சென்னை மத்திய சிறைச்சாலை பெண்கள் பிரிவில்... கதவை தட்டும் சத்தத்தில் கண்விழித்த கார்த்திகா கண்களை கசக்கியவாறே எழுந்து அமர்ந்தாள். வெளியே வார்டனோ "நீயென்ன பெரிய மகாராணியா... தினமும் உன்ன எழுப்ப ஒரு ஆள் வரணுமா, எழுந்துபோய் வேலைய பார்" என கத்த.. அவளோ அமைதியாக எழுந்து வெளியே வந்தாள்.
கார்த்திகை நிலா…ஐந்தடி உயரம்,வெண்ணையில் மஞ்சளை குழைத்த நிறம்,குழந்தைத்தனம் மாறாத வட்ட முகம், சிரித்தால் குழிவிழும் கன்னம்,ஒல்லியும் அல்லாத குண்டும் அல்லாத பூசினார் போன்ற உடல்வாகு,பார்க்கும் அனைவரையும் ஒருமுறை திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு மட்டுமல்ல ரசிக்க வைக்கும் குறும்பு குணமும் உடையவள். மொத்தத்தில் தேவதையே பெண்ணாக பிறந்தது போன்ற ஓர் அழகு.
ஆனால்.. கடந்த பதினைந்து நாள் சிறைவாசத்தால்.. "சற்றே நிறம் மங்கி,இளைத்து சோகமே உருவாக" காணப்பட்டாள்.
காலை எழுந்தவுடன் கையில் காபியோடு காட்சியளிக்கும் தாயின் முகம் மின்னிமறைய கலங்கும் கண்களை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்தாள்.சற்று நேரம் அழுது ஓய்ந்தவள்...எங்கே திரும்பவும் வார்டனிடன் திட்டு வாங்க நேருமோ என எண்ணி வேலையை செய்ய ஆய்த்தமானாள்.
வெளியே வந்தவளோ...
துடைப்பத்தை கையில் எடுத்து சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்ய தொடங்கினாள்.இவள் மட்டுமல்ல அங்குள்ள அனைத்து கைதிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்யவேண்டும்.சமையல்,துணிகளை துவைப்பது,சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் பசுமையாகவும் வைப்பது… இப்படி பல வேலைகள் இவர்களுக்காக பிரித்து தரப்படுகிறது.அதற்கான ஊதியமும் கணக்கிடப்பட்டு விடுதலையின் போது வழங்கப்படுகிறது.
சக கைதிகள் அவளை சற்றே பயத்துடன் பார்த்து தங்களுக்குள் சலசலத்துக் கொண்டனர். அவளிடம் நெருங்கவே அனைவரும் பயந்து நடுங்கினர். பலமுறை இவள் காதுப்படவே… "இவலெல்லம் ஒரு பொண்ணாடி, இங்க எத்தனையோ பெண்கள் கொலை குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கிறார்கள் தான்.. ஆனா எல்லாரோட கொலைக்கு பின்னால் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். புருஷன் சரியில்ல,மாமியார் கொடுமை,வரதட்சனை,பாலியல் வன்முறை இப்படி பல காரணங்கள் இருக்கும்...ஆனா இவ தன்னுடைய பெத்தவங்களையே கொலை பண்ணிருக்கா...அதுவும் ஒரு கொலையில்லடி மொத்தம் ஐந்து கொலை பண்ணிட்டு எப்படி தைரியமா சுத்திட்டு இருக்கா பாரு..சரியான சைக்கோவா இருப்பா போல" என அவளை பற்றி இழிவாக பேசிக்கொள்வது அவளுக்கும் நன்றாக கேட்வே செய்கிறது.
அதனை கண்டு விரக்தியில் சிரித்தவள்… தன் நிலையை தானே வெறுத்தாள்.
இதுவரை… தான் செய்யும் அனைத்தையும் ரசிக்கும் பெற்றோர்களையும் நண்பர்களையும் மட்டுமே பார்த்திருந்தவளுக்கு இதனை காண மனம் வலித்தது.
இங்கு வந்த இத்தனை நாட்களில் யாரும் இவளுடன் பேசியதுமில்லை... இவளும் யாரிடமும் பேச முயன்றதும் இல்லை.
தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டு வந்தவள்...காலைக்கடன்களை முடிக்க சென்றவளால் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்க முடியவில்லை...குடலை பிரட்டியது... அப்படியே வாந்தி எடுத்தவள்...தனக்கு வேறு வழியில்லை என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு அனைத்தையும் முடித்துவிட்டு தன் அறைக்கு சென்று அமர்ந்தாள்.
காலை சாப்பாட்டிற்க்காக அழைப்பு வர… எழுந்து செல்ல விருப்பம் இல்லாத போதும் பசியும் சோர்வும் அவளை செல்ல தூண்டியது. உணவை
கண்டவளின் மனதில் திரும்பவும் தன் வீட்டின் நினைவு.
"அப்பா...இங்க பாருங்கப்பா? இன்னைக்கும் இட்லியே சுட்டு வச்சிருக்காங்க அம்மா" என தன் தந்தையிடம் சிணுங்கியவள்...தாயை முறைக்க தொடங்கினாள்.
"ஏண்டி என் பொண்ணுக்கு பூரி தான் பிடிக்கும்னு தெரியுமில்ல...அப்பறம் எதுக்கு இட்லி செய்தாய்" என தன் மனைவியிடம் சண்டை போட்ட ஹரிஹரன், திரும்பி தன் மகளிடம் "இன்னைக்கு ஒரு நாள் என் செல்லக்குட்டி அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க நாளைக்கு அம்மா பூரி செய்வாங்க" ...என மகளை சமாதானம் செய்தவர்...அமைதியாக சாப்பிட அமர்ந்தார்.
