ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 5

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 5

கருணாவை சாமாதானப்படுத்த படாத பாடு பட்ட புருஷோத்தமனோ, "நாராயணி" என்று அழைக்க அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டே, ஹாலுக்குள் வந்தாள்.

"ஜனார்த்தனனன் கேட்டது உண்மை தானே" என்று நிச்சயப்படுத்திக் கொள்ள கேட்டார்.

"நான் எதுக்கு இவ்ளோ கேவலமா பொய் சொல்ல போறேன்?" என்று ஆதங்கமாக வந்தன அவள் வார்த்தைகள்...

யார் பேசினாலும் கோபமாக தான் வந்தது.

புருஷோத்தமனோ, "நான் அவன்ட்ட கதைக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே எழ, "அங்கே கதைச்சு என்ன ஆக போகுது" என்று ஆரம்பித்தவளுக்கு அவரிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டி இருந்தாலும், அவற்றை விழுங்கிக் கொண்டே, மீண்டும் அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டாள்.

அவள் முதுகை வெறித்து விட்டு, வீட்டுக்கு கிளம்பிய புருஷோத்தமனுக்கு ஜனார்த்தனன் மீது கொலை வெறி ஆத்திரம் தான்...

தவறு அவர் மீது என்று அவருக்கும் தெரியும்...

உணர்ச்சி வேகத்தில் அவர் செய்த தவறு, இப்போது நாராயணி ரூபத்தில் வளர்ந்து நின்றது...

செய்த தவறுக்காக அவர்களை நட்டாற்றில் அவர் கை விட நினைக்கவில்லை...

இன்று வரை கட்டி காத்துக் கொண்டு இருக்கின்றார்.

ஊர் ஆயிரம் பேசியது...

நிர்மலா செருப்பால் அடிக்காத குறையாக திட்டி இருக்கின்றார்...

கனகசிங்கம் காறி துப்பி இருக்கின்றார்...

தான் செய்த தவறுக்கான தண்டனை என்று நினைத்தவருக்கு நாராயணி மீது பாசம் நிறையவே இருந்தது...

நிர்மலாவின் பிள்ளைகளுக்கு நிகரான பாசம்...

ஆனாலும் அவர்களது தினசரி தேவையை தாண்டி, நாராயணிக்கு பொட்டு தங்கம் கூட வாங்கி கொடுக்க முடியாத நிலை இருந்தது.

மாதா மாதம் அவர்களுக்கு பணம் கொடுப்பதற்கே, தினமும் நிர்மலா குத்தல் பேச்சுக்கள் பேசுவார்...

புருஷோத்தமன் செய்த தவறால் இன்று வரை அவருக்கு நிம்மதி என்பதே இல்லை...

செய்த பாவத்துக்கு தண்டனை என்று அவர் வாழ்ந்து கொண்டு இருந்தார்.

ஆனாலும் இன்று ஜனார்த்தனன் பேசியதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை...

என்ன தான் இருந்தாலும் அவர் மகளை பார்த்து அவன் எப்படி இப்படி கேட்கலாம் என்று ஆதங்கமும் கோபமும் அவருக்கு...

இவர்களின் நிம்மதியை மொத்தமாக குலைத்த ஜனார்த்தனனனுக்கு சின்ன உறுத்தல் கூட இல்லை...

வழக்கம் போல பவித்ரனுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டு இருந்தான்...

அத்துடன் நிறுத்தாமல் தான் நாராயணியிடம் பேசியதை கொஞ்சம் கூட பயமோ தயக்கமோ இல்லாமல் சொன்னான்...

பவித்ரனுக்கு தான் அவன் சொன்னதை கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது...

என்ன பேசி விட்டு வந்து இருக்கிறான் என்று தான் தோன்றியது...

தந்தையின் செயலால் அவனுக்கும் அவர் மீது கோபம் இருந்தது...

வீட்டிலேயே இருப்பவருடன் நீண்ட நாள் கோபம் காட்டவும் முடியவில்லை...

இயல்பாகவே அவனிடம் மென்மையும் மன்னிக்கும் குணமும் இருந்தது.

