அத்தியாயம் 6
பிடரியை வருடிக் கொண்டே, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன் ஷூவை கழட்டிக் கொண்டே, "கதைச்சதுல என்ன தப்பு?" என்று கேட்டான்."என்ன தப்பா? நீ கதைக்கிறத உன்ட மாமாவோட நிப்பாட்டு, அந்த பிள்ளை என்ன செஞ்சவள்?" என்று கேட்டார் கனகசிங்கம்...
"ஆஹ் கள்ள சைன் வச்சவள்" என்றான்...
"அதுக்கு இப்படியா கதைப்பா? மாமா எவ்வளவு கவலைப்படுறார் தெரியுமா?" என்று கேட்க, "அவரால மாமி கவலை பட்டாங்க தானே" என்றான்.
"அதெல்லாம் நடந்து நிறைய வருஷம் முடிஞ்சு, இப்போ வந்து அதையே கதைச்சிட்டு என்ன ஆக போகுது, பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் கட்டுற வயசுக்கும் வந்தாச்சு" என்றார்.
"எனக்கு நான் கதைச்சது பிழை இல்ல" என்றான்...
கோதாவரியோ, "என்ன கதை இது ஜனா? ஒரு படிச்சவன் கதைக்கிற போல கதைக்கிறியா?" என்று ஆதங்கப்பட, "அவர் ஊர்ல இருக்கிற பொம்பிளைகள்ட்ட போகலாம், அவர்ட மகள் எண்டு சொன்னதும் குத்துதோ?" என்று கேட்டான்...
அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று கனகசிங்கத்துக்கு புரிந்தது...
"இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்றா? அந்த பிள்ளையை காயப்படுத்துனா மட்டும் எல்லாம் சரியா போகுமா?" என்று கேட்டார்...
"நான் இப்படி தான் கதைப்பேன், திங்கட்கிழமை போய் இத விட கேவலமா கூட கதைப்பேன்" என்று சொல்லி விட்டு அவன் எழுந்து செல்ல, இப்போது வாயடைத்து போனது என்னவோ அவன் குடும்பத்தினர் தான்...
பிழையையும் செய்து விட்டு, இன்னும் செய்வேன் என்று சொல்பவனிடம் என்ன சொல்லி விட முடியும்? அவனை தடுக்க தெரியாமல் அவர்கள் விக்கித்து நின்று இருக்க, திங்கட்கிழமை அவனும் கல்லூரிக்கு சென்றான்...
அவள் வகுப்புக்கும் சென்றான்...
பாடம் எடுத்தான்...
குனிந்து இருந்த நாராயணி அவன் பேசும் போது கூட நிமிர்ந்து பார்க்கவில்லை...
அவனை பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது...
"நாராயணி" என்று வாய் விட்டே அழைத்து இருந்தான்...
நெஞ்சே அடைத்து விட்டது அவளுக்கு...
அவள் பெயரை சொல்லியே அத்தனை பேர் முன்னிலையில் கூப்பிட்டு விட்டான்...
பார்க்காமல் இருக்க முடியாது...
விலுக்கென ஏறிட்டு அவனைப் பார்க்க, "லுக் அட் மீ, வைல் ஐ ஆம் ஸ்பீக்கிங்" என்றான் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டு...
சொல்லி விட்டான்.
இனி குனியவும் முடியாது...
கொஞ்சமும் பிடிக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவனை பார்க்க பார்க்க, அவன் பேசியது தான் நினைவுக்கு வந்தது...
கண்கள் தாமாக கலங்கின...
அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
வகுப்பையும் முடித்தவனோ, நாராயணியை பார்த்து. "கம் டு மை ரூம்" என்று சொல்லி விட்டு சென்றான்.
அவளுக்கு மயக்கம் வராத குறை தான்...
"இன்னும் சைன் பிரச்சனை முடியலையா?" என்று கேட்டாள் ரித்விகா.
"தெரியல" என்று சொன்னவளுக்கு அவனிடம் செல்லவே மேனி கூசியது...
நாக்கில் நரம்பே இல்லாமல் பேசுபவன் முன்னால் நிற்கவே அருவருப்பாக இருந்தது...
போகவில்லை என்றால் அதற்கும் பிரச்சனை வரும்...