"அப்பா... நல்லா டபுள் சைட் ஃகோல் போடுறீங்க" என சொல்லியப்படி வந்து அமர்ந்தான் கார்த்திகேயன்.
"இப்படி தினம் பூரி சாப்பிட்டு சாப்பிட்டு தான் பூரி மாதிரி உப்பி போயிருக்க" என்ற தம்பியை துரத்தியவள்… அவனை ஒரு வழி பண்ணியிருந்தாள்.
இதனையெல்லாம் நினைத்தவளின் மனது 'இனி தன் தாயின் திட்டு,தந்தையின் அரவனைப்பு,தாத்தா பாட்டியின் அறிவுரை,தம்பியுடனான சண்டை போன்ற சந்தோஷமான நிகழ்வுகள் இனி ஒரு போதும் தன் வாழ்வில் இருக்கப்போவதி்லை' என உணர்ந்து... உணவு ருசிக்காத போதும் உண்ண தொடங்கினாள். கொஞ்சம் உண்டவள் அதற்கு மேல் முடியாமல் கொட்டிவிட்டு வந்து அமர்ந்துகொண்டாள்.
ஜெயிலில் இருக்கும் வலியைவிட இனி தனக்கு யாருமில்லை என்ற நினைவே அவளைக் கொன்றது,அதுவும் அவர்களை கொன்றதற்காக தன்னை கைது செய்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இதுவரை யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்னும் ஒரே நோக்கோடு வாழ்ந்தவள், இன்று கொலைக்காரி பட்டத்தோடு வாழ்கிறாள்.
தனது அனைத்து உறவுகளும் சென்ற பிறகும் அவள் உயிருடன் இருக்க இரண்டே காரணம்….ஒன்று தன் மேல் சுமத்தப்பட்ட பழியை களையவேண்டும்...மற்றொன்று தன்னவன் முகத்தை ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பதே.
இத்தனை நாட்களில் ஒருமுறையேனும் தன்னவன் தன்னை காண வருவானா என ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கிறாள். அவனும் தன்னை நம்பவில்லையோ என்ற எண்ணம் எழும் போதே இதயத்தில் இரத்தம் கசியும் உணர்வு. அப்படி ஒரு சூழ்நிலை வருமாயின் அடுத்த நிமிடம் தன் உயிர் பிரிந்து விடவேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டாள்.
இந்த ஒரு விஷயத்தில் மட்டுமாவது கடவுள் தன் பக்கம் கருணை காட்டவேண்டும் என எண்ணிக்கொண்டாள்.
நாளை அவள் வழக்கு நீதிமன்றத்தில்...இன்னும் இதயத்தில் ஒரு முலையில் தன்னவன் தன்னை காக்க வருவான் என்ற நம்பிக்கையில் உயிரோடு இருக்கிறாள்.
அதிகப்படியான மனஉளைச்சல்,உணவு அருந்தாதது, தன்னவனின் நினைவு…. இப்படி பல சிந்தனைகளின் சிக்கியிருந்தவள் மெல்ல தன் சுயநினைவை இழந்து மயங்கி சரிந்தாள்.
இங்கு இவள் அவன் நினைவில் மயங்கியிருக்க ….அங்கு அவனோ தன்னவவளின் நிலையை எண்ணி வருந்திக்கொண்டிருந்தான்.
அவளுக்கு மட்டுமா சிறைவாசம் அவனும் அதே தண்டனையை சிறைக்கு வெளியே அனுபவித்து கொண்டிருக்கிறான்...உண்ணாமல் உறங்காமல் தன்னவளை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஏப்படி காப்பது என்பதே திரும்ப திரும்ப மனதில் ஓடிக்கொண்டிருந்து. அவளை காப்பது ஒன்றே தனது கடமையென எண்ணியவன் அதற்கான அனைத்து வழிமுறைகளையும் கண்டறிந்து செயல்படுத்த தொடங்கினான்.
இருவர் மனதும் பதினைந்து நாட்களுக்கு முன்பு பயணித்தது
அவளோ "அன்று காலையில் கதவை தட்டும் சத்தமும் அதை தொடர்ந்து பல குரல்களின் சத்தத்தில் கண்களை
திறக்க முயல... அது அவளால் சுத்தமாக முடியவில்லை. உடல் மொத்தமும் மறுத்துப்போன உணர்வு,கைகால்களை அசைக்கவே முடியாத ஒரு நிலையில் இருந்தாள்.
தன் முகத்தில் பட்ட தண்ணீரின் குளுமையில் கண்களை திறந்தவளுக்கு தன்னை சுற்றி நின்றவர்களை கண்டு இது கனவோ ! என எண்ணியவள்,கண்களை நன்றாக முடித்திறந்தவளின் முன் நின்றிருந்தவர்கள் என்னவோ காவல்துறையினர்களே...
அவர்களை அதிர்ந்த பார்வையுடன் நோக்கியவள் மெல்ல எழுந்து அமர முயன்றவளின் தடுமாற்றத்தை கண்டு உதவிக்கு வந்தனர் பெண் காவலர்கள்.
மெல்ல எழுந்து அமர்ந்தவாறு சுற்றி பார்வையை சுழற்றியவளின் கண்களில் முதலில் பட்டது இரத்தக்கறை படிந்த கத்தித் தான். பொதுவாகவே பயந்த சுபாவம் கொண்டவள் இப்போது இரத்தத்தைக் கண்டு அஞ்சியவலாக "அம்மா...அப்பா...எல்லாரும் எங்க இருக்கீங்க ...எனக்கு ரொம்ப பயமா இருக்கு...சீக்கிரம் வாங்க" என அழவே தொடங்கிவிட்டாள்.
