அத்தியாயம் 7
அடுத்த நாள் ஸ்கூலில் விடயத்தை சொன்னவளோ, லீவ் நோட்டையும் கொடுத்து விட்டாள்.அவளுக்கு மாணவர்களுக்கு கற்பிக்கும் போதெல்லாம் கஷ்டமாக இருக்கும்...
தான் இல்லாமல் இவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசனை தோன்றும்...
இனி வரும் ஆசிரியர்கள் அவர்களை நல்ல விதமாக நடுத்துவர்களா? என்று பயம் வேறு வரும்...
யாதவ் கிருஷ்ணாவுக்கு அவளை பார்க்கும் போதெல்லாம் கஷ்டமாக இருக்கும், "நீங்க இந்த கல்யாணம் பண்ணிக்கணுமா டீச்சர்?" என்று அடிக்கடி கேட்பான்...
அவளும் என்ன தான் சொல்வாள்?
ஆம் என்கின்ற ரீதியில் பிடித்தமே இல்லாமல் தலையாட்டுவாள்...
இப்படியே அந்த ஒரு வாரமும் கழிந்து விட்டது...
அவளும் ஸ்கூலில் இருந்து மொத்தமாக நின்று விட்டாள்.
வீட்டில் கல்யாண ஏற்பாடும் தொடங்கி இருந்தது...
ரஞ்சன் தேன்மொழியின் எண்ணை வாங்கி அதற்கு மெசேஜ் அனுப்ப தொடங்கி இருந்தான்...
எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடுகளை அடுக்கினான்.
வீட்டில் புடவை தான் கட்ட வேண்டும், குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், தனது தாய் சொல்லும் அனைத்தையும் கேட்டு நடக்க வேண்டும், என்று ஏகப்பட்ட கட்டளைகள்...
அவள் வேறு வழி இல்லாமல் அனைத்திற்கும் சம்மதம் சொன்னாள்.
ஆனால் மனதளவில் அவளுக்கு கொஞ்சமும் பிடித்தம் இல்லை...
அந்த வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை அன்று தேன்மொழியின் வீட்டின் முன்னே பெரிய கார் வந்து நின்றது...
உள்ளே இருந்து இறங்கினார்கள் வசந்தியும் குருமூர்த்தியும்...
வசந்தியின் கையில் பெரிய பை இருந்தது...
அதற்குள் நிறைய பொருட்கள் தேன்மொழிக்காக வாங்கி வந்து இருந்தார்...
இருவரையும் கண்ட மகாலக்ஷ்மியோ, "வாங்க வாங்க" என்று அழைக்க, அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்...
மிக மிக சாதரணமான வீடு தான்...
குருமூர்த்தியும் வேதவல்லி போல அந்தஸ்து பார்ப்பவர் தான்...
ஆனால் வசந்தி என்ன சொன்னாலும் கேட்பார்...
வசந்தி சொன்னதால் தனது அந்தஸ்து எல்லாவற்றையும் தூக்கி போட்டு விட்டு தேன்மொழியின் வீடு தேடி வந்து இருந்தார்...
மகாலக்ஷ்மியோ, "தேன்மொழி காஃபி போட்டு கொண்டு வாம்மா" என்று சொல்ல, அவளும் சமயலறைக்குள் நுழைய, "ஐயோ வேணாம், இப்போ தான் காஃபி குடிச்சோம்" என்றார் குருமூர்த்தி...
"வீட்டுக்கு வந்தவர்கள வெறும் கையோட அனுப்ப கூடாது அண்ணா" என்று மகாலக்ஷ்மி சொல்ல அவர்களாலும் மறுக்க முடியவில்லை...
தேன்மொழி காஃபி போட்டு கொண்டு வரும் வரை கல்யாணம் பற்றி பேசினார்கள்...
அப்போது தான் தேன்மொழி இரண்டாம் தாரமாக செல்ல இருக்கும் விடயமே வசந்திக்கு தெரிய வந்தது...
வசந்திக்கு அதில் கொஞ்சமும் பிடித்தம் இல்லை...
ஆனால் உணர்வுகளை அடக்கிக் கொண்டே தேன்மொழி கொண்டு வந்த காஃபியை அருந்தினார்... காஃபியை குடித்துக் கொண்டு இருந்த வசந்தியிடம், "யாதவ்வுக்கு டீச்சர் பார்த்துட்டீங்களா?" என்று சைகையால் கேட்டாள் தேன்மொழி...
