அத்தியாயம் 5
அவள் வீட்டுக்கான வழியை சொல்ல, அங்கே கொண்டு வந்து ஜீப்பை நிறுத்தி இருந்தான் சுராஜ்.அவளது ஃப்ளாட்டைப் பார்த்து விட்டு, "யாரோட இருக்கிற?" என்று கேட்டான் பிரியந்த...
"ஃப்ரென்ட் ஓட" என்று அவள் சொல்ல, அவளை திரும்பிப் பார்த்தவன், "குட் நைட்" என்றான்...
அவளுக்கு என்னவோ அவன் தன்னிடம் நெருக்கம் காட்டும் உணர்வு... உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது...
"குட் நைட்" என்று சொல்லிக் கொண்டே இறங்கிக் கொண்டவள் வீட்டுக்கும் வந்து விட்டாள்.
"என்னடி இவ்வளவு நேரம்?" என்று தீபிகா கேட்க, "சைட்டுக்கு போனேன் தீபி" என்று சொன்னவள் முகத்தில் தெளிவு இல்லை...
அன்று முழுவதும் பிரியந்தவின் நினைவு தான்...
சில சமயம், 'அவர் நோர்மல் ஆஹ் பழகி, நான் தான் தப்பா நினச்சிட்டு இருக்கிறனோ?" என்று யோசித்து தன்னை சமாதனப்படுத்தியவள் தூங்கியும் போனாள்.
அடுத்த நாள் முதல் அவனிடம் இருந்து விலகலைக் காட்ட தொடங்கினாள்.
அந்த வித்தியாசம் அவனுக்கே புரிந்தது...
சைட்டுக்கு செல்லும் போது கூட கேள்வி கேட்டால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே சொல்வாள்..
"அண்ணா" என்றும் அழைத்தாள்.
அவளுக்கு புரிந்து விட்டது என்று அவனுக்கும் தெரிந்தது...
இப்படியே ஒரு மாதம் கடந்து இருக்கும்...
அவனுக்கு என்று ஒரு ஃப்ளாட் தெகிவளையில் இருந்தது...
அங்கே தான் அவன் வசித்து வந்தான்...
அன்று வேலை விட்டு வந்தவன், நீண்ட நேரம் ஷவரின் கீழ் நின்றான்...
அவள் நினைப்பு தான்...
இப்போதேல்லாம் அவளை எல்லை மீறி ரசிக்க ஆரம்பித்து விட்டான்...
அவள் அங்க வனப்புகளை கூட அவளுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வான்...
ஒரு வித தவிப்பாக இருந்தது அவனுக்கு...
இந்த காதல் அவள் மேல் ஏன் வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை...
இதில் பல பிரச்சனைகள் வரும் என்றும் தெரியும்...
குளித்து விட்டு இடையில் டவலுடன் வந்து கண்ணாடி முன்னே நின்று தலையை துவட்டினான்...
அவளை விட்டு விலகி செல்ல நினைக்கின்றான் தான்...
ஆனால் முடியவில்லை...
அவள் விலகி என்றாலும் வலிக்கின்றது...
அவள் மீது ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது தவிர, குறைந்த பாடு இல்லை.
முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்துக் கொண்டே, கட்டிலில் மல்லாக்க விழுந்தான்...
கண்களை மூடினாலே அவள் விம்பம் தான்.
"மகே லஸ்ஸன யக்ஷணி" என்று முணுமுணுத்துக் கொண்டே தூங்கிப் போனான்...
காலையில் எழுந்தவன் அலுவலகத்துக்கும் என்று விட்டான்.
அன்று ஸ்டாஃப் மீட்டிங் நடந்தது...
அவர்களது அலுவலத்தினால் கட்டப்பட்ட அணைக்கட்டு ஒன்றை திறக்க டி ஜி ஐ (நீர்பாசன திணைக்கள உயரதிகாரி) வருகின்றார் என்று வீரக்கோன் சொன்னவர், அதற்கான நிகழ்வுகளை பிரியந்தவை பார்த்துக் கொள்ளும்படி சொல்ல, அவனும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டான்.
அதன் பிறகு அவன் அதில் மும்முரமாகி விட்டான்...
வேலைகள் தலைக்கு மேல் இருந்தது...
ராதிகாவைப் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன...
அது ராதிகாவுக்கும் நிம்மதியாக இருந்தது...
நிகழ்வு நடக்கும் நாளும் வந்து சேர, நிகழ்வும் தடல்புடலாக நடந்து முடிந்து இருந்தது...
வழக்கமாக இப்படியான நிகழ்வு முடிந்தால் அதற்கான பார்ட்டி இரவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்...
