அத்தியாயம் 5
இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்கும், தேன்மொழியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வரவிருக்கும் நாளும் வந்து சேர்ந்து விட்டது...கண்ணாடி முன்னே அமர்ந்து இருந்தாள் தேன்மொழி...
பச்சை நிற பட்டு புடவை அணிந்து இருந்தாள்...
தலையில் மல்லிகை பூக்களை வைத்து இருந்தவளோ காதில் சின்ன ஜிமிக்கியும், கையில் வளையல்களும், கழுத்தில் சின்ன நெக்லஸும் மட்டுமே அணிந்து இருந்தாள்.
எதுவும் தங்கம் அல்ல, எல்லாமே கவரிங் தான்...
இப்படி ஆயத்தமாக எல்லாம் அவளுக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை...
எப்படியும் பொண்ணுக்கு பேச வராது, அதனால் திருமணம் வேண்டாம் என்று தானே சொல்ல போகின்றார்கள்... பிடிக்கவில்லை என்று சொல்வதற்காக இந்த அலங்காரம் தேவையா? என்று தான் நினைத்துக் கொள்வாள்...
ஆனால் மகாலக்ஷ்மி விடமாட்டார்...
அழகாக ஆயத்தமாக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி விடுவார்...
அவளும் வேறு வழி இல்லாமல் ஆயத்தமாகி விட்டாள்.
கருப்பு பொட்டை எடுத்து நெற்றியில் வைத்தவளுக்கு ஏதோ நினைவு வர சட்டென்று தொலைபேசியை எடுத்து, அதில் வம்சி கிருஷ்ணாவின் குரலில் அமைந்த பாடல் ஒன்றை தேடி எடுத்தாள்...
"இணையே
என் உயிர் துணையே
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடி
அழகே
என் முழு உலகம்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி"
பாடலை கேட்டுக் கொண்டே, கண்ணுக்கு மையை தீட்டினாள்...
அவன் குரலை கேட்டதுமே, அதுவரை இருந்த ஏதோ ஒரு அழுத்தம் அவளுக்கு நீங்கிய உணர்வு...
இதழ்கள் மெலிதாக விரிந்தன...
கன்னங்கள் பூச்சு இல்லாமலேயே வெட்கத்தினால் சிவந்து போயின...
வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே கண்களை மூடி திறந்தவளோ, "தேன்மொழி" என்று மகாலக்ஷ்மியின் குரல் கேட்டு நிதானத்துக்கு வந்தாள்.
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே, தன்னை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு வெளியேறி செல்ல, அங்கே அவளது சொந்தக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்...
"இதோட எத்தனையாவது தடவை வந்துட்டோம் மகா" என்று அவள் அத்தை நிர்மலா சலித்துக் கொண்டார்...
அவர்களுக்கு இருக்கும் ஓரிரெண்டு சொந்தங்களில் நிர்மலா நெருங்கியவர்...
அதனால் அவர் என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு...
மகாலக்ஷ்மியோ, "இந்த மாப்பிள்ளை கிட்ட தரகர் எல்லாமே விளக்கமா பேசி இருக்கார் அண்ணி, மத்தவங்க போல பார்த்துட்டு முடிவு சொல்றோம்னு சொல்லாம, சம்மதம் சொல்லிட்டு தான் பொண்ணு பார்க்கவே வர்றாங்க" என்றார்...
"என்னவோ போ, எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா, தேன்மொழியை விட ரெண்டு வயசு கம்மி, இப்போ வயித்துல ரெண்டாவது பிள்ளையோட ராணி மாதிரி இருக்கா... நீயும் ஊமை பொண்ண வச்சிட்டு படாத பாடு படுற, நீயே சொல்லு உனக்கு ஒரு மகன் இருந்து ஊமை பொண்ண கட்டி கொடுப்பியா?" என்று கேட்டு விட்டு, வந்த ஏனையோரிடம் பேச ஆரம்பித்து விட்டார்...