வசந்தியோ பெருமூச்சுடன், "பார்த்துட்டு தான் இருக்கேன்மா, ஒருத்தர் ஓகே சொல்லி இருக்கார்... உன் அளவுக்கு இருக்கும்னு தோணல, ஆனாலும் வேறு வழி இல்லையே... அடுத்த வாரம் வரேன்னு சொல்லி இருக்கார்" என்று சொன்னார்... அவளும், மென்மையாக தலையாட்ட, வசந்தியோ எழுந்து கையில் இருந்த பையை அவளிடம் கொடுத்தவர், "உன் கல்யாணத்துக்கு ஏதாவது பண்ணனும்னு யோசிச்சேன்... வேணாம்னு சொல்லிடாதே, எனக்கு மனசு கஷ்டம் ஆய்டும்... நான் போன அப்புறம் திறந்து பாரு" என்று சொன்னார்... அவளும் அவர் பேச்சை மதித்து புன்னகையுடன் தலையசைத்தவள் கையில் இருந்த பையை மகாலக்ஷ்மியிடம் கொடுத்து விட்டு, குருமூர்த்தி மற்றும் வசந்தியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். அவர்களும் அவளுக்கு ஆசீர்வாதம் பண்ணி விட்டு, புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்...
காரில் ஏறியதுமே, "என்னங்க ரெண்டாம் தாரம்னு சொல்றாங்க, அந்த பொண்ணு பாவம் இல்லையா?" என்று கேட்டார் வசந்தி...
குருமூர்த்தியோ, "அதுக்கு என்னம்மா பண்ணுறது? ஊரெல்லாம் மாப்பிள்ளை தேடி இருப்பாங்க, பேச முடியாதுன்னு சொன்னதால வரன் சீக்கிரம் அமைஞ்சு இருக்காது... வேற வழி இல்லாம இந்த சம்பந்தத்தை பேசி இருப்பாங்க" என்று சொன்னார்... உடனே வசந்தி, "பேச முடியலைன்னா என்ன? அந்த பொண்ணு எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா?" என்று கேட்டார்...
குருமூர்த்தியோ, "சரி அப்படியே வச்சுக்கலாம்... நான் ஒன்னு கேக்கிறேன் விடை சொல்லு, நீ நம்ம வம்சியை இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பியா?" என்று கேட்டார்...
வசந்தியிடம் மௌனம்...
"யோசிக்கிற தானே" என்றார் குருமூர்த்தி...
"அது இல்லைங்க" என்று வசந்தி இழுக்க, "இது தான் வசந்தி எதார்த்தம்... நான் கண்டிப்பா என் பையன கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன்... அதுவும் அவன் ஊர் அறிஞ்ச பாடகன்... அவனுக்கு ஒரு வாய் பேச முடியாத பொண்ணு மனைவியா வர்றது என்னால ஏத்துக்கவே முடியாது... இப்படி தான் ஒவ்வொருங்கங்களுக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கும்... அத நாம தப்புன்னு சொல்ல முடியாது" என்று சொல்ல, அவரும் ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டார்...
அவர்களும் வீட்டை நோக்கி புறப்பட்டு விட்டார்கள்...
இதே சமயம், வசந்தி கொடுத்து விட்டு போன பையை திறந்து பார்த்தாள் தேன்மொழி...
நிறைய புடவைகள், ஆபரணங்கள் என்று இருக்க, அதனுடன் சேர்ந்து ஒரு கட்டு பணமும் இருந்தது...
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு... அதனை எடுத்துக் கொண்டே சமைலறைக்குள் நின்று இருந்த மகாலக்ஷ்மியிடம் சென்றாள்.
அவரோ அதனை பார்த்து விட்டு, "இதனால தான் திறந்து பார்க்க வேணாம்னு அவங்க
சொல்லி இருக்காங்க போல" என்று சொன்னபடி, "இத பத்திரமா வச்சுக்கோ, ஏதும் தேவைன்னா கேக்கிறேன்" என்றார் மகாலக்ஷ்மி...
"இது நமக்கு வேண்டாம்" என்ற ரீதியில் தலையாட்டினாள் தேன்மொழி...