"ஏய்...இப்போ எதுக்கு அழுது டிராமா பண்ணிட்டுருக்க...பார்க்க சாதுவாட்டம் இருந்துட்டு இத்தன பேரை கொலை பண்ணியிருக்க" என்ற இன்ஸ்பெக்டர் அவளின் முடியைப் பிடித்து மேல எழுப்பி நிற்க வைத்தவரை பார்த்து…."இல்லை நான் எதுவும் பண்ணல' என அழுதவள்..அம்மா...அப்பா…"என வலித்தாங்க முடியாமல் கத்தினாள்.
அதே நேரம் அவளின் தாய்தந்தையரின் அறையிலிருந்து அவர்களை பிணமாக எடுத்து வந்து ஹாலில் வைக்க அதனை பார்த்தவள் வீடே அதிரும்படி கதறினாள். தொடர்ந்து எடுத்துவரப்பட்ட தாத்தா பாட்டி மற்றும் தம்பியின் உடல்களை பார்த்து கதறிக் கொண்டே மயங்கி சரிந்தாள்.
மீண்டும் கண் திறக்கும் போது மருத்துவமனையில் இருந்தவளின் முன்பு காவல்துறையினர் நின்றிருந்தனர். 'இதுவரை நடந்தது அனைத்தும் கனவாக இருக்க வேண்டும்...தன் குடும்பத்தினர்க்கு ஒன்றும் இல்லையென சொல்லிவிட வேண்டும்' என கடவுளிடம் வேண்டியவளின் பிராத்தனை கடவுள் செவிகளில் விழவில்லை போல… "உங்கள் குடும்பத்தினர் ஐந்து பேரை கொலை செய்த குற்றத்திற்காக உங்களை கைது செய்கிறோம்" என்றவரை அதிர்ந்து பார்த்தவள்,
"இல்லை..இல்லை என மருத்துவமனை அதிரும்படி கத்தியவள், அவங்களுக்கு ஒண்ணுமில்லை ...நீங்க எல்லாரும் போய் சொல்றீங்க..நான் நம்பமாட்டேன்… அப்பா வந்த்துடுங்கப்பா...எனக்கு பயமா இருக்கு பிளீஸ்" என இல்லாத தந்தையை அழைத்தவளை கண்ட இன்ஸ்பெக்டர் "சபாஷ் சூப்பர் ஆக்டிங்...உன் நடிப்புக்குத் தான் ஆஸ்கர் விருது எல்லாம் தரணும்.நீ மட்டும் சினிமாவில இருந்திருந்தா எங்கயோ போயிருப்ப' என நக்கலடித்தவர்,உன்னோட நடிப்பையெல்லாம் நம்ப நான் தயாரா இல்லை, இதையெல்லாம் கோர்ட்டில் வந்து பேசிக்கோ" என்றவர்..அவளை கதறக்கதற இழுத்து சென்றார்.
தூங்கி எழுந்த ஒரே இரவில் தனது மொத்த உலகமும் அழிந்துவிட்டது போல் உணர்ந்தவள்..அவர்கள் பின்னால் நடந்தாள். அவ்வளவு தான் இனி தன் வாழ்வு மொத்தம் சிறையில் தான் என எண்ணியவள் ஒரு நடைப்பிணமாக அவர்களுடன் சென்றாள்.
அவனோ ...அன்று காலை தன் வழக்கமான ஜாகிங்கை முடித்தவன் குளிக்க சென்ற சமயம் அவன் மொபைல் அலறியது. அதனை ஏற்று காதில் வைத்தவனின் செவிகளில் விழுந்த செய்தியை நம்பமுடியாமல் அதிர்ந்தவன் அப்படியே சோஃபாவில் அமர்த்தான். இதுவரை எதற்கும் கலங்காதவன் முதன் முதலில் மொத்தமாக நிலைகுலைந்து போனான்.
இனி என்ன செய்வது..எப்படி இதிலிருந்து மீள்வது என யோசித்தவனின் நினைவில் மின்னல் போல் ஒரு முகம் தோன்றி மறைய...சில எண்களை அழுத்தியவன்... எதிரில் அழைப்பை ஏற்கும் வரை அமைதிக்காத்தான். அழைப்பு எடுக்கப்பட்டவுடன் "மச்சி...எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்" என்றவன், பேச வேண்டியவற்றை பேசிவிட்டு மொபைலை வைத்தான்.
இனிதான் தனக்கு வேலை அதிகம் என உணர்ந்தவன் அதனை காண அலுவலகம் நோக்கி சென்றான். இப்போது அவன் இருக்கும் நிலையில் உடனடியாக சென்னைக்கு செல்ல முடியாது என அறிந்தவனுக்கு...வந்த வேலையை உடனடியாக முடிக்க வேண்டிய கட்டாயம் புரிந்தது. ஆல்ரெடி முடிக்கும் தருவாயில் தான் இருக்கிறது என்றாலும் அதனை துரிதப்படுத்தினான்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் டியர்ஸ்
அத்தியாயம் - 2
கடந்த பதினைந்து நாட்களை நெட்டி தள்ளியவன் டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்தான். அந்த அதிகாலை நேரத்திலும் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது… தனது பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டு தன்னை அழைத்து செல்ல வந்த அண்ணனை நோக்கி சென்றவன், தனது உடமைகளை வண்டியில் வைத்துவிட்டு முன்னிருக்கையில் சென்று அமர்ந்து கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துக்கொண்டான்.
மூடிய விழிகளுக்குள் பல நினைவுகள் அலை வரிசையாக வர தொடங்கியது. மெல்ல தன் உணர்வுகளில் இருந்து மீண்டவன்... பார்வையை ஜன்னலை நோக்கி திருப்பிக்கொண்டான். அவன் மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிப்பது போன்று காரில் உள்ள ரேடியோவில் இருந்து பாடல் கசிந்தது..
உயிரே என் உயிரே…
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்...
உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில் சோகம் என்ன...
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னைத் தீண்டும்..
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே...