அதனால் புருஷோத்தமனையே அவன் மன்னித்து விட்டான்...

அப்படி பட்டவனுக்கு எதுவும் செய்யாத நாராயணி மீது கோபம் இருக்க வாய்ப்பில்லேயே.

அதனாலேயே ஜனார்த்தனன் செய்ததை அவனால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

அவன் சொல்லி கேட்பவன் அல்ல என்று தெரிந்தாலும், மனம் கேட்காமல் மனதில் பட்டதை பேச நினைத்தான்.

பவித்ரனோ, "உண்மையாவே இப்படி கேட்டியா?" என்க, "ஓம். எனக்கு அவளை பாக்கிற நேரம் எல்லாம் பத்திட்டு வருது... கள்ள சைன் அடிக்கிறாள், விட சொல்றியா என்ன?" என்றபடி அவன் வேகமாக அடித்த பூப்பந்தை அடிக்க முடியாமல் தவற விட்ட பவித்ரனோ, "அதுக்காக இப்பிடியா கேட்டு வைப்ப? சின்ன பிள்ளை எல்லா" என்றான்.

"என்னடா தங்கச்சி பாசமா?" என்றான் ஜனார்த்தனன்.

"எப்படி எண்டாலும் வச்சு கொள்ளு, படிக்கிற பிள்ளைட்ட" என்று ஆரம்பிக்க கையை நீட்டி பேச வேண்டாம் என்று தடுத்த ஜனார்தனனோ, "எனக்கு உன்ட அட்வைஸ் தேவல. எனக்கு என்ன செய்யோணும் எண்டு தெரியும்" என்றான்.

அவன் விறுக்கு தனம் தெரிந்த பவித்ரனும் அமைதியாக அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி டவலினால் வியர்வையை துடைத்த ஜனார்தனனையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் அருகே அமர்ந்து கொண்டே அலைபேசியை எடுத்து பார்த்த ஜனார்த்தனனோ, "இதோட முப்பது கோல் எடுத்து இருக்காள்" என்றான்.

"யாரு?? ஜீவனியா?" என்று கேட்க, "இவளை கல்யாணம் கட்டி எப்படி காலம் தள்ளுறது?? சரியான அரியண்டம் பிடிச்சவள். அதான் கல்யாணத்தை நிப்பாட்ட சொன்னனான். திருப்பி திருப்பி எடுத்திட்டே இருக்காள். ரெண்டு நாள் கதைச்சதுக்கு அவள்ட கற்பு போன போல டயலொக் விடுவாள். எரிச்சலா இருக்கும். சரியான சைக்கோ. நம்பரை ப்லொக் பண்ணுனா புது புது நம்பர் ல இருந்து எடுக்கிறாள், இவளெல்லாம் டொக்டர் எண்டு எப்படி தான் பேஷண்ட்ஸை ட்ரீட் பண்ணுறாளோ?" என்று சலித்தபடி அலைபேசியை பாக்கெட்டில் போட்டான்.

"உன்னை பிடிச்சிட்டு போல" என்று பவித்ரன் சொல்ல, "அவளுக்கு பிடிச்சா போதுமா... எனக்கு இந்த அன்பு தொல்லை எல்லாம் அலர்ஜி" என்றான் சலிப்பாக.

இப்படி இலகுவாக மனங்களை நொறுக்கி விடும் அவனை யோசனையாக பார்த்திருந்த பவித்ரனோ, "நீயும் ஒரு நாளைக்கு இப்படி திரிய வேண்டி வந்தாலும் வரும்" என்றான்.

"யாரு நானா?? வாழ்க்கை முழுக்க சன்னியாசியா இருந்தாலும் இருப்பேன் தவிர இந்த பொம்பிளைங்க பின்னால வழிய மாட்டேன்" என்றான் அழுத்தமாக.

"நானும் பார்க்க போறன் தானே" என்றான் பவித்ரன்.

