ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 8

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 8

அவனுக்கு இப்போது தான் சற்று நிதானமே வந்தது...

அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தவனோ, "ராது" என்று ஆரம்பித்த கணமே, அவனை வெறித்துப் பார்த்தவளுக்கு சட்டேன்று கண்ணீர்...

அழுகையும் வந்து விட்டது...

கண்ணீரை துடைத்து விட்டு அவனை முறைத்துப் பார்த்தவள், விறு விறுவென நடக்க தொடங்கி விட்டாள்...

"மட்ட பிஸ்ஸு" (எனக்கு பைத்தியம்) என்று தனக்கு தானே திட்டி விட்டு அவளை பின் தொடர்ந்து சென்றான்...

பேச எத்தனிக்கவில்லை.

பேசினால் கோபப்பட்டு அழுவாள் என்று தெரியும்...

அவளும் ஜீப் அருகே வந்தவள் பின்னால் தான் ஏறிக் கொண்டாள்.

அவன் எதுவும் கேட்கவில்லை...

ஜீப்பை கிளப்பி இருந்தான்...

ரியர் வியூ மிர்ரர் ஊடாக பார்த்தான்...

வெளியே வெறித்தபடி அமர்ந்து இருந்தாள்...

இந்த அதிரடி முத்தத்தை அவளுக்கும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவனுக்கும் தெரியும்...

கொஞ்சம் அவசரபடாமல் இருந்து இருக்கலாமோ என்று இப்போது தோன்றியது...

ஆனால் என்ன செய்வது அவன் உணர்வுகளை அவள் முன்னிலையில் அடக்குவது அவனுக்கு இயலாத காரியம் ஆகி விட்டதே...

நேரத்துக்கே அலுவலகத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்...

அவளோ எதுவும் பேசாமல் இருக்கையில் அமர்ந்து விட, அவனும் அவளை ஒரு கணம் பார்த்து விட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன... தனது இருக்கையில் அமர்ந்து நீண்ட நேரம் சிஸ்ட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

காதலிக்கின்றாள்...

அவனை பிடித்து இருக்கிறது..

வாழ்க்கை முழுவதும் கை கோர்த்து நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள்.

ஆனால் இன்று அவன் கொடுத்த முத்தத்தை இன்னுமே அவளால் ஜீரணிக்க முடியவில்லை...

இத்தனை பிரச்சனைகள் நடுவே இந்த முத்தம் அவசியமா என்று தோன்றியது...

இந்த காதல் நிறைவேறுமா? இல்லையா? என்கின்ற நிலையில் இப்படி நெருங்குவது அவளுக்கு பயத்தைக் கொடுத்தது...

ஒற்றை முத்தத்தில் அவன் மீதான மொத்த நம்பிக்கையும் அவளிடம் இருந்து சிதைந்து விட்டது...

இந்த முத்தத்தை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவே இல்லை...

விஜி சொன்னது நினைவில் வந்தது...

அவன் மீது நம்பிக்கை இருக்கின்றது தான்...

இல்லை இல்லை இருந்தது தான்...

இப்போது கொஞ்சம் பயந்து போனாள்...

அடுத்த கட்டத்துக்கு சென்று, ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்தாள்.

ஏமாற்றி விடுவானோ என்று காரணமே இல்லாத பயம்?

எந்த நம்பிக்கையில் அவனுடன் காதலை தொடர்வது என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்...

அவன் மீது காதல் குறையவில்லை, அது அப்படியே தான் இருந்தது...

ஆனால் அவன் மீது காதல் இருக்கும் அளவுக்கு நம்பிக்கை வர மறுத்தது.

அவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவனுக்கு தன் மீது எப்படி காதல் வந்தது??

இன்னுமே புரியாத புதிர் தான்... இத்தனை நாட்கள் தோன்றாத சந்தேகம் எல்லாம் இப்போது தோன்றியது...

இன்று எதிர்பாராத இதழணைப்பு வேறு... அதுவும் பட்டப்பகலில் வெட்ட வெளியில் வைத்து முத்தமிட்டு இருக்கின்றான்...

அவனுடன் மனம் விட்டு பேசியதே இன்று தான்...

அதுவும் கொஞ்ச நேரம் தான்...

அவள் வாயை திறந்து வெளிப்படையாக, 'ஐ லவ் யூ' என்று சொன்னது கூட இல்லை...

அவன் வேகம் அவளுக்கு பயத்தை தான் கொடுத்தது...

ஏற்கனவே வீட்டை நினைத்து பயந்தவள் அவனையும் நினைத்து பயந்து போனாள்...

வீட்டு பிரச்சனையை அவன் சமாளிப்பான் என்று யோசித்தாள், இப்போது அவனே பிரச்சனையாக வந்து நிற்கின்றானே...

விரல்களால் இதழ்களை வருடிக் கொண்டவளுக்கு அடுத்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை...

ஆண்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று உட்கார வைத்து பாடமெடுப்பவர் அவள் அப்பா...

அதுவும் சிங்கள பையன் என்றால் அவளை உயிருடன் விடவே மாட்டார்.

'இந்த சிங்கள காடையனுகள் நம்ம சனங்களை எப்படி எல்லாம் கொண்டானுகள் தெரியுமா?? கடைக்கு போன என்ட அண்ணன் ட பிணத்தை தான் கொடுத்தானுங்க... நல்லாவே இருக்க மாட்டானுங்க...' என்று அவர் வாயில் இருந்து இப்போதும் வார்த்தைகள் சரளமாக வரும்...

பிரியந்தவின் தந்தை ஜெயக்கொடியை டிவியில் பார்த்தாலே திட்டுவார்...

அவளுக்கு அந்த உணர்வுகளோ வேறுபாடோ இல்லை...

சின்ன வயதில் நடந்த போர் நினைவுகள் அவளுக்குள் பெரிதாக ஊடுறுவவில்லை...

இப்போது படபடப்பாக இருந்தது...

இது நடக்காது என்று தோன்றியது...

அதுவும் அவன் மீதான நம்பிக்கையை மொத்தமாக இழந்து விட்டாள்... இதற்கு மேல் இந்த காதலை தொடர்வது சரி இல்லை என்று தோன்றியது...

விட்டு சென்று விடுவானோ? வீட்டில் பிரித்து விடுவார்களோ என்று பயந்து பயந்து காதலிக்க முடியுமா என்ன?

இப்போதே நிறுத்தி விட்டால் மனதளவில் வலி குறையும் என்று நினைத்தவள் எழுந்து பிரியந்தவை தேடி சென்றாள்.

அவளை அவன் எதிர்பார்த்தான் தான். " சிட் " என்றான்.

தலையை தாழ்த்திக் கொண்டவளோ, "நாம பிரேக் அப் பண்ணிப்பமா ??" என்று கேட்டாள்.

அவன் முகம் இறுகி விட்டது... சற்று நேரம் முன்னர் அவன் கொடுத்த முத்தத்துக்கு கிறங்கி நின்றவள் ஆயிற்றே... தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தானே தள்ளியே விட்டாள்...

அதனை உணராமல் இருப்பானா அவன்?

குரலை செருமிக் கொண்டே "அய்" ( ஏன் ) என்றான்.

"இது சரி வரும் எண்டு தோணல" என்றாள் அவனை ஏறிட்டுப் பார்த்தபடி. சட்டென அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது...

துடைத்துக் கொண்டாள்.

வீட்டினை சமாளித்து விடலாம் என்கின்ற நம்பிக்கையில் அவள் காதலிக்க ஆரம்பித்தாள் என்று அவனுக்கு தெரியும்...

இப்போது வேண்டாம் என்கின்றாள் என்றால், பிரச்சனைக்கு காரணம் தான் என்று அவனுக்கும் புரிந்தது...

அவன் தான் அவள் மூச்சு விட்டாலே கண்டு பிடித்து விடுவனே...

"ஏமாத்திடுவன் எண்டு பயப்படுறியா??" என்று கேட்டான்.

அவளுக்கு அதிர்ச்சி தான்... தனது மனதை எப்போதுமே சரியாக கணித்து சொல்கின்றானே...

அவளோ இல்லை என்று தலையை ஆட்டியவள் இறுதியாக ஆம் என்று முடித்து இருந்தாள்.