மகாலக்ஷ்மிக்கு பதில் பேச முடியவில்லை...
பெருமூச்சுடன் அங்கிருந்து நகர போனவரின் விழிகளில் அனைத்தையும் கேட்டுக் கொண்டே, அருகிலிருந்த தூணில் சாய்ந்து நின்ற தேன்மொழி தென்பட்டாள்...
அவள் அருகே வந்தவரோ, "நீ ஒண்ணும் கவலைப்படாதம்மா, இந்த சம்பந்தம் சரி வந்திடும்" என்று சொல்லி அவள் கன்னத்தை தட்டி விட்டு சமயலறைக்குள் செல்ல, அவளோ ஒன்றும் பேசாமல் மௌனமாக சமயலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அங்கே சுவற்றில் சாய்ந்து கொண்டே, காஃபி போட்டுக் கொண்டு இருந்த மகாலக்ஷ்மியை பார்த்துக் கொண்டே நின்று இருக்க, சட்டென திரும்பிய மகாலக்ஷ்மி, "என்னம்மா?" என்று கேட்டார்...
அவளோ, "நான் உங்களுக்கு பாரமா?" என்று சைகையில் கேட்க, "ஐயோ அப்படி எல்லாம் இல்லம்மா, இவங்க ஏதோ பேசுறாங்கன்னு நீ மனச போட்டு குழப்பிக்காத" என்று சொல்லிக் கொண்டே, காஃபியை போட்டார்...
அந்த நேரம் வாசலில் சத்தம் கேட்டது...
மாப்பிள்ளை வீட்டினர் வந்து இருக்கின்றார்கள் என்று உணர்ந்த மகாலக்ஷ்மியோ, "மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துட்டாங்க போல" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, தேன்மொழியோ எந்த உணர்வும் இல்லாமல் அப்படியே சுவரில் சாய்ந்து நின்று இருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டினரும் வந்து விட்டார்கள்...
மாப்பிள்ளையின் பெயர் ரஞ்சன்...
வீட்டிற்கு ஒரே மகன்...
ஆசிரியராக பணி புரிகின்றான்...
அவன் அருகே அவன் தாயும் தந்தையும் வந்து இருக்க, அவர்களது சில சொந்தங்களும் வந்து இருந்தார்கள்...
அவர்களை வரவேற்ற மகாலக்ஷ்மியோ அவர்களை அமர சொல்லிக் கொண்டே இருக்க, நிர்மலாவோ, "மாப்பிள்ளை நல்ல வாட்ட சாட்டமா இருக்காரே... எப்படி ஊமைச்சிய கட்டிக்க சம்மதம் சொன்னார்?" என்று அருகே இருந்த பெண்ணிடம் கேட்டார்...
அந்த பெண்ணோ, "எனக்கும் அதான் அக்கா தெரியல" என்று சொன்ன சமயம், "எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரையும் அறிமுகப்படுத்தலாமே" என்றார் ரஞ்சனின் தாய் தேவி...
மகாலக்ஷ்மியும் அனைவரையும் சிரித்தபடியே அறிமுகப்படுத்த, "தரகர் எல்லாம் சொல்லி இருப்பார்ன்னு நினைக்கிறேன்" என்றார் தேவி...
மகாலக்ஷ்மிக்கு ஒன்றுமே புரியவில்லை...
தரகர் எதுவும் சொல்லவில்லை…
அவரோ புரியாமல் தேவியை பார்க்க, தேவியோ தரகரை பார்த்தார்...
நெற்றியில் விழுந்த வியர்வையை துடைத்த தரகரோ, "பொண்ண பார்த்துட்டு பேசிடலாம்" என்று சொல்ல, மகாலக்ஷ்மியும் யோசனையுடன் சமையல் அறை உள்ளே நின்று இருந்த தேன்மொழியை அழைத்து வர சென்று விட்டார்...
