அத்தியாயம் 02
"இங்க என்ன பண்ற?" என்ற தேஷ்வாவுடைய குரல் அழுத்தமாக ஒலிக்க, இவளோ கொஞ்சம் கூட இவனை எதிர்பார்த்திருக்கவில்லை.
"அது... அது வந்து... நா..." என்று யாழினி தடுமாற, "என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறியா?" என்று கர்ஜனைக் குரலில் கேட்டான் அவன்.
உடனே இல்லை என்று வேகமாகத் தலையாட்டியவள், "இல்லை... சரியா சாப்பிடல, ரொம்ப பசிக்குது. அதான் சமையலறையில எதையாச்சும் திருடி சாப்பிடலாம்னு போனேன்" என்று எப்படியோ வாய்க்கு வந்த பொய்யை சொல்லி சமாளிக்க, விழிகளை சுருக்கி பார்வையை கூர்மையாக்கினான் தேஷ்வா.
'என்ன ரொம்ப டவுட்ல பார்க்குறான், அய்யோ இவன் பார்வையிலயே நாம உண்மைய உளறிடுவோம் போலயே!' என்று உள்ளுக்குள் எச்சரிக்கையாக நினைத்துக்கொண்டவள், "என்.. என்னை விடுங்க, நான் போகணும். யாராச்சும் பார்த்தாங்கன்னா அவ்வளவுதான்" என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து தப்பிக்கப் பார்க்க, அவனோ அவள் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டான்.
"எனக்கு உன் மேல சந்தேகமா இருக்கு" அவன் விழிகளை கூர்மையாக்கிச் சொல்ல, "நான் இந்த வீட்டுல பத்து வருஷமா இருக்கேன், நீங்க ஐயாவுக்கு பார்டிகார்டா வந்து வெறும் ஆறே மாசம்தான். சொல்லப்போனா, நடு ராத்திரியில நீங்க இங்க நிக்கிறத பார்த்து நான்தான் சந்தேகப்படணும். மொதல்ல என் கைய விடுங்க, உடும்புப் பிடியால்ல இருக்கு" என்று படபடவென பொரிந்து விட்டு அங்கிருந்து அவள் ஓடப் போக, சட்டென அவளை இழுத்து ஒரு சுவற்றுக்குப் பின்னால் மறைந்துக்கொண்டான் அவன்.
யாழினியோ ஏதோ சொல்ல வர, மற்ற கரத்தால் அவள் வாயை மூடிக்கொண்டு ஒரு திசையை அவன் காட்ட, அங்கு பார்த்தவளுக்கு பதற்றமாக தனதறையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த கௌரியைப் பார்த்ததும் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
"கௌரி அக்கா ஏன் இம்புட்டு பதட்டமா போறாங்க? என்னன்னு தெரியலயே..." என்று தன் வாயை மூடியிருந்த அவன் கரத்தை விலக்கி அவள் மெல்ல முணுமுணுக்க, இவனுடைய விழிகளும் சந்தேகத்தில் சுருங்கின.
'கண்ணாலயே பேசுறானே... இவனுக்கு வார்த்தையே தேவையில்ல போல' என்று நினைத்துக்கொண்டவள் கௌரி சென்றதுமே வேகமாக அவனை விட்டு விலகி அங்கிருந்தே ஓடிவிட, அவள் சென்ற திசையை வெறித்துப் பார்த்த தேஷ்வாவின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது.
சுற்றி முற்றி பார்த்துவிட்டு அவன் வெளியேறும் அதேநேரம் தன் அறையிலிருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கி போட்டு உடைத்துக்கொண்டிருந்தான் தஷ்வந்த்.
"ஷீட் ஷீட் ஷீட்! இப்போ நான் என்ன பண்ணுவேன்.. ஓ காட்! இது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்" என்று பதற்றமாக குறுக்கும் நெடுக்கும் அவன் நடந்துக்கொண்டிருக்க, திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
அறையை சுற்றிப் பார்த்தவன் லேசாக கதவைத் திறந்து வாசலில் நின்றிருந்த வேலையாளை புரியாமல் பார்க்க, "ஐயா கூப்பிட்டாருங்க சின்னய்யா" என்றுவிட்டு நகர்ந்தான் வேலையாள்.