"திரும்ப கொடுத்தா கோச்சுப்பாங்க தேன்மொழி... நீ வச்சுக்கோ அப்புறம் பார்த்துக்கலாம்" என்று மனதில் பட்டதை சொல்லி விட்டு சமைக்க ஆரம்பித்து விட்டார்...
அவளும் மௌனமாக பணத்தை எடுத்துக் கொண்டே தனது அறைக்குள் நுழைந்து விட்டாள்.
இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம்...
தேன்மொழிக்கு கடைசி நேரத்தில் இந்த திருமணம் நின்று விடாதா என்கின்ற எதிர்பார்ப்பு மனதில் இருக்க தான் செய்தது...
மனசு தடுமாறும் நேரம் எல்லாம் வம்சி கிருஷ்ணாவின் இசையை கேட்டுக் கொள்வாள்...
அவள் திருமணத்தினால் பாதிக்கப்பட்ட முக்கியமான ஜீவன் யாதவ் கிருஷ்ணா தான்...
அவனுக்கு புது மாஸ்டர் கல்யாணராமன் வீட்டுக்கே வந்தார்...
டியூஷன் ஃபீஸ் மட்டும் பல ஆயிரங்களை தொட்டது...
சற்று கண்டிப்பானவர்...
கண்டிப்பானவர் என்பதை விட மோசமானவர் என்றே கூறலாம்...
முகத்தில் சிரிப்புக்கு பஞ்சம்...
பொறுமை கொஞ்சமும் இல்லை...
முதல் நாளே பிழையாக கணக்கு செய்ததற்கு தலையில் குட்டு விழுந்தது...
பொறுத்துக் கொண்டான் அவன்...
அவனுக்கு காது கேட்காது என்ற எண்ணத்தில், கண்ட மேனிக்கு வாயசைத்து திட்டினார்...
அவனோ இதழ் அசைவை வைத்து புரிந்து கொண்டான்...
அவன் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது...
அன்றைய வகுப்பு முடிய, ஓடி வந்து தாயிடம் சொன்னான்...
அவரோ கல்யாணராமனுக்கு அழைத்து கேட்க, "நான் அப்படி பண்ணுவேனா மேடம், ஏற்கனவே சொல்லி கொடுத்த டீச்சர் இல்லன்னு கவலைல பேசுறார் நம்ம யாதவ் கிருஷ்ணா... போக போக என்னை பிடிக்க ஆரம்பிச்சுடும்" என்றார்...
அவருக்கு யாரை நம்புவது என்று குழப்பம்...
"அப்போ அடுத்த வாரம் டியூஷனுக்கு வாங்க சார், அவன் கொஞ்சம் ஓகே ஆகட்டும்" என்று சொல்ல, கல்யாணராமனும் "ஓகே மேடம்" என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்...
தொலைபேசியை வைத்து விட்டு யாதவ் கிருஷ்ணாவை பார்த்தவர், "இந்த வாரம் சார் டியூஷனுக்கு வர மாட்டார்... ஒரு வாரம் நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ... சில விஷயங்கள் நாம அக்செப்ட் பண்ணி தான் ஆகணும்... இவரும் தேன்மொழி டீச்சர் போல தான்... உனக்கு நல்லா சொல்லி கொடுப்பார்" என்று சைகையில் சொல்ல, அவனோ அவரை ஒரு தடவை வெறித்துப் பார்த்து விட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்...
அவனுக்கோ அனாதை போன்ற உணர்வு... தன்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்கின்ற ஏக்கம்...
கட்டிலில் படுத்த அழ ஆரம்பித்து விட்டான்...
சாப்பிட கூட அவனுக்கு இஷ்டம் இல்லை...
வசந்தி கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்...
அவன் நடவடிக்கையை அவதானித்த கெளதம் கிருஷ்ணாவோ, "ஏன் இவன் இப்படி இருக்கான்?" என்று வசந்தியிடம் கேட்க, "நம்ம தேன்மொழி டியூஷன் கொடுக்க வர்றது இல்லைல, அது தான்" என்றார்...
அவனோ பெருமூச்சுடன், "அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாதே அம்மா" என்று சொல்லிக் கொண்டான்...
கௌதம் கிருஷ்ணாவின் கண்ணில் மட்டும் அல்ல, வம்சி கிருஷ்ணாவின் கண்ணிலும் அவன் மாற்றம் தென்பட்டது...