அவனும் ஒரு பெருமூச்சுடன், "அலைபாயுதே படம் பார்த்து இருக்கியா??" என்று கேட்டான்.

அவள் அவனை புரியாமல் பார்க்க, "நான் பார்த்து இருக்கிறன். தமிழ் படிக்கிறதுக்காக எல்லா படமும் பார்த்து இருக்கிறன்" என்றான்.

அவளுக்கு புரியவில்லை...

"நீங்க என்ன சொல்ல வாறீங்க??" என்று கேட்டாள்.

"எனக்கு நீ வேணும் ராதிகா... வாழ்க்கை முழுக்க எனக்கு பக்கத்திலேயே வேணும்" என்றான்.

"ஆனா நம்மட வீட்ல" என்று அவள் திணற, "கல்யாணம் கட்டுவோம், உனக்கு என் மேல நம்பிக்கை போயிட்டு என்று எனக்கு விளங்குது... அதனால தான் கல்யாணம் கட்டிட்டா பிறகு வீட்டுலயும் பிரிக்க ஏலாது, உனக்கும் என் மேல சந்தேகம் வராது, இண்டைக்கு கொஞ்சம் அவசரப்பட்டுட்டன் தான்... நீ வடிவா இருக்கா, அதனால கிஸ் பண்ண தோணுனது" என்றான்.

அவள் விழிகள் அதிர்ந்து விரிய , " திருட்டு கல்யாணம் சரியா?? " என்று கேட்டான் கண்களை சிமிட்டி.

வாயில் இரு கைகளையும்.வைத்துக் கொண்டே எழுந்து நின்றாள்.

"இப்ப என்ன?" என்றான்.

"எனக்கு ஏலாது... வீட்ல தெரிஞ்சா என் உயிர் இருக்காது" என்றாள்.

"நீ ஏன் வீட்டுக்கு சொல்ல போற?? தெரியாம பண்ணுறது தானே திருட்டு கல்யாணம்" என்றான்.

"இதுக்கு தான் அலைபாயுதே படம் பார்த்தீங்களா? உங்களுக்கு என்ன பைத்தியமா?" என்று அவள் சீற , அவளையே பார்த்து இருந்தவன், "ஓம் உனக்கு மேல பைத்தியம்" என்று முடித்து இருந்தான்.

அவனை முறைத்தவளோ, "இந்த விளையாட்டுக்கு நான் வரல" என்றாள்...

அதுவரை நிதானமாக பேசிக் கொண்டு இருந்தவனுக்கும் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது...

"அப்ப என்ன தான் முடிவு?" என்று கேட்டான் ஆதங்கமாக...

"இதோட நிப்பாட்டுவம்" என்றாள்...

அவளை உறுத்து விழித்தவன், "நீ பண்ணுறதுக்கு பேர், நம்பிக்கை துரோகம்" என்றான்...

"நீங்க பேசியே என்னை மயக்கிறீங்க, அதான் இங்க வந்து நிக்குது" என்று சொல்லி விட்டாள்...

அவனுக்கு அவள் பேசிய வார்த்தைகள் சுர்ரென்று கோபத்தை ஏகத்துக்கும் எகிற வைத்தன...

உஷ்ண பெருமூச்சுக்களை விட்டு கட்டுபடுத்திக் கொண்டான்...

"அப்ப நான் உனக்கு வேணாமா?" என்று கேட்டான்... குரல் கரகரத்தது...

தலையை தாழ்த்தி நின்றவளுக்கு அவன் விழிகளை பார்க்க தைரியம் இல்லை...

அவன் விழிகளை பார்த்தால் இல்லை என்று சொல்லவே வராது...

தலையை தாழ்த்திக் கொண்டே, இல்லை என்று தலையாட்டினாள்...

"அப்ப இதுக்கு பிறகு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில?" என்று அவன் கேள்வியாக முடிக்க, "ஒண்டுமே இல்லை" என்று அவள் ஆணித்தரமாக முடித்து இருந்தாள்...

இப்படி பேசிக் கொண்டு இருப்பவளை என்ன செய்து விட முடியும் அவனால்...

"சரி போ" என்றான்...

அவனை இப்போது ஏறிட்டுப் பார்த்தாள்...

"சொறி" என்றாள்...

அவளை வெறித்துப் பார்த்தவன், "போடி" என்றான்...

அவள் விழிகள் அதிர்ந்தன...

"டி" போட்டு பேசினான்...

ஆச்சரியமாக இருந்தது...

அவனுக்கு இந்த பேச்சு முறை எப்படி தெரியும் என்று தோன்றியது...

"டி யா?" என்று அவள் அதிர்ந்து கேட்க, "எனக்கு தமிழ் கெட்ட வார்த்தை வரைக்கும் தெரியும்... போ" என்றான் கோபம் கலந்த குரலில்...

கோபமாக இருக்கின்றான் என்று அவளுக்கும் புரிந்தது...

அவன் முன்னே அதற்கு மேல் நின்று அவனை சங்கடப்படுத்த இஷ்டம் இல்லை...

வெளியேறி விட்டாள்...

அழுகை வந்தது...

அவன் மனதை உடைத்து விட்டு அவள் ஒன்றும் சந்தோஷமாக இருந்து விடவில்லையே....

நேரத்துடன் வீட்டுக்கு கிளம்பி விட்டால் நன்று என்று தோன்ற, ஷார்ட் லீவுக்கு விண்ணப்பம் நிரப்பி கொடுத்து விட்டு இருந்தாள்...

அதுவும் அவன் மேசைக்கு தான் சென்றது...

அவன் கையெழுத்தை இட்டு அனுப்பி இருக்க, அன்று நேரத்துக்கே கிளம்பி விட்டாள்...

பயணம் நெடுகிலும் அழுகையை அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்...

வீட்டுக்கு அவள் வந்த நேரம் தீபிகா இல்லை...

அவளுக்கு அழுது விட்டால் நன்று என்று தோன்ற, அறையை மூடி விட்டு, கட்டிலில் படுத்து தேம்பி தேம்பி அழுதாள்...

இப்படி காதல் வலிக்கும் என்று தெரிந்தால் காதலித்து இருக்க மாட்டாளோ என்னவோ...

அவன் வேண்டும் என்று தோன்றியது...

வாழ்க்கை முழுக்க கூடவே இருக்க ஆசைப்படுகின்றாள்.

அதுவரை அவன் மீது இருந்த நம்பிக்கை இன்மை கூட அவன் திருமணம் செய்யக் கேட்ட அடுத்த கணம் முற்றாக நீங்கி விட்டது...

ஏமாற்ற நினைக்கின்றவன் திருமணம் வரை யோசிக்க மாட்டானே...

அவன் தன்னை எவ்வளவு ஆழமாக காதலிக்கின்றான் என்று அவளுக்கும் புரிந்தது...

அது இன்னுமே வலித்தது...

நிற்காத அழுகை...

அவனுக்கு மனம் வலிக்கும் என்று அவளுக்கும் தெரியும்... அவளுக்கும் தானே வலி...

இந்த பாழாய்ப் போன காதல் அவன் மீது வந்ததை நினைத்து தன் மீதே ஆத்திரம் தான்...

வலி தீர அழுது முடித்தவள், குளித்து விட்டு காஃபியை போட்டுக் கொண்டே, ஹாலில் அமர்ந்து இருந்தாள்...

டிவியை போட்டாள்.

என்னன்னவோ ஓடியது...

அவளுக்கு எதிலுமே கவனம் திரும்பவில்லை...

அப்படியே அமர்ந்து இருந்தாள்...

தீபிகாவும் வேலை விட்டு வந்து விட்டாள்...

உள்ளே வந்தவளோ, "என்னடி கெதியா வந்துட்ட?" என்று கேட்டுக் கொண்டே, உடையை மாற்றி குளித்து விட்டு வந்தாள்...

இன்னும் அப்படியே அமர்ந்து இருந்தாள் ராதிகா...

அவள் அருகே அமர்ந்த தீபிகாவோ, "ராதி" என்று அவள் தோள்களை உலுக்க, சட்டென நிதானத்துக்கு வந்தாள்...

"எப்ப வந்தனி?" என்று கேட்டாள்...