பெரிய மூச்சுக்களை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன், தன் தந்தையின் முன்னே சென்று நிற்க, ஒரு இடத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ரகுவீரோ, "அவன்கிட்ட இருந்து ஏதாச்சும் இன்ஃபார்மேஷன் கிடைச்சதா?" என்று கேட்டார் இறுகிய குரலில்.
"இல்லைப்பா, இன்னும் எந்த தகவலும் வரல. நானும் அப்பப்போ கான்டேக்ட் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்" என்று தஷ்வந்த் தயங்கியபடி சொல்ல, "ஆதிரன்..." என்று அந்த ஒருவனுடைய பெயரை பெயரை முணுமுணுத்த ரகுவீரின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டிருந்தன.
"அவன் எந்த நேரத்துல என்ன பண்ணுவான்னு யாராலேயும் யூகிக்க முடியாது. அவனுக்கு அழுத்தம் ஜாஸ்தி. கூடிய சீக்கிரம் என்னோட மொத்த ராஜ்யத்தையும் அவன்தான் ஆளப் போறான்... என்னோட மகன் ஆதிரன்" என்ற அவரின் வார்த்தைகளில் அத்தனை உறுதி தெரிய, 'க்கும்!' என்று நொடிந்துக்கொண்டவனுக்கு எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றிய கதையாகியது.
மீண்டும் தனதறைக்கு வந்த தஷ்வந்த் கையிலிருந்த அலைப்பேசியை சுவாற்றில் விட்டெறிந்து, "என்னை பார்த்தா கேனயன் மாதிரி தெரியுதா, அந்த ஆதிரனுக்குதான் ஆட்சின்னா அப்போ நான்... விட மாட்டேன், அந்த ரகசியம் கொஞ்ச நாளைக்கு ரகசியமாவே போகட்டும். மொதல்ல ஆதிரன எப்படியாச்சும் இதுக்குள்ள வர விடாம பண்ணணும்" என்று விழிகளில் தீர்க்கத்தோடு சொல்ல, தனதறையில் ஜன்னலோரம் நின்று வானத்தை வெறித்துக்கொண்டிருந்த ஆதிரனின் இதழ்கள் நிலவைப் பார்த்து மர்மப் புன்னகை புரிந்தன.
அன்றைய நாள் முடிந்து அடுத்தநாளும் விடிய, இங்கு நெற்றியை நீவி விட்டவாறு அமர்ந்திருந்த ரத்தினவேலின் சிந்தனை முழுவதும் நேற்று மேடைப் பேச்சில் ரகுவீர் அறிவித்த அவரின் மூத்த வாரிசைப் பற்றிய குழப்பமே ஓடிக்கொண்டிருந்தது.
"நான் ரகுவீரோட பழகின காலத்துல இருந்து அவன் மூத்த பையன அவ்வளவா பார்த்ததே இல்லை. ஊருல படிச்சிட்டு அப்பறம் வெளிநாட்டு படிப்புக்கு போயிட்டதா கேள்விப்பட்டிச்சு. இப்போ என்னடான்னா அவன் கட்சிய பொறுப்பெடுப்பான்னு இவன் சொன்னதை வச்சு பார்த்தா ஏதோ சந்தேகமாக இருக்கு. அவன பத்தி தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். ஆமா... அவனோட பெயர் என்ன, சரியா ஞாபகம் வர மாட்டேங்குதே!"
என்று நெற்றியை தட்டியவாறு யோசித்துக்கொண்டிருந்தார் அவர். தேஷ்வாவோ அமைதியாக அவர் பக்கத்தில் நின்றிருக்க, "ஏய், இன்னும் இரண்டே நாள்ல அவன பத்தி டீடெயில்ஸ் எனக்கு வேணும். இல்லை..." என்று மிரட்டலாக சொன்னார் ரத்தினவேல்.
ஆனால் தேஷ்வாவின் முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அமைதியாக அவரைப் பார்த்தவன், "ஓகே சார்" என்று மட்டும் சொல்லி விட்டு மீண்டும் விறைப்பாக நின்றுக்கொள்ள, சலிப்பாக விழிகளை உருட்டியவாறு திரும்பிய ரத்தினவேலின் விழிகளுக்கு தரையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த யாழினி தென்பட்டாள்.
"ஏய்..." என்று அவர் அழைக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், ரத்தினவேல் அருகே வரும்படி அழைத்ததும் எச்சிலை விழுங்கிக்கொண்டு அவரின் முன்னே சென்று நிற்க, அவளை மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தார் அவர்.
அந்த பார்வையில் அப்பட்டமாக காமம் தெரிய, உள்ளுக்குள் அருவருத்துப் போனாள் யாழினி.
"என் கால அழுத்தி விடு!" என்று சொல்லி அவர் காலை நீட்ட, தரையில் அமர்ந்தவள் அவர் சொன்னதை செவ்வென செய்ய, சற்று முன்னே வந்து யாழினியின் நாடியை நிமிர்த்தி அவளின் முகத்தை உற்றுப் பார்த்தார் ரத்தினவேல்.
அவளுக்கோ பயத்தில் உதடு துடிக்க, பதற்றமாக அவரைப் பார்க்க, "கடைசியா உன் அம்மாவோட முகமும் இப்படிதான் இருந்துச்சு யாழினி, அதே மாதிரி இருக்க. உன்னை பார்க்கும் போது வயசே குறைஞ்ச மாதிரி ஆகுது" என்று சொல்லிக்கொண்டு அவளின் கன்னத்திலிருந்து கழுத்து வரை அவர் வருடிவிட, உடல் கூசிப் போனவளாக சிலை போல் அமர்ந்திருந்தாள் யாழினி.
சுற்றி இருந்த வேலையாட்களோ குறுகுறுவென்றுப் பார்க்க, ரத்தினவேலை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்ட தேஷ்வாவின் மூளைக்கு அப்போதுதான் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வர, "சார், இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு" என்றான் சட்டென.
அவரோ உணர்ச்சிகள் வடிந்துப் போனவராக நிமிர்ந்து அவனை முறைத்துப் பார்க்க, யாழினிக்கோ அப்போதுதான் உயிரே வந்தது போலிருந்தது.
"எப்போ பாரு நேரங்கெட்ட நேரத்துலதான் ஏதாச்சும் சொல்லுவான்" என்றவர் எழுந்து துண்டை தோளில் போட்டுக்கொண்டு முன்னே நடக்க, தேஷ்வாவோ யாழினியை அழுத்தமாகப் பார்த்து விட்டு ரத்தினவேலின் பின்னே வேக நடைப்போட்டு செல்ல, விழிகள் சிவக்க ரத்தினவேல் சென்ற திசையை பார்த்திருந்தாள் யாழினி.
*************
"டேய் இன்னைக்கு செம்ம போதைடா, ஐ அம் சோ ஹேப்பி..." என்று சஞ்சய் அலைப்பேசியில் இன்று பப்பில் ஒரு பெண்ணோடு நடந்த சல்லாபத்தை பற்றி தன் நண்பன் விஷ்வாவிடம் சொல்ல, "ரியலி! உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா. ஆனா..." என்று யோசனையோடு நிறுத்தினான் மற்றவன்.
"ஆனா என்னடா?" என்று இவன் புரியாமல் கேட்க, "இன்னும் அந்த குட்டிய எங்கள ருசிக்க விடாம இருக்கியேடா பாவி! எப்போதான்டா அந்த வேலைக்காரிய நமக்கு விருந்து போடுவ?" என்று நண்பன் கேட்டதும்தான், புரிந்தது சஞ்சய்க்கு.
"ஓஹோ... அதுக்கென்னடா! கூடிய சீக்கிரம், ஆனா அவ வீட்டை விட்டு வெளியில வர மாட்டேங்குறாளே, அப்பப்போ அவள கிஸ் பண்றதே முடியாத காரியமாதான் இருக்கு விஷ்வா. பட், டோன்ட் வோர்ரி, அந்த பட்டிக்காட அடக்குறது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை. சீக்கிரம் லெட்ஸ் டேஸ்ட் ஹெர்" என்று பேசிக்கொண்டே அறைக்குள் இவன் நுழைய, "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்றொரு செருமல் சத்தம்.
உடனே அது யாரென்று உணர்ந்தவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு பின்னால் திரும்பிப் பார்க்க, கதவில் சாய்ந்தவாறு நின்றிருந்தாள் யாழினி.
"வாவ்! என்ன சர்ப்ரைஸா இருக்கு. மேடம் என் ரூமுக்குள்ள எல்லாம் வர மாட்டீங்களே! அதுவும் இந்த நேரத்துல..." என்று ஆச்சரியமாக விழி விரித்தவாறு அவளை நெருங்கிய சஞ்சய், அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்க, அவளோ வெட்கத்தில் முகம் சிவக்க தலையை குனிந்துக்கொண்டாள்.
அவனோ உணர்ச்சிகள் தூண்ட அவளைப் பார்த்தவாறு அப்படியே கதவிலேயே சாய்ந்துக்கொள்ள, "ஏங்க, நான் ஒன்னு கேக்கலாமா? நிஜமாவே என்னை கல்யாணம் பண்ணுவீங்களா என்ன, ஏன் கேக்குறேன்னா உங்க வசதிக்கும் படிப்புக்கும் எத்தனையோ பொண்ணுங்கள நீங்க பார்த்திருப்பீங்க அதான்..." என்று தயக்கத்தோடு தன் சந்தேகத்தைக் கேட்க, அவனோ உள்ளுக்குள் மர்மமாக சிரித்தவாறு அவளுடைய கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தான்.
"என்ன யாழி பேபி நீ, என்னை மத்த பசங்க மாதிரி நினைச்சியா! நான் உன்னைதான் கல்யாணம் பண்ணுவேன். அதுக்கு முன்னாடி நாம வெளியில எங்கேயாச்சும் போய் வரலாமா, தனிமையில..." என்று கேட்டுக்கொண்டே அவளுடலில் அத்து மீற, மெல்ல அவனை விட்டு விலகியவள், "நான் எப்படிங்க... அது... ஐயாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிரும்" என்று தடுமாறினாள் அவள்.
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது யாழினி, ப்ளீஸ் ப்ளீஸ்! வெளியில போகலாம், உனக்கும் புதுசா இருக்கும்ல! நிறைய விஷயங்கள நீ தெரிஞ்சிக்கலாம்" என்று அவன் அவளை சம்மதிக்க வைக்க போராட, யாழினியோ என்ன சொல்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைய, சரியாக சஞ்சய்க்கு ஒரு அழைப்பு வந்தது.
"அய்யோ! யாராச்சும் என்னை இந்த ரூம்குள்ள பார்த்தா அவ்வளவுதான். நான் ஓடிடுறேன்ங்க" என்றுவிட்டு யாழினி அங்கிருந்து ஓடியிருக்க, 'ஷீட்!' என்று எரிச்சலாக முணுமுணுத்தவன், அலைப்பேசியை கட்டிலில் தூக்கிப் போட, இங்கு வெளியே ஓடியளோ நேராக சென்று ஒருவனின் மார்பிலேயே மோதி நின்றாள்.
'எவன்டா வர்ற வழியில தூண வச்சது!' என்று நெற்றியை தடவியவாறு அவள் நிமிர்ந்துப் பார்க்க, அவள் முன்னே விறைப்பாக ஒற்றைப் புருவத்தை தூக்கிய வண்ணம் நின்றுக்கொண்டிருந்தான் தேஷ்வா.
'அய்யய்யோ மாட்டிக்கிட்டியே பங்கு' என்று அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு எச்சிலை விழுங்க, "இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?" என்று அவளையே குறுகுறுவெனப் பார்த்தவாறுக் கேட்டான் அவன்.
"அது... அது வந்து.. சின்னய்யா ரூம்ம க்ளீன் பண்ண வந்தேன் ஹிஹிஹி..." என்று யாழினி அசடுவழிய, "இந்த நேரத்துலயா?" என்று சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை அவன் காட்ட, இவளோ பெக்கபெக்கவென விழித்தாள்.
"உன் போக்கே சரியில்ல, ஜாக்கிரதையா இருந்துக்கோ!" என்று அவன் சஞ்சய்யின் அறையை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு நகரப் போக, "நன்றிங்க" என்றாள் அவள் சட்டென்று.
தேஷ்வாவோ திரும்பி கேள்வியாகப் பார்க்க, "நீங்க இன்னைக்கு என்னை காப்பாத்தினீங்கல்ல அதான்..." என்று யாழினி சிறு புன்னகையோடு தயங்கித் தயங்கி சொல்ல, அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு அவன் பாட்டிற்கு சென்றான் தேஷ்வா.
'ரொம்பதான் பண்றான்!' என்று உள்ளுக்குள் நொடிந்துக்கொண்டவள், அதற்குமேல் அங்கு நிற்காது தனதறைக்கு ஓடிவிட, அன்றைய நாள் முடிந்து அடுத்தநாளும் விடிந்தது.
காலையில், தனதறையில் குறுக்கும் நெடுக்கும் பதற்றமாக நடந்துக்கொண்டிருந்தாள் கௌரி. அவளுடைய உடல் கையிலிருந்த குழந்தை பரிசோதிக்கும் கருவியில் தெரிந்த இரு கோடுகளைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருக்க, "யக்கோவ்..." என்று கத்தியவாறு காஃபியோடு அறைக்குள் நுழைந்தாள் யாழினி.
"கௌரி அக்கா, இப்போ எல்லாம் உங்கள பார்க்குறதே கஷ்டமா இருக்கே, அவ்வளவு பிஸி ஆகிட்டீங்களா என்ன! ஆமா... அதென்ன கையில" என்று அவள் கேட்க, "ஒன்.. ஒன்னு இல்லை யாழினி" என்று பதற்றமாக சொன்ன மற்றவள் கட்டிலின் மீதிருந்த தலையணைக்கு கீழ் அதை மறைத்து வைக்க, யாழினியின் புருவங்கள் சந்தேகத்தில் சுருங்கின.
"சாப்பிடுறீங்களா அக்கா, ஐயா மேசைக்கு போயிட்டாரு. உங்களையும் வர சொன்னாரு" என்று யாழினி அறையை சுத்தப்படுத்தியவாறு சொல்ல, தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு அவள் சொன்னது காதிலேயே விழவில்லை.
'என்னாச்சு இவங்களுக்கு, ஏன் இப்படி இருக்காங்க? ஏதோ ஒன்னு இருக்கு' என்று உள்ளுக்குள் யோசித்தவள், அறையை சுத்தப்படுத்துவது போல் பாவனை செய்தவாறு கௌரியை கவனிக்க, திடீரென கௌரியின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது.
அதைப் பார்த்ததும் தான் மறைத்து வைத்ததை கூட மறந்து வேகமாக அழைப்பை ஏற்றவாறு அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து விட, 'பாத்ரூமுக்குள்ள இதை ஏன் தூக்கிட்டு போறாங்க. அய்யே...' என்று முகத்தை சுளித்தவள் வேகமாக சென்று தலையணையை தூக்கிப் பார்க்க, அது என்னவென்று சுத்தமாகத் தெரியவில்லை யாழினிக்கு.
'என்ன இது, இதை எதுக்கு பாவிச்சிருப்பாங்கன்னு கூட தெரியலயே! என்னவா இருக்கும்...' என்று தீவிரமாக யோசித்தவள், கௌரி வருவதை உணர்ந்து வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களை கழுவியவாறு யோசித்தவளுக்கு கௌரிக்கு என்ன பிரச்சனை என்று உணரவே முடியவில்லை. சரியாக, நடு ஹாலில் ரத்தினவேல் கத்தும் சத்தம் கேட்க, கூட்டத்தோடு கூட்டமாக சென்று நின்றாள் யாழினி.
"ச்சே! போச்சே போச்சே... ஒழுங்கு மரியாதையா எவன் எடுத்தான்னு சொல்லிருங்க. நீங்களா சொன்னா தண்டனை குறைவா இருக்கும் இல்லை..." என்று ரத்தினவேல் அடித்தொண்டையிலிருந்து கத்த, தேஷ்வாவோ அமைதியாக நின்றிருந்தான்.
"அம்மா என்னாச்சு? ஏன் ஐயா கத்திக்கிட்டு இருக்காரு?" என்று யாழினி சண்முகத்தின் காதில் கிசுகிசுக்க, "ஆஃபீஸ் ரூம்ல இருந்த ஃபைல எவனோ திருடிட்டானாம், அது ஐயாவோட அரசியல் சம்பந்தப்பட்ட ஃபைலாமே... அதான் எவன் எடுத்தான்னு கேட்டுட்டு இருக்காரு" என்று இவர் சொல்ல, "ஓஹோ..." என்றதோடு அமைதியாகி விட்டாள் அவள்.
ஆனால், விதி அவளை விட்டால்தானே!
ஆக்ரோஷத்தோடு கத்திக்கொண்டிருந்தவரின் பார்வையில் எதேர்ச்சையாக யாழினி சிக்க, "ஏய் இங்க வா..." என்று அவர் அழைக்க, அதிர்ந்துப் பார்த்தவள் நகர பயந்து அப்படியே நிற்க, "ஐயா கூப்பிடுறாருதானே போ" என்று அவளின் முதுகைப் பிடித்து தள்ளிவிட்டார் சண்முகம்.
"சொல்லுங்க ஐயா..." என்று பயந்த குரலில் அவள் கைகளைப் பிசைந்தவாறு அவரை நோக்கிச் செல்ல, "நீதானேடீ அன்னைக்கு ஆஃபீஸ் ரூம்ம க்ளீன் பண்ண, உண்மைய சொல்லுடீ... நீதானே எடுத்த?" என்று கத்திக்கொண்டு இடுப்பிலிருந்த பெல்ட்டை கையிலெடுத்தார் அவர்.
"நா.. நான் இல்லைங்கய்யா. சண்முகம் அம்மா தான்..." என்று இவள் ஏதோ சொல்ல வர, "அய்யோ ஐயா நான் இல்லை, நானே என் கண்ணால பார்த்தேன், இவ தான் உங்க ரூமுக்குள்ள போனா" என்று சண்முகம் வாயிற்கு வந்த பொய்யை சொல்ல, ரத்தினவேலோ அவளை கொலைவெறியோடுப் பார்த்தார்.
"பட்டிக்காட்டு நாயே! உன் ஆத்தாவும் அப்பனும் செத்தப்போவே உன்னையும் கொன்னு போட்டிருக்கணும். எதுக்காச்சும் உபயோகப்படுவியேன்னு உனக்கு சோறு போட்டேன் பாரு, என்னை சொல்லணும், எவன் சொன்னான்னு இதை பண்ணடீ, சொல்லு! என் சோத்த திண்ணு எவனுக்கு வேலை பார்க்குற?" என்று சரமாரியாக அவர் அவளை அடிக்கத் தொடங்க, "ஆஆ... அம்மா வலிக்குது" என்று வலியில் கத்திவிட்டாள் யாழினி.
சுற்றியிருந்தவர்களோ தடுக்கவும் முடியாமல் பார்த்துக்கொண்டு நிற்கவும் முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ள, தேஷ்வாவோ அழுத்தமாக நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான்.
யாழினியோ ரத்தினவேல் அடிக்கும் அடியால் வலியில் கதறித் துடிக்க, நடக்கும் அத்தனையும் அந்த மினி கேமராவில் பதிவு செய்யப்படுவதை யாரும் அறியவில்லை.
**************
மற்ற கதைகளை அமேசன் கிண்டலில் படிக்க

USA link
https://www.amazon.in/ஷேஹா-ஸகி/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1
India link
https://www.amazon.in/ஷேஹா-ஸகி/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1