அவன் கெளதம் கிருஷ்ணாவிடம் கேட்டு விடயத்தை தெரிந்து கொண்டான்...
"அந்த பொண்ணு கூட நாம போய் பேசி பார்க்கலாமே, கேக்கிற பணத்தை கொடுக்கலாம்" என்றான்...
கெளதம் கிருஷ்ணாவோ, "அந்த பொண்ணு இத்தனை நாள் டியூஷனுக்கே பணம் வேணாம்னு சொல்லிட்டா... கல்யாணம்னு வரும் போது நாம கட்டாயப்படுத்த முடியாதுல" என்றான்...
"பணம் வேணாம்னு சொல்லிட்டாளா? வித்தியாசமா இருக்கா" என்று மட்டும் சொல்லிக் கொண்டான் வம்சி கிருஷ்ணா...
கெளதம் கிருஷ்ணாவோ, "நாளைக்கு லெட்டர் வந்திடும் போல" என்று கேலண்டரை பார்த்துக் கொண்டே சொல்ல, அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை...
"பட் என்னால கண்டு பிடிக்கவே முடியல... அது தான் கடுப்பா இருக்கு..." என்று சொல்லிக் கொண்டான்...
அடுத்த நாள் முதலாம் தேதியும் வந்தது...
தேன்மொழி கடிதத்தை அனுப்பி விட்டாள்.
காலையில் நேரத்துக்கே எழுந்து விட்டான் வம்சி கிருஷ்ணா...
முதலாம் தேதி என்றால் கேட்கவும் வேண்டுமா? அவன் இதழ்களில் சிரிப்புக்கு பஞ்சம் ஏது...
கூர்க்கா கடிதங்களை கொண்டு வந்து கொடுக்க முதலே அவன் எடுத்து வந்தான்...
கெளதம் கிருஷ்ணாவோ அவனை பார்த்து செருமிக் கொள்ள, வம்சி கிருஷ்ணா கண்களை சிமிட்டி விட்டு அறைக்குள் சென்றவன், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கடிதத்தை பிரித்தான்...
அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு,
நான் நலம், அது போல நீங்களும் நலமாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்...
இது நான் உங்களுக்கு இறுதியாக எழுதும் கடிதம் இது...
அவன் முகத்தில் இருந்த புன்னகை தொலைந்து, கலவரம் உண்டானது...
முகம் இறுகி போனது...
தொடர்ந்து படித்தான்...
கண்ணீருடன் எழுதுகிறேன்...
இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை...
என் உணர்வுகள் எல்லாமே உங்கள் இசை தான்...
இனி அதனை கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை...
வலிக்கின்றது எனக்கு...
என் உணர்வுகளை புரிந்து கொள்ள என்னை சுற்றி யாரும் இல்லை...
உங்களுக்கு எழுதும் கடிதங்களில் தான் என் உணர்வுகளை கொட்டி எழுதுவேன்...
அதில் ஒரு ஆத்மார்த்த திருப்தி...
அந்த திருப்தியும் எனக்கு இனி கிடைக்காது...
கிடைக்காத பொக்கிஷம் என்று தெரிந்தும் காதலித்தது எனது தவறு தான்...
இப்போது அந்த காதல் முற்றுப் பெறும் போது என்னால் வலியை அடக்க முடியவில்லை...
அருகே நீங்கள் இருந்தால் உங்கள அணைத்து கண்ணீர் விட்டு இருப்பேன்...
ஆனால் அதற்கு எனக்கு கொடுத்து வைக்கவில்லை...
எனக்குள் எத்தனையோ ஆசைகள்...
பேராசைகள் என்று கூற சொல்லலாம்...
உங்கள அணைக்க வேண்டும், பாடும் உங்கள் இதழ்களில் முத்தமிட வேண்டும்... உங்கள் தோளில் சாய்ந்து நீங்கள் படுவதை கண் மூடி கேட்க வேண்டும் என்று எத்தனையோ ஆசைகள்...
நிறைவேறாது என்று தெரிந்தாலும் ஆசைப்பட்டேன்...
உங்கள் பின்னால் சுற்றி வரும் என் மனதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை...
ஆனால் இப்போது கட்டுப்படுத்தி தான் ஆக வேண்டும் என்று கட்டாயம்...
என்னால் உங்கள் குரலை இனி கேட்க முடியாது என்று நினைக்கும் போதே பதறுகிறது...
உங்கள் இசை இல்லாமல், நான் ஜடம் மட்டும் தான்...
சின்ன வயதில் யாரும் இழக்க கூடாதது எல்லாமே நான் இழந்த போது கூட இப்படி அழுதது இல்லை...
ஆனால் இந்த ஒரு தலை காதல் வலிக்கின்றது...
உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வம்சி...
உங்களுக்கு மனைவியாகவோ காதலியாகவோ இருக்க முடியாது என்று எனக்கு தெரியும்...
என் இறுதி மூச்சு வரை ரசிகையாக உங்கள் இசையை கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன்...
இப்போது அதுவும் கேள்விக்குறி தான்...
நான் உங்களுடன் இல்லை என்றாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்...
பைத்தியக்காரி நான், உளறிக் கொண்டே இருக்கின்றேன்...
உங்களுக்கு நான் ஒருத்தி இருக்கின்றேன் என்றே தெரிய வாய்ப்பில்லை...
கற்பனையில் பேசிக் கொண்டிருக்கின்றேன்... சரி இருக்கட்டும்... என் மன அமைதிக்காக பேசி விட்டு போகின்றேன்...
திருமணம் செய்து நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள், பிறக்கும் ஒரு பெண் குழந்தைக்கு தென்றல் என்று என் நினைவாக பெயர் வையுங்கள்... எனக்கு பையன் பிறந்தா வம்சி கிருஷ்ணான்னு தான் பெயர் வைப்பேன்...
இந்த ரசிகையின் ஆசை...
என்ன காதலி என்று சொல்லாமல் ரசிகை என்று சொல்கின்றேன் என்று பார்க்கிறீர்களா?
இனி காதலி என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை...
என்னிடம் இருந்து உங்களுக்கு இனி கடிதங்கள் வராது... அதே சமயம் என் மனதில் உங்கள் நினைவுகள் என்றும் அகலாது... ஆத்மார்த்தமான உங்கள் நினைவுகள் என்னுடன் எப்போதுமே பொக்கிஷமாக இருக்கும்...
உங்கள் முகத்தில் என்றும் புன்னகை தவழ இறைவனை வேண்டிக் கொண்டே விடைபெறுகின்றேன்...
சந்தோஷமா இருங்க வம்சி...
இப்படிக்கு உங்கள் ரசிகை
தென்றல்
அவள் பெயர் அருகே கண்ணீர் துளிகளின் தடையம்...
விரல்கள் கொண்டு மெதுவாக அவள் பெயரை வருடிக் கொண்டான்...
உள்ளுக்குள் ஏதோ உடைவது போன்ற உணர்வு...
உலர்ந்த அவள் கண்ணீர் துளிகளின் அருகே, உலராத இரு துளிகள்...
அவர்கள் சேரவில்லை என்றாலும் அவர்களின் கண்ணீர் துளிகள் சேர்ந்தனவோ....
சட்டென தனது கன்னத்தை தொட்டு பார்த்தான்...
அவன் கண்ணில் இருந்து தான் இந்த துளிகள் விழுந்து இருக்கின்றன...
ஆம் அழுது இருக்கின்றான்...
அவனுக்கே அதிர்ச்சி...
மனதளவில் உறுதியானவன் அவன்...
அவனையே அழ வைத்து விட்டதே இந்த காதல்...
மனம் பிசைய ஆரம்பித்தது...
"ராட்சஷி, நீ யார்ர்னு ஒரு தடவை சொல்லி இருக்கலாமே" என்ற ஆதங்கம் அவனுக்கு...
இப்போது எங்கே போய் தேடுவான்? இனி கடிதமும் வராது? யாரிடம் கேட்பான்?
கண்ணை கட்டி நடு காட்டில் விட்ட உணர்வு...
அவளுக்கு மட்டுமா காதல்?
அவனுக்கும் தானே காதல்...
அப்படியே கண் மூடி இருக்கையில் சாய்ந்தான்...
எழுத்துக்கள் மூலம் அவனை கட்டி இழுத்தவளை அவனால் நேரில் பார்க்கவே முடியவில்லை...