அதில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்...
ராதிகாவுக்கும் மறுக்க முடியவில்லை...
அங்கே சென்றாள்...
அதில் மதுபான வகைகளும் பரிமாறப்பட்டுக் கொண்டு இருக்க, அவளுக்கோ சங்கடமாகி விட்டது...
அவளுக்கு துணையாக ஓரிரு பெண்கள் வந்து இருந்தாலும் அவர்கள் பேசும் சிங்களம் இவளுக்கு புரியாது...
என்ன செய்வது? ஓரமாக அமர்ந்து இருந்தாள்...
நேரத்தைப் பார்த்தாள்... இரவு எழு மணி...
சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று வீரக்கோன் சொல்லி இருக்க, அவளுக்கோ மறுக்கவும் முடியவில்லை...
அங்கே நிற்கவே அசௌகரிகம்.
சாந்தன் வேறு இல்லை...
காலையில் அணிந்து வந்த பழுப்பு நிற புடவையுடன் இவ்வளவு நேரம் நிற்பது சலிப்பாக வேறு இருந்தது...
புடவையை கழட்டி எறிந்து விட்டு குளிக்க வேண்டும் என்கின்ற உணர்வு தான்...
கையை பிசைந்து கொண்டு, அலைபேசியை பார்த்துக் கொண்டே இருந்தவளைப் பார்த்த பிரியந்தவோ, அவனுக்கு கொடுக்கப்பட்ட மதுபானத்தை எடுக்காமல் சோடாவை எடுத்து குடித்தான்.
"சேர் என்ன சோடா எடுக்கிறீங்க?" என்று அவனுடன் வேலை செய்பவர்கள் கேட்க, வேண்டாம் என்கின்ற தோரணையில் தலையாட்டியவன், சிறிது நேரம் உயரதிகாரிகளிடம் பேசி விட்டு, உடம்பு சரி இல்லை என்று கூறி, வீட்டுக்கு செல்வதாக கூறினான்...
அவனை தடுக்க யாருக்கும் அங்கே தைரியம் இல்லையே...
மரியாதை கூட அவனாக கொடுத்தால் உண்டு என்கின்ற நிலை தான்...
அவன் தனது அதிகார பலத்தை எல்லாம் அங்கே காட்டுவது இல்லை...
சாதரண ஊழியராக தான் இருப்பான்...
இப்போதும் சொல்லி விட்டு எழுந்து கொண்டவன், நேரே ராதிகா அருகே சென்றான்...
அவள் அவனை ஏறிட்டுப் பார்க்க, "வீட்ல கொண்டு விடுறேன், வர்றியா?" என்று நேரடியாக கேட்டான்...
அவளுக்கோ தவிப்பு...
அங்கே இருக்கவும் முடியவில்லை.
"நீங்க மட்டுமா?" என்று கேட்டாள்...
அவனுக்கு கோபமும் வந்து விட்டது.
"உன்னை ஒண்டும் செய்ய மாட்டன், வா" என்றான்...
குரலில் கோபம் அப்பட்டமாக தெரிய, "ஐயோ அப்பிடி இல்ல" என்று ஆரம்பிக்க, "வாரியா இல்லையா எண்டு மட்டும் சொல்லு" என்றான்...
அவளுக்கு சென்று விட்டால் நிம்மதி என்று தோன்ற, "வாறன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள், "சேர்ட்ட சொல்லிட்டு வரவா?" என்று கேட்டாள்.
"ஒண்டும் தேவல வா" என்றான்...
"சொல்லல்ல எண்டா" என்று அவள் இழுக்க, "நாளைக்கு ஒண்டும் நினைவுல இருக்காது, வா" என்று சொல்லிக் கொண்டே அவன் முன்னே செல்ல, அவளும் சென்றாள்...
அவன் தனது ஜீப்பில் தான் அன்று வந்து இருந்தான்...
அதில் அவன் ஏறிக் கொள்ள, அவளோ பின்னால் ஏறப் போக, "முன்னால இரு" என்றான்.
அசௌகரிகமாக இருந்தது.
மறுக்க முடியவில்லை... ஏறி அமர்ந்தாள்.
அவனைப் பார்க்கவில்லை...
வெளிய பார்த்துக் கொண்டே இருந்தாள்...
அவளை ஒரு கணம் பார்த்து விட்டு வண்டியை கிளப்பினான்...
"இரவு என்ன சாப்பாடு?" என்று கேட்டான்.
"ஃப்ரென்ட் சமைச்சு இருப்பா" என்று சொன்னாள்.
"ம்ம்" என்று மட்டும் சொல்லிக் கொண்டான்...
வாகன நெரிசலை எல்லாம் கடந்து சென்ற அவன் ஜீப்போ அவள் வீட்டுக்கு செல்ல முதல். கோல் ஃபேஸ் கடற்கரை முன்னே நின்றது...
அவளோ, "இங்க எதுக்கு?" என்று அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே கேட்டாள்...
குரலை செருமியவனோ, "கொஞ்சம் உன்னோட கதைக்கணும்" என்றான்.
"என்ன கதைக்கணும்?" என்று கேட்டவளுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது...
அவனது பார்வை மாற்றங்கள் அவளுக்கும் புரியும் தானே...
அவளையே பார்த்து இருந்தவன், "மம ஒயாட்ட ஆதரய்" என்றான்.
அவளுக்கோ இதன் அர்த்தம் தெரிந்து இருக்க, அதிர்ந்து விழிகளை விரித்துக் கொண்டாள்...
"தமிழ் ல சொல்லணும் எண்டா, நான் உன்னை காதலிக்கிறேன், இங்க்லீஷ் ல சொல்லணும் எண்டா ஐ லவ் யூ, கொரியன் ட்ராமா பார்த்து இருப்பா தானே, கொரியன் ல சொல்லணும் எண்டா சரங்கையோ, இத விட விளக்கமா சொல்லணும் எண்டா சொல்லு இன்னும் நாலைஞ்சு மொழில சேர்த்து சொல்றேன்" என்றான்...
அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே பேசினான்...
அவளுக்கு மூச்சே அடைத்து விட்டது...
கொஞ்சமும் யோசிக்காமல், "இல்ல சரி வராது" என்றாள்.
"சரி வருமா? இல்லையா எண்டு நான் கேட்கவே இல்லையே" என்றபடி வண்டியை கிளப்ப, "அப்ப எதுக்கு இத என்னட்ட சொல்லிட்டு இருக்கீங்க?" என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டு விட்டாள்...
"உன்ன அடிக்கடி சைட் அடிப்பேன், நீ பிறகு பொம்பிள பொறுக்கி எண்டு நினைச்சுட கூடாது எண்டு தான்..." என்று சொல்லிக் கொண்டே முன்னால் பார்த்தபடி வண்டியை செலுத்த, அவளோ அவனை ஒரு கணம் வெறித்துப் பார்த்து விட்டு சட்டென பார்வையை வெளியே திருப்பிக் கொண்டாள்.
மனதில் ஒரு வித அழுத்தம்...
காதலை அவளிடம் எத்தனையோ பேர் சொல்லி இருக்கின்றார்கள்...
அவளும் மறுத்து இருக்கின்றாள்...
அவள் மறுத்ததும் சில சமயம் தொல்லை பண்ணுவார்கள்...
அவள் தனது முடிவில் உறுதியாக இருப்பாள்...
அவர்களும் சலித்துப் போய் விட்டு விடுவார்க்ள...
ஆனால் இவனோ காதலை சொல்லி விட்டு பதிலே வேண்டாம் என்கின்றான்...
முகத்துக்கு நேராகவே சைட் அடிப்பேன் என்கின்றான்...
இவனை எப்படி கையாள்வது என்று அவளுக்கும் புரியாத நிலை தான்...
மௌனமாகவே இருந்தாள்...
அவனோ ரேடியோவைப் போட்டான்.
தமிழும் சிங்களமும் சேர்ந்த பாடல்...
"கிரி கோடு ஹித்தட" என்று ஒலிப்பரப்பானது. அவளுக்கு அந்த பாட்டு மிகவுமே பிடிக்கும்...
இப்போதும் அதனை கேட்கும் போது ஒரு மயக்கம்...
"நமக்கு ஏத்த பாட்டு" என்றான் அவன்...
கண்களை மூடி திறந்தாள்...
அவனை இப்போதும் பார்க்கவில்லை.
அவன் காதலை சொல்லி விட்டான்...
அவளுக்கோ சங்கடமாக இருந்தது...
அவள் தவிப்பு அவனுக்கு சிரிப்பாகவும் இருந்தது.
அவனும் பாடலை முணுமுணுத்துக் கொண்டே, அவளை அவளது வீட்டின் முன்னே நிறுத்தினான்...
அவளும் பெருமூச்சு எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டே அவனைப் பார்த்தவள், "தேங்க்ஸ் அண்ணா" என்றாள்...
வேண்டும் என்றே அண்ணா என்கின்றாள் என்று அவனுக்கும் புரிய, சிரிப்பை அடக்கிக் கொண்டே, "குட் நைட் பேபி" என்றான் கண்களை சிமிட்டி...
"என்ட பேர் ராதிகா" என்றாள் அவள் சற்று காட்டமாக...
"நீ அண்ணா எண்டு கூப்பிடுறதுக்கு நான் ஒண்டும் சொல்லலையே, நானும் பேபி எண்டு கூப்பிடுறதுக்கு நீ ஒண்டும் சொல்ல கூடாது" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்...
அவளை படுத்திக் கொண்டே இருக்கின்றானே.
"நான் அண்ணா எண்டு கூப்பிட மாட்டன், நீங்க பேர் சொல்லி கூப்பிடுங்க" என்றாள்.
"தட்ஸ் குட், ராது" என்றான்.
"ராதிகா" என்றாள் அவள் மீண்டும் அழுத்தமாக...
"ராது எண்டு தான் கூப்பிடுவேன்" என்றான்...
அவளுக்கு ஐயோடா என்று இருந்தது...
"ஏன் இப்பிடி செய்யுறீங்க?" என்று கேட்டாள்...
"ராது எண்டு கூப்பிடவா? பேபி எண்டு கூப்பிடவா?" என்று கேட்டான்..
"ராது எண்டே கூப்பிடுங்க" என்று சொல்லிக் கொண்டே இறங்கியவள் உள்ளே அவனைப் பார்க்காமலே உள்ளே செல்ல, அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து விட்டு ஜீப்பை செலுத்தினான்.
வீட்டுக்குள் நுழைந்தவளுக்கோ ஒரு மாதிரி அழுத்தமாக இருந்தது.
"என்னடி ஏர்லியா வந்துட்டா?" என்று தீபிகா கேட்க, "குடிக்கிறாங்கடி, அதான் பிரியந்த அய்யே வோட வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே குளிக்க சென்று விட்டாள்...
களைப்பாக இருந்தது...
தீபிகா சமைத்து வைத்து இருந்த புட்டும் சொதியும் சாப்பிட்டவளோ தீபிகா அருகே சென்று படுத்துக் கொண்டாள்.
இன்னுமே பிரியந்த சொன்னது தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது...
தீபிகாவிடம் சொன்னால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று தோன்ற, "தீபி" என்றாள்...
"என்னடி?" என்றாள் அவள்...
"இண்டைக்கு பிரியந்த ஐ லவ் யூ சொல்லிட்டார்" என்று போட்டு உடைத்து விட, படுத்துக் கொண்டு இருந்த தீபிகாவோ பதறி எழுந்து அமர்ந்து கொண்டே, "என்னடி சொல்ற?" என்று கேட்டாள்...
"எனக்கு என்ன செய்யுறது எண்டு தெரியல, நானும் சரி வராது எண்டு சொல்லிட்டேன், எண்ட பதில் அவருக்கு தேவை இல்லையாம் ஆனா சைட் அடிப்பன் எண்டு சொல்றார்" என்றாள்...
தீபிகாவோ, "கவனம் ராதிகா, நம்பி ஓம் சொல்லிடாதே, இவங்கள நம்ப ஏலாது, அரசியல்வாதி ஆச்சே, சம்பவம் பண்ணிட்டு விட்டுட்டு போயிடுவாங்க" என்று சொல்ல, "ஐயோ தீபி, எனக்கு பயம் காட்டாதே, நான் ஓம் எண்டு எல்லாம் சொல்ல மாட்டேன்... அப்பா செருப்பலையே அடிப்பார், அதுவும் சிங்களவன், பாத்ரூம் செருப்பால தான் அடிப்பார் பிறகு" என்றாள்...
தீபிகா அதனைக் கேட்டு சிரிக்க, "என்னடி சிரிக்கிறா?" என்று கேட்டாள் ராதிகா...
"இந்த ரணகளத்துலயும் நீ கதைக்கிறத நினச்சா சிரிப்பா இருக்கு" என்று சொன்னாள்...
"சும்மா இருடி, எனக்கு பதறுது" என்று ராதிகா சொல்ல, "தைரியமா சொல்லி இருக்காரே" என்றாள் தீபிகா...
"அவருக்கு அது எல்லாம் நிறையவே இருக்கு" என்று சொன்ன ராதிகாவோ, "ஒஃபிஸ் ல அவரை நான் எப்படி ஃபேஸ் பண்ணுறது எண்டு தெரியல" என்று சொன்னாள்...
"கண்டும் காணாம இருக்கு, தனியா கதைக்க சந்தர்ப்பம் கொடுக்காதே" என்று சொல்ல, "அப்பிடி தான் செய்யணும்" என்று சொல்லிக் கொண்டே தூங்கிப் போனாள் ராதிகா...