உன்னை பாதுகாப்பேன்
நானே நானே…..
அந்த பாடலின் வரிகளை கேட்டவன் மனதில், இனி அவளுக்கு நான் இருக்கிறேன் என்ற எண்ணமும்... இந்தத் துன்பத்திலிருந்து அவளை காத்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் பிறந்தது.
வீடு வந்து சேரும் வரை பாடலை தவிர வேறு எந்த பேச்சுக்களும் இல்லாமல் அமைதியாக கடந்தது.
வீட்டில் நுழைந்த மகனை பார்த்த ராதிகாவிற்கு மனம் வலித்தது. எப்போதும் அவன் முகத்தில் உறைந்திருக்கும் புன்னகை இல்லாமல் எதையோ பறிகொடுத்தவன் போல் வந்தவனை மொத்த குடும்பமும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த அதிகாலை நேரத்திலும் அவன் வருகையை உணர்த்து அனைவரும் காத்திருந்தனர். அந்த வீட்டின் சின்ன வாண்டுகள் உட்பட.
உள்ளே நுழைந்தவன் நேரே தன் அறையை நோக்கி செல்ல... எப்போதும் வந்தவுடன் தங்களைத் தூக்கிச் சுற்றும் சித்தப்பா... இன்று நேராக அறைக்குச சென்றதால் வருத்தம் கொண்டனர்... என்ன காரணம் என்று அறியாத போதிலும் ...
ஏதோ பிரச்சனை என்று உணர்ந்து அவனை தொல்லை செய்யாமல் ஒதுங்கி கொண்டனர் அந்த வீட்டின் குட்டி செல்வங்கள்.
அறைக்கு சென்றவன், நேராக மெத்தையில் விழுந்தான். கடந்த பதினைந்து நாட்களாக சரியான ஓய்வும் தூக்கமும் இல்லாத போதிலும் உறக்கம் வர மறுத்தது. கையில் பாலுடன் உள்ளே நுழைந்த ராதிகாவிற்கு அங்கு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த மகனை பார்த்து கண்கள் கலங்கியது. மெதுவாக அவன் அருகே சென்று அமர்ந்தவர், மெல்ல தலையை வருடிக் கொடுக்க ... தாயின் வருகையை உணர்ந்தவன் அவர் மடி மீது தலைவைத்து படுத்துக் கொண்டான்.
இத்தனை நாட்கள் மனதில் இருந்த அனைத்து சஞ்சலங்களும் மறைந்து சென்று….புதிய நம்பிக்கை பிறந்தது போல் உணர்ந்தவனின் கண்கள் தாமாக தூக்கத்திற்கு சென்றது.
தனது இடையை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு சிறு குழந்தை போல் தூங்கும் மகனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார் அவனின் தாய்.
காலை 6 மணி வரை அப்படியே உறங்கிக் கொண்டிருந்த மகனின் தலையை … மெல்ல தலையணையில் வைக்க முயன்றவரின் முயற்சியில் கண்விழித்த ஹர்ஷா தாயைப் பார்த்து... "மணி என்னம்மா ?.." என கேட்க, அவரோ "இப்பதான் கண்ணா ஆறு மணி ஆகுது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு... அப்புறம் ஆபீஸ் கிளம்பி போலாம்" என்றார்.
"இல்லம்மா... எனக்கு தூக்கம் போயிடுச்சு" என்றவன்... எழுந்து அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் தன் முன் நீட்டப்பட்ட காப்பியை எடுத்துக் கொண்டவன் "என்னடா….நீ எடுத்துட்டு வந்திருக்க" என்று தன் அண்ணனை பார்த்து கெட்டவன், பால்கனியை நோக்கி சென்றான்.
பால்கனியில் இருக்கும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவர்கள் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். அந்த அமைதியை முதலில் கலைத்து பேச தொடங்கினான் ஹரிஷ்... அவனின் அண்ணன்.
"இப்ப என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்க" என்றவனை நிமிர்ந்து பார்த்தவன், "இதுல முடிவு பண்ண என்ன இருக்கு. கண்டிப்பா இத அவ பண்ணல...அது மட்டும் சத்தியமான உண்மை. அப்படி இருக்கும்போது அவள் எப்படி இந்த தண்டனையை அனுபவிக்க முடியும், நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அப்படி நடக்க விடமாட்டேன்' என்றவன்…. இதுல ஏதோ பெரிய மர்மம் இருக்கு. யாரோ... அவளை இதுல வேணும்னு இழுத்து விட்ட மாதிரி இருக்கு…. கண்டுபிடிக்கிறேன்... இனி அதுதான் என்னுடைய வேலை" என்றவன்,
"சரி மத்தத நாம வந்து பேசிக்கலாம்... எனக்கு வேலைக்கு டைம் ஆகுது" என்றவன் குளிக்க சென்றுவிட்டான்.
அலுவலகம் செல்ல கிளம்பி வந்தவன்...வெறும் பால் மட்டும் அருந்திவிட்டு 'பசி இல்லை' என பொய்யுரைத்து அலுவலகம் நோக்கி தனது புல்லட்டை கிளப்பினான்.
அண்ணாநகர் காவல் நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இன்று புதிதாக மாறுதலாகி வரும் டி.எஸ்.பி யின் வருகையே அதற்கு காரணம். அவனை பற்றி கேள்விப்பட்டவரை அனைவரும் கூறிய ஒரே விஷயம் "அவர் நல்லவருக்கு நல்லவன்… கெட்டவர்க்கு கெட்டவன்" என்பதே... இதுவே அவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்க செய்தது.
வீட்டிலிருந்து கிளம்பியவன், காலை நேர சென்னை டிராபிக்கில் வண்டியை லாவகமாக செலுத்தியபடி ஐ.ஜி அலுவலகம் வந்தடைந்தான்.
