இனிக்கும் விஷம் நீயடி
அத்தியாயம் 1
மதுரை மாவட்டம் திருவிழாவுக்கு பேர் போன ஊர்! சோழவந்தான் அருகே கச்சிராப்பு கிராமம் அய்யனார் சுவாமி, ஊர்காவலன் சுவாமி, கோடிப்புலி கருப்புசாமி திருவிழா கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது. அங்கே குதிரை எடுப்பு திருவிழா பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருந்தது.
அங்காளி, பங்காளி, மாமன், மச்சான் என்று அனைத்து வீடுகளிலும் சொந்தங்கள் வரிசை கட்டி நிரம்பி வழிந்தது... புரவி எடுப்பவர் ஏழு நாளும் விரதம் இருப்பார்கள்... வண்ண கோலங்கள் வாசலை நிறைத்து போட்டிருந்தனர் வீட்டுப் பெண்கள்... குழந்தைகளும் விளையாட்டு சத்தமும், குமரிகளின் சிரிப்பும் ஒவ்வொரு வீட்டிலும் கடல் அலை போல எதிரொலித்துக்கொண்டிருந்தது.
அந்த ஊர் நட்டாமைக்குடும்பம் வீரய்யன் நாச்சியம்மாள் பரம்பரை பணக்காரர்கள்... நெல், கரும்பு, வெற்றிலை தோட்டம் என கண்ணுக்கெட்டும் தூரம் அவர்களுக்கு சொந்தமான பூமி... வீரய்யனுக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் நரைத்த மீசையை முறுக்கிக்கொண்டு நிற்பார்... அந்த வீட்டில் பெண்களை தெய்வமாக மதிப்பார்கள்.
வீரய்யன் குடும்ப விசயத்தில் நாச்சியை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டார்... அவ்வளவு அன்னியோன்யமான தம்பதிகள் இருவரும்... அவர்களது மகன் ஐய்யனார் வீரய்யனுக்கு பிறகு இந்த ஊர் நாட்டாமை பதவியை ஏற்றுக்கொண்டார்... எந்த ஊரில் பஞ்சாயத்து என்றாலும் ஐய்யனாரை கூப்பிடாமல் நடத்தமாட்டார்கள்... அவரது பேச்சு வெட்டு ஒன்று துண்டு என்று இருக்கும்... ஐய்யனாருக்கு பாதுகாப்பாய் அவரது மகன் துரைசிங்கம் அருவாளை வைத்துக்கொண்டு கருப்ப சாமியை போல நிற்பான்... நம் கதையின் நாயகன் துரைசிங்கத்தை மீறி ஐய்யானாரின் முடியைக்கூட தொட முடியாது... அப்படி தொட நினைத்தால் அவர்களின் கை வெட்டுப்பட்டு நிலத்தில் விழுந்துவிடும்...
துரைசிங்கம் பெயரை கேட்டாலே அந்த ஊர் மக்களுக்கு கொஞ்சம் பயம் வரும்தான்... தவறு செய்பவர்களுக்கு கருப்பசாமியாய் நின்று தண்டனை கொடுப்பான் துரைசிங்கம்... குடித்துவிட்டு வீதியில் ஆட்டம் போட்டால் அவர்களின் கைகளை உடைத்து புத்தூர் கட்டு போட வைத்து விடுவான் தன் சொந்த செலவில். அதே சமயம் அவன் மீசையை முறுக்கி ராயல் என்ஃபீல்டை ஓட்டும் அழகில் அந்த ஊர் பெண்கள் பார்த்து மயங்காமல் இருந்ததில்லை.
இளவட்ட பசங்க பஸ்ஸ்டாப்பில் பெண்களிடம் வம்பு இழுத்துவிடுவான்களென்று காலையில் பஸ் ஸ்டாப் பக்கம் வண்டியை விட்டு விடுவான் துரைசிங்கம். அவன் ஊருக்கு மட்டும் காவலன் கிடையாது பெண்களுக்கும் பாதுகாப்பு கவசமாக இருப்பவன் துரைசிங்கம்...
இப்படித்தான் அந்த ஊருக்கு புதிதாய் வந்த போஸ்ட் மாஸ்டர் மகன் காலேஜ் போகும் பெண்களிடம் வம்பு இழுத்துக்கொண்டிருந்தான்... பக்கத்து ஊருக்கு பஞ்சாயத்துக்குச் சென்றவன் அந்த வழியே வந்ததும் வேகமாய் வண்டியை விட்டு இறங்கியவன் வம்பு செய்துக் கொண்டிருந்தவன் சட்டையை இழுத்து பிடித்து எலும்பை எண்ணிவிட்டான்.
போஸ்ட் மாஸ்டர் துரைசிங்கம் காலில் விழுந்து “என் மகன் இனிமே பொண்ணுங்களை கிண்டல் பண்ணமாட்டான்” கெஞ்சியதும்தான் அவனை விட்டான் துரைசிங்கம்
"இனிமேல் இவன் கண்ணு எங்க ஊரு பொண்ணுங்க மேல தப்பா விழுந்துச்சு!! கண்ணை நோண்டி எங்க ஊரு வைகை ஆத்துல போட்டிருவேன்” என்று மீசையை முறுக்கி சட்டை காலரை இழுத்து விட்டுக்கொண்டு ஆத்திரம் அடங்காதவனாக நின்றிருந்தான்.
என் மகனை இந்த ஊருக்காக வளர்த்திருக்கேன் என்று மார்த்தட்டிக்கொள்வார் ஐய்யனார்.
துரைசிங்கத்துக்கு தும்பை பூ வெள்ளை சட்டையும், ப்ளு ஜுன்ஸும்தான் அவனின் பிரத்யேக உடை... ஏதாவது விசேஷம் என்றால் பட்டு வேஷ்டி, பட்டு சட்டைதான் போடணும் என்று நாச்சியாரின் ஆணை வந்து விழும். நாச்சியாருக்கு செல்லப்பேரன் துரைசிங்கம்தான்... குமரனிடம் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார் நாச்சி. இப்போதும் பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழாவில் எதிரி ஊர்காரர்கள் தங்களது திருவிழாவில் அசம்பாவிதம் ஏற்படுத்திவிடுவார்கள் என்று கண்கொத்தி பாம்பாக கோவிலையே சுத்தி வந்துக் கொண்டிருக்கிறான் நம் நாயகன் துரைசிங்கம்.
ஆறடிக்கும் கொஞ்சம் அதிகம் உயரமானவன்! பச்சை முட்டையும், கறியும், மீனும் சாப்பிட்டு உடலை திடகாத்திரமாக வைத்திருக்கும் கட்டிளம் காளை... எதிரிகளை தன் பார்வையால் அஞ்சி நடுங்க வைப்பான்... பத்து பேர் அரிவாளோடு வந்து நின்றாலும் அசராது சுத்தி சுத்தி பேசும் அவன் கையில் இருக்கும் அரிவாள்... அவனிடம் முன்னே நின்று பேசவே பயந்து நடுங்குவார்கள் அவர்கள் வீட்டில் இருப்பவர்களே! குமரனோ “அண்ணா” என்று பேச்சோடு நிறுத்திக்கொள்வான்... ஆனால் தம்பிக்கு என்ன தேவையென்று அறிந்து அடுத்த நிமிடம் செய்துவிடுவான்... இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ள மாட்டார்கள்.
துரைசிங்கம் சிரித்து பேசுகிறான் என்றால் அது வீரய்யனிடம் மட்டுமே!! அதுவும் அவனது சிரிப்பு அளவெடுத்து தான் இருக்கும். நாச்சியார் பேச்சை கேட்பான்! துரைசிங்கம் தினமும் வெளியேபோகும் முன் அவனது தாய் கோமதியின் காலில் விழாமல் கூட இருந்து விடுவான்!! ஆனால் நாச்சியார் காலில் விழாமல் எந்த பஞ்சாயத்திற்கும் போகமாட்டான் துரைசிங்கம்.
துரைசிங்கம் கண்ணிலும் மண்ணைத்தூவ காத்துக்கொண்டிருந்தார் ஒருகாலத்தில் ஐய்யனாரின் நண்பனாக இருந்து அவரது குடும்பத்திற்கே துரோகம் செய்து விட்ட ஆதிபெருமாள்.
நாச்சியோ "ஏத்தா மருமகளே என்ற மூத்த பேராண்டி எங்கன காலையிலிருந்து என் கண்ணுலயே படலயே!" என்றார் வெத்தலையை மென்றபடி.
"உங்க பேரன்தானே இன்னிக்கு திருவிழாவுல யாரும் தண்ணியை போட்டுக்கிட்டு வம்பிழுப்பானுக அவனுங்க சுளுக்கு எடுக்கணும்னு வெள்ளனவே கிளம்பி போய்ட்டானுங்க அத்தை! "
"சின்னவன் குமரன் எங்கன அவனையும் காணோமே அங்காளி பங்காளி வந்திருக்காங்க அவங்களை வரவேற்கணும்ல" என்றார் இழுவையாக.
"சின்னவன் தோட்டத்துக்கு வாழை இலை அறுக்க போயிருக்கான் அத்தை இதோ வந்துட்டான் பாருங்க" என்றபடியே சமையல்கட்டுக்குள் சென்றார் ஐய்யனாரின் மனைவி கோமதி.
"என்னடா சின்னவனே சாப்பாடு போடுற இடத்தில சலசலப்பு கேட்குது பாரு!! அங்கன என்ன வேணும்னு கேட்டு சொந்தங்களை கவனி பேராண்டி" என்றார் காதில் போட்டிருந்த பெரிய லோலாக்கு ஆட
"எனக்கு தெரியும் அப்பத்தா! நீ முகத்தை ஆட்டாத! உன் காதில் போட்டிருக்க தோடு அவிழ்ந்து விழுந்துடும் போல" என்று அவன் கேலி பேசி சிரித்தபடி வாழை இலையோடு பந்தி நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
"டேய் லந்தா பேசுறியா... என் பெரிய பேரன் வரட்டும் அவன்கிட்ட சொல்லி இதை விட பெரிய தோடா வாங்கி மாட்டுவேன்... உன்னை பத்தி ரெண்டு வார்த்தை அதிகமா அள்ளி வீசுறேன் பாரு" என்றார் காரை பல்லைக்காட்டி சிரித்து.
பந்தியை சரி பார்த்துக்கொண்டிருந்த குமரன் காதில் நாச்சியார் பேசியது கேட்டுவிட்டது. "சாப்பிடுங்க மாமா இதோ வரேன்" என்று நாச்சியாரிடம் வந்தவன் "அப்பத்தா நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்! சும்மா உன்கிட்ட விளையாடினேன்! நானே உனக்கு பெரிய தோடா வாங்கித்தரேன் அண்ணாகிட்ட என்னை எக்குதப்பா சொல்லிடாதே" அவர் முன்னே மண்டியிட்டான்.
"அப்படி வாடா பொடிப்பயலே என்னையே நீ பரிகாசம் பண்ணி சிரிக்கறவன்.. இன்னும் எதாவது என்கிட்ட கிறுக்குத்தனம் செய்தா உன் காதல் விவகாரத்தை உன் அண்ணன்கிட்ட சொல்லிபுடுவேன்" என்றார் தலையை ஆட்டிக்கொண்டே
"அப்பத்தா நான் உன் காலுல விழுந்துட்டேன் ஐ ஆம் சரண்டர்" என்று சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டான்.
"என்னடா சின்ன பேராண்டி இப்பவே உங்க அப்பத்தா காலுல விழற... நான்தான் தினமும் அவ காலுல விழறேன்" என்று நரைத்த மீசையை முறுக்கிக் கொண்டு வந்தார் வீரய்யன்.
"நல்லவேளை தாத்தா நீங்க வந்தீங்க! உங்க சம்சாரத்தை எப்படித்தான் சமாளிக்குறீங்களோ" என்று தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து பந்தியை பார்க்கச் சென்று விட்டான்.
நாச்சியார் முகத்தில் ஒரு இனம் புரியாத கலவரம் இருந்ததை கண்ட வீரய்யனோ "என்ன நாச்சி திருவிழாவுல ஏதாவது அசம்பாவிதம் நடந்திரும்னு நீ பயப்படறியா! நம்ம சிங்கக்குட்டி பேராண்டி இருக்கும்போது நீ கலங்குவது சரியில்லடி" என்றார் மீசையை தடவிக்கொண்டு
"என் பேரன் சிங்கம்போல தனியா நின்று எதிரியை தொடை நடுங்க ஓட வைப்பானு எனக்கு தெரியும்... ஆனா என் மனசு சரியில்லைங்க ஏதோ வெடவெடனு வருது... வெளியில சிரிக்குறேன்... உள்ளுக்குள்ள தவிப்பா இருக்கு என் சிங்கத்துக்கு ஒரு கால் கட்டு போட்டுடணும்... உங்க பேச்சுக்கு மட்டும்தான் சிங்கம் கட்டுப்படுவான்!" கணவனின் கையை பிடித்துக்கொண்டு "திருவிழா முடிச்சதும் நம்ம துரை சிங்கத்துக்கும் அலர்விழிக்கும் கல்யாணத்தை பண்ணிடலாம்" என்றார் நாச்சியார்.
"ஏலேய் பக்கத்து ஊருல பல வருசமாக நடக்காத இருந்த ஊர் திருவிழா இந்த வருசம் நடக்குதே! திருவிழால கலாட்டா பண்ணாம இருந்தா எப்படிடா! என்னை அவங்க ஊருக்குள்ள கோமணத்தோட ஓட ஓட விரட்டி அடிச்சு அனுப்பினதை நான் மறந்துருவேனா! என்ன? இப்போ ஊர் திருவிழாக்குள்ள கலாட்டா பண்ணுங்க! எவனாவது ஒருத்தன் கையை வெட்டிக்கொண்டு வாங்க நான் பேரானந்தம் படுவேன்" என்று வன்மம் கொண்டு கைகளை அகல விரித்து சிரித்தார் ஆணவத்தில்.
ஆணவத்தில் ஆடியவர்கள் இந்த அகிலத்தில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை ஆதிபெருமாள்.
ஆனால் ஆதிபெருமாளின் ஆட்களில் ஒருவன் தலையை சொறிந்துக் கொண்டு கையை கட்டி ஆதி பெருமாளின் முன்னே தலைகுனிந்து "ஐயா திருவிழா நடக்குற இடத்துல ஐய்யனார் மகன் துரைசிங்கம் இருப்பாரே!! அவரை மீறி நம்மாள ஒரு துரும்பை கூட அசைக்க முடியாதுங்க" என்றான் எச்சிலை விழுங்கிக்கொண்டு
"துரைசிங்கம்!! துரைசிங்கம்!! அவனுக்கு என்ன பெரிய கொம்பா முளைச்சிருக்கு... என்னை கறுவறுத்த குடும்பத்துல அத்தனை பேரையும் காவு வாங்காம விடமாட்டேன் இந்த ஆதிப்பெருமாள்" என்று தொடை தட்டினார் ஆதிப்பெருமாள்.. அங்கே காபி கப்புடன் வந்த கோதையை பார்த்து "எல்லாம் இவளால வந்தது" என்று சினம் கொண்டு ஆத்திரத்துடன் கோதையின் கையிலிருந்த காபி கப்பை வாங்கி சுவற்றில் விசிறி அடித்தார் ஆதிபெருமாள். காபி கப் சுக்கு நூறாக நொறுங்கியது
"என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது அந்த கிராமத்துல ஊர் திருவிழா நல்லபடியா நடக்ககூடாது" என்றார் ஆதிபெருமாள் கருப்பன் சக்தி அறியாமல்
தந்தையின் ஆணவ கோபத்தை கண்ட ஆதிபெருமாள் மகன் பொன்வண்ணனோ 'இவரு ஏன் காட்டு மிராண்டியா இருக்காருனு தெரியலையே' என்று தலையை குலுக்கிக்கொண்டுச் சென்றான்.
பொண்வண்ணன் டாக்டராக இருக்கிறான்... ஆதிபெருமாளின் குணம் இவனிடம் இல்லை... அன்பே உருவான கோதையின் அம்சம் பொண்வண்ணன்.
இதோ வானவேடிக்கைகள் வெடிக்கத் தொடங்கியது... புரவிக்கு கண்திறந்து சுமந்துச் சென்றனர்... கிராமத்து மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கருப்பசாமியாக துரைசிங்கம் கழுத்தில் ரோஜாப்பூ மாலையோட கையில் அருவாள் ஏந்திக் கொண்டு நாக்கை கடித்துக்கொண்டு “ம்ம்” உறுமல் போட்டு அருளோடு நடந்து சென்று அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு தோளை உலுக்கிக் கண்ணை அகல விரித்து பார்ப்பவர்கள் பயந்து நடுங்கும் விதமாக இருந்தான் துரைசிங்கம்.
இதில் பாட்டு கச்சேரி நடத்துபவர்கள் குழுவும் இவர்களுடன் நடந்து வந்தது.
கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி
கார்மேகம் போலே வாரான் கருப்பசாமி.
முன்கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி
முன்கோபக்காரன் வாரான் கருப்பசாமி.
சாய்ந்த கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி
சாஸ்தா காவல்காரன் வாரான் கருப்பசாமி.
பம்பை பாலன் காவல் காரன் கருப்பசாமி
பதினெட்டாம் படி காவல் கருப்பசாமி.
சந்தனப் பொட்டுக்காரன் கருப்பசாமி
சபரிமலைக் காவல்காரன் கருப்பசாமி.
சல்லடையைக் கட்டி வாரான் கருப்பசாமி
சடைமுடிக்காரன் வாரான் கருப்பசாமி.
கச்சையைக் கட்டி வாரான் கருப்பசாமி
கை அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி.
மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமி
முச்சந்தியில் நடந்து வாரான் கருப்பசாமி.
பாடிக்கொண்டு வர... கூட்டத்தில் ஆதிபெருமாளின் ஆட்களும் நுழைந்து விட்டனர்... துரைசிங்கத்திடம் கூட தப்பித்து விடலாம் கருப்பசாமியிடம் தகராறு பண்ண வந்தவர்களை கருப்பு விடுமா..! இதோ அத்தனை கூட்டத்திலும் கருப்பு ஆடுகளை கண்டு ஒவ்வொருவரையும் பிடித்து தள்ளி விடுவதிலே அவனது கைகால்கள் இருக்கும் இடம் தெரியாது மாறிப்போனது.
“கருப்பன்டா நான் என்னைய மீறி இங்க எதுவும் நடக்காது” என்று துள்ளிக்குதித்து ஆடினான்... அந்த ஊரை காக்கும் கருப்ப சாமியான துரைசிங்கம்.