காதலிக்க தொடங்காமலே அவர்கள் காகித காதல் காற்றில் கரைந்து போன உணர்வு அவனுக்கு...
மீள முடியுமா என்று தெரியவில்லை... மீள வேண்டிய கட்டாயம்...
இந்த ஒரு கடித்துக்காக அவன் மாதம் முழுவதையும் எதிர்பார்ப்புடன் கழிப்பவன்...
இனி அந்த கடிதம் இல்லை என்று சொன்னதுமே, தனது உடலில் ஒரு பாகத்தை இழந்த உணர்வு அவனுக்கு...
எத்தனை கனவுகள்... எத்தனை எதிர்பார்ப்புகள்...
அவள் எப்படி இருப்பாள் என்று அவன் எப்படி எல்லாம் கற்பனை செய்து வைத்து இருந்தான்...
அனைத்தும் நொறுங்கி விட்டது... பிரபலமாக இருந்து என்ன பயன்? இறுதி வரை அவன் மனம் கவர்ந்தவளை கண்டு பிடிக்கவே முடியவில்லையே...
அவள் உணர்வுகளை அவள் கடிதம் மூலம் கொட்டி இருந்தாலும், அவன் உணர்வுகளை அவன் வெளிப்படுத்த அவள் வாய்ப்பே கொடுக்கவில்லையே...
அவள் மீது கோபமாக வந்தது... அடக்கிக் கொண்டே இருக்கையில் கண் மூடி அமர்ந்து இருந்தான்...
எவ்வளவு நேரம் அறைக்குள் இருந்தான் என்று தெரியவில்லை...
அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு தான் கண்களை விழித்துக் கொண்டான்...
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமான காதலாக தெரிந்தாலும் அவர்களுக்கு அது ஆத்மார்த்த காதல் தான்...
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, முகத்தை இரு கைகளாலும் அழுந்த வருடியபடி கதவை திறக்க, வாசலில் நின்றது என்னவோ கெளதம் கிருஷ்ணா தான்...
"உள்ளே வா" என்று சொல்லிக் கொண்டே, அங்கிருந்த இருக்கையில் அமர, "லெட்டர் படிச்சா முகம் பிரகாசமா இருக்கணுமே... என்னடா ஆச்சு?" என்று கேட்க, அவனோ கடிதத்தை நீட்டினான்...
கெளதம் கிருஷ்ணா யோசனையுடன் கடிதத்தை பிரித்து படித்தான்...
அவன் புருவம் சுருங்கியது...
"என்னது? கடைசி கடிதமா?, என்னடா இது?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, இதழ்களை பிதுக்கியவன், "நோ ஐடியா" என்றான்...
"என்ன பண்ண போற?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, "என்ன பண்ண முடியும்னு சொல்ற?" என்று கேட்டான்...
"ஒண்ணுமே பண்ண முடியாது" என்றான் கெளதம் கிருஷ்ணா...
"பட் ஐ ஹாவ் டு ஓவர் கம்... ரொம்ப கஷ்டமான விஷயம் தான்... ஐ நீட் டைம்... ஜஸ்ட் லெட்டர்ஸ் தானேன்னு நீ நினைக்கலாம்... பட் ஐ லவ் ஹேர்... யார்ன்னு தெரியல... ஆனாலும் ஐ லவ் ஹேர்... முட்டாள் தனமா தோணுனாலும் தட்ஸ் ட்ரூ...அட்லீஸ்ட் யாருன்னு அவ சொல்லி இருக்கலாம்... எனக்கு அது தான் ரொம்ப பெயின் ஆஹ் இருக்கு" என்று சொன்னவன் குரல் தழுதழுத்தது...
இப்படி வம்சி கிருஷ்ணாவை கெளதம் கிருஷ்ணா பார்த்ததே இல்லை...
"வம்சி" என்றான் அழுத்தமாக...
ஆழ்ந்த மூச்சை எடுத்தவனோ, "இட்ஸ் எ பெயின் கெளதம், நான் கொஞ்சம் தனியா இருக்கணும்..." என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன் தன்னை நிதானப்படுத்தும் பொருட்டு ஸ்டூடியோவினுள் நுழைந்து விட, அவனை வெறித்துப் பார்த்தான் கெளதம் கிருஷ்ணா...
அவன் இசை அவளுக்கு மட்டும் அல்ல, அவனுக்கும் மருந்து தான்...