ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

எந்தன் சித்திர பெண்ணே - கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
எந்தன் சித்திர பெண்ணே

அத்தியாயம் -1

அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள்.

இமைகள் இரண்டும் கணக்க...முயன்று தன் கண்களை திறந்தவள் முன் காட்சியளித்தது என்னவோ கருமை மட்டுமே.

அவசரமாக கையை கண் அருகே கொண்டு செல்ல முயல, அதுவோ இருக்கையோடு இணைத்து கட்டப்பட்டிருந்தது.


'என்ன இது இப்படி கருப்பா இருக்கு. ஒருவேளை கண்ணு கட்டி இருக்கோ என யோசிக்க... இல்லையே கண்ணை நல்லா திறக்க முடியுதே. கட்டியிருந்தா இப்படியெல்லாம் பண்ண முடியாதே' என எண்ணியவளின் இதயம் சட்டென்று படபடத்தது.

"அய்யயோ... ஒருவேளை கண்ணை நொண்டி எடுத்துட்டாங்களா...? அதுதான் கண்ணு தெரியலையா..? கண்ணை நோண்டி பிச்சை எடுக்க வைக்கிற கும்பலா இருக்குமோ" என இதற்கு முன்பு கேள்விபட்டவை,பார்த்தவை என எல்லாமும் கண்முன் வந்து பயமுறுத்தியது பெண்ணவளை.

தனது கோலிகுண்டு கண்களை உருட்டி சிமிட்டி பார்க்க எந்த பயனுமில்லை.

சிறிதுநேரத்தில் அவளின் கண்கள் தானாகவே அந்த இருளுக்கு பழக்கபட... அப்பொழுது தான் மனம் பதட்டத்தை கைவிட்டது.

'அப்பாடா....என் கண்ணுக்கு ஒன்னும் ஆகலை' என்ற நிம்மதி மனதில் பரவ,
இப்போது தன்னை சுற்றிலும் கூர்ந்து பார்க்க தொடங்கினாள்.

இருளையும் மீறி நிழலாக அந்த அறையை அவளால் பார்க்க முடிந்தது. ஆனால் எந்த இடம் என்பதை தான் கண்டறிய முடியவில்லை.

'தான் எங்கு இருக்கிறோம்...என்ன நடந்தது?...எதற்காக?... ஏன்?' என பல கேள்விகள் மனதில் எழுந்தாலும்,அதனை எல்லாம் சிந்திக்க இது நேரமில்லை என்பதை உணர்ந்தவளாக அங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கா' என ஆராய முற்பட்டாள்.

இருளில் அவளுக்கு எதுவும் புலப்படவில்லை. அதில் அவள் முகம் மேலும் கலக்கத்தை சுமந்துக்கொள்ள... அதேநேரம் சட்டென்று அந்த அறையின் அனைத்து விளக்குகளும் ஒளிர்ந்தது.

எதிர்பாரா அந்த ஒளியின் வீச்சில் கண்கள் கூச...தானாக பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

வெளிச்சத்தை தொடர்ந்து 'டக் டக் ' என்ற ஷூ சத்தத்தோடு அவளை நெருங்கியது இரு கால்கள்.

அவள் தைரியமான பெண் தான் ஆனால், சட்டென்று யார் என்று நிமிர்ந்து பார்க்கும் துணிவு அந்த நிமிடம் இல்லாமல் போக...தாழ்த்திய கண்களை நிமிர்த்தவே இல்லை.

கீழ் கண்ணால் அந்த அறையை ஒரு முறை பார்த்தவள், அந்த உருவம் தன்னை நெருங்கி வருவதை கண்டு மேலும் நடுங்கியவளாக கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அந்த உருவம் மிக அருகில் வந்துவிட்டதை அவள் நாசி வழி நுழைந்த புதுவித வாசனை திரவியத்தின் நறுமணம் உணர்த்தியது.

முயன்று தன் தைரியத்தை மீட்டெடுத்தவள் கண்களை திறக்க....எதிரில் அந்த முகம் தெரியாத மனிதனின் கால்களை மட்டுமே பார்க்க முடிந்தது அவளால்.

மெல்ல தன் கண்களை உயர்த்த...அவளின் பார்வை கால்கள் தாண்டி மேலே செல்ல... ஏதோ ஒரு குரல், அதுவும் அவளுக்கு நன்கு பழக்கப்பட்ட குரல் அவளுக்கு மறுப்புறமிருந்து காதில் விழுந்தது. 'இந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கேனே, இது யாருடைய குரல் என்று மூளை வேகமாக கிரகிக்க முயல, மனமோ எதிரில் நிற்பவன் யார் என்பதை அறிய முற்பட்டது.

மனம் சொல்வதை கேட்க துணிந்தவளாக, அருகே நின்றவனின் இடை தாண்டி மார்பை கடந்து கழுத்திலிருந்து பார்வையை முகத்திற்கு திருப்பும் அந்த நேரம் மீண்டும் அதே குரல்,அதனை தொடர்ந்து படபடவென சத்தமும், அதுவும் இம்முறை மிகவும் நெருக்கத்தில்.

இரண்டில் எந்த பக்கம் செல்வது என எண்ணிக்கொண்டிருக்கும் போதே முகத்தில் சில்லென்ற குளுமை. அதனை தொடர்ந்து உடல் மொத்தமும் நடுங்குவது போல் இருக்க...சட்டென்று ஒரு வலி.

அந்த வலி பொறுக்க முடியாமல் "ஆ......அம்மா" என்ற அலறலுடன் அவள் கண்களை திறக்க,

எதிரில் கண்களில் அனல் தெறிக்க... காளி அவதாரம் எடுத்தப்படி, நின்றிருந்தாள் நித்யா.

"ஏண்டி...ஒரு மணி நேரமா கத்திட்டு இருக்கேன். அப்படியென்ன தூக்கம் உனக்கு. எவ்ளோ நேரம் எழுப்புறது... வேலைக்கு போகுற எண்ணம் இல்லையா" என தங்கையின் பதிலை எதிர்பாராமல் அடுக்கடுக்காய் கேள்வி கணைகளை தொடுக்க,

அவளோ இன்னும் சுயநினைவிற்கு வந்திருக்கவில்லை. அவள் கண்முன் தோன்றிய காட்சிகள் அனைத்தும் கனவு என்று அவளால் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியவில்லை.

உடலின் நடுக்கமும் வழிந்தோடும் வியர்வையும் அனைத்தும் நிஜம் என்பது போன்ற பிம்பத்தை தோற்றுவிக்க, சிலையாய் சமைந்து போனாள் பெண்.

தங்கையின் முகத்தில் இதுவரை அவள் பார்த்திடாத உணர்வுகள். பயம், ஆமாம் பயம் தான். அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன ? என கேட்பவள் முகத்தில் பயத்தையும் பதட்டத்தையும் கண்டு இவளும் பதறித்தான் போனாள்.

"வரு.... வரு... என்னாச்சு... அடியே..."சத்தமாக அழைத்தவளாக அவளின் தோளை பிடித்துக்கொண்டு உலுக்க,

அதில் கனவுலகிலிருந்து தன்னை மீட்டிக்கொண்டு நினைவுலகதிற்கு வந்தடைந்தாள் சித்ரவர்ணிகா.

"வரு...ஆர் யூ ஆல்ரைட், என்னாச்சுடி... பாரு உடம்பெல்லாம் நடுங்கி முகமெல்லாம் எப்படி வேர்த்து போயிருக்குண்ணு" என கையில் வைத்திருந்த டவலை கொண்டு தங்கையின் முகத்தில் ஒற்றி எடுக்க.

மலங்க மலங்க விழித்தவள் ஒன்னுமில்லை என்பதாய் தலையாட்டினாள்.

"ஒன்னுமில்லைன்னா அப்பறம் எதுக்கு இப்படி பேய் பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்க? மரியாதையா என்னாச்சுன்னு சொல்லு. இல்ல வீட்ல எல்லார்கிட்டயும் உன் வண்டவாளம் எல்லாத்தையும் தண்டவாளம் ஏத்திடுவேன்" என மிரட்ட,அது சரியாய் வேலை செய்தது.

"அதுவந்து...அது..." என்று ஒருவித பதட்டத்தோடு தான் கண்ட கனவை விளக்க,

"எத...உன்னை ஒருத்தன் கடத்திட்டானா" என முகத்தை அஷ்டக்கோணலாக சுளித்தவள் பின்னர் அசால்ட்டாக "அதுக்கா இப்படி ஷாக் ஆகி உட்கார்ந்திருக்க, நான் கூட என்னவோ ஏதோன்னு பெருசா நினைச்சுட்டேன்" என அலட்சியமாக இடத்தை விட்டு நகர்ந்தாள் நித்யா.

"ஏய் ... நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்.நீ என்னடான்னா கொஞ்சமும் என்மேல அக்கறை இல்லாம போற" என தமக்கையின் கரங்களை பற்ற,

"இப்போ என்ன? நானும் உன் கூட சேர்ந்து ஒப்பாரி வைக்கணுமா. அது தான் கனவுன்னு சொல்லிட்டியே அப்பறம் எதுக்கு ஃபீல் பண்ணனும்.

ஒருவேளை உண்மையாவே எவனாவது உன்னை கடத்துனா...அப்போ மறக்காம சொல்லு, கண்டிப்பா கதறி கதறி அழறேன். உனக்கு அக்காவா இருந்துட்டு இது கூட பண்ணமா இருப்பேனா" என நக்கல் வழியும் குரலில் சொல்ல,


"அச்சோ...உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு சத்தியமா தெரியலடி. தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு...நான் கண்டது கனவு தான் ஆனா அது கனவு இல்ல" என தெளிவாய் நின்றவளை குழப்ப.

"கடவுளே தெரியாம உன்ன எழுப்ப வந்துட்டேன்டி. அதுக்காக இப்படியா என்ன வெச்சு செய்வ" என புலம்பவே தொடங்கிவிட்டாள் நித்யா.

"இல்லடி அந்த இடம்...அந்த ஆள்" என கண்களை மூடி அந்த கனவை நினைவடுக்கில் தேட...
"என்னடி திரும்பவும் கனவுக்கு போய்டியா" என்ற சத்தத்தில் அவளை நிமிர்ந்து பார்த்த வர்ணிகா,

"அந்த வீட்டை எங்கையோ பார்த்திருக்கேன்...ஆனா எங்கன்னு தான் தெரியலை. அதுமட்டுமில்ல அந்த இடத்துல உன் குரல் கூட கேட்டுச்சு" என பாவமாக சொல்ல,

"அதான பார்த்தேன் என்னடா இன்னும் எதுலையும் என்னை கோர்த்து விடலையேன்னு. ஊர் உலகத்துல அத்தனை பேர் இருந்தும் உனக்கு போய் அக்காவா பொறந்தேன் இல்ல, என்னை சொல்லணும்" என சலித்துக்கொண்டவள்,

இன்னும் பதட்டம் குறையாமல் பேசிக்கொண்டிருக்கும் தங்கையின் முகத்தை கண்டு தன் விளையாட்டை கைவிட்டாள்.

"வரு...அது வெறும் கனவு. அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல. சும்மா எதையாவது நினைச்சு மனசை குழப்பிக்காத. நைட் எதையாவது நினைச்சிட்டு படுத்திருப்ப அதான் இப்படி கனவு வந்திருக்கு "என தங்கையை தேற்ற முயன்றாள்.

"இல்ல அப்படி எதையும் நினைக்கவே இல்ல" என பதில் சொல்ல

"வேற என்ன தாண்டி பிரச்சனை...டிவில ஏதாவது பேய் படம் பாத்தியா" என கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.

"அது...நேத்து ராட்சசன் படம் தான் பார்த்தேன், பேய் படம் எல்லாம் பாக்கலை" என்ற தங்கையின் தலையில் ஓங்கி கொட்டினாள் நித்யா.

"போடி லூசு....அந்த படத்தை பார்த்துட்டு தூங்குனா, கனவுல கடத்தல்காரன் வராமா...விஜய் தேவரகொண்டாவா வந்து டூயட் பாடுவான். வந்துட்டா காலையிலேயே கடுப்பை கிளப்ப" என பொரிந்து தள்ளிவிட்டாள் நித்யா.


"உன்னால எனக்கும் வேலைக்கு நேரமானது தான் மிச்சம்" என கத்திவிட்டு அவள் சென்றுவிட.... தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் வர்ணிகா.

எதற்கும் கலங்காதவளை அந்த கனவு கலங்க வைத்தது. இத்தனைக்கும் கடத்தியவனின் முகம் தெரியவில்லை...அவளுக்கும் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கவில்லை, இருந்தும் அந்த கனவு அவளை என்னவோ செய்தது.

அதனை வார்த்தைகளால் வரையறுக்க முடியவில்லை அவளால்.

முயன்று தன்னை அதிலிருந்து மீட்க துணிந்தவள்,தமக்கையின் வார்த்தைகளை மனதில் கொண்டு வந்தாள். அந்த படம் பார்த்ததால் தான் இந்தமாதிரி ஒரு கனவு வந்திருக்க கூடும் என்று அவளே அவளை தேற்றிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க எழுந்தாள்.

கண்ட கனவு அப்படியே பலிக்க போவதை அந்த நேரம் அவள் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை அறிந்திருந்தால் பல நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம்.

இந்த கனவால் தான் உயிராக நேசிக்க கூடிய உயிருக்கே ஆபத்து வரும் என்பதை அந்த பேதை அறியாமல் போனது விதியின் செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்கும்.

அவளின் விதியை மாற்றி அமைக்கக் கூடிய ஒருவனை இன்றே சந்திக்க போகிறாள்...ஆனால் முகம் தெரியாத அவனை அடையாளம் கண்டுக்கொள்வாளா பெண்ணவள்?...

சென்னையின் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலில் ஆமையின் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது அந்த கார். அதனை இயக்கி கொண்டிருந்தவன் விஷ்ணுவர்மன்.

"டாமிட்...." என ஸ்டியரிங்கில் ஓங்கி அடித்தவனுக்கு தன் முன்னாள் அணிவகுத்து நின்றுகொண்டிருந்த வாகனங்களை கண்டு ஆத்திரமாக வந்தது. அனைத்தும் எப்போது சீராகி, தான் எப்போது ஆபீஸ் சென்றடைவது என்ற உச்சக்கட்ட கடுப்பில் இருந்தான் அவன்.


எப்போதும் விடவும் இன்று கொஞ்சம் அதிகப்படியான ட்ராஃபிக் இருக்க காரணமும் இருக்கத்தான் செய்தது. இன்று ஏதோ அரசியல் பொதுக்கூட்டம் பக்கத்தில் நடப்பதால்...அந்த பக்க சாலைகள் அடைக்கப்பட்டு அனைத்தும் இந்த சாலைக்கு மாற்றப்பட்டிருந்தது. அதனால் தான் இன்று இத்தனை நெரிசல்.

அது அவனுக்கு தெரிய வாய்பில்லையே...அவன் இன்று காலை தான் டெல்லியில் இருந்து வந்திருந்தான். வந்தவன் வீட்டிற்கு கூட செல்லாமல் ஒரு முக்கியமான மீட்டிங்க்காக ஆபீஸ் செல்ல...அதற்கு தடையாய் அமைந்தது ட்ராஃபிக்.

கார் இப்போது நகர வாய்ப்பே இல்லை என்பது அவனுக்கு தெரிந்துவிட...தனது மொபைலை எடுத்து நண்பனுக்கு அழைத்தான்.

"ஹலோ... சொல்லு மச்சி, இங்க எல்லாம் ரெடி, நீ வந்ததும் மீட்டிங் ஆரம்பிச்சிடலாம். எங்க இருக்க...எப்போ வருவ" என இடைவிடாமல் கேள்வி கேட்டவனை கண்டு மீண்டும் கடுப்பானவன்,

"ஏண்டா...நான் என்ன சொல்ல வரேன்னு கேட்காம நீ பாட்டுக்கு பேசிட்டே போன என்னடா அர்த்தம். நான் தான உனக்கு ஃபோன் பண்ணேன்,நீயே பேசுனா எப்படி? நான் எதுக்கு கூப்பிட்டன்னு கேட்க கூட பொறுமையில்லையா" என தாமதமாகிவிட்ட கோபத்தையும் சேர்த்து நண்பனிடம் காய்ந்தான்.

எதிரில் கேட்டுக்கொண்டிருந்த கவின், 'ஆஹா செம்ம காண்டுல இருக்கான் போலயே...இது தெரியாம நான் வேற அவனை ஏத்திவிட்டுட்டேனே' என எண்ணியவன்,

"சரி விடு மச்சி...ஒரு ஆர்வ கோளாறுல பேசிட்டேன். நீ சொல்லுடா" என விஷயத்திற்கு வர,

"நான் வர லேட் ஆகும்னு நினைக்கிறேன், நீயும் வருவும் சேர்ந்து மீட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிடுங்க, நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்" என மீட்டிங்கின் அவசியம் உணர்ந்து வேற்று வழியை நண்பனிடம் சொன்னான்.

"அது மச்சி....அது" என எதிரில் திக்கி திணறுபவனை கண்டு எரிச்சலடைந்தவன்,

"டேய் எதுக்குடா இப்போ இழுக்குற" என்றவன், அவன் சொல்ல வந்ததை யூகித்தவனாக "வரு ஆபீஸ்ல தான இருக்கா" என கேட்டு நிறுத்த.

'கண்டுப்பிடிசிட்டானே....அச்சோ உண்மையை சொன்ன என் பேபியையும் திட்டுவானே' என நொந்தவன் வேறுவழியின்றி "இல்ல மச்சி அவளுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்திருக்கும் அதான் கொஞ்சம் லேட் போல. இல்லனா எனக்கு முன்னாடியே ஆபீஸ் வந்திருப்பா... இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவா பாரேன்" என தன்னவளை காக்க கதையாய் அடித்துவிட்டான்.

"எனக்குன்னு எங்கிருந்து டா வருவீங்க... இதுல அவளை காப்பாத்த பொய் வேற. எங்க உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, லேட் ஆனதுக்கு ஒரு ஃபோன் பண்ணியாவது ரீசன் சொன்னாலா" என பல்லை கடிக்க,

அவன் எப்படி சொல்லுவான்...அவன் காலை ஆபீஸ் வந்ததில் இருந்து இதுவரை பத்துமுறைக்கு மேல் அவளுக்கு அழைத்துவிட்டான், அவள்தான் எடுத்தப்பாடாய் இல்லையே.

அதை சொன்னால் இன்னும் ஏறுவான்,எதையாவது சொல்லி சமாளிப்போம் என நினைத்தவன் "அது இல்ல மச்சி" என ஆரம்பிக்கும் போதே,

"போதும்...நீ சொல்ற கதையை அவ வேணா கேட்டுட்டு தலையாட்டுவா, என்னையும் அதுல சேர்க்காத.
எப்படியோ இன்னைக்கு மீட்டிங் கேன்சல் அதுதான, எல்லாம் என் நேரம். காலையில் இருந்து எதுவுமே சரியில்ல" என சலித்தவனாய் மொபைலை அணைத்தான்.

இன்னும் எந்த வாகனமும் அசைந்த பாடாய் இல்லை. அதில் சற்று தளர்ந்து அமர்ந்தவனின், மனநிலையை மாற்றுவது போலவே காரின் ரேடியோவில் இருந்து அந்த பாடல் ஒலித்தது.

"பெண்ணே நீயும் பெண்ணா...பெண்ணாகிய ஓவியம்"

என்ற பாடல் வரிகள் அவன் மனநிலையை முற்றிலும் மாற்றிவிட்டிருந்தது. அத்தனை நேரம் இருந்த இறுக்கம் கலைந்து உதடுகளில் இளநகை பூக்க...இதழுடன் சேர்ந்து அவன் கண்களும் சிந்தியது ஒரு மந்தகாச புன்னகையை.

அந்த பாடலின் வரிகளில் மூழ்கியவன், அதன் ஒவ்வொரு வார்த்தைகளையும் தன் மனம் கவர்ந்த சித்திரத்தோடு ஒப்பிட்டு பார்க்க... அவளும் கூட பிரம்மன் செய்த சாதனையாக தான் தோன்றியது அவனுக்கு.


தன் இதயாளை எண்ணிக்
கொண்டிருந்தவனுக்கு இப்போது நேரம் கடந்துக் கொண்டிருப்பது பெரிதாய் தெரியவில்லை. சற்றுமுன் வெறுப்பாய் தெரிந்த அதே போக்குவரத்து நெரிசல்...இன்னும் கொஞ்ச நேரம் நீண்டால் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது.

ஆனால் நினைத்தது அனைத்தும் உடனடியாக நடந்துவிட்டால், இந்த மானிடர்கள் கடவுளை மறந்துவிடுவார்கள் என்பது நம்மை படைத்தவனுக்கு தெரியாமலா இருக்கும்....அதுதான் அவன் ஆசைக்கு அப்போதே தடை செய்வது போல் போக்குவரத்து உடனடியாக சீரானது.

மனம் கவர்ந்தவளின் நினைவை கலைப்பது போல் சுற்றிலும் காரின் ஹாரன் சத்தம் கேட்க, அதில் தெளிந்தவன் "ச்ச... அதுக்குள்ள ஏன் ட்ராஃபிக் க்ளியர் ஆச்சு" என்ற சலிப்போடு காரை எடுத்தான்.

அங்கு ஆரம்பித்த வேகத்தை ஆபீஸ் வந்து தான் குறைத்தான். நேராக வாகனங்கள் தரிக்கும் இடத்தில் தனது காரினை நிறுத்தியன், மெல்லிய முறுவலோடே உள்ளே நுழைந்தான்.

கோபத்தில் காட்டுக்கத்து கத்த போகிறான் என எதிர்பார்த்திருந்த கவினுக்கு அவனின் புன்னகை முகம் ஆச்சரியத்தை தான் வரவைதத்தது.

"என்னடா இது... ஒருவேளை வர்ற வழியில் பேய் அடிச்சிடுச்சோ" என யோசித்தவனாக நண்பனை நோக்கி தைரியமாகவே சென்றான். அவனின் மலர்ந்த முகம் அந்த தைரியத்தை கொடுத்தது.

"அப்பறம் மச்சி" என்றவனை கண்டவுடன், அதுவரை அவனை சுற்றியிருந்த மாயவலை அறுபட...

"என்னடா இளிச்சிட்டு நிற்குற, மீட்டிங் என்னாச்சு... அவ வந்துட்டாளா இல்லையா" என தன் கர்ஜனையை தொடங்கிவிட, கவின் தான் அவன் திடீர் மாற்றத்தில் குழம்பிப் போனான்.

என்ன சொல்வது என கவின் முழிக்கும் போதே...அவனை மேலும் சோதிக்காமல் வந்து சேர்ந்தாள் வரு.

"ஹாய் டா....கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்றவள், எந்த விளக்கமும் கொடுக்காமல் தன் அறையை நோக்கி சென்றுவிட,

"அடிப்பாவி....சொல்லிட்டு அவ பாட்டுக்கு போறாளே. இங்கேயே நின்னா அவ போனதுக்கும் இவன் என்னை தான கத்துவான், எதுக்கு வம்பு" என எண்ணிய கவின் அவளை தொடர்ந்து மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்துக்கொண்டான்.



போகும் இருவரையும் பார்த்தபடி "ஊஃப்" என்ற பெருமூச்சோடு அவனும் மீட்டிங் நடக்கும் அறைக்குள் நுழைந்தான்.




கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்🥰🥰 உங்களின் வார்த்தைகள் தான் எனக்கான எனர்ஜி பூஸ்ட். என்னை மேலும் மேலும் எழுத தூண்டும் சக்தி.

 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 2

சென்னையின் மத்தியில் அமைந்துள்ள ஐந்தடுக்கு வளாகம். "வி.கே.என் கிராஃபிக் & டிசைன் டெவலப்மென்ட்" என்ற எழுத்துக்கள் தான் இவர்களின் மூன்று வருட உழைப்பிற்கு கிடைத்த பலன்.

கூண்டில் அடைப்பட்ட பறவைகளாய் இரண்டு ஆண்டுகள் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்தவர்களின் சிந்தனைகளும் கற்பனைகளும் அங்கே மதிக்கப்படாமல் போக... யாருடைய துணையின்றி தன் சொந்த சிறகுகளில், பரந்த உலகை வலம்வர துடித்த மூவரும்,அந்த கூட்டைவிட்டு பறந்து வந்து தங்களுக்கே தங்களுக்கென உருவாக்கிய சின்ன கூடு தான் இந்த வி.கே.என்.

இதில் சுமைகள் அதிகமாக தெரிந்தாலும்... சுயமிழக்காமல்.... சுதந்திரமாய்... சுயமாய்...சுழலாம் என்ற தன்னம்பிக்கை அதிகமிருக்க...அதை மட்டுமே தாரக மந்திரமாக பற்றிக்கொண்டு வந்து கரை சேர்ந்த அவர்களின் கனவு இல்லம்.

நண்பர்கள் மூவரும் இணைந்து தேர்ந்தெடுத்த தனி உலகம் தான் கிராஃபிக்ஸ்.
அது ஒரு மாய உலகம்....அங்கே முடியாது என்பதற்கு வாய்ப்பே இல்லை.

சாத்தியம் அல்லாத அனைத்தையும் தங்கள் கற்பனைகள் மூலம் சாத்தியமாக்கும் ஆசையும் வெறியும் இந்த மூவருக்குமே அதிகம். அதுவே அவர்களை இந்த துறையை தேர்ந்தெடுக்க வைத்தது.

பள்ளியை தொடர்ந்து கல்லூரியிலும் ஒன்றாகவே பயின்று...இதோ இப்போது தொழிலும் இணைந்த அவர்களின் உயிரான நட்பிற்கும் இந்த உயிரற்ற கட்டிடமும் ஒரு சான்று.

மீட்டிங் தொடங்க.... இதுவரை சிறிய அளவிலான கிராஃபிக்ஸ் வொர்க் செய்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது தான் தங்களின் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கின்றனர்.

புதிதாக ஒரு கேம் புரோகிராமை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்திருக்க...அதற்காக தான் இந்த மீட்டிங்.


மீட்டிங்கை கவின் தொடங்க...அதனை தொடர்ந்து வரு , தங்களின் அடுத்தடுத்த திட்டங்களையும்,யார்யார் என்னென்ன செய்யவேண்டும் என்பதனையும் எடுத்துரைக்க...அதனை முடித்துவைத்தான் விஷ்ணு.

"ஹாய் பிரெண்ட்ஸ்... என்னென்ன பண்ணனும்னு ஆல்ரெடி சொல்லிட்டாங்க. நானும் அதையே சொல்லி உங்களை பிரஷர் பண்ண விரும்பலை. பீ கூல் அண்ட் காம், எதையும் நினைக்காம ஹப்பியா வொர்க் பண்ணுங்க...அப்போ தான் வேலை நல்லபடியா முடியும்.

உங்களை நீங்க ஹேப்பியா வெச்சுக்கோங்க....புதுப்புது ஐடியா தானா உங்களை தேடிவரும்" என்றவன் உறைந்த புன்னகையோடே மேலும் சில நிமிடங்கள் பேசி முடித்தான்.

அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை எதிரில் இருந்த அனைவரின் முகத்திற்கும் இடம் மாற...அனைவருக்கும் இந்த ஃப்ராஜக்ட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் யாரும் சொல்லாமலேயே பிறந்தது.

அதுதான் அவன்,யாரையும் கட்டாயப்படுத்தியோ... கஷ்டப்படுத்தியோ வேலை வாங்க அவனுக்கு பிடிக்காது. செய்யும் வேலையில் தானாய் ஒரு ஆர்வமும் விருப்பமும் வரவேண்டும் என்று விரும்புபவன். அதனை அவன் பேச்சினால் வரவும் வைத்துவிடுவான். அதனால் அவர்களுக்கும் வேலையின் பளு பெரிதாக இருந்தாலும் விரும்பியே செய்தனர்.

அவனின் அந்த பண்பு தான் அவர்களின் இந்த வளர்ச்சிக்கு மிக பெரிய காரணமும் கூட.

ஒருவாறு மீட்டிங் முடிய அனைவரும் கலைந்து சென்றனர். விஷ்ணு தனது மொபைலுக்கு வந்த அழைப்பினை ஏற்று, பேசிவிட்டு திரும்பி பார்க்க...கவின் வரு இருவரும் அங்கு இல்லை.

"அதுகுள்ள எஸ்கேப் ஆகிட்டாங்களா" என சலித்தபடி அவர்கள் கேபின் நோக்கி சென்றான்.

"நீ மட்டும் இன்னும் கொஞ்சநேரம் லேட்டா வந்திருந்தாலும் உன் புருஷனை உயிரோடவே பார்த்திருக்க முடியாது பொண்டாட்டி. அவன் வந்த கோபத்துக்கு என்னை அடிச்சிருந்தாலும் அடிச்சிருப்பான், ஜஸ்ட் மிஸ்" என விஷ்ணு கத்திய கத்தை மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் கவின்.

அவள் இருக்கையில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரில் இருந்த மேஜையில் சாய்ந்து கொண்டு மனையாளின் கை விரல்களுக்கு சொடக்கிட்டு கொண்டிருந்தான் கவின்.

அவர்களின் அறைக்குள் நுழைந்த விஷ்ணு... "ஏண்டா கையோட நிறுத்திட்ட, அப்படியே மேடம் காலையும் அமுக்கிவிட வேண்டியது தான" என பல்லை கடித்தவன்,

"இது என்ன ஆபீஸ்ன்னு நினைச்சீங்களா இல்ல உங்க வீடுண்ணு நினைச்சீங்களா" என எரிந்து விழுந்தான்.

"இப்போ என்னடா...அதுதான் லேட் ஆனாலும் மீட்டிங் முடிஞ்சிடுச்சு இல்ல.அப்பறம் எதுக்கு கத்துற" என்று விஷ்ணுவை கண்டு கத்தியவள், கணவனிடம் தன் அடுத்த கரத்தை கொடுக்க...அவனும் அதனை அழுத்திவிட தொடங்கினான்.

" நீ பேசாத...ஏன் மேடம்க்கு லேட்டானா ஒரு ஃபோன் பண்ணி சொல்ல தெரியாதா" என கடுப்புடன் கேட்க,

"ஏண்டா நீயும் தான லேட்டா வந்த, என்னமோ என்னை மட்டும் குறை சொல்ற" என அவளும் பதிலுக்கு பதில் பேசினாள்.

"ஏன் நான் லேட்டா வந்தா நீயும் அப்படியே வரணுமா. நான் தான் ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்...உனக்கென்ன வரதுக்கு" என காய்ந்தான் தோழியை.


"உனக்கு ரோட்ல ட்ராஃபிக் எனக்கு வீட்ல ட்ராஃபிக். நான் என்ன பண்றது. என் கூட பிறந்தது இன்னைக்கு ஒரு டிராமா பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டா" என காலையில் நடந்தத அனைத்தையும் சொல்ல.


"யாரு?..உன் தங்கச்சியை ஒருத்தன் கடத்திட்டானமா, செம்ம ஜோக்" என வாய்விட்டு சிரித்த விஷ்ணு. அவளை இல்ல, அவ யாரையாவது கடத்தாம இருந்தா போதாது. வாயாடி கனவு கூட வருது பார் அவளுக்கு ஏத்த மாதிரியே" என முணுமுணுத்தான்.

"இதெல்லாம் ஒரு காரணம்னு இனி லேட்டா வா, அப்பறம் இருக்கு உனக்கு" என வருவை பார்த்து சொன்னவன்,

"டேய் எரும, எழுந்து வாடா நிறைய வேலையிருக்கு, அப்பறம் வந்து அவளுக்கு சேவகம் செய்" என கவினயும் பிடித்து இழுத்தவன், "உனக்கு வேற தனியா சொல்லனுமா போ....போய் எல்லா வேலை ஒழுங்கா நடக்குதான்னு பாரு. சோம்பேறி மாதிரி உட்கார்ந்தே இருக்காம" என்றவன் அவள் திட்டும் முன் வெளியே சென்றுவிட்டான்.

நண்பனின் இழுப்பிற்கு சென்றாலும் "டேய் அவளே பாவம்டா,அவளுக்கு போய் இந்த வேலையெல்லாம் விட்டா என்ன பண்ணுவா. அவள் உட்கார்ந்து பார்க்குற வேலையை மட்டும் பார்க்கட்டும் இதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என கவின் பாவமாய் நண்பன் முகம் பார்க்க,

"அவ நடக்கட்டும்னு தான் இந்த வேலையே...மேடம் அம்மா வீட்டுக்கு போனதிலிருந்து ஓவரா ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிட்டா.அவங்களும் தாங்கு தாங்குன்னு தாங்குறாங்களே தவிர அவளோட ஹேல்தை பத்தி யோசிக்கவே மாற்றாங்க. இதுல நீயும் இப்படி தாங்குனா அவ்ளோதான்.

இப்போவே கொஞ்சம் வெயிட் அதிகமா இருக்குன்னு டாக்டர் சொன்னது மறந்துடுச்சா. அவளை இயல்பா இருக்க விடுங்க. பாசத்தை பொழியிரேன்னு அவகிட்ட யாராவது போங்க அப்பறம் இருக்கு உங்களுக்கு" என்றான், அக்கறையையும் கோபமாகவே.

அவன் சொல்வதும் சரி தான் என மனதை சமாதானப் படுத்திய கவின் தனது வேலையில் கவனம் செலுத்தினான்.

கேபினில் அமர்ந்திருந்த நித்யா, நண்பனை திட்டிக்கொண்டே தன் மேடிட்ட வயிருடன் எழுந்து நடந்தாள். அவளுக்கும் தெரியும் தன் நலனுக்காக மட்டுமே அவன் சொல்லி சென்றான் என்று. இருந்தும் அவனை திட்டுவதை நிறுத்தவில்லை நித்யவர்ஷினி...விஷ்ணுவிற்கு மட்டும் வரு.

முதன்முதல் பள்ளியில் முதல் சந்திப்பிலேயே... அவள் பெயரை கேட்டவுடன் அவன் வைத்த பெயர் தான் வரு.

"டேய் என் தங்கச்சியை தான் வீட்ல வருன்னு சொல்லுவாங்க" என அவள் தடுத்த போதும்.

"நீங்க அவளை அப்படி கூப்பிடுங்க. ஆனா நான் உன்னை இப்படி தான் கூப்பிடுவேன்" என்று சொல்லிவிட....அவளும் அதனை மாற்றிட முயலவில்லை.

காலையில் கண்ட கனவின் மிச்சங்கள் இன்னும் நீங்காமல் மனதை அரித்துக்கொண்டே இருந்தாலும், அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் வேலைக்கு கிளம்பினாள் வர்ணிகா.

வீட்டில் அனைவரும் அவள் கனவை கேட்டு சிரிக்க மட்டுமே செய்தனர். யாருக்கும் அது பெரிதாக படவில்லை. இவள்தான் அதை மிகைப்படுத்தி சொல்வதாக வேறு சொல்லிவிட...அதற்கு மேல் அவர்களிடம் அதனை பற்றி பேசவில்லை அவள்.

தன்னை கேலி செய்வதாகவே அவளுக்கு தோன்றியது. அதனால் தன் பிரச்சனைகளை இனிமேல் யாரிடமும் சொல்லவே கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் சித்ரவர்ணிகா.

இத்தனைக்கும் அவள் தன் பிரச்சனைகளை தானே பார்த்துக்கொள்ள கூடியவள் தான், நித்யாவாவது பெற்றோர்கள் அல்லது நண்பர்களின் துணையை தேடுவாள்.ஆனால் வர்ணிகா யாரிடமும் எதையும் கேட்டு நிற்காத ரகம்.

அதுவும் அவளின் அனைத்து முடிவுகளையும் அவள் மட்டுமே எடுப்பாள்...அதில் யாரின் தலையீட்டையும் விரும்பாதவள்,யாரின் அறிவுரைகளையும் கேட்கவும் தயாராக இருந்ததில்லை.

அனைத்தும் அவளின் விருப்பத்தின் படியே இன்று வரை,அது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதை பற்றியெல்லாம் பெரிதாய் அலட்டிக் கொண்டதில்லை.

அப்படிப்பட்டவள் குடும்பத்தினரிடம் பகிரும் முதல் விஷயம் இந்த கனவு ஒன்று தான். அதையும் கூட கேட்க ஆளில்லை என்ற கோபம்... "போங்களேன் எனக்கு யாரும் வேண்டாம்" என்ற எண்ணம் தோன்ற,கோபத்தில் சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டாள்.

சித்ரவர்ணிகா ... சுதாகரன் தேவகி தம்பதியினரின் இளைய மகள். மூத்தவள் நித்யவர்ஷினி.

வர்ணிகாவும் கிராஃபிக் டிசைனிங் முடித்தவள் தான். ஆனாலும் தமைக்கையுடன் வேலை செய்ய விருப்பமில்லை. எந்த வேலையாக இருந்தாலும் அது தனக்காக... தன் திறமைக்காக கிடைத்ததாக இருக்கவேண்டும்,சொந்தம் என்ற காரணத்திற்காக இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தாள். அதேபோல் அவளின் சொந்த முயற்சியில் ஒரு வேலையையும் தேடிக்கொண்டாள்.

கோபமாக தனது ஸ்கூட்டியை கிளப்பியவள், அதனை ஆபீஸை நோக்கி சாலையில் செலுத்தினாள்.

போகும் வழியில் சிக்னலில் சிவப்பு நிற விளக்கு ஒளிவிட...ஒற்றை காலை ஊன்றி நின்றவளுக்கு மிக அருகில் வந்து நின்றது ஒரு பைக். ட்ராஃபிக்கில் இதெல்லாம் சகஜம் என்பதால் அவளும் அதை பெரிதாய் கண்டுகொள்ள வில்லை.

சில நிமிடங்களில்,அதுவரை சாலையில் கவனமாக இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவள் நாசி தீண்டிய பெர்ஃப்யூமின் நறுமணம்.

இது...இது என யோசித்தவளுக்கு சட்டென்று எதுவும் நியாபத்தில் வரவில்லை. அதே குழப்பத்தில் பக்கத்தில் பார்வையை திருப்பினாள்.

தலையில் ஹெல்மெட்டுடன் லேட்டஸ்ட் மாடல் பைக்கில் நின்றுகொண்டிருந்தவனின் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தாலும் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவன்தான் அவள் கனவில் வந்த...தனக்கு உயிர் பயத்தை காட்ட போகின்ற அந்த ராட்சசன் என்று.

அவள் பார்க்கும் போதே பைக்கில் இருந்தவனும் அவளை பார்த்தான். ஒரு வினாடிக்கு குறைவான பார்வை மட்டுமே...மீண்டும் அவன் பார்வையை சாலைக்கு திரும்பிவிட... அவளும் திரும்பிக் கொண்டாள்.

எந்தவித காரணமுமின்றி... மூளை தன் இயக்கத்தை நிறுத்தியது போன்ற நிலையில் இருந்தாள் அவள். மூளை எதையும் யோசிக்க மறுக்க...வெறுமையான காகிதம் போல் இருந்தது அவளின் மனம்.

அதற்குள் பச்சை விளக்கை கண்டவுடன் அனைத்து வாகனமும் நகர்ந்துவிட...அவள் அருகில் நின்றிருந்த அந்நியன் கூட சென்றுவிட்டான். ஆனால் அவள் தான் அசையாமல் நின்றிருந்தாள்.

அவளுக்கு பின்னால் பலவித ஹாரன் ஒலி காதை கிழிக்க.... அதில் திடுக்கிட்டு தன்னிலையடைந்தவள் தனது ஸ்கூட்டியை எடுத்தாள். அதே குழம்பிய மனநிலையில் வண்டியை எடுத்தவள் இடதுபக்கம் திரும்ப வேண்டிய இடத்தில் வலப்பக்கம் திரும்பிவிட,

அவள் அப்படி திரும்புவாள் என்பதை அறியாமல் பின்னால் வந்த ஆட்டோ வேகத்தை குறைத்தாலும், அவள் ஸ்கூட்டியை இடித்துவிட...சரிந்து விழுந்தாள் வண்டியோடு.

இனி அவள் வாழ்வில் நடக்க இருக்கும்....நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வின் முடிவும் அந்த கனவை நோக்கியே. அதற்கு தொடக்கமே இந்த விபத்து என்பதை அறியாதவள், விழுந்த அதிர்வில் "அம்மா...ஆ" என்று கத்தினாள்.

காலில் பலமாக அடி...அதில் வண்டியும் முழுவதுமாக அவள் மீது விழுந்து விட்டிருந்தது. ஆட்டோவில் வந்தவன் திட்டுவதற்காக வாய் திறக்க...அவள் இருந்த நிலையை கண்டு அவசரமாக வண்டியை விட்டு இறங்கிய டிரைவர் அவளுக்கு உதவினான்.

ஸ்கூட்டியை அவள் மேலிருந்து எடுத்தவர், அவள் எழுவதற்கு உதவ, அவளால் வலது காலை தரையில் ஊன்ற முடியவில்லை, வலி உயிர் போனது.

அவளின் நிலையை கண்டு...அவரே ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தியவர், தனது ஆட்டோவிலேயே அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அப்போதுதான் விஷ்ணுவின் கத்தலுக்கு இணங்கி, இரண்டு ப்ளோர் ரவுண்ட்ஸ்ஸை முடித்துவிட்டு களைத்துப் போய் அமர்ந்திருந்தாள் நித்யா.

"பாவி ரொம்பதான் வேலை வாங்குறான்" என அவனை மனதுக்குள் திட்டும் போதே... மாதுளை ஜூஸ் நிரம்பிய கோப்பையுடன் உள்ளே நுழைந்தார் ஆபீஸ் பியூன்.

அதை பார்த்ததும் "யாரு கொடுத்துவிட சொன்னது" என கோபமாக கேட்க,

"விஷ்ணு சார் மேம். குடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னாரு, லஞ்ச்க்கு அப்பறம் மத்த வேலையை பார்க்க சொன்னார் " என்றவர் அதனை வைத்துவிட்டு சென்றுவிட...

அவளோ "அடப்பாவி அப்போ திரும்பவும் அலையனுமா...அதுக்கு தான் இந்த ஜூஸ்ஸா" என சலித்துக் கொண்டவள், தன் எதிரில் இருந்த பழச்சாறை கண்டு "இதுக்கு ஒரு குறைச்சலும் இல்ல" என திட்டியவளின் மனம் நண்பனின் அன்பில் கனிந்தது.

அவள் அதை குடித்து முடிக்கவும்...அவள் மொபைல் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

'யாரிந்த நேரத்தில் ' என்ற கடுப்புடன் ஃபோனை எடுக்க...திரையில் தங்கையின் எண்ணை கண்டு ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள் நித்யா. கடைசியாக அவள் அழைத்தது என்றைக்கு என நினைவு கூற...அது பல ஆண்டுகள் என்று தான் பதில் சொன்னது.

"அட என்னடா இது அதிசயமா ஃபோன் எல்லாம் பண்றா. காலையில இருந்து அவ பண்றது எல்லாமே வித்தியாசமா இருக்கே. இன்னும் அந்த கனவையே நினைச்சிட்டு இருக்களா" என்ற சந்தேகத்தோடு இணைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"வரு...என்ன திடீர்னு ஃபோன்" என நித்யா கேட்க,

"ஏன் நான் ஃபோன் பண்ண கூடாதா" என்றாள் எடுத்தயெடுப்பில்.

"அச்சோ...அப்படி சொல்ல வரலைடி,இந்த நேரத்துல ஃபோன் பண்ணியிருக்கியேன்னு கேட்டேன். தெரியாம அப்படி கேட்டுட்டேன் சாரிடி" என சமாதானமாக சொன்னவள், "சரி என்ன விஷயம் சொல்லு" என்றாள் நிதானமாக.

அழைக்காதவள் அழைத்திருப்பதே ஏதோ முக்கியமான விஷயம் என்பது புரிந்துவிட...எதையும் சொல்லி அவளை கோபமாக்க விருப்பாமல் நிதானத்தை கடைப்பிடித்தாள்.

"அது...கொஞ்சம் கே.எஸ் ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரியா" என கெட்டவள் முடிக்கும் முன்பே...

"என்னது ஹாஸ்பிட்டலுக்கா...யாருக்கு என்னாச்சு" என பதறியவளை,

"பச்...எதுக்கு சும்மா இப்படி பதறுற,யாருக்கும் ஒன்னுமில்ல எனக்கு தான் சின்ன ஆக்சிடென்ட். பயப்படுற மாதிரி ஒன்னுமில்ல...நீ வா, மத்ததை அப்பறம் சொல்றேன்" என்றவள் இணைப்பை துண்டிக்க,

நித்யாவிற்கு ஆக்சிடென்ட் என்ற வார்த்தையை கேட்டதுமே உடல் நடுங்க தொடங்கிவிட்டது. தங்கைக்கு என்ன ஆனதோ ஏதானதோ என்ற பயம் நெஞ்சை கவ்வ,
தடுமாறி எழுந்தவள், விஷ்ணு மற்றும் கவினை தேடி சென்றாள்.

வொர்கிங் ரூமில் புதிதாக உருவாக இருக்கும் கேம்மிற்கு ஏற்றவாறு...கார்ட்டூன் உருவங்களை உருவாக்கும் முயற்சியில் இருந்தனர் நண்பர்கள் இருவரும்.

"மச்சி... புதுசா இருக்கணும்...எல்லாரும் பண்ற மாதிரி இருக்க கூடாது. பார்த்தவுடன் நம்ம வொர்க் தனியா தெரியணும்" என்றவன் பென்சிலை கையில் எடுத்தான்.

"கண்டிப்பா டா" என்ற கவின் கணினியில் எதையோ தேடிக்கொண்டிருக்க...விஷ்ணு மேஜையில் இருந்த காகிதத்தில் எதையோ மும்முரமாக வரைந்துக் கொண்டிருந்தான்.

நித்யா பதட்டமாக உள்ளே நுழைய..."உனக்கு சொல் பேச்சை கேட்குற பழக்கமே இல்லையா. இப்போ எதுக்கு இங்க வந்த,உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பினேனே" என்ற விஷ்ணு அவள் முகத்தில் பதட்டத்தை கண்டு,

"வரு... இட்ஸ் எவ்ரிதிங் ஓகே. என்னாச்சு...உடம்புக்கு ஏதாவது பண்ணுதா" என பதட்டத்துடன் எழுந்து அருகில் வர,

அதற்குள் கவினும் மனைவியை நெருங்கி இருந்தான்.

"நித்து...என்ன பண்ணது?.. ஏன் இப்படி இருக்க" என விட்டால் அழுதுவிடுபவன் போல் கவின் கேட்க,

"அது... வருக்கு ஆக்சிடென்ட்" என்று திக்கிதிக்கி சொல்ல...அதனை கேட்டு இருவரும் அதிர்ந்துதான் போனார்கள்.

"ஏய்...என்ன சொல்ற?..யார் உனக்கு சொன்னது" என்ற விஷ்ணுவின் கேள்விக்கு,

"அவளே தான் ஃபோன் பண்ணா... சின்ன ஆக்சிடென்ட், பெருசா ஒன்னுமில்லன்னு தான் சொன்னா. ஆனா எனக்கு தான் ரொம்ப பயமா இருக்கு. வாங்க சீக்கிரம் போலாம்" என சொன்னவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் கசிய,

"அவளே தகவல் சொல்ற அளவுக்கு ஸ்டேபிளா தான் இருந்திருக்கா. அதுவே சொல்லுது அவளுக்கு எதுவும் பெருசா இல்லைன்னு. அப்பறம் என்ன? முதல்ல அழுகையை நிறுத்து" என்றவன் இருவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

மூவரும் அவள் இருக்கும் அறைக்குள் நுழைய...காலில் கட்டுடன், ஒரு கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்க...மற்றொரு கரத்தில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டிருந்தாள் வர்ணிகா.

அதை பார்த்தும் விஷ்ணுவிற்கு கோபம் ஏகத்திற்கும் அதிகரிக்க..முயன்று தன்னை கட்டுப்படுத்தினான்.

"வரு...உனக்கு ஒன்னுமில்லையே. ஏண்டி வண்டியை பார்த்து ஒட்ட தெரியாதா. ஏதோ சின்னதா போனதால பரவாயில்ல,இதுவே பெருசா ஆகியிருந்தா என்னாகுறது" என கலங்கிய விழிகளுடன், தங்கையை முழுதாய் கண்களால் ஆராய்ந்தாள், வேறு எங்காவது அடிப்படிருக்கா என்று.

"இப்போ எதுக்கு தேவையில்லாம அழற. கால்ல பிராக்ச்சர், தனியா வண்டியை ஓட்டுட்டு போக முடியாது,அதுதான் உண்மை வர சொன்னேன். மத்தபடி ஐயம் குட்" என சிடுசிடுத்தவளை பரர்த்து பல்லை கடித்தான் விஷ்ணு.

"ஆமா...உன்னை மட்டும் தான வர சொன்னேன், எதுக்கு இத்தனை பேரை இழுத்துட்டு வந்திருக்க" என தமக்கையை பார்த்து கத்த,

"நீ ஆக்சிடென்ட்ன்னு சொன்னதும் எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே ஓடல. அதான்" என்றவளை கண்டு தலையிலேயே அடித்துக்கொண்டாள் வர்ணிகா.

"ம்ஹும்... உன்கிட்ட சொன்னேன் இல்ல, அது என் தப்புதான்" என்றவள், மீண்டும் தனது மொபைலை பார்க்க தொடங்கிவிட்டாள். அறையில் நிற்கும் மற்ற இருவரையும் கண்டுக் கொள்ளவே இல்லை.

"டாக்டர் என்ன சொன்னாங்க..? எப்போ சரியாகுமாம், இன்னைக்கே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்களா" என தவிப்புடன் நித்யா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

"ஜஸ்ட் ஹெர் லைன் பிராக்ச்சர் தான், சோ இன்னைக்கே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க" என்றவள், பதிலை கூட தமைக்கையின் முகத்தை பார்த்து சொல்லவில்லை.

அதுவரை பொறுமை காத்தவனால் அதற்கு மேல் முடியாமல் போக...வர்ணிகா அருகில் சென்றவன், அவள் கையில் இருந்த ஃபோனை பிடுங்கி எறிந்திருந்தான்.

அதில் அவள் ஆத்திரமாக அவனை முறைக்க....அவளுக்கு சளைக்காத பார்வையை அவனும் அவளில் செலுத்தினான்.

 

T22

Well-known member
Wonderland writer
ஹாய் பிரெண்ட்ஸ்

சென்ற பதிவிற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண அனைவருக்கும் நன்றி டியர்ஸ்.

படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்



 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 3

"படிச்சிருக்கியே உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...அவ இப்படி இருக்கும் போது அதிர்ச்சியா எதையும் சொல்ல கூடாதுன்னு தெரியாதா?...அந்த பேசிக் நாலேஜ் கூடவா இல்ல" என்றவன், அவள் முகத்தில் வந்து போகும் கோபத்தை கண்டுகொள்ளாமல் மீண்டும் தொடர்ந்தான்.

"உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதட்டத்துல ஓடி வந்தவளுக்கு எதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவ..?.அப்படி உனக்காக ஓடி வந்தவகிட்ட முகம் கொடுத்துக் கூட பேச முடியாதா உன்னால.
உனக்கென்ன அப்படி ஒரு அலட்சியம்" என ஆத்திரத்தில் கத்தியவனை கவின் தடுக்க முயல,

"ப்ச்...விடுடா, நானும் பொறுமையா, போனா போகுதுன்னு விட்டா ரொம்ப தான் பண்றா" என்றவனை பார்த்து

"அவ என் அக்கா.... அவளை என்ன சொல்லவும் எனக்கு உரிமையிருக்கு. அதை கேட்க நீ யாரு. உங்க ப்ரெண்ட்ஷிப்பை எல்லாம் வெளிய வெச்சுக்கோங்க, என்கிட்ட காட்டாதீங்க. என்னை கேள்வி கேட்குற உரிமையை நான் யாருக்கும் கொடுக்கலை" என அவனை பார்த்து கத்தியவளை கைநீட்டி தடுத்தவன்,

"அவ உன் அக்கா தான் யாரு இல்லைன்னு சொன்னது.
இந்த நிமிஷம் வரைக்கும் உனக்கு ஒண்ணுன்னா துடிக்க தான் செய்றா. ஆனா உன்கிட்ட இதுவரை அந்த துடிப்பை நான் பார்த்ததே இல்லை" என்றவனின் வார்த்தைகள் அவளை குற்றம் சாட்டியது.

அதில் அவளின் கோபம் பன்மடங்காக "அதை உன்கிட்ட காட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்றவள்,

தன் தமக்கையின் புறம் திரும்பி..."உனக்கு இங்க இருக்க விருப்பம் இருந்தா இரு...இல்லனா எல்லாரையும் கூப்பிட்டு வெளிய போ. எனக்கு யாரோட உதவியும் தேவையில்ல" என சத்தமாக கத்தினாள்.

அவள் மனம் உளைக்கலனாய் கொதித்தது, தன்னை எப்படி கேள்வி கேட்கலாம்...குற்றம் சொல்லாம்.. என்ற கோபமும் ஆணவமும் அடங்க மறுத்து.

அவள் கத்தும் போதே...உள்ளே நுழைந்த செவிலி "இது ஹாஸ்பிடல் இப்படியா கத்துவீங்க. அமைதியா இருக்க முடிஞ்சா உள்ள இருங்க இல்லனா எல்லாரும் வெளிய போங்க" என சத்தம் போட,

"கத்துனது நாங்க இல்ல சிஸ்டர்...பேஷண்ட் தான்.அப்போ அவங்களையும் வெளிய அனுப்பிடுவீங்களா" என கவின் வாயை விட...அந்த சிஸ்டர் வர்ணாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல,

அதில் சித்ரவர்ணிகா கோபமாக திரும்பி... தன் அக்காள் கணவனையும் பாரபட்சமின்றி முறைத்தாள்.

"பச்...கொஞ்சம் சும்மா இருங்க" என கணவனை கண்டித்த நித்யா நண்பன் நோக்கி திரும்பினாள்.

"விஷ்ணு பிளீஸ் டா...எனக்காக எதுவும் பேசாத...பிளீஸ்..." நண்பனிடம் தன் தங்கையின் செயல்களுக்கு கெஞ்சியவள், "அவளை பத்தி தான் தெரியுமே...இப்போ திரும்பவும் ஏதாவது சொன்னா கண்டிப்பா என்னையும் கிட்ட சேர்க்க மாட்டா. அப்பறம் சமாளிக்கிறது கஷ்டம்" என கண்களை சுருக்கி சொல்ல,

"நீ எதுக்கு அவளுக்காக கெஞ்சிக்கிட்டு நிற்குற" என்றவன், கவின் அமர்ந்திருந்த சேரில் இருந்து அவனை பிடித்து இழுத்தவன் நித்யாவை அமரவைத்தான்.

சற்றுநேரம் அங்கு அமைதியே நிகழ, இவர்களின் நட்பையும் விஷ்ணுவின் கவனிப்பையும் பார்த்து உதட்டை சுழித்தாள் வர்ணிகா.

அப்போது அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க...கேன்டீனில் இருந்து ஜுஸ் வந்திருந்தது. இவர்கள் வருவதற்கு முன்பே தனக்காக வர சொல்லியிருந்தாள்.

ஜீஸ்ஸை அங்குள்ள டேபிளில் வைக்கும் முன்பே அந்த பணியாளர் கைகளில் இருந்து வாங்கிய விஷ்ணு
"வரு" என அழைக்க,

அவன் அழைப்பில் நித்யா நிமிர்ந்து பார்க்க.... வர்ணிகாவும் அவனை தான் பார்த்திருந்தாள், அவன் தன்னைத்தான் அழைப்பதாக தப்பர்த்தம் கொண்டவளாய்.

"வரு... இந்த ஜூஸை குடிச்சிட்டே உட்கார்ந்திரு" என சொல்லியபடி நித்யாவிடம் நீட்ட...."விஷ்ணு என்ன பண்ற? இது அவளுக்கு வந்தது, அவதான் இங்க பேஷண்ட் நான் இல்ல...முதல்ல இதை அவகிட்ட கொடு" என மறுப்பு தெரிவித்தாள்.

அவனோ "ஜுஸ் குடிக்கிற அளவுக்கு அவ ஒண்ணும் வீக்கா தெரியல....நீதான் நிக்க கூட முடியாம தடுமாறிட்டு இருக்க...இது உனக்கு தான் தேவை. அவளுக்கு வேணும்னா வேற ஆர்டர் பண்ணிக்க சொல்லு" என கண்களால் அவளை முறைத்தபடி சொன்னவன்,

நித்யா குடித்து முடிக்கும் வரை விடவில்லை. அடுத்த நிமிடம் அந்த அறையே அதிரும்படி ,

"ஜஸ்ட் கெட் அவுட் ஆல்..." என சீறலுடன் உறுமியபடி, அருகில் இருந்த பொருட்களை தள்ளிவிட்டவள், "முதல்ல நீ இங்கிருந்து வெளிய போ...போ..." என விஷ்ணுவை நோக்கி விரலை நீட்டி, போ என்பது போல் அசைத்தாள்.

கண்களில் வெறுப்பை ஏந்தி...அவனை பார்வையாலேயே எரித்துவிடும் அளவிற்கு கோபம் கண்ணை மறைத்தது அவளுக்கு.

தன்னை நோக்கி நீண்ட விரலை உடைக்கும் அளவிற்கு ஆத்திரம் வந்தாலும், தன்னையே பாவமாய் பார்க்கும் நித்யாவை மேலும் வருத்த மனமில்லால் வெளியே சென்றான் விஷ்ணு.

"வரு, கொஞ்சம் அமைதியா இரு...அவன் ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டான். கவின் உனக்கு ஜுஸ் வாங்க போயிருக்கான்" என சமாதானப்படுத்த,

"பைத்தியமாடி நீ...இப்போ ஜுஸ்க்கா இவளோ சண்டை நடக்குது" என அலுத்துக் கொண்டவள்,

"எல்லாத்துக்கும் நீதான் காரணம்...கண்டவங்க எல்லாம் என்னை பேசுற அளவுக்கு அவங்களுக்கு இடம் கொடுத்து வெச்சிருக்க இல்ல, உன்னை சொல்லணும். முதல்ல நீயும் அவங்களோட வெளிய போ. எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்" என சிடுசிடுக்க,

"அவன் என் பிரெண்ட், அவனை கண்டவங்கன்னு சொல்லாத" என நித்யா இத்தனை நேரத்தில் இப்போது தான் கோபம் வந்தவளாய் பேசினாள்.

தன்னிடம் காட்டிய அலட்சியத்தின் போது கூட அவளுக்கு கோபம் வரவில்லை. தன் நண்பனை கண்டவன் என சொன்னதும் தங்கையின் மீது கோபம் வந்தது.

"உன் பிரெண்டுன்னா அது உன்னோட வெச்சுக்கோ. என் விஷயத்தில் தலையிட்டா இப்படி தான் பேசுவேன்" என்றவள், அங்குள்ள காலிங் பெல்லை அழுத்தி செவிலியரை வர வைத்தாள்.

"டிஸ்சார்ஜ் எப்போ பண்ணுவீங்க... நான் சீக்கிரம் போகனும்" என மற்றவர்கள் மீது உள்ள கோபத்தில் அந்த சிஸ்டரிடம் சிடுசிடுத்தாள்.

"உங்களுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சதும் டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க...இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும். அதுவரைக்கும் இருந்துதான் ஆகனும்" என்றுவிட்டு அமைதியாக சென்றுவிட்டார். அவர் சர்வீஸில் இதே போன்று பல நோயாளிகளை கடந்து வந்தவருக்கு, இவளின் அலட்சியம் எல்லாம் ஒன்றுமே இல்லாததாக தான் பட்டது.

"ப்ச்...இன்னும் ஒன் ஹவரா" காத்திருக்கும் நொடிகளை வெறுத்தவளாய் பல்லை கடித்தபடி அமர்ந்திருந்தாள் வர்ணா.

நித்யா சோர்ந்து போனாள் தங்கையின் இந்த பிடிவாதத்திலும் கோபத்திலும்...அவளை சமாளிக்க முடியாமல் கைகளை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அந்த அறையை விட்டு வெளியே வந்த விஷ்ணுவிற்கு அவள் தன்னை 'கண்டவன்' என சொன்னது தெளிவாக காதில் விழுந்தது.ஒருமுறை விழிகளை அழுத்தமாக மூடி திறந்தான்.

அவள் கத்திய கத்து வெளியே இருந்த பலருக்கு கேட்டிருக்க வேண்டும், அனைவரின் பார்வையும் அந்த அறையில் தான் இருந்தது... அந்த பார்வை அனைத்தும் இப்போது அங்கிருந்து வெளிவந்த இவன் மேல் படிந்தது.

"ச்சே.... அவளால என் மானம் போனது தான் மிச்சம்....இம்சை" என எண்ணியடி திரும்பியவன் பார்வையில் விழுந்தாள் அவள்.

சந்திரிகா.....அவளின் பார்வை அணுஅணுவாய் விஷ்ணுவை தான் அளந்துக் கொண்டிருந்தது.

ஆறடிக்கு மேலான உயரத்தில்... அதற்கு ஈடாக முறுக்கேறிய தேகம். ஆண்கள் கூட இத்தனை நிறமாய் இருப்பார்களா என அதிசயிக்கும் சிவந்த நிறத்தில் இருந்தான் விஷ்ணுவர்மன். கூர்மையான விழிகள், அதில் ஆளை வீழ்த்தும் பார்வை...சீரான நாசி...செக்கச்சிவந்த இதழ்கள்,அதை முழுதாய் காட்டாமல் மறைக்கும் அடர்ந்த தாடி. பெண்களை மட்டுமல்ல ஆண்களை படைப்பதில் கூட பிரம்மன் ரசிகனாய் தான் இருந்திருக்கிறார் என்று எண்ண தோன்றியது. ஆண்களே பொறாமை கொள்ளும் பேரழகன் தான் என எதிரில் இருந்தவள் மனம் ஒப்புக்கொண்டது.

அவன் பார்வையோ...எதிர்பாராமல் அவளை இங்கே கண்டுவிட்ட அதிர்வில் இருந்தது.

தன்னை அவன் இங்கே எதிர்பார்க்க வில்லை என்பதை அவன் கண்களே காட்டிக் கொடுத்திட...அதில் எள்ளலாய் ஒரு பார்வையை அவனை நோக்கி செலுத்தினாள்.

"அப்பறம் விஷ்ணு...எப்படி இருக்க?.. ஆளே மாறிப் போய்ட்ட போல. புதுசா தாடி எல்லாம் வெச்சு செம்ம ஹன்ட்சமா இருக்க போலையே....ஒருவேளை லவ் ஃபெயிலியரோ" என்றவளின் குரலில் அந்நியாத்துக்கு நக்கல் வழிந்தது.

தெரிந்தே கேட்பவளின் நக்கலில், அவளுக்கு பதில் சொல்ல பிடிக்காமல் பல்லை கடித்து பொறுமை காத்தான் விஷ்ணு.

"என்ன பதிலை காணும்...நானே சொல்லவா" என மேலும் மேலும் அவன் பொறுமையை சோதித்தாள் சந்திரிகா. அவளுக்கு அன்று தன்முன் தோற்றுப்போய் நின்ற விஷ்ணுவின் முகம் தோன்றி...உதட்டில் புன்னகையை பூக்க செய்தது.

அவள் இத்தனை பேசியும் விஷ்ணுவிடமிருந்து பதிலில்லை. அதேநேரம் அவள்மேல் செலுத்திய அழுத்தமான பார்வையையும் மாற்றிக் கொள்ளவில்லை.

இன்னும் உள்ளே கத்திக்கொண்டிருக்கும் வர்ணிகாவின் குரல் அவளையும் தீண்ட,

"இப்படியெல்லாம் பேச்சு வாங்கிகிட்டு இருக்கும் அளவுக்கு... அந்த ஃப்ரெண்ட்ஷிப்பில் அப்படி என்னதான் இருக்கு" என கேட்டாள்.

ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் நட்பை வெறுக்கும் ஒரே ஜீவன் இவள் தான். அப்படியிருக்க இன்றும் அந்த நட்பு மாறாமல் இருப்பதை கண்டு எரிச்சல் வந்தது.

"நட்புன்னா என்னன்னே தெரியாத உனக்கெல்லாம் எங்க நட்பு புரியாது" என இதற்கு மட்டும் பதிலளித்தவன்,அவளை துட்சமாக பார்த்தான்.

அவன் பார்வையில் கண்ட அலட்சியம்...அவன்மேல் இருக்கும் காதலையும் தாண்டி வன்மத்தை தான் அதிகரித்தது அவளுள்.

"மப்ச்....அந்த யூஸ்லஸ் நப்பை பத்தி எனக்கு தெரியவே வேண்டாம்" என்றவள்,

பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் அருகில் வந்து நின்றான் ஒரு ஆடவன்,
"சந்திரிகா போலாமா" என்றபடி.

"ம்ம்...போலாமே" என்றவள்,அவனை விஷ்ணுவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

"ஹீ இஸ் மிஸ்டர் ஆகாஷ்...என்னோட ஃபியான்ஸி. இன்னும் இரண்டு மாசத்துல எங்களுக்கு கல்யாணம்" என சிரித்துக்கொண்டே சொன்னவள்,

"இது விஷ்ணு என்னோட காலேஜ் மேட்" என ஆகாஷிற்கு அறிமுகம் செய்துவைத்தாள்.

அப்போது கவின் வந்துவிட...அவனும் சந்திரிகாவை பார்த்து சில வார்த்தைகள் பேசிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

அடுத்த சில நிமிடங்களில் ஆகாஷ் சந்திரிகாவை அழைத்துக்கொண்டு செல்ல...சிறிது தூரம் சென்றவள்,
"ஒன் மினிட் ஆகாஷ்" என அவனை விட்டுவிட்டு விஷ்ணு அருகில் வந்தாள்.

"ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்....கல்யாணத்துக்கு மறக்காம வந்துடு" என்றவள், ஒருவேளை உனக்கு கல்யாணம்னா... நடக்க வாய்ப்பு இல்ல தான், அப்படியே ஒருவேளை நடந்துதுன்னா என்னை இன்வைட் பண்ண மறந்துடாத. நீ பண்ணலனாலும் உன் கல்யாணத்தை நிறுத்துறதுக்காகவாவது கண்டிப்பா வருவேன்" என ஒரு இகழ்ச்சி புன்னகையை சிந்தியவளாக அவனை நீங்கி சென்றாள்.

"உன்னை இனி வாழ்க்கையில ஜெயிக்கவே விடமாட்டேன் விஷ்ணு" என்று அவள் உதடுகள் முணுமுணுத்து கொண்டது.

அடுத்த ஒருமணி நேரத்தில் வர்ணிகாவை டிஸ்சார்ஜ் செய்துவிட...வீல் சேரில் இருந்து வெளியே அழைத்து வந்தவர்கள் கார் அருகே நிறுத்தினர்.

பதட்டத்தில் ஒரே காரில் தான் நண்பர்கள் மூவரும் வந்திருந்தனர். அதுவும் விஷ்ணுவின் கார்.

காரை பார்த்தவள் திரும்பி தமக்கையை முறைக்க..."அது பயத்தில்" என பதில் சொல்ல வந்தவளை பார்த்துச் அவள் சொல்ல வருவதை உணர்ந்தவளாய் கைநீட்டி தடுத்தாள்.

உடனடியாக தனது மொபைலை எடுத்து கேப் புக் பண்ண....அதற்குள் விஷ்ணு தனது காரை கிளப்பியவன்,

"வரு...கவின் நீங்க வரிங்களா?.." என கேட்டு நிறுத்த,

நித்யா...தங்கையை பார்க்க, கவின் மனைவியை பார்த்து நின்றான்.

"ஓஹ்....குடும்பம் மொத்தமும் ஒண்ணு சேர்ந்தாச்சு. அப்பறம் நான் எதுக்கு இங்க" என்றவன், காற்றை இழுத்துக்கொண்டு காரில் பறந்துவிட்டான்.

சற்று நேரத்திற்கு எல்லாம் கேப் வந்துவிட... அவர்களும் தங்கள் வீட்டை நோக்கி சென்றனர்.

விஷ்ணு வீட்டிற்குள் நுழைய.... தாய் தந்தை தமக்கை,தங்கை என மொத்த குடும்பமும் ஹாலில் இருந்தனர்.

அதுவரை முகத்தில் இருந்த இறுக்கத்தை வீட்டின் வாசலிலேயே விட்டுவிட்டு புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் விஷ்ணுவர்மன்.

ரவிசந்திரன் தேவகி தம்பதியர்க்கு மொத்தம் மூன்று மக்கள்கள். மூத்தவள் சுபத்ரா திருமணமாகி கணவருடன் இதே சென்னையில் இருக்க...இளையவள் சுமித்ரா திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆகியிருந்தது. அதுவும் சுபத்ராவின் கணவன் மகேஷ்யின் தம்பி வினோத்தை தான் இளையவளுக்கு முடித்திருந்தனர்.

அக்கா தங்கை இருவருமே சிறுவயதில் இருந்தே மிகவும் ஒற்றுமையுடன் வலம் வருபவர்கள்...இப்போது புகுந்த வீடும் ஒன்றாய் அமைந்துவிட, மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

இவர்கள் இருவருக்கும்
நடுவில் பிறந்தவன் தான் விஷ்ணு. சுபத்ரா தம்பி என தாங்க....சுமித்ரா அண்ணன் என தாங்குவாள். மொத்த குடும்பத்தின் சந்தோஷமே அவன் தான்.

இதழ்களில் தவழ்ந்த புன்னகையோடு வந்துகொண்டிருந்த விஷ்ணுவை முதலில் வருண் தான் கண்டுக் கொண்டான். "மாமா" என்ற கூவலோடு ஓடி சென்று மாமனை கட்டிக் கொண்டான் நான்கு வயது சிறுவன், சுபத்ராவின் மகன்.

வருணுக்கு தன் தந்தையை காட்டிலும் மாமனை தான் பிடிக்கும். அவனின் அசைவுகள் ஒவ்வொன்றையும் ஹீரோவை ரசிப்பது போல் ரசிப்பான்.

தன்னை நோக்கி வந்த அக்கா மகனை தூக்கிக் கொண்டவன் சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

"என்ன எல்லாரும் ஒரே இடத்தில இருக்கீங்க...என்ன விசேஷம்" என்றான் வருணை மடியில் அமர்த்திக் கொண்டு.

"ஏன் ஏதாவது விசேஷம்னா தான் அம்மா வீட்டுக்கு வரணுமா" என இளையவள் எப்போதும் போல் வாயாட.

"நான் அப்படி சொல்லலை... நீங்க தான் அப்படி சொல்ல வெச்சிருக்கீங்க. காரணம் இல்லாம வீட்டுப்பக்கம் வரது இல்லை. கூப்பிட்டாலும் ஏதாவது காரணம் சொல்லி சமாளிக்க தான் பார்பீங்க. ஏதாவது விஷேசத்துக்கு மட்டும் வந்து தலையை காட்டிட்டு போக வேண்டியது.அப்போ இப்படி தான் கேட்க முடியும்" என்றான் அவர்களின் செயலை அவர்களுக்கே சுட்டிக்காட்டி.

அவன் சொல்வது உண்மை என்பதால் மேலும் அதனை பற்றி பேச முடியவில்லை. பெண்களாய் பிறந்த அனைவருக்கும் விதித்தது இதுதானே...திருமணம் என்ற ஒன்று முடிந்ததும் தாய் வீடு இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. புகுந்த வீடு முதலிடத்தை தட்டிப் பறித்துவிடுகிறது. அருகே இருந்தாலும் அடிக்கடி வந்து செல்ல முடியாத நிலையில்... விசேஷ நாட்களை எதிர்பார்த்து காத்திருப்பதே... தாய்வீட்டிற்கு செல்லும் ஒரு காரணத்திற்காக தான்.

என்னதான் விளக்கங்கள் சொன்னாலும், ஆண் மகனாய்.... பிறந்தது முதல் வாழ்க்கையின் கடைசி நொடி வரை பிறந்த வீட்டிலேயே முடிசூடா மன்னர்களாக இருக்கும் அண்ணன்களுக்கும் தம்பிகளும் இது அத்தனை சீக்கிரம் புரிவதில்லை.

அவன் கேள்விக்கு பதிலின்றி ஒரு பெருமூச்சோடு விஷயத்திற்கு வந்தாள் சுபத்ரா.

"எல்லாம் நல்ல விஷயம் தான். உன் கல்யாணத்தை பத்தி பேசலாம்னு வந்தோம். பொண்ணு உங்க மாமாவோட தங்கை முறை. ரொம்ப அழகு எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. நீயும் சரின்னு சொல்லிட்டா மேற்கொண்டு பேசலாம்.நல்லா யோசிச்சு சொல்லு" என தம்பியின் பதிலை ஆவலோடு எதிர்பார்த்தாள்.

'கொஞ்சநாள் போகட்டும்...இன்னும் கொஞ்சநாள்' என நேற்றுவரை நாட்களை தள்ளிக்கொண்டு வந்தவன் என்ன பதிலை சொல்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை.

புதிதாக எடுக்கும் முடிவிற்கு தான் யோசிக்க அவகாசம் தேவை...இவன்தான் ஐந்து வருடங்களுக்கு முன்பே முடிவெடுத்து விட்டானே..!

இதில் யோசிக்க ஒன்றுமில்லை என்பதுபோல்... தன் பதிலை அழுத்தி நிதானமாக சொன்னான்...!

இங்கு...காலில் கட்டுடன் வரும் மகளை பார்த்து வர்ணாவின் பெற்றோர்கள் பதறிவிட,

நித்யா பொறுமையாக அனைத்தையும் எடுத்து சொல்லி புரிய வைத்தாள். ஆனால் வர்ணிகா எதற்கும் பதில் சொல்லவில்லை.

"பார்த்து போக தெரியாதா..? எங்கேயாவது பொம்பளை பிள்ளையா லட்சணமா அடங்கியிருந்தா தான, நீதான் யார் சொல்றதையும் கேட்கிறது இல்லையே. எல்லாமே உன் இஷ்டத்துக்கு பண்ணா இப்படி தான்" என தன் பதட்டத்தை குறைப்பதாக எண்ணி அவளை குறை சொல்ல.

"அம்மா....ஆ...போதும் நிறுத்துங்க. இப்போ இந்த ஆக்சிடென்ட்க்கும், நான் உங்க பேச்சை கேட்காததுக்கும் என்ன சம்மந்தம். எதை எதோடு கம்பேர் பண்றீங்க?..
ஏமா இப்படி இருக்கீங்க?.." என வார்த்தையை கடித்து துப்பியவள், யாருக்கும் விளக்கம் கொடுக்க பிடிக்காமல்,

நித்யாவின் துணையோடு சென்று மெத்தையில் விழுந்தாள்.

காலையில் இருந்து நடந்தது அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வர, கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டு அதிலிருந்து வெளிவர முயன்றாள்.

விஷ்ணுவின் அறையில்... தன் எதிரே ஓவியமாய் வீற்றிருக்கும் பெண்ணவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்று எதிர்பாராமல் அவளை சந்திக்க நேரிடும் என்று அவன் நினைக்கவே இல்லை.
அப்படியிருக்க....இன்று வெகுநாட்கள் கழித்து அவளை பார்த்திருக்கிறான், ஆனால் அதில் மகிழ்ச்சி கொள்ளத்தான் முடியவில்லை.

தன்னை காயப்படுத்த வேண்டும் என்றே அவள் சொன்ன வார்த்தைகள்...மீண்டும் மீண்டும் காதுக்குள் ரிங்காரமிட..."உனக்கு மட்டும் ஏன் என்னை பிடிக்கலை பேபி" என்ற வலி மிகுந்த கேள்வி எப்போதும் போல் இன்றும் அவனை துரத்தியது.


நான் அறிந்திடாத...
அறிய துடிக்கும்
அனைத்தையும், உன்னிடம் கற்றிடவே ஆசைக் கொள்கிறேன் பெண்ணே...
நீ முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்திய தோல்வியை போலவே...!





மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்
 
Status
Not open for further replies.
Top