ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 8

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 8

இதே சமயம் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தான் சிம்மரசபாண்டியன்...

அவனுக்கு அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்ததால் என்னவோ வீட்டுக்கு வந்து சேரவே ரொம்ப தாமதமாகி விட்டது...

'வீட்ல விட்டுட்டு வந்தேன், என்ன எல்லாம் பண்ணி வச்சாளோ' என்று நினைத்துக் கொண்டு தான் உள்ளே நுழைந்தான்...

எல்லாரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்...

நேரத்தைப் பார்த்தான், மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது.

'தூங்கி இருப்பா போல' என்று நினைத்தபடி அறைக்குள் செல்ல, அவளைக் காணவில்லை...

எல்லா இடமும் அறைக்குள் தேடினான்...

ஆள் இருக்கும் அரவமே இல்லை.

'ஒரே நாளுல ஓடிட்டாளோ?' என்று நினைத்தபடி அவன் வெளியே வந்த கணம், அங்கே பணிப்பெண் ஒருத்தி நடந்து செல்வது அவன் கண்ணில் பட்டது...

"ராகினி எங்க?" என்று கேட்டான்...

"அம்மா வறட்டி தட்ட விட்டு இருக்காங்க" என்றாள்.

'வறட்டி தட்டுறாளா? என்ன பண்ணி தொலைச்சாளோ?' என்று நினைத்தபடி உடை கூட மாற்றாமல் அவளை தேடி சென்றான்.

அவளோ, தூக்க கலக்கம் ஒரு பக்கம், சாணம் எல்லாம் அவள் மேனியில் அப்பி இருந்த கோலம் இன்னொரு பக்கம் என்று களைத்து களைத்து, பாடிப் பாடி வறட்டி தட்டினாள்.

"ஒரு தென்றல் புயலாகி வருதே" என்று தான் அந்த பாடல் இருந்தது...

அவனுக்கு சிரிப்பும் வந்து விட்டது...

அவளை கண்காணிக்க அங்கே ஒரு பணிப்பெண் வேறு...

அவ்விடம் வந்த சிம்மனோ, பணிப்பெண்ணிடம் செல்லும் படி சைகை செய்து, விட்டு, ராகினி அருகே வந்தான்...

அவள் அவனை ஒரு கணம் பார்த்து விட்டு, "ரொம்ப சந்தோஷமா இருக்குமே" என்று கடுப்பாக கேட்டாள்.

அவனோ இதழ் பிரித்து சிரித்தபடி, "வறட்டி தட்டுற அளவுக்கு என்ன தப்பு பண்ணுன?" என்று கேட்டான்...

அவளும் கடுப்பாக, புடவையை இழுத்து சொருகிக் கொண்டே, "முறுக்கை நீளம் நீளமா சுட்டேன்... நாலு பேர் நான் வேலை செய்யலன்னு போட்டு கொடுத்தாங்க, இது ரெண்டுக்கும் சேர்த்து வறட்டி தட்ட சொல்லிட்டாங்க உங்க அம்மா, இதெல்லாம் ஒரு காரணமா?" என்று எகிறினாள்.

அவனுக்கே அவள் நின்ற கோலத்தைப் பார்க்க பாவமாக இருந்தது...

"ஓகே ரிலாக்ஸ், உள்ளே வா" என்றான்...

"இல்ல பதினொரு மணிக்கு தான் வருவேன்" என்றாள்.

"அது தான் அந்த பொண்ண அனுப்பிட்டேன் ல, யாரும் போட்டு கொடுக்க மாட்டாங்க உள்ளே வா" என்றான்.

"நான் என்ன அந்த பெண்ணுக்காக வறட்டி தட்டுனேன்னு நினைச்சீங்களா? என் நேர்மையை காட்ட வறட்டி தட்டுனேன்" என்றாள்.

"இந்த நேர்மையை வீட்டு வேலைல காட்டி இருந்தா இப்படி வறட்டி தட்ட விட்டு இருக்க மாட்டாங்க" என்றவனை யோசனையாக பார்த்தவள், "நாளைல இருந்து பாருங்க" என்றாள்.

"சரிடி வாடி" என்றான்...

"இல்ல நான் பதினொரு மணிக்கு தான் வருவேன்" என்றாள்.

"ஹேய் ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கு எனக்கு" என்றவனிடம், "உங்கள நான் நிற்க சொல்லவே இல்லையே" என்றான்.

"ஆஹ் விட்டு போக மனசு இல்லாம இருக்கு, நீ எகிறும் போது கோபமா வருது, இப்படி வேலை பார்க்கும் போது பாவமா இருக்கு, என் மனசு ஏன் தான் இப்படி இருக்கோ" என்று புலம்ப, அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், "ஐ திங்க் யூ லவ் மீ" என்றாள்.

"கொஞ்சம் பேசுனா ஓவரா தான் துள்ளுற, அதெல்லாம் ஒன்னும் இல்ல, சும்மா ஒரு பரிதாபம் தான்" என்றான்...

"பரிதாப படுற அளவுக்கு என் நிலைமை மோசமா போகல, ஆறு மாசம் அப்புறம், பத்து கோடி கைல வந்திடும், அப்புறம் என்னை பாருங்க" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் வறட்டியை தட்ட, 'இவ இந்த காலத்துல வர மாட்டா போல' என்று நினைத்துக் கொண்டே, அங்கே சாய்ந்து நின்றான்...

பதினொரு மணிக்கு தான் அவள் வேலையை முடித்து இருந்தாள்.

நேரத்தைப் பார்த்தவன், "சரி வா" என்று அவளை அழைக்க, அவளும் கைகால்களை கழுவிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவள், "ரொம்ப நாறுதா என் கிட்ட?" என்று கேட்டாள்.

"ஷாருக்கானை விட வாசம் கம்மி தான்" என்று அவன் சொல்ல, அவளுக்கு இப்போது தன்னை மறந்து சிரிப்பு வந்தது...

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே நடந்தாள்.

அறைக்குள் வந்ததுமே, "நீ இங்க குளி, நான் பக்கத்து ரூம் பாத்ரூம் ல குளிச்சிட்டு வர்றேன்" என்று சொல்லி விட்டு, அவன் டவலை எடுத்துக் கொண்டே சென்று விட்டான்...

குளியலறைக்குள் நுழைந்தவளுக்கு, நன்றாக தேய்த்து குளித்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது...

'நாளைக்கு சரியா வேலை பார்த்துடனும், இந்த வறட்டி தட்டுறதை விட, இந்த வேலை எல்லாம் பெட்டர்' நினைத்துக் கொண்டவள், வெளியே வந்தாள்.

'இந்த புடவையை கட்டி முடியல, கொஞ்சம் ஃப்ரீயா படுக்கணும்' என்று நினைத்தபடி குட்டி ஷார்ட்ஸ் மற்றும் கையில்லாத டீ ஷேர்ட்டை போட்டவள், அப்படியே மல்லாக்க விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் தூக்கமும் வந்து சேர்ந்தது...

குளித்து விட்டு அறைக்குள் வந்தவனுக்கு அவளை பார்த்ததுமே புரையேறியது.

அவன் கண்கள் வேறு அவளை கண்ட மேனிக்கு ரசிக்க ஆரம்பித்து விட, "ச்ச நம்மள நல்லவனா இருக்கவே விட மாட்டா போல' என்று நினைத்துக் கொண்டு போர்த்து விட்டான்...

"பச்" என்றபடி போர்வையை அவள் தூக்கத்திலேயே உதறி விட்டாள்.

'இவ சரிப்பட்டு வர மாட்டா, தள்ளி படுக்கிறது தான் நமக்கு நல்லது' என்று முணுமுணுத்துக் கொண்டே சோஃபாவில் படுத்துக் கொண்டான்...

அடுத்த நாள் காலையில் நேரத்துக்கே எழுந்த ராகினியோ கோலம் போட சென்று விட்டாள்.

வித்யா தாமதமாக தான் வந்தாள்.

'அட இவ கோலம் போடுறாளே, திறப்பு இவ கைக்கு போயிடுமோ' என்று யோசித்துக் கொண்டே, வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட, அங்கே வந்த நீலாம்பரி அவளை ஒரு கணம் பார்த்து விட்டு கடந்து இருந்தார்...

ஆனால் அவளுக்கு ஒழுங்காக கோலம் போடவும் தெரியவில்லை...

'பிராக்டிஸ் மேக்ஸ் பேர்ஃபெக்ட்' என்று தனக்கு தானே சொல்லி விட்டு சென்று விட்டாள்.

அடுத்து சமையலறைக்குள் சென்று காஃபி போட்டாள்.

அதனை எடுத்துக் கொண்டே அறைக்குள் சென்றவளோ, சோஃபாவில் படுத்து இருந்த சிம்மனின் காலை தொட்டு வணங்கி, "மாமா" என்றாள்.

பதறி எழுந்தவன், அவளை அதிர்ந்து பார்க்க, "காஃபி" என்று நீட்டினாள்.

"இன்னைக்கு என்னாச்சு?" என்று அவன் கேட்க, "பத்து கோடிக்கு சரியான சேர்விசை கொடுக்க நினச்சு இருக்கேன்" என்று சொல்லி விட்டு வெளியேற, தலையை உலுக்கிக் கொண்டான் அவன்...

நீலாம்பரிக்கு கோலத்தை பார்த்ததுமே சுர்ரென்று கோபம் வந்தது...

ஆனால் அவள் விழுந்து விழுந்து வேலை செய்வதை பார்த்தவர் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டார்...

காந்தினியும் வனிதாவும், "என்னடி இது இன்னைக்கு புதுசா வேலை பார்க்கிறா?" என்று கேட்க, "எனக்கும் அது தான் அதிர்ச்சியா இருக்கு" என்றாள் அடுத்தவள்...

தொடர்ந்து வேலை செய்து களைத்த ராகினி குளிர்சாதன பெட்டியை திறந்தாள்.

அங்கே இருந்த விஸ்கி அவளை 'வா வா' என்று அழைத்தது...

வாங்கும் காசுக்கு நியாயமாக இருக்கின்றேன் என்று இடுப்பு ஒடிய வேலை பார்த்தவளுக்கு கையை அடக்க முடியவில்லை... சுற்றும் முற்றும் பார்த்தாள், யாரும் இல்லை.

சட்டென எடுத்து, வாய்க்குள் கெழித்து ஊற்றியவளோ, அதனை வைத்து விட்டு நடக்க முயன்றாள்.

கால்கள் கொஞ்சம் தடுமாறின, "ஸ்டெடி ராகினி ஸ்டெடி" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு நடந்தாள்.

அவ்விடம் வந்த வித்யாவோ, "என்ன ஒரு மாதிரி வாசனை வருது" என்று சொல்ல, சட்டென புடவை முந்தானையால் வாயை மூடிய ராகினியோ, "ஐயோ வாந்தி வருது" என்று என்னென்னெவோ சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.

ஏதோ ஒரு ஆர்வத்தில் எடுத்து குடித்து விட்டாள்.

இப்போது நடக்கவும் முடியவில்லை ராகினியால்...

அறைக்குள் சென்று படுக்கவும் முடியாது...

'அவசர பட்டு குடிச்சு இப்படி சிக்கிட்டியே' என்று நினைத்துக் கொண்டே, அங்கே அமர்ந்து நிலத்தை சும்மா துடைத்துக் கொண்டு இருந்தாள்.

அன்று சிம்மன் வேலைக்கு செல்லவில்லை...

தாமதமாக செல்வதாக தான் நினைத்து இருந்தான்...

ஹாலில் அமர்ந்து லேப்டாப் பார்த்துக் கொண்டு இருந்தான்...

அங்கே தான் அமர்ந்து இருந்த பரஞ்சோதியோ, எழுந்து சமையலறைக்குள் சென்றார்...

அவருக்கும் உடல் வலி இருக்க, கொஞ்சம் குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது...

குளிர்சாதன பெட்டியை திறந்து விஸ்கி பாட்டிலை எடுத்தார்...

அடிவரை குறைந்து இருந்தது...

'நேத்து இவ்ளோ நான் குடிக்கலையே' என்று நினைத்துக் கொண்டே மீண்டும் ஹாலுக்குள் வந்து அமர்ந்தவரோ, கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டு இருந்தார்.

"நேத்து பிரிட்ஜ் ல வச்ச விஸ்கில பாதியை காணோமே" என்று அன்றைய பஞ்சாயத்தை ஆரம்பித்து இருந்தார் பரஞ்சோதி.

நிலத்தை துடைத்துக் கொண்டு இருந்த ராகினியின் விழிகள் விரிந்து பின் சுருங்க, 'ஐயையோ' என்று சொல்லிக் கொண்டு எழுந்தவள், தட்டு தடுமாறி அறைக்குள் நுழைய போனாள்.

சிம்மனோ அவர் சொன்னதையும் கவனித்தான், ராகினி எழுந்து சென்றதையும் கவனித்தான், அவள் நடையில் இருந்த தடுமாற்றத்தையும் கவனித்தான்.

ஒரு உஷ்ண பெருமூச்சுடன் குரலை செருமிக் கொண்டே, "நான் தான் தாத்தா எடுத்தேன்" என்றான்.

அவரும், "அப்போ சரிப்பா" என்று சொல்ல, லேப்டாப்பை அங்கேயே வைத்து விட்டு எழுந்தவன் ராகினியை தொடர்ந்து அறைக்குள் சென்றான்...

அவளோ, 'சிக்கிட்டேன்' என்று முணுமுணுக்க, அறைக் கதவை தாளிட்டு விட்டு, அவளது கையை பற்றி சுவரில் சாற்றி அவளை எரித்து விடுவது போல பார்த்தான்.

அவளோ, குரலை செருமிக் கொண்டே அவனை பார்க்க, "எதுக்குடி சரக்குல கை வச்ச ?" என்று அதட்டலாக கேட்டான்.

"நான் இல்ல" என்றாள் மென்மையாக.

"இந்த நடிப்பு எல்லாம் என் கிட்ட வச்சுக்காதே, வாயை திறந்தாலே கப்படிக்குது" என்றான்.

அவளோ, "டெய்லி வேலை பார்த்து இடுப்பெல்லாம் வலிக்குதே" என்றாள் வராத மென்மையை குரலில் வரவழைத்துக் கொண்டே. "குடிகாரி குடிகாரி" என்று அவன் திட்ட, முஷ்டியை மடக்கி அவன் முகத்திலேயே குத்தினால் என்ன என்கின்ற எண்ணம் தான்.

அடக்கிக் கொண்டே மென்மையாக சிரித்தவள், "மூஞ்சுக்கு நேரே புகழாதீங்க மாமா" என்றாள்.

"சிரிக்காதே, குடிச்சிட்டு தள்ளாடி தள்ளாடி நடக்கிற... சிக்கினா சின்னா பின்னமாகிடுவ" என்றான்...

"நான் அவ்ளோ லாம் குடிக்கல, கொஞ்சமா" என்று சொல்லிக் கொண்டே, இதழ் குவித்து அவன் முகத்தில் ஊத, அவனுக்கு மதுவின் வாசம் போதையேற்றிதை விட, பெண்ணவள் இதழ்களில் இருந்து வந்த சுவாசம் போதையேற்றி இருக்க வேண்டும்...

குரலை செருமிக் கொண்டே விலகி நின்றவன், "இப்படியே போய் சிக்கிடாம, கொஞ்சம் படு, அம்மா ஈவினிங் தான் வருவாங்க" என்றான்...

"ஐயோ வேலை செய்ய வேணாமா?" என்றாள்.

"ஒன்னும் கிழிக்க தேவலை, படு" என்று சொல்லி அவளை இழுத்து கட்டிலில் போட, அவளுக்கும் மயக்கம் தான்...

அப்படியே தலையணையை அணைத்துக் கொண்டே தூங்க ஆரம்பித்து விட்டாள்.
 

CRVS2797

Active member
வில்லாதி வில்லி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 8)


கொஞ்சம் கையை, காலை, வாயை இவ அடக்கி வைக்கலைன்னா..... சிம்மா
தன்னோட கன்ட்ரோலை லூசுல விட்டுடப் போறான். இது தேவையா ராகினிக்கு....
அப்புறம் மொத்த டேமேஜ்ஜூம்
இவளுக்குத்தான்...
ஸோ, பீ கேர் ஃபுல்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top