பேசாமல் அவனை பற்றி நிர்வாகத்தினரிடம் புகார் கொடுக்கலாமா? என்று கூட யோசித்தாள்.
அவன் சொந்தக்காரன் வேறு...
அதனையும் தாண்டி அவள் விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விடும்...
அவள் முறையற்று பிறந்தவள் என்று நண்பர்கள் அறிந்து கொள்ளவும் நேரிடும்...
அவளது இந்த பலவீனம் அவனுக்கு பலமாகி போக, அவளை இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க நினைத்து விட்டான் போலும்...
அவளும் அன்று தயங்கி தயங்கி அவன் அறை வாசலில் நின்று இருக்க, "கம் இன்" என்றான்...
உள்ளே நுழைந்தாள்.
அவனை ஏறிட்டுப் பார்க்கவே இல்லை...
தலையை குனிந்தபடி நின்று இருக்க, சுழல் நாற்காலியில் சுழன்றபடி அவளை பார்த்தவன், "உன்னட்ட அண்டைக்கு நான் என்ன சொன்னனான்" என்று கேட்டான்...
அவன் சொன்ன விஷயத்தை வீட்டில் சொன்னதை தான் கேட்கின்றான் என்று புரிந்தது.
"பிரச்சனை ஆக்கோணும் எண்டு சொல்லல்ல, வீட்ல சொல்லி அழுதேன், அது அப்படியே போய்ட்டு" என்று சொன்னாள்.
"முகத்த பார்த்து கதை" என்றான்...
மெதுவாக ஏறிட்டு அவனைப் பார்த்தாள்.
அவளையே ஆழ்ந்து பார்த்தவன், "நான் உன்னட்ட தப்பா ஒண்டும் கேட்கலையே, எனக்கு கீப் ஆஹ் வாறத்துக்கு உனக்கு என்ன கஷ்டம்? என்னால உன்னை சந்தோஷப்படுத்த முடியாது எண்டு நினைக்கிறியா? நம்பல எண்டா ஒரு ட்ரயல் போகலாம்" என்றானே பார்க்கலாம்...
நெஞ்சே அடைத்து விட்டது அவளுக்கு...
பச்சையாக சொன்னால், அவளை வெளிப்படையாகவே கட்டிலுக்கு அழைக்கின்றான்...
என்ன கேவலமான மனிதன் என்று தோன்றியது...
அழுது பயன் இல்லை...
ஆத்திரம் வேறு...
"இப்படி எல்லா கதைச்சா நான் மேனேஜ்மேண்ட் ல கம்பிளைன் பண்ணுவேன்" என்று சொன்னாள்.
எத்தனை நாட்களுக்கு தான் ஓடி ஒளிவது.
அவனை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்கின்ற நிலையில் அவள் பதில் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தாள்.
"சொல்லி தான் பாரேன்... அதுக்கு பிறகு இப்படி கூப்பிட்டு வச்சு கதைச்சிட்டு இருக்க மாட்டேன்... நீ கதற கதற சொன்னதை செஞ்சிட்டு தான் மறு வேலை" என்றான்...
திக்கென்று இருந்தது...
கற்பழிப்பேன் என்று வெளிப்படையாகவே சொல்கின்றான்...
அந்த வார்த்தையை அவன் சொல்லவில்லை...
ஆனால் அதற்கு அது தானே அர்த்தம்...
மூச்செடுக்கவே முடியவில்லை...
செய்து விடுவானோ என்று பயம் வேறு...
"ஏன் இப்படி எல்லாம் கதைக்கிறீங்க?" என்று பொறுமை இழந்து அழுகையுடன் கேட்டாள்.
"இப்ப எதுக்கு அழுது ஸீன் போடுற? சொல்ல வேணாம் எண்டு சொன்னேன். நீ கேட்கல, அப்ப பிழை உன் மேல தானே" என்றான்...
"நீங்க கதைச்சது பிழை தானே" என்றாள்.
"உன்ட அப்பா பண்ணாததையா நான் கதைச்சிட்டேன்?" என்று கேட்டான்...
அவனுக்கு முழு கோபம் புருஷோத்தமன் மீது என்று அவளுக்கு புரிந்தது.
ஆனால் அவள் என்ன செய்வாள் அதற்கு?
