ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே

Ammu ramu

New member
Wonderland writer
பகுதி 3

பகுதி 3
சில்லென்ற தென்றல் காற்றுடனும், குயில்களின் இசையுடனும், இனிமையாக தொடங்கியது அந்தக் காலைவேளை.
காலை ஆறு மணிக்கு எழுந்து, காலைக்கடனை முடித்த நிவேதா., சமையலறையில் சத்தம் கேட்டு அங்கே சென்றாள்.
பிள்ளைகளுக்கு உணவு தயார் செய்து கொண்டிருந்த சுதா., நிவேதாவை பார்த்ததும்..
"எழுந்துட்டியா நிவி, நானே உன்னை எழுப்பனும்னு நினைச்சேன்., நல்ல வேளை நீயே எழுந்துட்ட, இந்தா டீ குடி" என்றவர்.. " குடிச்சிட்டு, தண்ணி சூடு பண்ணி வச்சிருக்கேன். போய் குளிச்சிட்டு வந்துடுமா" என்றார்.
தாய் கொடுத்த தேநீரை ருசித்தபடியே.. "என்னையும் எழுப்பி இருக்கலாமே, ம்மா.. நானும் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணியிருப்பேன்ல., தனியாவே எவ்வளவு வேலை செய்வீங்க, நீங்க" என்றாள் நிவேதா தாயிடம்.
" பரவாயில்லை நிவி, இப்போதான் உனக்கு உடம்பு சரியாகியிருக்கு, அதுக்குள்ள இந்த வேலை எல்லாம் நீ செய்ய வேண்டாம். சீக்கிரம் குடிச்சிட்டு, போய் குளிமா" என்றார் அவர், அக்கறையாக.
தேநீரை குடித்து முடித்தவள்.. குளிலயறைக்கு சென்றுவிட., நந்திதாவும், வினோத்தும் தாயைத் தேடி வந்தனர்.
அவர்களுக்கும் சுதா தேநீரை கொடுக்க.. அதை வாங்கிய வினோத், "அம்மா பிக்னிக் போக பணம் வேணும்னு கேட்டேனே., எப்போமா தருவீங்க" என்றான் சிணுங்கியவாறு.
" நாளைக்கு தரேன் வினோ" என சுதா கூற., அதை பார்த்த நந்திதா.. " எப்படா பிக்னிக் போறீங்க" என்றாள் தம்பியிடம்.
" அடுத்த வாரம் போறோம் அக்கா" என்றவன், பிக்னிக் பற்றி பேசிக் கொண்டே இருக்க..
"போதும், போதும் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன்., அதுக்கு ஏன்டா இவ்வளவு நேரம் பேசற" என்றவள்.. " இதே ஆர்வதை படிப்பிலும் கொஞ்சம் காட்டுடா.. அடுத்த வருஷம் 12த் ஸ்டாண்டர்ட் போக போறே" என்று அறிவுரை கூறினாள்.
"அக்கா, தயவு செஞ்சு ஆரம்பிக்காத" என்றவன், எழுந்து ஓடியே விட்டான்.
"அதானே, படிப்பு பத்தி பேசினாலே ஓடிடுவியே" என்றாள் நந்து.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, குளித்துவிட்டு தயாராகி வந்த நிவேதா.. "அம்மா சாப்பாடு ரெடியா, எல்லாருக்கும் பாக்ஸ் பேக் பண்ணிடுறேன்" என்றாள்.
"நானே எல்லாம் பேக் பண்ணிட்டேன் நிவி, நீ டிஃபன் சாப்பிட்டு கிளம்புமா" என்றார் சுதா.
"அம்மா, மணி இன்னும் ஏழு கூட ஆகலை., அதுக்குள்ள எப்படிமா சாப்பிட.. இப்போதானே டீ குடிச்சேன் வேண்டாமா" என்றாள் நிவேதா.
"நிவி, ஏற்கனவே உனக்கு உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு, இப்படி சாப்பிடாம இருந்தேனா எப்படி அங்க போய் குழந்தை பாத்துக்குவ" என்று கடிந்தவர், "கொஞ்சமா சாப்பிட்டுட்டு போ" என்றார்.
"ஆமாக்கா, அம்மா சொல்றதும் சரிதான், சாப்பிட்டு போ" என்றாள் நந்திதா.
"எனக்கு வேண்டாம், டைம் ஆகுது. எட்டு மணிக்கெல்லாம் அங்க இருக்கணும். இல்லன்னா முதலாளி ரொம்ப கோவப்படுவாரு" என்றவள், மதிய உணவு எடுத்துக்கொண்டு.. "போயிட்டு வரேன் ம்மா, வரேன் நந்து" என்று கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டாள்.
6:45க்கு பேருந்து நிலையம் வந்து சேர்ந்தவள்.. பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்க.. அப்போது நிவேதாவின் பள்ளி தோழன் சிவா அங்கே வந்தான்.
"என்ன நிவி, இவ்வளவு காலையில் எங்க கிளம்பிட்ட" என்று‌‌ அவளிடம் கேட்க.. "வேலைக்கு போறேன் சிவா" என்றாள் நிவேதா.
"வேலைக்கா" என்றவன், "எங்கே வேலைக்கு போற, என்ன வேலை" ‌என வரிசையாக கேட்க.. அவளும் பதில் கூறினாள்.
நிவேதா கூறிய பதிலில்.. "என்ன, மித்ரன் சார் வீட்ல, வேலைக்கு சேர்ந்திருக்கியா" என்று பிரம்மிப்பாக கேட்டவனிடம்...
"ஆமா சிவா" என்றாள் நிவேதா சாதாரணமாக. (மித்ரனை பத்தி தெரிஞ்சா இப்படி பேச மாட்டே).
"என்ன நீ இவ்ளோ சாதாரணமா சொல்ற, எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா அவரு, கோயம்புத்தூரில் இருக்கிற மிகப்பெரிய பணக்காரங்கல்ல அவரும் ஒருத்தர். கார்மெண்ட்ஸ், ஹோட்டல், கல்யாண மண்டபம்னு ஏகப்பட்ட பிசினஸ் பண்றாரு. அவர் வீட்டில் வேலை கிடைக்கறது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை நிவி" என்றவன்.
"ஒழுங்கா வேலை செய்யலைன்னு வச்சுக்கோ, உண்டில்லைனு பண்ணிடுவாரு. அது மட்டுமில்லாம, கோவம் வந்துச்சுன்னா, அவர் மனுஷனாவே இருக்க மாட்டார்" என்றான் சிவா.
அவன் கூறியது அனைத்தையும் கேட்ட நிவி, "என்ன சிவா.. இப்படி பயமுறுத்துற. நானே இன்னைக்கு தான் முதல் நாள் வேலைக்கு போறேன்" என்றாள் பயந்தவாறு.
"அதனால்தான் நிவி சொல்றேன். பார்த்து கவனமா வேலை செய். நீ ஏற்கனவே பயந்த சுபாவம்., அதனால பார்த்து இருந்துகோ" என்றவன், "சரி நான் கிளம்புறேன்" என அங்கிருந்து புறப்பட்டான்.
"என்ன, இவன் இப்படி சொல்லிட்டு போறான்" என்று அவன் கூறியதையே எண்ணிக் கொண்டிருந்தவள்.. "கடவுளே, நீ தான் எனக்கு துணையா இருந்து, என்னை காப்பத்தனும்" என்று வேண்டிக் கொண்டாள்.
ஆனால், அவளுக்கு தெரிந்திருக்கவில்லை., மித்ரன் விஷயத்தில் கடவுள் அவளை காப்பாற்ற போகவில்லை என்று.
எப்படியோ சரியாக 8 மணிக்கு மித்ரனின் இல்லத்திற்கு வந்த நிவேதா.. உள்ளே நுழைந்ததும் சுதாகரை தான் முதலில் கண்டாள்.
"வாம்மா" என்று கடிகாரத்தை பார்த்தவர்.. "பரவாயில்லை கரெக்ட் டைம்க்கு வந்துட்டே" என்றவர், அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
"நேத்தே உனக்கு குழந்தை பற்றின எல்லா டீடைல்லும் சொல்லிட்டேன்" என்று, பேசிவாரே அவளை அழைத்துச் சென்றவர், சிவகாமி அறையின் முன் நின்றிருந்தார்.
"இதுதான் முதலாளி அம்மாவுடைய ரூம்" என்று அவளிடம் அவர் கூற.. மித்ரன் மனைவியின் அறை என்று எண்ணிக்கொண்டாள் நிவேதா.
"நீ இங்கேயே வெயிட் பண்ணு., நான் போய் அவங்க கிட்ட சொல்றேன்" என்றவர், அவளை அங்கிருந்து இருக்கையில் அமரவைத்தார்.
இருக்கையில் அமர்ந்த நிவேதா இப்பொழுதுதான் வீட்டை கவனித்தாள். நேற்று இருந்த பதட்டத்தில் அவள் எதையும் கவனிக்கவில்லை.
"ஆ.. அடேங்கப்பா., இது வீடா இல்லை, அரண்மனையா.. இவ்ளோ பெருசா இருக்கு. ஆனா, நல்லா சுத்தமா அழகா இருக்கு" என்று எண்ணியவள், வாயை திறந்து கொண்டு வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் வீட்டையே கவனித்துக் கொண்டிருந்தவள்.. பிறகு, "என்ன உள்ளை போனவரை இன்னும் காணோம்.. ஒருவேளை மித்ரன் சாரோட வைஃப் இன்னும் தூங்கிட்டு இருக்காங்களோ" என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் சிவகாமியின் அறைகதவு திறக்கப்பட.. அதை பார்த்து, உடனே எழுந்து நின்றாள் நிவேதா.
சாந்தமான முகத்துடன் உள்ளிருந்து வந்த சிவகாமியை பார்த்த நிவேதா.. "என்ன இவங்க மித்ரன் சாரோட வைஃப் மாதிரி தெரியலையே.. ஒருவேளை அவரோட அம்மாவா இருக்குமோ" என யோசித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
நிவேதாவை பார்த்த சிவகாமியின் கண்கள்.. அவளின் அழகை கண்டு வியந்தது. மனமோ.. "நல்லா லட்சணமா, மகாலட்சுமி மாதிரி இருக்கா, இப்படி ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்" என எண்ணியது.
சிவகாமியின் அசையாத பார்வையில், சங்கடமாக உணர்ந்த நிவேதா, "வணக்கம் ம்மா' என்று கூறி.. தன் மீதான அவரின் கவனத்தை கலைத்தாள்.
நிவேதா பேசியதில், அவரின் பார்வையை மாற்றிக் கொண்டவர்.. சுதாகரை திரும்பிப் பார்க்க., அவரோ இருவருக்கும் அருகில் வந்து..
"இந்த பொண்ணுதான் ம்மா குழந்தையை பார்த்துக்க வந்திருக்க புது ஆள்" என அவளை சிவகாமியிடம் அறிமுகப்படுத்தினார்.
அவளை மேலிருந்து கீழாக பார்த்த சிவகாமி, "நீயே சின்ன பொண்ணு மாதிரி இருக்க, நீ எப்படி குழந்தையை பாத்துக்குவ" என்றார் கம்பீரமான குரலில்.
அவர் வார்த்தைகளில் பயந்த நிவேதாவிற்கு, சிவா கூறியதே நினைவுக்கு வர.. "அய்யய்யோ, அவருக்கு தான் கோபம் அதிகமா வரும்னு சிவா சொன்னான். ஆனா, இவங்களுக்கு அதுக்கு மேல கோவம் வருதே, இவங்க பேசுறதை பார்த்தா இப்பவே என்னை வேலைக்கு வேண்டாம்னு சொல்லிடுவாங்க போலயே" என்று எண்ணியவள்....
எங்கே தனக்கு வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில்.., "அம்மா, அதெல்லாம் நான் ரொம்ப நல்லாவே குழந்தையை பார்த்துக்குவேன் ம்மா" என்றாள் தடுமாறியவாறு.
அவளின் தடுமாறத்தை கண்ட சிவகாமி.. "ம்ம்ம்" என்றவர், அவள் உடையை பார்த்து.. "என்ன சுதாகர், இங்க உள்ள ரூல்ஸ் பத்தி இந்த பொண்ணுகிட்ட எதுவும் நீங்க சொல்லலையா" என்றார்.
"இல்லைமா, குழந்தையை பற்றிய விவரங்கள் மட்டும் தான் சொன்னேன்., மத்ததெல்லாம் எதுவும் சொல்லலம்மா" என்று தலையை சொறிந்தார் அவர்.
அப்படி கூறிய சுதாகரை, அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த சிவகாமி, உடனே நிவேதாவிடம் "இங்க பாருமா.. இங்க வேலைக்கு வர பொண்ணுங்க எல்லாம் புடவைல தான் வரணும். இன்னைக்கு உனக்கு தெரியாததனால பரவாயில்லை, நாளையிலிருந்து புடவை கட்டிக்கோ, வேற என்னென்ன பண்ணனும்னு கேட்டு தெரிஞ்சுக்கோ" என்றார்.
"சரிங்கமா" என்ற நிவேதா., "கு.ழ.ந்தை" என்று இழுக்க..
"குழந்தை தூங்கிட்டு இருக்கான், எழுந்ததும் கூப்பிடுறேன்" என்ற சிவகாமி அறைக்குள் சென்று விட்டார்.
அவர் சென்றதும் சுதாகர் நிவேதாவிடம்.. "சாரிமா, ரூல்ஸ் பத்தி சொல்ல மறந்துட்டேன்" என்றவர்.. " இவங்கதான் மித்ரன் சாரோட அத்தை" என்றார்.
"ஓ! என்றவள்.. அப்போ இவங்க அவரோட அம்மா இல்லையா" என யோசித்தாள்.
"அம்மா சொன்ன மாதிரி, பொண்ணுங்க எல்லாம் சேரில தான் வரணும், அப்புறம் மதிய லஞ்ச் இங்கேயே சாப்பிட்டுக்கலாம், டைமிங் கரெக்டா கீப்பப் பண்ணனும், அடிக்கடி லீவ் எடுக்கக் கூடாது, மாசத்துக்கு ரெண்டு நாள் லீவு எடுத்துக்கலாம்" என்று, அனைத்து விதிமுறைகளையும் கூறினார்.
விதிமுறை அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தவள், படிக்கட்டுகட்டில் யாரோ நடக்கும் அரவம் கேட்டு, சட்டென திரும்பி பார்த்தாள்.
சாம்பல் நிற முழுக்கை சட்டை, கரு நீலநிற பேண்ட் அணிந்து கம்பீரமாக வந்து கொண்டிருந்த மித்ரன்.
அவனை பார்த்ததும், சிவா கூறியதே திரும்பத் திரும்ப மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்க.. பயத்துடன்., "கடவுளே, கடவுளே" ,‌‌ என்று ஜபித்துக் கொண்டிருந்தாள் நிவேதா.
கீழ வந்த மித்ரன், அவள் சுடிதார் அணிந்திருந்ததை கண்டு, நிவேதாவை கோபமாக பார்க்க.. "ஐயோ, இப்போ எதுக்கு இவர் என்னை கோவமா பாக்குறார்ன்னு தெரியலையே" என்று எண்ணியவள், கால்கள் பயந்தில் நடுங்கியது.
"ரூல்ஸ் எல்லாம் சொன்னாங்க தானே, அப்புறம் என்ன டிரஸ் இது" என்றான் மித்ரன், மிரட்டும் தொணியில்.
"அ.. அ".. என்று பயத்தில் நிவேதா திணற..
உடனே சுதாகர், "சாரி சார்., நான் தான் ரூல்ஸ் எல்லாம் சொல்லாம விட்டுட்டேன்.. அதனால தான் அந்த பொண்ணு தெரியாம இப்படி வந்துட்டாங்க.. இப்போதான் எல்லாமே சொன்னேன் சார்" என்றார் தலையை குனிந்தவாறு.
அவரை திரும்ப பார்த்து முறைத்தவன்.. "என்ன சுதாகர், வரவர வேலையில் கவனம் குறையுது" என்றான் கோபமாக.
"சாரி சார், இனிமேல் கவனமா இருக்கேன் சார்" என்றார் அவர் தயங்கியவாறு.
சுதாகரின் பதிலில், கூர்மையாக அவரை பார்த்தவன்... பார்வையாலே, மீண்டும் இப்படி செய்யாதே என்ற செய்தியை அவருக்கு உணர்ந்தினான்.
"ஓகே, அத்தை கிட்ட சொல்லியாச்சா" என அவன் கேட்க..
"இப்போதான் சார், அம்மா பார்த்துட்டு போனாங்க" என்றார் சுதாகர்.
"ஃபைன், எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. அத்தைகிட்ட சொல்லிடுங்க" என்றவன் அங்கிருந்து சென்றிருந்தான்.
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த நிவேதாவை, அழைத்த சுதாகர்.. "என்னம்மா, அவரையே பார்த்துகிட்டு இருக்க" என்றார்.
"இல்ல சார், இது ஒரு சின்ன விஷயம்., இதுக்கு போய்" என்று, மீதி வார்த்தையை சொல்லாமல் பயந்துபோய் நிறுத்தியிருந்தாள் நிவேதா.
அவள் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்த சுதாகர்.. "அதுதான் மா மித்ரன் சார், சின்ன விஷயமா இருந்தாலும் பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு எதிர்பாப்பாரு, அப்படி இல்லன்னா ரொம்ப கோவப்படுவாரு" என்றவர், "சரி நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுமா.. குழந்தை எழுந்ததும், அம்மா உன்னை கூப்பிடுவாங்க" என்றார்.
"ம்ம்ம்" என்று கூறிவிட்டு.. இருக்கையில் அமர்ந்தவளுக்கு மித்ரனின் கோபத்தை நினைத்து தலையே சுற்றியது.
தொடரும்....
 

Attachments

  • IMG_20260109_232112.jpg
    IMG_20260109_232112.jpg
    731.8 KB · Views: 0
Top