தன் தலைமை அதிகாரிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியவன், அவர் முன்பு கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்
ஹர்ஷவர்தன் ஐ.பி.எஸ் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP).
"வெல்கம்… யங் மேன்" என்றவர், இருக்கையை காட்டி அமரச் சொன்னார்.
தன் முன் அமர்ந்திருந்த ஹர்ஷவர்தனை ஆழ்ந்து பார்த்தவர் "வெல் .. அப்பறம் போன வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதா" என கேட்க,
"எஸ்.சார்'...என்றவன்..அந்த குண்டு வெடிப்பு மற்றும் ஆயுதக் கடத்தலில் சம்பந்தப்பட்ட எல்லாரையும் அரஸ்ட் பண்ணியாச்சு. அதுமட்டுமில்லாமல் அதற்கு சப்போர்ட் பண்ண எல்லா அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களையும் கையும் களவுமாகப் பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்து விட்டோம்" என்றான்.
"எதுக்கு இவ்வளவு அவசரமா டிரான்ஸ்பர்... அதுமட்டுமில்லாமல் அண்ணாநகர் மர்டர் கேஸையும் நீங்களே பார்க்கிறதா சொல்றீங்க. ஏதாவது ஸ்பெஷல் ரீசன் இருக்கா" என்றவரை பார்த்து மெலிதாக சிரித்தவன், " பெரிய காரணம் எல்லாம் இல்லை சார் என்றவன், நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற ஒரே காரணம்தான்" என கூறியவன்... அவரிடம் விடைபெற்று தன் அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.
ஹர்ஷவர்தன் ஐ.பி.எஸ் 28 வயது நிறம்பிய ஆண்மகன் ... ஆறடி உயரம்,தினமும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்பட்ட முறுக்கேறிய தேகம்,பார்வையிலே எதிரில் இருப்பவனை கணிக்கும் திறன் கொண்ட கூரிய விழிகள், கூர்மையான நாசி, அழுத்தமான உதடுகள் என பார்ப்பவரை வசீகரிக்கும் ஆணழகன்.
பதவியேற்று 3 ஆண்டுகளில் பல குற்றங்களையும் குற்றவாளிகளையும் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளான்... குறுகிய காலத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து மக்கள் மனதில் நற்பெயரையும் பெற்றவன்.
அண்ணாநகர் காவல் நிலையத்திற்குள் நுழைந்தவனை பார்த்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனார்கள்.
டி.எஸ்.பி என்றவுடன் கொஞ்சம் வயதானவர்களை எதிர்பார்த்திருக்க... இப்படி ஒரு கம்பீரமான இளைஞனை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.
உள்நுழைந்தவன் அனைவரின் மரியாதையையும் சிறு தலையசைப்புடன் ஏற்றவன் தனது நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
அவனின் நிமிர்ந்த நடையும் கம்பீரமும் அவன் மேல் ஒரு மரியாதையை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியது.
"அந்த அண்ணாநகர்..மர்டர் கேஸ் யார் பாத்துட்டு இருக்கா?.." என்றவனை பார்த்து "என்ன இவர் வந்ததும் வராததுமா... அந்த கேஸை பற்றிக் கேட்கிறார்" என அனைவரும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டனர்.இதனையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன் முன்பு சல்யூட் அடித்தபடி வந்து நின்றான் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்.
"நான் தான் சார்… அந்த கேசை பார்த்துட்டு இருக்கேன்" என்றவனை பார்வையால் அளந்தவன், அந்த ஃபைலை எடுத்து வருமாறு பணித்தான்.
தன் முன் வைக்கப்பட்ட ஃபைலை படித்தவன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான். எல்லா ஆதாரமும் கார்த்திகாவுக்கு எதிராகவே இருந்தது….கொலை செய்யப்பட்ட கத்தி,அவர்களை தாக்கிய பூச்சாடி என அனைத்திலும் அவளின் கைரேகையே. வேறு எந்த நபரின் கைரேகையும் கால்தடமும் இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு உள்ளதாகவும்... செக்யூரிட்டி வாசலில் இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில் எப்படி இதனை கையாளுவது என்று சற்று குழம்பிப் போனான்.
எத்தனை சாட்சிகள் அவளுக்கு எதிராக இருந்தாலும் அவன் அதனை நம்பப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. அதுவும்
கொலை செய்யப்பட்டவர்களின் நிலையை அறிக்கையில் படிக்கும்போதே மனம் கனத்தது. தன்னவள் இதனை எப்படி தாங்கிக் கொண்டாள் என்பதை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அவளை தனியாக விட்டு சென்றுவிட்டோம் என்று அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது.
அவளின் கண்ணீரை துடைக்கவும், அவளைப் தோள் சாய்த்து ஆறுதல் சொல்லவும் தான் இல்லாமல் போனதை எண்ணி இப்போது கண்கள் கலங்கியது. இருக்கும் சூழல் புரிய கண்களை சிமிட்டி கண்ணீரை உள்ளடக்கியவன், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினான்.
"இனிமேல் இந்த கேஸை நான் தான் பார்க்க போறேன்" என்பதை அறிவித்தவன், ரவீந்திரனை இந்த கேஸ் முடியும் வரை தன்னுடன் இருக்குமாறு கூறிவிட்டு எழுந்து வெளியே சென்றான்.
சென்னை மத்திய சிறைச்சாலை முன் தனது ஜீப்பை நிறுத்தியவன், உள்ளே சென்று கார்த்திகாவை பார்க்க அனுமதி பெற்று அவளை காண காத்திருந்தான்.
மயங்கி சரிந்த அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிய வார்டன் மதிய உணவினை கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இம்முறை உணவினை கண்டு முகம் திருப்பாமல்... தனக்கு வாய்த்தது இதுதான் என எண்ணிகொண்டு உண்டு முடித்தாள்.
இப்போது கொஞ்சம் உடல்சோர்வு குறைந்தது போல் உணர்ந்தாள்.
சிறிது நேரத்தில்... உன்னை பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் என அழைக்க வந்த வார்டனை புரியாமல் பார்த்தவள், அவர் பின்னே நடந்து சென்றாள்.
'யாரும் இல்லாத என்னை பார்க்க யார் வந்திருப்பா' என எண்ணியபடி சென்றவளுக்கு….அவனை கண்டவுடன் இதுவரை நின்றிருந்த கண்ணீர் வர பார்த்தது. விழிகள் குளமாக தன் முன் தோன்றும் காட்சி மங்கலாக தெரிய உடனடியாக கண்களை துடைத்தவாறு... 'எங்கே கண்களை மூடினால் காணாமல் போய் விடுவானோ' என அஞ்சியவளாக இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.
கால்கள் இரண்டும் பின்ன ஒரு அடி கூட அவளால் எடுத்து வைக்க முடியவில்லை. மகிழ்ச்சியா.. அதிர்ச்சியா... என சொல்ல முடியாத ஒரு நிலையில் இருந்தவளின் நிலையை கண்டு அவனே அவளை நோக்கி நடையை போட்டவன், கைகளை விரிக்க…. அவளோ புயலென பாய்ந்து சென்று அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் இங்கே சொல்லிட்டு போங்க டியர்ஸ
அத்தியாயம் - 3
கடந்த பதினைந்து நாட்களாக அவளை பார்க்க துடித்துக் கொண்டிருந்தவன், அவளைக் கண்டு அதிர்ந்தான். அழுது வீங்கிய முகம், கண்களைச் சுற்றிய கருவளையம், இளைத்து நிறம் மங்கி பார்க்கவே பல நாள் பட்டினி கிடந்தவள் போல் இருந்தவளை பார்க்க பார்க்க கண்கள் கலங்கியது.
விரிந்த கைகளுக்குள் தஞ்சம் புகுந்தவளை இறுக்கி அணைத்து கொண்டான். காற்று கூட அவர்களுக்கிடையே நுழைய முடியாமல் திரும்பி சென்றது. இனி ஒரு துன்பமும் உன்னை நெருங்க விடமாட்டேன் என சொல்வது போல் இருந்தது அவனின் அணைப்பு.
அப்படியே சிறிது நேரம் இருந்தவன், அவளை தன்னிடமிருந்து பிரித்து அவளின் முகத்தை கைகளில் தாங்க...இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்தது. சிறிது நேரம் அமைதியே இருவரிடமும் ஆட்சி செய்ய... முதலில் அந்த அமைதியை உடைத்தவன், அவள் கண்களை பார்த்துக்கொண்டே "நிலா…"என ஆழ்ந்த குரலில் அழைத்தவனின் ஒற்றை வார்த்தை அவளின் உயிர் வரை சென்று தீண்டியது.
தனக்கு இனி யாருமில்லை என எண்ணியவளுக்கு நான் இருக்கிறேன் என சொல்வது போல் வந்தவனை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள்.
மீண்டும் அவன் மார்பில் பெரும் கேவலுடன் சாய்ந்தவள் தன் மனதின் பாரம் குறையும் வரை அழுதாள். அவளின் கண்ணீர் மார்பை நனைக்க அவனும் வேதனை தாளாமல் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
அவனின் மார்பில் சாய்ந்ததும் இதுவரை உணராத ஒரு பாதுகாப்பை உணர்ந்தாள் கார்த்திகா. காடுமேடு அலைந்து கடைசியாக தன் இருப்பிடம் வந்து சேர்ந்த மகிழ்ச்சி. தனக்குரிய இடத்தை வந்தடைந்துவிட்டோம் என்ற நிம்மதியில் இதுவரை இருந்த கஷ்டங்களும் துன்பங்களும் கூட மறைந்தது போன்று உணர்ந்தாள்.
அவனும் அதே நிலையில் தான் இருந்தான். தன்னவள் தன்னிடம் வந்து விட்டாள்... இனி அவளை ஒரு கஷ்டமும் நெருங்க விடமாட்டேன் என சபதம் எடுத்தவன் போல் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான்.
அவளை சிறிது நேரம் அழ அனுமதித்தவன், ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவளை மெல்ல தன்னிடமிருந்த பிரித்து அவள் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைத்து விட்டான்.
"போதும்... நிலா.. நீ அழுதது ! இனி உன் கண்ணில் இருந்து கண்ணீர் வரக்கூடாது. என் மேல் நம்பிக்கை இருந்தால் திரும்பவும் என் முன் அழாதே' என்றவன், நடந்து முடிந்ததை நம்மால் மாற்ற முடியாது அதையே நினைச்சு உன் உடம்பை கெடுத்துக்காதே. இனி உனக்கு எல்லாம்மா... நான் இருப்பேன், இதை மட்டும் மனதில் வைத்துக் கொள்" என அவளை சமாதானப்படுத்தியவன்,
இந்த பிரச்சனையில் இருந்து உன்னை வெளிக்கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு என்றவனின் கண்களை பார்த்து….
"நீங்க என்ன நம்புறீங்க தானே... சொல்லுங்க... எனக்கு பதில் வேணும். இங்க இருக்கிற எல்லாரும் என்னை ஏதோ புழுவை பார்ப்பது போல் பார்க்கிறத என்னால தாங்க முடியல... சொல்லுங்க... நீங்க என்னைய நம்புறீங்க தானே.." என கதறியவளை இழுத்து அணைத்தவன்,
"அந்த கடவுளே வந்து என் நிலா தப்பு பண்ணிட்டான்னு சொன்னாலும் நான் நம்பமாட்டேன். என்னோட நிலாவை பற்றி எனக்கு நல்லா தெரியும். யாரு நம்பினாலும் நம்பவில்லைன்றாலும் நான் உன்னை நம்புறேன்டி" என்றவனை பார்த்து "உண்மையாவ... இல்லன்னா சொல்லிடுங்க ...எத்தனையோ பேர் சொல்றதை கேட்டுட்டேன். நீங்க சொல்றதையும் கேட்டுட்டு ஒரேடியாக செத்துப்போயிடுறேன்" என்றவளை,
" இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது உளறிக்கிட்டு இருந்த... நானே உன்னை கொன்னுடுவேன். என்ன பத்தி நீ என்ன நெனச்சிட்டு இருக்க ? உன்ன சாக விட்டுட்டு வேடிக்கை பார்க்கவா நான் இருக்கேன். அந்த சாவு கூட என்னை தாண்டி தான் உன்னை நெருங்கனும்" என கூறி அவளை முறைத்தவனால் அது முடியாமல் போக... "உன் மேல கோபம் கூட வரமாட்டேங்குது" என சோகமாக சொல்ல... இவ்வளவு நேரத்தில் முதன் முறையாக அவள் உதட்டில் சிரிப்பை கண்டவனின் மனம் நிம்மதி அடைந்தது.
"இப்போ இருக்கிற இந்த சிரிப்பு..எப்பவும் முகத்துல இருக்கணும்' என்றவன், நாளைக்கு கோர்ட்டில் இந்த கொலைக்கு உனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என நிரூபித்து…
கொலையாளியை சட்டத்திற்கு முன் நிறுத்துவேன்" என்றவன் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து விடைபெற்றான்.
ஒருவரையொருவர் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவள் உள் நோக்கி செல்ல... இவன் வெளியே வந்தான்.
சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தவன்...ஜீப்பில் ஏறி காவல்நிலையம் நோக்கி புறப்பட்டான்.
"சார் ...என்ன ஒரே யோசனையா இருக்கீங்க... எனி ப்ராப்ளம்" என்ற ரவீந்திரனுக்கு அவனது அமைதியே பதிலாக கிடைத்தது.
'இவர் என்ன இப்படி உட்கார்ந்து இருக்காரு... அந்த பொண்ண பாத்துட்டு வந்ததிலிருந்தே இவர்கிட்ட ஏதோ ஒரு மாற்றம் இருப்பதாக தோன்றியது ரவீந்திரனுக்கு.
மறுபடியும் சார் ….என உரக்க அழைத்தவனின் சத்தத்தில் தன்னிலை அடைந்தான்.
"உக்காருங்க ரவீந்திரன் கொஞ்சம் பேசணும்" என்றவன் அவனை அமருமாறு சைகை செய்ய... அவனும் அமைதியாக நாற்காலியில் அமர்ந்தான்.
"இந்த கேஸை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க"….அதாவது அந்த பொண்ணு தான் கொலை பண்ணி இருப்பான்னு நீங்களும் சந்தேகப்படுறிங்களா... ஏன் கேட்கிறேன் என்றால் நீங்க தான் இந்த கேஸை முதலிலிருந்து பார்த்துட்டு இருக்கீங்க... அதான்" என கேட்டவன், அவன் பதிலுக்காக காத்திருக்க,
"சார்…" என சொல்லத் தயங்கியனை... பார்த்த ஹர்ஷா "எதுக்கு தயங்குறீங்க ரவீந்திரன்... நீங்க என்ன நினைக்கிறீங்க என்று தானே கேட்டேன்.. நீங்க தான் கொலை பண்ணிங்கன்னு சொல்லலையே... பிறகு எதற்கு இந்த தயக்கம்" என்றவனை நிமிர்ந்து பார்க்காமல் கண்களை தாழ்த்தியவன்
"அது வந்து... சார்... இந்த கேஸை முதலில் மனோகர் சார் தான் பார்த்தார். ஆனால்… இந்தக் கேஸை கையிலெடுத்த இரண்டு நாட்களிலேயே ஒரு ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டார். அவருக்கு அப்புறம்தான் இந்த கேஸ் என் கைக்கு வந்தது" என்ற ரவீந்திரனை அதிர்ந்து பார்த்தவன்
"என்ன சொன்னீங்க... இரண்டாவது நாளே மனோகர் ஆக்ஸிடெண்ட்ல செத்துட்டாரா…. என அதிர்ந்தவன், உடனே அதிர்ச்சியிலிருந்து தெளிந்து "அந்த ஆக்ஸிடெண்ட் எப்படி...எங்கே நடந்தது" என கேட்க,
"இல்ல சார் அப்பவே அந்த லாரி டிரைவர் எஸ்கேப் ஆகிட்டான்…" என்றவனை கண்டு கொதித்து எழுந்தவன்…"இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை. இறந்து போனது ஒரு இன்ஸ்பெக்டர்… அவரோட சாவுக்கு காரணமான ஒரு லாரி டிரைவர் பிடிக்கத் துப்பில்லை... நீங்களா எப்படி பொதுமக்களுடைய பிரச்சினையை சரி செய்வீங்க…" என்றவன் கோவமாக எழுந்து அறைக்குள்ளேயே நடக்கத் தொடங்கினான்.
தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றவனால் அது முடியாமல் போக ...
"அப்போ...கொலை நடந்த அன்னைக்கு நீங்க ஸ்பாட்ல இல்ல... மிஸ்டர் மனோகர் தான் இருந்திருக்காரு..அப்படித்தானே" என கோபமாகவே கேட்க,
"இல்லை சார்…நானும் சார் கூட தான் இருந்தேன். ஸ்பாட்டுக்கு ரெண்டு பேரும் ஒன்னாதான் போனோம்" என்றான்.
