ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு வானிலே இரு வெண்ணிலா

Status
Not open for further replies.

suriakala saravanan

Member
Wonderland writer
ஒரு வானிலே இரு வெண்ணிலா


அத்தியாயம் 1

"பச்சை பசேல் என்று கண்ணெட்டும் தூரம் வரை இருந்த வயல்காட்டில் நடுவே.. வரப்பில் கரும்பை கடித்து கொண்டு இங்கேயும் அங்கேயேயும் கண்ணை இராட்டினம் போல சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டே.. தனது நீளமான கூந்தலை ரெண்டை சடை பிண்ணி போட்டு தோளின் இருபுறமும் ஆட நடந்து வந்தாள் நிலா.

ஒயிலாக நடந்துவரும் தனது பேத்தியை பார்த்த பொன்னியம்மா “ஏ புள்ள நிலா நல்ல நேரம் முடியறதுக்குள்ள நடவு நடோனுமாத்தா விரசா வா” என நிலாவிடம் சொன்னார்.

நிலா பாவாடையை ஒரு கையில் பிடித்து கொண்டு தாவணியின் முனையை இடுப்பில் சொருகி “சொல்லுங்கம்மச்சி என்ன பண்ணோனும்” என பொனியம்மாவிடம் கேட்டாள்.

பொன்னியம்மா நிலாவின் கையில் நாத்த எடுத்து சனி மூலையிலிருந்து நட ஆரம்பிக்கோணும் கண்ணு என்றும், அதுக்கு முன்ன நம்ம ஊரு விநாயகரு, முருகரு, மாரியம்மா, எல்லையம்மா, ஐய்யனாரு எல்லா சாமியையும் கும்பிட்டு ஆரம்பிக்கோணும் தாயி என நிலாவின் கையில் கொடுக்க.. நிலா தன் அம்மச்சியின் முகத்தை பார்த்து தன் முத்து பற்கள் மின்ன சிரித்துக் கையிலிருந்த நாத்தை எடுத்து கிழக்கு நோக்கி கை கூப்பி​

சந்திரரே சூரியரே
சாமி பகவானே

சந்திரரே நான் நினைச்சி
சாய்ச்சேன் திருஅலவு

சாய்ச்ச திரு அலவு
சமச்சி பறி ஏறனும்

எடுத்த திரு அலவு
எழுந்து பறி ஏறனும்


என்ற கடவுளை கும்பிட்டு நாத்தை நட ஆரம்பித்தாள்.. நிலா நாத்து நடட்டும் என்று காத்திருந்த வேலையாட்கள் அனைவரும் நாத்து நட ஆரம்பித்தனர்.

பொன்னியம்மா நிலாவுக்கு கைகளை கழுவ தண்ணீரை ஊற்ற.. அவள் கைகளை கழுவி விட்டு அம்மச்சி “எனக்கு நாத்து நட்டத்துக்கு காசு கொடுங்க” என்று தன் இடுப்பில் சொருகியிருந்த தாவணியை எடுத்துவிட்டு கையை நீட்டி கேட்டாள்..

பொன்னியம்மா நிலாவின் கதுப்பு கன்னத்தை பற்றி “ராசாத்தி காசெல்லாம் உன் மாமன் மகிழன் கிட்ட கேட்டு வாங்கிக்கத்தா” என்று சொன்னார்.

என்னது?.. என்ன சொன்னீங்க.. காசு.. தரமாட்டீங்களா..? என்று முகம் சிவக்க.. நேத்து பொழுதோட நீங்க அம்மாகிட்ட காலையில நாத்து நடோனும் நிலாவா வெள்ளனே எழுந்த வர சொல்லுனு சொன்னீங்களாம்..

நான் என் வேலையெல்லாம் விட்டு வயலுக்கு வந்தா.. காசை தராம மாமா கிட்ட வாங்கச் சொல்லுறீங்க இது ஞாயமா அம்மச்சி என்று கையை நீட்டி பேசிக்கொண்டே.. பொன்னியம்மாள் இடுப்பில் சொருகியிருந்த சுறுக்கு பையை எடுத்த அதிலிருந்த ஐநூறு ரூபாய் தாளை எடுத்துட்டு மீண்டும் அவர் இடுப்பில் சொருகி விட்டாள்..​

நாளை பின்ன நான்தான் இந்த வயலுக்கு சொந்தகாரி ஆக போறேன்.. நான் கேட்டா ஏதும் இல்லைனு சொல்லுவீங்க.. உங்கள இந்த வயகாட்டுப்பக்கம் கூட விடமாட்டேன் பார்த்துக்கோங்க என்று பொன்னியம்மாவை போலியாக மிரட்டி பேசி விட்டு புள்ளி மானை போல வயலை விட்டு வீட்டுக்கு ஓடினாள்..

பொன்னியம்மா வயல் வேலை செய்யும் ஆட்களிடம் வேலை பகர்ந்து கொடுத்துவிட்டுக்கு சென்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் எட்டக்குடி கிராமம் (கற்பனை ஊர்)

கணபதி - பொன்னியம்மாவுக்கு ஒரு பையன் இரு பெண்கள்.. கணபதி இரண்டு வருடங்களுக்கு முன்பு காலாமானார்.. பொன்னியம்மா கணவர் இறந்ததும் தன் மகன் சக்ரவர்த்தி வீட்டில் தஞ்சமடைந்தார்.​

முதல் பெண் –ஜானகி–வரதன்
இரண்டாவது பையன் – சக்ரவர்த்தி – சாந்தி
மூன்றாவது மகள் –வாணி – சுந்தர்

ஜானகி வரதன் சென்னையில் ரியல் எஸ்டேட் பிசினஸ், கெமிக்கல் பேக்டரி.. ஸ்டீல் பேக்டரி என்று சென்னையில் பிரபல தொழிலதிபராக இருக்கிறார்.. வரதன் பிஸ்னஸில் கெட்டிக்காரர்.. அதே சமயம் முன் கோபம் கொண்டவர்.. ஜானகி பெயருக்கேற்ப சாந்த குணமுடையவர்.. ஜானகி தந்தை இறந்த போது தாய் வீட்டுக்கு போனது அதன் பிறகு இன்னும் அவரை அனுப்பவில்லை வரதன். அதற்காக பெண்டாட்டியை கொடுமைபடுத்துபவர் அல்ல.. மனைவி இல்லையென்றால் தன் குடும்பம் இயங்காது என்று அவரை எங்கும் அனுப்ப மாட்டார்.

வரதனுக்கு மூத்தவன் சுகன் மருமகள் சுகந்தி இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் துருவ். சுகன் அவர்களின் கெமிக்கல் பேக்டரியை நிர்வாகம் பார்க்கிறான்.

இளையவள் பொன் நிலா எம்.பி.ஏ முதல் வருடம் படித்துக்கொண்டிருக்கிறாள்.. படித்து கொண்டிருந்தாலும் பொன்நிலா ஒரு கம்பெனியை நிர்வாகம் பார்க்கிற அளவுக்கு ஆளுமைதிறன் வாய்ந்தவளும், கூடவே திமிரும், தான் பணக்காரி என்ற கர்வமும் கொண்டவள்.. அவள் மரியாதை கொடுப்பது தன் தாயிடம் மட்டும் தான்.. தந்தைக்கு செல்ல பெண்.. அவள் என்ன செய்தாலும் தலைஆட்டுவார் வரதன்.. அவளை யாரும் கேள்வி கேட்க விட மாட்டார்.​

சக்ரவர்த்தி – சாந்தி

இவர்களின் தவப்புதல்வன் மகிழன் நம்ம ஹீரோ 28 வயது ஆணழகன்.. படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.. ஆனால் பிடித்தது விவசாயம்.. இப்போது தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்க்கிறான்.. விவசாயத்தில் புதிய உத்தி முறைகளை கண்டுபிடித்து அதில் சாதனை படைத்து வரும் கிராமத்து காளை.. அவன் தனது ராயல்என்பீல்டில் ஓட்டி வரும் அழகே தனி.. கிராமத்து பெண்களின் நாயகன் மகிழன்.

இளையமகள் சுகந்தி சொந்தம் விட்டு போக கூடாது என்று தன் அண்ணன் மகன் சுகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.​

வாணி சுந்தர்

இவர்களின் தவப்புதல்வி தேனிலா.. பெயருக்கேற்ப எப்போதும் தேனியாக வலம் வருபவள்.. தன் மாமன் மகிழனின் மனதை கொள்ளையடித்தவள்.. சுந்தர் தேனிலா மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது வயற்காட்டில் விஷ நாகம் தீண்டி இறந்துவிட்டார்.

சக்ரவர்த்தி வாணியின் கணவன் இறந்தபிறகு அவளை தனியாக இருக்க வேண்டாம் என்று தன்னுடனே அழைத்து வந்துவிட்டார்..

வாணி தேனிலா வளர்ந்த பிறகு தன் அண்ணனிடம் எங்களுக்கு ஒரு வீடு தனியாக கட்டிகொடுத்துவிடுங்கள் என்று கேட்டவுடன் அவரும் தன் வீட்டின் அருகிலேயே ஒரு மச்சுவீட்டை கட்டிக்கொடுத்துவிட்டார்.

தேனிலா பி.ஏ. இங்கிலீஷ் இறுதியாண்டு படித்து கொண்டிருக்கிறாள். தேனிலாவை நாம நிலாவென்று அழைப்போம்.
நிலா தன் மாமன் சக்ரவர்த்தி வீட்டுக்குள் “அத்த.. அத்த” என்ற அழைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்..

சாந்தி சமயலறையில் மதிய உணவை தன் வீட்டில் வேலை செய்யும் கோமதியின் உதவியுடன் சமையலை செய்துகொண்டிருந்தார்.

கோமதி சாந்தியிடம் “பெரியம்மா, நிலாம்மா வந்துட்டாக இனி சமையல் கட்டை ஒரு வழி பண்ண போறாங்க” என்று புலம்ப.. சாந்தி காயை நறுக்கிகொண்டே.. “எப்ப இருந்தாலும் இந்த வீட்டு சமையல் கட்டை ஆள போறவ அவதான் அதனால அவ இஷ்டத்துக்கு விடறேன்” என்றார்.

அவர் பேசிமுடிப்பதற்குள் அத்த என சாந்தியின் பின்னால் அவரை கட்டியணைத்தாள் நிலா.. கோமதி அவர்களிருவரையும் பார்த்துகொண்டே நிற்க.. அதை பார்த்த நிலா “என்ன கோமதியக்கா எங்க ரெண்டு பேரையும் அப்படி பார்க்குறீங்க.. கண்ணு வைக்காதீங்க” என்று பேசினாள்.

கோமதி நிலாவிடம் நான் ஏன் நிலாம்மா உங்களை கண்ணு வைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் சிக்கன் குழம்பை கிளறிவிட்டார்.

நிலா கோமதியக்கா என்ன குழம்பு வைக்கிறீங்க.. இன்னிக்கு மாமா காளை அடக்குற போட்டிக்கு போறாக.. எப்படியும் மாமா காளைய அடக்கி ஜெயிச்சுட்டுதா வருவாக.. அதனால மாமாக்கு நான் என் கையாள மட்டன் வறுவல் சமைக்கோணும்.. நீங்க இந்த பக்கம் வாங்க என்று கூறி மட்டன் வறுவல் செய்ய தேவையான மசாலை தயாரிக்க ஆரம்பித்தாள்.

சாந்திக்கு எப்படிதான் என் மகன் இந்த வாயாடிய சமாளிக்க போறானோ தெரியல என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.. நிலா மாசாலை அரைத்துக்கொண்டே சாந்தியை பார்த்து “அத்த நீங்க என்ன மனசுக்குள்ள நினைக்கிறீங்கனு நான் சொல்லட்டுமா… உங்க பையன் இந்த வாயாடிய எப்படி சமாளிப்பேன்னு தானே நினைச்சீங்க” என்று சொன்னாள்.

சாந்தி நிலாவிடம் ஆமாடி ராஜாத்தி நா அப்டிதா நெனச்சேன்.. என மனசுல உள்ளத எப்படியம்மா கண்டுபிடிச்ச என்று நிலாவின் கன்னத்தை பற்றி நெட்டி முறித்தார்..​

நிலா “அத்த நான் சமையல முடிச்சுட்டேன் நான் காளை அடக்குறத பார்க்க போறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.. கோமதி சாந்தியிடம் “மழை பெய்து ஓஞ்ச மாறி இருக்குங்கம்மா” என்று கூறினார்.

நிலா வீட்டு வாசலுக்கு வரும் போது சக்ரவர்த்தியை பார்த்தாள்.. அவர் “அம்மாடி ராஜாத்தி என் மகனுக்கு குழம்பெல்லாம் வச்சாச்சா" என்று அவள் தலையை வருட.. நிலா “ஏனுங்க மாமா நான் செஞ்ச மட்டன் வறுவல் உங்களுக்கும் வேணுமா.. நான் மாமனுக்கு மட்டும் தான் செஞ்சு வச்சேன்.. போனா போகுது கொஞ்சுண்டு மட்டும் அத்தய போட சொல்லி சாப்பிடுங்க” என்று கிளம்ப.. சக்ரவர்த்தி.. “தேனு மா” என்று அழைக்க.. நிலா திரும்பி “மாமா நீங்க மட்டும் தான் தேனுனு கூப்புடுறீங்க” என்று சிணுங்க.. அவர் எனக்கு அப்படி கூப்பிடதா புடிக்குதா ராசாத்தி என்றார்..

நிலா “சொல்லுங்க மாமா” என்று கேட்டாள்.. சக்ரவர்த்தி பணப்பையை கொடுத்து அம்மாவிடம் கொடுத்துவிட்டு காளை அடக்கும் இடத்துக்கு போ தேனு என்று சொன்னார்.

நிலா “மாமா நா எங்க வீட்டுக்கு போனா அம்மா என்னை காளை அடக்குற இடத்துக்கு அனுப்பாது” என்று சக்ரவர்த்தியிடம் வாதாடிக்கொண்டிருக்க.. அதே நேரம் வாணி தன் அண்ணனின் வீட்டுக்கு வந்தார்.

தன் அண்ணனிடம் வாயாடிக்கொண்டிருக்கும் தன் மகளின் காதை பிடித்து “ஏண்டி எவ்ளோ கொழுப்பிருந்தா எங்கண்ணன்கிட்டயே எதிர்த்து பேசிட்டு இருப்ப” என்று அவள் காதை திருக.. சக்ரவர்த்தி வாணியை அதட்டினார்.. தேனுவ விடுமா அவ நம்ம மகிழன் காளைய அடக்குறத பார்க்கோணும்னு ஆசைபடுது. அனுப்பி வைக்கலாம் என்று கூறினார்.

நிலா மாமா மாமாதான் அவரை கண்டியணைத்து விட்டு என்று தன் அன்னையிடம் வாயை கோணித்து காட்டிவிட்டு போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.

வாணி சக்ரவர்த்தியிடம் “அண்ணா நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறீங்க அதுதான் அவ உங்க தல மேல ஏறிக்குறா.. சொன்ன பேச்ச கேட்க மாட்டேன்கிறா” என்றார்.

சக்ரவர்த்தி வாணியிடம் “அம்மாடி அவ சின்ன பொண்ணு தான” என்றார்.. வாணி “அண்ணா நானே உங்ககிட்ட பேசணும்னுதான் இருந்தேன்.. இந்த வருசம் அவ படிப்ப முடிக்குறா நாம பேசி வச்ச மாறி மகிழுக்கும் நிலாவுக்கு வர தை மாசம் கல்யாணத்த நடத்திபுடலாமுங்கண்ணா” என்று சொன்னார்.. அவரும் அதுக்கென்னம்மா “சோக்கா நடத்திபுடலாம்” என சிரித்துக்கொண்டே பேசினார்.

இருவரும் வீட்டின் உள்ளே நுழைய சாந்தி வாணியை பார்த்து “வா வாணி” என்று கூறிவிட்டு கணவருக்கும் வாணிக்கும் காபியை போட்டுக் கொடுத்தார்..

வாணி “என்ன மதினி உங்க மருமக சமையல்கட்ட ஒரு வழி பண்ணியிருப்பாளே” என்று வாணி கூற சாந்தி “என் மருமவ காரசாரமா மட்டன் வறுவல் செய்துருக்கா நீ வேணும்னா சாப்ட்டு பாரேன்” என்று அவளை சாப்பிட அழைத்தார்.

வாணி போதும்.. போதும்.. “உங்க மருமக சமையல நீங்கதான் மெச்சிக்கணும்” என்று சொல்லி விட்டு சக்ரவர்த்தியிடம் நெல்லுவித்த பணத்தை வாங்கிச் கொண்டு கிளம்பினார்.

காளை அடக்கும் போட்டி நடத்தும் இடம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது.. அங்கே காளைகள் நிறுத்தப்பட்டிருந்தது.. . அந்த ஊர் மக்கள் கோவில் திருவிழா நடக்கும் முன் காளையை அடக்கும் போட்டி வைத்துவிடுவார்கள்.

அந்த ஊர் பண்ணையார் ராஜாங்கம் தன் காளையை அடக்க யாராலும் அடக்க முடியாது என்று பெருமை பேசிக்கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார்.. அந்த ஊர் பெரியவர் உங்க காளையை அடக்க எங்க ஊருலயும் வலசு பசங்க இருக்காங்க என்று அவருக்கு பதிலடி கொடுத்தார். ராஜதுரை பார்க்கலாம் யாரு என் காளைய அடக்குறாங்க என்று மீசையை முறுக்கிகொண்டார்.

ஒவ்வொருவராக ராஜதுரையின் காளையை அடக்க அது அனைவரையும் முட்டித் தள்ளியது

ராஜதுரை பக்கத்திலிருந்த பெரியவரை ஏளனமாக பார்த்து என்னமோ சொன்னீங்க.. என் காளைய இந்த ஊரு வலசு பயலுவ அடக்கிறிருவாங்கன்னு என்று பெருமை பீத்தினீங்க இப்ப எல்லா பயலுவங்களும் என் மாட்டுக்கு கிட்ட குத்து வாங்குரானுங்க என்று கேலி சிரிப்பு சிரித்தார்.​

அங்கு மைக்கில் பேசிக்கொண்டு நபரிடம் மைக்கை வாங்கி காளைய அடக்குரவங்களுக்கு பத்து பவுனு இலவசம்னு கூறினார்.

ராஜதுரையின் மகன் என்னப்பா நீங்க காளைய அடக்குரவங்களுக்கு பத்து பவுனு இலவசம்னு சாதாரணமா சொல்லிட்டீங்க என்று முகம் சுளித்தான்.

ராஜதுரை யாரு நீ இந்த ஊருல நம்ம காளையை அடக்க எவனுக்கு துப்பிருக்க என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

மகிழன் பக்கத்து ஊரின் பஞ்சாயத்து ஒன்றிக்கு சென்றவன் வர தாமாதமானது.. அங்கு போட்டியில் ராஜதுரையின் காளையை யாரும் அடக்க முடியாது என்ற செய்தி அவன் காதுக்கு எட்டியது. தன் ராயல் என்பீலிட்டிலுடன் மைதானத்திற்குள் சீறிப் பாய்ந்தான்.​

மகிழன் தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு காளையின் பக்கத்தில் போக காளை முக்காரமிட்டது. மாடு விட்ட மூச்சில் தரைமண் பறந்தது.. மகிழன் டுர்ரீ எனக் குரல் கொடுத்துக்கொண்டே காலையின் வாலை தொட்டு ஒதுக்கினான்..

மகிழனின் மீது பாயக் காளை திரும்பியது.. மகிழன் காளைமீது நொடிபொழுது தாமதிக்காமல் பாய்ந்து அதன் திமிழில் இடக்கை போட்டு நெஞ்சோடு இறுக்கி அணைத்து உடலைக் காளையின் கழுத்தோடு ஒட்டி, வலக்கையால் காளையின் கொம்பை பற்றிகொண்டான்.. மகிழனின் எதிர்பாராத தாக்குதல் காளைக்கு பாதமாகிவிட்டது.. ஆனாலும் அதன் மிருக சுபாவத்துடன் சமாளித்து மகிழனை கீழே தள்ள பார்த்து, துள்ளி ஆள் உயரம் குதித்தது. ஆனால் மகிழின் பிடி இன்னும் இறுக்கினான்.

ஒரு கட்டத்தில் நீயா நாணா என்று பார்த்துவிடுவோம் என்று காளை இரண்டாவது முறையும் ஆள் உயரத்திற்கு எம்பி குதித்து அவனை கீழே தள்ள பார்த்தது.. மகிழன் தன் கால்களை தரையில் பதிக்க முயன்றான்.. காளை துள்ளியது.. காளை களைத்து போனதால் மூன்றாம் முறை அதனால் துள்ள முடியவில்லை..

மகிழன் காளையின் நெற்றி திட்டில கைபோட்டு, உருமால் பட்டையை இழுத்து மெடல், சங்கலி பட்டுத்துணியை வாயில் கவ்வியபடி, தரையில் கால் பதித்து அழுத்தி, தன் மார்பில் அழுத்தம் கொடுத்துக் காளையை எதிர்பக்கம் தள்ளிவிட்டு ஒதுக்கினான். கூட்டத்தில் பெரிசுகள் மகிழா உங்க அப்பன் சக்ரவர்த்தி பேரை காப்பாத்திட்டா! நீ புலிக்குப் பொறந்தவன்டா" என்று பாராட்டினர்..

மகிழன் மகிழ்ச்சியின் உச்சத்தில் கூட்டத்தில் நின்றிருந்த நிலாவை தேடினான். அங்கு நிலா அவனை பார்த்து கண்ணடித்து மாமா சூப்பர் என்று மீண்டும் ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்தாள்.

கூட்டத்தில் விசில் சத்தமும் மகிழு மகிழு என்று சத்தமும் விண்ணைக் கிழித்தது.. ராஜாங்கத்துக்கு முகம் சிறுத்து போய்விட்டது.. ராஜாங்கம் சொன்னது போல பத்துபவுனு சங்கலியை மகிழின் கழுத்தில் போட்டு விட்டு மகிழின் தோளை தட்டி நல்லா உடம்ப உரமேத்தி வைச்சிருங்க தம்பி என்று அவன் தோளில் தட்டி விசமமாக சிரித்தார்.. மகிழன் என்ன ராஜாங்கம் ஐய்யா. என்னமோ சொன்னீராமே.. இந்த ஊரு வலசு பயலுவ என் காளைய அடக்க முடியாதுன்னு.. ஒரு உண்மைய தெரிஞ்சுக்கோங்க.. இந்த எட்டக்குடி ஊருல மகிழன் இருக்கற வர யாரும் எங்க ஊரு பயலுவல பத்தி தப்பா பேச விடமாட்டேன்.. என் ஊருக்காக என் உயிரையும் கொடுப்பேன்.. கொஞ்சம் பார்த்து பேசுங்கய்யா என்று ராஜாங்கத்திடம் நெஞ்சை நிமிர்த்தி விரைப்பாக பேசினான்.

இப்போது பெரியவர் ராஜாங்கத்திடம் என்னப்பா எங்க ஊருலயும் உன் காளைய அடக்க ஆளுங்க இருக்காங்க என்று அவர் மீசையை முறுக்கினார்.

ராஜாங்கம் ம்..ம்.. ஒத்துக்குறேன் பெரியவரே தன் காளையை அழைத்துக்கொண்டு பழிவெறியுடன் அவர் ஊரை நோக்கிச் சென்றார்.

மகிழன் தன் அத்தை பெத்த இரத்தினத்தை கூட்டத்தில் தேடினான்.. நிலா அவன் கண்ணுக்கு சிக்காமல் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். மகிழன் விடாக்கொட்டன் விடுவானா.. அவள் பின்னே பூனை போல சென்று நிலாவை பின்புறம் அணைத்தான்.​
 
Last edited:
Status
Not open for further replies.
Top