"என்னத்தை பார்த்து கிழிக்க போறா? உன்னை போலவும் செழியன் போலவும் ஆட்கள் தான் இப்பிடி திரிவானுங்க, பொம்பிளை அழுதா போதுமே, உடனே பாவம் அது இது எண்டு அதுகள்ட நடிப்பை நம்பிட்டு பின்னால போக வேண்டியது, உன்ட அப்பாவையும் அதனால தானே மன்னிச்சுட்டு இருக்கா, நானா இருந்தா இந்த நேரத்துக்கு அந்த ஆளை வீட்டை விட்டு துரத்தி இருப்பேன்" என்றான்.

அவன் இப்படி பேசுவது பவித்ரனுக்கு நெருடலாக இருந்தாலும், அவன் பேச்சும் தொனியும் இப்படி தான்...

கோர்ட் ஷூட் போட்ட லோக்கல் ரவுடி அவன்...

"சரி விடு, வீட்டுக்கு வெளிக்கிடுவோம்" என்று சொல்லிக் கொண்டு, அவனுடன் அங்கிருந்து கிளம்பி இருந்தான் பவித்ரன்.

இடையில் நாராயணி பற்றி பேச்சே வராமல் பவித்ரன் பார்த்துக் கொண்டான்.

நாராயணிக்கு திட்டுவது மட்டும் அல்லாமல், புருஷோத்தமனுக்கும் கண்ட மேனிக்கு திட்டிக் கொண்டல்லவா இருக்கின்றான்...

பவித்ரனை வீட்டில் விட்ட நேரம், அங்கே வாசலில் காத்துக் கொண்டு இருந்த புருஷோத்தமனோ பவித்ரனை தாண்டி சென்று, ஜனார்த்தனனின் கார் கண்ணாடியை தட்டினார்...

பவித்ரனுக்கு தூக்கி வாரிப் போட்டது...

தந்தையின் முகமும் சரி இல்லை...

ஜனார்த்தனனின் மனநிலையும் சரி இல்லை...

அவன் பேசி விட்டு வந்தது புருஷோத்தமனுக்கு வந்திருக்குமோ என்று ஐயம் வர, அவனும் அருகே சென்றான்.

ஜனார்த்தனன் கார் கண்ணாடியை இறக்க, "உன்னட்ட கொஞ்சம் கதைக்கோணும்" என்றார்.

நீண்ட நாட்கள் கழித்து முகத்தை பார்த்து பேசினார்.

நாராயணி சொல்லி விட்டாள் என்று அவனுக்கு புரிந்தது...

அதற்காக எல்லாம் அவன் பதறவில்லை.

அவன் எல்லாம் பதறும் மனிதனா என்ன?

"கொஞ்சம் தள்ளுனா தானே, கதவை திறக்க ஏலும்" என்றான்.

விலகி நின்றார்.

காரில் இருந்து இறங்கி கதவை மூடி விட்டு காரிலேயே சாய்ந்து நின்றவன், "என்ன கதைக்கோணும்?" என்று கேட்டான்.

"உள்ளே வா" என்றார்.

"எனக்கு உள்ளே வர நேரம் இல்ல" என்றான் முகத்தில் அடித்த போல.

"அப்பா என்ன பிரச்சனை?" என்று அருகே நின்ற பவித்ரன் கேட்க, "தப்பு செஞ்சது நான், அதனால் தான் இவன் எவ்வளவு என்னை அசிங்கப்படுத்தினாலும் நான் ஒண்டும் சொல்லாம இருந்தனான். அந்த புள்ள என்ன தப்பு செஞ்சவள்? எவ்வளவு அசிங்கமா கதைச்சு வச்சு இருக்கான் தெரியுமா?" என்று ஆதங்கமாக கேட்க, பவித்ரனுக்கு என்ன செய்வது என்று தான் தெரியவில்லை...

ஜனார்த்தனன் பேசியது தவறு என்று தெரியும்...

அவன் பக்கம் நிற்க முடியாது...

அதற்காக தந்தைக்கும் சார்பாக பேசி விட முடியாது...

அப்படி பேசினால் ஜனார்த்தனன் வானுக்கும் பூமிக்கும் நடுவே குதிப்பான்.

"அப்பா இத பிறகு கதைக்கலாமே" என்று புருஷோத்தமனை தான் சமாதானப்படுத்த முயன்றான்...

அவன் சொல்லி ஜனார்த்தனன் கேட்க போவது இல்லை, புருஷோத்தமனாவது சமாதானம் ஆகி இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்தால் என்ன? என்கின்ற எண்ணம் தான் அவனுக்கு...

புருஷோத்தமனோ, "என்னட்ட கதைக்கிற நீ உன்ட மச்சான்ட கதையேன், அவன் என்ன கதைச்சான் தெரியுமா?" என்று கேட்க, "தெரியும் அப்பா, நீங்க முதல் உள்ளே வாங்க" என்றான்.

"எப்படி வாறது? சின்ன பெட்டை அவள்... ஒரு லெக்சரர் நடந்து கொள்ளுற முறையா இது? அசிங்கமா இருக்கு" என்று சொல்ல, அதுவரை அமைதியாக இருந்த ஜனார்த்தனனோ குரலை செருமிக் கொண்டே, "நீங்க மட்டும் ஒரு சின்ன பிள்ளையை கீப்பா வச்சு பிள்ளை கொடுக்கலாம், நான் உங்கட மகளை வச்சு இருக்க கூடாதா?" என்று கொஞ்சமும் சலனமே இல்லாமல் கேட்டான்.

இத்தனை நாள் மனதுக்குள் அழுத்தி வைத்த கோபம் எல்லாம் இன்று வன்ம வார்த்தைகளாக அவன் வாயில் நர்த்தனம் ஆடின...

"என்னடா கதைக்கிற?" என்று கேட்டுக் கொண்டே, அவனை நோக்கி செல்ல, அவன் கொஞ்சமும் அசையவில்லை. அப்படியே நின்று இருந்தான்.

இப்போது புருஷோத்தமனை எட்டி பிடித்தது என்னவோ பவித்ரன் தான்...

"அப்பா, பக்கத்து வீட்ல எல்லாரும் சத்தம் கேட்டு வர போறாங்க, உள்ளே வாங்க" என்று சொன்னவனோ, அங்கே நின்ற ஜனார்த்தனனிடம், "அவரை வெறுப்பு ஏத்தாம வெளிக்கிடு, ப்ளீஸ் உன்னட்ட கெஞ்சி கேக்கிறேன்" என்றான்...

அவன் இருவரையும் ஆழ்ந்து பார்த்து விட்டு, காரில் ஏறி, காரை எடுத்துக் கொண்டே புறப்பட்டு விட, "இவன் எல்லாம் என்ன மனுஷன்?" என்று கேட்ட புருஷோத்தமனுக்கு மனம் அழுந்த ஆரம்பித்து விட்டது...

என்ன வார்த்தைகள் கேட்டு விட்டான்...

பவித்ரனோ, "நான் அவன்ட கதைக்கிறேன்" என்றான்...

"என்ன கதைக்க போறா? நான் தான் பிழை விட்டேன்... என்னை இவன் எவ்வளவு அசிங்கப்படுத்தி இருக்கான். ஒரு வார்த்தை மாறி கதைச்சு இருப்பனா? இப்போ வரைக்கும் உன்ட அம்மா கதைக்கிறத கேட்டுட்டு உங்களோட தான் இருக்கிறன், ஏன் எண்டா பிழை எண்டது... திட்டுறது அசிங்கப்படுத்துறது என்னோட போகட்டும்... அந்த பிள்ளைட்ட தேவை இல்லாம கதைக்க இவன் யாரு? எனக்கு பிறந்து அந்த பிள்ளை தான் கஷ்டப்படுறாள், நான் செத்த பிறகு அவள் என்ன தான் செய்ய போறாள் எண்டு தெரியல" என்று சொன்னவருக்கு தாங்க முடியாமல் அழுகை வர, கண்களை துடைத்துக் கொண்டார்...

பவித்ரன் அவரை பரிதாபமாக பார்த்துக் கொண்டான்...

அவனால் என்ன செய்து விட முடியும்?

அவனை போல பரந்த மனம், நிர்மலாவுக்கும் இல்லை, ஜனார்தனனனுக்கும் இல்லை.

அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது...

நிர்மலா பாதிக்கப்பட்டவர், அந்த கோபத்தை சட்டென அவரால் விட்டுக் கொடுக்க முடியவில்லை...

ஜனார்த்தனன் இயல்பாகவே இப்படி முரட்டு தனமானவன் தான்...

ஆனால் இன்று அவன் நாராயணியிடம் பேசியது மிகவும் அதிகப்படி...

அதனை சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

"சரி உள்ளே வாங்க, அம்மா பிறகு என்ன எண்டு கேட்பாங்க" என்று சொல்லிக் கொண்டே அவரை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றான்.

ஜனார்த்தனன் பெரிதாக இந்த விஷயத்தை பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், தான் சொன்னதையும் மீறி இதனை எல்லாரிடமும் நாராயணி சொன்ன கோபம் உள்ளுக்குள் இருந்தது...

'திங்கட்கிழமை இருக்குடி உனக்கு' என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டே காரை ஓட்டியவனது அலைபேசி அலறியது...

வழக்கம் போல ஜீவனி தான்...

காருடையை ப்ளூ டூத்தில் தான் கனெக்ட் பண்ணி இருந்தான்...

வந்த அழைப்பை அவன் கடுப்பாக ஏற்றுக் கொண்டே, "உனக்கு என்னடி வேணும்?" என்று அதட்டலாக கேட்டான்.

ஜீவனிக்கு திக்கென்று இருந்தது...

"நான் என்ன பிழை விட்டேன்?" என்று தடுமாறிக் கொண்டே கேட்க, "எனக்கு உன்னை போல சைக்கோவோட வாழ ஏலாது, மனுஷன் எண்டா கொஞ்சமாவது செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்கனும் எண்டு எதிர்பார்க்கிற ஆள் நான்... நீ என்னென்னடா செருப்பால அடிச்சாலும் திரும்ப வாற காரெக்டர்... உன்னோட எல்லாம் வாழ ஏலாது, இன்னொரு தடவை ஃபோன் வந்தா உண்ட வீட்டுக்கு கோல் எடுத்து, அசிங்கசிங்கமா கேட்பன்" என்று சீற, சட்டென அலைபேசி துண்டிக்கப்பட்டது...

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே வண்டியை ஓட்டினான்...

இதே சமயம் வீட்டில் இருந்த புருஷோத்தமனுக்கு மனம் ஆறவே இல்லை...

ஜனார்த்தனன் பேசியதை சட்டென கடந்தும் விட முடியாமல் தவித்தவர் அழைத்தது என்னவோ கனகசிங்கத்துக்கு தான்...

முதல் இருந்த நெருக்கம் அவர்களுக்கு கருணாவின் பிரச்சனைக்கு பிறகு இருக்கவில்லை...

கொஞ்சம் மரியாதையான விலகல் மட்டும் இருந்தது...

நல்லது கெட்டதுக்கு வருவார்கள்...

ஆனால் தேவையை தாண்டி பேசிக் கொள்ள மாட்டார்கள்...

கனகசிங்கம் ஜனார்த்தனன் போல புருஷோத்தமனை அவமானப்படுத்துவது எல்லாம் இல்லை... கருணாவின் விஷயம் தெரிந்த சமயம் கண்ட மேனிக்கு புருஷோத்தமனுக்கு திட்டி, காறி துப்பி கோபத்தை எல்லாம் இறக்கியவர் தான் கனகசிங்கம்... அதன் பிறகு அதனையே பேசி பேசி மன நிம்மதியை அவர் கெடுக்க விரும்பவில்லை.

புருஷோத்தமன் மீது கோபம் இருந்தாலும் மரியாதை கொடுப்பார்...

இன்று புருஷோத்தமன் எடுத்ததுமே யோசனையாக அலைபேசியை எடுத்து பார்த்தவர், அதனை காதில் வைக்க, "மச்சான் உங்களோட கொஞ்சம் கதைக்கலாமா?" என்று பவ்வியமாக தான் கேட்டார் புருஷோத்தமன்.

"ஓம் சொல்லுங்க" என்று அவரும் சொல்ல, "ஜனார்த்தனன் இண்டைக்கு என்ன கதைச்சு இருக்கான் தெரியுமா?" என்று ஆரம்பித்து விஷயத்தை சொன்னவர், "அவ சின்ன பிள்ளை மச்சான். எனக்கு என்ன வேணும் எண்டாலும் கதைக்க சொல்லுங்க, அவள் படிச்சு முடிக்கணும், கொஞ்சம் நிம்மதியா படிக்க விட சொல்லுங்க" என்று சொன்னார்.

கனகசிங்கத்துக்கும் மகன் பேசியது நெருடலாக இருந்தது...

அவருக்கும் கருணாவின் குடும்பம் மீது கோபம் இருந்தது...

நாராயணியை கொன்று விடுவேன் என்று கோபத்தில் மிரட்டி இருக்கின்றார் தான்...

அது தவறு என்று வயது ஏற ஏற தோன்றியது...

தவறு செய்தது புருஷோத்தமன்...

அந்த குழந்தை என்ன பாவம் செய்தது? அந்த குழந்தைக்கு தான் ஏன் அப்படி பேசினேன்? என்று எண்ணம் அவருக்கு பிறகு உண்டானது தான்...

அதே தவறை, இல்லை இல்லை, அதனை விட மோசமான தவறை மகன் செய்து இருக்கின்றான் என்று புரிந்தது...

"சரி நான் அவனோட கதைக்கிறேன்" என்று சொல்லி விட்டு வைத்தவருக்கு தெரியும், தான் என்ன பேசினாலும் அவன் அதனை காது கொடுத்து கேட்க போவது இல்லை என்று...

அதற்காக இதனை சாதாரணமாக கடக்கவும் முடியாது...

நாராயணியிடம் பேசியது மட்டும் அல்லாமல், புருஷோத்தமனிடமும் கொச்சையாக பேசி இருக்கின்றானே...

அங்கே இருந்த கோதாவரியிடம், "உன்ட மூத்த மகன் என்ன செஞ்சிட்டு வந்து இருக்கான் தெரியுமா?" என்று விஷயத்தை சொல்ல, "என்ன இவன் இப்படி கதைச்சு இருக்கான்? படிக்கிற பிள்ளை எல்லா... குடிகாரன் போல கதைச்சுட்டு வர்றது நல்லவா இருக்கு? அவன்ட வேலைக்கு இப்படி எல்லாம் கதைக்கலாமா?" என்று புலம்ப, "இத அவன்ட்ட சொல்லுங்க பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே டி வி பார்த்தான் இளஞ்செழியன்...

"அப்பிடியே உன்ட அண்ணா என்ட கதையை கேட்டுட்டாலும்" என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற நேரம், ஜனார்த்தனனின் கார் வீட்டு வளாகத்தினுள் நுழைந்தது...

அவனும் காரில் இருந்து இறங்கி வீட்டினுள் நுழைய, "நீ கதைச்சிட்டு வந்தது சரியா ஜனா?" என்று கனகசிங்கம் பஞ்சாயத்தை ஆரம்பித்து இருந்தார்...

அவன் சட்டென இளஞ்செழியனை பார்க்க, "டேய் நான் சொல்லல்ல, மாமாவே கோல் பண்ணி சொன்னார், எனக்கு திவ்யா ஒண்டும் சொல்லவே இல்ல" என்று அவன் பயத்தில் வாக்குமூலம் கொடுத்து விட்டான்.
 

CRVS2797

Active member
தாகம் தீர்க்கும் மழைத்துளியே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 5)


நானும் வேண்டிக்கறேன். பவித்ரன் சொன்னது கூடிய சீக்கிரம் பலிச்சு.... நாராயணி பின்னாலேயே இந்த ஊத்தவாயன் ஜனா காதல் கிறுக்கு பிடிச்சுப்போய் அவளையே சுத்தி சுத்தி வரணும்ன்னு.... இன்னையிலேர்ந்து வேண்டிக்கிறேன்.. சரியான கருவாயனா இருக்கானே...!
இவனெல்லாம் என்னாத்தை பாடம் சொல்லித் தந்து, என்னாத்தை கிழிச்சு தொங்க விடப் போறானோ தெரியலை போங்க.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top