காலையில் பார்த்த ஹர்ஷாவிற்கும் இப்போது அவன் பார்க்கும் ஹர்ஷாவிற்கும் இருக்கும் ஆயிரம் வித்தியாசங்களை அவனால் சொல்ல முடியும் எனத் தோன்றியது. காலையில் பனிமலை ஆக இருந்தவன்..கோபத்தில் எரிமலையாக மாறியிருந்தான்.
"கொலை நடந்த அன்று... என்ன நடந்ததுன்னு ஒன்னு விடாம இப்போ எனக்கு தெரிஞ்சாகணும்" என்றவனை பார்த்து
"அந்த வீட்டில் வேலை செய்த செக்யூரிட்டியோட கம்ப்ளைன்ட் வைத்துதான் ... அவர் சுமார் ஒரு மணி நேரமாக கதவை தட்டியும் எந்த ஒரு எதிர்வினையும் இல்லாததால் பயந்து போலீசுக்கு தகவல் சொன்னார்' என்றவன்,
நாங்க போய் திரும்பவும் கதவைத் தட்டினோம், ஆனா எந்த ஒரு பதிலும் இல்லாததால்... கதவை உடைத்து உள்ளே சென்றோம். முதல்ல ஹாலில் அந்தப்பெண் கார்த்திகா மட்டும் ரத்தக் ரத்தக்கரை படிந்த ட்ரெஸ்ஸில் பக்கத்தில் கத்தியுடன் மயங்கிக் கிடந்தாள். அப்புறம் எல்லா அறையிலும் சென்று பார்த்ததில்
அனைவரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிந்தது" என்றவனை கை நீட்டித் தடுத்தவன்,
"வீட்டில் உள்ள கதவு மற்றும் ஜன்னல் சாத்தியிருந்தது சரி... மாடியில் உள்ள கதவு, அதாவது படிக்கட்டு அருகில் உள்ள மரக்கதவை தொடர்ந்து அடுத்ததாக உள்ள இரும்பு கேட்" என்றவனை பார்த்து,
"உங்களுக்கு எப்படி சார்.. அதைப் பற்றி தெரியும் என கேள்வி கேட்டவனை
ஆழ்ந்து பார்த்தவன், "எல்லாம் ஒரு அனுபவம் தான்" என்றான் இதழோர சிரிப்புடன்.
அவன் பதிலில் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவனை களைத்தவன் "நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை" என இழுக்க…. "பூட்டி தான் இருந்தது சார்" என்க,
"நீங்க உங்க கண்ணால பார்த்தீங்களா" என்றவனை பார்த்து... "இல்லை.. என தலையசைத்தவன்,அது நாங்க எல்லாரும் கீழே உள்ள ரூமை செக் பண்ணிட்டு இருந்தோம்.மனோகர் சார் மட்டும் தான் மாடிக்கு போனார்" என்றான்.
சுத்தி சுத்தி எல்லா கேள்விக்கும் மனோகர்... மனோகர்... மனோகர் என்ற பதிலே கிடைக்க…. இந்த கொலையில் அவனுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது என்பதை உணர்ந்தான். அவன் இறப்பிற்கும்... இந்த கேஸ்க்கும் கூட ஏதோ தொடர்பு இருப்பதையும் புரிந்துகொண்டான்.
"அப்புறம் வேறு என்ன நடந்தது" என்றவனின் கேள்விக்கு
"அதுக்கப்புறம் அந்த பொண்ணோட மயக்கத்தை தெளிய வைத்து, நாங்க அரெஸ்ட் பண்ணும் போது... குற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒரே அழுகை… அப்படியே மயங்கி விழுந்துட்டாங்க.
அதுக்கப்புறம் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி... அவங்க க்யூர் ஆனதுக்கப்புறம் அரெஸ்ட் பண்னோம்" என்றான்.
ஒரு விரக்தியான புன்னகையை சிந்தியவன்…"அப்போ வெறும் கைரேகையை மட்டும் வச்சுக்கிட்டு இவங்க தான் குற்றவாளின்னு நீங்களே முடிவு பண்ணிட்டீங்க... அப்படித்தானே" என்றவனை பார்த்து,
"சார்….இதைவிட என்ன எவிடன்ஸ் வேணும். நீங்க வேணா பாருங்க... நாளைக்கு கோர்ட்ல அந்த பொண்ணுக்கு தூக்குத்தண்டனை கன்ஃபார்ம்" என்றான் சிரித்துக்கொண்டே.
அவனை அடிக்கத்துடித்த கைகளை கட்டுப்படுத்தியவன், கண்கள் சிவக்க அவனை பார்த்து "பார்க்கலாம் ரவீந்திரன் நாளைக்கு என்ன நடக்குதுன்னு…." எனக்கூறிவிட்டு எழுந்து சென்று விட்டான்.
வேகமாக வெளியே வந்தவன்.. அதே வேகத்துடன் தனது புல்லட்டை கிளப்பி கொண்டு வீடு நோக்கி சென்றான்.
வீட்டிற்கு வந்தவன் நேரே தனது அறைக்குச் சென்று வெளியே செல்ல தயாராகி வந்தவனை, தடுத்து நிறுத்திய அவனின் தாய் ராதிகா "நில்லுடா... எங்க போற..? காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிடாம கொலை பட்டினியாக இருக்க. ஒரு வாய் சாப்பிட்டுட்டு எங்கே வேண்டுமானாலும் போய்க்கொள்" என்றார்.
"இல்லம்மா... ஒரு முக்கியமான வேலை இருக்கு...வந்து சாப்பிடுறேன்" என்றவன் வெளியே சென்றுவிட்டான்.
வெளியே வந்தவன் நேரே தன் நண்பனை பார்க்க சென்றான். அவனிடம் பேச வேண்டியவற்றைப் பேசிவிட்டு... வீடு வந்து சேரவே இரவு மணி பத்தை கடந்திருந்தது.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்