாக்கு இருக்கும் போதே அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்போதே நீ எலக்ஷனில் நின்றால் யாராலும் உன்னை ஜெயிக்க முடியாது. நாளைக்கு நிலைமை எப்படி இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. அதனால், நான் உயிரோடு இருக்கும் போதே உன்னை பதவியில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் .
அவனோ ' தன் தந்தை சொல்வதை கொஞ்சமும் காதில் வாங்காமல் தன் கேர்ள் பிரெண்டோடு வீடியோ சாட்டிங்கில் இருந்தவன் "பாய் பேபி சீ யூ லேட்டர்" இங்க ஒரே டிஸ்டர்பன்ஸ் என சொன்னவன்.... அவர் பேசி முடித்தவுடன் நிமிர்ந்து பார்த்தான்.
"என்னை என் இஷ்டத்திற்கு கொஞ்சம் ஜாலியாக இருக்க விடுங்கள் ' என்னால் உங்களை போல் எல்லாம் அரசியல், கட்சி என்று வெட்டியாக நேரத்தை கடக்க முடியாது.அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் "முதலில் எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள் நான் ஒன்றும் இன்னும் சின்ன பிள்ளையில்லை".
"கண்டவேலைக்காரன் முன்னாடி என்னை திட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" . அதையும் மீறி இன்னொரு முறை இப்படி நடந்துகொண்டால் "உங்களை அப்பா என்று கூட பார்க்க மாட்டேன்". உங்க மரியாதையை நீங்க காப்பாற்றி கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என கொஞ்சமும் மரியாதை என்பதே இல்லாமல் சொன்னவன்...
"அதேபோல் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இங்க சில பேருடைய ஹீரோயிசத்தை பார்த்து நிறைய பேர் மிரண்டு இருக்கலாம். ஆனால்,நான் அதற்கெல்லாம் மிரளும் ரகம் இல்லை என்பதையும் சேர்த்து மறக்காமல் சொல்லிடுங்க" என அழுத்தமாக அங்கே நின்று கொண்டிருந்த சூரிய பிரகாஷை பார்த்து கூறினான்.
சூரிய பிரகாஷோ அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல்,காதில் சுட்டு விரலை நுழைத்து ஆட்டியவாரே அவனை பார்த்து நக்கலாக உதட்டை சுழிக்க..அதில் இன்னும் ஆத்திரம் அடைந்தவன் கை முஷ்டிகள் இறுக்கி காற்றில் ஓங்கி குத்திவிட்டு வேகமாக வீட்டினுள் நுழைந்திருந்தான் உதய் கிருஷ்ணன் . சங்கரலிங்கத்தின் மூத்த மகன்.
அதன்பின் சங்கரலிங்கம் " அவன் பேசுவதை எதையும் கண்டுகொள்ளாதே' ஏதோ தெரியாமல் உலறுகிறான்" என வருத்தம் தெரிவிக்க...அவனும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அவரிடம் விடைப்பெற்று தன் வீட்டை நோக்கி சென்றான் சூரிய பிரகாஷ்.