"அதுக்கு நான் என்ன செய்யுறது?" என்று கேட்க, "உனக்கு ஏதும் கதைச்சா உன்ட அப்பாவுக்கு குத்துதே, அது போதுமே எனக்கு" என்றான்...
இது என்ன வக்கிரமான புத்தி என்று தான் தோன்றியது...
தெரியாமல் செய்தால் சொல்லி புரிய வைக்கலாம்.
தெரிந்தே செய்யும் அவனை என்ன செய்வது?
"ஒரு லெக்சரர் ஆஹ் இருந்துட்டு இப்படி கதைக்கலாமா?" என்று அவள் கேட்ட நேரம் சட்டென கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டாள்.
"இத விட கேவலமா கூட கதைப்பேன், பாவம் எண்டு விடுறன், பார்த்து இருந்துக்கோ" என்றான்.
இவன் எல்லாம் மனித பிறவியே இல்லை என்று தோன்றியது...
இதயத்தில் அப்படி ஒரு வலி...
விறு விறுவென வெளியில் வந்தவளோ, கண்ணீரை துடைத்துக் கொண்டே மீண்டும் வகுப்புக்குள் சென்றாள்.
"என்னவாம் டி" என்று ரித்விகா கேட்க, "ஒண்டும் இல்ல" என்றாள்.
அவளது மொத்த சந்தோஷத்தையும் துடைத்து எறிந்து விட்டான் அவன்...
அன்று வீட்டுக்கு சென்றாள்.
"இண்டைக்கு அவன் ஏதும் கதைச்சானா?" என்று கருணா கேட்டார்.
"இல்ல" என்று சொன்னவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சொன்னால் பிரச்சனை வரும் என்று அவளுக்கும் தெரியும்.
அவன் அடங்க மாட்டான், அடுத்த நாள் இதனை விட கேவலமாக பேசுவான்...
இன்று கற்பழிப்பேன் என்று வெளிப்படையாக மிரட்டியவன், நாளை அதனை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம்?
புருஷோத்தமனின் மருமகனாக அவன் பேசியதை விட, ஒரு விரிவுரையாளராக அவன் பேசியது தான் அவளுக்கு ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் கொடுத்தது...
இப்படி பேசுபவன், தன்னை சரியான பார்வையில் பார்ப்பானா? என்று எல்லாம் கற்பனைகள் ஓடின.
அழுகை வந்தது...
வாயை மூடி அழுதாள்...
இதே சமயம், ஜனார்த்தனன் பவித்ரனுடன் தான் விளையாடிக் கொண்டு இருந்தான்...
ரெண்டு நாட்கள் கோபத்தில் ஏதோ எல்லாம் பேசி விட்டான்...
ஆனால் இன்று அவள் அழுதது ஒரு மாதிரி இருந்தது...
வெள்ளிக்கிழமை அவள் அழுதது ஒரு வித இதத்தை கொடுத்தது...
அந்த இதம் இன்று தோன்றவில்லை...
அதிகப்படியாக பேசி விட்டோமோ என்று தான் தோன்றியது...
தான் செய்வது அநியாயம் என்று தெரியும்...
ஆட்கள் சொன்னால் அவன் கேட்க மாட்டான்... யாரும் செய்ய வேண்டாம் என்று சொன்னால் அதனை தான் முதலாவதாக செய்வான்... வெள்ளிக்கிழமை செய்ய வேண்டாம் என்று சொன்னதாலேயே இன்று செய்து விட்டு வந்திருந்தான்.
சொல் பேச்சு கேட்கும் குணம் அவனுக்கு கொஞ்சமும் இல்லை. அவனாகவே உணர்ந்து மாறினால் தான் உண்டு...
அதுவும் அவளை எதுவும் செய்ய வேண்டாம் என்று எல்லாரும் சொல்ல சொல்ல, அவளை ஏதாவது செய்தாக வேண்டும் என்று வெறி தோன்றுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை...
இன்றும் கூட, "நான் சொல்றன் எண்டு கோவிக்காதே ஜனா, நாராயணிட்ட அப்படி கதைக்காதே" என்றான் பவித்ரன்...
ஜனார்த்தனனோ, "அத நீ சொல்லாதே" என்று அவன் பேச்சுக்கு தடை போட்டான்...
வீட்டுக்கு சென்றாலும் நாராயணியை பற்றியே கனகசிங்கம் அவனிடம் பேசி பேசி, தானாக அமைதியாக நினைத்தவனை சீண்டி விட்டு இருக்க, அதன் விளைவு, அடுத்தடுத்த வாரங்களில் அவன் நேரடியாக நாராயணியிடம் வன்மத்தை காட்டவில்லை என்றாலும் அவளது மிட் டேர்ம் புள்ளிகளில் விளைவாக வந்து நின்றது...
நோட்டீஸ் போர்ட் முன்னே வெறித்து பார்த்தபடி நின்று இருந்தாள் நாராயணி.
அவள் நன்றாக செய்த பாடம் அது...
சி மைனஸ் ரிஸல்ட்ஸ் வந்து இருந்தது... ஏ எதிர்ப்பார்த்த இடத்தில் சி மைனஸ் என்பது பேரதிர்ச்சி தானே...
இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை.
அந்த பாடத்துக்கு உரியவன் ஜனார்த்தனன் ஆயிற்றே. அவளுக்கு மார்க்ஸ் போட்டு விடுவானா என்ன?
"என்னடி இது?? நீ தானே எங்களுக்கெல்லாம் சொல்லி தந்த " என்று சொன்ன ரித்விகாவை பார்த்தவளுக்கு விழிகளில் இருந்து நீர் வழிந்து விடும் நிலைமை தான்.
இது ஜனார்த்தனன் செய்த வேலை என்று அப்பட்டமாக தெரிந்தது... எத்தனை நாட்கள் தான் அவன் கொட்ட கொட்ட குனிவது... அவளுடன் அசிங்கமாக பேசுவதில் ஆரம்பித்து, அவள் வாழ்க்கையிலேயே கை வைக்க ஆரம்பித்து விட்டான்.
இன்று கேட்டு விட வேண்டும் என்று முடிவுடன் அவன் அறையை நோக்கி சென்றாள்...
ஜனார்த்தனன் அறைக்குள்ளேயே வந்தவளை புருவம் சுருக்கிப் பார்த்தான்.
அவன் முன்னே வந்து நின்றவள், "பிசினஸ் மேனேஜ்மேண்ட் மிட் எக்ஸாம் ரிஸல்ட்ஸ் போர்ட் ல பார்த்தேன்" என்றாள்...
"பார்க்கிறதுக்கு தானே போட்டிருக்கு" என்றான் எகத்தாளமாக.
அவளுக்கு ஆத்திரம் வந்தாலும் அடக்கிக் கொண்டே, "நான் நல்லா தான் செஞ்சேன்" என்றாள்.
அவனோ, "நல்லா செஞ்சா ஏன் இந்த ரிசல்ட் வந்து இருக்க போகுது?" என்றான். அவளோ, "நீங்க தனிப்பட்ட கோபத்தை இதுல காட்டி இருக்கீங்க எண்டு நினைக்கிறேன்" என்றாள் முகத்துக்கு நேரே.
"உனக்கு என்னோட எந்த தனிப்பட்ட கோபமும் இல்லையே" என்றான் ஒரு வன்ம புன்னகையுடன்.
"அப்போ நான் என்ட பேப்பரை பார்க்கலாமா?" என்று கேட்டாள்.
"அந்த பழக்கம் நம்மட கேம்பஸ் ல இருக்கா என்ன?" என்றான் இதழ்களை பிதுக்கி...
அவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டே வர, "நீங்க என்ன எவ்வளவு கேவலமா எண்டாலும் கதைங்க, ஆனா என்ட படிப்புல கை வைக்காதீங்க ப்ளீஸ்" என்றாள் கெஞ்சுதலாக...
அவள் இப்படி இறைஞ்சி கேட்பது அவனுக்கு என்னவோ போல ஆகி விட்டது...
அவளையே மௌனமாக பார்த்துக் கொண்டு இருக்க, "நானும் என்ட அம்மாவும் யாருட காசுலயும் வாழ கூடாது எண்டு நினைக்கிறன், அதுக்கு இந்த படிப்பு சரியான தேவை" என்றாள்.
அவனுடன் ஏட்டிக்கு போட்டி நின்று பயன் இல்லை என்று தெரிந்தது.
காலில் விழுந்தாவது தனது கல்வியை காத்துக் கொள்ள நினைத்து விட்டாள்.
அவளுக்கும் வேறு வழி இல்லை.
அவனை பகைத்து கொள்ளவும் முடியாது...
இப்படியே விட்டால் அவள் பாஸ் அவுட் ஆகி, வேலை செய்வது எல்லாமே கனவாகி போய்விடும்...
அவள் மொத்த வாழ்க்கையும் அவன் கைக்குள் இருக்கும் போது என்ன தான் செய்ய முடியும் அவளால்...
கெஞ்ச தான் முடியும்...
சாதாரணமாக கெஞ்சவில்லை...
கை கூப்பி கண்ணீருடன் கெஞ்சினாள்.
தனது கல்விக்காக அவன் காலில் விழ கூட தயாராக இருந்தாள்.
அவன் முகம் சட்டென இறுகியது...
"ஓகே, இங்க இருந்து போ" என்றான்.
"என்ன எவ்வளவு கேவலமா கதைக்கிறது எண்டாலும் கதைங்க, ஆனா இந்த படிப்புல மட்டும் எதுவும் செய்யாதீங்க, இத வச்சு தான் நான் இந்த சமூகத்துல எனக்கான அடையாளத்தை தேடணும், எனக்கான அடையாளம் எனக்கு எப்பவும் கிடைச்சதே இல்ல" என்று அழுகையுடன் சொன்னவள், அடக்க முடியாமல், ஷாலினால் முகத்தை மூடி அளவும் ஆரம்பித்து விட்டாள்.
அவள் பேசப் பேச அவனுக்கு சுருக்கென்று இருந்தது...
அவளை என்ன எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றான் என்று தலையில் ஆணி அடித்த போல உறைத்தது.
"இனி உன்ட மார்க்ஸ் ல கை வைக்க மாட்டேன், இங்க இருந்து போ" என்றான்...
அவளும் கண்ணீரை துடைத்து விட்டு வெளியே வந்து விட்டாள்.
அவனுடன் பேசி விட்டு வந்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...
ஆனால் அவனுக்கு பாரமேறியது...
அவள் சொன்ன அந்த வார்த்தை அவனை கடித்து குதறியது.
அப்போது அவளுக்கும் புருஷோத்தமனை பிடிக்காதா?
அவரை இவ்வளவு வெறுக்கும் பெண்ணை அதிகப்படியாக காயப்படுத்தி விட்டோமோ என்று இப்போது தோன்றியது...
மனம் ஒரு மாதிரி தளம்பலாக இருந்தது...
அதுவும் அவள் இன்று கை கூப்பி அழுதது அவனையும் அசைத்து பார்த்தது...
இதற்கு மேல் அவளை காயப்படுத்த முடியாது என்று அவனுக்கும் புரிந்து விட்டது...
யார் மீதோ இருக்கும் கோபத்தை, எதற்கு அவள் மீது காட்ட வேண்டும்?
அவளை அவனுக்கு பிடிக்கும்...
புருஷோத்தமன் மகளாக பிறந்த ஒரே காரணத்துக்காக சும்மா அவளை வதைத்துக் கொண்டு இருக்கின்றோமோ என்று தோன்றியது.
ஒன்று அவளை கண்டு கொள்ளாமல் கடக்க வேண்டும்...
இப்படி இழுத்து வைத்து ஊசியால் குத்துவது அதிகப்படி என்று தான் தோன்றியது...
அதுவும் அவள் படிப்பில் கையை வைத்தது ஒரு மாதிரி அழுத்தமாக இருந்தது...
அன்று வீட்டுக்கு வந்தவன் பேட்மிண்டன் விளையாட செல்லவும் இல்லை.
குளித்து விட்டு, இடையில் ஷார்ஸுடன் கண்ணாடி முன்னே தன்னையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.
அவளது புள்ளியில் கை வைத்ததை நினைத்து, "பச்" என்றபடி சலிப்பாக கழுத்தை வருடிக் கொண்டான்...
அவனுக்குள் அவள் மொத்தமாக இறங்கி விட்டாள்.
அது அவனுக்கே புரிந்தது...
இத்தனை நாட்கள் புருஷோத்தமனின் மகள் என்கின்ற ஒரே காரணத்துக்காக அவள் மீது வெறுப்பாக இருந்தது.
இன்று அவள் பேசியதும் அழுததும் அவனை என்னவோ செய்து கொண்டு இருந்தது...
'அவளை பிடிக்கும் தானே உனக்கு?' என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான்.
'ஆம்' என்கின்ற பதில் மட்டுமே மனசாட்சியிடம் இருந்து வந்தது...
அவன் காதல் ஆழமாகி, இப்போது அவளை திருமணம் செய்யும் அளவுக்கு அவன் மனநிலையில் மாற்றம்...
யார் சொல்லியும் அவன் கேட்கவில்லை, அவள் சில வார்த்தைகளே மனம் விட்டு பேசினான்...
மொத்தமாக மாறி விட்டான்...
அவளுக்கான அங்கீகாரம் அவளுக்கு கிடைக்கவே இல்லை என்று அவள் சொன்னது மனதை பிசைந்தது...
தனது மனைவியாக அங்கீகாரம் கொடுக்க தயாராகி விட்டான்...
தேவை இல்லாமல் பேசியதற்கு எல்லாம் தன் மீதே கோபம் வந்தது...
ஏற்கனவே தனது பிறப்பினால் வலியை அனுபவித்துக் கொண்டு இருப்பவளை, மீண்டும் மீண்டும் ஊசியால் குத்துவது போல பேசியது எவ்வளவு மோசமான செயல் என்று தோன்றியது...
அவனுக்கு தன்னை பற்றி யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்கின்ற மனநிலை தான் எப்போதும்...
ஆனால் இன்று அவள் தன்னை பற்றி என்ன நினைத்து இருப்பாள்? என்று முதல் முறை தடுமாறி போனான்...
இனி அவளை எப்போதும் காயப்படுத்துவது இல்லை என்று முடிவெடுத்தவன், அவளது படிப்பு முடிந்ததும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் கடந்து, அவளை திருமணம் செய்யும் முடிவையும் உறுதியாக எடுத்து இருந்தான். அதன் பிறகே அவனுக்கு நிம்மதியான தூக்கம் வந்தது.
இதே சமயம் அன்று நாராயணி வீட்டுக்கு சென்றாள்.
இன்னுமே படிப்பு விஷயத்தில் இருந்து அவளால் வெளி வர முடியவே இல்லை...
அவளது மொத்த குறிக்கோளும் படிப்பில் தான் இருந்தது...
அதையே அவன் பகடைக்காயாக்கி விளையாடிக் கொண்டு இருக்கின்றானே...
அவன் என்ன சொன்னாலும் இப்படி இறுதி பரீட்சையில் பண்ண மாட்டான் என்று என்ன நிச்சயம்...
மொத்த அதிகாரமும் அவனிடம் இருந்ததே...
இதனை தாயிடம் சொல்வதா வேண்டாமா? என்று அவள் தடுமாறிக் கொண்டு இருந்தவள் ஒரு பிடிப்பே இல்லாமல் தான் அடுத்த நாள் இருந்து கல்லூரிக்கு சென்றாள்.ஆனால் அவன் அதன் பிறகு அவளை தொந்தரவு செய்யவில்லை... வகுப்பு எடுப்பான், அவளையும் பார்ப்பான். பார்ப்பதுடன் நிறுத்தி விடாமல், ரசித்தும் கொள்வான். ஆனால் அவளை தொந்தரவு செய்ய அவன் நினைக்க கூட இல்லை. சாதாரணமாக இருந்தான்.
இறுதி பரீட்சையும் முடிந்து, அவளுக்கு சிறந்த புள்ளிகள் தான் கிடைத்து இருந்தன.
சொன்ன போலவே அவன் எதுவும் செய்யவில்லை...
அவளும் இறுதி ஆண்டுக்குள் நுழைந்து விட்டாள்.
அப்போதும் அவளுக்கு வகுப்பெடுக்க வந்திருந்தான் ஜனார்த்தனன்...
பெரிதாக அவளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இப்போதெல்லாம் பத்தோடு பதினொன்றாக அவளை கடந்து செல்ல பழகி இருந்தான்... இல்லை இல்லை கடந்து செல்வது போல காட்டிக் கொண்டான்.
உள்ளுக்குள் காதலித்துக் கொண்டு இருந்தான்.
Last edited: