அத்தியாயம் 4
யாரிடம் வேலை செய்ய போகின்றோம், யாருக்கு மனைவியாக நடிக்க போகின்றோம் என்று ராகினிக்கு தெரியவில்லை...அடுத்தடுத்த நாள் நிறைய டாகுமெண்ட்ஸுகள் வந்தன...
அக்ரீமெண்ட் என்றார்கள்...
ஆறு மாதத்துக்கு சொன்ன வேலையை முடிக்க வேண்டும், இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருந்தது...
ராகினி அதனைக் கண்டதும் கொஞ்சம் நடுங்கி விட்டாள் தான்...
இத்தனை நாட்கள் போலீஸின் கண்ணில் படவில்லை...
அப்படி பட்டாலும், "இந்த சில்லறை பசங்களை என்ன தான் பண்ணுறது?" என்று விட்டு விடுவார்கள்...
ஆனால் இது அப்படி இல்லையே, பெரிய இடமாயிற்றே...
"தினேஷ் என்னடா சொல்ற? நம்பி சைன் பண்ணலாமா? தூக்கி உள்ள வச்சிடுவாங்களோ?" என்று கேட்டாள்.
சிம்மனோ, "நீங்க பயப்படலாமா தலைவி? உங்களால முடியும்" என்று உசுப்பேற்ற, எல்லாவற்றிலும் கையெழுத்து இட்டாள்.
சரியாக ஆறு மாதம் முடிய, அவளுக்கு பத்து கோடி கையில் கிடைக்கும் என்று தான் அக்ரீமெண்ட்டில் எழுதி இருந்தது.
அவர்கள் மில்லியனர் வீட்டுக்கு செல்ல இன்னும் ஒரு மாதம் மீதம் இருந்தது...
அதற்குள் நிறைய கட்டளைகள், எப்படி யார் நடிக வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வந்து கொண்டே இருந்தன...
தினேஷோ, "முருகனோட மீசையை வழிக்கணும் மேம், அப்போ தான் மீதியை நம்ம ஆரம்பிக்கலாம்" என்றான்...
இப்போது ராகினியின் விழிகள் அங்கே படுத்துக் கொண்டு இருந்த முருகனின் படிய, "ஷேவிங் ரேசர கொடு" என்று கேட்டு அதனை வாங்கியவள், அவன் மீசையை எடுத்தும் விட்டாள்.
அவனும் சற்று நேரத்தில் எழும்பி வழக்கம் போல மீசையை முறுக்க சென்றான். கை வழுக்கிக் கொண்டு தான் சென்றது...
"ஐயோ என் மீசை" என்று பதறிக் கொண்டே, கண்ணாடி முன்னே நிற்க, "இப்போ வேஷம் போட முடியும் ல" என்று அங்கே இருந்த மேசையில் ஏறி அமர்ந்து இருந்த ராகினி கிண்டலாக கேட்க, "மேம்" என்று அவன் சிணுங்களாக அழுது கொண்டே, அவ்விடத்தில் உட்கார, "டைம் இல்லடா, அந்த அரண்மனைல யார் யார் இருக்காங்கன்னு லிஸ்ட் அனுப்பி இருக்காங்க, அதுக்கு ஏத்த போல நம்ம ரெடி ஆகணும்" என்று சொல்லிக் கொண்டாள்.
லிஸ்டை வாசிக்க ஆரம்பித்தாள்.
"அங்க வயசானவர், யாரோ பரஞ்சோதியாம். அவர் பையன் இறந்துட்டார்... மருமக தான் அந்த வீட்டோட ராஜமாதா... அவங்களுக்கு ரெண்டு பசங்க... மூத்தவன் வெற்றிவேந்தன்... அவர் பொண்டாட்டி வித்யா, அவங்களோட மூணு வயசு குழந்தை மேக்னா, அடுத்தது பாண்டியன்... அவனுக்கு தான் பொண்டாட்டியா நடிக்கணும்... அப்புறம் எனக்கு ஒரு கொழுந்தியா இருக்கா, அவ பூங்கோடி... இதுக்கு மேல, அந்த வீட்ல தான் அந்த ராஜமாதாவோட தம்பி குடும்பமும் இருக்கு... அவர் பேர் தணிகாசலம், அவர் பொண்டாட்டி பேர் வேலம்மா, அவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க, வனிதா, காந்தினி. இவ்ளோ பேர் தான் அந்த வீட்ல இருக்காங்க" என்று எல்லாமே சொல்லி முடிய, "இப்போ நம்ம எல்லாரும் அங்கே தான் தங்கணுமா?" என்று கேட்டான் தினேஷ்...