தேன்மொழியும் கையில் காஃபியை கொண்டு வந்தவள், அனைவருக்கும் பரிமாறி விட்டு ஓரமாக நின்று கொண்டாள்.
அவளை பார்த்த தேவியோ, "பொண்ணு அழகா தான் இருக்கா" என்று சொல்லிக் கொண்டே, ரஞ்சனை பார்க்க, அவனும் சம்மதமாக தலையாட்டினான்...
அடுத்த கணமே, தனக்கு அருகே இருந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தையை வாங்கியவர், நேரே தேன்மொழியிடம் வந்து, "அம்மா பாரு, அம்மா" என்று சொல்லி குழந்தையை நீட்ட, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
பிஞ்சு குழந்தையை மறுக்க மனம் இல்லை...
அவள் கரமோ தன்னை மீறி குழந்தையை பெற்றுக் கொள்ள, அவள் விழிகள் விரிய அருகே நின்று இருந்த மகாலக்ஷ்மியை பார்த்தார்...
அவருக்கும் அதே அதிர்ச்சி தான்...
சீதனம் தேவை இல்லை என்று சொன்ன சமயம் அவர் இப்படி எதிர்பார்க்கவே இல்லை... தரகரும் சொல்லவே இல்லை...
அவர் விழிகள் தரகரில் படிய, "அக்கா கொஞ்சம் உள்ளே வாங்க, பேசணும்" என்று சொல்லிக் கொண்டே அவர் உள்ளே செல்ல, "கொஞ்சம் இருங்க வரேன்" என்று சொல்லிக் கொண்டே மகாலக்ஷ்மியும் அவரை பின் தொடர்ந்தார்...
அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த நிர்மலாவோ, "அதானே பார்த்தேன்... இங்க இருக்குல்ல ட்விஸ்டு... ரெண்டாம் தாரமா?" என்று அருகே இருந்த பெண்ணிடம் கிசு கிசுக்க, "சீதனம் வேணாம்னு சொல்லும் போதே நான் எதிர்பார்த்தது தான்" என்றாள் அந்த பெண்...
இதே சமயம் அறைக்குள் சென்ற தரகரோ, "நான் ஏற்கனவே சொல்லி இருந்தா வேணாம்னு சொல்லி இருப்பீங்க அது தான்" என்றார் இழுவையாக...
"அதுக்காக ரெண்டாம் தாரமாவா என் பொண்ண அனுப்பனும் தம்பி?" என்று ஆதங்கமாக கேட்டார்...
"மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவர் அக்கா, மூத்த தாரம் பிரசவத்துல இறந்து போச்சு... குழந்தைக்காக ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணி இருக்கார்... சீதனம் எல்லாம் கூட வேணாம்னு தானே சொல்றார்... தேன்மொழிக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் இல்லை... ஏன்னு உங்களுக்கே தெரியும்... இத விட்டா மாப்பிள்ளை தேடுறது ரொம்ப கஷ்டமாகிடும்... கண்டிப்பா நல்ல விதமா பார்த்துப்பாங்க" என்றார்...
அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த அறைக்குள் நுழைந்த நிர்மலாவோ, "மகா இப்போ என்ன பிரச்சனை?" என்று கேட்டார்...
"ரெண்டாம் தாரமா எப்படி அண்ணி?" என்று மகாலக்ஷ்மி இழுக்க, "கொஞ்சம் எதார்த்தமா யோசிச்சு பாரு மகா, ஊமை பொண்ணை யாரும் கல்யாணம் பண்ணிக்க விரும்ப மாட்டாங்க... அப்படி கல்யாணம் பண்ணிக்கனும்னா ஊரையே சீதனம் கேப்பானுங்க... உன் கிட்ட கொடுக்க ஒண்ணுமே இல்ல, இப்படி ஒரு வரன் அமையுறது எல்லாம் பெரிய விஷயம்... புத்திசாலி தனமா யோசிச்சு சம்மதம் சொல்லு மகா" என்றார்...
தரகரும் நிர்மலாவும் பேசி பேசியே அவர் மனதை கரைத்து இருந்தார்கள்...
அவரோ இறுதியாக, "நம்ம தேன்மொழி என்ன சொல்வான்னு தெரியலையே" என்று சொல்ல, நிர்மலாவோ, "அவளுக்கு என்ன தெரியும்? நல்லது கெட்டது எல்லாம் நாம தானே பண்ணி வைக்கணும்... இரு அவ கிட்ட பேசிடலாம்" என்று சொல்லிக் கொண்டே தரகரை பார்த்தவர், "நாங்க பேசிட்டு சொல்றோம் தம்பி" என்றார்.
அவரும், "சரி அக்கா" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, நிர்மலாவோ, "தேன்மொழி" என்று அழைக்க, அவளும் குழந்தையை தேவியிடம் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தாள்.
அவளுக்கோ மனதில் அழுத்தம்...
எந்த பெண்ணுக்கும் இருக்கும் சராசரி சங்கடம் அவளுக்கும் இருந்தது...
மகாலக்ஷ்மியை பார்த்தவள், ஏதோ சைகையால் சொல்ல முயல, "இங்க பாரு தேனு, ரெண்டாம் தாரம் அது இதுன்னு மனச போட்டு குழப்பிக்காதே" என்று ஆரம்பித்தவர், சட்டென நிறுத்தி, "மகா நீ வெளிய போ, நான் பேசிட்டு வரேன்" என்றார்...
மகாலக்ஷ்மியும் வெளியே சென்றார்...
தேன்மொழி அவரை ஆழ்ந்து பார்த்து விட்டு இப்போது நிர்மலாவை பார்க்க, "உன் அம்மாவுக்கு பாரமா இருக்க யோசிக்கிறியா?" என்று கேட்டார்...
அவளோ, "இல்லை" என்ற ரீதியில் தலையாட்ட, "அப்போ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ, உன்னோட ஊனத்தை பத்தி உனக்கே தெரியும்... எத்தன நாளைக்கு உனக்கு மாப்பிள்ளை பார்த்து உன் அம்மாவால தேய முடியும்? உனக்குன்னு ஆசை இருக்கும்னு எனக்கு புரியுது... ஆனா நம்ம தரத்துக்கு ஏத்த போல ஆசைப்படணும்... நம்ம கிட்ட குறை இருக்கிற நேரம், கிடைச்சத வச்சு சந்தோஷமா வாழ்ந்துக்க பழகணும்... அந்த பையன் வேற நல்ல பையனா தெரியுறான்..." என்றார்...
அவளே தனது குறையை பற்றி யோசிக்காத நேரம், அவரோ அவள் குறையை ஆயிரம் தடவை சொல்லி காட்டி விட்டார்...
"நம்ம தரத்துக்கு ஏற்ப ஆசைப்படணும்" என்கின்ற வார்த்தை அவளுக்கு முள்ளாக குத்தியது...
அவர் பேசிய பேச்சில், எல்லாமே நியாயமாக அவளுக்கும் தோன்ற ஆரம்பித்தது...
இதுவரை அவளிடம் இல்லாத தாழ்வு மனப்பான்மையை அவர் உண்டாக்கி இருக்க, அவளோ இறுதியாக, "சம்மதம்" என்கின்ற ரீதியில் தலையாட்டி இருந்தாள்.
"அப்படி சொல்லு" என்று அவள் கன்னத்தை வருடிக் கொண்டே நிர்மலா வெளியே வந்தவர் தனக்கு பின்னால் வந்த தேன்மொழியை திரும்பி பார்க்க, அவளோ, தலையை குனிந்தபடி சபை நடுவே சம்மதமாக தலையாட்டினாள்...
உடனே இதழ் பிரித்து சிரித்த தேவியோ, "அப்புறம் என்ன? கல்யாணத்துக்கு சீக்கிரமே நாள் குறிச்சிடலாம்..." என்றார்...
மகாலக்ஷ்மியும், "சரிங்க சம்பந்தி" என்று சொல்ல, ரஞ்சனோ, "நான் பேசலாமா?" என்று கேட்டான்...
அனைவரும் அவனை திரும்பி பார்க்க, அவனோ, "நான் வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கிறேன்... அதனால தேன்மொழி வேலைக்கு போகணும்னு இல்லை... குழந்தையை பார்த்துக்கிட்டா போதும்" என்றான்...
தேன்மொழிக்கு மனதில் இனம் புரியாத ஒரு வலி...
அவள் சந்தோஷமே அந்த வேலை தானே...
கடவுளின் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது அவள் நிறைவாக உணர்வாள்.
மனம் சந்தோஷமாக இருக்கும்...
அதனை நிறுத்த சொல்லி விட்டான்...
இல்லை என்று சொல்ல அவளுக்கு உரிமை இருந்தாலும் அந்த உரிமை அங்கே மறுக்கப்பட்ட நிலைமை தான்...
மகாலக்ஷ்மியாவது தனக்காக பேசுவார் என்கின்ற எண்ணத்தில் அவரை பார்க்க, அவரோ, "சரிங்க மாப்பிள்ளை" என்றார்...
தனது மகளுக்கு மாப்பிள்ளை கிடைக்காதோ என்கின்ற பதட்டத்தில் மாப்பிள்ளை வீட்டினர் சொன்ன அனைத்துக்கும் தலையாட்டினார்...
தாயின் வார்த்தைகள் அவளுக்கு ஏமாற்றம் தான்...
பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
"டியூஷன் கொடுத்தா அதுக்கும் போக வேணாம்" என்றான் ரஞ்சன்...
உடனே மகாலக்ஷ்மி, "அவ தெரிஞ்ச ஒரு பையனுக்கு மட்டும் தான் டியூஷன் கொடுக்கிறா... நிறுத்த சொல்லிடுறேன்" என்றார்...
யாதவ் கிருஷ்ணாவுக்கு கொடுக்கும் டியூஷனுக்கும் ஆப்பு விழுந்து விட்டது...
'இனி கூண்டு கிளி தானோ' என்கின்ற எண்ணம் அவளுக்கு தோன்றாமல் இல்லை...
இதனிடையே தேவியோ, "பொண்ணு ஊமையா இருக்கிறதுல என்ன நன்மை தெரியுமா? நம்ம கூட சண்டைக்கு வர மாட்டா" என்று நகைச்சுவை என்கின்ற பெயரில் ரசிக்க முடியாத வார்த்தைகளை விட்டார்...
ஆனால் அதற்கும் சிலர் சிரித்துக் கொண்டார்கள்...
தேன்மொழியிடம் மௌனம் மட்டுமே...
தோன்றுவதை பேச கூட இயலாத நிலை...
பேச முற்பட்டாலும் அதனை யாரும் புரிந்து கொள்ள போவதும் இல்லை...
தலையை குனிந்து கொண்டே நின்று இருந்தாள்.
அவர்களும் பேசி விட்டு சென்று விட்டார்கள்...
இனி சாஸ்திரியாரிடம் திருமணத்துக்கு நாள் குறிக்க வேண்டிய தேவை அடுத்ததாக இருந்தது...
போகும் போது தேன்மொழியை பார்த்த ரஞ்சனோ, "அது தான் கல்யாணம் முடிவாயிடுச்சுல்ல, இந்த மாசமே வேலையை விட்ரு" என்றான்...
அவளை வேலையினை விட்டு நிறுத்துவதிலேயே குறியாக இருந்தான்...
அவளோ மௌனமாக தலையை அசைத்தாலும் மனதில் கொஞ்சமும் வேலையை விடுவதில் இஷ்டம் இல்லை...
ஏன் இந்த கல்யாணத்திலேயே அவளுக்கு இஷ்டம் இல்லை...
வழக்கமாக வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்வதை போல இன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்வார்கள் என்று அவள் நினைத்து இருக்க, அவள் எதிர்பாராமல் இந்த கல்யாணம் முடிவாகி விட்டது...
அவர்கள் சென்ற பின்னரும் அவளால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை... ஏனோ மனம் வலித்தது... ஏனிந்த வலி என்று தெரியவில்லை...
வேலையை விட சொன்னதற்காக வலிக்கிறதா? இரண்டாம் தாரமாக போவதை நினைத்து வலிக்கின்றதா? இல்லை இரண்டையும் தவிர்த்து வேற ஒன்றை நினைத்து வலிக்கின்றதா என்று தெரியவில்லை...
ஆனால் வலித்தது...
கையில் இருந்த வளையல்களை ஒவ்வொன்றாக கழட்டிக் கொண்டே அவள் கண்ணாடி முன்னே நின்று இருக்க, "நாளைக்கு டியூஷன் போற நேரம் வசந்தி கிட்ட சொல்லிடும்மா" என்று சொல்லிக் கொண்டே, உள்ளே மகாலக்ஷ்மி நுழைய, "இப்பொவேவா?" என்று சைகையால் தேன்மொழி கேட்டாள்.
"மாப்பிள்ளை சொன்னதை கேட்ட தானே... இந்த மாசத்தோட வேலையை விட சொன்னார்... எப்படியும் அடுத்த மாசத்துல கல்யாண தேதி நிச்சயமா பண்ணிடுவாங்க... செலவை அவங்க பாதி எடுத்துகிறேன்னு வேற சொல்லி இருக்காங்க, இப்படி ஒரு வரன் அமைய நீ கொடுத்து வச்சு இருக்கணும்... இதுக்காகவே அவர் சொல்றத பண்ணுறதுல தப்பு இல்லை... இந்த மாசம் முடிய ரெண்டு வாரம் தானே இருக்கு... அதனால வசந்தி கிட்ட இப்போவே சொல்லிடு... கல்யாண தேதி வந்த பிறகு ஸ்கூல் ல இருந்து நின்னுக்கலாம்... உனக்கு இன்னும் பெர்மெனன்ட் உத்தியோகம் ஸ்கூல் ல கொடுக்கல தானே... அதனால வேலையை விட்டு நிக்கிறது பெரிய கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறன்" என்றார்...
தேன்மொழிக்கோ இன்னும் ஓரிரெண்டு வருடங்களில் செய்யும் வேலை நிரந்தர வேலையாக மாறி விடும்... அதற்கும் இப்போது முட்டுக்கட்டை விழுந்து விட்டது...
அவளுக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை...
மௌனமாகவே இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் உணர்வே இல்லாதவள் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ...
அவள் சொல்வதை கேட்க யாருமே தயாராக இல்லை என்று தோன்றியது... தனது தாய் உட்பட...
தான் ஆசைப்பட்டு செய்யும் தொழிலை விட்டு நிற்பது கஷ்டமாக இருந்தது...
ஆனாலும் வேறு வழி இல்லை... அவர் சொன்னதற்கு சம்மதமாக தலையாட்டிக் கொண்டாள்.
பாடகியாக ஆசைப்பட்டாள் குரல் போய் விட்டது...
விழுந்த அடியில் இருந்து எழுந்து சுதாரித்து அடுத்த குறிக்கோளை நோக்கி ஓட ஆரம்பித்தவள் தனது இலக்கை முழுமையாக அடையும் முன்னரே திருமணம் என்னும் முட்டுக்கட்டையை போட்டு அவள் ஓட்டத்தை மொத்தமாக நிறுத்தி விட சுற்றி இருப்பவர்கள் முடிவும் எடுத்து விட்டார்கள்...
இதுவரை அவள் விழுங்கிய வலிகளுடன் சேர்த்து இந்த வலியையும் விழுங்கிக் கொண்டாள்.