"நான் வந்து குளிச்சிட்டும் வந்துட்டன்" என்று அவள் சொல்ல, "ஒஹ்" என்றாள்...

அவள் முகம் வீங்கி இருப்பது தீபிகாவுக்கும் தெரிய, "அழுதியா? முகம் ஏன் இப்பிடி இருக்கு?" என்று கேட்டாள்...

ராதிகாவுக்கு அவள் கேட்டதும் மீண்டும் அழுகை...

அடக்கி வைக்க முடியவில்லை...

சட்டென அவளை இறுக அணைத்தவள், விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்...

தீபிகாவுக்கும் இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை...

"என்னடி அழுறா?" என்று கேட்டாள்...

கண்ணீரை துடைத்துக் கொண்டே நிமிர்ந்து அமர்ந்தவள், "ப்ரேக் அப் ஆயிட்டு" என்றாள்...

அவளுக்கோ அதிர்ச்சி...

"ப்ரேக் அப் ஆஹ்? யாரை லவ் பண்ணுனனி?" என்று கேட்டாள்...

"பிரியந்த" என்றாள் ராதிகா...

வாயில் அதிர்ந்து கையை வைத்த தீபிகாவோ, "என்னடி சொல்ற?" என்று கேட்க, முத்தமிட்டதை தவிர எல்லாமே சொன்னாள்...

"வீட்ல சரி வராது எண்டு தெரிஞ்சும், ஏன் டி?" என்று ஆதங்கமாக வந்தது தீபிகாவின் வார்த்தைகள்...

"பிடிச்சு இருக்கே" என்றாள்...

"இப்ப என்னவாம்?" என்று கேட்க, "திருட்டு கல்யாணம் பண்ண கூப்பிடுறார்" என்று விம்மலூடன் ராதிகா சொல்ல, "பைத்தியமா உனக்கு? அவங்க பெரிய இடம் ராது... உன்னை என்ன வேணும் எண்டாலும் பண்ண ஏலும், சும்மா மொக்கு தனமா முடிவு எடுக்காதே, நீ இல்ல எண்டு சொன்னது தான் சரி" என்றாள்...

"ஆனாலும் கஷ்டமா இருக்கு தீபி" என்றாள்...

அவனை அணைத்துக் கொண்டவளோ, "கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கும், பிறகு சரி ஆயிடும்" என்று அவள் முதுகை வருடிக் கொண்டே சொன்னாள்...

அன்று இரவு மனதில் இருந்தது எல்லாம் கொட்டி விட்டதால் என்னவோ அவள் நிம்மதியாக தூங்கி விட்டாள்.

நிம்மதி இல்லாமல் இருந்தது என்னவோ அவன் தான்...

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று இருந்தான்...

வீட்டுக்கு செல்லவே மனம் இல்லை...

தனிமையில் அவள் எண்ணம் தானே...

"பிரியந்த, ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்கின்ற கேள்விகள் அவனிடம் அடிக்கடி வந்தன.

என்ன சொல்வான் அவன்...

"ஒன்றும் இல்லை" என்று சமாளித்துக் கொண்டான்...

இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கே வந்தான்...

அவள் எண்ணம் தான்...

இப்படி அவனை மொத்தமாக வேண்டாம் என்று சொல்லி விட்டாளே...

மனம் எல்லாம் அப்படி ஒரு வலி...

குளித்து விட்டு கட்டிலில் வந்து படுத்தான்...

இன்னுமே அவளுக்கு முத்தமிட்ட நினைவுகள் அவனை ஆட்கொண்டு இருந்தன...

அதனை அனுபவிக்க முடியாத நிலையில், அவள் பிரிவும் வலித்தது...

'மகே லஸ்ஸன யக்ஷிணி' என்று வாய்க்குள் இப்போதும் திட்டியவன், தூங்கவே ஒரு மணி கடந்து விட்டது...
 

Lakshmi CT

Member
ப்ரியந்த இந்த அரலூச கல்யாணம் பண்ணாமயே இருந்துருக்கலாம், கடைசிவர குழப்பம் பண்றதுக்கு இவளுக்கு எதுக்கு காதல்😏
 
Top