"அப்படி தான் சொல்லி இருக்காங்க, ஆறு மாசத்துக்கு அங்கே தானாம், நானும் அந்த பாண்டியனும் லவ் மேரேஜ் ஆஹ்ம், திருட்டு கல்யாணம் பண்ணி இருக்கோமாம்" என்று சொல்லி அவர்கள் செய்ய வேண்டிய எல்லாமே சொல்ல, தினேஷோ, "அந்த மில்லியனருக்கு ஏன் மேம் இந்த வேண்டாத வேலை?" என்று கேட்டான்...
"மேம்ன்னு எல்லாம் கூப்பிடாதே, அக்கான்னு கூப்பிடு, அப்போ தான் இப்போவே அந்த ஃபீலை மெயின்டெய்ன் பண்ண முடியும்... பத்து கோடி டா யாரும் சொதப்பிடாதீங்க" என்றாள்.
"சரி தான், இப்போ இதெல்லாம் அந்த மில்லியனர் ஏன் பண்ணிட்டு இருக்கார்" என்று கேட்க, இதழ்களை பிதுக்கிய ராகினியோ, "ஏன்னு தெரியல, நான் யூகிச்சபடி, அவனுக்கு ஆண்மை இல்லாம இருக்கலாம், அதனால இப்படி ஒரு டிராமா பண்ணி, தான் ஒரு ஆம்பிளன்னு நிரூபிக்க போறானோ" என்று சொல்ல, அங்கே நீர் அருந்திக் கொண்டு இருந்த சிம்மனுக்கு புரையேற, அவன் வாய்க்குள் இருந்த நீர் வெளியே தெறித்து இருக்க, தலையை தட்டியபடி இருமிக் கொண்டான்.
"தண்ணிய குடி. தண்ணிய குடி" என்றான் முருகன்.
"தண்ணிய குடிச்சதால தான் டா இருமுது" என்று சொன்ன சிம்மன், ராகினியை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டான்...
அவர்களும் தத்தமது வேஷத்தில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார்கள்...
இதே சமயம், அவர்கள் வந்து சேர வேண்டிய பரஞ்சோதி இல்லமே வெண்ணிற பி எம் டபிள்யூ
காரை கண்டதுமே நடுங்கிக் கொண்டு இருந்தது.
எண்பது வயது தாத்தா பரஞ்சோதி முதல் மூன்று வயது குழந்தை மேக்னா வரை உதறல் எடுத்தது.
காரை திறந்து கொண்டே இறங்கியது வேறு யாருமல்ல அந்த வீட்டையே கண்ணசைவில் வைத்திருக்கும் நீலாம்பரி தான்.
ஐம்பத்து ஐந்து வயது இருக்கும்... அங்கங்கே நரைமுடி இருந்தாலும் தோற்றத்திலும் நடையிலும் அப்படி ஒரு நேர்த்தி...
காரை திறந்து கொண்டே இறங்கியவரை எட்டி பார்த்த அந்த வீட்டின் கடைக்குட்டி பூங்கொடியோ, "ஐயோ அம்மா வந்திட்டாங்க.. அண்ணி கிட்ட சொல்லணுமே" என்று நினைத்தபடி ஓடி சென்றாள் அவளது அண்ணியான வித்யாவின் அறைக்குள்... வித்யாவோ காலை ஆட்டிக் கொண்டே பாட்டு கேட்டபடி இருக்க, ஓடி வந்து அவள் ஹெட் சேட்டை பிடுங்கியவள், "ஐயோ அண்ணி அம்மா வந்திட்டாங்க." என்றாள்.
"என்னது அத்தை வந்திட்டாங்களா? என்ன சீக்கிரம் வந்திட்டாங்க." என்று சொன்னவளோ முகத்தில் நீரை வேகமாக தெளித்தாள்.
"என்ன பண்ணுறீங்க??" என்று பூங்கோடி கேட்கே, "வேர்த்து இருக்கு டி" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த அவள் கணவன் வெற்றிவேந்தனின் டீ ஷேர்ட்டை கீழே போட்டவள் அதனால் நிலத்தை துடைத்துக் கொண்டே தவழ்ந்து வெளியே சென்றாள்.
அவள் ஹாலை துடைப்பதை பார்த்தபடி அங்கே வந்த நீலாம்பரியோ, "வேலை பாக்கிற போல நடிக்கிறியா என்ன??" என்று கேட்க, "ஐயோ இல்ல அத்தை... நிஜமாவே வேலை தான் பார்த்தேன்" என்றாள் மெல்லிய குரலில்...
அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு அங்கே நின்ற அவரது தம்பி தணிகாசலத்திடம், "எங்க உன் பொண்ணுங்க ??" என்று கேட்டார்.
"பின்னாடி வறட்டி தட்டுறாங்க" என்று அவரும் தணிந்த குரலில் சொல்ல, "பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும்... தலைமுடியை விரிச்சிட்டு திரிஞ்சா இது தான் பனிஷ்மென்ட்.. அனுபவிக்கட்டும்" என்று சொல்லி விட்டு இப்போது எல்லாரையும் சுற்றி நோட்டம் விட்டவரோ, "பாண்டியன் எப்போ வர்றேன்னு சொன்னான்??" என்று அங்கே நின்ற பரஞ்சோதியிடம் கேட்க, "அடுத்த மாசம் நீலாம்பரி" என்றார் அவர்.
"நீங்க செல்லம் கொடுத்து தான் மாமா அவன் யாரோ ஒருத்திய கல்யாணம்.பண்ணி இருக்கான்... வரட்டும் பார்த்துகிறேன்.. அவ எத்தனை நாள் இந்த வீட்ல நின்னு பிடிக்கிறான்னு பாக்கிறேன்" என்று கறுவிக் கொண்டார்.
இதே சமயம் வீட்டின் பின்னே நின்று வறட்டி தட்டிக் கொண்டு இருந்த வனிதாவோ, "முடியை விரிச்சு விட்டது குத்தமா?" என்று கேட்க, காந்தினி சிணுங்கிக் கொண்டே, "என்னால முடியல, நான் இந்த வீட்டை விட்டு ஓடட்டுமா? பாண்டியன் மாமாவுக்கு ஏரியா போட்டா, அவர் யாரோ ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டாராமே... மாமாவும் இல்லை, ஒன்னும் இல்லை. நமக்கு வாய்ச்சது வறட்டி தான்" என்றாள்.
வனிதாவோ, "அப்படி எல்லாம் சோர்ந்து போகாதே, மாமா உனக்கு இல்லன்னா எனக்கு தான்... அத்தைக்கும் பெருசாக வர போறவ மேல ஈடுபாடு இல்லை... அவளை துரத்த தான் நினைக்கிறாங்க, நம்ம இந்த விசயத்துல அத்தைக்கு உறுதுணையா இருக்கணும்" என்று சொல்ல, "அடிப்போடி" என்றாள் காந்தினி சலிப்பாக...
"பீ ஸ்ட்ராங்" என்று வனிதா அவளுக்கு உற்சாகம் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
இவர்கள் நிலை இப்படி இருக்க, ராகினியின் பக்கத்து வீட்டு அலமேலுவோ, "என்னால முடியல ராகினி, என் மாமியார் சீரியல் பார்த்ததுக்கு அந்த வை வையுது" என்று அழுது கொண்டே இருந்தாள்.
ராகினியோ, தன்னிடம் புலம்பிய அலமேலுவிடம், "அக்கா இதுக்கெல்லாம் அழுதுட்டு இருக்காதே. மாமியார்ன்னா கொம்பா?? பேசாம மீன் குழம்புல விஷம் வச்சுடு... கிழவி செத்து தொலையட்டும்" என்று அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்தாள்...
அவளை விசித்திரமாக பார்த்த சிம்மனோ, "தலைவி... மாமியார் பாவம் ல" என்றான்.
"என்ன பாவம்? ஒரு சீரியல் பார்த்ததுக்கு திட்டுற மாமியார் எதுக்கு.. நானா இருந்தா இந்நேரம் கருமாதி பண்ணி இருப்பேன்" என்று சொல்ல , சிம்மன் தலையை உலுக்கிக் கொண்டான்.
அப்படியே எழுந்து வந்தவன், இருளான வானத்தில் நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்று இருக்க, அதே சமயம், நீலாம்பரியும் அவர்கள் வீட்டின் நடு ஹாலில் மாட்டி இருந்த அவனது ஆளுயர புகைப்படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்...
ஆறடி உயரம் அவன்...
விழிகளில் கூர்மை...
பார்த்ததுமே ஈர்க்கும் தோற்றம்...
தோற்றத்துக்கு ஏற்ப ஆளுமை இருந்தது...
மூத்தவன் வெற்றிவேந்தன் நீலாம்பரிக்கு அடங்கியவன், ஆனால் இவன் அப்படி அல்ல...
மாறி பேச கொஞ்சமும் தயங்காதவன்...
நீலாம்பரி ஆட்டி வைக்க முடியாமல் தடுமாறுவது அவனை மட்டும் தான்...
அவனுக்கு நீலாம்பரி மேல் அளவு கடந்த பாசம்...
அந்த பாசத்துக்கு கட்டுப்பட்டு இருக்கின்றான்...
பாசம் மட்டும் தான் பயம் அல்ல...
அவர் மகன் அல்லவா? பயம் இருக்குமா என்ன?
அவன் சும்மா பாண்டியன் அல்ல, "சிம்மரச பாண்டியன்"
இங்கே சிம்மரச பாண்டியன், ராகினியிடம் கொட்டு வாங்கும் சிம்மன் தான்...
அவன் மீட்டிங் வந்த நேரமே அவனை கடத்த ராகினி திட்டம் போடும் செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது...
அவன் நினைத்து இருந்தால் அப்போதே, அவளை பிடித்து ஜெயிலில் போட்டு இருக்கலாம்...
பெண் என்று சொன்னதுமே ஒரு ஆர்வம்... அதுவும் உயரத்தில் இருக்கும் அவன் மீது கை வைக்க துணிந்தவளை நேரில் பார்த்து விட வெறி...
"ஒரு பொண்ணு என்னை கடத்த பொறாளா? யார்னு பார்க்கணுமே" என்று சொன்னவன், அதற்கு ஏற்ற போல, அலைபேசியில் அம்மா, அப்பாவின் பெயர் தொடக்கம் எல்லாமே மாற்றி, அவனே தன்னை இலகுவாக கடத்தப்படுவதற்கு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தான்...
அவன் பார்த்த பெண்களிலேயே வித்தியாசமாக இருந்தாள் அவள்...
புதிதாகவும் இருந்தாள்.
தன்னையே கடத்த துணிந்தவள் ஆயிற்றே...
அப்படியே விட்டு வைக்க முடியுமா?
மாறி அவளை ஆறு மாதமாவது அவன் வீட்டில் வைத்து பழிக்கு பழி வாங்க நினைத்து விட்டான் போலும்...
அதற்கு இன்னும் சில காரணங்களும் இருந்தன.
அவனுக்கோ நீலாம்பரியால் திருமணத்துக்கு கெடுபிடி இருந்து கொண்டே இருந்தது...
அவனுக்கு எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை...
இந்த ஆமாம் சாமி எல்லாம் அவனுக்கு இஷ்டமும் இல்லை...
கொஞ்சம் திமிராக இருக்க வேண்டும்...
அவன் தாயை போல இருக்க வேண்டும்...
தாயை ரசித்ததால் என்னவோ கிட்டத்தட்ட அதே இயல்பை உடைய ராகினியையும் பிடித்து போனது...
காதல் என்று சொல்ல முடியாது...
அவள் குண இயல்பில் ஒரு ஈர்ப்பு...
அவளை தன்னுடன் ஒரு ஆறு மாதம் வைத்துக் கொள்ளவும் ஆசையாக இருந்தது...
அவளுக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கவே, செயற்படுத்தி விட்டான்...
இந்த உறவுக்கு பெயர் எல்லாம் அவனுக்கு தெரியவில்லை...
எல்லாரையும் மிரட்டும் அவளை கொஞ்ச நாள் மிரட்டி உருட்டி கூட வைத்துக் கொள்ளலாம் என்று தற்காலிகமாக எடுத்த முடிவு தான்...
இங்கு நடிப்பது மட்டும் தான் ராகினியும் அவள் கூட்டத்தினரும்...
அவளுக்கான கதை, திரைக்கதை, வசனம் என்று எல்லாமே எழுதியது, எழுதிக் கொண்டு இருப்பது, இந்த சிம்மரச பாண்டியன் தான்...
தனது பி ஏ தீபனை வைத்து, எல்லாமே செய்து முடித்துக் கொண்டு இருந்தவன், வீட்டுக்கு செல்லும் நாளுக்காக காத்துக் கொண்டு இருக்க, அந்த நாளும் நெருங்கி இருந்தது...
அவன் பாண்டியன் அல்ல, சிம்மரச பாண்டியன் என்று ராகினிக்கு தெரியும் நாளும் அது தான்.
Last edited: