ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் ரத்தத்தின் ரத்தமே - கதைத்திரி

Status
Not open for further replies.

Thoorika Ragavendran

New member
Wonderland writer
அத்தியாயம் 1



வில்வாரணி கன்னியம்மன் கோவில். ஏழு பானைகளில் பொங்கல் பொங்கிக் கொண்டு இருந்தது.

பெருமாவுடை, கோவில் பூசாரியிடம் கைக்காசு வாங்க தயாராக இருந்தார்.

அன்று சோத்துப்பாறையில் ஜல்லிக்கட்டு. அடுத்த நாள் பேரணாம்பூண்டியில் மஞ்சு விரட்டு.

கன்னிமார் சாமிகளுக்கு பொங்கலும், முனீஸ்வரனுக்கு கிடா வெட்டியும் படையலிட்டு பின்னர் கழுத்து மணி பூஜையில் வைத்து எடுத்து தரப்படும். அதை அந்த வருட ஜல்லிக்கட்டுக்கு போகும் காளைக்கு கட்டி தான் போட்டிக்கு போவார்கள்.

பெருமாவுடையார் பரம்பரையாக ஜல்லிக்கட்டு காளைகளை பழக்கப்படுத்துவதில் வல்லவர்.

எப்பேற்பட்ட காளையும் அவருக்கு அடிபணிந்து நடக்கும்.

“பிரபா. கழுத்து மணியை வாங்கிட்டு போய் கருப்பன் கழுத்துல கட்டு.” பெருமாவுடை குரல் கொடுக்க, பூசாரியிடம் வாங்கிக் கொண்டு போய் கருப்பனின் கழுத்தை சுற்றிலும் தடவிக் கொடுத்து கருப்பு கயிற்றில் கோர்த்திருந்த வெண்கல மணியை கட்டினான்.

கொட்டு அடிப்பவர்கள் உறுமி மேளத்தை இழுத்து தேய்த்து விட, அந்த உறுமிக்கு கருப்பன் தலையை உதறி சிலுப்பியது.

பிரபாவும்
தலையை சிலுப்பி உயர்த்த, அவன் தலைமுடி பறப்பதற்கு பிண்ணனி போல் ஒலித்தது கருப்பனின் கழுத்து மணி ஒலி..

ஊரில் இருக்கும் அத்தனை காளை மாடுகளுக்கும், பசு மாடுகளுக்கும் பிரபாவை கண்டால் பிடிக்கும். பசுக்களுக்கு பிரசவம் பார்ப்பது முதல் காளைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அதை சரிசெய்வது, பாகுபாடு பார்க்காமல் யார் வீட்டு காளை என்றாலும் அதை ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்வது என்று அவன் பொழுதே மாடுகளுடன் தான் போகும்.


பசு முதலில் கன்று போட்டதும் அதை தேனு என்று தான் கூப்பிடுவார்கள். பிரபாவின் தாய் சுமதி, மகளை பெற்றெடுத்த போது பெருமாவுடை, தேனு என்று தான் பெயரிட்டார். இரண்டாவதாக பிறந்தாலும் மகாலட்சுமி என்று நினைத்து அவர் அந்த பெயரை வைத்தார்.

அவளுக்கு ஒரு வயதாகும் போது கழனியின் ஓரமாக மரத்தடியில் தூளி கட்டி படுக்க வைத்து இருந்தார்கள். அப்போது தூளி மீது இறங்கி வந்த பாம்பை அதே மரத்தில் கட்டப்பட்டு இருந்த கருப்பன் தான் பார்த்தது. உடனே ஆக்ரோஷமாக கத்தி ஆட்களை கூப்பிட்டதால் தான் பாம்பிடம் இருந்து தேனுவை காப்பாற்ற முடிந்தது.

அன்றிலிருந்து கருப்பனின் ஒரு கால் சலங்கையை தேனுவின் காலில் கட்டி விட்டிருந்தார்கள் பெருமாவுடையும், சுமதியும். அவளுக்கு முதல் காவல் கருப்பன் தான்.

தேனு எப்போதும் பிரபாவின் செல்ல தங்கை. அவளுக்காக உயிரை கூட தர தயாராக இருப்பவன் அவன்.. அதே போல் தான் கருப்பனும்.

தேனுக்கும் கருப்பனுக்கும் மூன்று வயது தான் வித்தியாசம் பிரபாவை போலவே‌. இருவருக்குள்ளும் சகோதர பாசமும் அப்படித்தான். கண்ணசைவில் அவளை புரிந்துக் கொள்வதில் கெட்டிக்காரன் கருப்பன்.

கருப்பனுக்கும், பிரபாவுக்கும் தேனு ஆரத்தி எடுத்தாள்.

பிரபாவின் சிரிப்பிற்கும், அவன் தாவி மாட்டு வண்டியில் ஏறி ஓட்டுவதையும் பார்க்க பெண்கள் கூட்டம் இருக்கும் என்றால், தேனு பாவாடையை தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு ஜல்லிக்கட்டு வாசலில் கருப்பனை அவிழ்த்து விடும் அந்த நிமிடத்திற்காக காத்திருக்கும் இளைஞர்கள் அதிகம். அவர்களின் கவனம் வாசலில் மைக் வைத்து அலறுபவரின் திட்டிற்கு பின் தான் திரும்பும்.

அன்றும் தேனு கருப்பனை கூட்டிக் கொண்டு முன்னால் நடக்க, அவர்களின் இன்னொரு காளையான விருமாண்டியை பிரபா ஓட்டிக் கொண்டு வந்தான்.

பக்கத்து ஊர் காளைகளும் வாசலுக்கு பின் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

“வயசான மாட்டை வாசலுக்கு அனுப்பறதுக்கு பதிலா இருபது வயசு பொண்ணு இறங்கினாலும் நாங்க ஜல்லிக்கட்டு விளையாடுவோம்…வாடி வாசலுக்கு… போலாமா..‌” ஒருவன் தேனுவின் இடுப்பை பார்த்து சொல்லி முடிப்பதற்குள் அவனது கன்னம் பழுத்து இருந்தது.

வாங்கியவனை பார்த்து சிரித்தபடி நின்றிருந்தான் பிரபா.

கொடுத்தவளை அதிசயமாக புதிதாக வந்த ஆட்கள் பார்த்தார்கள்..

“வயசான மாடா.. முதல்ல மாடுன்னு சொல்றதை நிறுத்துடா.. எங்க கருப்பனை முடிஞ்சா உங்க ஊர் ஆளுங்க அத்தனை பேரும் சேந்து பிடிச்சு… இல்ல.. இல்ல தொட்டு காமிங்க.. அப்புறம் என் கூட ஜல்லிக்கட்டு ஆடலாம்..” சிட்டிகை போட்டு அவள் அவர்களை வம்புக்கு அழைத்தாள். பின்னால் கருப்பனும், பிரபாவும் இருக்கும் தைரியம் அது. கருப்பன் முகத்தை திருப்பி அவளிடம் வம்பிழுத்தவர்களை காண்பித்து வாசலுக்கு ஓட்டிச்சென்றாள் தேனு.

அவள் சொல்லியது போல் பெருமாவுடை மாடு கருப்பன்.. என்று அறிவித்ததுமே சீறிப்பாய்ந்தது கருப்பன். அதன் திமிலும் கண்களும் பளபளத்தது.

சுற்றிலும் புது ஆட்களின் வாசம். ஒரு நொடி மூக்கை உறிஞ்சி விட்டு அவர்களை பதம் பார்க்க ஆரம்பித்தான் கருப்பன். இருபது பேர்கள் ஒன்று கூடியும் தொடக்கூட முடியவில்லை. அவர்களை விசிறி அடித்து மூலைக்கு ஒன்றாக பறக்க விட்டு விட்டு நின்று நிதானமாக சுற்றிலும் பார்த்தது. ‘வேறு யாராவது வறீங்களா’ என்ற கேள்வி அது.

ஆயிரம் கிலோ எடையில் கம்பீரமாக தலையை சிலுப்பிக் கொண்டு மணிகளும் சலங்கையும் ஒலிக்க நின்ற கருப்பனை அதற்கு மேல் தொடுவதற்கு யாருக்கு இருக்கும் தைரியம்?.

முட்டியை பெயர்த்துக் கொண்டு, உடல் முழுக்க கீறலுடன் கிடந்தவர்களை பார்த்தாள் தேனு.

“ எங்க கருப்பன் வயசானவனா. நீங்க வயசானவங்களா.. திமிலை கூட தொட முடியாத தொடை நடுங்கி பசங்களா‌..” என்று அவர்களை பார்த்து சொல்லிவிட்டு, “கருப்பா வா..” என்று அசால்ட்டாக அதன் முகத்தை தொட்டாள். தடவிக்கொடுத்தாள். அதுவரை ஆடிய பேயாட்டம் முடிந்து அவளுடன் அமைதியாக நடந்து சென்றது கருப்பன்.

விருமாண்டியை களத்தில் அவிழ்த்து விட்டான் பிரபா..
திரும்பி அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு அடி நீள கொம்பை இப்படியும் அப்படியுமாக அசைத்தது அது.

அருகில் வருபவர்களை தூக்கி வீச தயாராக இருந்ததை பார்த்ததும் அதன் மேல் கை வைக்க தயங்கியது கூட்டம்.

பிரபா வாயில் கைவைத்து விசில் அடித்தான். விருமாண்டி இரண்டு காலையும் தூக்கி குதிரையை போல நின்றதும் இன்னும் பயந்து பின் வாங்கினர்.

“டேய் என்னடா.. அந்த பொண்ணு தான் பேயை வளத்து வச்சிருக்குதுன்னா, இவன் பிசாசை இல்ல வளத்து வச்சிருக்கான். அது கொம்பும், திமிலும் பார்த்தா அல்லு விடுது.‌ கிட்ட போவாதீங்க டா.”

எவனோ ஒருவன் சொல்ல, கூட்டத்தில் இன்னொருவன் முந்திக் கொண்டு வந்து விருமாண்டியின் முதுகை பிடிக்க போய் முகத்தில் கை வைத்து விட்டான். வந்ததே கோபம் அதற்கு. மீண்டும் முன்னங்கால் தூக்கி அவனை ஒரு எத்து விட்டது. வயிற்றை பிடித்து கொண்டு விழுந்தான். அதன் பின்னும் அதற்கு கோபம் அடங்கவில்லை. கொம்புகளால் முட்டி தூக்கியது.

சுழற்றி தூக்கி வீசியது. நான்கு பேர் ஒன்றாக அதன் திமிலை பிடித்து தொங்க, ராட்டினம் போல் சுழன்றது விருமாண்டி. திசைக்கொருவராக பறந்தனர்.

பிரபா அங்கிருந்த கட்டைகளின் மேல் ஏறி நின்றிருந்தான். விருமாண்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

“விருமா போதும் வாடா.. போவோம்..” என்று அழைத்தான் பிரபா.

விருமாண்டி ஓடி வந்து அவன் அருகில் நின்றது.

கூட்டத்தில் இருந்த பெண்களில் சிலர் துப்பட்டாவை தூக்கி சுழற்றிக் கொண்டு பிரபா, பிரபா என்று கத்த அவன் தலையை குனிந்துக் கொண்டு விருமாண்டியுடன் நடந்தான்.

செல்வப்பிரியா அங்கு கூட்டத்தில் நின்றிருந்தாள். பிரபாவின் தூரத்து சொந்தம். முறைப்பெண்ணும் கூட.

“மாமா.. வெட்கப்படாம தலையை நிமித்தி காமி. ஊர் கண்ணு படாம இருக்க இதோ சுத்தி போட மிளகா எடுத்துட்டு வந்துருக்கேன்..”

அவள் குரல் கொடுக்க, நிமிர்ந்தவன்.. “வாயை மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா செல்வா..போ அந்தாண்ட..” என்று விருமாண்டியுடன் நடந்தான்.

“பிரபா மாமா. அந்தாண்ட போன்னா சொல்ற. கிட்ட வான்னு உன்னை கூப்பிட வைக்கிறேன் பாரு..”

தாவணியை தூக்கி செருகியவள், அவனை பார்தது சத்தமாக சொல்ல, விருமாண்டி அவளை திரும்பி பார்த்து கண்ணை சிமிட்டியது.

செல்வப்பிரியாவுக்கு அப்போதே பிரபா அவளை திருமணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது.


கருப்பனும், விருமாண்டியும் பணத்தையும் தங்கத்தையும் பரிசாக வாங்கி வர, தேனு மீண்டும் ஆரத்தி எடுத்து திருஷ்டி சுத்தினாள். ஊர் முழுக்க வேடிக்கை பார்த்தது.


“தேனுவுக்கு நகை,பணம்னு நீ ஒன்னும் சேக்க வேணாம்னு கருப்பனே சீர் செனத்திக்கு சேத்திட்டான்.மாப்பிள்ளை பாக்க வேண்டியது தான் உன் பொறுப்பு பெருமா..” தர்மாம்பா சொல்ல, பெருமாவுடை ஆசையாக கருப்பனையும், விருமாண்டியையும் தடவிக் கொடுத்தார்.

“கெழவி.. மாப்பிள்ளை பாக்க இன்னும் டயம் இருக்குது. அப்படியே கல்யாணம் பேசினாலும் எனக்கு சீரு செனத்தி எதுவும் வேணாம். எனக்கு கருப்பனை சீரா குடுங்க அது போதும்.”

“டயம் இருக்குதாம்..டயம். உனக்குன்னு ஒருத்தன் இனிமேலா பொறக்க போறான். இல்ல வாய்ல விரலை சூப்பிட்டு திரிஞ்சிட்டு இருக்க போறானா.‌ இன்னும் கொஞ்ச நாள்ல பொண்ணு கேட்டு வருவான் பாரு.” தர்மாம்பா சொல்ல,

“அதெல்லாம் எவனும் வர மாட்டான். என் அண்ணன் யாரை வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு வருதோ அவன் கழுத்தில் நான் தாலி கட்டறேன்.”

கழனியில் வேலை செய்த அத்தனை பேரும் சிரித்தனர்.

“அதுக்கென்ன தேனு. அண்ணன் உனக்கு பாக்கற மாப்பிள்ளையை பாத்து இந்த ஊரே ஆச்சர்யப்பட போவுது பாரு. நீ போய் கூழு எடுத்தா. நான் தவிடு கரைக்கிறன்.”

பிரபா, தேனுவிடம் சொல்லிக் கொண்டே அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் தவிடையும், புண்ணாக்கையும் கரைக்கும் போது வரும் வாசனையை பார்த்ததுமே கொட்டிலில் இருந்த அத்தனை மாடுகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தன.

“இதா.‌ வன்ட்டேன். அதுக்குள்ள பசியெடுத்திருச்சா உங்களுக்குலாம்.”

அடுத்து ஒரு மணி நேரம் விதவிதமாக மாடுகளை கொஞ்சி தான் உணவு வைப்பான் பிரபா.

செல்வப்பிரியா சரியாக அதே நேரத்தில் அவளிடம் இருக்கும் ரெண்டு பசு மாடுகளுக்கு உணவை வைக்க இவர்கள் கழனிக்கு அருகில் இருக்கும் அவர்களின் தோட்டத்திற்கு இழுத்து வந்தாள்.

அங்கிருந்தே ஒரு நாளைக்கு மூன்று வேளையும் அந்த ஒரு மணிநேரமும் வைத்த கண் வாங்காமல் பிரபாவை பார்ப்பது தான் அவளுடைய தினசரி வேலை.


“என்னடி செல்வா. உன் மாமனை நாங்க தூக்கிட்டு போய்ட போறோம்னு தான் காவல் காக்கரியா தினமும்.” களை பிடுங்குபவர்கள் செல்வாவை தினமும் வம்பு இழுப்பார்கள்.

“அவரென்ன பொலி காளையா? நீங்க தூக்கிட்டு போனாலும் அப்படியே என் மாமன் உங்கள்ட்ட இளிச்சு பேசிட போறாரு பாரு. எனக்கொண்ணும் பயம் இல்ல.”

“வச்ச கண்ணு வாங்காம எதுக்கு அப்பறம் தினமும் பாக்கறியாம்.”

“ஆங்.‌ கண்ணுல அளவெடுக்கறேன். நாளைக்கு கல்யாணம் ஆனதும் விதவிதமா சட்டை தெச்சு கொடுக்க வேணாமா.‌?”

“ ஓ‌‌.. ஜாக்கெட்டை தான் உன் மாமன் போட்டுக்குவானா.”

“ஏன் என் மாமா உன்னை மாதிரியென்ன பொம்பளையா. ஜாக்கெட்டை போட. நானும் ஆம்பளைங்க போடற சட்டையை தைக்க கத்துக்கிட்டேன். நானே தான் அவரை தொட்டு…, தடவி…. அளவெடுத்து தைப்பேன்.”

அவள் நீட்டி முழக்கி பேச பேச பிரபாவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. அவனுக்கும் அவளை பிடிக்கும். அவன் எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்காததுக்கு காரணமும் அவள் தான். பள்ளியில் படிக்கும்போது ஒரு சின்ன பெண்ணுக்கு காலில் முள் குத்தி விட்டது என்று அவள் காலில் இருந்து அந்த முள்ளை பிரபா எடுத்து விட்டான் என்பதற்காக நான்கு நாட்கள் சாப்பிடாமல் அழுதவள் அவள்.

அன்றிலிருந்தே அவன் செல்வாவை தவிர வேறு யாரும் அவன் வாழ்வில் வரக்கூடாது என்று முடிவெடுத்து விட்டான்.

இருந்தாலும் தேனு வாழ்க்கை நல்லபடியாக ஆரம்பித்தால் தான் அவன் வாழ்க்கையை அவன் பார்க்க முடியும். இருபத்து நான்கு வயதில் திருமணம் பற்றிய எண்ணமும் அவனுக்கு இல்லை.

“பிரபா.. நெல்லு மூட்டைல இருவது கொறையுதாம். ராவுல தான் எவனோ தூக்கிருக்கானுங்க. நாமளும் ஜல்லிக்கட்டுன்னு சரியா கவனிக்காம இருந்துருக்கோம்..”

“பிரபா.. எவன்டா அது‌. நம்ம தோட்டத்துல பூந்து நெல்லுல கை வச்சது.‌ ரூம்மை பூட்டின்னு தான வந்த.” பெருமாவுடை கேட்க,

“அப்பா.. பூட்டினு தான் வந்தன். வேற யாரு அவ்ளோ திமிரா வந்திருப்பானுங்க‌. எல்லாம் கிழக்கால இருக்கறவனுங்க தான். இன்னிக்கு இருக்கு அவனுங்களுக்கு. டேய் கார்த்தி. நீ போ. இங்க தண்ணி காமிச்சிட்டு வந்து அவனுங்களுக்கு தண்ணி காமிக்கறேன்.”

பரபரவென அத்தனை மாடுகளுக்கும் கழனித்தண்ணீருடன் புண்ணாக்கு தவிடு கலந்து தொட்டிகளில் நிரப்பினான்.

அவன் குடத்தை தூக்கும்போது திமிறும் கை சதையை அங்கிருந்தே பார்த்து சிரித்துக் கொண்டாள் செல்வா.

“மாமா. அவனுங்களை உட்றாத. ஏறிப்போட்டு மிதிச்சிட்டு வா. விருமா.. பாத்து பத்திரம். என் மாமன் உடம்புல ஒரு கீறல் உழக்கூடாது. சொல்ட்டேன்.”

விருமாண்டியை பார்த்து அவள் சொல்லியதும் அடுத்த வேட்டைக்கு தயாரானதை போல தலையை ஆட்டியது.

பிரபா விருமாண்டியுடன் தோட்டத்திற்கு நடந்தான். வீட்டின் அருகில் தான் என்பதால் அவன் பெரும்பாலும் வண்டியை எடுக்க மாட்டான். தினமும் விருமாண்டிக்கும் கருப்பனுக்கும் நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி கொடுப்பதனால் தோட்டத்துக்கு நடந்தே வந்து விடுவான்.

“கார்த்தி கரெக்டா எண்ணினியா. அவனுங்கள்ட்ட போய் கேட்டு அப்புறம் அசிங்கப்படக்கூடாது.”

“பிரபா. நாப்பது நாப்பதா தான் அடுக்கி வச்சேன். நாளைக்கு லோடு ஏத்திடலான்னு. ஒவ்வொன்னுல இருந்தும் சரியா அஞ்சு மூட்டை எடுத்திருக்கானுங்க‌.”

“பூட்டை எப்படிடா நெமிண்டி திறந்தானுங்க?. இங்க பாரு …கடப்பாரை வச்சு தான் பூட்டை நெமிட்டியிருக்கானுங்க. அதான் சத்தம் கேட்கல. சித்தப்பா நேத்து வந்து இங்க படுக்குதுன்னுப்பவே நினைச்சேன். பாட்டில் போட்டிட்டு வந்துருக்கும். அதான் கைவரிசை காமிச்சிருக்கானுங்க.”

“பிரபா. இப்பத்தான் சித்தப்பாவை எழுப்பி விட்டேன். பம்புசெட்டுக்கு போனாரு.”

“சரி வா.. அந்த வடமலையான் பையனை என்னான்னு கேப்போம்.”

பக்கத்து தோட்டத்து வீட்டில் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள்.

“ஏய் என்னாப்பா பிரபா. இந்த பக்கம் வந்துருக்க. மாடு கீடு மேய வந்துருச்சா” மனோகர் கேட்டான்.

“நக்கல்லாம் வேணாம்டா. நெல்லுல நாப்பது மூட்டைய காணம். நீங்க தான் இந்த வேலையை பாத்திருப்பீங்கன்னு தெரியும். ஒழுங்கு மரியாதையா அத்தனையையும் எடுத்து வையி.”

“ஒரே நேரத்தில் நெல் அறுத்தா இதான்பா பிரச்சினை. உங்க நெல்லை எடுத்து நாங்க என்னாப்பா பண்ண போறோம். உங்களை மாதிரியா ஊரை அடிச்சு உலையில் போட்டுக்கறோம். நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோம்.. எங்கிட்ட போய் கேட்க வந்துட்டான்.”

“டேய்.. நெல்லை கேட்டா அதை பத்தி மட்டும் பேசு. தேவையில்லாம பேசாத” பிரபா குரலை உயர்த்த,

“நெல்லைத்தான்ப்பா சொல்றேன். பின்ன உங்க மாடு ஜெயிக்கறதையும் ஊர்ல இருக்க அத்தனை மாட்டுக்கு நீங்க சொந்தம் கொண்டாடறதையுமா சொல்றேன்”

“ஏன் நீங்க ஆட்டையும் மாட்டையும் தூக்கினு போற மாதிரி எங்களையும் இருக்க சொல்றியா. திருட்டு நாயை அப்பவே துரத்தி அடிச்சிருந்தா நீ எங்க வீட்டலையே கன்னம் வச்சிருக்க மாட்ட”

“பிரச்சினை பண்ணனும்னு வந்துட்ட. வா பாத்துடுவோம்.” மனோகர் சொன்னதும் அவன் ஆட்கள் பிரபாவை சுற்ற, பிரபாவும் கார்த்தியும் அவர்களை தடுத்தார்கள். சுற்றி வளைத்த இருபது பேரை அடிக்க அவர்கள் கதாநாயகர்கள் இல்லையே. ஆனாலும் இருவரும் சமாளித்து அடியை இடி போல கொடுத்தார்கள்.

பிரபா சுற்றிலும் பார்த்து விட்டு விசிலடித்தான். விருமாண்டி திடீரென்று உள்ளே கூட்டத்தில் புகுந்தது.

முதுகில் ஒவ்வொருவரும் வாங்கிய குத்துகளை பார்த்ததும் மற்றவர்கள் சிதறி ஓடினர்.

மனோகரை கொத்தாக பிடித்து கன்னத்தில் நான்கு அறை அறைந்தான் பிரபா.

“ஒழுங்கா நெல்லை தான்னு கேட்டா ஆளை வச்சு அடிக்கிறியா. மூஞ்சு முகரை இப்ப யாருக்கு பேந்துச்சு. உனக்குத்தானே. உன்கிட்ட கூலி வாங்க வந்த வெறும்பயலுங்களும் வாங்கி கட்டிக்கிட்டி ஓடிட்டானுங்க. வந்து நெல்லை ஒவ்வொரு மூட்டையா நீயே தூக்கினு வந்து எங்க தோட்டத்து வீட்ல வச்சிட்டு, மரியாதையா அந்த நெமிட்டி எடுத்த பூட்டை புதுசா வாங்கியாந்து பூட்டி சாவியை வீட்டில வந்து தர.”

விட்டு விட்டு வந்த பிரபா, திரும்பவும் அவன் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

“இது பொய் சொன்னதுக்கும் எங்க கருப்பனையும் விருமாண்டியையும் மாடுன்னு சொன்னதுக்கும்” வேட்டியை காலால் எக்கி அவன் மடித்து கட்டிக் கொண்டு தலைக்குள் கை வைத்து கலைந்த முடியை சரிசெய்து கொண்டு விருமாண்டியுடன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
 
Status
Not open for further replies.
Top